செவ்வாழை/சொர்க்கத்தில் நரகம்

9
சொர்க்கத்தில் நரகம்

"என்ன பிழைப்படி இது, என்ன பிழைப்பு! எழிலும் இளமையும் இருந்தென்ன, ஆடல் பாடல் அறிந்தென்ன? அடிமை வாழ்வுதானே- செச்சே! என்னென்ன இழிசெயலுக்கு உடன்பட வேண்டியிருக்கிறது. உடன்படுவதா? துரத்தப்படுகிறோம்! இந்தக் கேவலமான நிலைமையைப் பெறவா தவமாய்த் தவமிருந்து தேவமாதரானோம். எனக்கு வரவர ரம்பா! இந்த விண்ணுலக வாழ்வு வேம்பாகி வருகிறதடி" என்று திலோத்தமை கூறினாள்— கண்களில் நீர் துளிர்த்தது.

"வேம்பு என்கிறாயடி திலோத்தமா, எனக்கு இந்த வாழ்வு எட்டியாகி விட்டது. பட்டியில் மாடுகளைப் பார்த்திருக்கிறோம், அவைகளுக்கு உடலிலேதான் புண்; பசும் பொன்மேனி நமக்கு. ஆனால் உள்ளத்திலேயோ ஓராயிரம் புண். அப்பப்பா! எவ்வளவு இழிநிலைக்கு ஓரோர் சமயம் ஆளாக நேரிடுகிறது. எப்படிப்பட்ட காமாந்தகாரத்துக்கு உடந்தையாக நேரிடுகிறது. திலோ! நம்மைத் தீயிலே தள்ளி விட்டாலும் பரவாயில்லை;கருகித்தான் போவோம். ஆனால் பிறரைத் தீயில் தள்ளும் வேலையை அல்லவா நமக்குத் தருகிறார்கள்!” என்று ரம்பை கூறிக் கொண்டிருக்கும்போது, தொலைவில் மேனகை வந்துகொண்டிருக்கக் கண்டு, "பார்த்தாயா! மேனகா வருகிறாள்; எவ்வளவு ஆயாசத்தோடு வருகிறாள், பார்! பாபம், என்ன காரியமாகப் போய்வருகிறாளோ? எத்தகைய இன்னலுக்கு ஆளானாளோ? என்று பச்சாதாபத்துடன் கூறினாள். மேனகாவும் அவர்கள் அமர்ந்திருந்த பளிங்காலான படிக்கட்டில்வந்து உட்கார்ந்து, முகத்திலே முத்து முத்தாகத் துளிர்த்துக் கொண்டிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டாள்.

விண்ணுலகத்துத் தருக்கள் யாங்கள் என்று கர்வம் கொண்டிருப்பதுபோல தேவதாரு மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. எம்முடன் அடிக்கடி வானவில் போட்டியிட்டுத் தோற்று மறைவது வாடிக்கை என்று கூறுவது போலப் பல வண்ணப்பூக்கள் நிரம்பிக் கிடந்ததோர் பொழில். குழலும் யாழும் என்ன இனிமையைத் தரமுடியுமோ அதை இதோ நாங்கள் தருகிறோம், கேண்மின் என்று கூறுவதுபோல சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. எங்கும் மணம் - விழாக்கோலம்! பாசிபடராத, தூசு விழுந்தால் தெரிந்துவிடத்தக்க தெளிந்த நீர்கொண்ட தடாகம். 'ஸ்படிகக்' கண்ணாடியில் தமது முக "இலாவண்யததை" கண்டு களித்திடும் காரிகையர்போல மலர் சுமந்து கிடந்த தருக்கள் தமது வனப்பைக் கண்டு மகிழ்வதற்காகவே இந்தத் தடாகம் ஏற்பட்டது என்றுகூடக் கூறலாம். அந்தத் தடாகத்துப் படிக்கட்டுகளில் அமர்ந்து ஓரோர் சமயம் தேவலோக மாதர் பொழுது போக்குவர். இதை அறிந்து, தமக்கு எத்தகைய விருந்து வேண்டும் என்று தேர்ந்தெடுக்க அங்கு மாலைப் போதினில் தேவர்கள் 'அலங்கார புருஷர்களாக' உலவ வருவர், இங்கு அமர்ந்திருக்கும்போது, தேவமாதர் தத்தமது அல்லல், அனுபவம் பற்றிப் பேசிப் பேசித் தமது ஆயாசத்தைப் போக்கிக் கொள்வர் போலும். அவர்களுக்கு என்ன தொல்லை நேரிட முடியும்? தாங்க முடியாத குடும்ப பாரமா? தொட்டுத் தாலி கட்டினவன் விட்டுப் பிரிந்ததால் வந்துற்ற துயரமா? தொட்டதெல்லாம் தங்கமாகும்; அவ்வளவு பாக்யவான் இவன் என்று ஜோதிடரும் தரகரும் கூறியதால், மணமகனாக்கப்பட்டவன், வெறும் மண்ணாங்கட்டி என்பது, போகப் போகத் தெரிந்தால் புலம்பிக் கிடக்கும் பூலோகத்துப் பூவையர் போலவா தேவ மாதரின் நிலை இருக்கும்? அவர்களுக்கென்ன குறை? இந்திர சபையில் நடனம், சந்திரனின் சல்லாபம், அக்கினியே ஓடைக்குளிர் மதிப்பார்வை காட்டுவான்!உண்ண அமுதம், உடுத்திட தேவலோசப்பட்டாடைகள்! நடந்திடும் பாதையோ மலர் தூவியன! இவர்களின் போக போக்கியத்துக்கு என்ன குறை? என்றுதான் எவரும் எண்ணுவர். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்-இதயக் குமுறலைத் தரத்தக்கது என்பது அவர்கள் பளிங்காலான படிக்கட்டுகளில் அமர்ந்து பேசும்போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது. தேவமாதர்களின் முகத்திலே ஒரு துளியும் கவலையின் கீறல்கள் தெரியக் காணோம். உள்ளத்தில் ஓராயிரம் சோகக்கதைகளைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் என்று கண்டறிய முடியவில்லை: அவர்கள் இருளுக்கு ஒளி ஊட்டும் பேரழகுடன் காணப்பட்டனர். பூலோகத்திலல்லவா, தங்கம் நாலாறு ஆண்டுகளில் பித்தளையாகிப் போகிற நிலைமை!

