சேரமன்னர் வரலாறு/18. சேரமான் குட்டுவன்கோதை

18. சேரமான் குட்டுவன் கோதை

சேர வேந்தர் குடியில் கோதையென்னும் பெயர் கொண்ட கிளையொன்று பண்டை நாளில் இருந்திருக் கிறது. இக் கிளையினர் பெயர் கோதையென்றே முடியும். இவர்கள் பெரும்பாலும் குட்ட நாட்டிலேயே இருந்துள்ளனர். இன்றும் குட்ட நாட்டில் கோதைச் சிறை, கோதைக் குறிச்சி, கோதைச் சேரி, கோதை நல்லூர், கோதைக் குளங்கரை, கோக்கோதை மங்கலம் என ஊர்களும், கோதையாறு என யாறும் உள்ளன. இவ்வாறு கோதை என்ற பெயரோடு கூடிய ஊர்களோ பிறவோ ஏனைக் குடநாட்டிலும் வேணாட்டிலும் இல்லை.

செங்குட்டுவன் காலத்தில் வில்லவன் கோதை என்ற பெயருடைய அமைச்சனொருவன் இருந்தான் என இளங்கோவடிகள் குறிக்கின்றனர்[1]. இக்கோதை குட்டநாட்டுக் கோதை வேந்தரின் குடியின்னாகும் எனக் கருதுவதுண்டு. இக்கோதை வேந்தர், சங்கத் தொகை நூல் காலத்திலும், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமாள் நாயனார் காலத்திலும் இருந்தனர் என்பது ஒருதலை. இவருள் குட்டுவன் கோதை என்பவன் மிகவும் பழையோனாக வுள்ளான். அவன் காலத்தில் பாண்டி நாட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய பாண்டியன் நன்மாறனும், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், சோழ நாட்டில் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளனும் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியும், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனும், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியும் ஆட்சி செய்து வந்தனர். “ஒளிறு வேற் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி”[2] என்றும் “நெடுந்தேர்க் கோதை திருமா வியனகர்க் கருவூர் முன்றுறை[3]” என்றும் சான்றோர் கூறுவதால், குட்டுவன் கோதையது ஆட்சியில் குட்ட நாடு வஞ்சிமா நகரும், அதற்கண்மையிலுள்ள கருவூரும் சிறந்து விளங்கின என்றும் அறிகின்றோம்.

குட்டுவன் கோதை பெருவலி படைத்த முடிவேந்தன். அதனால் அவனுடைய குட்டநாடு பகைவர்க்கு மிக்க அச்சம் பயந்து நின்றது. அக்காலத்தே கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்ற நல்லிசைச் சான்றோர் குட்டுவனை நேரிற் கண்டு பாடியிருக்கின்றார். அப்போது அந்த நாட்டைப்பற்றி ஏனை நாட்டவர் கொண்டிருந்த எண்ணத்தை அவர் நன்கறிந்து தாம் பாடிய பாட்டில் குறித்துள்ளார். ஏனை நாட்டவர் குட்டுவன் கோதையைப் புலியெனவும், அவனது நாட்டைப் புலி கிடந்து உறங்கும் புலம் எனவும் கருதி, புலி துஞ்சம் புலத்திற்குள் செல்ல அஞ்சும் ஆட்டிடையன் போல அவ்வேந்தர்கள் அஞ்சினர் எனவும்[4] குமரனாரது குறிப்புக் கூறுகிறது.

