செவ்வாழை/பலாபலன்

5
சோணாசலம்

சோணாசலம், சொன்ன சொல் தவறாதவன் என்ற நற்பெயர் எடுத்தவன். பலருக்கு உபகாரம் செய்தவன். தன்னால் முடிந்த உதவியைச் செய்ய அவன் எப்போதுமே தவறுவதில்லை. பலர் அவனைப் பாராட்டியுமிருக்கிறார்கள். ஓரிரு காரியவாதிகள் மட்டும், சோணாசலத்தின், "பைத்தியக்கார" சுபாவத்தைப் பற்றிக் கேலியாகப் பேசுவதுண்டு.

"இந்தச் சோணாசலம் இருக்கிறானே, தன்னால் எவ்வளவு தாங்க முடியும் என்ற கணக்கே தெரியாதவன். எதற்கும் முன்னாலே நிற்கிறான். பணம் நிறைய வைத்துக் கொண்டிருப்பவர்கள், பத்து ரூபாய் தருவதற்கு யோசிக்கிறார்கள்; இவன் தாராளமாகக் கொடுத்துவிடுகிறான். 'பசி' என்று எவனாவது கூறிவிட்டால் போதும்; மடியிலே எட்டணா இருந்தாலும், ஒரு ரூபாய் இருந்தாலும் சரி, எடுத்துக் கொடுத்து விடுகிறான். பைத்யக்காரன்! இப்படிக் கைக்காசைச் செலவழித்துவிட்டு, இவன் 'ஓட்டாண்டி'யாகி விட்டா, பிறகு, இவனுக்கு உதவி செய்ய யார் வருவார்கள்? கஷ்டப்படும்போது தெரியும் இதெல்லாம்—என்று பேசினார்கள்.

சோணாசலம் “ஓட்டாண்டி’”யாகிவிட்டான்— ஒரு குற்றமும் அவன் செய்யவில்லை. அவன் செய்து வந்தது, 'லுங்கி' வியாபாரம். கைலித்துணியை, வெளி நாடுகளுக்கு அனுப்பி வந்தான். காசும் கொஞ்சம் சேர்ந்தது. என்ன குறைந்தாலும், உருப்படிக்கு மூணு ரூபாய் இலாபம் வந்தது — எனவே, உற்சவம் என்றால் 50, பஜனைக்குப் பத்து, பசித்தவனுக்குக் கால், அரை— இப்படிப் பலருக்கும் உதவி செய்து வந்தான். தன் மகளுக்கும் பத்துச் சவரனில் கழுத்துக்குச் செயின், எட்டுச் சவரனில் புதுமோஸ்தர் கைவளையல் இப்படி நகைகளும் செய்தான். கையிலே பணமும், ஊரிலே பெயரும இருப்பதைக் கண்டு பூரிக்க, பெரிய நாயகிதான் இல்லை—அது ஒரு பெரிய மனக்குறை சோணாசலத்துக்கு. அடிக்கடி தன் மகளிடம் சொல்லுவான். "உங்க அம்மா, பெரியநாயகி இருந்தா. உனக்குச் செயின் செய்ததைக் கண்டு பூரிச்சுப் போயிருப்பா" என்று கூறி ஆயாசப்படுவான்.

பெரியநாயகி, அந்தச் செயின் செய்ததையும் காண வில்லை. பிறகு, அது, மார்வாடிக கடையில் விற்கப்பட்ட கட்சியையும் காணவில்லை! கைலி வியாபாரத்துக்கு நெருக்கடி வந்தது; சோணாசலததின் சொத்தும் கரையலாயிற்று. வியாபாரந்தானே! குவிகிறபோது இருக்கிற வேகத்தைவிட, அதிக வேகமாகத்தானே கரையும்? உருப்படி ஒன்று இருபத்து நாலுக்குக் கொள்முதல் - மார்க்கெட் மளமளவென்று இறங்கி, பனிரெண்டு, பதினொன்றுக்கு வந்துவிட்டது. சோணாசலம்,“ஓட்டாண்டி"யாக நேரிட்டது அதே வருஷந்தான், மகளுக்கும் கலியாணம்.

அடுத்த வருஷம் நிலைமை சீர்படும் என்று பார்த்தான் இல்லை! அதற்கு அடுத்த வருஷம், நிலைமை அதைவிட மோசமாகிவிட்டது. உருப்படிகள் ஒவ்வொன்றும், அவனைப் பிடித்துக் கடிக்கும் பாம்புகளாயின! சோணாசலம். நொடித்துப் போய்விட்டான்.

பிரபல கைலி வியாபாரி சோணாசலத்தின் ஒரே மகளைக் கலியாணம் செய்து கொண்ட தீனதயாளன், தீப்பொறி பறக்கும் கண்களுடன் மாமனாரைப் பார்த்துச்

சொன்னான்.

"வருஷம் ஏழானாலும் சரி, சீர் சரியாகச் செய்தாலொழிய உன் மகளை நான் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாது. என்னால் அந்த அவமானத்தைத் தாங்கவே முடியாது" என்று.

உன் மகள்! என் மனைவி என்றுகூடச் சொல்ல அவனுக்கு மனம் இல்லை! அவ்வளவு கோபம்!