"கனகாவா? நிஜமாகவா? அட பாவமே! மான் குட்டி போலத் துள்ளி ஓடுவாளே! பழத்தோட்டங்களிலே புகுந்து அவள் ஆடிடும் ஆட்டம் கொஞ்சமா? சிறிதும் பயமறியாதவளாயிற்றே! யாரையும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிவிடுவாள்; கோபம் கொண்டு தாக்க வந்தாலோ ஒரே புன்னகையால் அவர்களை வென்றுவிடுவாளே!எவ்வளவு கவர்ச்சிகரமான கண்கள் குவிந்து சிவந்து இருந்த அந்த அதரத்தை, கொவ்வை என்றெண்ணிக்கொண்டு கிளிகள் கொத்த வருமே! அந்தக் கனகாவா இது? தலையில் நரை! முகத்தில் கவலைக் கோடுகள்! கண்ணொளி எங்கேயோ போயேவிட்டது. அந்த அதரம்? அடடா, இப்படியா சுக்காகிக் கிடக்க வேண்டும். கலகலப்பான பேச்சு காணோம். பேசத் தொடங்கும்போதே பெருமூச்சும் கிளம்பிவிடுகிறது. நடையிலே ஓர் தளர்ச்சி! பாபம்! பரிதாபம்! இத்தனைக்கும் இப்போது வயது என்ன ஆகிவிட்டிருக்கும்? முப்பது அல்லது முப்பத்தி இரண்டுதானே இருக்க முடியும். இதற்குள்ளாகவா இந்த "ஒளவையார் கோலம்" என்று பேசும் இடம் பூலோகம். இவர்களுக்கு என்ன! இன்பவல்லிகள்!! எனினும் அன்று அவர்கள் ஆயாசத்துடன் பேசினர். ரம்பை, மேனகாவின் கன்னத்தில் காணப்பட்ட 'வடுக்களை'க் காட்டினாள் திலோத்தமையிடம். "பாவம்!" என்று பரிதாபம் தெரிவித்தாள் திலோத்தமா.

"மேனகா! அலங்கோலமாக இருக்கிறாயே கண்ணே! நெடுந்தூரம் போய் வந்தாயோ!" என்று திலோத்தமா கேட்டாள்.

"நெடுந்தூரமா" என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் மேனகா— சந்தோஷத்தால் அல்ல, வெறுப்புணர்ச்சியுடன.

"நான் சென்ற தூரம் கிடக்கட்டும், திலோத்தமா! பட்டகஷ்டம் தெரியுமா?" என்று கேட்டாள்.

"உனக்கு இடப்பட்ட கட்டளை யாதோ?" என்றாள் ரம்பை.

"கட்டளையா? ஏண்டி பைத்யமே! அறிவு புகட்டு, அன்பு போதனை செய், ஆண்டவனின் கலியாண குணங்களை அறிந்திடும் வழியைக் கூறு, எனறா நமக்குக் கட்டளை பிறப்பிக்கப்படுகிறது? பாயத்துக்குச் சம்மதிக்கச் செய்யவேண்டும், காமப்படுகுழியில் தள்ள வேண்டும், மோக லாகிரியை ஊட்டவேண்டும், கடுந்தவம் புரிவோனைக் காமுகனாக்க வேண்டும், தவமபல புரிந்து, அற்புதம் பல நடாத்தும் ஆற்றல் பெற்றவனை, நாம் பம்பரமாக ஆட்டிப்படைக்க வேண்டும், ஓமத்தீ கொழுந்துவிட்டெரியக் கண்டு களி கொள்ளும் முனிவருடைய உள்ளத்தில் காமத்தீயை மூட்டிட வேண்டும்! நமக்கு இடப்படும கட்டளை இதுதானேடி. நாமென்ன, நற்குணத்தைத் தரும் பணியைப் புரியவா இங்கு அமர்ந்திருக்கிறோம்! வேடன் கரத்திலே இருக்கும் அம்பு, மாடப்புறாவையோ, மான் குட்டியையோ சாகடிக்கத்தானே பயன்படுகிறது! அரும்பை மலராக்கவா? அதுபோலத்தானே நாம் இருக்கிறோம்" என்று கோபமும், ஆயாசமும் கலந்த குரலில் மேனகை பேசினாள்.