அந்நாளில் குடநாடும் சேர நாடாகவே இருந்தது. கேரள நாடாகவோ கன்னட நாடாகவோ மாறிவிடவில்லை. குடநாட்டில் பிட்டங்கொற்றன் என்றொரு குறுநிலத் தலைவன் ஆட்சிசெய்து வந்தான். அவனது நாடு குதிரை மலையைத் தன் அகத்தே கொண்டிருந்தது. குதிரைமலை இப்போது சஞ்சபருவதமென ஒரு சிலரால் மொழி பெயர்க்கப்பட்டிருப்பினும், குதிரை மூக்கு என்ற பழைய தமிழ்ப் பெயருடன் தென் கன்னடம் மாவட்டத்தில் உப்பினங்காடி வட்டத்தில் வழங்கி வருகிறது. இந் நாட்டில் மேற்கரை என்னும் தமிழ்ப் பெயர் மர்க்காரா என்றும், வடகரை படகரா என்றும் வானவன் தோட்டி மானன்டாடி என்று உருத்திரிந்தும் வழங்குகின்றன. வடமொழியாளர் குதிரை மலையைச் சஞ்ச பருவதம் என்றும், மேற்கு மலைத் தொடரைச் சஃயாத்திரி என்றும் மொழி பெயர்த்துள்ளனர்; ஆனால் மக்கள் வழக்குக்கு வரவில்லை . மேலும், இம்மலை தென்கன்னடத்துக்கும் மைசூர் நாட்டுக்கும் எல்லையாய் நிற்கிறது. இதன்மேற் பெய்யும் மழை ஒருபால் கிருஷ்ணையாற்றையும் ஒருபால் காவிரியாற்றையும் அடைகிறது. இம் மலையை மேலைக்கடலிலிருந்து பார்ப்போமாயின், இது குதிரையின் முகம்போலக் காட்சி தருவது பற்றிக் குதிரை மலையெனப்படுவ தாயிற்று [5].

பிட்டனுடைய இந்தக் குடநாடு மலை நிறைந்தது. மலையிடையிலும் சரிவிலும் மூங்கில் அடர வளர்ந்து செறிந்திருக்கும். மலைச் சரிவுகளில் அருவி நீர் வீழ்ந்து பெருமுழக்கம் செய்யும். காட்டாற்றின் கரையில் கமுகும் வாழையும் வளர்ந்திருக்கும். அவற்றின் இடையே மிளகுக் கொடிகள் வளர்ந்து அம் மரங்களைச் சுற்றிக் கொண்டிருக்கும். பக்கங்களில் உள்ள புனங்களில் காந்தள் முளைத்துக் கைபோல் பூத்து மலைப்புறத்தை அழகு செய்யும். அங்குள்ள பெருங்காடுகளில் வாழும் காட்டுப் பன்றிகள் காந்தட் புனத்தைத் தம் கொம்பால் உழுது காந்தளின் கிழங்கைத் தோண்டி உண்ணும். அதனால் அங்கே வாழும் குறவர் நிலத்தை உழுவது கிடையாது. பன்றி உழுத புழுதியின் செவ்விநோக்கி அவர்கள் தினையை விதைத்துவிடுவர். அது நன்கு வளர்ந்து உரிய காலத்தில் மிக்க தினையை விளைத்து நல்கும். பொங்கற் புது நாளன்று, அவர்கள் புதிது விளைந்த தினையரிசி கொண்டு, மரையா (காட்டுப்பசு) விடத்துக் கறந்த பாலை உலையிற் பெய்து அடுப்பிலேற்றிச் சந்தனக் கட்டைகளை விறகாக எரித்துச் சமைத்த சோற்றைக் கூதாளிமரத்தின் கால் நிறுத்தி மலை மல்லிகைக் கொடி படரவிட்டு இருக்கும் மனைமுற்றிலில் விருந்தினரை இருத்தி, அகன்ற வாழையிலையை விரித்து அதன்மேற் படைத்து உண்பித்துத் தாமும் உண்பர்[6]’ இதனை இப்போது அந் நாட்டவர் புத்தரி (புத்தரிசி ; பொங்கற் புதுச்சோறு என்று வழங்குகின்றனர்[7]. தினை விளையும் பருவம்[8] ஏனற் பருவம் என்றே வழங்குகிறது.