சோணாசலம், ஏதேதோ முயற்சி செய்தான். யாராருடைய உதவியையோ கோரினான். பலன் இல்லை.

தோ, தள்ளாடிக் கொண்டு போகும் அந்த ஆளைப்பாரும். அவன்தான் சோணாசலம்.

நோயோ?

ஆமாம்! வறுமை நோய்! மருந்து, மலைமலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவனுக்குத் தர மாட்டார்கள். இவன் வறுமை நோயினாலேயே நொந்து, நொறுங்கி, நசித்துப் போக வேண்டியதுதான். இவனிடம் இரக்கம் காட்டுபவர் யாரும் இல்லை.

இவனிடம் இரக்கம் காட்ட ஒருவராவது இருந்தால், அவன் முகத்திலே அவ்வளவு கவலை தோன்றாது—கண்களிலே கப்பிக் கொண்டிருக்கும் சோகத்தைக் கவனித்து மருந்திட யாரும் முன்வரவில்லை; என்னமோ பேசுகிறான்; கேட்போம்.

சோணாசலம் சோகக் குரலிலே பேசுகிறான்:—

சித்திரவதை செய்கிறானே, எப்படி நான் அதைத் தாங்குவேன்.

கலியாணமாகி மூன்று வருஷமாகிறது— காதலன் ஆயிரம் ரூபாயாவது சீர் செய்தால்தான் பெண்ணை வீட்டிற்கு அழைத்துச்செல்ல முடியும் என்கிறான். அடே அப்பா! நான் நொந்து போயிருக்கிறேன்— வியாபாரத்திலே நொடித்துப் போய்விட்டேன்— கொஞ்சம் இரக்கம் காட்டு என்று கெஞ்சுகிறேன்—முடியாது என்கிறான்.

பொண்ணோ! வீட்டிலே தேம்புகிறாள்.

மற்றவர் வீடுகளிலே எல்லாம், கொண்டாட்டம்! மருமகப் பிள்ளைகள் வந்திருக்கிறார்கள். என் மகளின் மனம் என்ன பாடுபடும்?

சோணாசலத்தின் சோகத்துக்காக அந்த ஊரிலே, வழக்கமாக நடைபெறும் எந்தக் காரியமும் நின்று விடவில்லை. பஜனை, பாட்டு, ஆடல், தேர், திருவிழா, எலக்‌ஷன், சகலமும் சிறப்பாக நடந்து கொண்டே இருந்தன. சோணாசலம் ‘டல்லாகி' விட்டான்; ஆகவே அவனிடம் 'உதவி' பெற, யாரும் வருவதில்லை.

"சித்திரவதை செய்கிறானே பாவி!" என்று சோணாசலம் கூறிக்கொண்டு, பாதை ஓரத்திலே நின்றுகொண்டு, யாருடைய வரவுக்காகவோ, எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதிர்பாராத ஒருவன், ஆனால் சற்றுப் பழக்கமுள்ளவன், அவ்வழி வந்தான். சோணாசலத்தைக் கண்டு, 'லோகாசாரப்படி' பேசினான்.

[வழியே ஒருவர் வருகிறார்]

ஒருவர் : சோணாசலம்! ஏம்பா என்ன இந்த வருஷமாவது, மாப்பிள்ளைக்கும் உனக்கும் இருக்கிற மனஸ்தாபம் தீர்ந்து வந்திருக்கிறானா வீட்டுக்கு?

சோ: வருவதாகத்தான் சொல்லி அனுப்பி இருக்கிறார்.

ஒருவர்: என்னமோ போ! கல்யாணம் செய்தும் சுகமில்லை. அவனுக்கு இந்த மூணு வருஷமா, கலியாணத்தைச் செய்த கையோடு கையா அவனுக்குச் செய்ய வேண்டிய சீர் வரிசையைச் செய்து முடிச்சுவிட்டா, அவன் நிம்மதியாக இருந்திருப்பான். வீணாக அவனையும் அலைய வைத்துவிடவே, உன் மகளுக்கும்தான் மனதுக்கு விசாரம்; என்னமோ போ. இந்த வருஷமாச்சும், சுகப்படட்டும் மாப்பிள்ளை.

[போகிறான்.]

சோ: மடையன்! என் கஷ்டத்தை உணரவில்லை, நான் மாப்பிள்ளை மனதை நோகச் செய்ததாகச் சொல்கிறான். துளியாவது ஈவு இரக்கம் இருந்தா இப்படிச் சொல்ல மனம் வருமா? எங்கே போறது, பணத்துக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறான். வாய்க்கொழுப்பு, சொல்லியும் விட்டேன், வாப்பான்னு. வீட்டிலே வந்து, அந்தப் பெண் எதிரே என் மானத்தை வாங்குவானேன்னுதான் வருகிற பாதையிலே காத்துக்கிட்டு இருக்கறேன்—காலிலே விழுந்தாவது கெஞ்சிக் கேட்டுக் கொள்வோம்னு. என்ன சொல்கிறானோ!

[அவ்வழியே ஒரு வாலிபன் வருகிறான். அவனைக் கண்டதும் சோணாசலம் மரியாதையுடன் பேசுகிறான்.]

சோ : தம்பி ! வாப்பா, வா!