"ரம்பாவிடம், நான் இப்போது இதையேதான் சொல்லிக் கொண்டிருந்தேன். வரவர இந்தப் பிழைப்பு எனக்குத் துளியும் பிடிக்கவில்லை. பூலோகத்திலே நாம் காண்கிறோம். அவர்கள் பொற்கொடிகளாக இல்லாதிருக்கலாம்; ஆனால் எவ்வளவு கண்ணியமாக வாழ்கிறார்கள். காதலை அவர்கள்தானே,பெறுகிறார்கள்! எட்டுத் திக்கும் வெற்றிக் கொடி நாட்டியவனாயினும், அவனுடைய இன்பவல்லியிடம், பார்த்தனையோ, குழந்தை போலாகிக் கொஞ்சுவதை. மேனகா! அவர்களுக்கு ஆயிரத்தெட்டு அல்லல் இருக்கிறது— எனினும் எதனையும் போக்கிடும் 'காதல்' மாமருந்தாகிறது. நாமும் இருக்கிறோமே, மாதர்களாக...அதிலும் தேவமாதர்களாக! பாரிஜாதம் சூடுகிறோம்; பரிமளகந்தம் பூசுகிறோம்; பூலோகத்தாருக்குக் கிட்டாத பட்டாடையும் பல்வேறு அணிகளும் உள்ளன; பூங்கொடி போலாடுகிறோம்; புள்ளினம் போலப் பாடுகிறோம்; பூம்பொழில்கள் உள்ளன உலவி மகிழ எனினும், உள்ளத்திலே உயர்ந்த எண்ணம் மலர வழி இருக்கிறதா? உலகோருக்கு உயர்நெறி பற்றி எடுத்துக்கூறும் வாய்ப்பு கிடைக்கிறதா? கட்டி முத்தமிடு! தழுவித் தாசனாக்கு! கடைகாட்டு, இடை ஆட்டு! காலில் விழச் செய்! காமக் குழியில் தள்ளு! வெட்டிப் பேசுவான்; எட்டிப் போய்விடாதே! பொறி பறக்கும் அவன் கண்களில், புன்னகை பூத்திடட்டும் இதழில்! கோபப்பார்வை கண்டு அச்சம் கொள்ளாதே! மோகவலை வீசிப் பிடித்திடு! தவம்! தவம்? என்று எண்ணிக் கிடப்பவனை, பெண்களைத் தேடுவதும், நாடுவதும் பாவம் என்று நினைத்துக் கிடப்பவனை மலரடி வருடிடும் நிலைக்குக் கொண்டுவா! வேத ஒலி கிளப்பிக் கொண்டிருப்பானவன், உன் சாகசத்தால், 'மணியே! மானே மரகதமே!' என்று உன்னை அர்ச்சிக்க வேண்டும். அந்த வகையில் அவனை அடிமையாக்கிவிட வேண்டும். என்ன செய்வாயோ தெரியாது. அவன் ரசனை அறியாத காட்டானாக இருக்கலாம்; அனுபவித்தறியாத அப்பாவியாக இருக்கலாம்; அல்லது ஆடி அலுத்துப் போனவனாக இருக்கலாம்; நீ சிரித்துப் பேசி மயக்குவாயோ, சிந்துபாடி உருக வைப்பாயோ. நாட்டியமாடி வெற்றி கொள்வாயோ, அருகே சென்று ஆரத்தழுவி அதர அமுதளித்து அடிமையாக்குவாயோ, எனக்குத் தெரியாது; அவன் தவக்கோலம் கலைந்திட வேண்டும்— யோக தண்டத்தை வீசி எறிந்துவிட்டு அவன் போக பூமியில் புரள வேண்டும். போ! போ! புனிதன், பூஜ்யன் என்று புகழப்படுகிறான், அவன், காமுகனாக வேண்டும்— இதைச் சாதிக்க, எத்தகைய முறை தேவையோ அதை உன் யுக்தம்போலக் கையாண்டு வெற்றி பெற்ற பிறகே, இங்கு நீ வருதல் வேண்டும். ஆபத்து வருமோ என்று அஞ்சாதே! சாபம் கொடுப்பானோ என்றெண்ணிச் சஞ்சலப் படாதே. அவனைப் பாபியாக்கிட உன் பருவ கருவ மிகுந்த அங்கம், காதல் பொங்கும் இடைக்கலங்களாகட்டும் களத்திலே நின்று நீ உன் கண்ணம்பை ஏவினால் தவக்கோலம் கலைந்து போகும். உனக்கென்ன இது தெரியாதா!! இன்று நேற்றா நீ இந்தக்காரியத்தில் ஈடுபடுகிறாய். கல்லுருவம்கூ! உருகிடத்தக்க வகையில் சாகசம் புரியும் சல்லாபி அல்லவா நீ. உன்னிடம் எனக்குப் பரிபூரண நம்பிக்கை இருக்கிறது. சென்றுவா, வென்றுவா ! என்றுதானே நமக்கு இங்கு கட்டளை பிறக்கிறது. இதுதான் நமது வாழ்வு என்று தெரிந்திருந்தால், ரம்பா! ஆண்டவன் மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன்; நான் இங்குவரச் சம்மதித்து இருக்கவே மாட்டேன். என்றாள் திலோத்தமா.

"நமது வேதனை யாருக்குத் தெரியப் போகிறது. கிடக்கட்டும், நாம் செய்த தீவினை இது. என்ன செய்யலாம். இப்போது என்ன காரியமாகச் சென்று வந்தாய்? அதைச்சொல்லு!" என்று ரம்பை கேட்டாள். திலோத்தமா, மேனகையை அருகே அழைத்து அணைத்துக் கொண்டு, ரம்பையிடம் "போடி போக்கிரிச் சிறுக்கி! பார்த்தாலே தெரியவில்லையா, அவள் பட்டபாடு! கிளறிக் கிளறிக் கேட்கிறாயே! கிளியே! நீ வருத்தப்படாதே" என்று கூறினாள்.

"திலோத்தமா! மலரினைப் பறிப்பதற்கும் கசக்கி எறிவதற்கும் உள்ள வித்தியாசத்தைக் கூடவா இந்தப் பெரிய ஞானி அறியாதிருப்பான் என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் அவன் நாலு வேதத்தையும் ஆறு சாஸ்திரத்தையும் படித்துப் படித்துத் தடித்துப் போன உள்ளத்தினனாகிக் கிடந்தான். தங்கமே! தங்கமே! என்றுதான் கொஞ்சினான். ஆனால், இரும்பாலான சிலை என்று எண்ணிக் கொண்டல்லவா தழுவினான். இதழ், மலராம், எனக்கு! மலரை எப்படிப் பக்குவமாக, இலாவகமாகப் பறித்து நுகர வேண்டும் என்றாவது அறிந்திருந்தானா! அப்பப்பா! அவனிடம் சிக்கிச் சீரழிந்தேன். தாயுமானேன், தெரியுமா? என்றாள்.

"அடி, அழகுராணி! தாய் ஆகிவிட்டாயா? கேளடி. ரம்பா! மேனகா, தாயாகி விட்டாளாம். குழந்தை எங்கேயடி கோமளமே! என்ன குழந்தை? ஆணா, பெண்ணா? அழகாகத்தானே இருந்தது? ஒரு முகமா ஆறு ஏழா? பிறந்ததும் பாடிற்றா,ஓடிற்றா? சொல்லடி சொர்ணபிம்பமே!சொல்லு. எங்கே, குழந்தை?' என்று ஆவலுடன் கேட்டாள் திலோத்தமா.