இத்தகைய வளவிய நாட்டில் இருந்து காவல் புரிந்த குறுநிலத் தலைவனான பிட்டங்கொற்றன், தான் பிறந்த குடிக்கு முதல்வனாவன். அந்நாட்டவர் தங்கள் குடியில் முதல்வனாக உள்ளவனைப் பிட்டன் என்பது வழக்கம். இன்றும் வயனாட்டுக் குறிச்சியாளர் பால் இம் முறைமை இருந்துவருகிறது.

இப் பிட்டங்கொற்றனுடைய மலை குதிரையெனப்படுவதால், ஏனைக் குதிரையாகிய விலங்குகளினின்றும் வேறுபடுத்தற் பொருட்டுச் சான்றோர் குதிரை மலையை “ஊராக் குதிரை” என்று கூறுவர். ஏனைக் குதிரைகளை மக்கள் ஊர்ந்து செல்வர்; இக் குதிரை அன்ன தன்று. அது பற்றியே அம் மலை ஊராக் குதிரை எனப்படுகிறது; வேந்தனும் “ஊராக் குதிரைக் கிழவன்” எனப்படுகின்றான்.

இம்மலை நாட்டில் வாழும் மறவர் பலரும் கூரிய அம்பும் சீரிய வில்லும் உடையவர். சேர நாட்டவர்க்குப் பொதுவாக விற்படை உரியதென்றாலும் இக்குடநாட்டவர்க்கு அது சிறப்புடைய கருவியாகும். இக்காலத்திலும், அவர்களிடையே ஆண் குழந்தை பிறந்தால் முதலில் அதன் கையில் ஆமணக்கின் கொம்பால் வில்லொன்று செய்து, அதன் இலை நரம்பு கொண்டு அம்பு செய்து கொடுப்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது[9]. ஆண் மக்கள் இறந்து போவராயின், அவர்களைப் புதைக்குங்கால், அவர்களது உடம்போடே அம்பு ஒன்றையும் உடன் கிடத்தி புதைக்கின்றனர்[10]. இவ்வில்லோர்க்குத் தலைவனாதலால், பிட்டங்கொற்றனைச் சான்றோர் “ஊராக் குதிரைக் கிழவன், வில்லோர் பெருமகன்” எனச் சிறப்பித்தனர்.

தோளாண்மையும் தாளாண்மையும் ஒருங்கு பெற்றுப் பகையொடுக்கி இனிய காவல் புரிந்து வந்த பிட்டனுடைய பெருவன்மையை நன்குணர்ந்த குட்டுவன் கோதை, அவனைத் தனக்குரிய அரசியற் சுற்றமாகக் கொண்டு அன்பு செய்தான். முடிவேந்த னான குட்டுவன் நட்பைப் பிட்டனும் பெரிதென எண்ணி வேண்டும் போதெல்லாம் பெருந்துணை புரிந்தான். பகையகத்துப் பெற்ற பெருஞ்செல்வத்தைப் பரிசிலர்க்கு ஈயும் பண்பு பண்டை நாளைச் செல்வர் பால் பிறவியிலேயே ஊறியிருந்தது. கொடைமடம் படுவதும் படைமடம் படாமையும் வெல்போர் வேந்தர்க்கு வீறுடைமையாகும். அவ்வழி வந்தவனாதலால் பிட்டங்கொற்றன் வரையாத வள்ளன்மை செய்தொழுகினான்.

