சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்)/சேக்கிழார் தல யாத்திரை
7.சேக்கிழார் தல யாத்திரை
முன்னுரை. சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தில் அப்பர். சம்பந்தர். சுந்தரர் செய்த தல யாத்திரை விவரங்களும் நாயன்மார் பிறந்த பதிகளைப் பற்றிய விவரங்களும், ஒவ்வொரு பதியின் அமைப்பு, இயற்கை வளம் முதலியனவும். நன்கு விளக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இன்றளவும் உண்மையாக இருத்தலைக் காண, சேக்கிழார் நாயன்மார் சம்பந்தப்பட்ட பதிகளையும் சிவத் தலங்களையும் பிற இடங்களையும் நேரிற் சென்று கண்டவராவர் என்பது தெள்ளிதிற் புலனாகும். அவர் அமைச்சரான பிறகே இத்தகைய யாத்திரை எளிதாக இருந்திருத்தல் கூடும், அமைச்சர் தமது ஆணைககு உட்பட்ட நாடு'முழுவதும் சுற்றிப் பார்க்கக் கடமைப்பட்டவராவர். அங்ங்னம் சுற்றுகையில், இயல் பாகவே சைவப் பிறப்பும் சைவ சமயப் பற்றும் பேரளவுகொண்டு, திருமுறைகளை நன்கு பயின்ற சிறந்த இலக்கண - இலக்கியப் புலவரான சேக்கிழார், நாயன் மாருடன் தொடர்பு கொண்ட பதிகளையும் இடங்களையும் அவர்களுடைய யாத்திரை வழிகளையும் பிற செய்தி களையும் மிகவும் நுட்பமாகக் கண்டும் ஆங்காங்கு இருந்த வல்லார்வாய்க்கேட்டும் குறிப்புகள் தொகுத்திருத்தல் வேண்டும் என்று நினைத்தல் பொருத்தமே ஆகும். இங்ங்னம் சேக்கிழார் தல யாத்திரை செய்து, போதிய செய்திகள் அனைத்தும் தொகுத்த பின்னரே பெரிய புராணம் பாடியிருத்தல் வேண்டும். இவ்வாறு சேக்கிழார் தல யாத்திரை செய்தனர். என்பதைப் பல சான்றுகள் கொண்டு காட்டலாமாயினும் இடமஞ்சிச் சில காட்டுவோம். உடுப்பூரிலிருந்து காளத்திவரை. கண்ணப்பரது வரலாற்றைக் கூறிய முன்னூல் ஆசிரியர்கள் கூறாது விட்ட உடுப்பூர் வருணனை,வேடச்சேரி வருணனை, உடுப்பூர்க்கும் காளத்திக்கும் இடைப்பட்ட நில அமைப்பு, மலைத்தொடர் வருணனை முதலிய விவரங்கள் இன்றளவும் ஒத்திருத்தல் வியப்பினை ஊட்டுவதாகும். அவ்விடங்களை நேரிற்சென்று கண்டு, சைவத் திருவாளர் இராவ்பகதூர் சி.எம். இராமச்சந்திர செட்டியார் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையும் கடப்பை, சித்துர் மாவட்டங்களின் விளக்க (District Manuals & Gazetteers) காணப்படும் விவரங்களும் சேக்கிழார் கூற்றோடு ஒத்திருத்தல் படித்து இன்புறத்தக்கது.
