சேரமன்னர் வரலாறு/20. முடிப்புரை:
தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து என்னும் நூலைத் துணையாகக் கொண்டு இதுவரையும் பண்டை நாளைச் சேர மன்னர்களின் வரலாற்றை ஒருவாறு நிரல்பட வைத்துக் கண்டு வந்தோம். இங்கே நாம் கண்டவர்களின் வேறாக ஏனைத் தொகை நூல்களுள் சிலர் காணப்படுகின்றனர். அவர்களில் குடக்கோ நெடுஞ்சேரலாதன், பெருஞ்சேரலாதன், சேரமான் அந்தை, முடக்கிடந்த சேரலாதன், இளங்குட்டுவன், நம்பி குட்டுவன், மருதம் பாடிய இளங்கடுங்கோ , கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்போர் சிறந்து விளங்குகின்றனர்.
குடக்கோ நெடுஞ்சேரலாதன் காலத்தில் சோழ நாட்டில் சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி ஆட்சி புரிந்தான். இருவர்க்கும் எக் காரணத்தாலோ பகையுண்டாகவே இருவரும் போர் செய்தனர். போர் முடிவில் நெடுஞ்சேரலாதன் இறந்தொழிந்தான். போர் செய்த இடமும் போர்ப்புறம் என அவர்கட்குப் பின் பெயரெய்துவதாயிற்று. அதனை இப்போது கோவிலடி என்பர்; கல்வெட்டுகள்[1], திருப்பேர்த் திருப்புறம் என வழங்குகின்றன. இப்போரில் வென்றோரும் தோற்றோரும் இல்லாதவாறு சேரலாதனும் பெருநற்கிள்ளியும் ஒருவர் பின் ஒருவராய் உயிர் துறந்தனர். அப்பொழுது அவர்களைக் காண்டற்குக் கழாத்தலையார் என்னும் சான்றோர் சென்றார். நெடுஞ்சேரலாதன் மாத்திரம் குற்றுயிராய்க் கிடந்தான். அவன் கழாத்தலையாரையும் அவருடன் போந்த பரிசிலர் சுற்றத்தையும் கண்டு கண்ணீர் சொரிந்து, தன் கழுத்திற் கிடந்த ஆரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பால் உணர்த்தினான். உடனிருந்த சான்றோர் பலரும் அவனது வள்ளன்மையை நினைந்து வியந்து வருந்தினர். “நின் வெற்றி கண்டு பாடிக் களிறு முதலிய பரிசில் பெற வந்தோம். களிறுகள் கணை பட்டுத் தொலைத்தனர்; தேர்கள் பீடழிந்து நிலஞ் சேர்ந்தன; குதிரைகள் குருதிப்புனலில் கூர்த்தொழிந்தன; ஆகவே யாம் பாடி வந்தது. நின் தோளிடைக் கிடந்த ஆரம் பெறற்கே போலும்[2]” என்று பாடிப் பரிபுலம்பினர். சேரலாதனும் சிறிது போதில் உயிர் துறந்தான். அதனைக் கண்ட கழாத்தலையார் மனம் கரைந்து,
- “அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
- தாம்மாய்ந்தனரே; குடை துளங்கினவே;”
என்று சொல்லி, இருவரும் ஒருங்கே இறந்ததைச் சுட்டி ,
- “பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞலம்
- இடங்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
- களம்கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர் என்றும்
- உடன்வீழ்ந் தன்றால் அமரே”
அவ் வேந்தருடைய மனைவியரும் பின்னே உயிருடன் இருந்து கைம்பெண்களாய் வாழ்வதை
- “பெண்டிரும்,
- பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
- மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே[3]”
என்றும் பாடி வருந்தியுள்ளார்.
பரணர் என்னும் சான்றோர், அவர்களுடைய வீழ்ச்சி கண்டு மன நோய் மிகுந்து, யானைப்படை; குதிரைப்படை, காலாட்படை யாவும் வீழ்ந்தது கூறி, அரசர் இருவரும் வீழ்ந்த நிலையை,
- “சாந்தமை மார்பில் நெடுவேல் பாய்ந்தென,
- வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர்”
என்று எடுத்துரைத்தார். அப்போது அவர்களை இழந்த நாடுகளின் நலத்தை எண்ணி, அவர்களுடைய நல்லரசால் நல்வாழ்வு பெற்று இனிதிருந்த நாடு என்னாகுமோ? என ஏங்கி,
- "இனியே
- என்னா வதுகொல் தானே கழனி
- ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
- பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
- யாணர் அறாஅ வைப்பின்
- காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே”[4]
எனக் கையறுகின்றார்.