அவனைக் குதிரைமலைக் கிழவனாகச் சான்றோர் கூறுவதால், அவன் குடநாட்டின் பண்டைத் தலைநகரமான நறவு என்னும் ஊரை விடுத்துக் குதிரை மலைக்கு அண்மையிலேயே ஓர் ஊரமைத்திருப்பான் எனக் கருதலாம் குதிரை மலைக்கு அண்மையில் சமால்பாத் என்னும் பெயருடைய ஊரொன்று இருக்கிறது. அங்கே பழையதொரு கோட்டையும் இருக்கிறது. அது திப்புசுல்தான் தன் தாயான சமால்பாயினுடைய பெயரால் அமைத்தது என்றும் அதன் பழம் பெயர் நரசிம்மங்காடி என்றும் அப் பகுதி பற்றிய வரலாறு[11] கூறுகிறது. அங்கு வாழ்பவர், அந் நகரம் தொன்றுதொட்டே பழைமையான நகரம் என்றும், நரசிம்மவர்மன் என்ற கடம்ப வேந்தனொருவன், மிகவும் பழமை பெற்றிருந்த அதனைப் புத்திக்கிக் கொத்த கரூர் என்ற பழம்பெயரை மாற்றி நரசிம்மங்காடி எனப் புதுப் பெயரிட்டான் என்றும் கூறுகின்றனர். கொங்காணிகளில் பழையோர் அதனைக் கொத்த கனவூர் என்பர். இச்செய்திகளை நினைத்துப் பார்க்குங்கால், பண்டை நாளில் அப் குதி முற்றும் தமிழ் வழங்கும் நல்லுலகமாய்த் திகழ்ந்தது எனவும் அக்காலத்தில் பிட்டங்கொற்றனால் அது கொற்றன் கருவூர் என்றோ கொற்றன் நறவூர் என்றோ வழங்கி வந்து, பின்பு வேறு வேறு பெயர் கொண்டது எனவும் நினைத்தற்கு இடமுண்டாகிறது,

இக்கொற்றன், நறவூரிலிருந்து படைமடம் படாது கொடைமடம் பூண்டு புகழ் பெருகி வாழ்வது தமிழகமெங்கும் நன்கு பரவியிருந்தது. அக்காலத்தில் வஞ்சி நகர்க்கு அண்மையிலுள்ள கருவூரில் கதப்பிள்ளை என்றொரு சான்றோர் வாழ்ந்தார். அவர் பெயரைச் சில ஏடுகள் கந்தப்பிள்ளை என்றும் கூறுவதுண்டு. குட நாட்டில் பிட்டங்கொற்றன் குதிரைமலைக் குரியனாய் ஈதலும் இசைபட வாழ்தலுமே வாழ்வின் ஊதியமாய்க் கருதிப் புகழ் நிறுத்தும் இன்பநெறி யறியாத ஏனை வேந்தர் நாணுமாறு தமிழகம் அறியச் செய்து கொண் டிருப்பதை நேரிற் கண்டார். முடிவில் கதப்பிள்ளை அவனது திருவோலக்கத்தை அடைந்து அவன் செய்யும் கொடைவளத்தைப் பார்த்துக், “கைவள்ளீகைக் கடுமான் கொற்ற, ஈயா மன்னர் நாண், வீயாது பரந்த நின் வசையில் வான்புகழ் வையக வரைப்பின் தமிழகம் கேட்பப், பொய்யாச் செந்நா நெளிய நாளும், பரிசிலர் ஏத்திப் பாடுப என்ப[12]” என்று பாடிப் பாராட்டினர். அவர்பால் பேரன்பு கொண்ட பிட்டன், மனம் மகிழ்ந்து பெருஞ்செல்வத்தைப் பரிசிலாகத் தந்து அவரைச் சிறப்பித்தான்.