வா : இதென்ன, நடுத்தெருவிலேயே உபசாரம்; வீட்டுக்குப் போகலாமே!

சோ: போகலாம்பா, போகலாம்.

வா: புறப்படுங்க! ஏன், யாருக்காகப் பார்த்துக்கிட்டு இருக்கிறிங்க? வண்டியா? வேண்டாம். நான் ரயிலை விட்டு இறங்கி,சாமான்களை எல்லாம் ஓட்டலிலே ஒரு அறை வாடகைக்குப் பேசி வைத்துவிட்டு, நடந்து வந்தேன். எப்படி இருக்கிறீங்க, என்னை நிலைமைன்னு பார்த்து விட்டுப் போக.

சோ: என்னைப் பார்த்தா தெரியலையாப்பா உனக்கு. நீ நல்ல குணமுடையவன்—படிச்சவன்—என் மனதைத் திறந்து உன்னிடம் பேசுகிறேன். நானும் மூன்று வருஷமா, எவ்வளவோ முயற்சி செய்துதான் வர்ரேன்.

வா: அதுக்கென்ன செய்யறது. அதததுக்குக் காலம்கூடி வரவேணுமில்லே. போவுது, இப்ப எல்லாம் சரியாகப் போவுது. என்னென்ன சீர் செய்யறதா உத்தேசம்?

சோ: அதைப் பத்தித்தாம்பா பேசணும்னு நிற்கறேன். வீட்டிலே கொழந்தையின் முகத்தைப் பார்க்கச் சகிக்கலை. ஊரார் ஏசறதையும் கேக்கப் பொறுக்கலை. பெண்ணை ஏன் இன்னும் அனுப்பலே—மாப்பிள்ளை ஏன் இன்னமும் வரலைன்னு கேட்டுக் கேட்டு, என்னைக் கொத்திவிடறாங்க. கேள்வி கேட்க ஆள் இருக்கே தவிர, இரக்கப்பட்டு, இந்தாப்பா கடனாக இந்தத் தொகையை வைச்சிக்கோ, பிறகு கொடுன்னு உபகாரம் செய்கிறவங்க இல்லை.

வா: ஆமாம்! இதென்ன நீங்க பழைய கதையையே பேசறிங்க.

சோ : நிலைமை, மாறலையேப்பா.

வா: அதுக்கு ஏன் மருமகப்பிள்ளையை வரச்சொன்னிங்க. சரிதான், அவன் சொன்னது சரியாகப் போச்சு.

சோ: எவன்?

வா: உம் மருமகன்தான். டே! எங்க மாமனாரு சீர் செய்யறதாச் சொல்லி வரவழைத்து, ஏமாற்றி எப்படியாவது பெண்ணைத் தலையிலே கட்டிவிடத் தந்திரம் செய்வாரு. ஆகையாலே நீ முதலிலேபோயி, என்னென்ன சாமான் வாங்கி வைச்சிருக்குன்னு பார்த்துவிட்டு வான்னு, ஓட்டலிலே தங்கிவிட்டு என்னை அனுப்பினான்.

சோ: உனக்குக் கோடி புண்யம்பா! இந்த ஏழைகிட்ட இரக்கம் காட்டி, எப்படியாவது என் மருமகனுக்கு நல்ல பேச்சு சொல்லி...

வா ; ஐயையோ! நம்மாலே முடியாதுங்க. அவன், ரொம்ப கண்டிப்பான பேர்வழி; யார் சொன்னாலும் கேட்க மாட்டான்.

சோ: என்னைப் பாரப்பா! என் மக கதறுகிறதைப் பார்த்தாத் தெரியும். கொஞ்சம் இரக்கம் காட்டப்பா.

வா: நான் காட்டி என்னாங்க செய்யறது. அவன் பிடிவாதக்காரன். எப்படியாவது, ஆயிரம் என்பதை ஐந்நூறு, நானூறு, அடெ, ஒரு இருநூறு ரூபாய்க்காவது சீர் செய்துவிடுங்க. வேறுவழி இல்லை. எங்கேயாவது கடன் கிடன் வாங்கித்தான் தீரணும்—நான் போய் 'சேதி' யை 'நைசா' சொல்லி, உங்க மாப்பிள்ளையை, அழைச்சிகிட்டு வாரேன்—நீங்க, சாயந்தரத்துக்குள்ளே எப்படியாவது சரிப்படுத்துங்க, நான் வரட்டுமா?

சோ: செய்யப்பா!

[வாலிபன் திரும்பிப் போய்விடுகிறான்]

சோ: படுபாவிப் பய! இவனுக்கும் துளிகூட இரக்கம் இல்லை. ஆண்டவனுக்காவது இரக்கமிருந்தா எனக்குச் சாவாவது வரவேணும்—அதுவும் இல்லை. எங்கேன்னு போய்த் தேடறது பணத்தை. எவன் கொடுப்பான் கடன்? திருடவும் தெரியாது.

[தள்ளாடி நடந்து செல்கிறான்.]

கிக்க முடியவில்லையல்லவா? சரி, அவன் நிலைமை என்ன ஆகிறது என்று பார்ப்போம்.

கண்றாவிக் காட்சியைப் பார்க்க என்னால் முடியாதப்பா என்று கூறிவிட வேண்டாம்.

