சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்)/பெரிய புராணம் பாடின வரலாறு



6. பெரிய புராணம் பாடின வரலாறு


புராண வரலாறு. ‘சேக்கிழார் புராணம்’ என்ற 'திருத்தொண்டர் புராண வரலாறு' என்ற நூலிற் சேக்கிழார் பெரிய புராணம் பாட நேர்ந்த சந்தர்ப்பத்தைப்பற்றிக் கூறப்படும் செய்தி இதுவாகும்:

சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கனிடம் முதல் அமைச்சராக இருந்தபொழுது, அரசன் சீவக சிந்தாமணி என்ற சமண காவியம் படிக்கக் கேட்டு மகிழ்ந்து வந்தான். அரசன் இங்ஙனம் சமண காவியத்தில் ஈடுபாடு காட்டி மகிழ்வதைச் சேக்கிழார் கண்டு மனம் வருந்தினார். அவர் ஒருநாள் இளவரசனைத் தனியே கண்டு, “ஒழுக்க மற்ற அமணரது காவியம், நம் அரசரை ஒத்த சீவகன் என்பவனது வரலாறு கூறுவதாகும். அதனைப் படிப்பதனாலோ கேட்பதனாலோ அரசர் பெறத்தக்க நன்மை ஒன்றும் இல்லை. அதனை விடுத்து இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாகும் நாயன்மார் வரலாறுகள் கொண்ட சிவகதை படிக்கக் கேட்பது மிகவும் நல்லது” என்று மொழிந்தனர்.

'இம்மொழியை இளவரசன் வாயிலாக உணர்ந்த சோழர் பெருமான் சேக்கிழாரை வரவழைத்து, “நீர் மொழிந்த சிவகதை நவகதையோ? புராணமோ? முன்னுால் உண்டோ? நானிலத்திற் சொன்னவர் யார்? கேட்டவர் யார்? சிவனடியாருள் இன்றும் உயிருடன் இருப்பவர் உளரோ?”. எனப் பலவாறு, நாயன்மார் களைச் சிறிதளவேனும் அறியாத - சோழர் மரபுக்கே முற்றும் புதிய ஒர் அரசன் கேட்பதுபோலக் கேள்விகள் கேட்டான். 72 U. G ॐ ॐ ॰ं {ं च हं

சேக்கிழார், "அறுபத்துமூன்று நாயன்மார் வரலாறுகளை உள்ளடக்கிச் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடியருளினார்: இராசராசன் காலத்து - நம்பியாண்டார் நம்பி அதனை ஓரளவு வகைப்படுத்தி, நாயனார் வரலாறு ஒன்றுக்குச் செய்யுள் ஒன்று வீதம் 'திருத்தொண்டர் திரு அந்தாதி என்று ஒரு நூல் பாடியுள்ளார். அந்நாயன்மார் வரலாறுகள் இம்மைக்கும் மறுமைக்கும் பற்றாவன. அவற்றைக் கேட்பதும். அந்நாயன்மார் வரலாறுகளிற் பொதிந்துள்ள உயரிய கருத்துகளை உணர்ந்து நடப்பதும் நன்மை பயக்கும்.” என்றார். - -

அரசன். 'அஃதாயின், அந்நாயன்மார் வரலாறுகளை நீரே கூறி அருளுக.” என்று வேண்டினான்.சேக்கிழார், தொகை-வகை-திருமுறைகள் இவற்றைத் துணையாகக் கொண்டு, நாயன்மார் வரலாறுகளை விரித்து உரைத்தார். சோழர் பெருமான் கேட்டு வியந்தான் "அமைச்சர் ஏறே, இவ்வியத்தகு அடியார்கள் வரலாறுகளைப் பெரியதோர் புராணமாகப் பாடி முடிக்க நீரே வல்லவர். ஆதலின், அதனைப் பாடியருள்க, என்று கூறி, அவரைத் தில்லைக்கு அனுப்பினான். அவருக்கு வேண்டும் பொருள் வசதி, ஆள்வசதிகளை அளித்தான். -

