செவ்வாழை/சமூக சேவகி சாருபாலா
8
சமூக சேவகி சாருபாலா
சமூக சேவகி சாருபாலாவுக்கு சளி, ஜூரம்— 'சாந்தி பவனம்' அல்லோலகல்லோலப்பட்டது இன்கம்டாக்ஸ் ஆபீசர் கோதண்டராம ஐயருடைய ஏக புத்திரி சாருபாலா; அமர்க்களமாகத்தானே இருக்கும். அதிலும் சாருபாலா, சமூக சேவை செய்து பிரபல்யமடைந்து கொண்டிருந்த குமாரி. முகிலுக்கிணையான குழல்; அது தழுவியிருந்த வட்ட நிலவு முகம்; பிறை நெற்றி, பேசும் கண்கள், துடிக்கும் அதரம், அங்கம் தங்கம், நடை நாட்டியம், பேச்சோ கீதம் வயது இருபத்திரண்டு; படிப்பு இன்டர்.
அலங்கார மூக்குக் கண்ணாடி, அலங்காரப் பை, அதியலங்கார பூட்ஸ், வைரத்தோடு. கையில் ரிஸ்ட்வாட்சு, கழுத்தில் மெல்லிய சங்கிலி— எப்போதும் புன்னகை; எவரிடமும் இன்முகம்— சாருபாலா அந்த நகரில் ஒரு காட்சியாகி விடாமலிருக்க முடியுமா!
"வருமானம் மிகவும் குறைவு. இந்த வருஷம் மிகுந்த நஷ்டம்" என்று குறையைக் கொட்டிக் கொண்டு, ஆபீசருடைய கருணையைப் பெற்றுக் கொண்டு வருவோம் என்றுசகுணம் பார்த்துக் கொண்டு கிளம்பிய கஞ்சனெல்லாம், அந்த கனகப்பதுமையைக் கண்டதும், தன் வியாபாரப் பெருமையைக் கூறிவிட்டு வருவர் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன். அந்தச் சுந்தரி கிளப்பிய சூறாவளியின் தன்மையை.
கோதண்டராம ஐயர், எப்போதும் தன் 'பார்யாள்' கீறிய கோட்டினைத் தாண்டா தவர், அந்த அம்மாளுடைய இராசியால்தான், தனக்குப் பெரிய பதவி கிடைத்தது என்பதிலே, அவருக்கு அபாரமான நம்பிக்கை. சாருபாலா ஒரே மகள். எனவே, ஐயர் தன் சகதர்மிணியின் விருப்பத்தின்படி, சாருவுக்குச் சர்வ சுதந்திரம் கொடுத்திருந்தார்.
"கோந்தை, வெளியே போகணுமானா, நீங்க ஆபீசிலே இருந்து வருகிற வரை காத்திண்டிருக்கா காருக்காக சிறுசா ஒரு கார், ஆஸ்டினோ, வாக்சாலோ வங்கிக் கொடுத்திடுங்கோ— அது சாயந்திரமானா கிளப்புக்குப் போய்வரச் சௌகரியமாக இருக்கும்" என்று அம்மையார் கூறுவார்; அடுத்த வாரம், ஆஸ்ட்டின் வந்து நிற்கும், 'சாந்திபவனில்' அவ்வளவு செல்லமாக வளர்த்து வந்தார்கள் சாருபாலாவை! தங்கக் கொடி, அதற்கு வைரத்தில் பாத்தி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! தங்கமும் வைரமும் ஜொலிக்கும்— சாருவைப் போல பார்க்குமா, பேசுமா, சிரிக்குமா!!
சாருபாலாவுக்கு, சளி ஜுரம் என்றவுடன் சாந்தி பவனம் அல்லோலகல்லோலப்பட்டது.
சமையற்காரர் விசாரணைக்கு ஆளானார்!
"கோந்தைக்குச் சளி இருப்பது தெரிந்தும், ஏன் வெண் டைக்காய் சாம்பார் செய்தாய்? சுத்த மண்டுடா, நீ" என்றார் ஆபீசர்.
தோட்டக்காரன் கேள்வித் தாக்குதலில் சிக்குண்டு தவித்தான். 'ஆறு மணிக்குமேல், சாரு தோட்டம் வந்தபோது, ஜில்லென்று பணிவாடை அடித்ததே, ஏன் அதைச் சொல்லி உள்ளே போகச் செய்யவில்லை' என்று கேட்டனர்.
வேலைக்காரிகள் கண்டிக்கப்பட்டனர்— மோட்டார் டிரைவர் எச்சரிக்கப்பட்டான்— இவ்வளவும், சாருவுக்கு 101— இருந்தபோது!
