செயலும் செயல்திறனும்/நம் தகுதிக்குத் தாழ்வான செயல்களைத் தவிர்த்தல்



6. நம் தகுதிக்குத் தாழ்வான செயல்களைத் தவிர்த்தல்

1. தொடக்கம், முடிவு பயன்

அவ்வாறு தொடக்கமும், முடிவும் இடையில் வரும் இடையூறுகளையும் ஆராய்ந்து அறிந்தபின், அல்லது வினை வல்லார் வாய்க் கேட்டு அறிந்தபின், அவ்வினையால் வரும் பயனையும் அதன் அளவையும் தேர்ந்துணர்ந்து, அதன் பின்னரே ஒரு வினையில் ஈடுபடுதல் வேண்டும். இதுவன்றி, நாம் இன்னொன்றையும் கூடவே கருதுதல் மிகவும் சிறப்புடையதாகும். அஃதாவது நாம் மேற்கொள்ளப் போகும் வினை, பொருள்வகையிலோ வேறுவகையிலோ மிகுந்த பயனைத் தருவது என்றாலும், அந்த வினையைப் பிறர் தாழ்வாக மதிக்கின்றார்களா உயர்வாகக் கருதுகின்றார்களா என்றும் எண்ணிப் பார்த்தல் வேண்டும். பிறர் இழிவாகக் கருதும் வினையைக் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும். நமக்குப் பொருந்தாத - நாம் செய்யத் தகாத வினையை நாம் மேற்கொண்டு செய்தோமானால் உலகம் நம்மை மதிக்காது. ஏனெனில், நமக்கு, நம் அறிவு, பண்பு, ஊக்கம், ஆற்றல் இவற்றைக் கணித்து, ஏற்கனவே உலகம் ஒரு தகுதியைத் தந்திருக்கின்றது. இந்தத் தகுதிக்கு ஏற்பவே ஒரு செயலை நம்மிடமிருந்து அஃது எதிர்பார்க்கும். அந்தத் தகுதிக்குத் தாழ்வாக, நாம் கொள்ளக் கூடாத அல்லது செய்யக் கூடாத ஒன்றைச் செய்யத் தொடங்கினால் உலகம் நம்மை எள்ளி நகையாடும். இகழ்ந்து பேசும் ஒதுக்கிவிடும். எனவே நமக்குப் பொருந்தாத, அல்லது நம் நிலைக்குக் கீழான ஒரு செயலை நாம் மேற்கொள்ளவே கூடாது.

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு

கொள்ளாத கொள்ளா துலகு

(470)

என்பது குறள்.

2. புகழ்ந்தவை போற்றிச் செய்தல்

இனி, இகழத்தக்க வினைகளை நாம் செய்யக் கூடாது என்பது மட்டுமன்று. புகழத் தக்க வினைகளையே நாம் செய்தலும் வேண்டும். புகழத் தக்க வினைகள்தாம் உண்மையான நன்மையைக் கொடுக்கும். அத்தகைய வினைகளைச் செய்வதில் நமக்குத் துன்பங்கள் இருக்கலாம். தொல்லைகள் இருக்கலாம். ஆனால் அவை கருதி நாம் அவற்றைத் தவிர்த்து விடல் கூடாது. எனவே, நன்மை தரவல்ல, பிறர் புகழ்ச்சிக்குரிய வினைகளையே, அவை எவ்வளவு துன்பம் தரவல்லனவாக இருப்பினும், எத்துணைப் பொருளிழப்புக்கு நம்மை ஆளாக்கினும், அவற்றையே மிகுந்து பாராட்டி ஏற்றுக்கொண்டு செய்தல் வேண்டும். இதைத் திருவள்ளுவர் மிகுந்த அழுத்தமாக இப்படிக் கூறுகிறார்.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

(538)

புகழத்தக்க செயல்களைப் போற்றி அல்லது மதித்துச் செய்தல் வேண்டும். அவ்வாறு போற்றாமல் அவற்றைப் பொருள் வருவாய் கருதி இகழ்ந்து, செய்யாமல் விட்டவர்களுக்கு எப்பொழுதும் உய்வில்லை என்பது இதன் பொருள். புகழத்தக்கவற்றைத் தவிர்த்தால் இகழத் தக்கவற்றைத் தாம் செய்ய வேண்டியிருக்கும். அத்தகைய செயல்களால் தொடக்கத்தில் பெரும் பொருள் வருவதானாலும், அப்பொருள் நல்ல பயன்களையும் தராது. இறுதியில் பேரழிவுக்கு உட்படுத்தி, நமக்கும் பல்வேறு இடர்களை உண்டாக்கிக் கொடுக்கும் என்பது திருவள்ளுவப் பெருந்தகையின் தெளிவான கருத்து. எனவே, இதனை இன்னொரு குறளிலும் வலியுறுத்துவார்.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா வினை

(652)