"அழகான பெண் குழந்தை! அடவியிலேயே விட்டு விட்டேன்" என்று சோகமாகக் கூறினாள் மேனகா.

"அடவியிலா? அரண்மனையிலா?" என்று கேட்டாள் ரம்பை.

"அடவியடி அடவி! என் இன்பப் பெருக்கு, அன்புக் குழவி, கானகத்திலேதான்! வேறென்ன செய்வேன்! எனக்கு இடப்பட்ட கட்டளை விசுவாமித்திரனுடைய தவத்தைக் கெடுக்க வேண்டும் என்பதாகும். அவனே முன்கோபியாம்! முரடனாகவும் இருந்தான்! கடுந்தவம் இயற்றிக் கொண்டிருந்தவன் மீது காமக் கணைகளை வீச நான் கால் கடுக்குமளவு ஆடினேன்; கண் திறந்தான். சாபமிட வாய் திறந்தான் என்னைக் கண்டான், கோபம் மடிந்தது, காமம் கொப்பளித்தது. பசும் புற்றரை மஞ்சமாயிற்று. கிளியும் நாகணவாய்ப் புள்ளும் சுபசோபனம் பாடிட, மான் கூட்டம் நடனமாட, எங்கள் மதனவிழா இனிது நிறைவேறிற்று இனிது என்பது அவர் நிலை— நான்?— தாயானேன்— பெண் குழந்தை" என்று விவரித்தாள் மேனகா.

"பாரடி ரம்பா! பரமனை வேண்டி அந்த முனிவன் எத்தனையோ காலமாகத் தவங்கிடக்கிறான். நீரில் நின்றிருப்பான், நெருப்பில் அமர்ந்திருப்பான், ஊசி முனையில் தவமிருந்திருப்பான். காற்றைத் தவிர வேறெதுவும் புசியேன் என்று கூறி கடுந்தவம் புரிந்திருப்பான். வகை வகையான யாகங்களைச் செய்திருப்பான். எனினும் வரம் கிடைக்வில்லை. மேனகையைப் பார்! திவ்ய தரிசனம் தந்தாள். வரமும் கொடுத்தாள்" என்றாள் திலோத்தமா.

"வாரி அணைத்துக் கொண்டு உச்சிமோந்து முத்தமிட்டு, கானகத்தில் கிடைத்த கட்டழகி பெற்றெடுத்த கனியமுதே! காவியக் கர்த்தாக்களுக்கும் ஓவிய வித்தகர்களுக்கும் களிப்பூட்டிக் கற்பனையைச் சுரக்க வைக்கும் கலைவடிவே! என் தவத்தின் பலனே! ஓம குண்டத்தருகே கிளம்பிய, வேத ஒலியை உன் வடிவெடுத்து வந்ததோ, என்னை வாழ்விக்க! நிரந்தர இன்பத்தை நாடினேன், நிர்மலனைத் தேடினேன் அதைப் பெற! அது இருக்குமிடம் விண்ணுலகம் என்றெண்ணி அண்ணாந்து பார்த்துப் பார்த்து அலுத்துப் போனேன். சர்வலோக இரட்சகன், என் தவத்துக்கு மெச்சி, 'வரம்' உன் வடிவில் அருளி இருக்கிறார்! அழகொழுகும் குழந்தாய்! அடவியல் நான் பெற்ற அருஞ்செல்வமே!" என்றெல்லாம் விசுவாமித்திரர் குழந்தையிடம் கொஞ்சியிருப்பார்" என்றாள் ரம்பை. குறும்பாக அல்ல— குதூகலத்துடன்தான். மேனகையின் கன்னத்திலே கண்ணீர் புரண்டது. “காட்டு வாசத்தால் கல்மனமாகிவிட்ட அந்தக் காதகன், 'காமுகனாகிவிட்டேனே; கடுந்தவம் கலைந்ததே! கடவுள் சன்னிதானத்துக்கு இந்தக் கறைபடிந்த நிலையில் எங்ஙனம் செல்ல முடியும்' என்று கூறிவிட்டு, என் செல்வத்தை, அவனுடைய காதல் விளையாட்டில் கனிந்த இன்பத்திருவைத் தொடவும் மறுத்தானடி! அதே காட்டிலே புலி, குட்டிகளுடன் விளையாடுகிறது. பாம்புப் பிலத்திலே பாசம் இருக்கிறது? பரமபதம் தேடிடும் அந்தப் பாபிக்கு, பெற்றெடுத்த குழந்தையிடம் அன்பு சுரக்கவில்லை. என் அழகைக் கண்டதும், தவம் கலைந்தது— இன்பம் பெற்றானதும் மீண்டும் தவத்தின்மீது நினைவுசென்றது! என்ன விந்தையான மனமடி இது. கள்ளன், வழிமறித்து அடித்துப் பொருளைப் பறித்துக் கொண்டான பிறகு கடுகிச் செல்கிறானே, அதுபோலவே என்னிடம் பெறவேண்டியதைப் பெற்றுக் கொண்டான். பிறகு, கற்ற வேதத்தைக் கவனத்துக்குக் கொண்டு வந்தான்; கண்களை இறுக மூடிக் கொண்டான். தேவமாதல்லவோ தான்! இங்கு குழந்தைகளைக் கொண்டு வருதல் முறையல்ல என்பதை அறியீரா? என்று கேட்டேன்— பூலோகத்தில் இவள் ஓர் புவனசுந்தரியாவாள். பூஜிதரே!கையிலேந்திப் பாரும்! கண்ணழகு பாரும்! கருநீலமலர் பாரும்! கட்டித் தங்கம். குழந்தை வடிவெடுத்திருக்கிறது! என்று பாசத்தை ஊட்ட முயற்சித்தேன். பாறை மனம் கொண்டோனானான். உணர்ச்சிக்கே ஆட்படாதவனா என்றால், சிறிது நேரத்துக்கு முன்புவரை ‘அன்னமே! சொர்ணமே! அமுதே!கனியே!'என்று இளித்துக் கிடந்தான். 'தங்கள் அந்தஸ்துக்கு இது அடுக்காது.வேண்டாம் அபசாரம், என்று நான் தடுத்தும், என் பாதம் வருடி, தேவலோகத்திலே பாதைகளில் மலர் தூவி வைக்கிறார்களல்லவா? இல்லையானால் இந்தப் பாதம் நொந்து போகுமே என்று பேசிக் காமம் கக்கினான். காரியம் முடிந்தானதும், 'கடுந்தவம் செய்வோன் நான். காரிகையே! என்ன காரியம் செய்தனை! என்ன காரியம் செய்தனை!' என்று கூறி மிரட்டலானான். என்ன செய்வது? கோழியும் அதன் குஞ்சுகளைக் கொத்த வல்லூறு வட்டமிடக் காணும்போது சீறுகிறது... போரிடவும் செய்கிறது. நான் என்ன செய்ய முடிந்தது? குழந்தையை, புலியும் பிறவும் உலவும் பெருங்காட்டிலே விட்டுவிட்டு வரவேண்டி இருக்கிறது!!" என்று கூறி விம்மினாள் மேனகை.