சேக்கிழார் சிதம்பரம் சென்று கூத்தப் பெருமானைப் பணிந்து, "ஐயனே. பெருமை மிக்க நின் அடியார் வரலாறுகளை மிகச் சிறியேனாகிய யான் எங்ஙனம் கூறவல்லேன் நான் பாட இருக்கும் பெரு நூலுக்கு முதல் தந்து ஆசீர்வதித்து அருளுக” என்று சிற்றம்பலத்தின் முன் திரிகரண சுத்தியாக நின்று வேண்டினார். அப்பொழுது "உலகெலாம்” என்ற தொடர் சேக்கிழார் காதிற்பட்டது. டாக்டர் இராசமாணிக்கனார் ப. 73

அவர் அதனைக் கூத்தப்பிரானது அருள் மொழியாகக்

கொண்டு, புராணம் பாடத் தொடங்கி ஒராண்டில் பாடி


முடித்தார். - -

இவ்வரலாறு பற்றிய ஆராய்ச்சி

சிந்தாமணி. அநபாய சோழன் சீவக சிந்தாமணி என்ற சமண எகாவியத்தைப் படிக்கக் கேட்டுப் பரவச மடைந்தான் என்பது இப்புராணம் மட்டுமே கூறும் செய்தி. இதனை உறுதிப்படுத்த வேறு சான்று இல்லை. அரசன் மெய்யாகவே அந்நூலைப் படிக்கக் கேட்டான் எனினும், அதனால் இழுக்கொன்றும் இல்லை. சிந்தாமணி படிப்பதாலோ - பிறர் படிக்கத் தான் கேட்பதாலோ அரசன் கெட்டுவிடவோ, சமயம் மாறவோ வழியில்லை. மிகச் சிறந்த தலையாய புலவர் பெருமான் என்று மதிக்கத்தக்க சேக்கிழாரே சிந்தாமணியைச் செவ்வை யாகப் படித்தவர் என்பது அவரது பெரிய புராணத்தால் தெளிவாகத் தெரிகிறது. உயர்தரப் புலவர் பெருமக்கள், புலமைபெற எல்லாச் சமயத்தவர் நூல்களையும் படித்தே தீருவர். அவர்கட்குப் புலமை பெரிதே தவிரக் கேவலம் சமய வேறுபாடு பெரிதன்று. அந்த முறையில் சேக்கிழார் சித்தாமணியை நன்றாகப் படித்தவராவர். சிந்தாமணி சோழர் காலத்து முதற் காவிய நூல் ஆகும். பெரிய புராணம் இரண்டாம் காவிய நூலாகும். கம்பராமாயணம் அடுத்துச் செய்யப்பட்ட நூலாகும். சேக்கிழார் சிந்தாமணியை நன்றாய்ப் படித்தார்போலவே, பின்வந்த கம்பர் பெருமான் சிந்தாமணியையும் பெரிய புராணத்தையும் அழுத்தமாகப் படித்தவர் என்பது அவரது இராமாயணம் கொண்டு கூறலாம்.  சேக்கிழார்

இங்ஙனம் சிந்தாமணியைச் செவ்வையாகப் படித்த பழுதற்ற, புலவராகிய சேக்கிழார், அரசனைமட்டும் படிக்கலாகாது என்றோ, படிக்கக் கேட்கலாகாது என்றோ தடுத்தார் என்பது நம்பத்தக்கதன்று. அவர் தடுத்தார்: அந்நூலை இழித்துரைத்தார் என்பது அவரது பெரும் புலமைக்கும் தலைமை அமைச்சர் பதவிக்கும் ஏற்றதாகாது. சிறந்த பெளத்த - சைவ, சமண - சைவ வாதங்களைப் பழுதற்ற சாத்திரீய முறையில் விளக்கமாகப் பாடியுள்ள சேக்கிழார், பெளத்த, சமணச் சார்பான சமய நூல்களை நன்கு கற்ற நவையறு புலவராவர். அப்பெரியார் மீது இத்தகைய சமய வெறுப்புக் குற்றத்தை ஏற்றிக் கூறல் பெருந்தவறு. அக்குற்றம் சேக்கிழார் புராணம் பாடிய

ஆசிரியரையே சாரும்.

