செவ்வாழை/சோணாசலம்

5
சோணாசலம்

சோணாசலம், சொன்ன சொல் தவறாதவன் என்ற நற்பெயர் எடுத்தவன். பலருக்கு உபகாரம் செய்தவன். தன்னால் முடிந்த உதவியைச் செய்ய அவன் எப்போதுமே தவறுவதில்லை. பலர் அவனைப் பாராட்டியுமிருக்கிறார்கள். ஓரிரு காரியவாதிகள் மட்டும், சோணாசலத்தின், "பைத்தியக்கார" சுபாவத்தைப் பற்றிக் கேலியாகப் பேசுவதுண்டு.

"இந்தச் சோணாசலம் இருக்கிறானே, தன்னால் எவ்வளவு தாங்க முடியும் என்ற கணக்கே தெரியாதவன். எதற்கும் முன்னாலே நிற்கிறான். பணம் நிறைய வைத்துக் கொண்டிருப்பவர்கள், பத்து ரூபாய் தருவதற்கு யோசிக்கிறார்கள்; இவன் தாராளமாகக் கொடுத்துவிடுகிறான். 'பசி' என்று எவனாவது கூறிவிட்டால் போதும்; மடியிலே எட்டணா இருந்தாலும், ஒரு ரூபாய் இருந்தாலும் சரி, எடுத்துக் கொடுத்து விடுகிறான். பைத்யக்காரன்! இப்படிக் கைக்காசைச் செலவழித்துவிட்டு, இவன் 'ஓட்டாண்டி'யாகி விட்டா, பிறகு, இவனுக்கு உதவி செய்ய யார் வருவார்கள்? கஷ்டப்படும்போது தெரியும் இதெல்லாம்—என்று பேசினார்கள்.

சோணாசலம் “ஓட்டாண்டி’”யாகிவிட்டான்— ஒரு குற்றமும் அவன் செய்யவில்லை. அவன் செய்து வந்தது, 'லுங்கி' வியாபாரம். கைலித்துணியை, வெளி நாடுகளுக்கு அனுப்பி வந்தான். காசும் கொஞ்சம் சேர்ந்தது. என்ன குறைந்தாலும், உருப்படிக்கு மூணு ரூபாய் இலாபம் வந்தது — எனவே, உற்சவம் என்றால் 50, பஜனைக்குப் பத்து, பசித்தவனுக்குக் கால், அரை— இப்படிப் பலருக்கும் உதவி செய்து வந்தான். தன் மகளுக்கும் பத்துச் சவரனில் கழுத்துக்குச் செயின், எட்டுச் சவரனில் புதுமோஸ்தர் கைவளையல் இப்படி நகைகளும் செய்தான். கையிலே பணமும், ஊரிலே பெயரும இருப்பதைக் கண்டு பூரிக்க, பெரிய நாயகிதான் இல்லை—அது ஒரு பெரிய மனக்குறை சோணாசலத்துக்கு. அடிக்கடி தன் மகளிடம் சொல்லுவான். "உங்க அம்மா, பெரியநாயகி இருந்தா. உனக்குச் செயின் செய்ததைக் கண்டு பூரிச்சுப் போயிருப்பா" என்று கூறி ஆயாசப்படுவான்.

பெரியநாயகி, அந்தச் செயின் செய்ததையும் காண வில்லை. பிறகு, அது, மார்வாடிக கடையில் விற்கப்பட்ட கட்சியையும் காணவில்லை! கைலி வியாபாரத்துக்கு நெருக்கடி வந்தது; சோணாசலததின் சொத்தும் கரையலாயிற்று. வியாபாரந்தானே! குவிகிறபோது இருக்கிற வேகத்தைவிட, அதிக வேகமாகத்தானே கரையும்? உருப்படி ஒன்று இருபத்து நாலுக்குக் கொள்முதல் - மார்க்கெட் மளமளவென்று இறங்கி, பனிரெண்டு, பதினொன்றுக்கு வந்துவிட்டது. சோணாசலம்,“ஓட்டாண்டி"யாக நேரிட்டது அதே வருஷந்தான், மகளுக்கும் கலியாணம்.

அடுத்த வருஷம் நிலைமை சீர்படும் என்று பார்த்தான் இல்லை! அதற்கு அடுத்த வருஷம், நிலைமை அதைவிட மோசமாகிவிட்டது. உருப்படிகள் ஒவ்வொன்றும், அவனைப் பிடித்துக் கடிக்கும் பாம்புகளாயின! சோணாசலம். நொடித்துப் போய்விட்டான்.

