சேதுபதி மன்னர் வரலாறு/iii. அரண்மனை நடைமுறைகள்

III அரண்மனை நடைமுறைகள்


சேது மன்னர்களது ஆட்சியில் இராமநாதபுரம் அரண்மனையில் சில நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டிருப்பதைக் கீழ்க்கண்டவைகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

1. சேது மன்னரது மனைவிகள் பலர் இருந்த போதிலும் அவர்களில் செம்பி நாட்டுப் பிரிவைச் சேர்ந்த மனைவிக்குப் பிறந்த ஆண் குழந்தை மட்டும் தான் மன்னரது வாரிசாக அரண்மனை முதியவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2. இந்த மன்னர்களில் யாராவது வாரிசு இல்லாமல் இறந்தால் சேதுபதி பதவிக்கு அந்த மன்னரது உடன்பிறந்த தங்கை அல்லது தமக்கையின் மகன் மன்னராகத் தேர்வும் செய்யப் பெற்றதால் அவன் பதவியேற்றதும் அரசு ஆவணங்களில் இறந்து போன மன்னரை தமது தந்தையாக குறிப்பிடும் வழக்கமும் இருந்தது.

3. சேது மன்னர்கள் வழங்கிய தானசாசனங்கள் அனைத்திலும் தங்களது முன்னோரது ஆட்சி பீடமான விரையாத கண்டன் (இளையான்குடி வட்டம்) ஊரினைக் குறிப்பிடுவதற்கும் அங்கிருந்த கடைசி மன்னரான ஜெயதுங்க தேவரது வம்சத்தினர் என்பவையும் குறிப்பிடத் தவறுவதில்லை.

4. பொதுவாக சேது மன்னர்கள் காலைக் கடன்களை முடித்தவுடன் தமது ராணியுடன் அரண்மனை வளாகத்திலுள்ள இராஜராஜேஸ்வரி ஆலயத்தின் காலை வழிபாட்டில் கலந்து கொள்வது அவர்களது நியதியாக இருந்தது. கோட்டைக்கு வெளியே அல்லது வெளியூர்களுக்குச் சென்று திரும்பிய பொழுதும் அரண்மனைக்குள் நுழைந்தவுடன் அவர்கள் அம்மனைத் தரிசனம் செய்த பிறகுதான் அந்தப்புரத்துக்குச் செல்வதும் அவர்களது வழக்கமாக இருந்தது.

5. சேதுபதி மன்னர்கள் அரண்மனையில் இருக்கும் பொழுது பட்டுவேட்டியும் பட்டுச் சால்வையுமாகக் காட்சி அளித்தனர். கொலு மண்டபத்திற்குச் செல்லும் பொழுதும் வெளியூர்களுக்குப் பயணம் செய்யும் பொழுதும் பட்டாலான நீண்ட மேலங்கித் தலைப்பாகை அணிமணிகள், உடைவாள் ஆகியவைகளை அணிந்து செல்வர்.

6. அரண்மனையில் ஒய்வாக இருக்கும் பொழுது ஏதாவது இலக்கியச் சுவடி ஒன்றினைப் படிப்பதையும் தமிழ்ப் பண்டிதர்கள் அல்லது வடமொழி வித்தகர்கள் அவர்களிடமிருந்து சிறந்த ராஜநீதிகளைக் கேட்டு அறிவதும் அவர்களது வழக்கம். முத்து விஜய ரெகுநாத சேதுபதி முன்னர் பண்டிதர் ஒருவர் அமர்ந்து இராமாயண ஏடு ஒன்றினைப் பிடித்தவாறு மன்னருக்கு விளக்கம் சொல்லும் சித்திரம் ஒன்று இராமலிங்க விலாச அரண்மனைச் சுவரோவியங்களில் காணப்படுவது இங்கு குறிப்பிடத் தக்கது.

7. இராமநாதபுரம் அரண்மனை அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கும் பொழுது தான் குடிமக்களது குறைகளைக் கேட்டு அறியும் நடைமுறை இருந்து வந்தது. பிற சமயங்களில் மன்னரைத் தொடர்புகொள்ள வேண்டும் எனில் அவரது கார்வார் என்ற அலுவலரைத்தான் அணுக வேண்டும். அரண்மனையில் கீழ் நிலையில் சேவகர்கள் சோப்தார், ரிசல்தார், ஜமேதார் போன்ற பணியாளர்கள் அனைவருக்கும் அரண்மனையின் நிர்வாகத்திற்கும் கார்வார் மட்டுமே பொறுப்பானவர்.

8. இதனைப் போன்றே அரண்மனை அந்தப்புரத்தில் பெண்கள் பலர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அந்தப்புரத்தில் மன்னரையோ அல்லது மகாராணியையோ நேரடியாக தொடர்பு கொள்ளுதல் தடுக்கப்பட்டிருந்தது. மன்னர் அல்லது ராணிக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகளை அவர்கள் தங்களது தலைவியாகிய தானாவதி என்ற பெண் மூலமாகத்தான் தெரிவிக்க வேண்டும் என்பது மரபு.

