செவ்வாழை/கருப்பண்ணசாமி யோசிக்கிறார்

10
கருப்பண்ணசாமி யோசிக்கிறார்

ணி ஒலித்தது!

கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

கருப்பண்ணசாமி அலறியபடி உள்ளே ஓடலானார்; ஒளிந்து கொள்ள இடம் தேடினார்.

'களுக்'கென ஓர் சிரிப்பொலி கேட்டது. கருப்பண்ணசாமி, கோபம் கொண்டு "வேதனைப்படுகிறேன் நான்—இந்த வேளையில் கேலி வேறு செய்கிறாயா?' என்று கேட்டார், சிரித்தபடி தன் எதிரே வந்த தேவியைப் பார்த்து.

"கருப்பண்ணா! என்ன கலக்கம்! ஏன் ஓடுகிறாய். என்று தேவி கேட்க, கருப்பண்ணசாமி "காதிலே விழவில்லையா, மணிச் சத்தம்" என்று கேட்டார். , விழுந்தது——அது கேட்டு அச்சம் ஏன் வரவேண்டும்— ஆச்சரியமாக இருக்கிறதே”—என்று தேவி கேட்டார்.

உனக்கும் ஒன்றும் புரிவதில்லை. யாரோ பக்தர்களல்லவா வருகிறார்கள்" என்று பயத்துடன் பேசினார் கருப்பண்ணர்.

"பைத்யமே! பக்தர் வருகிறார் என்றால் பயம் ஏன் வர வேண்டும்? உன்னைத் தொழ, சூடம் கொளுத்த, சோட சோபசாரம் செய்ய, படையல் போட வருகிறார்கள் பக்தர்கள். இதற்கு ஏன் பயப்படவேண்டும்... ஓஹோ! இவ்வளவு பூஜையை ஏற்றுக் கொண்டும் எங்கள் கஷ்டத்தைப் போக்காமலிருக்கிறாயே கருப்பண்ணசாமி! என்று அந்த பக்தர்கள்

கோபித்துக் கொள்வார்கள் என்ற பயமா?" என்றார் தேவி.

கருப்பண்ணர், "போதும் தேவி, உன் தொல்லை. வரம் தந்து அவர்களின் குறையைப் போக்கவில்லை என்பதற்காக என்மீது சீறுவார்கள் என்ற பயம் எனக்கு இல்லை— நானென்ன தேவாலய அரசு செலுத்தி அனுபவமில்லாத வனா...இங்கு இல்லாவிட்டால், மேலுலகில் என்னைப் பூஜித்த பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் எண்ணிக் கொள்வார்கள். இங்கே அவர்களுக்குள்ள குறையைத் தீர்த்து வைக்காததற்காக என் மீது சீற மாட்டார்கள் என்ற சித்தாந்தம் எனக்கும் தெரியும். நான் பயப்பட்டது அதனால் அல்ல" என்று பெருமூச்சு வருமளவு வேகமாகப் பேசினார் கருப்பண்ணசாமி.

தேவியார் வேகமாகச் சென்று வாயிலில் பார்த்துவிட்டு வந்து, "கருப்பண்ணா! பக்தர் யாருமல்ல, காற்று பலமாக அடித்ததால் மணி ஓசை கேட்டது. பயப்படாதே. சரி, பக்தர்கள் வருகிறார்கள் என்றால் ஏன் பயம் உண்டாகிறது உனக்கு? அதைச் சொல்லு" என்று கேட்டார்கள். பக்தர் யாரும் வரவில்லை என்று தெரிந்ததால் தைரியம் பெற்று, தன் பீடத்தில் அமர்ந்து, எதிரே ஒரு பீடத்தில் அமர்ந்த தேவியிடம் கருப்பண்ணசாமி விளக்கம் கூறலானார்.