இந்த மாதிரி சமயத்திலே கண்களை இறுக மூடிக்கொள்வதால்தான் உலகிலே பஞ்சமாபாதகம் நடைபெறுகிறது. கண்களையும் மூடக்கூடாது, ஊமையாகவும் இருக்கக் கூடாது. அதோ போகிறானே, இரக்கத்தைத் தேடித்தேடிப் பார்த்து, கிடைக்காததால் கதிகலங்கி அவன் இப்போது எதையும் செய்யச் சித்தமாக இருக்கிறான். கொலை—களவு—பொய்-சூது-வஞ்சனை இவை எதுவும் முடியாவிட்டால், தற்கொலை. இவ்வளவுக்கும் அவன் தயார்! அவன் மட்டுமல்ல, உலகிலே அனேகர். இரக்கம் தேடினான் அல்லவா இவன்? இவனே இப்போது இரக்கத்தைக் கைவிட்டு விடுவான்.

[சின்னக் குழந்தையை வண்டியிலே வைத்துத் தள்ளிக்கொண்டு ஆயா ஒருவள் வருகிறாள்.]

[திடீரென்று அவளுக்குக் காக்காய் வலிப்பு.]

[கீழே வீழ்கிறாள்—வண்டி கவிழ இருக்கிறது.]

[சோணாசலம், பார்த்துவிட்டுப் பதைத்தோடி வந்து, வண்டியைப் பிடித்துக் கொண்டு அவளையும் காப்பாற்றுகிறான்.]

[அவள் கொஞ்சம் மூர்ச்சை தெளிந்ததும் கும்பிடுகிறாள்.]

ஆயா : குலதெய்வம் போல வந்திங்கய்யா! கோடி புண்யம் உங்களுக்கு.

சோ: ஏம்மா, உனக்கு இது மாதிரி வலி....

ஆயா: கொஞ்சநாளா இந்தச் சனியன் என்னைப் பிடிச்சிகிட்டு வாட்டுது—மந்தரம் மருந்து எல்லாம் செய்தாச்சி—

சோ : மயக்கம் இன்னும் தெளியலே போலிருக்கே.

ஆயா: ஆமாம்—ஆனா,குழந்தையைப் பொழுதோடே கொண்டு போய்ச் சேர்க்கோணும்—

சோ: ஐயோ, பாவம்!

ஆயா: இரக்கமான மனசய்யா உங்களுக்கு. உங்களாலே தான், புள்ளே புழைச்சுது. வண்டி கவிழ்ந்து போயிருந்தா, என்ன கதியாவும் குழந்தை!

சோ: குழந்தை, ரொம்ப அழகா இருக்கும்மா! யாரு வீடு?

ஆயா: கலெக்டரய்யா வீட்டுக் குழந்தை.

சோ : இலட்சணமா இருக்கு.

ஆ: அதுக்கு என்னங்க குறை. கலெக்டரய்யா சம்சாரம், ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணு. குழந்தை மேலே தாத்தாவுக்கு உசிரு. அவர்தான், நேத்து செய்து போட்டாரு, அந்தப் புதுசெயின். ஆறு சவரன்.

[மறுபடி மயக்கம்.]

[கீழே சாய்த்துவிட்டு ஓடுகிறான், தண்ணீர் கொண்டு வர. சட்டி ஓட்டில் தண்ணீர் கொண்டுவந்து தெளிக்கப் போகும்போது, செயின் தெரிகிறது—புத்தி மாறுகிறது— செயினைத் தூக்கிக் கொண்டு ஓடிவிடுகிறான்]

[அவ்வழியே ஒரு வாலிபன் வருகிறான்—கீழே வாயில் நுரை தள்ளியபடி விழுந்து கிடப்பவளைக் கண்டு, பச்சாதாபப்பட்டு]

அடடா! ஏழை படும்பாடு, எப்படி எப்படி எல்லாம் இருக்கிறதப்பா, இந்த உலகிலே.

அம்மா! அம்மா!

[மெதுவாகக் கண்திறந்து மிரள மிரள விழிக்கிறாள்.]

ஆயா: மறுபடியும் வந்துவிட்டுது பாத்திங்களா, அந்த மயக்கம்—நல்ல வேளை, நீங்க இருந்து, காப்பாத்தினீங்க.

வா: மறுபடியும் மயக்கமா? இதற்கு முன்னே ஒரு தடவை மயக்கம் வந்ததா உனக்கு?

ஆயா: என்னய்யா இது, இப்படிக் கேட்கறே! நீதானே முன்னே என்னைக் காப்பாத்தினே!

வா: நானா?

[குழந்தையைப் பார்த்து]

ஆயா: ஐயோ! செயின்! அடபாவி! செயினைத் திருடிக்கிட்டானே.

[கூச்சலிடுகிறாள்.]

[சிலர் ஓடி வருகிறார்கள்.]