"மேனகா, அழாதே! அந்தக் காட்டிலே, கண்மூடித் தவம் புரியும் தவசிகள் மட்டுமா? வேடர்கள் இருப்பார்கள். அவர்கள் குழந்தையிடம் அன்பு காட்டத் தவறமாட்டார்கள். குற்றம் அந்த முனிவன்மீதுகூட அல்லடி அம்மா! சுவையுள்ள கனி குலுங்கும் மரத்தைக் காண்பவன், ஏறிப் பறித்தோ கல்லால் அடித்தோ, பழத்தைப் பெறுகிறான்; உண்டு மகிழ்கிறான். ஒரு நொடிப் பொழுதில், சுவை தந்த தருவினை மறந்துவிடுகிறான். அதேதான், ஆடவர் போக்கு! அதிலும் நாம் சந்திக்கும் ஆடவரின் போக்கு!! அவர்கள் ஆண்டவனை சந்தித்து 'ஆனந்தம்' பெறும் பாதையில், !இடையில் நம்மைச் சந்திக்கிறார்கள், இன்பம் பெறுகிறார்கள், பிறகோ நம்மை நிராகரித்துவிடுகிறார்கள்.. மீண்டும் புனிதப் பயணத்தைத் தொடங்கிவிடுகிறார்கள். நாம்? வீசியெறியப்பட்ட மலராகி விடுகிறோம். கசக்கிப் போடப்பட்ட கனியாகிறோம். நாம் இத்தகைய கொடுமைக்கு உட்பட்டுக் கிடப்பது மடமை. தேவலோகவாசம் தேவதேவனின் தரிசனம் என்ற மயக்கம் நம்மை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிடுகிறது. பூலோகத்தில் உள்ளவர்களுக்கு மூப்பு, பிணி, சாவு உண்டு...சாகா வரம் பெற்றவர்கள் நாங்கள்.. இளமை மாறாது, அழகு குன்றாது, நினைக்கும் வடிவம் எடுக்கவல்லோம், இந்த விநாடி விண்ணகத்திலிருப்போம், மறு விநாடி மண்ணுலகு செல்வோம். அவ்வளவு மகத்துவம் இருக்கிறது எங்களுக்கு என்று பூரித்துக் கிடக்கிறோமே, அதனால் வந்த வினை இது...எவனெவனுக்கோ பெண்டாகி, எவருடைய அன்பையும் நிரந்தரமாகப் பெற முடியாமல், கட்டித் தழுவிடும் காதலனையும் பெற்றெடுக்கும் செல்வத்தையும் கைவிட்டுவிட்டு, இங்கு வந்து கண்ணீர் வடிக்கிறோம்; நாமாகத்தானே இந்த 'நரக' வாழ்வைப் பெற்றுக் கொள்கிறோம் சொர்க்கத்தில்! நமக்குச் சிறிதளவாவது சிந்தித்துச் செயலாற்றும் சக்தி இருந்தால், இந்த வாழ்க்கைக்குச் சம்மதித்திருப்போமா? சகித்துக் கொள்கிறோம். சர்வேஸ்வரன் கட்டளை என்று எண்ணிச் சிரம் சாய்க்கிறோம்..." என்று கூறிப் பெருமூச்செறிந்தாள் திலோத்தமை.

"கொண்டவளைக் கைவிடாதே, கண்டவளுடன் கூடி அழியாதே, காமுற்றுத் திரியாதே, கதியற்ற கன்னியரைக் கெடுத்திடாதே. போக போக்கியத்தில் புரளாதே" என்றெல்லாம் எவ்வளவு அற்புதமான போதனைகள் தருகிறார்கள் பூலோகத்தில்— திலோத்தமா ! ஒழுக்கம், குடும்ப வாழ்க்கை, பிறர்மனை நாடாமை, வஞ்சித்து ஒழுகாதிருத்தல் போன்ற அருங்குணங்களை அவர்கள் போற்றி வருகிறார்கள். ஒழுக்கநெறி தவறுவோனை இகழ்கிறார்கள்— தண்டிக்கிறார்கள். இப்படிச் சீலத்தோடு வாழ்கிற பூலோகம் வேண்டாமென்று, இங்கு வந்து காமச் சேற்றை தெய்வீகமாகக் கொண்டு உழல்கிறோம். இதை எண்ணும்போது, எனக்குத் திலோத்தமா! அழுவதா, சிரிப்பதா என்று தெரிவதில்லை. ஐயன் ஒழுக்கம் தவறுபவனை நரகத்தில் தள்ளுவான், என்று அங்கே பூலோகத்தில் உள்ள மக்கள் நம்புகிறார்கள்— அஞ்சுகிறார்கள்— பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள். கடவுளிடம் நெருங்கிய தொடர்பு கொண்ட தோழர்கள் நாங்கள் என்று கூறிவிடும் சிலர், ஒழுக்கக் குறைவையே தனிச் சிறப்பாகக் கொண்டு, ஐவர் ஒரு அழகியைக்கூடி மகிழ்கிறார்கள். சாமான்யர்களோ, ஒழுக்கத்தை ஓம்பி வருகிறார்கள். அப்படிப்பட்ட இடத்தை மட்டமானதென்று கூறிக்கொண்டு, அங்கு உள்ளவர்களிலே மக மட்டரகமானவர்களும் செய்யக் கூசும் காரியங்களை இங்கு செய்துகொண்டு, நாம் இருக்கிறோம். இதென்ன விந்தை!! நாம் பூலோகத்தை மட்டமானது என்று கூறுவது ட்டுமல்ல, பூலோகத்தில் தேவலோகம் மேலானது என்று போதிக்கப்பட்டு வருகிறது! அதுதான் எனக்கு வேடிக்கை கலந்த வேதனையாகப் படுகிறது," என்றாள் மேனகை.

