செயலும் செயல்திறனும்/வினையால் வரும் பயன் தேர்தல்



5. வினையால் வரும் பயன் தேர்தல்

1. செயல் நமக்கும் பிறர்க்கும்

அடுத்து நாம் ஒரு வினையை மேற்கொள்ளத் தொடங்குமுன், 'நாம் அவ்வினையை ஏன் செய்தல் வேண்டும். அதனால் நமக்கோ, பிறர்க்கோ வரும் பயன் யாது' என்று எண்ணிப் பார்த்தல் வேண்டும் (பிறர்க்கு என்றால் நம்மை யொட்டியவர்க்கும், ஒட்டாத பொதுமக்கள் பிறர்க்கும்) நாடு, மொழி, இனம், அறிவியல், இலக்கியம் முதலிய கூறுகளெல்லாம் பிறர் நலம் நாடும் தன்மைகளாம். நமக்கென்பது, நம் வாழ்க்கை நலன்களுக்கும், நம்மைச் சேர்ந்த குடும்பம், சுற்றம், உற்றம் ஆகியவர்களுக்காகவும் என்று பொருள்படும். நமக்கு என்பது தன்னல அடிப்படையில் எழும் உணர்வாகும். இவ்வுணர்வு தவறாகாது, என்றாலும் இவ்வுணர்வு ஒன்றின் காரணமாகவே நாம் ஒரு வினையைத் தொடங்குதலும் செய்தலும் அவ்வளவு பாராட்டக்கூடிய செயலாக ஆகிவிடாது. நம் மக்கள் தன்மைக்கும் அது பொருந்தாது. நாம் செய்யும் ஒவ்வொரு வினையிலும் குறைந்தது நமக்கொரு கூறும், பிறர்க்கு மூன்று கூறும் நலன் விளையுமாறு எண்ணிச் செய்தல் வேண்டும். நமக்கு ஒதுக்கப்படும் கூறைவிட, பிறர்க்கு ஒதுக்கப்பெறும் கூறு மிக மிக, நாம் பொதுநல உணர்வில் மேம்பட்டு விளங்குகிறோம் என்று பொருள். இவ்வுணர்வே தன்னல மறுப்புணர்வாகும். தன்னலமும் பொது நலமும் கருதிச் செய்யும் செயல்களில் அவ்விரு உணர்வுகளிலும் முன்னதைவிடப் பின்னதற்கு ஒருவர் எத்துணையளவு மதிப்பளிக்கின்றாரோ, அத்துணையளவு அவர் இவ்வுலகில் பொதுநலவுணர்வினராக மதிக்கப்பெற்றுப் பெருமையும் நிறைவும் பெறுகிறார். அத்தகையோரே வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் என்ற சிறப்பைப் பெற முடியும் மீதிப்பேர் வாழ்ந்தோராகவே கருதப் பெறமாட்டார்.

2. பொதுவுடமையும் பொதுமையும்

எனவே தாம் செய்யும் செயல்களில் நமக்கு எத்துணையளவு நலன் அல்லது பயன் என்றும், பிறர்க்கு எத்துணையளவு நலன் என்றும் ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். நமக்காகவே வாழ்தல் மிகக் கீழ்மையானது. விலங்குத் தன்மையது. இன்னுஞ் சொன்னால் விலங்குகளுக்கும் கீழான தன்மையது. ஏனெனில் விலங்குகளும் பறவைகளும் கூட கொடுத்தும் கொண்டுமே வாழ்கின்றன. இவ்வுலகில் இன்னொருவர்க்குக் கொடுப்பதும் அதனால் வரும் மகிழ்வும் நிறைவுமே வாழ்க்கையின் முழுப்பயன் ஊதியம் என்பது குறளறம் ஆகும்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதிய மில்லை உயிர்க்கு.

(23)