பிரபல கைலி வியாபாரி சோணாசலத்தின் ஒரே மகளைக் கலியாணம் செய்து கொண்ட தீனதயாளன், தீப்பொறி பறக்கும் கண்களுடன் மாமனாரைப் பார்த்துச்

சொன்னான்.

"வருஷம் ஏழானாலும் சரி, சீர் சரியாகச் செய்தாலொழிய உன் மகளை நான் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாது. என்னால் அந்த அவமானத்தைத் தாங்கவே முடியாது" என்று.

உன் மகள்! என் மனைவி என்றுகூடச் சொல்ல அவனுக்கு மனம் இல்லை! அவ்வளவு கோபம்!

சோணாசலம், ஏதேதோ முயற்சி செய்தான். யாராருடைய உதவியையோ கோரினான். பலன் இல்லை.

தோ, தள்ளாடிக் கொண்டு போகும் அந்த ஆளைப்பாரும். அவன்தான் சோணாசலம்.

நோயோ?

ஆமாம்! வறுமை நோய்! மருந்து, மலைமலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவனுக்குத் தர மாட்டார்கள். இவன் வறுமை நோயினாலேயே நொந்து, நொறுங்கி, நசித்துப் போக வேண்டியதுதான். இவனிடம் இரக்கம் காட்டுபவர் யாரும் இல்லை.

இவனிடம் இரக்கம் காட்ட ஒருவராவது இருந்தால், அவன் முகத்திலே அவ்வளவு கவலை தோன்றாது—கண்களிலே கப்பிக் கொண்டிருக்கும் சோகத்தைக் கவனித்து மருந்திட யாரும் முன்வரவில்லை; என்னமோ பேசுகிறான்; கேட்போம்.

சோணாசலம் சோகக் குரலிலே பேசுகிறான்:—

சித்திரவதை செய்கிறானே, எப்படி நான் அதைத் தாங்குவேன்.

கலியாணமாகி மூன்று வருஷமாகிறது— காதலன் ஆயிரம் ரூபாயாவது சீர் செய்தால்தான் பெண்ணை வீட்டிற்கு அழைத்துச்செல்ல முடியும் என்கிறான். அடே அப்பா! நான் நொந்து போயிருக்கிறேன்— வியாபாரத்திலே நொடித்துப் போய்விட்டேன்— கொஞ்சம் இரக்கம் காட்டு என்று கெஞ்சுகிறேன்—முடியாது என்கிறான்.

பொண்ணோ! வீட்டிலே தேம்புகிறாள்.

மற்றவர் வீடுகளிலே எல்லாம், கொண்டாட்டம்! மருமகப் பிள்ளைகள் வந்திருக்கிறார்கள். என் மகளின் மனம் என்ன பாடுபடும்?

சோணாசலத்தின் சோகத்துக்காக அந்த ஊரிலே, வழக்கமாக நடைபெறும் எந்தக் காரியமும் நின்று விடவில்லை. பஜனை, பாட்டு, ஆடல், தேர், திருவிழா, எலக்‌ஷன், சகலமும் சிறப்பாக நடந்து கொண்டே இருந்தன. சோணாசலம் ‘டல்லாகி' விட்டான்; ஆகவே அவனிடம் 'உதவி' பெற, யாரும் வருவதில்லை.

"சித்திரவதை செய்கிறானே பாவி!" என்று சோணாசலம் கூறிக்கொண்டு, பாதை ஓரத்திலே நின்றுகொண்டு, யாருடைய வரவுக்காகவோ, எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதிர்பாராத ஒருவன், ஆனால் சற்றுப் பழக்கமுள்ளவன், அவ்வழி வந்தான். சோணாசலத்தைக் கண்டு, 'லோகாசாரப்படி' பேசினான்.

[வழியே ஒருவர் வருகிறார்]

ஒருவர் : சோணாசலம்! ஏம்பா என்ன இந்த வருஷமாவது, மாப்பிள்ளைக்கும் உனக்கும் இருக்கிற மனஸ்தாபம் தீர்ந்து வந்திருக்கிறானா வீட்டுக்கு?

சோ: வருவதாகத்தான் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

ஒருவர்: என்னமோ போ! கல்யாணம் செய்தும் சுகமில்லை. அவனுக்கு இந்த மூணு வருஷமா, கலியாணத்தைச் செய்த கையோடு கையா அவனுக்குச் செய்ய வேண்டிய சீர் வரிசையைச் செய்து முடிச்சுவிட்டா, அவன் நிம்மதியாக இருந்திருப்பான். வீணாக அவனையும் அலைய வைத்துவிடவே, உன் மகளுக்கும்தான் மனதுக்கு விசாரம்; என்னமோ போ. இந்த வருஷமாச்சும், சுகப்படட்டும் மாப்பிள்ளை.