'ஏண்டி, இப்படி வீணா உடம்பைப் போட்டு அலட்டிக்கறே, அப்பாவோட மனதுக்கும் சங்கடம் உண்டாக்கறே! நான் இப்பத்தான் தர்மாமீடர் வைத்துப் பார்த்தேன்; 101 தான் இருக்கிறதுவ்”என்று சாரு சொன்னாள். மனது கேட்கிறதா, கடைமட்டும் சிவந்திருக்கும், கண்கள் இப்போது முழுவதும் இலேசாகச் சிவந்து காணப்பட்டது. முகம் எப்போதும் பளபளப்பு தான். இப்போது புது மினுமினுப்புத் தெரிந்தது. பேசும்போது நாலைந்து தடவை இருமலும் இருந்தது— கவலைப்படாதே என்று சொன்னால், மனம் கேட்கிறதா? டாக்டர் வரவழைக்கப்பட்டார்.
டாக்டர் இரகுராமன், அரும்பு மீசைக்காரன்— ஐயர் தான்— ஆனால் ஏதோ இந்த மீசை வைத்துக் கொள்ளத் தங்களுக்குத்தான் தெரியும் என்று பார்ப்பனரல்லாதார் பெருமை பேசிக் கொள்கிறார்களே, என்னால் மட்டும் முடியாதா பார் என்று 'சவால்' விட்டுவிட்டு, மெடிகல் காலேஜில் ஆரம்பித்தார் மீசை வளர்க்க! மீசையும் அழகாக அமைந்திருந்தது.
டாக்டர் இரகுராமனுக்கு எந்த மங்கையையும் மயக்கும் அலாதியான அழகு தன்னிடமிருப்பதாக, பல ஆண்டுகளாக நம்பிக்கை. பெண்களிடம் பல்லிளிப்பதும், அவர்களின் அழகைக் கண்டு வாயைப் பிளப்பதும், அவர்கள் பேசினால் மெய்மறந்து போவதும், அவர்களிடம் பேசினால் குளறிக் கொட்டுவதும் ஆடவரில் அசடரின் செயல். ஒரு அலட்சியமான பார்வை, ஒரு சிறு புன்னகை, ஒரு விநாடியில் அதுவும் மறைந்துவிட வேண்டும்- பெண்களிடம் இவ்விதம் நடந்து கொண்டால்தான் அவர்களுக்கும் சுர்வபங்கம் ஏற்படும் என்பது டாக்டரின் மருத்துவமுறை— கல்லூரி நண்பர்களிடம் அடிக்கடி கூறிவந்திருக்கிறான்.
நூக்கமரக் கட்டிலில், டபேடா உறை போட்ட மெத்தைதலையணை போட்டு வைக்கப்பட்டிருந்தது. ஐந்தாண்டுத் திட்டத்தில் அனைவருக்கும் பங்கு உண்டு என்று எழுதப்பட்டு. நேரு பண்டிதருடைய படம்— பாரதமாதா படம், சுவரிலே! மேஜைமீது, பாரதியார், சரத்சந்திரர், ஷெல்லி, ஷேக்ஸ்பியர்! ஜன்னலில், ஒரு புத்தர் சிலை சிறிய மூளியாகிப் போன நிலையில். பக்கத்தில் சாயிபாபா சிலை, புத்தம் புதியது. கட்டிலின் மீது அந்தக் கட்டழகி கண்களை மூடிக் கொண்டிருக்கும் நிலை! ஆனால் கன்னத்தில் "அழகுக்குழி" காணப்பட்டது— ஏதோ உள்ளூர ஒருவகையான சந்தோஷம்; முகத்திலே பாண்ட்ஸ் ஸ்நோவும் பவுடரும், ஊதுவத்தி மணம் அறையில் கமழ்ந்தது, இலைப்பச்சை ஜார்ஜட் சேலை, அதற்குப் பொருத்தமான 'ஜாக்கட்'— சாருபாலாவை அந்தக் கோலத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் சடுந்தவம் புரிந்துவரும் முனிவர்கள் கண்டாலே போதும், விசுவாமித்திரர் ஆகிவிடுவர்— பாபம், டாக்டர் இரகுராமன் கண்டால் என்ன ஆவான்?குளறினான். தெர்மாமீட்டரைத் தலைகீழாக வைத்து சாருவின் கிண்டலால் தாக்குண்டான் - எவ்வளவு— காலமாக இருக்கிறது என்று கேட்கிறான்; அவள் சிரிக்கிறாள்; மெல்லிய குரலில் 'பைத்யம்' என்று கேலி செய்கிறாள்; வந்ததற்கு எதையாவது தரவேண்டுமே— அதற்காக காட் லீவர் ஆயில் மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு, மருந்து அனுப்பிவைப்பதாகச் சொல்கிறான்.
"எனக்கு, இந்த ஜுரம் ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால், டாக்டர்! இராத்திரி வேளையிலே, நல்ல தூக்கம் வரமாட்டேனென்கிறது."
"காற்று நன்றாக வருகிறதல்லவா! இல்லையானால் மாடியில் படுத்துக் கொள்ளலாம்..."
"மாடிதானே இது..."