"தேவி! பக்தர்களால் எனக்கு ஏற்பட்ட ஆபத்தும் சங்கடமும் உனக்கு என்ன தெரியும்? வரவர இந்த 'வேலை' யிலேயே எனக்கு வெறுப்பு வளர்ந்து கொண்டு வருகிறது. தான் செய்த மோசத்தை அரை பலம் கற்பூரப் புகையிலே மறைத்துவிடலாம் என்று எண்ணுகிறான். அதற்கு நான் உடந்தையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இவனுடைய பேராசைக்கு நான் துணை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறான். காரணம் கேட்டால் பெரிய படையலிட்டிருக்கிறேன்' என்று கூறுகிறான்.

தேவி குறுக்கிட்டு, "இதென்ன, புது விஷயமா கருப்பண்ணரே! இப்படிப்பட்ட பக்தர்களை நாம் நெடுங்காலமாகப் பார்த்து, பழகிக் கொண்டுதானே வந்திருக்கிறோம் என்று கூறிட, கருப்பண்ணசாமி, மனக் கொதிப்புடன், "இப்போது பக்தர்கள் அந்த அளவோடு நின்றுவிடவில்லை தேவி - கேவலப்படுத்துகிறார்கள்; போலீசின் பாதுகாப்பிலே வாழவேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.கள் என்னை" என்று கூறினார்.

"கேவலப்படுத்தினார்களா? யார்?" என்று தேவி ஆச்சரியத்துடன் கேட்டார்.

அவரைக் கேலி செய்வதைப்போல கருப்பண்ணர், "யார்!" என்று ஒரு முறை கூறிவிட்டு, "நாஸ்திகர்கள் கேவலப்படுத்தினார்கள் என்று கருதுகிறீரா தேவி! அவர்களல்ல. அவர்கள் மனிதருடன் பழகுவதும் மனிதர்களின் பிரச்னைகளைக் கவனிப்பதுமாகக் காலந் தள்ளுகிறார்கள். என்னைக் கேவலப்படுத்தியது, பக்தர்கள்! கைகூப்பித் தொழுது,கன் னத்தில் போட்டுக் கொள்கிறார்களே, கற்பூரம் கொளுத்துகிறார்களே, அந்தப் பக்தர்கள்தான், என்னை, செச்சே! இப்போது எண்ணிக் கொண்டாலும் எனக்கே வெட்கமாக இருக்கிறது. கேவலப்படுத்தினார்கள்—போலீசாரின் துணையால் நான் மீட்கப்பட்டேன்" என்று கூறினார். தேவிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

"கருப்பண்ணரே! என்ன பேசுகிறீர்? பக்தர்கள்— போலீஸ் - ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பேச்சாக இருக்கிறதே" என்றார்.

"தேவி! கேள் இந்த விஷயத்தை. இந்த பக்தர்களை இன்னின்னது செய்யுங்கள் என் மனமகிழ்ச்சிக்காக, இன்னின்னது படையுங்கள் என்று நான் கேட்டதுமில்லை - அவர்களாகவே வருகிறார்கள்—அவரவர்கள் மனதுக்குத் தோன்றியபடி ஏதேதோ செய்கிறார்கள். நான்' சிவனே என்று, எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டிருக்கிறேன். பொறுமை, பெருந்தன்மை, இவைகளைக் கண்டு, இந்த பக்தர்கள், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவு கொண்டு." கருப்பண்ணரின் தொண்டை அடைத்துக் கொண்டது துக்கத்தால்! தேவியின் ஆச்சரியம் அதிகரித்தது. "துணிவு கொண்டு... சொல்லும் கருப்பண்ணரே! துணிவு கொண்டு..." என்று ஆவலை வார்த்தைகளாக்கினார் தேவி. ஆத்திரத்துடன் கூறினார் கருப்பண்ணசாமி. "ஒரு அறையிலே போட்டு பூட்டி விட்டார்கள்!"— என்றார். தேவிக்கும் இலேசாகத் திகில் ஏற்பட்டது.

"பூட்டிவிட்டார்களா? உன்னையா? பக்தர்களா?"— என்று திகைப்புடன் தேவி கேட்டார்கள்.

