செயலும் செயல்திறனும்/வினைவலிமை அறிதல்



7. வினைவலிமை அறிதல்

1. ஆழந்தெரியாமல் காலை விடாதே!

எப்பொழுதும், பலர் இதைச் செய்வேன். அதைச் செய்வேன் என்று பெருமையாகப் பேசிக்கொண்டேயிருப்பர். ஆனால் ஒன்றையும் செய்யமாட்டார்கள். ஏனெனில் அவர் செய்வதாகச் சொல்லும் வினையின் தன்மை தெரியாது. அந்த வினை செய்வதற்கு நாம் தகுதியுள்ளவர்கள்தாமா? அவ்வளவு பெரிய வினையை நம்மால் செய்யமுடியுமா? என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பதில்லை. ஏதோ கையில் கொஞ்சம் பணம் கிடைத்தவுடன், ஏதோ ஒரு செயல் செய்ய வேண்டுமே என்பதற்காக அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு ஒரு வினையை உடனே செய்யத் தொடங்கிவிடுவர். பின்னர் அந்த வினைகளின் சுமைகளையும், பெரும்பொருள் தேவையையும், உணர்ந்தவுடன், அடடா, ஆழந்தெரியாமல் காலை விட்டு விட்டோமே, இஃது இவ்வளவு, கடினமான வேலை என்று தெரியாமல் போனதே. இப்பொழுது நிறைய பொருள் தேவையாகவிருக்கிறதே. யாரிடம் போய்க் கேட்டது? யாரைத் துணைக்கழைப்பது? மேலும் இவ்வேலை இவ்வளவு உழைப்பை வாங்குகிறதே, ஒய்வொழிச்சலின்றிப் பாடாற்ற வேண்டியுள்ளதே! உண்ண நேரமில்லையே, உடுக்க நேரமில்லையே, மனைவி மக்களொடு பேச நேரமில்லையே, இரவில் நெடு நேர்ம் உழைக்க வேண்டியிருப்பதால் சரியாகத் துரங்கக்கூட நேரமில்லையே! ஐயோ! என்ன செய்வது? என்றெல்லாம், வினைச் சுமை தாங்காமல், அரற்றிக் கொண்டேயிருப்பார்கள். அப்படிப் பட்டவர்களை நோக்கித் திருவள்ளுவர், முதலில் ஒருவர் தாம் செய்யப் போகும் வினையினுடைய வலிமையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பார்.

2. வினை வலிமை

ஒரு வினையைத் தொடங்குமுன் நாம் அளந்தறியும் ஆற்றல்களில் முதலாவது வினை வலிமை. அஃதாவது அந்த வினை எவ்வளவு வலிமையுடையது என்டது. அந்த வேலையில் ஈடுபட எத்துணையளவு பணம் வேண்டும். எவ்வளவு உழைப்புத் தரல் வேண்டும். அதை முடிக்க எவ்வளவு காலம் பிடிக்கும் என்றெல்லாம் ஆய்ந்து பார்க்க வேண்டும். சும்மா எடுத்த எடுப்பிலேயே வெறுங்கையால் முழம் போடத் தொடங்கிவிடக் கூடாது. கையில் போதுமான பணத்தை வைத்துக் கொள்ளாமல் கடன் வாங்கிச் செய்துவிடலாம் என்று எண்ணிவிடக்

கூடாது. அப்படி நல்ல வினைகளைக் கடன் வாங்கிச் செய்யவும் செய்யலாம். அப்பொழுது நம்பால் இரங்கியோ, நாம் செய்யப் புகும் வினையின் பெருமை தெரிந்தோ, நமக்குக் கடன் தந்துதவும் சிலராகிலும் இருக்கிறார்களோ என்று பார்க்க வேண்டும். பிறகு, யாரும் கடன் கொடுக்க முன்வரவில்லையே என்று வருத்தப்படவோ, வினைச்சுமை தாங்காமல் பாதியில் விட்டுவிட்டு இழப்பேற்படுத்திக் கொள்ளவோ கூடாது.

திருவள்ளுவர் வினைவலி (47) என்று வலியறிதல் அதிகாரத்தில் வலியுறுத்தும் முதல் வலிமை அதுதான். அதை நம்மால் செய்ய முடியுமா? என்று பார்க்க வேண்டும். ஒன்றுமில்லாமல் அதைச் செய்துவிடமுடியும் என்று இறங்கிவிடக்கூடாது. பிறகு பரமார்த்த குருவின் சீடர்கள் கதையாகிவிடும். இவ்விடத்தில் இன்னொன்றை நன்கு விளங்கிக் கொள்ளுதல் ரேண்டும். வினைவலிமை என்பது பொருளைக் குறிக்கும் சொல்லன்று. பொருள் வலிமை என்பது வேறு. ஒரு வினைக்கு நாம் எவ்வளவு பொருளை ஈடுபடுத்த வேண்டும் என்பதும் அது நம்மால் இயலுமா என்பதும் நோக்கி நம் வலிமையை உணர்வதும், வினை வலிமையுள்தான் அடங்கும். பொருள் இல்லாவிடில் நாம் பொருளுதவி பெறும் திறன் நமக்குள்ளதா என்று பார்ப்பது தன் வலியுள் அடங்கிவிடும். வினைவலி என்பது உடல், உழைப்பு, ஈடுபாடு இவற்றை மட்டும் பொறுத்தது அன்று. வினைச்சுமை என்பது நம்மால் தாங்கக் கூடியதா என்பதில் பொருள் அளவையும் அடக்குதல் வேண்டும். பொருள் தேவை என்பது வேறு. பொருள் அளவு தெரிதல் என்பது வேறு. ஒரு வினைக்குப் பொருள் வேண்டும் என்பதும் அது நம்மிடம் உள்ளதா என்பதும் பொருள் வலிமையைக் குறிக்கும். ஆனால் அதற்கு எவ்வளவு பொருள் தேவையாக இருக்கும் என்று ஆய்வதும், அச்சுமை நம்மால் தாங்கக் கூடியதா, அந்த வலிமை நம்மிடம் உண்டா என்று எண்ணிப் பார்ப்பதும் வினைவலிமையுள் அடங்கும். அவ்வாறு போதுமான பொருள் இல்லாவிடத்து அதைப் பிறரிடம் கடனாகப் பெறுவது தன் வலியுள் அடங்கும். இவ்வேறுபாடுகளை ஒருவர் மிக நுட்பமாக அறிந்து கொள்ளுதல் மிக நன்றாம்.

3. பொருள், கருவி, காலம்

இனி, அறியாமை அகலும்படி ஆய்ந்து எண்ணிச் செய்ய வேண்டிய கூறுகளுள் குறளாசிரியர் வினைவலியையும் ஒன்றாகக் குறித்துள்ளார்.

பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.

(675)

இக்குறளுள் வினைவலி நான்காவதாகக் குறிக்கப் பெற்றுள்ளது. பொருள் முதலாவதாகக் குறிக்கப் பெற்றது அதன் இன்றியமையாமை

கருதியே. தன் கையில் பொருளில்லாமல், மற்றவர் கையிலுள்ள பொருளையெண்ணி ஒரு வினையைத் தொடங்கிவிட முடியாது. நம் கையில் உள்ள ஒரு பொருளை அடிப்படையாக வைத்துத் தான் நாம் ஒரு வினையைத் தொடங்குதல் வேண்டும். அது நாம் அச்சமில்லாமல், குன்றின் மீதிருந்து கொண்டு, கீழே நடக்கும் யானைகளின் சண்டையைப் பார்ப்பது போன்றதாகும் என்பது குறள்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை.

(758)