சில நாள்களுக்குப் பின், சேரர்க்கு உரிய கொங்கு நாட்டில் படர்ந்து வாழ்ந்து வந்த கோசர் என்பார் குட்டுவன் கோதைக்கு மாறாக எழுந்து நாட்டில் குறும்பு செய்யத் தலைப்பட்டனர். பேராற்றல் கொண்டு விளங்கிய நன்னனையே நாட்டினின்று வெருட்டி யோட்டிய தறுகண்மை மிக்கவர் கோசர் என்பது குட்டுவனுக்கு நன்கு தெரிந்த செய்தி. மேலும், அவர்கள் விற்போரில் அந் நாளில் சிறந்து விளங்கினர். அதனால் அவன் வில்லோர் பெருமகனான பிட்டங் கொற்றனைத் தனக்குத் துணைபுரியுமாறு வேண்டினான். பிட்டனும் தன் வில் வீரருடன் குட்டநாடு போந்து அங்கே குட்டுவன் தன்னுடைய படையுடன் போதரக் கொங்கு நாட்டிற் புகுந்து குறும்பு செய்தொழிகிய கோசரது விண்மைச் செருக்கை வீழ்த்தினான்.

கோசர்கள், தாம் இளமையில் விற்பயிற்சி பெற்றபோது எவ்வண்ணம் அம்பு எய்வரோ அவ்வண்ணமே எய்வதாகப் பிட்டன் கருதினான். அவர் சொரிந்த அம்புகள் பிட்டனுடைய மனநிலையையோ வலியையோ சிறிதும் அசைக்கவில்லை. பிட்டன்  அவர்களை மிக எளிதில் வெருட்டி அவர்களது குறும்பை அடக்கினான். அவர் செய்த குறும்புகளால் அலைப்புண்ட நாட்டைச் சீர் செய்து கெட்ட குடிகளைப் பண்டு போல் நிலைபெறச் செய்தற்குப் பிட்டன் சில நாள்கள் கொங்குநாட்டில் தங்க வேண்டியவனானான். அங்கே காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் சான்றோர் அவனைக் காணச் சென்றார். அப்போது அவன் பகைவரை அடக்கும் செயலில் ஈடுபட்டிருந்தான். அவன் வினை முடித்து மீளுந்தனையும் அவன் இருந்த பெருமனைக் கண் தங்கினார். அவன் வெற்றியோடு திரும்பி வரவும் அவர் பெருமகிழ்ச்சி கொண்டு பாடினார். அப்போது, அவனது பார்வை, தன்னை அவர் போர்வினை இடத்தேயே கண்டிருக்கலாம் என்ற குறிப்பைப் புலப்படுத்திற்று. அதனை உணர்ந்தார் கண்ணனார்;

“பெரும், போர்வினையிடத்தும் நின் செவ்வி கிடைப்பது அரிதாகவுளது. போர்க்களத்தில் பகைவர் எறிதற்கு மேற்செல்லும் நின் வேற்படை வீரரை முன்னின்று நடத்துகின்றாய்; பகைவரது விற்படை எதிர்த்து மேல்வருங்கால் காட்டாற்றின் குறுக்கே நின்று அதன் கடுமையைத் தடுத்து நிறுத்தும் கற்சிறை போல அப் படையைக் குறுக்கிட்டுத் தடுத்து மேன்மை யுறுகின்றாய்; ஆகவே எவ் வழியும் நினது செவ்வி பெறுவது எம்மனோர்க்கு அரிது; செவ்வியும் இப்போதே கிடைத்தது. இதுகாறும் தாழ்த்தமையால் என் சுற்றத்தார் பசி மிகுந்து வருந்துகின்றனர்; எனக்கு இப்போதே பரிசில் தந்து விடுதல் வேண்டும்[13] என வேண்டினர். “கோசரது விற்போர் கண்ட எனக்கு, அவரது இளமைப் பயிற்சியையே அவரது விற்போர் மிகவும் நினைப்பித்தது. இளமைக் காலத்தில் அவர்கட்கு இலக்கமாய் நின்ற முருக்கமரக் கம்பம் போல நின் மார்பு காணப்பட்டது; அன்று அவர்கள் எய்த அம்புகள் பலவற்றில் ஒன்றிரண்டே அக் கம்பத்திற்பட்டது போல இன்றும் மிலச் சிலவே நின்னை அடைந்தன; அவர்களால் அக் கம்பம் வீழ்த்தப் படாமைபோல் இன்று நீ அவரது வில்வன்மையை விஞ்சி நிற்கின்றாய்” என்று அவர் குறிப்பாய் உரைத்தார்; அது கண்டு பிட்டன் பெரிதும் வியந்து அவர்க்கும் பிறர்க்கும் மிக்க பரிசில் நல்கி விடுத்தான்.