"கேட்பதற்கே இவ்வளவு திகில் பிறக்கிறதே தேவியாரே! என் மனம் என்ன பாடுபட்டிருக்கும், என்னை ஒருஅறையிலே போட்டு பூட்டினபோது! நான் என்ன கழனி வேலை செய்யும் கருப்பனா, சாமி— சாமி—விட்டுவிடுங்க—என்று கதற? நானோ அவர்கள் கும்பிட்டு வரங்கேட்கும் கருப்பண்ண ஸ்வாமி! அவர்களோ என்னையே அறையிலே தள்ளிப் பூட்டுப் போட்டுவிட்டார்கள். நான் என்ன செய்வது?"—என்று கூறி, ஆயாசமடைந்தார் கருப்பண்ணசாமி.

தேவி, உண்மையிலேயே அனுதாபப்படத் தொடங்கினார்கள்.

"கேவலமான நிலைமைதான் இது. பக்தர்கள், உன்னைச் சிறையில் போடுவதுபோல அல்லவா செய்து விட்டிருக்கிறார்கள்" என்று பேசினார் சோகமாக.

"தேவி! உன் காதிலே, அவர்கள் அப்போது போட்ட கூச்சல் விழுந்திருந்தால் தெரிந்திருக்கும், அவர்களின் போக்கும் குணமும். போட்டுப் பூட்டடா, என்ன நடந்துவிடுதுன்னு பார்க்கலாம்" என்று ஒருவன் கொக்கரிக்கிறான்.

"பெரிய பூட்டு கொண்டு வா" என்று கூவுகிறான் ஒருவன்.

"அலிகார் பூட்டு வேண்டுமா " என்று கேட்கிறான் இன்னொருவன். இவ்வளவு கூச்சல், துணிவு! "போட்டுப் பூட்டுங்க, பார்க்கலாம், எவன் வந்து என்ன செய்து விடுகிறான்'" என்று கூவி, தேவி! என்னை ஒரு பெரிய அறையிலே போட்டு பூட்டிவிட்டுப் போய்விட்டார்கள்.

வெளியே சிரிக்கிறார்கள்—இனி பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று! நான் உள்ளே அடைபட்டுக் கிடக்கிறேன் —என்னைப் போட்டு பூட்டிய 'பாவி'கள் சிரிக்கிறார்கள்! நான் கேட்கலாமா, அவர்களைப் பார்த்து? இதென்ன அக்ரமம் —திறந்துவிடுங்கள் என்னை—இல்லையானால் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வரச்செய்வேன், கைகால்களை முறித்துப் போட்டுவிடுவேன்" என்று பேசலாமா! அவர்களோ பக்தர்கள்! நானோ அவர்களால் வணங்கப்படும் சாமி. தேவி ! மனம் எவ்வளவு பதறி இருக்குமென்று யோசியுங்கள்" என்றார் கருப்பண்ணர்.

"கருப்பண்ணரே! அது கிடக்கட்டும், ஏன் பூட்டினார்கள்? என்ன செய்தீர்?" என்று கேட்டார் தேவியார்.

"நானா! என்ன செய்தேனோ, அவர்கள் என் எதிரே இருந்துகொண்டு சொல்லி வந்த புளுகுகளை எல்லாம் கேட்டுச் சகித்துக்கொண்டிருந்தேனே, அதுதான் நான் செய்த தவறு; 'போதும், புளுகாதீர்கள்' என்று ஒருதடவையாவது—ஒரு பக்தனையாவது கண்டித்திருந்தால், அவர்களுக்கு அன்று அவ்வளவு துணிவு வந்திருக்காது" என்றார் கருப்பண்ணர்.

"உன்னை ஒரு தனி இடத்தில் போட்டுப் பூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?" என்று மீண்டும் கேட்டார் தேவியார்.