அப்பரது தொண்டைநாட்டு யாத்திரை. அப்பர் தொண்டை நாட்டு யாத்திரை செய்யும்பொழுது திருவாலங்காடு பணிந்தார். பிறகு பல பதிகளையும் நெடுங்கிரிகளையும் படர்வனங்களையும் கடந்து, காரிக்கரை அடைந்தார்: அங்கிருந்து காளத்தி சென்றார் என்பது சேக்கிழார் கூற்று. காரிக்கரை என்பது இக்காலத்தில் இராமகிரி என வழங்குகிறது. அங்கு இராமகிரி என்ற மலையும் அதன் அடிவாரத்தில் சிறிய சிவன் கோவிலும் உண்டு. அக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளால் அவ்விடத்திற்குக் காரிக்கரை என்பது பழைய பெயர் என்பது தெரிகிறது. திருவாலங்காட்டிற்கும் காரிக்கரைக்கும். இடையில் மலைகளும் காடுகுளும், இவற்றை அடுத்துப் பல ஊர்களும் இருத்தலை இன்றும் காணலாம் சென்னையிலிருந்து நகரி-நாகலாபுரம் செல்லும் பேருந்தில் பிரயாணம் செய்பவர் காரிக் கரையில் இறங்கலாம்: வழிநெடுகவுள்ள குறிஞ்சி நிலக் காட்சிகளைக் கண்டு. செல்லலாம். அங்ங்னமே காளத்திவரை பேருந்தில் யாத்திரை செய்யின் அவ்வழி அமைப்பும் வழி நெடுகவுள்ள காட்சிகளும் சேக்கிழார் கூற்றோடு பெரும்பாலும் ஒத்திருத்தலைக் காணலாம். "சேக்கிழார் கூறியுள்ள யாத்திரை வழி அவர் காலத்திருந்த வழியாகும். ஆனால், அவ்வழியே ஏறத்தாழ, கி.பி.7ஆம் நூற்றாண்டில் அப்பர் கால்த்திலும் இருந்ததெனக் கோடலில் தவறில்லை.'வடுக வழி மேற்கு, வடுக வழி கிழக்கு' என்ற பெரிய பாதைகள் தமிழ் நாட்டிற்கும் ஆந்திர நாட்டிற்கும் தொடர்பை உண்டாக்கி இருந்தன. அப்பர் போன்ற யாத்திரிகர்க்குரிய பெருஞ்சாலைக்ள் நாடெங்கும் இருந்திருத்தல் வேண்டும் என்பது 7,8ஆம் நூற்றாண்டுகளிற் செய்யப்பட்ட நூல்களைக் கொண்டும் ஊகிக்கலாம்.”
3.திருக்குறிப்புத் தொண்டர் புராணத்திற் கூறப் பட்டுள்ள குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் திணைகளைப்பெற்ற தொண்டை நாட்டு வருணனை கூர்ந்து கவனிக்கத் தக்கது. குறஞ்சியும் முல்லையும் மயங்குதல், முல்லையும், மருதமும் மயங்குதல், குறிஞ்சியும் நெய்தலும் மயங்குதல் போன்ற திணைமயக்க வகைகள், ஒவ்வொரு நிலத்திலும் அமைந்துள்ள சிறப்புடைய கோவில்கள், ஊர்கள். அவ்வூர்களைப்பற்றிய வரலாற்றுச். செய்திகள் முதலியன ஏறக்குறைய 46 செய்யுட்களில் விளக்கப்பட்டுள்ளன. காட்டுப்பாடி, மகாபலிபுரம், திருமுல்லைவாயில் போன்ற இடங்களை நேரிற் கண்டவர் இவ்வருணனையைப் படிப்பாராயின், சேக்கிழார் தொண்டை நாடு முழுவதும் நன்கு சுற்றி மூலை முடுக்குகளையும் கவனித்த நில அமைப்பு நிபுணர் என்பதை, எளிதில் அறிதல் கூடும். சம்பந்தர் யாத்திரை. அப்பர், சம்பந்தா.சுந்தரருடைய தல யாத்திரைகளைக் குறிக்கும் இடங்களில், ‘இவர் இன்ன வூரில் உள்ள கோவிலைப் பணிந்த பிறகு இன்ன வழியே சென்று இன்னவூர்க் கோவிலை அடைந்து பதிகம் பாடினார்: பிறகு இன்ன இன்ன கோவில்களைத் தரிசித்து இன்ன பதியை அடைந்தார்’ என்று சேக்கிழார் கூறியுள்ளார். அந்தந்த யாத்திரையில் கூறப்படும் தல முறைவைப்பு ஊன்றி நோக்கத்தக்கது.அஃது இன்றளவும் ஒத்திருத்தலைக் காணக் காண, அவ்விடங்களை எல்லாம் காணச்சேக்கிழார் மேற்கொண்ட உழைப்பை எண்ணி எண்ணி நாம் மகிழவேண்டுபவராகிறோம். சான்றாகச் சில குறிப்புகளைக் காண்க.
1.தலையாலங்காடு என்பது திருவாரூர்க்கு வடக்கே எட்டுக்கல் தொலைவில் இருக்கும் சிவத்தலமாகும். அங்கிருந்து திருவாரூர்க்கு வரும் பெருவழியில் பெருவேளூர், சாத்தங்குடி, கரவீரம், விளமர் என்ற தலங்கள் இருக்கின்றன. சம்பந்தர் தமது யாத்திரையில் இத்தலங்களை முறையே சென்று தரிசித்துத் திருவாரூரை அடைந்தார் என்று சேக்கிழார் செப்பியிருத்தல் உண்மைக்கு எத்துணைப் பொருத்தமாக உள்ளது என்பது கவனிக்கத் தக்கது.