[போகிறான்.]

சோ: மடையன்! என் கஷ்டத்தை உணரவில்லை, நான் மாப்பிள்ளை மனதை நோகச் செய்ததாகச் சொல்கிறான். துளியாவது ஈவு இரக்கம் இருந்தா இப்படிச் சொல்ல மனம் வருமா? எங்கே போறது, பணத்துக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறான். வாய்க்கொழுப்பு, சொல்லியும் விட்டேன், வாப்பான்னு. வீட்டிலே வந்து, அந்தப் பெண் எதிரே என் மானத்தை வாங்குவானேன்னுதான் வருகிற பாதையிலே காத்துக்கிட்டு இருக்கறேன்—காலிலே விழுந்தாவது கெஞ்சிக் கேட்டுக் கொள்வோம்னு. என்ன சொல்கிறானோ!

[அவ்வழியே ஒரு வாலிபன் வருகிறான். அவனைக் கண்டதும் சோணாசலம் மரியாதையுடன் பேசுகிறான்.]

சோ : தம்பி ! வாப்பா, வா!

வா : இதென்ன, நடுத்தெருவிலேயே உபசாரம்; வீட்டுக்குப் போகலாமே!

சோ: போகலாம்பா, போகலாம்.

வா: புறப்படுங்க! ஏன், யாருக்காகப் பார்த்துக்கிட்டு இருக்கிறிங்க? வண்டியா? வேண்டாம். நான் ரயிலை விட்டு இறங்கி,சாமான்களை எல்லாம் ஓட்டலிலே ஒரு அறை வாடகைக்குப் பேசி வைத்துவிட்டு, நடந்து வந்தேன். எப்படி இருக்கிறீங்க, என்னை நிலைமைன்னு பார்த்து விட்டுப் போக.

சோ: என்னைப் பார்த்தா தெரியலையாப்பா உனக்கு. நீ நல்ல குணமுடையவன்—படிச்சவன்—என் மனதைத் திறந்து உன்னிடம் பேசுகிறேன். நானும் மூன்று வருஷமா, எவ்வளவோ முயற்சி செய்துதான் வர்ரேன்.

வா: அதுக்கென்ன செய்யறது. அதததுக்குக் காலம்கூடி வரவேணுமில்லே. போவுது, இப்ப எல்லாம் சரியாகப் போவுது. என்னென்ன சீர் செய்யறதா உத்தேசம்?

சோ: அதைப் பத்தித்தாம்பா பேசணும்னு நிற்கறேன். வீட்டிலே கொழந்தையின் முகத்தைப் பார்க்கச் சகிக்கலை. ஊரார் ஏசறதையும் கேக்கப் பொறுக்கலை. பெண்ணை ஏன் இன்னும் அனுப்பலே—மாப்பிள்ளை ஏன் இன்னமும் வரலைன்னு கேட்டுக் கேட்டு, என்னைக் கொத்திவிடறாங்க. கேள்வி கேட்க ஆள் இருக்கே தவிர, இரக்கப்பட்டு, இந்தாப்பா கடனாக இந்தத் தொகையை வைச்சிக்கோ, பிறகு கொடுன்னு உபகாரம் செய்கிறவங்க இல்லை.

வா: ஆமாம்! இதென்ன நீங்க பழைய கதையையே பேசறிங்க.

சோ : நிலைமை, மாறலையேப்பா.

வா: அதுக்கு ஏன் மருமகப்பிள்ளையை வரச்சொன்னிங்க. சரிதான், அவன் சொன்னது சரியாகப் போச்சு.

சோ: எவன்?

வா: உம் மருமகன்தான். டே! எங்க மாமனாரு சீர் செய்யறதாச் சொல்லி வரவழைத்து, ஏமாற்றி எப்படியாவது பெண்ணைத் தலையிலே கட்டிவிடத் தந்திரம் செய்வாரு. ஆகையாலே நீ முதலிலேபோயி, என்னென்ன சாமான் வாங்கி வைச்சிருக்குன்னு பார்த்துவிட்டு வான்னு, ஓட்டலிலே தங்கிவிட்டு என்னை அனுப்பினான்.

சோ: உனக்குக் கோடி புண்யம்பா! இந்த ஏழைகிட்ட இரக்கம் காட்டி, எப்படியாவது என் மருமகனுக்கு நல்ல பேச்சு சொல்லி...

வா ; ஐயையோ! நம்மாலே முடியாதுங்க. அவன், ரொம்ப கண்டிப்பான பேர்வழி; யார் சொன்னாலும் கேட்க மாட்டான்.