சலிப்பும் வெறுப்பும் கலந்த குரலிலே கருப்பண்ணர் சொன்னார்: "ஏன் பூட்டி வைத்தார்கள் என்றா கேட்கிறீர் தேவி! நான் அவர்களின் "சாமி'யாம். அதனாலே என்னை வேறே சில பக்தர்கள் கொண்டு போகாமலிருப்பதற்காக, என்னைப் போட்டு பூட்டி வைத்தார்கள். அவ்வளவு 'பக்தி' என்னிடம். வேறெந்த பக்தனிடமும் நான் பேசிவிடக்கூடாது அப்படி ஒரு எண்ணம்- "என்றார் கருப்பண்ணர்.

"இதென்ன பைத்யக்காரத்தனமான எண்ணம்!"— என்று தேவி கேலியாகப் பேசினார்கள். " இவர்கள் கண்டதையும் கடியதையும், வேகாததையும் பழுக்காதையும் தின்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் என்னை வந்து கேட்கிறார்களே, தேவி! 'கருப்பண்ண ஸ்வாமி! என்னைக் காப்பாற்று'ன்னு. பைத்யக்காரத்தனம்தானே அது. அதுபோல இதுவும் ஒரு பைத்யக்காரத்தனம். உண்மையைச் சொல்லப்போனா, தேவி! அப்படிப்பட்ட பைத்யக்காரத்தனத்தை நாம் வளரவிட்டது தவறு. இல்லையா? என் விஷயத்தைக் கேள், தேவி! இந்தப் பக்தர்களுக்கு, நான் தங்களுடைய "சாமி" வேறு யாரும். தங்களுடையதுன்னு 'பாத்யதை' கொண்டாடினாலும் விட்டுக் கெட்டுக்கக் கூடாது என்கிற எண்ணம் ஏற்பட்டது. அதற்குத் தகுந்தபடியே நிலைமையும் ஏற்பட்டுவிட்டது.நான், நீ என்று போட்டிபோட்டுக்கொண்டு பக்தர்கள் கூட்டம் பெருகுவது கண்டு எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது. என் போறாத வேளை! என் பக்த கோடிகள், இரண்டு கோஷ்டியாகப் பிரிந்து அவர்களுக்குள்ளே தீராத பகை ஏற்பட்டுவிட்டது. அவர்களுடைய பகை எனக்குப் பெரிய ஆபத்தாக வந்து சேரும் என்று நான் கண்டேனா நான் என் வேலையைக் கவனித்துக்கொண்டு இருந்தேன். வழக்கமாக எனக்கு நடத்துகிற உற்சவத்தை நடத்தினார்கள். எனக்கு மகிழ்ச்சி—தேரும் திருவிழாவும் வீண் வேலை என்று ஊருக்குப்போய்ச் சிலபேர் பேசிக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் பேச்சிலே மயங்கி, எங்கே என் பக்தர்கள்—இந்த வருஷம் உற்சவத்தை நடத்தாமல் இருந்துவிடுகிறார்களோ என்று எனக்கு இலேசாகப் பயம். அவர்கள் உற்சவத்தை வழக்கப்படி நடத்த முன்வரவே, நான் மகிழ்ச்சி அடைந்தேன்— எவ்வளவு பிரச்சாரம் நடைபெற்றாலும் நமது செல்வாக்கு போய்விடவில்லை என்று எண்ணிப் பூரித்துப் போனேன். வருஷா வருஷம் வைகாசி மாதம் உற்சவம் நடத்துவார்கள் எனக்கு. கருப்ப உடையார் தலைவர், உற்சவம் நடத்திய பக்தர் குழாத்துக்கு. வழக்கப்படி ஊர்வலமாக என்னை அழைத்துச் சென்றார்கள். 'பயல்களே! பகுத்தறிவு சுயமரியாதை என்று கத்திக் கொண்டிருக்கிறீர்களே பாருங்களடா, பக்தர்கள் எனக்கு உற்சவம் கொண்டாடுவதை!” என்று கூறிட எண்ணினேன்— ஆனால் அந்தப் பயல்கள் ஒருவன்கூடக் காணோம்—எங்காவது மகா நாடு போட்டிருப்பான்கள் போலிருக்கு. சந்தோஷமாகப் பவனி வந்தேன். எப்போதும்போல என்னைக் கொண்டுபோய் மண்டபத்தில் கொலுவிருக்கச் செய்தார்கள். பக்தர்கள் என்னை வந்து தரிசிக்க அதுதானே நல்ல ஏற்பாடு. நானும் மண்டபத்தில் கெம்பீரமாக வீற்றிருந்தேன்.