2.சம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து மதுரை சென்ற வழியைக் கூறுதல் கவனிக்கத் தக்கது. அவர் திருமறைக்காட்டிலிருந்து தெற்கு நோக்கிச்சென்று அகத்தியன் பள்ளி, கோடிக்கரை இவற்றைத் தரிசித்து மேற்கு நோக்கிச் சென்று இடும்பாவனம் முதலிய தலங்களைப் பணிந்து முல்லையும் நெய்தலும் கூடிய வழியே சென்று பிரான்மலை முதலியவற்றைப் பாடி, மதுரை அடைந்தார் என்பது - தஞ்சை இராமநாதபுரம், மதுரை மாவட்டப் படங்களைக் கொண்டு கவனித்து இன்புறத் தக்கது. 3. 'சம்பந்தர் பாண்டிய நாட்டிலிருந்து மீண்டு சோழநாட்டு வழியே வருகையில் திருக்களர், பாதாளிச்வரம் இவற்றைப் பணிந்து முள்ளியாற்றைக் கடந்தார், கொள்ளம்பூதூரை அடைந்தார். பின்னர்ப் பல தலங்களைப் பணிந்து திருநள்ளாறு சென்றார். பிறகு தெளிச்சேரி பணிந்தார். அங்கிருந்து திருக்கடவூர் பிரயாணமானார், வழியில் போதிமங்கை என்ற பதியில் புத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்றார்’ என்பது சேக்கிழார் கூற்று. இத்தலங்கள் முறையே தெற்கிலிருநது வடக்கு நோக்கி இருத்தலும், போதி மங்கை இருக்கும் இட அமைப்பும், முள்ளியாற்று நிலையும் பிறவும் இன்றளவும் உண்மையாகக் காண்கின்றன.
தங்கும் தலைமை இடங்கள். 'அப்பர் தமது யாத்திரையில் சில முக்கியமான தலங்களில் தங்கி, அங்கிருந்து நாற்புறங்களிலும் அண்மையில் உள்ள கோவில்களைத் தரிசித்துக்கொண்டு மீட்டும் தாம் தங்கிய தலைமைத் தலத்திற்கே வந்து சேர்ந்தனர். இங்ங்னமே சம்பந்தரும் சுந்தரரும் தமது தல யாத்திரையின்போது பல பதிகளைத் தங்கும் தலைமை இடங்களாகக் கொண்டனர் என்பது சேக்கிழார் கூறும் விவரம் ஆகும். இங்ஙணம் சேக்கிழார் செப்பியுள்ள ஒவ்வொரு தலைமை - இடமும் அதனைச் சுற்றியுள்ளபதிகளும் இன்றளவும் எவ்வித மாறுதலும் இல்லாமல் இருத்தல் கவனித்து மகிழத் தக்கது.
யாத்திரை வழிகள். அப்பர். சம்பந்தர். சுந்தரர் யாத்திரைசெய்த வழிகளைச்சேக்கிழார் குறித்துள்ளார். அப்பர் திருப்பழனத்திலிருந்து காவிரித் தென்கரையே சென்று திருநல்லூரை அடைந்தார். சம்பந்தர் தில்லையிலிருந்து திருமுதுகுன்றம் போகும்பொழுது நிவாநதிக்கரைமீது மேற்கு நோக்கிச் சென்றார் வடகரை மாந்துறை பணிந்து பிற தலங்களையும் தரிசித்தார். பின்னர் மழநாட்டுப் பொன்னி வடகரைமீது போய்த் திருப்பாச்சில் ஆச்சிரமம் அடைந்தார் திருஈங்கோய் மலையைப் பணிந்த பிறகு கொங்குநாட்டு மேற்குப் பகுதி நோக்கிச் சென்றார். சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருடன் சேரநாடு செல்லப் புறப்பட்டு ஆரூரிலிருந்து மேற்குப் பக்கம் சென்றார் காவிரித் தென்கரை வழி போய்ச் சிவபிரான் கோவில்களைப் பணிந்து திருக்கண்டியூரை'அடைந்தார்: வட கரையில் திருவையாறு எதிர்ப்பட்டது.
இங்ஙனம், நாயன்மார் யாத்திரை செய்த ஆற்றின் பெயர்களையும் கரைகளையும், அக்கரைகளில் அவர்கள் தரிசித்த கோவில்களையும், அக்கரைகளின் வழியே அவர்கள் சென்ற நாடுகளையும் சேக்கிழார் மிகவும் தெளிவாகக் கூறியிருத்தலைக் காண, அப்புலவர் பெருமானது தமிழகத்து நில அமைப்பு அறிவு எந்த அளவு தெளிவாக இருந்தது என்பதும், அத்தகைய தெளிந்த அறிவிற்கு அவரது தல யாத்தில்ரையே சிறந்த காரணம் என்பதும் நன்கறியலாம்.