"ஆமாம். மாடியில் என்றால் வெளியில்... ரூமில் அல்ல; வெளியில் படுக்கலாமே என்று சொன்னேன்..."
"வெட்ட வெளியிலா! ப்ளூ வந்துவிடுமே ...."
"ஆமாம், ப்ளூ வந்துவிடும்; ரொம்பக் கெட்டது..."
"டாக்டர்! இங்கு நல்ல காற்றோட்டம் இருக்கிறது... எனக்குத் தூக்கம் வராததற்குக் காரணம் அதுவல்ல..."
"ஏதாவது வலி எடுக்கிறதா ... தலையில், கைகால்...
"நானென்ன நோயாளின்னே தீர்மானமா டாக்டா.."
"நோ! நோ! ரொம்ப ஹெல்த்தியாத்தான் இருக்கிறீர்கள்..." "என் சினேகிதிகளெல்லாம் என்னைக் கேலி செய்யறா! உனக்கென்னடி சாரு, நல்ல ஆப்பிள் போல இருக்கறேன்னு"
"கோல்டன் ஆப்பிள். கோல்டன் ஆப்பிள்...! அதாவது...அதாவது..."
“அதாவது இதாவது! கேலி பேசறதுக்காகவா உம்மை இங்கே வரச்சொன்னா?..."
"நோ! நோ! மன்னிச்சுடுங்கோ... ஏதோ ஒருமாதிரியா இருக்கு...எனக்குக் கொஞ்சம் தேர்த்தம்..."
"வெந்நீரா...
"ஆமாம்... எப்பவும் நான் சோடா... இல்லாவிட்டால் வெந்நீர்தான் சாப்பிடுவது வாடிக்கை... இராத்திரியிலே மட்டும் ஐஸ்வாட்டர் சாப்பிடுவேன்...
"இப்போ, வெந்நீர்தானே வேணும்...
"இருந்தா...கொடுக்கச் சொல்லுங்க..."
"இருந்தா கொடுங்களா...சத்திரம் சாவடியானால் கூட வெந்நீர் கிடைக்குமே, எங்க ஆத்தைப் பத்தி ரொம்ப மட்டமான அபிப்பிராயம்போல இருக்கே உங்களுக்கு..."
"ஐயையோ... தப்பா எடுத்துண்டிங்களே...”
"இதோ ஒரு விநாடியில் கொண்டு வரேன்... சித்தை உட்காருங்கோ... வந்ததிலே இருந்து நின்னிண்டே இருக்க றிங்களே..."
"பரவாயில்லே... பரவாயில்லே... கிளாசிலேயே எனக்குப் பழக்கம் ...அதாவது, எப்பவும் வாக்கிங், டென்னிஸ், இப்படி..."
உள்ளே சென்றாள் சாருபாலா, டாக்டருக்கு வெந்நீர் கொண்டுவர!
டாக்டர், திகைத்துப் போய் நாற்காலியில் உட்கார்ந்தார்; ஜுரம் வரும் போலிருந்தது. "சாரு! உனக்கு உடம்பு இருக்கிற இலட்சணத்துக்கு நீ எழுந்து வரலாமா...டாக்டர் கையலம்பத் தண்ணீர் கேட்டா, நாங்கள் கொண்டு போய்க் கொடுக்கிறோம்... நீ உடம்பை அலட்டிக் கொள்ளாதே" என்று புத்திகூறிக் கொண்டே, உள்ளே வந்த பர்வதம், "டாக்டர், கோந்தைக்கு எப்படி இருக்கு உடம்புக்கு? பயப்படறமாதிரி ஒண்ணுமில்லையே " என்று கேட்டபடி, பீதி படிந்த டாக்டரின் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு, "உங்களுக்கு என்ன உடம்புக்கு?" என்று கேட்க வேண்டியிருந்தது. டாக்டருக்கு மேலும் சங்கடம் ஏற்படாதபடி சாருவின் பிரவேசம் இருந்தது. தேன்— பால்— பழரசம்... எல்லாம்.. தேவாமிருதம் என்கிறார்களே, அதை அல்லவா சாப்பிடுகிறார் டாக்டர்.
"தாங்க்ஸ்...! நோ...போதும்.. நீங்கள் உட்காருங்கள்... இல்லை இல்லை...படுத்துக் கொள்ளுங்கள்..."
"டாக்டர்! கால்ஷியம் இன்ஜக்ஷன் நல்லதா...
'"ஓயெஸ்! கால்ஷியம் ரொம்ப நல்லது.. நாளைக்குப் போடலாம்..."
"ஒரு கோர்ஸ், எத்தனை இன்ஜக்ஷன்.
"ஆறு போடலாம்... உங்க உடம்புக்கு எட்டுகூட நல்லது..."
“நாளைக்கு அதுதான் செய்து கொள்ளவேணும்...இப்ப சாப்பிட..."
"எது வேணுமானாலும் சாப்பிடலாம்.. கொஞ்சம் கொஞ்சம்..."
"கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடாமல், படிப்படியா சாப்பிடுவேன்? என்னை என்ன பத்ரகாளிபோல எண்ணிண்டு பேசறீள்... என் சினேகிதிகள் என்னை பாரிஸ் ப்யூடின்னு கேலி செய்வா..."
"கேலியா ... செச்சே! பாரிஸில் இப்ப ஏது ப்யூடீஸ்... சரி... உங்களுக்குச சளி ஏன் பிடிச்சது ...."
"அதைக் கேட்கறிங்களா டாக்டர்! கேளுங்கோ, நன்னாக் கேளுங்கோ... ஆனா வாயைத் திறந்து பதில் சொல்ல மாட்டா! இவ இருக்கிறா நாரும் நரம்புமா! இவ என்ன செய்யறா தெரியுமோ ...
"போடி அம்மா! அதை எல்லாம் அவரண்டை சொல்லணுமா..."
"வேறே யாரண்டை சொல்றது, உன்னோட சேஷ்டையை? இப்ப படுத்துண்டயே, என் மனசு கேட்கறதா...எட்டு ஊசின்னா போடணும் என்கிறார் டாக்டர்.இவ இருக்கிறா டாக்டர் ஒத்தை நாடி..சமூக சேவைன்னு சொல்விண்டு கிராமம் கிராமமா, சோறு தண்ணீ இல்லாமல் சுத்தறது! சேறு கூட்டறதாம், சுண்ணாம்பு அரைக்கறதாம். கேட்டேளா, தோட்ட வேலை செய்யறதாம்... காத்தாலே இருந்து சாயரட்சை இருட்டுறவரையில் இது...ஜுரம் வராமலிருக்குமோ...இவ உடம்புக்கு ஆகுமோ?சுண்ணாம்பிலே கைபட்டா நல்லதோ, சொல்லுங்கோ ....
"ரொம்பத் தப்பு! ரொம்பத் தப்பு!"
"எது தப்பு டாக்டர்! ஏதோ ஏழை எளியவர்களுக்குச் சேவை செய்யறது தப்பா?"
"அதை யார் தப்புன்னு சொல்வா! நம்ம ஜவஹர்லால்கூடச் சொல்லியிருக்காரே, சமூக சேவை சிலாக்கியமானதுன்னு ...'"
"சமூக சேவைன்னு சொல்லிண்டு சேறு கூட்டறதும், சுண்ணாம்பு அரைக்கறதும் தான் வேலையா... ஏன் டாக்டர்! அந்த வேலைக்கு இவதானா ஆப்ட்டா! அதெல்லாம் வாட்டம் சாட்டமா, கட்டையா உள்ளவா செய்யவேண்டியம்..."
"ஆமா. இவங்க உடம்புக்கு ஒத்து வராது... சளி அதனாலேதான் பிடிச்சுது; ஆனாலும் பரவாயில்லை. கால்ஷியம் கொடுத்தால் போதும்..."
நீண்ட நேரமாகிவிட்டதை பர்வதம் கவனப்படுத்தியான பிறகு, ஸ்டெதஸ்கோப்பை மறதியாக அங்கேயே வைத்துவிட்டு, டாக்டர் இரகுராமன், தன் நர்சிங் ஹோம் போய்ச் சேர்ந்தார்.
ஆறாவது இன்ஜக்ஷனுக்குப் பிறகுதான் டாக்டர் ஆராவமுதன், இது, 'பாரடைபாயிட்'ஜாக்ரதையாகக் கவனித்துக் கொள்ளவேணும் என்று சொன்னார்- சுந்தரம்மாளிடம் டாக்டர் இரகுராமனின் தாயாரிடம்! சாருபாலா வீட்டிலிருந்து வந்ததும் 102! பிறகு ஏறுகிறது இறங்குகிறது; நெருப்பாகக் காய்கிறது; மறுபடி வியர்க்கிறது; மீண்டும் ஏறுகிறது; இப்படி இரகுராமனுக்கு! கடைசியில் இது 'பாரடைபாயிட்' என்று டாக்டர் ஆராவமுதம் கூறினார்...நர்சிங் வேலையில் சாருபாலாவுக்குப் பழக்கமில்லை. ஆனால் அந்தப் பதினாறு நாட்களில், அவள் திறமையான 'நர்ஸ்' ஆகிவிட முடிந்தது. காதல் டோஸ் டோஸாகத் தரப்பட்டது- பார்வை, புன்னகை, பேச்சு, நெற்றியில் தைலம் தடவுதல், போர்வையை எடுத்துப் போர்த்துவிடுவது, ஜன்னலை இலேசாகத் திறப்பது, வேளா வேளைக்கு மருந்து தருவது, பிடிவாதமாக வாயைத் திறந்திட மறுத்தால், கன்னத்தைத் தடவி சிரிக்க வைத்து கஞ்சி கொடுப்பது—இப்படி, பாரடைபாயிட், மாதக் கணக்கில் இருக்கக் கூடாதா? இப்படிப்பட்ட மதுரமான வாழ்க்கைக்காகவாவது என்றுகூட டாக்டர் இரகுராமன் கருதினான்.