ஆயா: ஐயா, இந்த அநியாயத்தைக் கேளுங்க. எனக்கு காக்கா வலி வந்துவிட்டது. இந்த ஐயாதான் காப்பாத்தினாரு—மயக்கம் தெளியறதுக்குள்ளேயே மறுபடியும் வலி வந்துடுச்சி; நான் கீழே விழுந்துவிட்டேன்— என்னிடம் ரொம்பப் பரிதாபம் காட்டி, பசப்பினான் இந்தப் பாவி—படுபாவி! குழந்தே கழுத்திலே இருந்த செயினை—

வா: செ! ராஸ்கல்! யாரைப் பார்த்துத் திருடன்னு சொல்கிறே. ஆளைப்பார்த்தா கூடவா,மனுஷாளுடைய தராதரம் தெரியலே?

கும்பலில் ஒருவன்: அடடே! மகா, தராதரம் கண்டவருடா இவரு. ஏண்டா! திருட்டுப்பயன்னா அவன் என்ன, சதாரம் டிராமாவிலே வருகிற திருடன் மாதிரியாகத்தான் இருப்பானா? உனக்கு என்னவாம்? இவரு உருவைப் பார்த்தாலே, யோக்யருன்னு தெரியுதாம்.

வேறொருவன்: நெத்தியிலே எழுதி ஒட்டி இருக்குது.

வாலி: டே! உளறாதிங்க. அம்மா! சரியாகப் பார்த்துச் சொல்லு. நானா இதற்கு முன்பு மயக்கம் வந்தபோது இருந்தேன்.

ஆயா: ஆமாம். ஐயோ! செயின் போயிடுத்தே. நீதான் இருந்தே இங்கே. எனக்கு மயக்கமா இருந்தது. சரியாகப் புரியலையே. வேறே ஆள் இருந்தானோ என்னமோ! அதுவும் தெரியலே.

கும்பலில் ஒருவன்: அந்த மாதிரியும் திருடறது உண்டு. இரண்டு ராஸ்கலா வந்திருப்பானுங்க. ஒருத்தன் தூக்கிவிட்டு ஓடி விட்டிருப்பான்—இவன் அதை மறைக்க இங்கே நின்னுக்கிட்டு—ஜாலம் காட்டுகிறான்—டே! யாரு அவன், உன் பங்காளி—(அடிக்கிறார்கள்.)

[கான்ஸ்டபிள் அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போகிறான்.]

6
பலாபலன்

"சூரியனுடைய பார்வை, மட்டாகப் பதினைந்து நாள் பிடிக்கும். அப்போதுதான் இந்தக் காய்ச்சல் குறையும்."

"நெருப்பு வீசுதுங்க, அவர் பக்கத்திலே உட்கார்ந்தாலே."

"வீசும், வீசும்! தீட்சணியமாகத்தான் இருக்கும்; சூரியனுடைய பார்வை அப்படிப்பட்டது. அதற்கென்ன செய்வது? ஆனாலும் பாதகமில்லையே; உயிருக்குப் பயமில்லை--சனி, இப்போது இருக்கிற இடத்திலே இராமல், வேறு இடம், அஷ்டமத்துக்குப் போயிருந்தா...அடடா..."

"என்னாங்க, பெருமூச்சு விடறிங்க?

"கமலம்மா! உன் புருஷனுடைய ஜாதகத்தை முதலிலே பார்த்ததும், சத்யமாச் சொல்றேன், நான் பயந்து தான் போனேன்—ஏன்—சூரியனுடைய பார்வை அப்படி இருந்தது. பிறகு, சனி, எங்கே இருக்கிறான்—அதுதானே முக்கியம்—அதனாலே, சனியைக் கவனிச்சேன்—அவன், நல்லவேளை—உன் மாங்கலிய பலத்தாலே அஷ்டமத்திலே இல்லை—அப்பா—பரவாயில்லை—உயிருக்கு ஆபத்து இராது என்று மனசு நிம்மதியாச்சு."

"என்னமோ போங்க, அந்த வெங்கடேசப் பெருமாள் வாயிலே இருந்து வந்த சொல் மாதிரி, இருக்குதுங்க உங்க பேச்சு."

"நானா பேசுகிறேன். பைத்யமே! கிரஹம் பேசுவதை நான் சொல்கிறேன். ஒவ்வொரு கிரஹமும், சஞ்சாரம் செய்கிறபோது ஏற்படுகிற பலாபலன்களைக் கண்டறிவதுதானே முக்கியம். இந்தக் காலத்திலே, கிரஹ சஞ்சாரத்தைப் பற்றிய ஞானமே இல்லாதவாளெல்லாம், 'பலகரை'யை வைத்துப் பார்ப்பது, குருவியைக் கேட்பது என்று, ஏதேதோ பொய்யும் புரட்டும் செய்து, பணத்தைத் தேடுவதிலே ஈடுபடுவா. நான் அப்படியா! சனி, எந்த இடத்திலே இருக்கிறான், அங்காரகன் என்ன செய்கிறான், புதன் என்ன சொல்றான், வியாழன் என்ன பண்ணுவான் என்று இப்படி, அந்தந்த கிரஹத்துடைய நிலையைப் பார்த்து, கணித்து, சரி, மூணும்மூணும் ஆறு, ஆறுடன் நாலு சேர்ந்தா பத்து- என்பது போல, திட்டமாகச் சொல்லுவேன். அதுபோலத்தான், உன் புருஷன் ஜாதகத்தை நன்றாகப் பார்த்துச் சொல்கிறேன், சூரியனுடைய பார்வை தீட்சணியத்தாலே காய்ச்சல் அதிகமாக இருந்தாலும், சனி இப்போது இருக்கிற இடம், அவ்வளவு கெட்ட இடமல்ல; ஆகையாலே, உயிருக்கு ஆபத்து நிச்சயமாக இராது; படிப்படியாக ஜுரம் குறையும்.பயப்பட வேண்டாம்; எதற்கும் சூரியனுக்கும் சனி பகவானுக்கும் ஒரு மண்டல விளக்கு ஏற்று, நல்லது. எல்லாம் கணக்குத் தானே. காரணமில்லாத விவகாரமா! மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்தா, இரத்த நிறமாகிறது போலத்தான், கிரஹங்கள் ஒன்றோடொன்று கொள்கிற சம்பந்தா சம்பந்தத்தாலேயே பலாபலன் உண்டாகும்.