நாயன்மார் பதிகள்
ஆதனுர்:நந்தனார்.ஆதனூரைச் சேர்ந்தவர்.அவரது ஆதனுர் இன்னது என்று சேக்கிழார் குறிக்க வேண்டும். ஆயின் தமிழ் நாட்டில் ஆதனூர்கள் பல சேக்கிழார் காலத்திலேயே இருந்தன என்பது கல்வெட்டுகளாற் புல்னாகின்றது. திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தென் ஆர்க்காடு, தஞ்சாவூர் முதலிய மாவட்டங்களில் ஆதனுர்கள் இருக்கின்றன. நந்தனார் திருப்பணி செய்த திருப்புன்கூருக்குப் பக்கத்திலேயே ஆதனூர் ஒன்று உண்டு. தமது நூலைப் படிப்பவர் இடமறியாது மயங்குவர் என்ற நோக்கத்துடன் சேக்கிழார்,
“கொள்ளிடத்தின் அலைகள் மோதும் இடத்தில் உள்ளது ஆதனூர். அது கொள்ளிடத்தின் வடகரையில் இருக்கின்ற்து. அது மேல்-கானாடு என்ற பெரும் பிரிவைச் சேர்ந்த பகுதியாகும்.”
என்று மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். அவர் நேரே சென்று கண்டிராவிடில், இவ்வளவு தெளிவாக இடங் குறித்தல் இயலுமா?
மிழலை:பெருமிழலைக் குறும்பர் என்ற நாயனார் 'பெருமிழலை என்ற ஊரினர். தமிழ் நாட்டில் இப்பெயர் கொண்ட பதிகள் சில உண்டு. சிறப்பாகச் சுந்தரர் தமது தேவாரத்துள்'மிழலை நாட்டு மிழலை என்றும், 'வெண்ணி நாட்டு மிழலை என்றும் இரு வேறு நாடுகளில் இரு வேறு மிழலைகள் இருத்தலைச் சுட்டியுள்ளார். இவை அனைத்தையும் கவனித்த சேக்கிழார். குறும்பரது பதி 'மிழலை நாட்டில் உள்ள பெருமிழலை' என்று தெளிவாகக் குறித்துச் சென்றனர். மிழலை நாடு என்பது கும்பகேர்ணத்தை அடுத்த நிலப்பகுதி.அங்கு மிழலை என்ற பெயருடன் அழிந்த நிலையில் ஒர் ஊர் இருக்கின்றது. அங்கு அழிந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது. அதன் ஒர் அறையில் வைக்கப்பட்டுள்ள உருவச் சிலைகளில் குறும்ப நாய்னாரது சிலையும் காணப்படுகிறது. இங்ங்னம் குழப்பத்திற்கு இடமாகவுள்ள பதிகளைச் சேக்கிழார் மிகவும் த்ெளிவாகக் கூறியிருத்தலைக் காண, அவர் தமது யாத்திரையிற் கொண்ட பேருழைப்பை நாம் நன்கறியக்கூடுமன்றோ? தஞ்சாவூர்:செருத்துணை நாயனார் என்பவர் பிறந்த பதி தஞ்சாவூர் என்பது. அது மருகல் நாட்டைச் சேர்ந்தது என்று நம்பியாண்டார் நம்பி குறித்தார். 'மருகல் நாடு எந்தப் பெருநாட்டைச் சேர்ந்தது என்ற ஐயம் நூலைப் படிப்பவர்க்கு உண்டாகுமன்றோ? சேக்கிழார் அக்குறையைப் போக்க, “பொன்னி நீர் நாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர்” என்று கூறுமுகத்தான், மருகல் நாடு சோழ நாட்டைச் சேர்ந்தது என்பதைத் தெளியவைத்தார். இம் மருகல் நாட்டின் 'தலைநகரான மருகல், பாடல் பெற்ற 'திருமருகல் என்னும் பழம் பதியாகும். அது நன்னிலம் தாலு காவில் உள்ள ஊராகும். அதற்கு ஐந்து கல் தொலைவில் தஞ்சாவூர் இருக்கின்றது. இஃது இராசராசன் காலத்துத் தலைநகரான தஞ்சாவூரினும் வேறுபட்டதாகும்.