சமூகசேவகி சாருபாலாவுக்குத் தகுந்த வரன் பார்ப்டதையே முக்கியமான வேலையாகக் கொண்டிருந்த வேதாந்தாச்சாரி, கலியாணமாகாதிருந்த ஐ.ஏ.எஸ். அவ்வளவு பேருக்கும் கண்ணி வைத்தபடி இருந்தார்— எல்லாப் பறவைகளும் எப்படியோ தப்பிப் பறந்தபடி இருந்தன. சாருபாலா அவரைக் காண நேரிடும்போதெல்லாம் வேடிக்கையாகக் கேலியும் செய்வாள்.
"ஏண்டி, சாரு! உனக்கு 'நேவி'யில் ஒரு ஆளைப் பார்க்க வா... நேவியில்!
"ஏன்! ஐ. ஏ. எஸ். பிடிக்கிற வேலை நடக்கவில்லை போலிருக்கு!
"உன்னோட ஜாதகப்பலன் அப்படி இருக்கு, சாரு! நான் என்ன செய்ய...நானும் என்னென்னமோ 'பிளான்' போட்டுப் போட்டுப் பார்க்கிறேன்; பலிக்கல்லே. ஆசாமி என்னமோ அழகாகத்தான் இருக்கே? எனக்கோ வயசாயிடுத்து."
"ஆனா என்னவாம்! தசரத மகாராஜன் கைகேயியைக் கலியாணம் செய்து கொண்டது அவருடைய வயோதிகப் பருவத்தில்தானே..."
‘'ஏண்டி சாரு! அவனைக் கைகேயி ஆட்டிப் படைச்சதுபோல என்னை நீ ஆட்டிப் படைக்க எண்ணமிட்டு விட்டாயோ,,,"
"ஆசையைப் பாரு, ஆசையை!"
இப்படியெல்லாம் இருவருக்கும் சரளமான பேச்சு நடக்கும். 'கோந்தை'யின் சமர்த்துக் கண்டு தாய் மகிழ்வதும், 'தோப்பனார்' சபாஷ் போடுவதும் அந்தக் குடும்பத்தின் அலாதியான முறையாக இருந்து வந்தது.
“சாருவுக்கு அடிக்கடி ஏன் சளி ஜூரம் வர்ரது பாட்டி! நோக்கு என்னென்னமோ வைத்தியமெல்லாம் தெரியுமே. ஏன், சாருவுக்கு ஜுரம் வராமப்படிக்குச் செய்யல்லே..." என்று அடுத்தாத்து ஆண்டாள் கேட்பதுண்டு.
“ஏண்டி வராது சளி ஜுரம்! ஜுரத்தோடா போகும்? கை கால் பிடிப்பு, கண்ணிலே மஞ்சள், குடல் வாதம், எல்லாம்தான் வரும். காலா காலத்திலே ஆக வேண்டிய காரியத்தைச் செய்யாமப் போனா, இதுதான் கதி. நேக்கு இவ வயதிலே, இரண்டு குழந்தைகள்! இவ, பாரேன், ஆட்டக் செய்யப் குதிரை மாதிரி ஆடிண்டு, என்னமோ சேவை போறேன்னு சொல்லிண்டு திரியறா! உடம்புக்கு வராமப் போகுமோ" என்று அனுபவ வைத்யசிந்தாமணியானபாட்டி சொல்லிவிட்டு, "இவ மட்டுமா! இந்தக் காலத்துப் பெண்களே இப்படித்தான் இருக்கா..." என்று அங்கலாய்த்துக் கொள்வது வாடிக்கை.
சாரு, பல பேருக்குப் பெரும் பிரச்னையாகி இருந்து வந்த திருமண விஷயத்தைத் தானே தீர்த்துவிடத் தீர்மானித்துவிட்டதாகக் காட்டுவதுபோல, டாக்டர் இரகுராமன் போட்டோவைத் தன் மேஜைமீது வைத்து 'ஜரிகை' மாலை போட்டு மகிழ்ந்தாள்.