சம்பந்தா சம்பந்தம்—பலா பலன்—பார்வை தீட்சண்யம்— கிரஹ சஞ்சாரம் இவைகளை எல்லாம் விளக்கிவிட்டு, கமலம்மாள் கொடுத்த 'சில்லரை'யைக் கணக்குப் பார்த்து, முடிந்து கொண்டு, ஜோதிடர் குப்பய்யர் வீடு போனார். கமலம்மாள் ஐயர் சொன்ன கணக்கு, பொய்யாகாது; அவர் தான் பலகையிலே இப்படியும் அப்படியுமாக ஏதேதோ கோடு போட்டு, கட்டங்கள் அமைத்து, ஒவ்வொரு கட்டத்துக்குள்ளேயும், ஒவ்வொரு கிரஹத்தை அடைத்துக் கணக்குப் பார்த்துச் சொன்னாரே என்று எண்ணாமலிருக்க முடியுமா? மேலும் அவளுக்கு அஷ்டமத்தில் சனி; அங்காரக நிலை; சூரியனுடைய பார்வை என்பன போன்றவைகள் விளங்கவில்லை என்றாலும், மூணும் மூணும் ஆறுபோல, மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்தால் இரத்த நிறம் என்பது போல, என்று புரியக்கூடியதைச் சொன்னாரே. ஐயர். அதனால் அவருடைய வாக்கு, பொய்யாகாது என்ற திடமான நம்பிக்கை ஏற்பட்டது. ஏனோ எப்படியோ, அவளுக்குத் தெரியாது—குருவி எடுத்துக் கொடுத்த ஏடு, ஐயர் சொன்னதற்கு நேர் மாறாக இருந்தது. அதுபற்றி அவளுக்குச் சற்றுக் கவலைதான்—பயமுங்கூட. குருவி எடுத்துக் கொடுத்த காகிதத்தில்.

"சனியவன் கோபத்தாலே மேலிடம் சென்றதாலே சளி ஜுரம் ஏறும், மாறும்-சூரியன் ஆணையாலே." என்று இருந்தது.

குருவி சனிமீது குற்றம் சாட்டிற்று; குப்பய்யர் சூரியன் மீது பழியைப் போட்டார். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, 'கமலம்மாள்' தன் கணவனின் 'கால்மாட்டில்' உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

சின்னப்பனுக்கு, முறைஜுரம்—ஒரு சமயம், 'இப்பவோ பின்னையோ' என்று எண்ணக்கூடியபடி இருந்தது. வேறு சில சமயத்திலே, 'பரவாயில்லை, முகத்திலே தெளிவு வந்துவிட்டது—வாய்க்கசப்பும் சற்றுக் குறைவுதான்' என்று கூறக்கூடிய விதத்திலே இருந்தது. என்றாலும், சின்னப்பனுக்கு என்னமோ, நண்பர்கள் சொன்ன நல்வாக்கு, குப்பய்யர் சொன்ன கிரஹக்கணக்கு எதுவும் திருப்தியோ நம்பிக்கையோ தரவில்லை. ஜோதிடத்திலே, அவனுக்கு நம்பிக்கை இல்லை; சு. ம. என்பதல்ல பொருள். நோன்பு பூஜைகளைத் துளியும் தவறாதபடி செய்பவன்தான். ஆனால், குப்பய்யர் போட்டுக் காட்டிய கணக்குச் சரியல்ல என்பது அவன் எண்ணம். அந்தக் கணக்கு மட்டுந்தானா? இதோ மற்றொன்று! !