திருப்பெருமங்கலம்: இது கலிக்காம நாயனார் பிறந்த ஊராகும். இதனைச் சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையிற் குறிக்கவில்லை. நம்பியாண்டார் நம்பியும் தமது திருத்தொண்டர் திருவந்தாதியிற் குறிக்கவில்லை. ஆயின், சேக்கிழார் ஒருவரே இவ்வூரின் பெயரையும் இதன் வளத்தையும் விளக்கமாகத் தமது நூலிற் கூறியுள்ளார்.
“சோழ நாட்டில் பொன் கொழிக்கும் காவிரியின் வடகரைக்குக் கிழக்குப் பக்கம் உள்ளது திருப்பெருமங்கலம். அஃது ஆடும் கொடிகளைக் கொண்ட உயர்ந்த மாடங்களையுடைய பெரிய நகரம். அதுவே சோழர் சேனைத் தலைவராய கலிக்காம நாயனார் வாழ்ந்த திருப்பதி.” என்பது சேக்கிழார் வாக்கு. இப்பழம்பதி காவிரி, வடகரைக்குக் கிழக்கே திருப் புன்கூருக்குப் பக்கத்தில் சிற்றுாராக இருக்கின்றது. கஞ்சாறுார். இவ்வூரைப்பற்றிச் சுந்தரரும் நம்பியும் ஒன்றுமே குறிக்கவில்லை. ஆயின், சேக்கிழார் இவ்வூரின் பெயர், வளம் இவைபற்றி ஆறு பாக்களைப் பாடியுள்ளார். “வயற் கரும்பின் கமழ் சாறு கஞ்சாறுர்” என்பது சேக்கிழர்ர் வாக்கு இப்பதி சிகாழியை அடுத்துள்ள ஆனந்த தாண்டவபுரம் என்பது. மானக்கஞ்சாறர் வரலாற்றில் கூறப்பட்ட பஞ்சவடி ஈசர், மாவிரதியார். மானக்கஞ்சாறர், அவர் திருமகளார். இவர்களுடைய உருவச்சிலைகள் அங்குள்ள கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் மேற்கில் கரும்புப் பயிர் செழித்து வளர்கிறது. இக்கரும்பு வளத்தாற்றான் சேக்கிழார், மேற்சொன்ன தொடரைக் குறித்தார் போலும்!
செங்குன்றுார்: விறல்மிண்ட நாயனார் வாழ்ந்த பதி 'செங்குன்றம்' என்பது நம்பி கூற்று அவ்வளவே. அது சேரநாட்டுச் செங்குன்றுாரா? கொங்கு நாட்டுச் செங்குன்றுாரா (திருச்செங்கோடா)? என்று அந்தாதி படிப்போர்க்கு ஐயமுண்ட்ாதல் கூடும். சேக்கிழார், இவ்வையத்தை அறவே அகற்ற விரும்பி சேரநாட்டில் உள்ள பதிகளில் முன் வைத்து எண்ணத்தக்கது. விறல்மிண்டர் பிறந்த செங்குன்றூர் என்று தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். .
இவ்வாறு மயங்கத்தக்க இடங்களை எல்லாம் தெளிவர்கக் கூறிச்சென்ற சேக்கிழார். சிவத்தல அறிவும் தமிழ்நாட்டு அறிவும் நிரம்பப் பெற்றவர். அங்ங்ணம் நிரம்பிய அறிவைப் பெற்றமைக்கு அவர் செய்த தல யாத்திரையே காரணம் என்பன இதுகாறும் கூறிய பல சான்றுகளைக் கொண்டு நன்கு உணரலாம். நாயன்மார் மரபுகள்:நம்பியாண்டார் நம்பி தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் ஏறத்தாழ 35 நாயன்மார்க்கு மரபு குறித்திலர். ஆயின், சேக்கிழார் அவருள் ஏறக்குறைய 27 நாயன்மார்க்கு மரபு குறித்துச் சென்றனர். இஃது அவரால் எங்ங்ணம் இயன்றது? அவர் தமது தல் யாத்திரையில் அந்தந்தத் தலத்தில் வாழ்ந்த வல்லார்வாய்க் கேட்டுணர்ந்த குறிப்புகள் கொண்டே இது கூற முடிந்தது எனக் கோடல் பொருத்தமே ஆகும்.
