சேக்கிழார்/கல்வி கற்றல்
அக்கால நூல்கள்
பிள்ளைகளே, இப்பொழுது ஊர்களில் நடக்கின்ற பள்ளிக் கூடங்களைப் போன்றவை அக்காலத்தில் இல்லை. நீங்கள் படிக்கின்ற காகிதப் புத்தகங்கள்-அச்சடித்த புத்தகங்கள் அக்காலத்தில் இல்லை. அக்காலத்தில் பனை ஒலைகளே புத்தக ஏடுகள்; பனை ஒலைக்கட்டே புத்தகம். பனை ஓலைகள் இரண்டு முனைகளிலும் நன்றாக வெட்டப் பட்டு இருக்கும். அவ்ற்றின் இரண்டு பக்கங்களிலும் துளையிடப்பட்டு இருக்கும். ஏடு இரண்டு பக்கங் களிலும் கூர்மையான எழுத்தாணி கொண்டு எழுதப் படும். இவ்வாறு எழுதப்பட்ட பல ஏடுகள் கயிற்றில் கோக்கப்பட்டு, மேல் ஒரு மெல்லிய மரப் பலகை யும், கீழ் ஒரு மெல்லிய மரப் lഖങ്ങക്കു அட்டை களைப் போல வைக்கப்பட்டுக் கட்டப்படும். இவ்வாறு கட்டப்பட்டது ஒரு புத்தகமாகும்.
ஒவ்வொரு மாணவரும் இவ்வாறு தாம் படிக்க விரும்பும் நூல்களைப் பனை ஒலைகளில் எழுதித் தான் படிக்க வேண்டும். இஃது எவ்வளவு கடினமான வேலை, பாருங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு நூல்களைத் தயார் செய்து கொள்ள வேண்டி இருந்ததால், பலர் அக்காலத்தில் படித்தவர்களாக இருந்திருத்தல் முடியாது என்று நீங்கள் நினைக்கலாம். உண்மை அப்படி அன்று. அக்காலத்தில் பலர் கல்வி கற்றிருந்தனர். .
அக்காலப் பள்ளிக் கூடங்கள்
அக்காலத்தில் ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவரது வீட்டுத் திண்ணையே பள்ளி. அங்குக் கிராமத்துப் பிள்ளைகள் காலையிலும் மாலையிலும் கூடுவார்கள். ஆசிரியர் முதலில் மணல் மீது எழுத்துகளை எழுதிக் கற்பிப்பார்; பிறகு சொற்களைப் போதிப்பார்; பின்னர் மனப்பாடம் செய்யத் தக்க சிறிய நீதி நூல்களைக் கற்பிப்பார், சொற்களுக்குப் பல பொருள் கூறும் அகராதிகள் மனப்பாடம் செய்யப்படும். இதுவே பழைய காலத்தில் போற்றப்பட்ட கல்வித் திட்டமாகும். தமிழ் மொழியில் உள்ள சொற்கள் - அவற்றின் பொருள் இவ்விரண்டையும் மனப்பாடம் செய்த மாணவர் சுவைபடப் பேசவும் பாடவும் தயாராயினர்.
அக்கால மாணவன்
நிகண்டுகள் மனப்பாடம் செய்து வரும் பொழுதே சிறிய காவியங்கள், புராணங்கள் முதலியன கற்பிக்கப்படும். இத்தகைய கல்வி முறையினால் பழைய தமிழ் மாணவன் பத்து ஆண்டுகட்குள் கவி பாடும் ஆற்றல் பெற்றான்; நன்றாகப்பேசும் வன்மை பெற்றான்; அவனுக்கு நிகண்டுகள் எல்லாம் பாடமாக இருந்தன; திருக்குறள் போன்ற நீதி நூல்கள் மனப்பாடமாகத் தெரியும். அவன் பல நூல்களை மனப்பாடமாகவே ஒப்புவித்தான்.
கல்வியின் சிறப்பு
கல்வி ஒன்றே உலகத்தில் நிலைத்த பெருமையைத் தருவது. செல்வம் நிலை இல்லாதது. அது கள்வரால் கொண்டு செல்லப்படும்; வெள்ளத்தில் அழிந்து விடும்; வேந்தன் சீறின் கவர்ந்து கொள்வான்; எடுக்க எடுக்கக் குறையும். ஆனால் கல்விக்கு இத்தகைய ஆபத்துகள் இல்லை, அது மனிதன் மூளையில் இருப்பது அள்ள அள்ள வளருமே தவிரக் குறையாது. கல்வி கற்ற வனையே அரசன் மரியாதை செய்வான். மன்னனுக்கு அவன் ஊரில்தான் மதிப்புண்டு. ஆனால் கற்றவன் சென்றவிடமெல்லாம் சிறப்புப் பெறுவான். கற்றவன் இழிந்த குலத்தவனாக இருப்பினும் பெருமை அடைவான். பெண்பாற் புலவர்
ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் எல்லா வகுப்பினரும் படித்திருந்தனர்; கவி பாடும் ஆற்றல் பெற்று விளங்கினர். குறவர் மறவர், பாணர் முதலிய வகுப்புப் பெண்களும் சிறந்த பாடல்களைப் பாடினர் ; சேர-சோழ-பாண்டியரால் நன் மதிப்புப் பெற்றனர். பெண் மணிகள் இருவர் செய்யுள் இலக்கண நூல்களைச் செய்தனர் எனின், அக்காலப். பெண்மணிகள் பெற்றிருந்த உயர்ந்த கல்வியை எண்ணிப் பாருங்கள்.