பெருஞ்சேரலாதன்: சேரமான் பெருஞ்சேரலாதன் பெயர் சில ஏடுகளில் பெருந்தோள் ஆதன் எனவும் காணப்படுகிறது. இவன் காலத்தே சோழநாட்டில் கரிகாலன் ஆட்சிபுரிந்து வந்தான் யாது பற்றியோ இருவர்க்கும் போர் மூண்டது. பெருஞ்சேரலாதனது பெருமை சோழன் கரிகாலன் முன் சிறுமையடைந்து விட்டது. அவன் எறிந்த வேல் பெருஞ்சேரலாதனது மார்பில் பாய்ந்து உருவி முதுகிற் புண் செய்துவிட்டது. சேரலாதன் உயிர்க்கு இறுதியுண்டாகவில்லை; ஆயினும், சேரலாதன் மானத்துக்கு அது பெரியதோர் இழுக் காயிற்று. போர் நிகழ்ந்த இடமாகிய வெண்ணி என்ற ஊரிலேயே அவன் வடக்கிருத்தல் என்ற நோன்பு மேற்கொண்டு உயிர் துறந்தான். அதனை அறிந்த கழாத்தலையார்,
- “தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
- புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
- வாள்வடக் கிருந்தனன், ஈங்கு
- நாள்போற் கழியல் ஞாயிற்றுப் பகலே [5]“
என்று பாடி வருந்தினர்; வெண்ணியென்னும் ஊரவரான குயத்தியார் என்ற புலவர் பெருமாட்டியார் பெரிதும் வியந்து பெண்மையால் மனங்குழைத்து,
- “களவியல் யானைக் கரிகால் வளவ
- சென்றமர் கடந்தநின் ஆற்றல் தோன்ற
- வென்றோய்; நின்னினும் நல்லன் அன்றே
- கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
- மிகப்புகழ் உலகம் எய்திப்
- புறப்புண் நாணி வடக்கிருந் தோனே"[6]
என்று பாடினர்.
இவ்வாறு இச் சேரமான் புறப்புண் நாணி வடக்கிருந்து உயர் துறந்த செய்தி சேர நாடு சென்று சேரவும், அந்நாட்டு மறச்சான்றோர் பலர் தாமும் அவன் போலவே உயிர் துறந்தனர் என ஆசிரியர் மாமூலனார் கூறுகின்றார்.
சேரமான் அந்தை: இவர் பெயர் எந்தை என்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது. அந்தை என்பது இவரது இயற்பெயர். பண்டை நாளில் அந்தை ஆந்தை என்பன மக்கட் பெயர் வகையாக இருந்துள்ளன. கோட்டையூர் நல்லந்தையார் என்றொரு சான்றோர் சங்க நூல்களில் காணப்படுகின்றார். இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் இவர் பாடிய பாட்டுகள் தொகை நூல்களில் உள்ளன.
புதுமணம் செய்து கொண்டு மனை வாழ்வில் இன்புற்றிருக்கும் செல்வக் காதலரிடையே கடமை காரணமாகக் காதலன் பிரிந்து செல்ல வேண்டியவனாகிறான். அவனது குறிப்பறிந்த காதலிக்கு அவன் பிரிவு வருத்தம் செய்கிறது. “நீர்வார் கண்ணாய், நீ இவண் ஒழிய யாரே பிரிகிற்பவரே[7] ? என்று தோழி தேற்றுகிறான். பின்பு ஒருவாறு அவளைத் தேற்றிவிட்டு அவன் சென்று விடுகிறான். சென்ற விடத்தே அக் கட்டிளங்காதலன் கண்ணெதிரே, கானம் தளிர்த்துப் பூத்து இனிய காட்சியால் அவன் உள்ளத்தை ஈர்க்கின்றது. தான் பெறும் இன்பத்தைத் தன் காதலியோடு உடனிருந்து நுகர்தற் கில்லாமையை நினைந்து அவன் வருந்துகிறான். அதனை எண்ணிய இச் சேரமானார்,
- “காடணி கொண்ட காண்தகு பொழுதின்
- நாம்பிரி புலம்பின் நலம்செலச் சாஅய்
- நம்பிரிவு அறியா நலனொடு சிறந்த
- நற்றோள் நெகிழ வருந்தினன் கொல்லோ”
எனக் கூறி வருந்துவதாகப் பாடி நல்லிசைச் சான்றோர் நிரலை எய்திவிடுகின்றார்.
சேரமான் முடக்கிடந்த நெடுஞ்சேரலாதன்: இச் சேரமானை முடம் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்றும் முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்றும் ஏடுகள் குறிக்கின்றன. இதனால் இவன் முடக்கு நோயால் வருந்தினவன் என்பது புலனாகிறது. நோயின் நீங்கினாலன்றித் தெளிவான கருத்தமைந்த அகப்பாட்டு எழாமையால், இவன் முடக்கு நோயை வென்று உயர்ந்தமை தோன்ற நிற்கும் முடக்கு இடந்த நெடுஞ்சேரலாதன் என்ற பாடம் பொருத்தமாக மேற்கொள்ளப்பட்டது.