இக்குறள் வரும் வினைத்துசய்மை என்னும் அதிகாரத்தின் கீழ் உள்ள அனைத்துக் குறள்களிலும், அப்பேரறிஞர் அந்தக் கருத்துகளையே திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்வார். 'நலம் தரும் வினைகள், துணையும் நல்கும். ஆக்கமும் தரும்' என்பார் (651) 'தம் ஒளி (புகழ்) கெடுக்கின்ற செயல்களை ஒருவர் தவிர்தல் வேண்டும்' (653) என்பார். 'துன்பப் படினும் நல்ல அறிவுடையவர் இழிவான வினைகளைச் செய்யமாட்டார்கள். தன் தாய் பசித்திருக்கக் கண்டாலும், பெரியோர்கள் - நல்லவர்கள் - பழிக்கும் செயலை ஒருவன் செய்யக்கூடாது' (656) 'பழிக்கத்தக்க செயல்களைச் செய்து அதனால் வரும் வருவாயைவிட நல்லவர்களுக்கு வறுமையே நல்லது' (657) என்றெல்லாம் சொல்வார்.

3. பழியான செயல்களைச் செய்யாமை

இனி, அவ்வாறு பிறர் பழிக்கின்ற செயல்களைப் பொருளுக்காக ஒருவன் செய்ய வேண்டுமானால் அவன் பொய் சொல்லுதல் வேண்டும். ஏமாற்றுதல் வேண்டும். திருடுதல் வேண்டும். அல்லது கொள்ளை, கொலை செய்தல் வேண்டும். இல்லெனில் பிறரை நம்ப வைத்து அவர்கள் அறிவையும் மனத்தையாகிலும் மயக்குதல் வேண்டும். அதுவும் இல்லெனில் மக்களின் உடல், உள்ளக் கீழ்மை உணர்வுகளையாவது து.ாண்டுதல் வேண்டும் மொத்தத்தில் இவன் பொருள் பெறுவதற்கு மற்றவர்களுடைய உள்ளத்தின் அல்லது உடலின் அல்லது அறிவின் அல்லது உடைமையின் நலன்களைக் கவர்தல் அல்லது மயக்குதல் வேண்டும். அப்படிப்பட்ட நிலையினில் தம் அறிவு, உள்ளம், உடல் அல்லது உடைமைகளைப் பறிகொடுத்தவன் என்றாவது ஒரு நாள் தன் முன்னைய பிழைகளுக்கு அறியாமைக்கு அல்லது இழப்புக்கு எண்ணி வருந்தவே செய்வான். அழவும் செய்வான். அவ்வாறு பிறர் அழும்படிக்கு அவர்களை வருத்தி அல்லது ஏமாற்றிச் சேர்ப்பவனது பொருள்கள் அனைத்தும், பின்னொரு நாளில் இவன் வருந்தும்படி, அழும்படி விட்டுவிட்டு இவன்பாலிருந்து வெளியேறி விடும் என்றும் அறத்தின் வழி - உலக இயற்கைக் கோட்பாட்டின் வழி எச்சரிக்கை செய்கிறார். அக்குறள் இது.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை

(659)

4. ஏமாற்றுதல் கூடாது

நல்ல செயல்களைச் செய்பவன் தொடக்கத்தில் கையிலுள்ள பலவற்றை இழப்பினும், பின்னர் கட்டாயம் அவன் மேற்கொள்ளும் நல்ல செயல்கள் நல்ல பயனையே தரும் என்று, நல்ல வினைகளை மேற்கொண்டு துன்புறுகிறவர்களுக்கு இக்குறளில் உறுதி கூறுகின்றார். 'பொய்யால், ஏமாற்றால் பொருளைச் செய்பவர்கள், பசுமண் கலத்தினால் தண்ணிரைத் தேக்கி வைப்பவர்களைப் போன்றவர்கள். விரைவில் அத்தண்ணிரும் இல்லாமற் போகும். அம் மண்பாண்டமும் கரைந்து அழிவுற்றுப் போகும். அப்படியே அவன் சேர்த்த பொருளும் அழியும். பொருளைத் தேடித் தர இவன் மேற்கொண்ட தொழிலும் அழிந்து போகும் என்று எவ்வளவு பொருள் பொதிந்த உவமையைக் காட்டி எச்சரிக்கிறார் பாருங்கள்.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று

(660)