மாலையிலே ஆறு மணிக்கு 101
இரவு எட்டுக்கு 103
இரவு பத்து மணிக்கு 102
காலையிலே எட்டு மணிக்கு 101
காலையிலே பனிரண்டுக்கு 104
பிற்பகல் மூன்று மணிக்கு 103
பிற்பகல் நாலு மணிக்கு 102

டாக்டர் சுதர்சன், இப்படி ஒவ்வொரு தினமும் கணக்கெடுக்கச் செய்து, பார்த்து வந்தார். ஜூரம் எந்தெந்த நேரத்தில், எவ்வளவு எவ்வளவு 'டிகிரி' அதிகமாகிறது,எப்பொது குறைகிறது என்று பார்க்க. இந்தக் கணக்கை ஆதாரமாகக் கொண்டு, டாக்டர் சுதர்சன், ஜுரம் காலையிலே தொடங்கி, பகலெல்லாம் வளர்ந்து, மாலையிலே குறைவதுபோல் காட்டி, இரவு ஜுரம் ஏறி, பிறகு படிப்படியாகக் குறைகிறது என்று கூறினார். இந்த விவரத்தை, ஏதோ ஒரு பெயருக்குள் அடக்கி, வைத்ய சாஸ்திர முறைப்படி கூறினார். அவருடைய கணக்கு முறையும் தவறல்ல. ஆனால் சின்னப்பனுக்கு, அவர் கூறிய கணக்கும் சரியல்ல என்று தோன்றிற்று. டாக்டர் சுதர்சனுக்கு ஊரிலே மிக நல்ல பெயர்!

சின்னப்பன், ஜோதிடக் கணக்கு, வைத்தியக் கணக்கு இரண்டையும், தன்னுடைய நோய்க்கு விளக்கம் தரக்கூடியன அல்ல என்று தீர்மானமாகக் கருதி, அடிக்கடி, மெல்லிய குரலில் "இதனால் எல்லாம் என்ன ஆகும்! சூரியனும் சனியனும் ஒரே கூண்டிலே வந்தால் என்ன, ஒன்றை ஒன்று விழுங்கினால் என்ன! காலையிலே ஜுரம் ஏறி மாலையிலே குறைந்தால் என்ன! என் வியாதிக்கும், இந்தக் கணக்குகளுக்கும் என்ன சம்பந்தம்? இதனாலெல்லாம் ஒன்றும் இல்லை" என்று கூறுவான்.

"நிலத்தின் விலை குறைகிறதாமே? உண்மைதான்'— சேட்ராம்வால் தன் கடை மானேஜரைக் கேட்டார். மானேஜர் மதுசூனர், "ஆமாம்," என்று சுருக்கமாகப் பதிலளித்தார்.

"சின்னப்பன் சேரவேண்டிய தொகை எவ்வளவு? சேட் கேட்கிறார்.

சேட்டிடம், மானேஜர், சின்னப்பன் சேரவேண்டிய பாக்கித் தொகையைக் குறித்துத் தருகிறார்.

சேட், அந்தக் கணக்கை வாங்கிப் பார்த்துவிட்டு,

"ஏக்கர், அயன், என்ன விலைதான் விற்கிறது இப்போது?" என்று கேட்க, மானேஜர், “இரண்டாயிரத்துக்கும் குறைவுதான்" என்று பதிலளிக்கிறார்.

"இரண்டாயிரம் என்று வைத்துக் கொண்டாலும், அவனுக்கு இருப்பது நாலரை ஏக்கர்!-சேட் ஆயாசத்தோடு பேசுகிறார். 'ஆமாம்; பத்தாயிரத்துக்கும் போகாது' என்று பயம் காட்டுகிறார் மானேஜர். சேட், மறுபடியும் ஒரு முறை, மானேஜர் தந்த கணக்குக் குறிப்பைப் பார்க்கிறார்— துண்டுக் கடிதத்திலே இருக்கிறது சூரியனுடைய பார்வை, சனியின் இடமாற்றம், தெர்மாமீட்டர் சகலமும். ஆனால் விவரமாக அல்ல, சுருக்கமாக 16000! சேட், மானேஜரைப் பார்க்கிறார்— மானேஜர் சேட்டைப் பார்க்கிறார்! இந்தக் கணக்கை, ஜோதிடரோ, வைத்தியரோ, பார்க்கவில்லை. சின்னப்பன் கண்முன் சதா இந்தக் கணக்குத்தான் தெரிகிறது. ஐயர், சூரியனிடம் வம்புக்குப் போகிறார். காய் கதிரோன் என்ன செய்வான். கடன் பட்ட நெஞ்சம் கனலைக் கொண்டுவிட்டது!

கடன் கணக்கு கொடுத்த கவலையே, சின்னப்பனின் காய்ச்சலுக்குக் காரணம். இதனை அவன் அறிவான்— ஆனால் காரணம் என்ன என்பதைக் கண்டறியப் பணி புரிந்த ஜோதிடரும், வைத்தியரும் இதை அறியவில்லை

அவர்கள் சூரியனிடமும் தெர்மா மீட்டரிடமும், காரணம் காட்டும்படி கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஜோதிடர் சொன்னபடி ஒரு மண்டலம் விளக்கு வைக்க வேண்டுமெனக் கமலம்மாள் கூறினாள். "பைத்யம், கமலு! இதனாலே எல்லாம் ஒண்ணுமில்லே!" என்று கூறினான், சின்னப்பன்— விளக்கு ஏற்றவிடவில்லை.

இந்த ஜுரத்துக்கு முக்கியமான மருந்து, "சாத்துக்குடி ஜுஸ்— அதை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகச் சாப்பிடுகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது"— டாக்டர் கூறினார். "பைத்யம் கமலு உனக்கு! அந்த டாக்டர், அதற்கு மேல் ஒரு பைத்யம்! இதனாலே எல்லாம் ஒன்றுமில்லை. விஷயம் தெரியாமல், நீங்கள் ஆளுக்கொரு தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டு கிடக்கிறீர்கள். சூரியன் பார்க்கிறானாம்; சனியன் மாறுகிறானாம் - பைத்யம்! இதனாலே எல்லாம் என்ன வரப் போகுது!" என்று சின்னப்பன் கூறினான்; பழரசம் சாப்பிட மறுத்தான்.