அநபாயன் கேள்விகள்.'சிவகதை கேட்டல் நல்லது என்று சேக்கிழார் கூறக்கேட்ட சோழ மன்னன், நாயன்மார் பெயர்களைக்கூட அறியாத பாமரனாக இருந்து, 'நவகதையோ? புராணமோ? முன்னூல் உண்டோ? நானிலத்திற் சொன்னவர் யார்? கேட்டவர் யார்?' எனப் பலவாறு வெளிநாட்டான் ஒருவன் கேட்டாற்போலக் கூறப்படும் வினாக்கள் சோழர் வரலாற்றை அறிந்த அறிஞர் நகைக்கத் தக்கனவாகும். "மெய்யாகவே இக்கேள்விகளை அநபாயன் கேட்டிருத்தல் இயலுமா என்பது இங்கு ஆராயத் தக்கது.

சோழர் சைவ சமயத் தொண்டு. சோழர் சைவ சமயத்தைத் தம் உயிர்போலக் கருதிப் பாதுகாத்து வளர்த்து வந்தவர் என்பது வரலாறு கூறும் உண்மை. சோழப் பேரரசை ஏற்படுத்திய ஆதித்த சோழன் காவிரியின் பிறிப்பிடத்திலிருந்து கடல்புகும் வரை அதன் இருகரைகளிலும் சிவன்கோவில்களைப் புதியனவாகக் கட்டியும், பழையவற்றைப் புதுக்கியும் அழியாப் புகழ் டாக்டர் இராசமாணிக்கனார் 75

பெற்றான். அவன் மகனான பராந்தகக் சோழன் அளப்பரிய சிவப்பணிகள் செய்தான் கூத்தப் பெருமான் அம்பலத்தைப் பொன்மயமாக்கினான். உலகப் புகழ்பெற்ற இராசராசன் செய்த சைவப் பணிகள் அளவிடற் கரியன. நம்பியைக் கொண்டு சைவத் திருமுறைகளை வகுத்து ஒழுங்குபடுத்தியவன் அப்பெருமகன் அல்லனோ? சிறப்புடைய நாயன்மார் உருவச்சிலைகளை எழுப்பி அவற்றுக்குப் பூசை, விழாக்கள் குறைவற நடக்க ஏற்பாடு செய்தவன் அப்பெருந்தகை அல்லனோ? அவன் மகனான பெருவீரன் இராசேந்திரன் கட்டிய கங்கைகொண்ட சோழீச்சரம் வியத்தகு பெருங்கோவில் அல்லவா? தேவார நாயகம் என்ற தேவாரத் திருமுறைகளை வளம்பெற வளர்த்த பேரரசன் இராசேந்திரன் எனின், அவனது சைவச் சமயப் பற்றை என்னெனக் கூறி வியப்பது!

சோழ - சாளுக்கிய மரபில் வந்த முதல் குலோத்துங்கன் பெரிய சிவபக்தன். இவன் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து சிறப்புப் பெற்றவன் தில்லைக் கூத்தப்பிரானைத் தன் குலநாயகமாகக் கொண்டவன். அவன் மகனான விக்கிரம சோழன் அவனினும் சிறந்த சிவபக்தன். அவன் கூத்தப்பிரான் கோவில் முழுவதையும் பொன்மயமாக்க முயன்றவன் சிதம்பரம் கோவிலுக்குத் திருப்பணிகள் பல செய்தவன்.