புதிய செய்திகள்.பதினொரு திருமுறைகளிலும் பிற நூல்களிலும் கூறப்பெறாத பல செய்திகள் பெரிய புராணத்துட் காண்கின்றன. அவற்றுட் சிறப்பாகத் (1) திருநீலகண்டர் இளமை துறந்த வரலாறு, (2) நந்தனார் செய்த திருப்பணிகள், (3) சாக்கியர் காஞ்சியில் சிவனைப் பூசித்து முத்தி பெற்றமை (4) சுந்தரர் - சங்கிலியார் திருமணம் என்பன குறிக்கத் தக்கவை. இத்தகைய செய்திகள் பலவற்றை நோக்கச் சேக்கிழார் தமது தல யாத்திரையின்போது இவற்றைத் தக்கார் வாயிலாகக் கேட்டறிந்தனராதல் வேண்டும் என்று நினைக்க இடமுண்டாகிறது.
சண்டீசப் பதம்.இதனைக் குறிக்கும் கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பத்தைப்பற்றிச் சென்ற பகுதியிற் கூறப்பட்டதன்றோ? இறைவன். உமையம்மை யாருடன் அமர்ந்து, தமது மடித்து ஊன்றிய வலக்காலின் அடியில் சண்டீசரை அமரவைத்து, தாம் சூடியிருந்த கொன்றை மாலையை எடுத்து அவரது முடி மீது சூட்டிச் சண்டீசப் பதம் அருளும் நிலையை உணர்த்தும் இச்சிற்பம் கருத்துன்றிக் கவனிக்கத் தக்கது.இதற்கு வலப்பக்கம் கணநாதர் ஆடிப்பாடிக் களிக்கின்றனர். இடப்பக்கம் பசுக்கள் (வேதங்களின் அறிகுறி) நிற்கின்றன.இச்சிற்பம் சேக்கிழார்க்கு முற்பட்டதென்பது சென்ற பிரிவில் விளக்கப்பட்டது. இம்மூன்று நிலைகளையும் ஒருங்கே பெற்ற சண்டீசப்பதச் சிற்பம் ஒரு பக்கமும், சண்டீசப் பதத்தை விளக்கும் சேக்கிழார் பாக்களை ஒரு பக்கமும் வைத்துப் பார்ப்பது நல்லது.
"அண்டர் பிரானும் தொண்டரதமக் கதிய னாக்கி, 'அனைத்து நாம் உண்ட கவமும் உடுப்பனவும் சூடு வனவும் உனக்காகச் சண்கசனுமார் பதிந்தத்தோம்'என்றங் கவர்பொர் தடமுடிக்குதி துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்.
"எல்லா வுலகும் ஆர்பெடுப்ப எங்கும் மலாமா ரிகள் பொழியப் பல்லா விரவர் கணநாதர் பாடி ஆடிக் கணிபயிலச் சொல்லார் மதைகள் துதிசெய்யச் சூழ்பல் லியங்கள் எழச்சைவ நல்லா(று) உங்க தாயகமார் தங்கள் பெருமான் தொழுதணைந்தார்.
முதற் செய்யுள், இறைவன் சண்டீசர் முடியில் கொன்றை மாலை சூட்டுவதைக் குறிப்பது. இரண்டாம் செய்யுள் சண்டீசப்பதம் கண்ட உலகத்து உயிர்கள் நிலையை விளக்குவது: (1) எல்லா உலகத்தாரும் ஆரவாரித்து, மலர்மாரி பொழிந்தனர்; (2) கணநாதர் பாடி ஆடிக்களித்தனர்; (3) மறைகள் துதி செய்தன (4) பல்லியங்கள் ஒலித்தன. இவற்றுள் கணநாதர் கூத்தும் மறைகளும் (பசுக்கள் வடிவில்) சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன.
இராசேந்திரன் காலமுதல் சோழப் பேரரசு வீழ்ச்சியடையும் வரை, சோழர் தலைநகரமாக இருந்த சிறப்பு கங்கை கொண்ட சோழபுரத்திற்கே உண்டு. ஆதலின், சேக்கிழார் காலத்திலும் அதுவே தலைநகரமாக இருந்தது என்பது தெளிவு. சோழர் முதல் அமைச்சராக இருந்த சேக்கிழார். நாளும் இக்கங்கை கொண்ட சோழிச்சரத்தைத் தரிசித்திருந்தமை இயல்பே. அங்குள்ள சண்டீசப்பதச் சிற்பம் அவருடைய கண்ணையும் கருத்தையும் ஈர்த்தது என்பதில் வியப்பில்லை. எனவே, இவர் இச்சிற்பச் சிறப்பை மேற்சொன்ன இரண்டு பாக்களில் சித்தரித்து விட்டார் போலும்!