9. அரண்மனைக்கு வருகின்ற அரசு விருந்தாளிகளான தமிழ்ப் புலவர்கள், வடமொழிப் பண்டிதர்கள் பெரும் வணிகர்கள். பிற நாட்டு அலுவலர்கள் ஆகியோர் திரும்பிச் செல்லும்பொழுது மன்னரைச் சந்தித்து அரண்மனை மரியாதையைப் பெற்றுச் செல்லுதல் வேண்டும். அவர்களுக்குத் தேவையான வழிச் செலவுக்கான பணம், பட்டாடைகள் மற்றும் பொன் வெள்ளியிலான தட்டில் வைத்து வழங்கப்படும்.

10. இராமநாதபுரம் அரண்மனையின் பாதுகாப்பிற்காக பின்பற்றப்பட்ட முறை ‘பாரி’ எனப்படும். இந்த முறை தன்னரசு மன்னர்கள் காலத்திலிருந்து ஜமீன்தார்கள் காலம் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதாவது இராமநாதபுரம் கோட்டையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனைப் பாதுகாப்பிற்கென இரண்டு தனிக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. இந்தக் குழுவில் சில வீரர்களும் தீ வெட்டி தூக்கிச் செல்பவர்களும், தாரை தப்பட்டை ஆகியவைகளை அடித்து முழக்குபவர்களும் வாங்கா என அழைக்கப்படும் வளைந்த புனலை ஊதுபவர்களும் இருந்தனர். முதலாவது குழு சரியாக நடுநிசி நேரம் ஆனவுடன் தீ வெட்டிச் சுளுந்துகளை ஏந்திச் செல்பவர்கள் பின்னால் பறையடித்து முழக்குபவர்களும் அவர்களை அடுத்து ஆயுதம் தரித்த போர் வீரர்களும் இராமநாதபுரம் அரண்மனையைத் தெற்கு மேற்கு. வடக்கு ஆகிய பகுதிகளைச் சுற்றிக் கண்காணித்தவாறு இராமநாதபுரம் அரண்மனை வாசலை வந்தடைவர். இவர்கள் முதல் பாரி என்றழைக்கப்பட்டனர்.

இதே போன்று மற்றொரு குழுவும் நடுநிசி நேரத்திற்கு இரண்டு மூன்று நாழிகை கழித்து அரண்மனையைச் சுற்றிக் கண்காணித்து வருவர். இவர்கள் இரண்டாவது பாரி எனப்பட்டனர். நீண்ட அமைதியில் மூழ்கியிருக்கும இராமநாதபுரம் அரண்மனை முதலாவது இரண்டாவது பாரியினால் கலகலப்புப் பெறுவதுடன் கோட்டையிலுள்ள மக்கள் இரவு நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு இந்த குழுக்களின் ஒசை பயனுள்ளதாக அமைந்திருந்தது.

11. கடிகாரம் இல்லாத முந்தைய காலத்தில் கோட்டையில் வாழும் மக்களுக்கு ஓரளவு நேரத்தைச் சரியாக அறிவிப்பதற்கு இராமநாதபுரம் அரண்மனை வாசலை அடுத்து "மணிப் பாறா" என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரண்மனையின் கிழக்குப் பகுதியில் சிறு குழிகளைத் தோண்டி வைத்து அதில் வெடி மருந்தினை நிரப்பி வைப்பார்கள். நாள்தோறும் வைகறைப் பொழுதிலும் பகல் உச்சி வேளையிலும் இரவிலும் குழிகளுக்குத் தீ மூட்டி வெடிக்கச் செய்வர். பயங்கரமாக வெடி மருந்து வெடிக்கும் ஓசையை வைத்துக் கோட்டையில் உள்ள மக்கள் நாள்தோறும் மூன்று வேளையிலும் ஒரு வகையாக நேரத்தை அறிந்து கொள்வதற்கு ஏற்றதாக இருந்தது. பிற்காலத்தில் வெடிமருந்து வெடிப்பதை நிறுத்தி அரண்மனை முகப்பில் வெண்கலத் தட்டினை முழக்கி நேரத்தைத் தெரிவிக்கும் முறையும் இருந்து வந்தது. இந்த வெடி மருந்தினை நிரப்பி வெடிக்கச் செய்தவர்கள் வாணக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு என அரண்மனை வாசலை ஒட்டி தெற்குப் பகுதியில் குடியிருப்பு மனைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்தப் பகுதி இன்றும் வாணக்காரர் தெரு என்று அழைக்கப்படுகிறது.

12. சேதுபதிகள் தன்னரசு மன்னர்களாக இருந்த காலத்தில் மன்னரது விருந்தாளியாக இராமநாதபுரம் வருகின்ற பெரிய மனிதர்களை மன்னரது பிரதானி இராமநாதபுரம் கோட்டை வாசலில் சந்தித்து வரவேற்பு அளிப்பதும், அவர்களைப் பின்னர் அரண்மனை ஆசாரவாசலுக்குச் சேதுபதி மன்னர் நேரில் சென்று வரவேற்கும் பழக்கமும் இருந்து வந்தது.