"பூலோகத்திலே மகா உத்தமிகளாக, பதிசொற் கடவாப் பாவையராக, கணவன் பொருட்டு எத்தகைய கஷ்டநஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளக் கூடிய காரிகையாக இருப்பினும், மேனகா! இங்கே, தேவலோகத்திலே ஒரு பத்துநாள் தங்கிவிட்டால் போதும்; ஒன்று எங்களைத் தலைகீழாகப் பிடித்துத் தள்ளிவிடுங்கள் பூலோகத்துக்கு. அக்ரமமும் ஆபாசமும் நெளியும் இந்த அமரலோக வாழ்வு எமக்கு வேண்டாம் என்றாவது காலடி வீழ்ந்து கண்ணீர் பொழிந்து கேட்பார்கள். அல்லது மெள்ள மெள்ள காமாந்தகாரப் படுகுழியில் தங்களையும் அறியாமல் தள்ளப்பட்டுப் போவார்கள். பாவம்! இங்கே இருக்கிற இழிதன்மை இன்னதென்று தெரியாமல், அங்கே அவர்கள், பூஜை நடத்தியும் பூசுரன் காலில் வீழ்ந்து வணங்கியும், கடுமையான நோன்பு விரதம் ஆகியவைகளில் ஈடுபட்டும் தேவலோகம் வந்து சேரவேண்டும் என்று தவம் கிடக்கிறார்கள்."

"ஆமாம், தேவலோகமென்றால், தேவதேவனுடைய திவ்ய நாமங்களைப் பஜித்துக் கொண்டு, காலையில் கைலாயம், மாலையில் வைகுந்தம் சென்று தொழுது பேரானந்தம் அடையும் இடம், நிர்மலனுடன் நித்தநித்தம் உரையாடி மகிழும் லோகம் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அவர்களுக்குத் தெரிகிறதா, இங்கு நடைபெறும் காமக் களியாட்டவெறிச் செயல்கள்."

"அந்த உண்மை தெரிந்துவிடக் கூடாதென்பதற்காகத்தானே இங்குள்ள தந்திரக்காரர்கள் பூலோகத்தில் புராணிகர்கள் என்ற கூட்டத்தினரை அனுப்பி தேவர்களின் மகாத்மியத்தைப் பற்றி மனம்போன போக்கில் புளுகித்தள்ளச் சொல்லி இருக்கிறார்கள். முடித்துவிட்டுக் குளறுவது, கிடைத்தவனுடன் கூடிக்குலவுவது, பிறன்மனையாளை கற்பழிப்பது ஆகிய இழிச் செயல்களுக்கெல்லாம் பூலோகத்தில் புராணிகர்கள் தத்துவார்த்தம் கூறி, எல்லாம் மகிமை என்று பேசி மக்களை மயக்குகிறார்கள். தங்கள் லோகத்திலே எவையெவை பஞ்சமா பாதகம் என்று நம்பப்படுகிறதோ, எவைகளைச் செய்ய நாணயமானவர்கள் கூசுகிறார்களோ, எவைகளைச் செய்தால் செய்பவனை இழிமகனென்று கண்டித்து, சமூகத்திலிருந்தே ஒதுக்கி வைக்கிறார்களோ, அதே செய்கைகளை இங்கு தேவர்கள் வெறிவேகத்துடன் செய்கிறார்களே என்று வெறுப்படையாமல், கடவுளின் வீலைகள் என்று கூறி கற்பூரம் கொளுத்துகிறார்கள்; கன்னத்தில் அடித்துக் கொள்கிறார்கள்; கர்மம், கர்மம்!"

"அவ்வளவு போதை ஏற்றி வைத்திருக்கிறார்கள் புராணக்காரர்கள்,

"ஆமாமடி! ஒரு நாள் அந்தரத்திலிருந்து ஒரு அரிகதா காலட்சேபத்தைக் கேட்ட போது ஒரு கணம் நானே மயங்கி விட்டேன்."

"புராணக்காரர்களை ஏவி பூலோக வாசிகளை ஏமாற்றிவருகிறார்கள்; புண்யலோக வாசம் கூறி நம்மை ஏய்க்கிறார்கள்...

"நாம் செய்யும் காமச்சேட்டைகளேகூட புண்ய கைங்கரியம் என்றுதானே கூறுகிறார்கள். வேறு எப்படிக் கூறுவார்கள்? நாம்தான் பார்க்கிறோமே இங்கு மூலவர் என்று கொண்டாடப்படுபவர்களே ஒழுக்கத்தைப் பற்றி ஒரு துளியும் சிந்திக்கவும், மதிக்கவும் மறுக்கிறார்கள்—அப்பப்பா! மகாவிஷ்ணு செய்திருக்கிற ஆபாசங்கள் கொஞ்சமா ..."