அந் நாளிலேயே தமிழகத்தின் அரசியலைச் சீரழித்து, அதன் பரப்பைச் சுருக்கி அதன் மொழியாகிய தமிழையும் கெடுத்து உருக்குலைக்கக் கருதிய கூட்டம் தோன்றி விட்டது. அதனுடைய சூழ்ச்சியும் செயல்படத் தொடங்கிவிட்டது. “நல்ல போலவும், நயவ போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும்” அச் சூழ்ச்சிகள் தொழில் செய்தன. படை மடம்படாமை ஒன்றையே கைக் கொண்டு ஏனைக் கொடை முதலிய துறைகளில் பெருமடம் பூண்பது பெருமையாக அவர்கட்கு அறிவுறுத்தப்பட்டது; அவ் வகையில் அவர்களும் அறிவறை போயினர். தமிழ்ப் புலமைக் கண்ணுக்கு அஃது அவ்வப்போது புலனாயிற்று. செவ்வி வாய்க்கும் போதெல்லாம் புலவர்கள் அதனை எடுத்துரைத்துத் தெருட்டி வந்தனர். அத்தகைய நிகழ்ச்சியொன்று சோழ பாண்டிய நாட்டில் தோன்றிற்று. சோழ பாண்டியரது ஒருமை தமிழகத்துக்குப் பேரரணமாகும் என்பதை அச்சூழ்ச்சிக் கூட்டம் உணர்ந்து அதனைக் கெடுத்தற்கு முயன்று கொண்டிருந்தது.

அதனைக் கண்டு கொண்டார், நம் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், தமிழ் அரசு வீழின், தமிழர் வாழ்வும் தமிழகத்தின் பரப்பும் தமிழ் மொழியின் மாண்பும் கெட்டழியும் என்பதைச் சால்புற உணர்த்தொழுகிய அவரது தமிழ் உள்ளம் ஒரு சிறிதும் பொறாதாயிற்று, ஒரு கால், சோழன் குராப் பள்ளித்[14] துஞ்சிய திருமாவளவனையும், பாண்டியன் வெள்ளி யம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியையும் ஒருங்கிருப்பக் காணும் செவ்வியொன்று கண்ணனார்க்கு வாய்ந்தது. உடனே அவர், “அன்புடைய உங்கள் இருவர்க்கும் இடைபுகுந்து கெடுக்கும் ஏதில் மாக்கள் உளர்; அவருடைய பொது மொழியைக் கொள்ளாது இன்றே போல்க நும் புணர்ச்சி[15] என்று பாராட்டிக் கூறினார். இத்தகைய தமிழ்ச் சிறப்புடைய காரிக்கண்ணனார் பிட்டங் கொற்றனைப் பெரிதும் பாராட்டிப் பாடிய குறிப்பு நல்லிசைச் சான்றோர் பலர்க்குப் பிட்டனைக் காண்டல் வேண்டும் என்ற விருப்பத்தை உண்டு பண்ணிற்று. பலரும் கொங்கு நாடு போந்து பிட்டங்கொற்றனைக் கண்டனர். அவர் அனைவரையும், பிட்டன் தன் பெருமையும் அன்பும் விரவிய வரவேற்பளித்து மகிழ்ந்தான். அவர்களுள் ஆனிரையும் நெல் வயலும் வேண்டினாருக்கு அவையும், சிலர்க்கு நெற்குவையும், சிலர்க்குப் பொற்குவையும், சிலர்க்குப் பொற்கலங்களும் சிலர்க்குக் களிறும் தேரும் எனப் பரிசில் வகை பலவும் வரிசை பிறழாது நல்கினான்.

