சேக்கிழார்/சேக்கிழார் பிறப்பு

3. சேக்கிழார் பிறப்பு

தொண்டை மண்டல வேளாளர்

சேக்கிழார் வேளாளர் மரபினர். குன்றத்துனர் முதலிய தொண்டை நாட்டு ஊர்களில் இருந்த வேளாளர் தொண்டை மண்டல வேளாளர்: எனப்பட்டனர். அவர்கள் கரிகாலனால் தொண்டை நாட்டிற் குடியேற்றப் பட்டவர்கள். அவர்கள் தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களில் தங்கி வாழ்ந்தார்கள்; காடுகளை அழித்து விளை நிலங்களாகத் திருத்தினார்கள்; ஏறக்குறையக் கரிகாலன் காலம் முதல் சேக்கிழார் காலம் வரை தொண்டை நாட்டை நன்னிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

குடிப் பெயர்கள்

‘கிழார்’ என்பது வேளாளர்க்கு வழங்கிய பொதுப் பெயர். தொண்டை மண்டல வேளாளருள் பல குடிகள் இருந்தன. அக்குடிப் பெயர்கள் அவர்கள் குடியேறிய ஊர்களைக் கொண்டும் வழிபட்ட கடவுளர் பெயர்களைக் கொண்டும் பிறவற்றைக் கொண்டும் அமைந்திருந்தன. குளப்பாக்கம் என்ற ஊரிற் குடியேறிய முதல் வேளாள மரபினர் 'குளப்பாக்கக் கிழார் மரபினர்’ என்று பெயர் பெற்றனர். கூடலூர் என்ற ஊரில் குடியேறிய முதல் வேளாள மரபினர் 'கூடல் கிழார்க் குடியினர்' எனப்பட்டனர். இவ்வாறு இடம் பற்றி வந்த குடிப் பெயர்கள் பல.

சேக்கிழார் குடி

ஆனால், சேக்கிழார் குடி இடம் பற்றி வந்தது அன்று. அஃது இரண்டு வகை பற்றி வந்திருக்கலாம். (1) சே - எருது; கிழான் - உரிமை உடையவன்; அஃதாவது எருதினை உரிமையாகக் கொண்டவன் (சிவன்) என்று சிவ பெருமானுக்குப் பெயராகும். அப்பெயரைக் கொண்ட வேளாள முதல்வன் சந்ததியார் ‘சேக்கிழார் குடியினர்’ என்று அழைக்கப் பட்டிருக்கலாம். (2) சேக்கிழான் என்பது எருதினைப் பயிர்த் தொழிலுக்கு உரிமையாகக் கொண்ட வேளாளன் என்றும் பொருள் படும். ஆனால் இப் பொருளை விட முன் சொன்ன பொருளே பொருத்தம் உடையது.

சேக்கிழார் குடியினர்

சேக்கிழார் குடியினர் பொதுவாகத் தொண்டை நாடு முழுவதிலும் பரவி இருந்தனர். வேளாளர் தமிழ் நாட்டில் அரசருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள்; பழைய சேர - சோழ - பாண்டியருக்குப் பெண் கொடுத்துச் சம்பந்தம் செய்து வந்த குடியினர். ஆதலால் அவர்கள் நீண்ட காலமாக நாட்டு அரசியலில் பங்கு கொண்டு இருந்தனர்; அவர்கள் கல்வி கேள்விகளிலும் அரசியல் காரியங்களிலும் வழி வழியாகவே சிறந்திருந்தனர்.

இங்ஙனம் சிறந்த வேளாளருட் சேக்கிழார் குடியினர் முதல் வரிசையில் இருந்தனர். அவர்கள் பல்லவர்க்குப் பின் வந்த சோழர் ஆட்சியில் உயர்ந்த உத்தியோகங்களைப் பெற்றுச் சிறந்த நிலையில் வாழ்ந்தனர். நமது சேக்கிழார்க்கு முன்னரே அக்குடியினர் பலர் மாநிலத் தலைவர்களாகவும் பெரிய அரசியல் உத்தியோகஸ்தர்களாகவும் இருந்தார்கள் என்பது,

1. மணலிற் கோட்டத்து மேலப்பழுவூர் - சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் சங்கர நாராயணன்

2. மேலுார்க் கோட்டத்துக் காவனூர் - சோழ முத்தரையன் எனப்பட்ட சேக்கிழான் சத்தி மலையன்

3. புலியூர்க் கோட்டத்துக் குன்றத்துரர்ச் சேக்கிழான் ஆடவல்லான்

என வரும் கல்வெட்டுக்குறிப்புகளால் அறியலாம்.

‘சோழ முத்தரையன்’ என்பது சோழ அரசாங்க அதிகாரிகட்கு வழங்கப்பட்ட பட்டம் ஆகும். சேனைத் தலைவர், மாநிலத் தலைவர், அமைச்சர் இவர்கட்கே இப்பட்டம் பெரும்பாலும் வழங்கப்பட்டு வந்தது.

குன்றத்தூர்ச் சேக்கிழார் குடியினர்

குன்றத்தூரில் தங்கி இருந்த சேக்கிழார் குடியினர் நமது சேக்கிழார் கால முதலே அரசாங்கத்தில் சிறப்புப் பெறலாயினர். நமது சேக்கிழார்க்கும் பிறகு அவர் தம்பியார்- பாலறாவாயர் முதலிய பலர் சிறந்த பதவிகளில் இருந்து சிறப்புப் பெற்றனர்.

சேக்கிழார் பிறப்பு

நமது சேக்கிழார் கி. பி. பதினோராம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் சிறந்த சிவ பக்தர்கள்; கல்வி கேள்விகளில் வல்லவர்கள்; நல்ல ஒழுக்கம் உடையவர்கள். அவர்கட்கு நெடுநாளாகப் பிள்ளை இல்லாமல் இருந்தது. அதனால் அவர்கள் தம் வழிபடு கடவுளாகிய சிவபெருமானை உருக்கத்தோடு வேண்டி வரம் கிடந்தனர்; பல தலங்கட்குச் சென்று தொழுது வந்தனர் ; பல தீர்த்தங்களில் நீராடினர். பின்னர் இறைவன் திருவருளால் அவர்கட்கு நமது சேக்கிழார் பிறந்தார். பெற்றோர் அந்த ஆண் குழந்தைக்கு அருள்மொழித் தேவர் என்று பெயரிட்டனர். அருள்மொழித் தேவர் என்பது சிவபெருமான் பெயர்களில் ஒன்றாகும். பிள்ளை வளர்ப்பு

பெற்றோர் இருவரும், வறியவன் தனக்குக் கிடைத்த செல்வத்தைப் பாதுகாப்பது போல, மிகுந்த கவலையுடன் குழந்தையை வளர்க்கலாயினர். குழந்தை நல்ல உடல் அமைப்பும் அழகும் கொண்டு வளர்ந்து வந்தது. பெற்றோர் அதனை நாளும் சீராட்டிப் பாராட்டி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வள்ர்த்து வந்தன்ர். இரண்டு மூன்று ஆண்டுகட்குப் பிறகு, மற்றோர் ஆண் மகவும் பிறந்தது. பெற்றோர் அதற்குப் பாலறாவாயர் என்று பெயரிட்டனர். அது ஞானசம்பந்தர் பெயர்களில் ஒன்றாகும்.