சேதுபதி மன்னர் வரலாறு/iii. தன்னரசு நிலையில் தாழ்ந்த சேதுநாடு
இராமாயண காலம் தொட்டுஇ. தொடர்புள்ளதாகப் பெருமை பெற்றிருந்த சேதுபதி மன்னர்களது தன்னரசு 8.2.1795இல் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியாரால் கைப்பற்றப்பட்டு சேதுபதிச் சீமை என்ற தன்னரசு நிலையை இழந்தது. மறவர் சீமையின் மகுடபதிகளாக மட்டுமல்லாமல் தெய்வீகத் திருப்பணிகளுக்கும் தமிழ் வளர்ச்சிப் பணிக்கும் சமுதாயப் பணிகளுக்கும் ஊற்றுக் கண்ணாக விளங்கிய சேதுபதிகளின் ஆட்சி எதிர்பாராத வண்ணம் முற்றுப்புள்ளி பெற்றதால் அந்த மன்னர்களால் தொடக்கம் பெற்றுத் தொடர்ந்த திருப்பணிகள் பல தடைபெற்று நின்றன.
குறிப்பாக இராமேஸ்வரம் திருக்கோயிலில் வடக்கு தெற்கு வாயில்களில் கால்கோள் இடப்பெற்ற இராஜ கோபுரங்கள் முற்றுப்பெறாமல் நின்றுவிட்டன. திரு உத்திர கோசமங்கை திருக்கோயிலும் கிழக்குப் பகுதியின் இரண்டாவது எழுநிலை கோபுரமும் முற்றுப்பெறாமல் அரைகுறையாகக் காட்சியளித்தது மற்றும் அந்தக் கோயிலின் வடக்கு தெற்கு நுழைவாயில்களில் அமைக்கப்பட்ட ராஜ கோபுரங்களும் கால்கோள் இட்ட நிலையிலேயே நின்றுவிட்டன.
இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் இராமேஸ்வரம் திருக்கோயில் போன்ற பெரிய சிவாலயங்களில் நடைபெற வேண்டிய அன்றாட பூஜனைகளையும் விழாக்களையும் தொடர முடியாமல் ஆலய நிர்வாகிகள் அவதிப்பட்டனர். இதற்கு எடுத்துக்காட்டாக கி.பி. 1772ல் இராமேஸ்வரம் திருக்கோயிலின் குருக்களும். நயினாக்களும் இராமேஸ்வரம் கோயில் ஆதின கர்த்தரான சேது இராமநாத பண்டாரத்திற்கு எழுதிக் கொடுத்த ஒப்புதல் செப்பேட்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி முத்து இராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மன்னர் முதலில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டதால் இராமேஸ்வரம் திருக்கோயில் தொடர்ந்து 3 மாதங்கள் எவ்வித வழிபாடும் இன்றி மூடிக்கிடந்ததைக் குறிப்பிடலாம். திருக்கோயிலை நம்பி இருந்த பலவகைப்பட்ட பணியாளர்கள் குறிப்பாக அட்சகர்கள். ஸ்தானிகர்கள். பரிசாரர்கள், பல்லக்குத் துக்கிகள் அலங்காரப் பட்டர்கள், கைவித்தாளன், பண்டாரம், கோயில் பசுமடம் கணக்குக் காப்பாளன். பெரிய மேளம் என்ற நாதஸ்வரக் குழு, சின்ன மேளம் என்ற நாட்டியக்குழு போன்ற கோயில் பன்னியாளர்கள் அவர்களுக்குச் சேது மன்னர் வழங்கிய காணிகளும் சீவித மானியங்களும் பறிக்கப்பட்டுத் தங்களது வாழ்க்கைக்கு அவைகளையே நம்பியிருந்த அந்தப் பணியாளர்கள் அல்லல் பட்டனர்.
மற்றும் கோயில் விழாக்கள் மன்னரது நேரடியான கவனமும் பொருள் உதவியும் இல்லாமல் பொலிவிழந்த நிலையில் நடத்தப்பட்டன. நாதஸ்வரக் கலைஞர்கள் நாட்டியக் கலைஞர்கள். குழல் வீணை, மத்தளம் ஆகியவைகளைக் கையாளும் கலைஞர்களும் புராணப் பிரசங்கிகளும் தேவரடியார்கள் ஆதரவின்றித் தவித்தனர். இவ்விதம் மக்களைப் பல வகைகளிலும் இடர்ப்பாடு அடையச் செய்த அந்நியர் ஆட்சி தொடருவதற்குக் காலம் கை கொடுத்தது என்றால் அதனைத் தவிர்ப்பதற்காக எழுந்த மக்கள் கிளர்ச்சிகளும் ஆயுத பலத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட பிறகு சேதுநாட்டிற்கு ஏற்பட்ட அவலத்தைக் காலத்தின் கட்டாயம் என்று அடிபணிந்து மக்கள் அடங்கிச் செல்வதைத் தவிர வேறுவழியில்லை.