இவ்வாறு பிட்டன்பால் வந்த சான்றோருள், உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் ஒருவர். அவர் வந்திருந்தபோது ஒற்றர்கள் சிலர் போந்து பகைவர் தம்முட் பேசிக் கொள்வனவற்றை எடுத்துரைத்தனர். உறையூர் மருத்துவனார் அப்பகைவேந்தரது ஒற்றர் செவிப்படுமாறு, “பகைவர்களே, கூர்வேல் பிரிட்டன் மலைகெழு நாடன்; அவனைப் பகைத்துக் குறுகுதலைக் கைவிடுவீர்களாக; தன்பால் உண்மை அன்புடையார்க்கே அவன் எளியன்; பகைவர்க்கோ எனின், கொல்லன் உலைக்களத்தில் இரும்பு பயன்படுத்தும் கூடத்துக்கு சம்மட்டிக்கு இளையாத உலைக்கல் போல்பவன் என்று உணர்வீர்களாக,[16]” என்று பாடினர்.

வடம் வண்ணக்கன் தாமோதரனார் என்ற சான்றோரும் மதுரை மருதன்இளநாகனாரும் ஆலம்பேரி சாத்தனாரும் பிறரும் பிட்டங்கொற்றனைப் பாடிப் பரிசில் பெற்று இன்புற்றனர். அப்போது அவர்களிடையே பிட்டனுடைய வள்ளன்மை பொருளாக  ஒரு சொல்லாட்டு நிகழ்ந்தது. தன்னைப் பாடி வருவோர்க்கு நம் பிட்டன் நன்கொடை வழங்குவது ஒக்கும்; அவனது கொடைமடம் ஆராயத் தக்கது என்ற முடிவு அவர்களிடையே உண்டாயிற்று. அப்போது அங்கே இருந்த காவிரிப்பூம்பட்டினத்துக் காவிரிக் கண்ணனார், பிட்டனைப் பலகால் கண்டு பயின்ற வராதலால் முடிந்த முடிபாகக் கூறலுற்று, “சான்றீர், இப்பொழுது சென்றாலும், சிறிது போது கழித்துச் சென்றாலும், முற்பகல் பெற்றவன் பிற்பகல் சென்றாலும், பிட்டங்கொற்றன் தனது கொடைமடத்தால் முன்னே வந்தவன் என்னாமல் கொடுத்தலைக் கடனாகக் கொண்டு செய்பவன்; எக்காலத்தும் பொய்த்தலின்றி எம் வறுமை நீங்க வேண்டுவன நல்கிவிடுவது அவனுக்கு இயல்பு; மேலும், அவன்பால் நம்மனோர் சென்று ஆனிரை விளைக்கும் நெல்லை நெற்களத்தோடே பெறவேண்டினும், அருங்கலம் வேண்டினும், களிறு வேண்டினும், இவை போல்வன பிற யாவை வேண்டினும் தன் சுற்றத்தாராகிய பிறர்க்கு அளிப்பது போலவே நம்மனோர்க்கும் நல்குவன்[17]” என்று பாடிக் காட்டினர். கேட்டவர் யாவரும் ஒக்கும் ஒக்கும் எனத் தலையசைத்து உவந்தனர்.

பிட்டங்கொற்றன், சான்றோர் அனைவர்க்கும் அவரவர் வரிசைக் கேற்பப் பரிசில் தங்கி விடுத்தான். அதனால் தம்மை வருந்திய வறுமைத் துன்பம் கெட் நின்ற வடம வண்ணக்கன் என்னும் சான்றோர். “வன்புல நாடனான பிட்டனும் அவனுக்கு இறைவனாரும் குட்டுவன் கோதையும் அவ்விருவரையும் மாறுபட்டெழும் பகை மன்னரும் நெடிது வாழ்க; பகை மன்னர் வாழ்வு எப்போதும் பரிசிலர்க்கு ஆக்கம்[18]” என்று பாடினர். இவ்வாறே பிறரும் பாடிய பின்பு, காரிக் கண்ணனார், “இவ்வுலகத்தில் ஈவோர் அரியர்; ஈவோருள் ஒருவனாய்ச் சிறக்கும் பிட்டன் நெடிது வாழ்க; அவனது நெடிய வாழ்வால் உலகர் இனிது வாழ்வர்[19]” என்று வாழ்த்தினர்.

