சேதுபதி மன்னர் வரலாறு/iii. தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி
இரண்டாம் சடைக்கன் சேதுபதி
(கி.பி. 1635 - 1645)
காலம் சென்ற கூத்தன் சேதுபதி மன்னருக்குத் தம்பித் தேவர் என்ற மகன் இருந்து வந்தார். ஆனால் இராமநாதபுரம் அரண்மனையைச் சேர்ந்த முதியவர்கள் தம்பித் தேவரது உரிமையைப் புறக்கணித்து விட்டுக் கூத்தன் சேதுபதியின் இளைய சகோதரரான சடைக்கத் தேவரை இரண்டாவது சடைக்கன் சேதுபதியாக அங்கீகரித்துச் சேதுபதி பட்டத்தினை அவருக்குச் சூட்டினர். இராமநாதபுர அரண்மனை வழக்கப்படி சேதுபதி மன்னருக்கு அவரது செம்பி நாட்டு மறவர் குலப் பெண்மணியின் மூலமாகப் பிறந்த மகனுக்கே சேதுபதி பட்டம் உரியதாக இருந்தது. கூத்தன் சேதுபதியின் இரண்டாவது மனைவியும் செம்பிநாட்டு மறப்பெண்மணியும் அல்லாத மனைவிக்கு பிறந்தவர் தம்பித்தேவர் என்பதால் அவர் சேதுபதி பட்டத்திற்கான தகுதியை இழந்தவராகக் கருதப்பட்டார். இரண்டாவது சடைக்கன் சேதுபதி கி.பி. 1635 முதல் கி.பி. 1645 வரை 10 ஆண்டுகள் சேதுபதி மன்னராக இருந்து வந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய இழப்பும், அழிமானமும் சேதுநாட்டிற்கு ஏற்பட்டன.
தமது பேரரசிற்கு அண்மையிலுள்ள மறவர் சீமையின் வலிமை நாளுக்குநாள் பெருகி வருவதை விரும்பாத மதுரை மன்னரான திருமலை நாயக்கர், சேதுநாட்டின் மீது மிகப்பெரிய படையெடுப்பினை, அதுவரை சேதுநாடு கண்டறியாத மிகப்பெரிய போர் அணிகளைச் சேதுநாட்டிற்குள் கி.பி. 1639ல் அனுப்பி வைத்தார். வடக்கே கொங்கு நாட்டிலிருந்து தெற்கே நாஞ்சில் நாடு வரையிலான நீண்ட பகுதியில் அமைந்திருந்த நாயக்க மன்னரது எழுபத்தி இரண்டு பாளையங்களின் வீரர்கள் இந்தப் படையெடுப்பில் கலந்து கொள்ளுமாறு செய்யப்பட்டனர். இந்தப் படையெடுப்பினைத் தலைமை தாங்கி நடத்தியவர் திருமலை நாயக்க மன்னரது தளவாய் இராமப் பையன். நாயக்கர் படைகள் தொடக்கத்தில் சேது நாட்டிற்குள் புகுந்து எளிதாகப் போகலூர், அரியாண்டிபுரம். அத்தியூத்து ஆகிய கோட்டைகளைக் கைப்பற்றியவாறு கிழக்கே முன்னேறிச் சென்றன.[1] சேதுநாட்டு மறவர்களது கடுமையான தாக்குதலை மேலும் தாங்கமுடியாத மதுரைப் படைகளின் முன்னேற்றத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. அத்துடன் மதுரைப் பேரரசிற்கு வடக்கே பிஜப்பூர் சுல்த்தானது படையெடுப்பு அபாயமும் அப்பொழுது இருந்தது. இதனால் சேதுநாட்டுப் போரினைச் சிறிது காலம் நிறுத்தி வைத்த மதுரைத் தளவாய் வடக்கே போர்ச்சுகீசியரின் தலைமை இடமான கோவாவிற்குச் சென்று போர்ச்சுகல் நாட்டு கவர்னருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு தகுந்தபடை உதவியுடன் தளவாய் சேதுநாட்டிற்குத் திரும்பினார்.[2]
வலிமைவாய்ந்த மதுரைப் படையினைச் சமாளிப்பதற்கு ஏற்ற இடமாகக் கருதி சேதுபதி மன்னர் இராமேஸ்வரம் தீவிற்குச் சென்றார். என்றாலும் மதுரைத் தளவாய் பாம்பனிற்கும் மண்டபத்திற்கும் இடையே கடலின்மீது ஒரு பாலம் அமைத்து அதன் வழியாக மதுரைப் படைகள் சேதுபதி மன்னரைப் பின்தொடருமாறு செய்தார்.