பழையாறையில் உருவச்சிலைகள். இறைவனது கோவணத்துண்டை ஒரு தட்டில் வைத்து, அதற்கு ஈடாக அமர்நீதியார் தம் செல்வங்களை எல்லாம் மற்றொரு தட்டில் வைத்தும் இரண்டும் சமமாக நிற்கவில்லை. ஆதவின் அவரும் மனைவியரும் இறைவனைத் தொழுது மற்றொரு தட்டில் ஏறினர். இரு தட்டுகளும் நேர்நின்றன என்பது நம்பியாண்டார் நம்பி கூற்று. ஆயின் சேக்கிழார், நாயனாரும் மனைவியாரும் இவர் தம் ஒரே புதல்வருடன் தட்டில் ஏறினர் என்று குறித்தார். சேக்கிழார் கூற்றில் புதிதாகப் 'புத்திரர் சேர்க்கப்பட்டதேன் அங்ங்னம் சேர்க்க காரணம் என்ன?
அமர்நீதி நாயனாரது திருப்பதியாகிய பழையாறையில் உள்ள வடதளியில் - அமர்நீதி நாயனார். அவர் மனைவியார் இவர் தம் உருவச்சிலைகள் உள்ளன. அம்மையார் கைகளில் குழந்தை காண்கிறது. இவை கல் உருவங்கள். இவற்றைத் தவிரச் சேக்கிழார் கூற்றுக்கு வேறு சான்று இருந்ததென்று கூறக்கூடவில்லை. நாயன்மார் வாழ்ந்த இடத்துக் கோவில்களில் அவர் தம் உருவச் சிலைகளை எழுப்பி வழிபடல் பண்டை மரபு என்பது முன்பே குறிக்கப்பட்டதன்றோ? அம்மரபுப்படி பழையாறையில் எழுந்தருளப் பெற்றிருந்த, உருவச்சிலைகளைப் பார்த்தே சேக்கிழார் இப்புதிய செய்தியைச் சேர்த்தனர் என்று கொள்ள வேண்டும். அங்ஙனம் கொண்டால், சேக்கிழார் கேவலம் தலங்களைக் கண்டதோடு திருப்தி கொள்ளாமல், ஒவ்வொரு கோவிலிலும் உள்ள நாயன்மார் உருவச்சிலைகளையும் நன்றாகக் கவனித்துக் குறிப்புகள் தயாரித்தவர் என்பது நன்கு வெளியாகும்.
திருமடங்கள்.இன்னின்ன ஊர்களில் மடங்கள் இருந்தன என்பது திருமுறைகளில் குறிக்கப்படவில்லை. நாயன்மார் காலத்தில் எங்கெங்கு மடங்கள் இருந்தன என்று கூறத்தக்க வேறு நூலும் இல்லை. ஆனால் சேக்கிழார் காலத்தில் தமிழ் நாட்டில் பழையயனவும் புதியனவுமாகப் பல மடங்கள் இருந்தன. திருஆவடுதுறை, திருவதிகை போன்ற சிற்ந்த பதிகளில் பலமடங்கள் இருந்து சைவப்பணி ஆற்றிக் கொண்டு இருந்தன. சாதாரணப் புலவன் இங்ங்னம் விரவி இருந்த பை ழய-புதிய மடங்கள் எல்லாம் நாயன்மார் காலத்தில் இருந்தனவாகக் கொண்டு நூல்பாடி விடுவான். அங்ங்னம் சேக்கிழார் மயங்கிக் கூறியிருப்பினும், அவர் தவறு செய்தார் என்பதைப் பிறர் அறிதலும் அருகை. அங்ங்ணம் இருந்தும், பொறுப்பு வாய்ந்த அப்பெரும் புலவர் எல்லாப் பழைய மடங்களைப் பற்றியும் கூறவில்லை; புதிய மடங்களைப் பற்றியும் கூறவில்லை. அவர் திருவதிகை, சித்தவடம், திருநல்லூர், சிகாழி, திருப்புகலூர், திருக்கடவூர், திருமறைக்காடு, திருப்பூந்துருத்தி, திங்களுர், திருமருகல், திருவாரூர், திருவீழிமிழலை, மதுரை, காஞ்சி, காளத்தி, ஒற்றியூர் முதலிய சில இடங்களிற்றாம் நாயன்மார் காலத்தில் மடங்கள் இருந்தன என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார். இவற்றுள். (1) திருவதிகையில் இருந்து சேக்கிழாராற் குறிக்கப்பட்ட