தலைமகன் கடமை குறித்துத் தன் காதலியைப் பிரிந்து செல்ல வேண்டியவனானான். அவன் செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் ஆற்றாமல் கண் கலுழ்ந்து அவனை நோக்கினாள். அவன் தனித்திருந்து பிரிவுக்குரியன செய்யுங்கால் அவன் மனக்கண்ணில் காதலியின் கன்னிய கண்ணிணை நீர் நிறைந்து காட்சியளித்தது. அக்கட்பார்வையைக் கூறக் கருதிய மருதன் இளநாகனார்க்குப் பிட்டனுடைய வேற்படை நினைவுக்கு வந்தது. உடனே அவர் தலைமகன் கூற்றில் வைத்து, “வானவன் மறவன் வணங்குவில் தடக்கை, ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன், பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த திருத்திலை எஃகம் போல, அருந்துயர் தரும் இவள் பனிவார் கண்ணே[20]” என்று பாடினர். இவ்வாறே தலைவியது ஆற்றாமை கண்ட தோழி, தலைகனை யடைந்து, “தலைவ, சென்று வருவேன் என்று நீ சொன்ன சிறு சொல்லைக் கேட்டதும் ஆற்றாளாய்க் கண்ணீர் சொரிந்தாள்; அவளை யான் எங்ஙனம் ஆற்றுவேன்'’ என்று கூறலுற்றாள். தோழி கூற்றைப் பாட்டுவடிவில் தர வந்த ஆலம்பேரி சாத்தனார், கண்ணீரால் நனைந்த தலைவியின் கண்களை நினைத்தலும் பிட்டனுடைய குதிரை மலையிலுள்ள சுனைகளில் மலர்ந்து நீர்த் திவலையால் நனைந்திருக்கும் நீலமலர் நினைவிற்கு வரவே,

“வசையில் வெம்போர் வானவன் மறவன்,
நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும்
பொய்யா வாய்வான் புனைகழல் பிட்டன்
மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன்
அகல் அறை நெடுஞ்சுனைத் துவலையின் மலர்ந்த
தண்கமழ் நீலம் போலத்
கண்பனி கலுழ்ந்தன நோகோ யானே[21]

என்று பாடித் தனது நன்றியினைப் புலப்படுத்தினார்.


  1. சிலப். 25: 151.
  2. அகம். 263.
  3. அகம். 93
  4. புறம். 54.
  5. Imp. Gazett. Madras. Vol. ii. p. 395-6.
  6. புறம். 168.
  7. Imp. Gazett. Mys & Coorg. p. 300.
  8. Malabar. Series. Wyanad. p. 62.
  9. Imp. Gazett.Mys.& Coorg.p.299.
  10. Malabar. Series. Wynad.p.62.
  11. Imp. Gazett. Madras. Vol. ii.
  12. புறம். 168.
  13. புறம். 166.
  14. குராப்பள்ளியென்பது இக் காலத்தே திருவிடைக்கழி என வழங்குகிறது. M. Ep. A.R.No.265 of 1925, வெள்ளியம்பலம்- மதுரை மாடக் கூடலின் ஒருபகுதி.
  15. புறம். 58.
  16. புறம். 170.
  17. புறம். 171.
  18. புறம். 171.
  19. புறம். 171.
  20. அகம். 77.
  21. அகம். 77.