இராமேஸ்வரம் தீவில் இராமேஸ்வரம் நகருக்கு முன்னதாக உள்ள இன்றைய தங்கச்சிமடம் அருகே இருபடைகளும் பொருதித் தாக்கின. இரண்டாவது நாள் போரில் சேது மன்னரது படைகளுக்குத் தலைமை தாங்கிய போகலூர் கோட்டை வன்னியத்தேவன் வைசூரி நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். மிகப்பெரிய வீரனாக விளங்கிய வன்னியத் தேவனது திடீர் மறைவு சேதுபதி மன்னருக்கு எதிர்பாராத பின்னடைவை ஏற்படுத்தியது. மதுரைத் தளவாய், சேதுபதியை எளிதில் வெற்றிகொண்டு அவரைச் சிறைபிடித்து மதுரையில் உள்ள திருமலை நாயக்கர்மன்னர் முன் நிறுத்தினார். சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை திருமலை நாயக்கரது இந்த சேதுநாட்டுப் படையெடுப்பைப் பற்றிய நாட்டுப்புற இலக்கியமான இராமப்பையன் அம்மானை விவரமாக வரைந்துள்ளது. மேலும் இந்தப் போரில் வன்னியத் தேவன் ஆற்றிய போர்ப் பணியையும் சிறப்பாக இந்த அம்மானையில் சொல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே சேதுபதி பட்டத்திற்கு உரிமை கொண்டாடிய தம்பித் தேவரைத் திருமலைநாயக்க மன்னர் மறவர் சீமையின் மன்னராக நியமனம் செய்தார். அந்நியரது கைப்பாவையான தம்பித் தேவரை மன்னராக ஏற்றுக்கொள்ள மறுத்த மறக்குடி மக்கள் மறவர் சீமையெங்கும் போர்க்கொடி உயர்த்தினர். குழப்பம், கலகம், சீரழிவு இந்தச் சூழ்நிலையை மேலும் தொடர விரும்பாத திருமலைநாயக்க மன்னர் இரண்டாவது சடைக்கன் சேதுபதியைச் சிறையினின்றும் விடுவித்துப் போகலூருக்குத் திருப்பி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வுகள் கி.பி. 1640ல் நிகழ்ந்தன.
அறக்கொடைகள்
அடுத்த 5 ஆண்டு காலங்களில் சடைக்கன் சேதுபதி பல தெய்வீகப் பணிகளை மேற்கொண்டிருந்தார் என்பதை சில வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. திருவாடானை வட்டத்திலுள்ள திருத்தேர் வளையில் எழுந்தருளியுள்ள ஆண்டு கொண்ட ஈசுவரர் கோயிலுக்குக் கொங்கமுட்டி, தச்சனேந்தல், தண்டாலக்குடி ஆகிய ஊர்களையும் புளியங்குடியில் உள்ள பூவணப்புநாத திருக்கோயிலுக்கு விரகடியேந்தல் என்ற ஊரினையும் சர்வமானியமாக வழங்கியதனை அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தமது தந்தை சடைக்கன் சேதுபதியையும், சகோதரர் கூத்தன் சேதுபதியையும் பின்பற்றியவராக இராமேஸ்வரத் திருக்கோயிலின் நுழைவுவாயிலில் ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பெற்ற இராஜ கோபுரத்தினை நிர்மாணிப்பதற்கு இந்த மன்னர் முயற்சி செய்தார். இந்தத் திருப்பணிக்காகச் சேதுநாட்டில் தெற்கு வட்டகையான சாயல்குடி பகுதியிலிருந்து கிடைக்கும் அனைத்து வருவாய்களையும் இந்த கட்டுமானத்தில் ஈடுபடுத்தி வந்தார்.[3] என்றாலும் இந்த மன்னரது வாழ்நாளில் இந்தத் திருப்பணி நிறைவு பெறாத நிலையில் கி.பி. 1645ல் இந்த மன்னர் காலமானார். ஆனால் இவரது ஆட்சிக்காலத்தில் இராமநாதபுரம் கோட்டைக்குள் தொடங்கப்பெற்ற சொக்கநாத ஆலயம் இவரது ஆட்சிகாலத்திலேயே நிறைவுபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.