இச் சேரலாதன் வரலாறு ஒன்றும் தெரியவில்லையாயினும், இவன் சீரிய புலமைச் செல்வன் என்பது இவன் பாடிய அகநானூற்று நெய்தற் பாட்டு ஒன்றால் இனிது தெரிகின்றது. நற்பண்புகளெல்லாம் உருவாய் அமைந்த தலைவன் தன் கண்ணுக்கும் கருத்துக்கும் ஒத்த தலைவிபால் காதல் கொண்டான்; அவளுக்கும் அவன்பால் காதலுண்டாயிற்று. இவ்விருவரும் தம் உள்ளத்தே தோன்றிய காதலைக் களவு நெறியில் வளர்த்து முடிவில் கடிமணம் செய்து கொள்ளும் கடன்மை மேற்கொண்டனர். நங்கையின் காதல் முறுக்கிக் பெருகி அவனை இன்றி அமையாத செவ்வி எய்தவும், அவன் கடிமணத்தை விரைந்து நாடாது சிறிது காலம் தாழ்க்கலுற்றான். அவனைக் கடிமணத்தில் கருத்தைச் செலுத்துவிக்கக் கருதுகிறான் தோழி. அவன் காலம் தாழ்த்துவதால் நங்கையின் மேனி வாடுகிறது. அதனையும் தோழி காண்கிறாள். ஒருநாள் அவன் வரவு கண்ட தோழி அவனை நோக்கி,
- "பெருமை என்பது கெடுமோ ஒருநாள்
- மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
- தண்நறுங் கானல் வந்து நும்
- வண்ணம் எவனோ என்றனிர் செலினே“
என்று வினவுகின்றாள்.
பெரியோருடைய பெருமை என்பது, பிறர்நலம் பாராட்டலும் பிறர்க்கு உளதாகும் குறையறிந்து தாங்கலுமாகும். நாடோறும் இங்கே வந்து இவளது நலம் பாராட்டுவதாகிய பெருமைப் பகுதியை மாத்திரம் மேற்கொண்டு செய்கின்றாய். இந் நங்கைக்கு உண்டாகிய வண்ணக் கேட்டினைக் கேட்டறிதல் பெருமையன்று எனக் கருதகின்றவர் போல வாளாது போகின்றாய்; ஒரு நாளைக்கேனும் யாங்கள் மனம் தெளியக் கேட்பீராயின், எனக்கு அது மிக்க ஆறுதலையாகும்; நும் பெருமைக்கும் சிறப்பாம் என்றெல்லாம் சொல்லக் கருதிய தோழி, சுருங்கிய சொற்களால் பெருமை யென்பது கெடுமோ?” என்று சொல்லுகிறாள். இதனைக் கேட்டதும் அந்தக் காதலன், “ஏன் இவள் இங்ஙனம் இன்று பேசுகிறாள் என நினைக்கின்றான். தோழி இதனைச் சொல்லுதற்கு முன்பு அவள் உரைத்தவை அவன் நினைவுக்கு வருகின்றன. பெருங் கடலுள் கிடக்கின்ற மீன்களை அவ்விடத்தினின்றும் தமது வலையால் நீக்கிக் கரைக்குக் கொணர்ந்து இரப்பவர்க்கும் தம் இனத்தவர்க்கும் வழங்கி, மீனாகிய உயிர்களை வருந்தினோமே என்ற உணர்ச்சியின்றி மீன் வேட்டுவர் மணற்குன்றிலே உறங்கும் துறைவனே என்ற கருத்துப்பட,
- “நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலைக்
- கடல்பாடு அழிய இனமீன் முகந்து
- துணைபுணர் உவகையர் பரத மாக்கள்
- இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி...
- பெருங்களம் தொகுந்த உழவர் போல
- இரந்தோர் வறுங்கலம் நிறைய வீசிப்
- பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக்
- கோடுயர் திணிமணல் துஞ்சும் துறைவ,
- பெருமை என்பது கெடுமோ?”
என்றான். இதனை நினைத்தபோது, பெருங்குடியிற் பிறந்திருக்கின்ற இவளை நின் காதல் வலையால் நின் வயமாக நீக்கிக், கடிமணம் புரிந்து கொள்ளக் காலம் தாழ்த்து வருத்தி இவள் மேனி வேறுபடுவது கண்டு பிறரெல்லாம் பலப்பல குழும்படி அலராக்கிவிட்டுத் துயரமின்றி நின் மலையின்கண் நீ உறங்குகின்றாயே என்ற கருத்து உள்ஸ்ரீத்தப்பட்டது தெரிகிறது. பின்னர் அவன் அவளை விரைவில் வரைந்து கொள்கிறான். இங்ஙனம் சிந்திக்குமிடத்துச் சிறந்து செந்தேன் முந்திப் பொழியும் முழுநலம் அமைந்த சொற்களைத் தொடுத்துப் பாடும் இச் சேரமான் பாடல் உள்ளுதோறும் உள்ளம் இனிக்கும் உயர்வமைந்ததாகும்.