5. செய்யத் தக்கனவும் செய்யத்தகாதனவும்

எனவே, இதிலிருந்து நாம் பொருளை ஈட்டுதற்கு என்று, நம் தகுதிக்குத் தாழ்வான செயல்களைச் செய்யக்கூடாது. அத்தகைய செயல்களைச் செய்வதற்கு ஒரு நல்வாய்ப்பு ஏற்பட்டாலும் அதைத் தவிர்த்து விடுதல் வேண்டும் என்று கண்டோம் நமக்கு ஒரு தொகுப்பான உண்மை இப்பொழுது தெரிய வருகிறது. அஃது, உலகில் நாம் எந்தச் செயலையும் செய்வதற்கான செயல்திறம், பொருள்வலி, ஆள்வலி இவற்றைப் பெற்றிருந்தாலும், நாம் நமக்குரிய அல்லது ஏற்ற செயல்களிலேயே ஈடுபாடு காட்டி, அவற்றையே செய்வதற்கு முயலுதல் வேண்டும் என்பது. உலகில் நாம் எப்படியும் வாழ்ந்துவிட முடியாது. அது கூடவும் கூடாது. பறவைகளும் விலங்குகளும் கூட தமக்குப் பொருந்தாத செயல்களைச் செய்வதில்லை. ஒரு மாடு ஒரு நாயின் வேலையைச் செய்யாது. ஒருதுக்கணாங்குருவி ஒரு காக்கையைப் போல் கூடு கட்டி வாழ விரும்புவதில்லை. ஒரு தேனி தன் தேன் திரட்டும் வேலையை எப்பொழுதும் எந்தச் சூழலிலும் தவிர்ப்பதில்லை. அல்லது விடுவதில்லை. அவ்வாறிருக்க, உயர்ந்த அறிவும் தெளிந்த மனவுணர்வும் திருத்தமான சிறந்த உறுப்புகளும் பெற்றுள்ள நாம் நம்முடைய முயற்சிகளால் நல்ல உயர்வான, பிறர் புகழத்தக்க வினைகளையே தேர்ந்து செய்தல் வேண்டும். இவ்வுலகின்கண் செய்யத் தகுந்த வினைகள் என்று சிலவுண்டு செய்யக்கூடாத வினைகள் சில உண்டு. அவற்றின் வேறுபாடுகளை நாம் அறிவுள்ள வழிகாட்டிகளின் வழியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும் செய்யத் தகுந்த வினைகளைச் செய்யாமற் போனாலும், செய்யக் கூடாத வினைகளைச் செய்ய முற்பட்டாலும் நமக்கு இழுக்கு வரும் இழப்பு வரும். சிறப்பு கெடும். சீரழிவு நேரும் பிறகு நம் வாழ்க்கையே துன்பமுள்ளதாகப் போய்விடும். அதற்காக நாம் காலமெல்லாம் வருந்தி அழவேண்டியிருக்கும். இதைத்தான் குறளாசிரியர்,

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.

(466)

என்று கூறுகின்றார். எனவே முன்கூட்டியே செய்தக்க வினையும் செய்யத்தக்க அல்லாத வினையும் நன்றாகப் பிரித்துணர்ந்து செய்தக்க வினைகளையே மேற்கொண்டு செய்தல் வேண்டும்.

6. செய்யத்தகாதவற்றைத் தவிர்த்தல்

ஒருகால் நம் தேர்ச்சி தவறாகவிருந்து, செய்தக்க அல்லாத வினையைத் தெரியாமல் செய்யத் தொடங்கிப் பின் அதனால் வருந்தும்போது, இந்த வினையை நாம் ஏன் செய்தோம்; இதைப் பற்றி எவரையும் கேட்காமற் போனோமே என்று மனம் நெகிழ்ந்து, நம்மையே நொந்து கொள்கின்றோம். அந்நிலையில் இன்னொரு விழிப்புணர்வைத் திருவள்ளுவப் பெருந்தகை நமக்கு ஊட்டுகிறார். அஃதாவது, நாம் இதைப்பற்றி நன்கு ஆராயாமலும், அறிந்தவரிடத்தில் அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலும் செய்துவிட்டோம். அதனால் இப்பொழுது வருந்தும்படி நேரிட்டு விட்டது. எனவே இது போன்ற செயல்களை இனிமேலாவது செய்யக் கூடாது. இப்பொழுதும் தவறாகத் தொடங்கிச் செய்யப் பெற்ற வேலையையும் இனி தொடரக் கூடாது. வேறு சிறந்த நல்ல, பெருமை தரக்கூடிய வேலையாகப் பார்த்துச் செய்ய முற்படுவோம் என்று எண்ணி, விழிப்படைந்து, அந்த வினைநிலையிலிருந்து விடுபட்டுவிடச் சொல்கிறார். விடுபடுவதுடன் இனிமேல் அத்தகைய வினைகளையே செய்யாமல் தவிர்த்துவிட வேண்டும். அதுதான் நல்லது என்கின்றார். அவ்வறிவுரை இது.

எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று

(655)

இனி, நமக்கென்று ஒரு வினையைச் தேர்ந்து, உறுதிப்படுத்திக் கொண்டோம். அவ்வளவில் அதனைத் தொடங்கிவிடலாமா என்ற கேள்விக்கு விடையாக அடுத்த நிலைகளைப் பார்ப்போம்.