பல தொழிற் புலவர்
நமது நாட்டில் நம் முன்னோர் அறிவுக்காகவே கல்வி கற்றனர். மருத்துவன் தாமோதரனார் என்பவர் ஒரு மருத்துவர். ஆனால் அவ்ர் சிறந்த புலவராக இருந்தார்; அரசர்களிடம் வரிசைகள் பெற்றார். பல வகைத் தானியங்களைக் கடையில் வைத்து விற்று வந்தவர் சாத்தனார் என்ற புலவர். அவர் மணிமேகலை என்னும் காவியத்தைப் பாடினார் : தமிழ் அரசர்களால் நன்கு மதிக்கப் பட்டார். இவ்வாறே கோவூர்க் கிழார் முதலிய வேளாளரும் கல்வி கற்றுப் பெரும் புலவர்களாக விளங்கினர்.
அரசப் புலவர்
நாட்டை ஆளப் பிறந்த அரச மரபினரும் கல்வி கேள்விகளில் சிறந்து இருந்தனர். அது மட்டுமா? அவர்கள் கவிபாடும் சக்தி பெற்றிருந்தனர். சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் நெடுஞ்செழியன் முதலிய முடி மன்னரும் பூதப்பாண்டியன் தேவியார் போன்ற அரச மாதேவியாரும் செய்யுள் செய்து அழியாப் புகழ் பெற்றனர். சிற்றரசர்களும் அவர் தம் ஆண் மக்களும் பெண் மக்களும் அவ்வாறே புலமை பெற்று விளங்கினர்.
சேக்கிழாரும் பள்ளி வாழ்க்கையும்
சேக்கிழாருடைய பெற்றோர் சிறந்த ஒழுக்கம் உடையவர்கள். அவர்கள் அதிகாலையில் எழுந்திருப்பார்கள்; நீராடுவார்கள்; கடவுளைத் துதிப்பார்கள். அதனால் சேக்கிழாரும் ஐந்து வயது முதல் அவர்களுடைய நல்ல பழக்கங்களை மேற்கொள்ளலானார். சேக்கிழாருடைய தகப்பனார் சைவ சமய ஆசாரியர்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்களுடைய அருட் பாடல்களைக் காலையிற் பாடுவது வழக்கம். சிறுவராகிய சேக்கிழார் அப் பாடல்களை ஆவலோடு மனப்பாடம் செய்தார்.
சேக்கிழார் ஐந்து வயது முதல் பள்ளிக்குச் செல்லலானார். அவர் திருநீறு அணியத் தவறுவதில்லை. அவர் தினந்தோறும் தந்தையிடம் பாடம் படிக்கலானார்; பள்ளி ஆசிரியர் முதல் நாள் சொல்லிய பாடங்களை மறுநாள் பிழையின்றி ஒப்புவித்து வந்தார்; ஆசிரியரைக் கண் கண்ட தெய்வமாக வணங்கி வந்தார். சேக்கிழாரிடம் குரு பக்தி, அடக்கம், ஒழுங்கு, உண்மையுடைமை முதலிய நல்ல இயல்புகளைக் கண்ட ஆசிரியர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்; அவரது கூரிய புத்தி நுட்பத்தைப் பார்த்து வியந்தார். அதனால் அவர் தனிப்பட்ட முறையில் சேக்கிழார்க்கு வேறு பல் நூல்களையும் கற்பிக்கலானார்.
தாயாரிடம் பெற்ற கல்வி
சேக்கிழார் தாயார் சிறந்த உத்தமியார். அவர் சிறந்த ஒழுக்கமும் சிவ பக்தியும் உடையவர். அந்த அம்மையார் சைவ சமய ஆசாரியர்களுடைய வரலாறுகளைச் சேக்கிழார்க்குச் சிறு கதைகள் போலச் சொல்லி வந்தார். அக்கதைகள் சேக்கிழார்க்குச் சைவ சமயத்தில் அழுத்தமான பக்தியை உண்டாக்கின : அப்பெரியார்களுடைய பாடல்களை மனப்பாடம் செய்வதில் ஊக்கத்தை உண்டாக்கின. ஆகவே, அவர்தம் ஒய்வு நேரங்க்ளில் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் முதலிய நால்வர் பாடல்களையும் மனனம் பண்ணலானார் ; அவற்றை இராகத்துடன் பாடவும் பழகிக் கொண்டார்.
புராணம் பாட விருப்பம்
சேக்கிழார் சைவ சமய ஆசாரியர் பாடல்களை நன்றாகப் பாடுவதைக் கண்ட பெற்றோரும் ஆசிரி 'யரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். அவர் மிகுந்த அறிவு நுட்பம் வாய்ந்தவர். ஆதலால் திருக்குறள் "முழுவதையும் மனப்பாடம் செய்துவிட்டார். இவ்வாறு சேக்கிழார் பல நூல்களையும் நன்றாகப் படித்து வந்தார். அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நாயன்மார் வரலாறுகளை ஒரு நூலாகப் பாட வேண்டும் என்று எண்ணினார். அந்தச் சிறுவயதில் தோன்றிய எண்ணமே அவரை இறுதியாகப் பெரிய புராணம் பாடச் செய்தது.