சேரமான் இளங்குட்டுவன்: இச் சேரமானுடைய பெயரை நோக்கும் போதே இவன் குட்டநாட்டு அரசர் குடிகள் ஒன்றில் தோன்றியவன் என்பதை அது காட்டிவிடுகிறது. இவனைப் பற்றி அரசியல் குறிப்பொன்றும் இதுகாறும் கிடைக்கவில்லை. இளங்கடுங்கோ, இளஞ்சேரல், இரும்பொறையென்றாற் போலச் சேரமன்னர் நிரலுள் இவன் இளங்குட்டுவன் எனப்படுகின்றான் தான் தோன்றிய குட்டுவர் குடியில் இவன் இளைய னாதல் பற்றி இவனை இளங்குட்டுவன் என்றனர். இவன் பாடிய பாலைப் பாட்டு ஒன்று அகநானூற்றில் உளது. வேறே இவன் பாடிய பாட்டுகளும் இல்லை.
காதலொழுக்கம் பூண்ட, பண்புடைய இளையர் இருவர் இடையே ஒருவரை யொருவர் இன்றியமையாத காதலன்பு மிகுந்தது. காதலியை மணந்து கோடற்குரிய முயற்சியில் காதலன் ஈடுபட்டிருக்கையில், வேற்றவர் மணப் பேச்சும் பெற்றோர் மகள் மறுப்பர் என்ற குறிப்பும் முற்பட்டெழுந்தன. காதல் மகளின் கற்பறம் அறியாத பெற்றோர் பால் இருந்து அறம் கெடுதலை விரும்பாத அவள், பெற்றோர் செயலைத் தன் காதலனுக்கு உணர்த்துகிறான். கற்பறம் காத்தற்கண் மணமாகு முன்னே காதலனுடன் தனிமையில் உடன்போதலைக் கற்புடைய பெண்ணுக்கு அறமாம் என்பது தமிழ் நூலோர் முடிபு. அதனால் ஒருநாள் இரவில் யாவர் கண்ணுக்கும் தெரியாமல் இருவரும் கூடி அவனுடைய ஊர்க்குச் சென்று அங்குள்ள சான்றோர் அறிய மணம் முடித்துக் கொள்ளுகின்றனர்.
அந் நிலையில் மகட்போக்கிய தாய் செவிலியிடம் மகளியல்பு சொல்லி வருந்துகின்ற துறை அமைந்தது இந்த இளங்குட்டுவனாரது பாட்டு. தன் மகள் போகிய காட்டு வழியின் கடுமையும், அருமையும், மகளினுடைய மென்மையும் தாய் சொல்வதாக இந்தச் சேரமான் வகுத்துரைக்கும் இப் பாட்டு நம்மை இன்புறுத்துகிறது. மகளின் இளமையையும் மென்மையையும் நினைத்த தாய்,
- “நோகோ யானே; நோக்கும் உள்ளம்;
- அந்தீங் கிளவி ஆயமொடு கெழீஇப்
- பந்துவழிப் படர்குவ ளாயினும் நொந்து, தனி
- வெம்பும்மன்; அளியள் தானே”
என்று சொல்லிக் கண்ணீர் வடிக்கிறாள். இத்துணை மென்மையுடையவள் “உம்மைப் பிரியும் மன வன்மையை எவ்வாறு பெற்றாள்? தன் பிரிவால் நீவிர் வருந்தும் வருத்தத்தை அவள் எப்படி நினையாளாயினாள்? என்பன போன்ற வினாக்கள் கேட்போர் உள்ளத்தில் எழும் அன்றோ! அவற்றிற்கு விடை கூறுவாள் போல, அவள் மிக்க மென்மை யுடைய வளாகவே இதுவரை இருந்தாள்; அந்த வன்கணாளனால் (காதலனால்) இப்போது இவ்வளவு வன்மையும் ஊட்டப் பெற்று எமது துன்பத்தை நினையாமல் அக் காளையின் பின் செல்வாளாயினாள்” என்று சொல்லுவாளாய்,
- “நனிவெம்பும்மன் அளியள் தானே; இனியே
- வன்கணாளன் மார்புற வளைஇ
- இன்சொல் பிணிப்ப நம்பி, நங்கண்
- உறுதரு விழுமம் உள்ளாள்”
என்று தாய் மொழிகின்றாள். காதலனாகிய வன் கணாளன் தன் மகட்கு வன்மை ஊட்டிய திறத்தை, “மார்புற வளைஇ, இன்சொல் பிணிப்ப நம்பி” என்பதனால் மிகவும் அழகுறுச் செப்புகின்றாள். மகளை நினைக்குந்தோறும் தன் மனத்தெழுந்து மிகும் துயரத்தை “நங்கண் உறுதரும் விழுமம்” என்று செல்வது மிக்க நயம் வாய்ந்தது. உறுதரும் என்பது உண்டாகி மிகும் என்று பொருள்படும்.