பக்த கோடிகள் இரண்டு 'கோஷ்டி'யாகி இருந்தனர் என்று சொன்னேனல்லவா—உற்சவம் செய்தது ஒரு கோஷ்டி—கருப்ப உடையார் கோஷ்டி—மற்றொரு கோஷ்டி பிச்ச உடையார் நடத்தி வந்தார்—அந்தக் கோஷ்டியும் என் பக்தர்கள்தான். அந்த இரண்டு 'கோஷ்டி'க்கும் பகை! இரண்டு கோஷ்டிக்கும் என்னிடம் பகை ஏற்படக் காரணமே கிடையாது.

மண்டபத்தில் இருந்த என்னை மீண்டும் கோயிலுக்கு அழைத்துப் போகக் கூடிற்று கருப்ப பக்தர் கோஷ்டி.

"தூக்காதே! எடுக்காதே!" என்று கூவிற்று பிச்ச பக்தர் கோஷ்டி.

"நீங்கள் யாரடா, தடுக்க—எங்க கருப்பண்ணசாமிக்கு நாங்கள் உற்சவம் நடத்துகிறோம்—எங்கள் இஷ்டப்படி நடத்துகிறோம்—உலா முடிந்தது. கொலு முடிந்தது— கொண்டு போகிறோம் கோயிலுக்கு—நீங்கள் யார் தடுக்க?" என்று கருப்ப பக்தர் கோஷ்டி பதில் கூறிற்று.

"தொடாதே!"— என்று அதட்டிப் பேசினர் பிச்சை பக்தர் கூட்டத்தினர்.

"தூக்கு! தூக்குடா!" என்று அதிகாரக் குரலில் பேசினர் கருப்ப பக்த கோஷ்டியினர்.

"வெளியே கிளப்பினே - கொலை விழும்—ஆமாம்"

"சூரப் புலிகளோ! தூக்குடா சாமியை."

"வேண்டாம் வீணா தொல்லைப்படாதீங்க.'

"கருப்பண்ணசாமியை நாங்க எங்க இஷ்டப்படி தூக்கிக் கிட்டுப் போவோம்."

"கருப்பண்ணசாமி, எங்க சாமிடா!"

"இல்லே, எங்க சாமிடா, கருப்பண்ணசாமி."

"கையை வெட்டிவிடுவேன்."

"காலை ஒடித்துவிடுவோம்.'

"தேவி! இரு பிரிவும் இப்படிக் கொக்கரித்தன—நான் மண்டபத்திலே கொலு இருக்கிறேன்! என்னைக் கொண்டு போய் பழையபடி கோயிலில் சேர்த்துவிட வேண்டும் என்று ஒரு பிரிவு முயற்சி செய்கிறது—இன்னொரு பிரிவு, கூடாது என்று கூறித் தடுக்கிறது. நான் என்ன செய்வது! இரு பிரிவினரும் என் பக்தர்கள். நான் யார் பக்கம் சேரட்டும்? சேர முடியும்? இரண்டு பிரிவும் சண்டை போட்டுக் கொள்ளட்டும். நாம் கோயிலுக்குப் போய்த் தொலைப்போம்—இரு பிரிவின் தயவும் வேண்டாம் என்று எண்ணம் பிறந்தது— ஆனால் எப்படிக் கோயிலுக்குப் போவது? நான் திண்டாடிப் போனேன், தேவி! திகைத்துப் போனேன்.

