சேரமன்னர் வரலாறு/மதிப்புரை

பேராசிரியர், டாக்டர், மா. இராசமாணிக்கனார்


ஒரு நாட்டு வரலாற்றைத் துணிவதற்கு அந் நாட்டு இலக்கியம், புதைபொருள், நாணயம், கல்வெட்டு, அயல் நாட்டார் கூற்றுகள், நாட்டிலுள்ள பிற அடையாளங்கள் முதலியன தேவையாகும். நம் தமிழகத்தில் சங்ககால வரலாற்றை அறியத் தமிழிலக்கியமும் அயல் நாட்டார் கூற்றுகளுமே சான்றாக அமைகின்றன. பிற சான்றுகள் மிகுதியாகக் கிடைக்க வழியில்லை . இந் நிலையில் சங்ககாலச் சோழர் வரலாறும் பாண்டியர் வரலாறும் பேராசிரியர் நீலகண்ட சாத்திரியாராலும் சேரரது வரலாறு ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு உயர்திரு. கே. ஜி. சேஷய்யர் அவர்களாலும் ஆங்கிலத்தில் எழுதப்பெற்றன. ஆயினும், தமிழ்ப்புலவர்களும் தமிழார்வம் கொண்ட பொதுமக்களும் படிக்கத்தகும் முறையில் சோழரது வரலாறும் பாண்டியர் வரலாறும் தமிழில் உயர்திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார், உயர்திரு. எஸ். சதாசிவப் பண்டாரத்தார் முதலியவர்களால் எழுதப்பெற்றுள்ளன. சங்ககாலச் சேரர் வரலாறு - இதுகாறும் தமிழில் வெளிவரவில்லை.

சங்க நூல்களை மட்டும் படித்துச் சேரர் வரலாற்றை எழுதுவது சிறப்பன்று. சேரநாடு முழுமை யும் இலக்கிய அறிவோடு சுற்றி, வரலாற்று உணர்வோடு பண்டை இடங்களைக் கண்டறிந்து வரலாறு எழுதுவதே சிறப்புடையது. இச் சீரிய முறையில், பேராசிரியர். ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் சேரநாடு முழுமையும் சுற்றித் தொண்டி, வஞ்சி முதலிய வரலாற்றுப் புகழ் படைத்த இடங்களைக் கண்டறிந்தும், மலைகள், ஆறுகள் முதலியவற்றின் பண்டைப் பெயர்கள் இன்னவை, இக் காலப் பெயர்கள் இன்னவை என்பவற்றை ஆராய்ந்து அறிந்தும் இந் நூல் எழுதியிருத்தல் மிகவும் போற்றத்தக்க செயலாகும். இதுவரையில் இருள் படர்ந்திருந்த சங்ககாலச் சேரர் வரலாறு இவ் வரலாற்று நூலால் விளக்கமடையும் என்று கூறுதல் பொருந்தும். இவ்வாசிரியர் ஆழ்ந்து அகன்ற புலமையும் வரலாற்றுத் தெளிவும் ஆராய்ச்சி வன்மையும் உடையவராதலின், இம் முத்திறப் பண்புகளும் இந் நூலை அணி செய்கின்றன. ஆசிரியரது இந்நன்முயற்சியைத் தமிழறிஞர் பாராட்டுவர் என்பது உறுதி.

மா. இராசமாணிக்கம்


மேப் 1

(Upload an image to replace this placeholder.)