நும் மகளைக் கொண்டு சென்றவனை வன்கணாளன் என்று சொல்லுகின்றீர்கள்; ஆகவே, வழியில் உண்டாகும் ஏதங்களை அவன் தனது வன்கண்மையால் போக்கி அவளை மகிழ்விப்ப னன்றோ? என்று இதனடியாகக் கேட்போர் உள்ளத்தில் ஒரு கேள்வி எழும் அதனையும் அவள் எண்ணியே, “வழியில் ஆறலைக் கள்வராலும் விலங்குகளாலும் ஒரு தீங்கும் உண்டாகாது என்பதை அறிவேன்; பகை போக்குவதில் அவனது வன்கண்மை ஒப்புயர்வற்றது; அவள் செல்லும் பாலை நிலத்தின் கொடுமைதான் என் நெஞ்சை நீராய் உருக்குகின்றது” என்பாளாய்.
- “தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு
- உறுவளி ஒலிகழைக் கண்ணுறுபு தீண்டலின்
- பொறிபிதிர்பு எடுத்த பொங்கெழு கூரெரிப்
- பைதறு சிமையப் பயம் நீங்கு ஆரிடை”
என்று உடல் வியர்த்து வருந்துகிறாள். “தெறுக திர் உலைஇய வேனில்” என்றதனால், வெயில் வெம்மையும், ‘'உறுவளி ஒலிகழைக் கண் உறுப்பு தீண்டலின் பொறி பிதிர்பு எடுத்த பொங்கெழு கூரெரி'’ என்றதனால், மூங்கில்கள் காற்றால் ஒன்றோடொன்று உராய்வதால் எழுகின்ற தீயின் தீமையும், “பைதறு சிமையப் பயம் நீங்கு ஆரிடை'’ என்றதனால், வழியின் செல்வருமையும் கூறுகின்றாள்.
இந் நினைவுகளால் அவள் உள்ளத்தில் தன் மகள் சென்ற வழியின் வெம்மையும் அருமையும் தோன்றவே அவற்றைப் பொறுக்கலாகாத மகளது மென்மையும் உடன் தோன்றுவதாயிற்று. அதனால், உளம் புழுங்கி, இவ் வழிகள் அவளுடைய “நல்லடிக்கு அமைந்தன் வல்ல; மெல்லியல்; வல்லுநள் கொல்லோ ?'’ என்று சொல்லிக் கதறிக் கண்ணீர் சொரிகின்றாள். அதனை, தன் நெஞ்சில் தோன்றிய முறையிலேயே, அவள்,
- “ஓங்குவரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
- மீனோடு பொலிந்த வானின் தோன்றித்
- தேம்பாய்ந்து ஆர்க்கும் தெரியிணர்க் கோங்கின்
- காலுறக் கழன்ற கள்கமழ் புதுமலர்
- கைவிடு சுடரின் தோன்றும்
- மைபடு மாமலை விலங்கிய சுரனே”
என்று சொல்லுகிறாள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த செவிலியோ மகளது காதலொழுக்கத்தை அறிந்தவள். “தெரியிணர்க் கோங்கின், காலுறக் கழன்ற கள்கமழ் புதுமலர், கைவிடு சுடரின் தோன்றும்’ என்று அவன் கூறியதையே எடுத்துச் சொல்லி, காற்று வீச இணர்களிலிருந்து கழன்று வீழும் புதுப் பூ கை விளக்குச் சுடர்வது போல ஒளிவிடும் என்றாயன்றோ! கோங்கு போன்ற நின்பால் தோன்றி முதுக்குறைவு முற்றிய நின் மகள் காதற்செவ்வி அலைத்தலால் தனது பிறந்த இல்லினின்றும் நீங்கித் தன் காதலுனுடன் சென்றது, யாவரும் புகழ்தற்குரிய சிறந்த கற்பொழுக்கமாயிற்று என்று இயம்பித் தாயைத் தேற்றினாள். இச் செய்தியை உய்த்துணருமாறு வைத்த இந்த இளங்குட்டுவனது புலமை நலத்தை நோக்கின், இச் சேரமான் நல்லரசு நடத்தி நல்லோர் பரவ வாழ்ந்த பெருந்தகை என்பது தெளிய விளங்குகிறது. தான் கூறுவதைக் கேட்போர் உள்ளத்தில் எழக்கூடிய கருத்துகளை, அந் நெறியிலே முன்னுணர்ந்து அவற்றுக்கு ஏற்ற சொற்களைத் தொடுப்பது ஒன்றே இதற்குப் போதிய சான்று பகர்கின்றது.
சேரமான் நம்பி குட்டுவன்: செல்கெழு குட்டுவன், வேல்கெழு குட்டுவன், செங்குட்டுவன், இளங்குட்டுவன் என்றாள் போல இச்சேரமான் நம்பி குட்டுவன் எனப்படுகின்றான். இவனும் இளங்குட்டுவன் போல ஏற்றமான புலமைச் சிறப்புடையன். இவன் பாடியனவாக நற்றிணை, குறுந்தொகை முதலிய தொகை நூல்களில் சில பாட்டுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவன் வரலாற்றை அறிதற்குரிய சான்றுகள் கிடைக்கவில்லையாதலால் இக்குட்டுவனுடைய பாட்டுகளின் நலத்தை அறிவது இவனைப் பற்றி ஓரளவு அறிந்தவாறாகும்.