பட்டிக்காடுகளிலே, கலியாணத் தகராறு கிளம்பிவிட்டால், 'பெண்ணைக் கொண்டுவா' என்று ஒரு கூட்டம் கூவ, 'பெண்ணைக் கொண்டுபோகாதே'என்று மற்றொரு கூட்டம் கூவ, இரண்டு கூட்டத்தின் சச்சரவிலே சிக்கிய பெண், புலம்புவது உண்டு. என் நிலை அது போலாகிவிட்டது. ஆனால் நான் புலம்பலாம்! நானோ சாமி! என்னை இந்தக் கொடுமைக்கு ஆளாக்கினவர்களோ என்னைப் பூஜிக்கும் பக்தர்கள்! என்ன செய்வது நான்?

"கோயிலிலே கொண்டு போய், ஸ்வாமியைச் சேர்ப்பதுதான் நியாயம்" என்று கருப்ப பக்தக் குழாம் கூறியபடி இருந்தது. பிச்சை பக்தர் குழாமோ, விவகாரத்தைத் தீர்த்துவிட்டு, சாமியைத் தொடு—விவகாரம் பைசலாகாததற்கு முன்னே தொட்டா, விடமாட்டோம்" என்று கூறுகிறது.

அட, பாவிகளா! உங்களுக்குள்ளே,ஏதாவது விவகாரம் இருந்தா என்னை ஏன்அதுக்காகச் சீரழிவு செய்கிறிங்க. நான் கோயிலுக்குப் போன பிறகு, உங்க விவகாரத்தைப் பேசி, பைசல் செய்து கொள்ளக்கூடாதா? என்னை இப்படி அவமானப் படுத்துவது முறையா—என்று கேட்க விருப்பம்தான்—எப்படிக் கேட்க முடியும்?

"ஊரிலே இதற்குள்ளே பேசப்பட்ட பேச்சோ, கேட்டுச் சகிக்க முடியல்லே.”

"சாமி புறப்படலே இன்னும்?

"இல்லே—சாமியை விடமாட்டேன்னு சொல்றாங்களாம்."

"ஏனாம்—யாராம்—?"

"அவுங்கதான் பிச்சையா."

‘“ஏனாம்.”

"என்னமோ விவகாரம் இருக்காம், கருப்பையாவோடே அந்த விவகாரத்தைப் பைசல் செய்து ஆசாமியைத் தொடு—இல்லேன்னா விடமாட்டோம்னு பேசறாங்க."

"சாமி, மண்டபத்திலேதான் இருக்கா?"

"ஆமாம்—பாவம்—மண்டபத்திலேயேதான் இருக்கு."

"இந்நேரம் கோயில் போய்ச் சேர்ந்திருக்குமே.

"ஆமாம், விட்டாத்தானே!"

"இவர்களுக்குள்ளே சண்டைன்னா, சாமி என்ன பண்ணிச்சாம், பாவம்! அதை மண்டபத்திலே காக்கப் போட்டு வைக்க வேணுமா? இப்படித் தாய்மார்கள் பேசுகிறார்கள்.

சிறுவர்களோ, "டோய்! சாமி அம்பிட்டுக்கிச்சி, மண்டபத்திலே" என்று கூவித் தொலைக்கிறார்கள்.

தேவி! கோயில் நிர்வாக சம்பந்தமாக, அந்த இரண்டு பிரிவுக்குள் ஏதோ தகராறாம்—அதற்காக என்னை இந்தக் கோலப்படுத்தினார்கள்.

கோயில் தகராறு தீர்க்கப்பட்டாலொழிய, என்னை மண்டபத்தைவிட்டு எடுத்துச் செல்லக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டதுடன், "கணக்கு வழக்கு முடிந்தாலொழிய கருப்பண்ணசாமியைக் கோயிலுக்குக் கொண்டு போகவிடப்போவதில்லை" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, தேவி, என்னை மண்டபத்துக்குள்ளே விட்டுவிட்டு, கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு போய்விட்டார்கள், பிச்ச பக்தக் கூட்டம். நான் உள்ளே அடைபட்டுக் கிடந்தேன்—மண்டபத்தைப் பூட்டிவிட்டார்கள். உற்சவத்துக்கு ஆசைப்படாமலிருந்தால், நிம்மதியாகக் கோயிலிவே இருந்திருக்கலாம்—இப்போது, மண்டபத்திலே போட்டு பூட்டிவிட்டார்கள்.