ஆறு கிராமங்களிலே அறிய சேவை! பதினெட்டுத் திருக்குளங்களிலே பாசி எடுத்து, படிக்கட்டுகளைச் சுத்தம் செய்து இலட்சோப லட்சம் ஜனங்களுக்குச் சௌகரியம்! ஓலைக் கொத்து குடிசைகளில் இருந்துகொண்டு, சுத்தமாக சுகாதார முறைப்படி வாழத் தெரியாமல், மௌடிகத்திலே மூழ்கிக் கிடந்த ஜனங்களுக்கு இதோபதேசம்! கிராமத்துக் குழந்தைகளுக்குக் கோலாட்டம் டான்சு ஆகியவைகளைக் கற்றுக் கொடுத்து பல கிராமங்களிலே ஆனந்தமான பொழுதுபோக்கு ஏற்பாடு செய்து தந்த பெருமை! இவ்வளவும் சாதித்தது யாருன்னு எண்ணிண்டிருக்கிறீர். இதோ, சாட்சாத் ஜானகி போல, டாக்டர் இரகுராமன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் சாருபாலாதான் என்று சப்ஜட்ஜ் சபேச சாஸ்திரிகள் திருமண வாழ்த்து வைபவத்திலே கூறியபோது, 'கரகோஷம்' பலமாக எழும்பிற்று. திருமணம் அந்த வட்டாரத்து மக்களுக்கே கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது!கவர்னரின் வாழ்த்துச் செய்தியைக் கலெக்டர் படித்தார்! வியாபாரிகள் அனைவரும், வரிசை வரிசையாக நின்று, திருமணப் பரிசுகள் வழங்கினார்கள். வெள்ளியால் செய்து தங்கமுலாம் பூசப்பட்ட குடிசை. ஏர் கலப்பை, பரிசளித்துப் பாராட்டுதலைப் பெற்றார், பாரதசேவா சமாஜப் பரிபாலகர் பிராணதார்த்தி. நடனம்— சங்கீதம்—பொய்க்கால் குதிரை ஆட்டம் பள்ளிச் சிறுமிகள் கோலாட்டம் என்று வைபவம் பிரமாதமாக இருந்தது.
ஓரோர் சமயம்தானே இப்படிப்பட்ட உல்லாசக் காட்சியைக் காண முடிகிறது! அதோ கொடி போன்றிருக்கும் அந்தப் புது மணப்பெண்ணின் கூந்தலைக் கோதி நிற்கும் குமாரன் எவ்வளவு இன்பமாகப் பேசுகிறான். அவள் எவ்வளவு மயக்கும் பார்வையை வீசுகிறாள். தனியாகத்தானே இருக்கிறோம் என்று அந்த இளங்காதலர்கள். இப்படி விளையாடுகிறார்களோ! அடே, அடே! எத்தனை தடவைதான் அந்த எழிலரசியை இழுத்திழுத்து மடியில் சாய்த்துக் கொள்வது; கொஞ்சம்கூட உனக்கு இரக்கம் காணோமே. அப்பப்பா! போதும்! போதும்! என்று அந்தப் பாவை கூறக் கூற, 'உஹும்! உஹும்!' என்று கொஞ்சிக் கொஞ்சி அந்தக் கொவ்வை இதழைக் கொத்துகிறானே, இந்தக் கொடியவன்! அட பாதகா! இப்படியா இந்த இளமங்கையை இறுகத் தழுவிக் கொள்வது? மூச்சுவிட முடியாமல் திணறுகிறாளே அந்த மோகனாங்கி பைத்யக்காரப் பெண்ணே! அவன் உன்னை இந்தப் பாடு படுத்துகிறான்; நீ கலகலவெனச் சிரிக்கிறாயே! பேதைப் பெண்ணே! ஆம்! அதுதான் சரி... கண்களை மூடிக் கொண்டாயா... நல்லது.. உறங்கு.. மெல்ல மெல்ல உறங்கு ...இன்ப நினைவுகள் உனக்குத் தாலாட்டாக அமைந்து விட்ட நிலையல்லவா! இனி உறங்கு.. அட, வெட்கமற்றவனே! என்னடா இது.அவளுடைய பாதத்தை வருடுகிறாயே! செச்சே! ஆண் சிங்கம்! வீட்டின் தலைவன்! என்றெல்லாம் பெருமை பேசுகிறார்கள். இங்கு என்னடா என்றால், இலன், அவள் பணிக்கா முன்பு பாதம் வருடுகிறான்— பளிங்காலான பதுமைக்கு தங்கத் தகடு உடுத்தி வைத்திருக்கிறது என்று சொல்லும்படி இருக்கிறது இந்தக் காட்சி! இந்த வாலிபன், கைதேர்ந்த சிற்பி; தான் சமைத்த சிற்பத்தின் கலை அழகை இங்கும், அங்கும், எங்கும், கன்னத்திலும் நெற்றியிலும், கதலித் தொடையிலும், மின்னல் இடையிலும் கண்டு கண்டு பெருமிதம் கொள்வது போலல்லவா இருக்கிறான்! டாக்டராமே இவன்! உடற்கூறு தெரிந்தவன்! நோய்க்கு மருந்தளிக்க வேண்டியவன், இதோ நோயூட்டுகிறான்! என்று கூறி ரசித்திடுவதுபோல, வெண்ணிலவு காட்சி அளித்தது. டாக்டர் இரகுராமன் அண்ணாந்து பார்த்தல்ல. மடியில் சாய்த்தும், பக்கத்திவே இருத்தியும், வெண்ணிலவு கண்டான்— அந்த நிலவை மறைத்திடும் கார்நிறக் கூந்தலை அவ்வப் பொழுது அப்புறம் தள்ளியபடி, களங்கமில்லாத முகநிலவு கண்டு, ஏதோ பேசுகிறான்— என்னென்னமோ கேட்கிறான்— எதை எதையோ தருகிறேன் என்கிறான். அவள் புன்னகை பூத்த முகத்துடன், 'முடியாது! முடியாது!' என்று கூறுவதுபோலத் தலையை அசைக்கிறாள். அவனோ, அவள் மனம் பாகாய் உருகத்தக்க ஒரு பரிதாபப் பார்வையால் அவளை ஒரு கணத்திலே வெல்கிறான்!