தலைமைப் பண்புகள் நிறைந்த தக்கோன் ஒருவனும் அவ்வியல்பேயுடைய நங்கை யொருத்தியும் தனிமையிற் கண்டு காதலுற்றுக் களவொழுக்கம் மேற்கொண்டுள்ளனர். விரைய வரைந்து கொள்ளாது, தலைமகன் களவின்பத்தையே விரும்பி யொழுகுவது அவளுக்கு வருத்தம் பயக்கின்றது. அதனைத் தோழி அறிகிறாள். வரைவு என்பது இன்னானுக்கு இன்னவள் உரியவள் என்று பெற்றோரும் சான்றோரும் கூடிப் பலரும் அறிய உறுதி செய்வது. அதன் பின்னரே கடிமணம் நடைபெறும். அதனைப் பழந்தமிழ் நூல்கள் வதுவை மணம் என்று குறிக்கின்றன. வடநூல் கூறும் காந்தருவ மணத்துக்கும் பலரும் அறிய நிகழ்த்தும் வதுவை மணம் நடந்தே தீர வேண்டுமென்ற கட்டுப்பாடு இல்லை, தமிழ்நூல் கூறும் களவுக்கு கற்புமணம் நடந்தே தீர வேண்டும்; அதன் பின்பே இருவரும் உடனுறைந்து செய்யும் மனையறம் தொடங்கும். வரைவு இடையீடு படுகிறபோதுதான் உடன்போக்கு நிகழும். அவ்வுடன் போக்கும் முடிவில் திருமணத்தால் தான் முற்றிக் கற்பு நெறியாகும் தனித்துக் கண்டு காதலுறும் வகையில் களவும் காந்தருவமும் ஒன்றாய்த் தோன்றுதல் பற்றிக் களவு காந்தருவம் போன்றது என்பர்; என்றாலும் முறையும் பயனும் வேறுபட்டுப் போவதால் களவு காந்தருவமென்றும், காந்தருவம் களவு என்றும் கருதவது குற்றம்.
மேலும், களவுக் காலத்தில் தன் உள்ளத்துக் காதலைப் பிறர்க்குத் தெரிவிப்பதில் ஆண்மகனுக்கு உரனும் வாய்ப்பும் உண்டு. பெண்மகளோ எனின் அதனை வெளியிடமாட்டாள். அவளுடைய மேனியும் செய்கையும் எய்தும் வேறுபாடு கண்டு உரியவரால் உய்த்துணரப்படும் இந்நிலையில், காதலித்த பெண்ணை முற்பட முயன்று வரைந்து கொள்வதற்கு ஆண்மகனுக்கு ஏற்ற தகுதியுளதென்றாலும், வரைவு பற்றிய தூண்டுதலை அவன் தன் காதலிபால் எதிர்பார்க்கிறான் அதன் வாயிலாக அவன் உள்ளத்துக் காதல் இயல்பை நன்கு அறியும் நிலைமை உண்டாகிறது; அதனை அறிவதற்கே அவன் நெஞ்சும் அவாவி நிற்கிறது. அதனால் அவன் விரைவில் வரைவதை விரும்பாதான் போலக் களவொழுக்கத்தை நீட்டிக்கின்றான். அவன் கருத்தை அறியாமையால், அது தலைமைக் குணத்தால் சிறந்த தலைமகட்கு வருத்தம் தருகிறது. அதனை அறிந்த தோழி, ஒருகால் தலைமகன் தலைமகள் இருக்கும் பெருமனையின் ஒரு சிறையில் வந்து நிற்கக் காண்கின்றாள். தான் கூறுவதைக் கேட்டு வரைவின்கண் அவன் கருத்தைச் செலுத்தக் கருதுகிறான். தலைமகளோடு உரையாடுபவள் போல அவன் கேட்கத்தக்கதோர் இடத்தே நின்று, “தோழி, நம் காதலர் நம்மை விரைந்து வரைந்து கொள்ளாமையால் நமக்கு அவருடைய நட்பு மனத்தில் அச்சத்தை எழுப்புகின்றது. முன்பெல்லாம், நம்மிடத்தில் அவருக்கிருந்த காதல் இப்பொழுது குறைந்திருக்கிறது; அவ்வாறு இருக்க, அறவுணர்வில்லாத அன்னை, அவர் நம்பால் பேரன்பால் கூடினவர்போல் நினைத்து ‘அவன் யாங்கு உளன்?’ என்று கேட்கின்றாள். இனி அவர் வருவது அறிந்து நாம் எழுவோமாயின், நமது களவை அறிகுவள்; ஆனால் அவருடைய தேரிற் கட்டிய மணியின் ஓசை நள்ளிரவில் நம் ஊரின்கண் கேட்கின்றதே, இதற்கு என் செய்வேன்” என்று சொல்லுற்றாள்[8]”.