அவனது அமைச்சனும் தானைத்தலைவனுமான நரலோக வீரன் சிதம்பரத்திலும் திருவதிகையிலும் செய்த திருப்பணிகள் எண்ணிறந்தன. பாராட்டத்தக்கன வியக்கத் தக்கன.

சோழ மாதேவியர் செய்த சைவத் திருப்பணிகள் தாம் எண்ணத் தொலையுமோ? கண்டராதித்தரது மனைவியாரும் இராசராசன் பாட்டியாருமாகிய

செம்பியன் மாதேவியார் கட்டிய புதிய சிவன்கோவில்கள் பல புதுப்பித்த பாடல்பெற்ற கோவில்கள் பல பொன் வெள்ளிப் பாத்திரங்கள் அளிக்கப்பெற்ற கோவில்கள் பல. இராசராசன் தமக்கையாரான குந்தவையார் செய்த அறப்பணிகள் பலவாகும். இராசராசன் மனைவியாரான உலகமகாதேவியார் திருவையாற்றில் கோவில் கட்டிப்புகழ் பெற்றவர். இராசராசன் மகளிர் செய்த திருப்பணிகள் பல. இங்ங்னமே ஒவ்வொரு சோழ அரசன் மனைவியரும் மகளிரும் செய்துள்ள சைவத் திருப்பணிகள் பலவாகும்.

அநபாயன் காலம்: இங்ஙனம் கனவிலும் சிவன் தொண்டை மறவாத சோழர் மரபில் வந்தவன் அநபாயன் கூத்தப்பிரானை நம் குலநாயகம் என்று அழைத்து. அளப்பரிய திருப்பணிகளை அப்பெருமான் கோவிலுக்குச் செய்ய முனைந்த விக்கிரம சோழன் திருமகன் அநபாயன். அவன், தன் தந்தை அரைகுறையாக விட்டுச் சென்ற திருப்பணிகளை முற்றச் செய்து அழியாப் புகழ்பெற்றவன். அவனது சைவப் பற்றைக் குலோத்துங்கன் உலா. இராசராசன் உலா, குலோத்துங்கன் கோவை இவற்றாலும் - எண்ணிறந்த கல்வெட்டுகளாலும் அறியலாம். இராசராசன் காலமுதல் நாயன்மார் உருவச் சிலைகள் ஆங்காங்குப் பேரளவில் எடுப்பித்துப் பூசைகளும் விழாக்களும் நடைபெற்று வந்துள்ளன. அநபாயன் புதுப்பித்த சிதம்பரம் கோவிலிலேயே நரலோகன் விருப்பப்படி திருமுறைகளை ஒத மண்டபம் சமைக்கப்பட்டது. அங்குத் திருமுறைகள் ஒதப்பட்டு வந்தன. அநபாயன் இருந்த சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்துப் பெருங் கோவிலிலேயே சண்டீசர் வரலாறு உணர்த்தும் சிற்பங்கள் இருந்தன. தஞ்சைப் பெரிய கோவிலில் நாயன்மார் உருவச் சிலைகளும் முன் சொன்ன ஒவியங்களும் அழகொழுகக் காட்சி டாக்டர் இராசமாணிக்கனார் 77