சோ: என்னைப் பாரப்பா! என் மக கதறுகிறதைப் பார்த்தாத் தெரியும். கொஞ்சம் இரக்கம் காட்டப்பா.

வா: நான் காட்டி என்னாங்க செய்யறது. அவன் பிடிவாதக்காரன். எப்படியாவது, ஆயிரம் என்பதை ஐந்நூறு, நானூறு, அடெ, ஒரு இருநூறு ரூபாய்க்காவது சீர் செய்துவிடுங்க. வேறுவழி இல்லை. எங்கேயாவது கடன் கிடன் வாங்கித்தான் தீரணும்—நான் போய் 'சேதி' யை 'நைசா' சொல்லி, உங்க மாப்பிள்ளையை, அழைச்சிகிட்டு வாரேன்—நீங்க, சாயந்தரத்துக்குள்ளே எப்படியாவது சரிப்படுத்துங்க, நான் வரட்டுமா?

சோ: செய்யப்பா!

[வாலிபன் திரும்பிப் போய்விடுகிறான்]

சோ: படுபாவிப் பய! இவனுக்கும் துளிகூட இரக்கம் இல்லை. ஆண்டவனுக்காவது இரக்கமிருந்தா எனக்குச் சாவாவது வரவேணும்—அதுவும் இல்லை. எங்கேன்னு போய்த் தேடறது பணத்தை. எவன் கொடுப்பான் கடன்? திருடவும் தெரியாது.

[தள்ளாடி நடந்து செல்கிறான்.]

கிக்க முடியவில்லையல்லவா? சரி, அவன் நிலைமை என்ன ஆகிறது என்று பார்ப்போம்.

கண்றாவிக் காட்சியைப் பார்க்க என்னால் முடியாதப்பா என்று கூறிவிட வேண்டாம்.

இந்த மாதிரி சமயத்திலே கண்களை இறுக மூடிக்கொள்வதால்தான் உலகிலே பஞ்சமாபாதகம் நடைபெறுகிறது. கண்களையும் மூடக்கூடாது, ஊமையாகவும் இருக்கக் கூடாது. அதோ போகிறானே, இரக்கத்தைத் தேடித்தேடிப் பார்த்து, கிடைக்காததால் கதிகலங்கி அவன் இப்போது எதையும் செய்யச் சித்தமாக இருக்கிறான். கொலை—களவு—பொய்-சூது-வஞ்சனை இவை எதுவும் முடியாவிட்டால், தற்கொலை. இவ்வளவுக்கும் அவன் தயார்! அவன் மட்டுமல்ல, உலகிலே அனேகர். இரக்கம் தேடினான் அல்லவா இவன்? இவனே இப்போது இரக்கத்தைக் கைவிட்டு விடுவான்.

[சின்னக் குழந்தையை வண்டியிலே வைத்துத் தள்ளிக்கொண்டு ஆயா ஒருவள் வருகிறாள்.]

[திடீரென்று அவளுக்குக் காக்காய் வலிப்பு.]

[கீழே வீழ்கிறாள்—வண்டி கவிழ இருக்கிறது.]

[சோணாசலம், பார்த்துவிட்டுப் பதைத்தோடி வந்து, வண்டியைப் பிடித்துக் கொண்டு அவளையும் காப்பாற்றுகிறான்.]

[அவள் கொஞ்சம் மூர்ச்சை தெளிந்ததும் கும்பிடுகிறாள்.]

ஆயா : குலதெய்வம் போல வந்திங்கய்யா! கோடி புண்யம் உங்களுக்கு.

சோ: ஏம்மா, உனக்கு இது மாதிரி வலி....

ஆயா: கொஞ்சநாளா இந்தச் சனியன் என்னைப் பிடிச்சிகிட்டு வாட்டுது—மந்தரம் மருந்து எல்லாம் செய்தாச்சி—

சோ : மயக்கம் இன்னும் தெளியலே போலிருக்கே.

ஆயா: ஆமாம்—ஆனா,குழந்தையைப் பொழுதோடே கொண்டு போய்ச் சேர்க்கோணும்—

சோ: ஐயோ, பாவம்!

ஆயா: இரக்கமான மனசய்யா உங்களுக்கு. உங்களாலே தான், புள்ளே புழைச்சுது. வண்டி கவிழ்ந்து போயிருந்தா, என்ன கதியாவும் குழந்தை!

சோ: குழந்தை, ரொம்ப அழகா இருக்கும்மா! யாரு வீடு?

ஆயா: கலெக்டரய்யா வீட்டுக் குழந்தை.

சோ : இலட்சணமா இருக்கு.