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்தான் தலைமகன். அன்னை அறிந்தமையும், காதலியும் தோழியும் மனைக் காவலால் தன்னை வந்து காணமாட்டாமையும் எண்ணி, அவள் மனையோர், அறிவார் என்று அஞ்சி நீங்குகின்றான். நீங்குபவன், வரைந்து கோடலே இனி செய்தற்குரியதென அதற்கு வேண்டிய முயற்சியில் ஈடுபடுகின்றான்; காலம் சிறிது நீளுகிறது. அவனைச் சின்னாளாய்க் காணப் பெறாமையால் காதலியாகிய தலைகள் மனநோய் மிகுந்து மேனி வாடுகின்றாள். “சில நாள்களாய் நாம் அவரைக் காணப் பெறாமையால் அவர் வரைவிற்குரிய முயற்சி மேற்கொண்டுள்ளார் என்பது மெய்யேயாகும்; நீ அதுவரை பொறுத்திருக்க வேண்டும்” எனத் தோழி சொல்லுகிறாள். இந் நிலையில் ஒருகால் அவன் வந்து தலைவியினுடைய மனையின் சிறைப்புறமாக நிற்கின்றான்: அதனைக் கண்டுகொள்கிறான் தலைமகள். அவன் செவிப்படுமாறு தன் தோழிக்கு உரைப்பவள் போல, “தொழி, நமது வருத்தமும் கைம்மிக்கு விட்டது. மெய்யும் தீயுமிழ் தெறலின் வெய்தாயிற்று, நீ பையச் சென்று அன்னையிடம் இவளை நம் மனைமுற்றத்தில் கொண்டு கிடத்தினால் இவள் பெரிதும் நந்துவள் என்று சொல்லுக; அதனால் இந்நோயைச் செய்த தலைமகனது குறைத்து நெடிய பக்கத்திற் படிந்து வரும் காற்று என் மேனியிற் படிந்த பாலையைச் சிறிது தீண்டும்[9]” என்று சொல்லாடுகின்றாள். இதனால் தலைமகளது காதல் மிகுதியைத் தலைமகன் செவ்வையாக உணர்ந்து ஊக்கம் மிகுகின்றான்.
இவ் வண்ணம் நாள்கள் சில செல்ல, ஒரு நாள் தலைமகன் தானே தலைவிக்குத் தான் கடிதில் வரைய இருப்பதாகவும் அதுகாறும் அவள் ஆற்றியிருக்க பேண்டுமெனவும் நேரிற் கூறல் வேண்டி வருகின்றான். அவனைத் தோழி எதிர்ப்பட்டு, கருத்தறிந்து கொண்டு, “அன்ப,
- “அரிய பெரிய கேண்மை ; நும்போல்
- சால்பு எதிர் கொண்ட செம்மை யோரும்
- தேறா நெஞ்சம் கையறுபு வாட
- நீடின்று விரும்பா ராயின்
- வாழதல்மற்று எவனோ? தேய்கமா தெளிவே”[10]
என்று சொல்லி அவன் கூற்றை மறுக்கின்றான்.
இதன்கண் மற்றொரு செய்தியையும் அவள் கூறாமல் கூறுகின்றாள். “நின் நாட்டுக் கழிகளில் ஆம்பல்கள் நிறையவுள்ளன. கானலில் காய்ந்த கண்டல்களின் பசுங்காய் கழன்று கழியில் வீழ்கின்றன; அதனால் மலரும் பருவத்தில் இல்லாத ஆம்பற் போதுகள் காய்களால் மோதுண்டு வாய்விரிகின்றன காண்” என்பாளாய்,
- “கானற் கண்டல் கழன்றுகு பைங்காய்
- நீனிற இருங்கழி உட்பட வீழ்ந்தென
- உறுகால் தூக்கத் தூங்கி ஆம்பல்
- சிறுவெண் காக்கை ஆவித் தன்ன
- வெளிய விரியும் துறைவ”
என்று எடுத்துரைக்கின்றாள். “அயலார் அலர் தூற்றுவர் என்ற அச்சத்தால், இதுவரை நாணம் முதலிய பண்புகளால் வாய் திறவாதிருந்த இவள் இப்போது வாய்விட்டே புலம்பத் தொடங்கிவிட்டாள்” என்ற கருத்து இதன்கண் உள்ஸ்ரீத்தப்பட்டிருக்கிறது.
பிறிதொருகால், தோழி, அவனைக் கண்டு, தலைவியின் மேனி வேறுபட்டால் ஊரில் அலர் தோன்றிவிட்டது; இனி இது என்னாய் முடியுமோ என்பாளாயினாள். அப்போது அவள், தலைமகளை நோக்கி உரைக்கலுற்று,
- “முடக்கால் இறவின் முடங்குபறப் பெருங்கிளை
- புணரி இருதிரை தரூஉம் துறைவன்
- புணரிய இருந்த ஞான்றும்
- இன்னது மன்னோ நன்னுதல் கவினே”[11]
என்று சொல்லுகின்றாள். “நுதல்கவின் இன்னது” என்றது, நினது நுதலழகு பசலையுற்றுப் பிறர் அலர் தூற்றுதற்கு ஏதுவாயிற்று என்பதாம்.