"பாவமடி, இந்த நாரதர் ! விஷ்ணுவிடம் சிக்கிக் கொண்டு பட்டபாடு பற்றி எண்ணினாலே சிரிப்புவருகிறது" இந்தக் குறும்புக்காரர் ஏன் பெண் வடிவமெடுக்க வேண்டும்? புதுப்பெண் என்று தெரிந்ததும் அவர் புண்ய கைங்கரியத்தில் ஈடுபட்டுவிட்டார்."

"அறுபது புத்திரர்களாம், அந்த ஆபாசக் கூட்டுறவில் பிறந்தவை..."

"பூலோகவாசிகளிடம் புராணக்காரன் இந்த அறுபது குழந்தைகளின் பெயரை அறுபது வருஷங்களாகக் கொண்டாடுவது புண்ய காரியம் என்று கூறிவிட்டான்; மக்களும் நம்பிவிட்டார்கள்.”

"பாரேண்டி அக்ரமத்தை! கள்ளனுடைய கன்னக்கோலுக்கு கோயில்கட்டிக் கும்பிடச் சொல்லி திருட்டுக் கொடுத்தவர்களிடம் கூறுவது போலச் செய்திருக்கிறார்கள்"

"என்னதான் செய்ய மாட்டார்கள இந்தத் தேவர்கள்! பூலோகத்தில் சிவலிங்க பூசையே சிலாக்கியமானது என்று நம்ப வைத்திருக்கிறார்களே!

"ஆமாம். இங்கே நடைபெறுகிற ஆபாசம் அத்தனையும் அங்கு தேவப் பிரசாதமாக்கப்படுகிறது."

"மோகினியாக வடிவமெடுத்தாரே, மஹாவிஷ்ணு, எதற்காகத் தெரியுமாடி...?"

"இவரும் அரனும் கூடினர்; ஐயனார் பிறந்தார்...பூலோகத்தில் மிகப்பிரமாதமாகக் கொண்டாடுகிறார்கள் ஐயனாரை...

"அதற்கல்ல நான் கேட்பது. ஏன் மோகினியாக வடிவமெடுத்தார் தெரியுமா மகாவிஷ்ணு? அடி, தேவமாதர்களே! நாங்கள் இடுகிற கட்டளைப்படி நடக்காவிட்டால், எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை; வேறு எத்தனையோ வழிகள் எங்களுக்குத் தெரியும். உங்கள் தயவே தேவையில்லை. எங்களால் மோகினியாகி ஒருவருக்கொருவர் சேவை செய்துகொள்ள முடியும் என்று கூறி, நம்மை மிரட்டுவதற்காகவே, மகாவிஷ்ணு மோகினி வடிவம் எடுத்தார்."

"இருக்கும், இருக்கும். அந்த முனிவனுடைய தவத்தைக் கெடு— இந்த அரசனை ஆலிங்கனம் செய்து அடிமையாக்கு என்று நமக்குக் கட்டளையிடும்போது, நாம் சிரமமாக இருக்கிறது; வேறு வேலை நிரம்ப இருக்கிறது என்று ஏதாவது மறுப்பு சொன்னால், இவ்வளவுதானே! உங்கள் உதவியே வேண்டாம்; இந்தத் தவசியின் 'நிஷ்டையைக் கலைக்க இதோ நானே 'மோகினி' யாகிறேன் பார் என்று மகாவிஷ்ணு கூறிவிடுவாரல்லவா..."