அளித்தன. சுருங்கக் கூறின், அநபாயன் காலத்தில் நாடெங்கும் சைவமணம் நன்றாக வீசிக்கொண்டிருந்தது: நாயன்மார் வரலாறுகள், திருமுறைகள், பூசைகள். விழாக்கள், சிற்பங்கள். ஒவியங்கள் இவற்றின் வாயிலாக நன்கு பரவியிருந்தன. இத்தகைய பொற்காலத்தில் - சைவ நன்மரபில் பிறந்து வளர்ந்த அநபாயன், நாயன்மார் வரலாறுகளை அறியாத முழுமூடனாக இருந்தான் என்று சேக்கிழார் புராண ஆசிரியர் கூறியிருத்தல் உண்மைக்கு மாறாகும். இஃது அவ்வாசிரியரது அறியாமையை அறிவிப்பதே அன்றி வேறன்று. சேக்கிழார் பெரிய புராணம் பாடியதற்குக் காரணம் கூறவேண்டும் என்பதற்காக ஆசிரியரே கட்டிச் சொன்ன காரணமாக இது காணப்படுகிறதே தவிர, இக்கூற்றிற் கடுகளவும் உண்மை இருப்பதாக அறிவும் ஆராய்ச்சியும் உடைய பெருமக்கள் கொள்ளார்.

சேக்கிழார் புராண ஆசிரியர் யாவர்?'இங்ஙனம் பொறுப்பற்ற முறையில் புராணம் பாடிய இந்நூலாசிரியர் யாவர்? என்பது நாம் அறியவேண்டும் ஒன்றாகும். (1) திருமுறைகண்ட புராணம், (2) சேக்கிழார் புராணம், (3) திருத்தொண்டர் புராணசாரம், (4) திருப்பதிகக் கோவை, (5) திருப்பதிக் கோவை என்ற ஐந்து நூல்களையும் பாடியவர் உமாபதி சிவாசாரியார் என்பவர் என்பது நாட்பட்ட கொள்கையாகும். இக்கூற்று சில ஏடுகளில் உள்ளது. சில ஏடுகளில் இல்லை. உமாபதி சிவாசாரியார் என்பவர் சிதம்பரத்தைச் சேர்ந்த "கொற்றவன் குடி என்னும் நகரப் பிரிவில் வாழ்ந்தவர் சிறந்த சிவபக்தர். இத்தகைய பெரும் புகழ்பெற்ற சைவப் புலவர் ஒருவர் இந்த ஐந்து நூல்கட்கும் ஆசிரியர் என்பது கூறப்படுகிறது. இதன் உண்மையை இங்கு ஆராய்வோம். 78 சேக்கிழார் .

உமாபதிசிவம் சேக்கிழார் புராண ஆசிரியரா? சேக்கிழார் புராணத்தில் நாயன்மார் அறுபத்துமூவரைப் பற்றிய குறிப்புகள் காண்கின்றன. 'திருத்தொண்டர் புராணசாரம் என்ற நூலிலும் அந் நாயன்மார் வரலாறுகள் சுருக்கமாகத் தரப்பெற்றுள்ளன. (1) முதல் நூலில் பல்லவப் பேரரசரான கழற்சிங்கர், ஐயடிகள் காடவர்கோன் இவர்கள் சிற்றரசர் என்று கூறப்பட்டுள்ளனர். ஆயின் பின் நூலில் இவ்விருவரும் பல்லவப் பேரரசர் என்பது தெளிவாகக் காண்கிறது. (2) பேரரசர் அறுவர் என்று கூறிச் சிற்றரசரான இடங்கழி நாயனாரும் அந்த அறுவரில் ஒருவராகக் குறிக்கப்பட்டனர். (3) இசையில் வல்லவராக நந்தனார் முதலியோரைக் கூறிய ஆசிரியர் சுந்தரரைக் கூறாது விட்டார். இங்ஙனம் சிறந்த பிழைகள் பல சேக்கிழார் புராணத்துட் காண்கின்றன. மேற்சொன்ன இரண்டு நூல்களையும் செய்தவர் ஒருவராயின், இத்தகைய தவறுகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ள கூற்றுகள் நூலில் இடம் பெற முடியுமா? முடியாது. ஆதலின், முன்னூலைப் பாடியவர் வேறு: பின்னூலைப் பாடியவர் வேறு எனக் கொள்ளலே பொருத்தமாகும்.