நாள்தோறும் களம்— இன்று சாரு, நாளை இரகுராமன், வெற்றி பெறுவது என்று இருக்கிறது, காமக் களியாட்டக் களத்தில். நித்த நித்தம் இந்தக் காதலரின் இன்ப விளையாட்டைக் கண்டு கண்டு மெலிந்து மெலிந்து நிலவும் தேய்ந்தது ! நிலவு தேய்ந்தால் என்ன! அவன்தான் அவனுக்கென்று ஒரு முழு நிலவு பெற்றுவிட்டானே! அவன் அந்தக் குளிர்மதிப் பார்வையில் தன்னை மறந்திருந்தான். கட்டழகி கிடைத்துவிட்டாளென்பதால் கடமையை அடியோடு மறந்து விட்டானே இவன் என்று கோபத்தால், கண்களை இறுகமூடிக் கொள்வது போன்ற நிலையை நிலவு அடைந்தது. வான விளக்கு அடியோடு அணைந்தது. இவன் இதயச் சுடரொளியோ கொழுந்துவிட்டெரிந்த வண்ணம் இருந்தது. சாருபாலா இரகுராமன் காதல் வாழ்க்கை அரும்பி, போதாகி, மலர்ந்தது.
"சாரு! இதென்ன வடு?" என்று டாக்டர் இரகுராமன் கேட்டான்.
"ரொம்ப போக்கிரிதான் நீங்கள்! செய்வதைச் செய்து விட்டு கேலி வேறா செய்கிறீர்கள்" என்று கோபித்துக்கொண்டாள் சாரு. கோபம் என்றால் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகம் என்று பொருள் அல்ல; இடம் தெரிகிறதல்லவா, அந்த இடத்துக் கோபம்!!
'கன்னம்! கன்னம்!' என்று அந்த அஞ்சுகம் அஞ்சி அஞ்சி சொல்லச் சொல்ல அந்த அக்ரமக்காரன் கொஞ்சிப் பேசிப் பேசி, 'வடு' உண்டாக்கி விட்டிருந்தான் முன்னிரவு!மறுநாள் மாலை! அவனே, ஏதுமறியாதவன் போல இந்த வடு ஏன் ஏற்பட்டது என்று கேட்டால், கோபம் வராமலா இருக்கும். அவள் கன்னத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டபோது தான் டாக்டர் இரகுராமனுக்கு, அந்த நினைவு வந்தது. அவன் கேட்டது, அவள் தலை 'வகுட்டில்' இருந்த ஒரு சிறு 'வடு' வைப் பற்றி! அதை அவள் பிறகு விளக்கினாள்!
"இதுவா! சமூக சேவையின் பரிசு.
"பரிசா?"
"ஆமாம்! ஏழூரில், ஒரு குடிசையின் மேற்கூரையைத் தாங்கிக் கொண்டிருந்த இடத்தின் சுவர் கலனாகிக் கிடந்தது — அந்த 'அப்பாவி' அதைக் கவனிக்காமல் இருந்தான். நான்தான் அதைக் கண்டுபிடித்து, புதிதாகச் 'சாந்து' பூசினேன்— அப்போது, ஒரு மரக்கட்டை தலையில் பட்டது. அந்த 'வடு'தான்—சமூக சேவையின்போது கிடைத்த பரிசு" என்று சாரு சொன்னாள்.
"இரத்தம் நிரம்பக் கசிந்ததா சாரு! இந்த வேலையெல்லாம் ரொம்ப ஜாக்ரதையாகச் செய்ய வேண்டும். மடையன், உன் தலையில் 'கட்டை' விழுந்தபோது சும்மாவா இருந்தான்?" என்று கேட்டார் டாக்டர்.
"சார், சார்!" என்ற குரல் கேட்டது. கம்பவுண்டர் குண்டப்பன் எப்போதும் இப்படித்தான், 'சிவபூஜைக்கரடி' என்று மனதிலே எண்ணிக் கொண்டு, டாக்டர் இரகுராமன், கீழே சென்றான்.
"சாமியோய்! ஒரே கொழந்தைதாங்க... கொலக் கொடி... தவமாத்தவமிருந்து பெத்ததுங்க... இந்த அநியாயத்தைப் பாருங்க சாமி... என் வயித்திலே பால் வாருங்க டாக்டர்..." என்று அழுது கொண்டே கூறினான், பட்டிக்காட்டான்— அவன் அங்கொரு பெஞ்சில் படுக்கவைத்திருந்த நாலு வயதுக் குழந்தையின் மண்டை நொறுங்கி, இரத்தம்குழைந்து கொண்டிருந்தது; ஆபத்தான நிலைமை.