திலகவதியார் திருமடம் இன்று அழிந்த நிலையிற் கிடக்கின்றது. (2) திருப்பூந்துருத்தியில் அப்பரால் அமைக்கப்பட்ட திருமடம் என்று சேக்கிழார் குறித்த மடம் ஒன்று. இன்று இடிந்து காணப்படுகிறது. (3) இவ்வாறே அமர்நீதி நாயனார் திருமடம் என்று சேக்கிழார் குறித்த மடம் ஒன்று திருநல்லூரில் பாழ்பட்டுக் கிடத்தலைக் காணலாம். காஞ்சியில் திருமேற்றளியை அடுத்து மடம் இருந்தது என்று பல்லவர் காலத்துக் கல்வெட்டே குறித்தலை முன்பு கண்டோம் அல்லவா? அங்ஙனமே திருவொற்றியூரிலும் திருமடம் இருந்ததைப் பல்லவர் கல்வெட்டே உறுதிப்படுத்துகிறது. இவற்றை நோக்கக் கல்வெட்டிற் குறிக்கப்படும் சந்தர்ப்பம் பெறாத மேற்சொன்ன மடங்கள் இருந்தில என்று கூறக் கூடுமா? சேக்கிழார் பெருமான் தமது தல யாத்திரையின்போது, 'இன்னின்ன திருமடம் நாயன்மார் காலத்தது என்பதை நன்கு விசாரித்து அறிந்தமையாற்றான் பலவற்றையும் குழப்பிக் கூறாது, தெளிவாக மேற்சொன்ன திருமடங்களை மட்டும் குறித்துப் போந்தார் என்று கொள்வதே அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது.
கோவில்கள். நாயன்மார் காலத்தில் பாடல் பெற்ற கோவில்களாக இருந்தவற்றின் உண்மையான தொகை நமக்குத் தெரியவில்லை. தேவார ஏடுகள் நம்பிக்கு முன்னும் நம்பிக்குப் பின்னும் பல அழிந்து விட்டன. அவ்வளவோ? சேக்கிழார்க்குப் பிறகும் பல பதிகங்கள் ஒழிந்தன என்பது சேக்கிழார் கூற்றாலேயே அறியலாம். போனவை போக, இன்றுள்ள திருமுறைகளைக் கொண்டு காண்கையில், பாடல் பெற்ற கோவில்கள் ஏற்த்தாழ 300 இருந்தன என்பது தெரிகிறது. அவற்றுட் பல.சோழர் காலத்திற் பெருஞ் சிறப்பு அடைந்தன. பல கோவில்கள் புதிய கோபுரங்களைக் கொண்டு விளங்கின. அங்ங்ணம் இருந்தும் சேக்கிழார், 'மதுரைக் கோவில்' திருமுதுகுன்றக் கோவில், காஞ்சிஏகாம்பரநாதர் கோவில்,தில்லைக்கூத்தப்பிரான் கோவில் போன்ற சிலவே நாயன்மார் காலத்திற் கோபுரத்துடன் விளங்கினவை மற்றவை கோபுரம் அற்றவை' என்று தெளிவாகக் கூறியுள்ளது நோக்கத் தக்கது. அவர், 'எல்லாக் கோவில்கட்கும் கோபுரம் உண்டு என்று பாடியிருப்பின், 'அது தவறு' என்று கூறத்தக்கவர் ஒருவரும் இல்லை அல்லவா? அங்ங்னம் இருந்தும், 300 கோவில்களில் ஏற்ககுறைய 30 கோவில்களே கோபுரம் கொண்டனவாக இருந்தன என்று அவர் கூறுதல் - அவரது தலயாத்திரை நுட்பத்தை நமக்கு நன்கு அறிவிக்கும் சான்றாகும்.
முடிவுரை.'தாம் வரையப்புகும் நூலிற் குறிக்கத் தக்க இடங்களைப்பற்றிய செய்திகள் அனைத்தையும் நேரிற் சென்று கண்டு உள்ளவாறு உணர்ந்து வரைதலே சாத்திரீய வரலாற்று ஆசிரியரது சிறப்பியல்பு என்று இன்று மேனாட்டு நிபுணர் குறிக்கும் இலக்கணம், நம் தமிழ்ப் பெரும் புலவராகிய சேக்கிழாரிடம் இன்றைக்கு 800 ஆண்டுகட்கு முன்னரே குடி கொண்டிருந்தது என்பதைக் காட்ட, இதுகாறும் கூறிய ஒவ்வொரு செய்தியும் தக்க சான்றாதல் காணலாம்.