"டோய்! சாமி, உள்ளே இருக்குடா—பூட்டிப் பூட்டாங்க" என்று கூவிக் குதிக்கிறார்கள்.

"பாவம்! கருப்பண்ணசாமியைப் போட்டு பூட்டிவிட்டான்க!" என்று தாய்மார்கள் முகவாய்க் கட்டையில் கைவைத்தபடி பேசுகிறார்கள். நான் உள்ளே சிறை வைக்கப்பட்டேன். என்னை இந்தச் சதிக்கு ஆளாக்கிய கருப்ப பக்தர், என்னைச் சிறை மீட்க அரும்பாடுபடலானார், 'இந்து மத பரிபாலன போர்டாராமே, அவர்களிடம் முறையிட்டாராம்!

"சாமியை மண்டமத்திலே போட்டு பூட்டிவிட்டார்கள்! கோயிலிலே சாமி இல்லை—சாமியை வெளியே கொண்டு போர்டார் வந்து கொடுக்கவேணும்"னு கேட்டாராம். போர்டார் இதுக்கா இருக்காங்க! ஏதோ கணக்குவழக்கு சரியா இருக்கா இல்லையான்னு பார்க்கத்தானே அந்தக் காரியத்தை ஒழுங்காகச் செய்யவே அவர்களுக்கு நேரம் போதறதில்லே—என்னைப் போட்டு பூட்டிவிட்டா, அதற்காக ஓடோடியா வருவாங்க! போப்பா! போயி, போலீசிலே சொல்லுன்னு யோசனை கூறிவிட்டாங்க. ஓடியிருக்கிறார் போலீசுக்கு. நான் உள்ளே அடைபட்டுக் கிடக்கிறேன். போலீசிலே என்னென்ன பேசினாங்களோ தெரியல்லே! என்ன பேசியிருக்கப் போறாங்க, கேலிதான்! கடைசியிலே லால்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒரு போலீஸ் படையோடு வந்து, பூட்டை உடைத்து, என்னை வெளியே விட்டார்! அந்த நல்ல மனுஷன் இந்த உபகாரம் செய்ய வந்தாரே,அவரைச் சும்மா விட்டாங்களா? "எப்படி பூட்டை உடைக்கலாம்-பார், என்னசெய்கிறோம்—எங்க கருப்பண்ணசாமியை நாங்க பூட்டி வைக்கிறோம்—மாட்டி வைக்கிறோம். எங்க இஷ்டப்படிச் செய்கிறோம், நீ யார் கேட்க—பூட்டை உடைக்கலாமா?" அப்படி இப்படின்னு, அவரைச் சூழ்ந்து கொண்டாங்க. அவர் என்ன, என்னைப் போலவா, வாயை மூடிக் கிட்டுக்கிடப்பாரு— ‘மரியாதையா நடங்க—சட்டப்படி நடக்க வேணும்'னு சொல்லியிருக்காரு—கேட்கல்லே!போலீசாரைக் கூப்டாரு. 'போடுங்கடா பூஜை'ன்னு உத்திரவு போட்டாரு. தூக்கினாங்க, தடியை; அடிச்சி விரட்டினாங்க, தேவி! அப்பத்தான் என் மனம் கொஞ்சம் நிம்மதியாச்சி. 'பக்தனுங்கன்னு பேர் வைத்துக் கொண்டு, என் எதிரே கன்னம் கன்னம்னு போட்டுக் கொண்டு, கற்பூரம் கொளுத்திக் காட்டிகிட்டு இருக்கிறவங்க, நீதி நியாயத்தைக் கவனிக்காமல், ஈவு இரக்கம் காட்டாமல், பழி பாவத்துக்கு அஞ்சாமல், சாமியை இந்த அலங்கோலப்படுத்தலாமான்னு யோசிக்காமே, நெஞ்சழுத்தத்தோட, என்னைப் பூட்டிப் போட்டு விட்டாங்க— கேவலப்படுத்திவிட்டாங்க. நான் என்ன செய்ய முடிந்தது? எந்தப் புண்யவான் வந்து வெளியே விடுவாரோ—எத்தனை காலம் இங்கே அடைபட்டுக் கிடக்கவேணுமோ—எவனெவன் கேலி செய்கிறானோன்னு எண்ணி எண்ணி ஏக்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நல்ல வேளையா வால்குடிகாரர், தங்கமான மனுஷன்! அவர் புள்ளெ குட்டிக சுகமா இருக்கணும். என்னை வந்து வெளியே கொண்டு வந்து சேர்த்தாரு— தேவி! இந்தப் பாடுபடுத்திவிட்டாங்க, பக்தர்னு சொல்லிக் கொள்கிறவங்க—அதனாலேதான் எனக்கு பயம் ஏற்பட்டு விட்டுது—நிஜமாச் சொல்றேன். இனி இந்த பக்தர்களை நம்பிப் பிரயோஜனமில்லே—ஏதோ பூஜை செய்கிறாங்களேன்னு பூரிப்படையறதிலே அர்த்தமில்லே. இனி நமக்கு அவங்க தயவு வேண்டாம்—சகவாசமே கூடாதுன்னு தோணிவிட்டுது' — என்று கருப்பண்ணசாமி தன் கதையைக் கூறி முடித்தார். தேவியும், கதையைக் கேட்டுக் கலக்கம் "ஆமாம்! இனி இந்தப் பக்தர்களை நம்பக்கூடாது" என்று தேவியும் தீர்ப்பளித்தார்கள்.