டாக்டர் இரகுராமன் குழந்தையின் கோரமான நிலைமையைக் கண்டு, உள்ளபடி பச்சாதாபப்பட்டான். கம்பவுண்டர், குழந்தைக்குச் செய்ய வேண்டிய சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளில் ஈடுபட்டான்.
"ஏன் இப்படி? என்ன நடந்தது?
"கொழந்தை படுத்துத் தூங்கிக் கொண்டிருந்ததுங்க டாக்டர்! என் போறாத வேளை, கூரைப்பக்கமிருந்து, சுவர் வெடித்து ஒரு பாளம் விழுந்தது. கொழந்தை தலைமீது.
"மடையாகளாடா நீங்கள்!பாளம் விழும்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
"பால் கறந்து கொண்டிருந்தேன் டாக்டர்!கொழந்தை 'கோன்'னு கூச்சல் போட்டதும் தோட்டத்திலே இருந்து ஓடி வந்தா; கொழந்தை இந்தக் கோரமாக இருந்தது; அவ என் வூட்டுக்காரி வெளியே போயிருந்தா..."
"கவர் எப்படிடா வெடித்து பாளம் விழுந்தது.ஏன் அப்படிப்பட்ட ஆபத்தான நிலையிலே சுவர் இருக்கவிட்டு வைத்தே..."
“அதை ஏன் டாக்டர் கேட்கறிங்க. என்னமோ வீடு ரிப்பேர் செய்கிறோம், காசு செலவில்லாமேன்னு சொல்லிகிட்டு வந்தாங்க, பட்டணத்துப் பொம்பளைங்க. வேண்டாம்மா, எங்களுக்குக் காசு கிடைச்சா, நாங்களே செய்துகிடுவோம்; எங்களுக்குத்தான் எப்படிச் செய்யறதுன்னு தெரியும். நீங்க அதை எல்லாம் என்னத்தைக் கண்டிங்கன்னு, எவ்வளவோ எடுத்துச் சொன்னேனுங்க. ஒரு துடுக்குக்காரப் பொண்ணு, 'டே! நாங்க உதவி செய்ய வந்தா தடுக்கறயா நீ? நாங்க எல்லாம் யார் தெரியுமா? சர்க்காரோட ஆளுங்க! சம்பளம் வாங்காம வேலை செய்கிறவங்க! எங்களைத் தடுத்தே, அவ்வளவுதான். உன்னைப் போலீசிலே சொல்லி தண்டனை வாங்கித் தருவோம்'னு மிரட்டிச்சி. உங்களுக்கு ஏம்மா இந்த வேலையெல்லாம்! உங்களோட பங்களா, தோட்டம், காடு, கழனி இங்கெல்லாம் வேலை செய்யறதுக்கே, எங்களாட்டம் ஆளுங்கதானே தேவைப்படுது. நீங்க என்னமோ, கொல்லன் தெருவிலே ஊசி விக்கிற மாதிரி, எங்க இடத்திலே எங்க வேலையைச் செய்ய வருகிறீங்க.நல்லா இல்லேம்மான்னு நல்லதனமாச் சொன்னேன். அதட்டிப் பேசின பொண்ணு, உடனே சிரிச்சுப் பேச ஆரம்பிச்சு, "பெரியவரே! நாங்க எப்படியும் முப்பது குடிசையைச் சீர்திருத்தம் செய்தாகணும். எங்க சங்கத்தோட திட்டம் அது. தடை சொல்லதே"ன்னு கேட்டுகிட்டு, சேறு கொண்டா, சுண்ணாம்பு எடு, கல் எடு. அப்படி இப்படின்னு சொல்லி, நல்லா இருந்த சுவரைச் 'சாந்து' பூசறேன்னு சொல்லி, கெடுத்துவைத்துட்டுங்க; நாலு நாளைக்கு முன்னே மழை வந்ததுங்களா, அவ்வளவுதான்! பூச்சு வேலை கரைஞ்சு போச்சு;பாளம் விழுந்து என் கொழந்தை இந்தக் கதியாச்சி" என்றான். கம்பவுண்டர், டாக்டரைத் தனியாக அழைத்து, ஏதோ இரகசியமாகச் சொன்னான்.டாக்டர் முகத்தில் ஈயாடவில்லை. கம்பவுண்டர், கிராமத்தானைப் பார்த்து, "குழந்தையை பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போ! இங்கே ஒண்ணும் செய்வதற்கில்லை" என்று கூறிவிட்டான். 'ஐயோ தெய்வமே!' என்று அலறியபடி, குழந்தையை வாரி எடுத்தான் கிராமத்தான்; வாழைத்தண்டு போல ஜில்லிட்டுக் கிடந்தது.
★