திருமுறை கண்ட புராணம். நம்பி, இராசராசனைக் கொண்டு திருமுறைகள் தொகுத்த வரலாற்றைக் கூறுவது இப்புராணம். நம்பி, முதல் ஏழு திருமுறைகளைத் தொகுத்தார் என்று கூறி, அவர் மேலுந் திரு வாசகத்தையும் திருக்கோவையாரையும் எட்டாந் திருமுறையாகவும், நம்பிக்கே காலத்தாற் பிற்பட்டவராகக் கருதத்தக்க அடியார் பலர் பாடல்களை ஒன்பதாந் திருமுறையாகவும், அப்பர்சம்பந்தர்க்கே காலத்தால் முற்பட்டவரான திருமூலர் பாடிய திருமந்திரத்தைப் பத்தாந் திருமுறையாகவும், நாயன்மார் டாக்டர் இராசமாணிக்கனார் 79

காலத்தவரும் நம்பி காலத்தவருமான கபிலதேவர், பட்டினத்தார் போன்ற அடியார் பாக்களைப் பதினோராந் திருமுறையாகவும் நம்பி தொகுத்தார் என்று திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. நம்பிக்குப் பிற்பட்டவர் பாக்களை நம்பியே தொகுக்க முடியுமா? காலத்தால் முற்பட்ட அடியார்கள் பாக்களைப் பின்வைக்க இயலுமா? அங்ஙனம் வைப்பதில் ஒருவகைப் பொருத்தமேனும் இருக்கவேண்டும் அல்லவா? இவ் விவரங்களை வரலாற்று முறையிலும் ஆராய்ச்சி முறையிலும் இருந்து கவனிப்பின், 'நம்பி முதல் ஏழு திருமுறைகளையே தொகுத்தனர். பிற்பட்ட திருமுறைகளை அவை கிடைக்கக் கிடைக்கப்பின் வந்த அறிஞர் முறைப்படுத்தினர். என்று கொள்வதே மிகவும் பொருத்தமாகத் தெரிகிறது.

சேக்கிழார் புராண ஆசிரியர் வேறு; உமாபதி சிவம் வேறு. இவை அனைத்தையும் நடுவுநிலையிலிருந்து ஆராயின். தவறான கருத்துகள் பலவற்றைக் கூறும் சேக்கிழார் புராணமும் திருமுறைகண்ட புராணமும் பாடியவர் - பொறுப்புள்ள சைவப் பெரும் புலவராகிய உமாபதிசிவம் ஆகார் ஏனைய மூன்றையும் பாடியவர் உமாபதி சிவம் எனக்கொள்ளலாம் என்ற முடிபே ஏற்புடையதாகும். எனவே, முன்னூல்கள் இரண்டையும் பாடியவர் பெயர் தெரியாத புலவர் ஒருவராவர். அவர் நூல்களை உமாபதிசிவம் பாடினார் எனக் கூறுவதால், புகழ்பெற்ற அச்சைவ சமயப் புலவர்க்குச் சிறுமை உண்டாகுமே தவிரப் பெருமை ஒருபோதும் உண்டாகாது.

இதனைப்பற்றிய விரிவான ஆராய்ச்சியை எனது புராண ஆராய்ச்சி என்ற பெருநூலிற் கண்டுகொள்க. இத்தகைய பெயர் தெரியாத புலவர் ஒருவர் கூறிய சேக்கிழார் புராண வரலாற்றில் காணப்படும் சிந்தாமணி பற்றிய செய்தியும் அநபாயன் கேள்விகளும் உண்மைக்கு முற்றும் மாறானவை என்பதறிக.