இது பொதுவுடைமை கூறும் நலத்தினும் கொள்கையினும் உயர்ந்ததாகும். பொதுவுடைமை உடலால் செய்யப்பெறும் முயற்சி என்று பொருள் கொண்டால், இக்குறளறம் கூறும் பொதுமையுணர்வு உளத்தால் செய்யப்பெறும் முயற்சியாகும். சட்டத்தால் ஒரு பொருளை இருவர்க்குப் பகிர்வதை விட அன்பால் பகிர்வது; உயர்ந்தது: சட்டவுணர்வு; பருமையானது, அன்பில்லாதது; உயிர் மலர்ச்சிக்கு வழி வகுக்காதது, அறவுணர்வு நுண்மையானது; அன்பு நிறைந்தது; உயிர் மலர்ச்சிக்கு உதவுவது. எனவேதான் பொதுமையுணர்வு பொதுவுடைமை உணர்வை விடச் சிறந்ததாகும். பொதுவுடைமையுணர்வு. உடைமைகளை மட்டும் பகிர்வு செய்யும் அடிப்படையுடையது. பொதுவுடைமைக் கொள்கையில் ஒருவன் பொருளில்லாமல் இருக்க மற்றொருவன் பொருளுடன் இருத்தல் கூடாது. பொதுமைக் கொள்கையில் ஒருவன் மகிழ்த்திருக்க அல்லது துயருற்றிருக்க இன்னொருவன் மகிழ்ச்சியுடனும் இருக்க இயலாது. ஒருவன் துன்பத்திலும் மற்றொருவன் பங்கு கொள்ளும் பொதுமையுணர்வுதான் அறவுணர்வாகும். அறம் என்னும் சொல்லுக்குப் பகிர்வு என்பதே சரியான சொல்லாகும். அறு என்னும் வேரடியாகப் பிறந்த சொல்லே அறம். பகு என்னும் வேரடியாகப் பிறந்த சொல்லே பகிர்வு. இதற்குப் பழஞ்சொல் ஒப்புரவு என்பது. இவ்வுயர்ந்த உணர்வுக்கு மக்கள் உயர்ந்து செல்ல வேண்டும் என்பதே தமிழர் அறக்கோட்பாட்டின் குறிக்கோள் ஆகும். விலங்குகளைக் கட்டியாளுவது போல் மக்கள் கட்டியாளப்பெறுதல் சிறப்பன்று. அவர்கள் தாமே இயங்குதலே சிறப்பு. எனவேதான் அறவுணர்வை அவர்கள்பால் வளரச் செய்தனர் பழந்தமிழ்ச் சான்றோர். சட்டவுணர்வை அல்லது சட்ட அறிவை எப்படி மக்கள் எல்லாம் பெற்றிருக்க வேண்டும் என்பது அரசியல் கோட்பாடோ, அப்படியே அறவுணர்வை அல்லது ஒப்புரவை அல்லது பகிர்வுணர்வை மக்கள் இயல்பாகவே பெற்றிருக்க வேண்டும் என்பது அறவியல் கோட்பாடு. எனவே சட்டவுணர்வை விட அறவுணர்வு தாழ்ந்தது என்று சொல்லிவிட முடியாது. அப்படியே பொதுவுடைமை யுணர்வை விடப் பொதுமையுணர்வு தாழ்ந்தது ஆகாது. மாறாக, உயர்ந்ததுமாகும். அதனடிப்படையிலேயே நாம் செய்ய விரும்பும் ஒரு தொழிலின் விளைவு அல்லது நலன் அல்லது பயன் கருதப்பெறுதல் வேண்டும். நலன் விளைக்காத ஒரு வினையை நாம் மேற்கொள்ளுதல் தவறு. இனி, நலன் மட்டுமே வரும் தொழில் உலகில் எங்கும் இல்லை. நன்மை வருவதில் கொஞ்சம் தீமையும் வரலாம். நல்லதும் தீதும், இன்பமும் துன்பமும், உயர்ச்சியும் தாழ்ச்சியும், ஒளியும் இருளும் சேர்ந்தனதாம் உலகமும் அதன் இயக்கமும். எனவே நன்மையே அல்லது இன்பமே ஒரு வினையான் வரும் என்று எண்ணிவிடக்கூடாது. இன்பம் துன்பம், நன்மை தீமை இரண்டுமே ஒரு வினையால் வரும். இவற்றுள் எது மிகுதி எது குறைவு என்று எண்ணி நலம் மிகுதியாக வருவதைப் பார்த்துத்தான் நாம் வினைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையால் ஆளப்படும்

(5)

என்பது குறள்.

ஒரு வினையில் தொடக்கம், இடை, முடிவு என்று உண்டு. தொடக்கத்தில் ஒரு வினை கடினமாகவும் செலவுடைய தாகவும்துன்பம் தருவதாகவும் இருக்கலாம். ஆனால் இந்நிலை இடையில் நீங்கி, முடிவில் எளிதாகவும், வருவாயுடையதாகவும் இன்பம் தருவதாகவும் இருக்கும். இந்நிலைகளை யெல்லாம் ஆராய்ந்து தேர்தல் வேண்டும் தொடக்கத்தில் துன்பமாக உள்ளதென்பதற்காகவே ஒரு வினையைத் தொடங்காமல் விட்டுவிடக் கூடாது. அல்லது தொடக்கத்தில் இன்பமாக உள்ளதென்பதற்காகவே ஒரு வினையைத் தொடங்கி விடவும் கூடது. நாம் ஆராய்வதில் ஒரு வினையின் முடிவையே, இறுதிப் பயனையே ஆராய வேண்டும். முடிவான பயன் தொடக்கத்தையும் இடைநிலைகளையும் விட நல்லதாக இருக்கிறதா என்றே பார்த்தல் வேண்டும்.

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்

(676)

என்னும் குறளை ஓர்க.