"தாராளமாக! அந்த 'மகா சேவையை இந்தக் கடவுள்களே தங்கள் ஏகபோக உரிமையாக வைத்துக்கொள்ளட்டும்— இந்த இடத்தைவிட்டுப் போய்விட வழி செய்து கொடுத்தால் போதும்; நமக்கு ஏற்றவன், ஒரு நாணயஸ்தன், பூலோகத்தில் கிடைக்கவாமாட்டான்—அவனோடு காலந் தள்ளுவோம். அமிர்தமும் வேண்டாம்; ஆபாசம் புரியும் இந்த வாழ்க்கையும் வேண்டாம்." நம்மால் இங்கே உட்கார்ந்து கொண்டு, இதுபோல முணுமுணுத்திட மட்டுமே முடிகிறது; முடிவு எடுக்க வேண்டிய கட்டம் வந்ததும் மீண்டும் நமக்குச் சபலம் பிறந்துவிடுகிறது. சதங்கையைத் தேடிக் காலில் அணிந்து கொண்டு இந்திர சபையில் ஆடி அதனால் ஏற்பட்ட அலுப்புத் தீருவதற்குள், எவனாவது தேவன் இளித்தால் அவனுக்கு இறையாகிறோம். பூலோகத்தில் மாதவி என்றோர் மடந்தை— கணிகையர் குலம்தான். கனவான் எவனுக்காவது காமக் கிழத்தியாகி அவனுக்குக் களிப்பூட்டிக் காலந்தள்ள வேண்டிய விதிதான அவளுக்கு. அழகு, இளமை, கவர்ச்சி இவற்றுடன் அவளிடம் கலையும் பூரணமாக இருந்தது; அரசன்அவையில் அவள் ஆடியபோது, அனைவரும் ஆஹா ஹாரமிட்டனர். கோவலன் எனும் வணிக இளைஞன், அவளிடம் காதல் வேண்டிப் பெற்றான். இருவரும் இன்ப வாழ்வு பெற்றனர். பிறகு அவன் காரணமற்று அவளிடம் கோபமடைந்து அவளை விட்டுப் பிரிந்தான்—கணிகைதானே அவள் - பாபப்பிண்டம் என்கிறார்கள் அவளை! பழி சேரும் இடம் என்கிறார்கள் அவள் மனையை...! அப்படிப்பட்ட மாதவி, தன்னை மகிழ்வித்து வந்த இன்னுயிரானை யான் தன்னைவிட்டு நீங்கி பிறகு பயங்கரமான ஒரு சூழ்நிலை காரணமாகக் கொல்லப்பட்டுப் போனான் என்று கேள்விப்பட்டதும் என்ன செய்தாள் தெரியுமா அந்த மாதவி? நாமும் இருக்கிறோமே இங்கு புதனை விட்டால் வியாழன், சூரியனை விட்டால் சந்திரன் என்று; இப்படி கைமாறியபடி அப்படியா செய்தாள் அந்த ஆடலழகி—அவர் என் மனதுக்கிசைந்தவர்— எனவே என் மணாளர்— அவர் மடிந்தபின் மாதவியும் மடியத்தான் வேண்டும். அதுதான் அறம் ஆனால் என் கருவில் வளரும் குழவியை உலகுக்கு அளித்திடும் கடமை ஒன்றுளது. அதனை நிறைவேற்ற மட்டும் நான் உயிர் துறக்காதிருக்கிறேன்— எனினும் கோவலன் இறந்தபின் அவனுடன் கொஞ்சி விளையாடி கோலமயில் போலாடி, அவன் திருவாயால் கோமளமே! அஞ்சுகமே! என்று கொஞ்சுமொழி கேட்டு, அவனுடன் தென்றலைச் சுவைத்து, தேனமுது உண்டு, மாலை மதியத்தின் போது 'மாசில் வீணையை மீட்டி மதுரகீதம் அவர் பாட, மலர்க் கொடிபோல் தான் ஆட இருந்து வந்த காதல் வாழ்வைப் பெற்றிருந்த மாதவி, இனியும் இருத்தல் அறமாகாது— அந்த மாதவி, சிரித்து விளையாடிய சிங்காரி,நயனம் காட்டி நவரசம் ஊட்டி நடனமாடிய நாரீமணி, எவ்வகையாச இன்று அலங்காரம் செய்து கொண்டால் என் இதயநாதனுக்கு மகிழ்வளிக்கும் என்று கண்டறிந்து அதன்படி கவர்ச்சியைக் கொண்டு கொட்டி, காதலின்பத்தை ஊட்டிய மாதவி மடிய வேண்டியதுதான் என்று தீர்மானித்தாள். மலரைத் துறந்தாள் அந்த மலர் முகவதி! ஒளியைத் துறந்தன கண்கள்! பளபளப்பை இழந்தது மேனி! தைலத்தை இழந்தது, அவள் கார்நிறக் கூந்தல்! புன்னகை போன இடம் தெரியவில்லை. ஒரேநாளில் ஒளவையானாள்! மாளிகையை வெற்றிடமாக்கினாள். இருந்த பொருளையெல்லாம் வறியருக்கு அளித்தாள்--புத்த சமயம் புகுந்தாள். இது பூலோகத்தில்! கணிகைக்கு இத்தகைய பெருநோக்கு பிறந்தது. அந்த பூலோகவாசிகள் புண்யம் தேடிக் கொண்டு இங்கே வந்து வாசம் செய்யலாம் என்று புராணிகளை ஏவிக்கூறச் செய்கிறார்கள், நம்மைக் காமச் சேற்றில் உழலவிட்டிருக்கும் உத்தமர்கள்..."

"நாம் மட்டும் காமச்சேற்றில் உழல்கிறோம்."

"அந்தத் தேவலோகத்தை மேலானது என்று எண்ணிக் கிடக்கிறார்களே இந்த ஏமாளிகள் என்று எண்ணும்போது, எனக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது. ஒரு நாள் இதைப் பூலோகத்தாருக்குக் கூறிவிட வேண்டும் என்று கூட எனக்குத் தோன்றுகிறது" என்றாள் திலோத்தமை.

"அதற்கு நாம் கொடுத்து வைக்கவில்லையே! திலோத்தமா ! நம்மை பூலோகம் சென்றுவரச் சொல்வதெல்லாம் யாரையாவது சீரழிக்கச் செய்வதற்கும், ஒழுக்கத்தைக் கெடுப்பதற்கும்தானே" என்று மேனகா சொன்னாள்.

"நாமெல்லாம் புரட்சி செய்துவிட்டு பூலோகமே போய்விட்டால்..." என்று கேட்டாள் திலோத்தமை.

"நம்மாலே முடியுமா? நமக்குத் தெரிந்ததெல்லாம். ஸ்வாமி! நாதா! அன்பே! ஆருயிரே! என்று அடி மூச்சுக் குரலால் பேசுவதும் ஆடிடும் கொடியில் அழகுமலர், என் அங்கமதில் உண்டு இன்பமலர் என்று, காலைத் தூக்கி நின்று ஆடுவதும், கட்டி முத்தமிடுவதும், பாடுவதும், பிறகு பட்டபாட்டினை எண்ணி விம்முவதும் ஆகிய இதுதானே தவிர ஏன் என்று கேட்க, எதிர்த்துப் பேச, புரட்சி செய்யவா தெரியும்" என்று மேனகா இடித்துரைத்தாள். ஆழ்ந்த யோசனையிலிருந்து கலைந்த நிலையில் ரம்பை, "நம்மால் முடியாதுதான்! ஆனால் பூலோகத்தில் இப்போது அவ்விதமான அறிவாற்றல் வெகுவாகப் பரவிக் கொண்டு வருகிறது. நாம் இருக்கும் இடத்தின் அவலட்சணங்களை எடுத்துக் கூறி மக்களைத் திருத்திக் கொண்டு வருகிறார்கள். புரட்சி வீசுகிறது" என்றாள்.

கலகலவென மணியோசை கேட்டது ; மூவரும் திடுக்கிட்டுப் போயினர்.

"'இந்திர சபையில் என் நடனம் இன்று" என்று கூறிக் கொண்டு எழுந்தாள் திலோத்தமை.

"சந்திரனுடைய வெப்பத்தைத் தணிக்க இன்று நான் தொண்டு செய்ய வேண்டும்” என்று கூறினாள் ரம்பை.

”நீ?” என்று இருவரும் மேனகையைக் கேட்டனர்.

”நானா? இன்று யமனிடம் செல்கிறேன்” என்று கூறி விட்டுச் சிரித்தாள்.

('என்னங்க இது, ரம்பையும் மேனகையும்'என்று கேட்டு என் துணைவி என்னைத் தட்டி எழுப்பிடவே, என் கனவு கலைந்தது.)