ஜுரம், திடீரென்று ஒரு நாள் குறையலாயிற்று. வேக வேகமாகக் குறைந்து, அடியோடு காய்ச்சல் நின்றுவிட்டது. வாய் கசப்பு ஆச்சரியகரமான முறையிலே மாறி விட்டது. சின்னப்பன் முகத்திலே நோய்க் குறியே போய்விட்டது.

குப்பய்யர் சூரியனுடைய தீட்சணியப் பார்வை குறையப் பதினைந்து நாட்கள் பிடிக்கும் என்றாரே, அந்தக் காலத்துக்கு முன்னதாகவே!! டாக்டர் கூறிய 'சாத்துக்குடி ஜுஸ்' சாப்பிடாமலிருக்கும்போதே!

ஒரு புதிய ஜோதிடர், ஒரு புதிய வைத்தியர், இந்த ஆச்சரியமான மாறுதலுக்குக் காரணம்.

"சுட்டுப்பட்டி ஜெமீன்தார், நம்ம ஊர் பக்கத்திலே நிலம் பார்க்கிறார்.— நோய் நிலை அறிய வந்த நண்பன் கூறினான் சின்னப்பனிடம்.

"சுட்டுப்பட்டியாரா!"— சற்று ஆயாசத்தோடுதான் கேட்டான் சின்னப்பன்.

"ஏக்கர் ஐந்து, ஆறு ஆயிரம் என்றாலும், முடித்துக் கொள்ள உத்தேசமாம், நண்பன் சொன்னான்."

"நம்ம நாலரையைத் தள்ளிவிட்டு விடுங்களேன்"— நோயாளி கூறினான்.

"ஒரே சதுரந்தானே!—நண்பன் கேட்டான்.

"ஆமாம்— ஒரே சதுரம்— நல்ல பாய்ச்சல்— ஆத்துக் கால் — இருபோகம்— தங்கம் விளையும்." சின்னப்பன் வர்ணித்தான்.

"இதுக்கென்ன, கசக்குதோ சுட்டுப்பட்டியாருக்கு. நீ சும்மா இரு. நான், முப்பதுக்கு முடித்துவிடுகிறேன்."— என்று நண்பன் வாக்களித்தான். அதன்படியே செய்தும் முடித்தான். சேட்டின் கடனைத் தீர்த்துவிட்டு, மற்றதைப் பாங்கியில் போட்டான் சின்னப்பன். பாங்கிப் 'ப்யூன்' கொண்டு வந்த ரசீது புத்தகத்திலே, சின்னப்பன், கரண்ட் அக்கவுண்ட் 14000-00 என்று கணக்குக் குறிக்கப்பட்டிருந்தது. புதிய கணக்கு. சாத்துக்குடிச்சாறு செய்யக் கூடியதைவிட அதிக பலனைச் செய்து காட்டிற்று! சூரியன் தீட்சணியமும், சனியின் இடபேதமும் இதற்குச் சாந்தி செய்ய, விளக்கு வைப்பதுமான சகல காரியமும், அந்த ஒரே ஒரு வரிமூலம் பூர்த்தியாகிவிட்டது.

"குப்பய்யர் அப்போதே பார்த்துச் சொன்னாராம்!" என்று ஊரார் பேசிக் கொள்கிறார்கள்.

"டாக்டர் சுதர்சன், மணிக்கு மணி, ஜுரத்திலே வேக அளவைக் கணக்கெடுத்து, கண்ணுங் கருத்துமாக இருந்து மருந்து கொடுத்தார்— சொஸ்தமாகிவிட்டது— சின்னப்பன் பழையபடி கொழுக்கட்டை போலாகிவிட்டான்" என்றும் ஊர் பேசுகிறது.

"சூரியனுடைய பார்வை எவ்வளவு கெடுதல் செய்தாலும், சனி மட்டும், அஷ்டமத்துக்குப் போகாமலிருந்தால், ஆபத்து வரவே வராது. நம்ம சின்னப்பன் விஷயம் தெரியுமல்லவா!"-குப்பய்யர், பெருமையாகத்தான் பேசிக் கொள்கிறார். சின்னப்பன், இவர்களை மறுத்துப் பேசுவதில்லை— ஆனால் அடிக்கடி மனைவியிடம் மட்டும் "இதனாலே எல்லாம் ஒண்ணுமில்லை கமலம்' என்று கூறுகிறான். அவன் அறிவான், சூரியன் பார்வையால் பலாபலன் ஏதும் ஏற்படவில்லை— சேட்டின் பார்வை ஜுரத்தை ஏறச் செய்தது— சுட்டுப் பட்டியார் பார்வை, ஜுரத்தைக் குறைத்து விட்டது என்ற உண்மையை.


"https://ta.wikisource.org/w/index.php?title=செவ்வாழை/பலாபலன்&oldid=1638687" இலிருந்து மீள்விக்கப்பட்டது