ஆ: அதுக்கு என்னங்க குறை. கலெக்டரய்யா சம்சாரம், ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணு. குழந்தை மேலே தாத்தாவுக்கு உசிரு. அவர்தான், நேத்து செய்து போட்டாரு, அந்தப் புதுசெயின். ஆறு சவரன்.

[மறுபடி மயக்கம்.]

[கீழே சாய்த்துவிட்டு ஓடுகிறான், தண்ணீர் கொண்டு வர. சட்டி ஓட்டில் தண்ணீர் கொண்டுவந்து தெளிக்கப் போகும்போது, செயின் தெரிகிறது—புத்தி மாறுகிறது— செயினைத் தூக்கிக் கொண்டு ஓடிவிடுகிறான்]

[அவ்வழியே ஒரு வாலிபன் வருகிறான்—கீழே வாயில் நுரை தள்ளியபடி விழுந்து கிடப்பவளைக் கண்டு, பச்சாதாபப்பட்டு]

அடடா! ஏழை படும்பாடு, எப்படி எப்படி எல்லாம் இருக்கிறதப்பா, இந்த உலகிலே.

அம்மா! அம்மா!

[மெதுவாகக் கண்திறந்து மிரள மிரள விழிக்கிறாள்.]

ஆயா: மறுபடியும் வந்துவிட்டுது பாத்திங்களா, அந்த மயக்கம்—நல்ல வேளை, நீங்க இருந்து, காப்பாத்தினீங்க.

வா: மறுபடியும் மயக்கமா? இதற்கு முன்னே ஒரு தடவை மயக்கம் வந்ததா உனக்கு?

ஆயா: என்னய்யா இது, இப்படிக் கேட்கறே! நீதானே முன்னே என்னைக் காப்பாத்தினே!

வா: நானா?

[குழந்தையைப் பார்த்து]

ஆயா: ஐயோ! செயின்! அடபாவி! செயினைத் திருடிக்கிட்டானே.

[கூச்சலிடுகிறாள்.]

[சிலர் ஓடி வருகிறார்கள்.]

ஆயா: ஐயா, இந்த அநியாயத்தைக் கேளுங்க. எனக்கு காக்கா வலி வந்துவிட்டது. இந்த ஐயாதான் காப்பாத்தினாரு—மயக்கம் தெளியறதுக்குள்ளேயே மறுபடியும் வலி வந்துடுச்சி; நான் கீழே விழுந்துவிட்டேன்— என்னிடம் ரொம்பப் பரிதாபம் காட்டி, பசப்பினான் இந்தப் பாவி—படுபாவி! குழந்தே கழுத்திலே இருந்த செயினை—

வா: செ! ராஸ்கல்! யாரைப் பார்த்துத் திருடன்னு சொல்கிறே. ஆளைப்பார்த்தா கூடவா,மனுஷாளுடைய தராதரம் தெரியலே?

கும்பலில் ஒருவன்: அடடே! மகா, தராதரம் கண்டவருடா இவரு. ஏண்டா! திருட்டுப்பயன்னா அவன் என்ன, சதாரம் டிராமாவிலே வருகிற திருடன் மாதிரியாகத்தான் இருப்பானா? உனக்கு என்னவாம்? இவரு உருவைப் பார்த்தாலே, யோக்யருன்னு தெரியுதாம்.

வேறொருவன்: நெத்தியிலே எழுதி ஒட்டி இருக்குது.

வாலி: டே! உளறாதிங்க. அம்மா! சரியாகப் பார்த்துச் சொல்லு. நானா இதற்கு முன்பு மயக்கம் வந்தபோது இருந்தேன்.

ஆயா: ஆமாம். ஐயோ! செயின் போயிடுத்தே. நீதான் இருந்தே இங்கே. எனக்கு மயக்கமா இருந்தது. சரியாகப் புரியலையே. வேறே ஆள் இருந்தானோ என்னமோ! அதுவும் தெரியலே.

கும்பலில் ஒருவன்: அந்த மாதிரியும் திருடறது உண்டு. இரண்டு ராஸ்கலா வந்திருப்பானுங்க. ஒருத்தன் தூக்கிவிட்டு ஓடி விட்டிருப்பான்—இவன் அதை மறைக்க இங்கே நின்னுக்கிட்டு—ஜாலம் காட்டுகிறான்—டே! யாரு அவன், உன் பங்காளி—(அடிக்கிறார்கள்.)

[கான்ஸ்டபிள் அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போகிறான்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=செவ்வாழை/சோணாசலம்&oldid=1638686" இலிருந்து மீள்விக்கப்பட்டது