"நாம் இரண்டு பேரும் மட்டும் தீர்மானித்தால் போதுமா தேவி! நம்ம கூட்டம் பெரிதல்லவா? எல்லோருக்கும் எடுத்துச் சொல்லி, இனி இந்தப் பக்தர்களிடம் நாம் சிக்கிச் சீரழிவு படக்கூடாது. பக்தர்கள் வேண்டாம்" என்று தீர்மானம் நிறைவேற்றினால்தானே நல்லது என்றார் கருப்பண்ணசாமி.

"ஆமாம். கருப்பண்ணரே! பக்தர்களால் நம்மவர்களுக்கு ஏற்பட்டுவரும் சீரழிவுகளையும், எத்தர்கள் ஏமாளிகளை ஏய்க்க நம்மைக் கருவியாகக் கொள்வதையும் விளக்கமாகக் கூறி, நமது நண்பர்களுக்கும் இனி இப்படிப்பட்ட இடைஞ்சல் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளத்தான் வேண்டும். நாம் இதற்கெல்லாம் ஒரு தனி மாநாடு கூட்டிவிட வேண்டியதுதான். இனிப் பொறுக்கமுடியாது.நான் வரவேற்புக் கழகத்துக்குத் தலைமை தாங்கிவிடுகிறேன்—திறப்பு விழா நீ நடத்திவிடு—தலைமைக்கு யாரை அழைக்கலாம்" என்று தேவியார், ஆர்வத்துடன் கேட்டார்கள்.

"யாரை அழைக்கலாம்?"-என்று கருப்பண்ணசாமியும் யோசிக்கலானார்!


1951-ம ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் லால்குடிக்குச் சமீபத்தில் உள்ள புருசை சாங்குடி என்ற கிராமத்தில், இரு கட்சிகள் ஏற்பட்டு, கருப்பண்ணசாமியை மண்டபத்தில் போட்டு பூட்டிவிட, போலீஸ் உதவியுடன் பூட்டு உடைக்கப்பட்டு சாமி கோயிலில் கொண்டுபோய்ச் சேர்ககப்பட்டார் என்ற செய்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில், ஆகஸ்ட் 22ல் வெளிவந்தது. அந்த உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு தீட்டப்பட்டது இந்தக் கற்பனைக் கதை.