உண்மையாதாக இருக்கலாம்?சைவ நன்மரபில் வந்த அநபாயன், நாயன்மார் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றை அறிந்திருக்கலாம். அவனுடைய முதல் அமைச்சரான சேக்கிழார் சைவக்குடியிற் பிறந்தவர் இலக்கண இலக்கியங்களைப் பழுதறப்படித்தவர் சைவத் திருமுறைகளையும் தம்காலத்துச் சைவ சித்தாந்த நூல்களையும் நன்கு கற்ற விற்பன்னராவர். அவர் சோழர் முதல் அமைச்சரானதும், தமது பதவியின் காரணமாகப் பெருநாடு சுற்றியபொழுது, பல கோவில்களைத் தரிசிக்கும் வாய்ப்பு அவர்க்கு இயல்பாகவே ஏற்பட்டது. அப்பொழுது அவர் நாயன்மார் வரலாறு பற்றிய பல குறிப்புகளைத் தொகுத்திருத்தல் கூடும்.

இங்ஙனம் நாளடைவில் அவர் நேரிற் கண்டும் வல்லார்வாய்க் கேட்டும். தம்காலத்து இருந்து இன்று இறந்துபட்ட பல நூல்களைப் படித்தும் நாயன்மார் வரலாற்று உண்மைகளை ஒருவாறு செப்பஞ் செய்து வைத்திருத்தல் கூடும். அக்குறிப்புகளை வாழையடி வாழையாகச் சைவ நன்மரபில்வந்த அநபாய சோழன்,இளவரசனான இராசராசன் வாயிலாக அறிந்து, சேக்கிழாரைக்கொண்டே நாயன்மார் வரலாறுகளைக் கேட்டு அறிந்திருக்கலாம். அங்ங்னம் கேட்டு அறிந்து மகிழ்ந்த அப்பரம பக்தன், அடியார் வரலாற்றுக் குறிப்புகள் அரும்பாடுபட்டுத் தொகுத்துவந்த சேக்கிழாரே அவற்றை விரிவான முறையில் ஒரு புராணமாகப் பாடத்தக்கவர் என்று எண்ணி, அங்ஙனமே புராணம் பாடித் தருமாறு அவரை வேண்டியிருத்தல் இயல்பே.

சேக்கிழார் அவ்வேண்டுகோளுக்கு இணங்கிக் கூத்தப்பிரான் எழுந்தருளியுள்ள சிதம்பரத்தை அடைந்து, அப்பெருமானை வேண்டி 'உலகெலாம்' என்று விண்வழி எழுந்த தொடரையே தமது நூலுக்கு முதலாகக்கொண்டு நூல் பாடத் தொடங்கி யிருக்கலாம். இடையிடையே உண்டான ஐயங்களை அவ்வத்தலம் சம்பந்தமான உத்யோகஸ்தர் வாயிலாகவும் சிற்றரசர் வாயிலகாவும் ஆங்காங்கு இருந்தபெரும் சைவப்புலவர் வாயிலாகவும் போக்கிக்கொண்டு தமது நூலைப் பாடி முடித்திருக்கலாம். இவ்வாறின்றி, அரசன் வேண்டுகோள்மீதே சேக்கிழார் பல இடங்களையும் சுற்றிப்பார்த்து ஆராய்ந்து, தம் ஆராய்ச்சியிற் போந்த முடிவுகளையும் நூல்களிற் கண்ட செய்திகளையும் சேர்த்துப் புராணம் பாடி முடித்தார் எனக்கொள்வதும் தவறாகாது.

அவரது பெரியபுராணத்தைக் கூர்ந்து கவனிப்பின், அவர் (1) தமிழ்நாடு முழுவதும் சுற்றி நாயன்மார் பற்றிய குறிப்புகளைத் தயாரித்தவர் என்பதும், (2) ஆங்காங்கு இருந்த சிற்றரசர், அறிஞர் முதலியோரைக் கேட்டும் கல்வெட்டுகளைப் படித்தும் குறிப்புகளைத் தயாரித்தவர் என்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகின்ற உண்மைகள் ஆகும். இவை இரண்டையும் பற்றிய குறிப்புகளைச் சுருக்கமாக அடுத்த இரு பிரிவுகளிற் காண்போம்.