இவ் வண்ணம் தலைமகளும் தோழியும் அவ்வப் போது கூறிய வரைவுக் குறிப்புகள் அவர்களது காதல் அவத்தை எடுத்துக் காட்டவே, அவனும் சான்றோரைக் கொண்டு வரைந்து வதுவை மணம் செய்து கொண்டு மனையறம் புரிவானாயினன்.
மனை வாழ்வில் வினை குறித்தும் பொருள் கருதியும் ஆண்மகன், மனையின் நீங்கி வேற்றூர்க்குச் செல்வது இயல்பு. அப் போதுகளில் மனைவியாகிய காதலி அவன் பிரிவாற்றாது கண்துயில் இன்றிக் கையற்று வருந்துவாள். அதனை அறியும் தோழி, “வினையே ஆடவர்க்கு உயிர்; அவர்கள் அதனை முடித்து வரும் துணையும் நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என வற்புறுத்துவள். அது கேட்கும் தலைவி, ஆற்றாளாய்.
- மான்அடி யன்ன கவட்டிலை அடும்பின்
- தார்மணி அன்ன ஒண்பூக் கொழுதி
- ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்
- புள்ளிமிழ் பெருங்கடல் சேர்ப்பனை
- உள்ளேன், தோழி, படீஇயர் என்கண்ணே[12]
என்று சொல்லுகிறாள்.
இதன்கண், யான் இதுவரையும் கடற் சேர்ப்ப னாகிய நம் காதலனை நினைந்த வண்ணம் இருந்தேன்; அதனால் என் கண்கள் உறக்கம் கொள்ளவில்லை. இனி அவனை மனத்தால் உள்ளுவதைக் கைவிடுகிறேன், என் கண்கள் உறங்குக'’ என்பாளாய், “பெருங்கடல் சேர்ப்பனை உள்ளேன், தோழி, என் கண் படீஇயர்” என்று இசைக்கின்றாள். மேலும் இதனுள் நம் சேரமான் வேறொரு பொருளையும் அமைத்துள்ளார்; ஒண்டொடி மகளிர் அடும்பின் பூக்களைக்கொழுதி வண்டல் விளையாட்டயர்வர் என்றது மகளிர் விளையாட்டு ஒன்றையே கருதி அடும்பின் பூக்களை அலைப்பது போல நம் தலைவன் நான் மேற்கொண்ட வினையும் பொருளுமே கருதி என்னைப் பிரிந்து வருந்துகின்றான், இதனை நீ அறியவில்லையோ?'’ என்ற கருத்து ஒன்று பொதிந்து கிடப்பதைக் காணலாம்.
மருதம் பாடிய இளங்கடுங்கோ: குட்டுவர், பொறையர் என்ற சேரர் குடிகள் தேய்ந்தபின் கடுங்கோக்குடி வகையில் தோன்றி நல்லிசைப் புலமையுலகில் சிறந்து பாலைப் பாட்டுகள் பாடிப் புகழ் பரப்பி வாழ்ந்த பெருங் கடுங்கோவக்குப் பின்பு அக் குடியில் இந்த இளங்கடுங்கோ புலமையுலகில் தோன்றுகின்றார். இவர் மருதத் திணைக்குரிய பாட்டுகள் பாடியதனால் மருதம் பாடிய இளங்கடுங்கோ எனப்படுகின்றார். பெருங்கடுக் கோவின் பாட்டுகளைப் போல இவர் பாடியனவாக அகத்தில் இரண்டும் நற்றிணையில் ஒன்றுமே கிடைத்துள்ளன.
சோழ நாட்டில் வாழ்ந்த வேளிர் குடியில் அஃதை என்பவள் தோன்றி உரு நலத்தால் உயர்ந்து விளங்கினாள். அவளை மணக்க விரும்பிப் பாண்டியர் குடியிலும் சேரர் குடியிலும் தோன்றிய செல்வர்கள் அவள் தந்தையை அணுகினர். அந் நாளில் அவர்களது நிலை தாழ்ந்து இருந்த காரணத்தாலோ எதனாலோ அவன் மகள் மறுத்தான். அதனால் இருவரும் சேர்ந்து அஃதை தந்தையொடு போர் தொடுத்தனர். அவனுக்குத் துணையாகச் சோழ வேந்தன் நின்று போர் செய்தான்; அப் போர் சோழநாட்டுப் பருவூரில் நடைபெற்றது. சேர பாண்டியர் குடித் தோன்றல்கள் போர்ப் பரிசு அழிந்து தோற்றோடினர். தோற்ற வேந்தரின் யானைகளைச் சோழர் கைப்பற்றிய போது, அங்கு உண்டான ஆரவாரம் தமிழகம் முற்றும் பரவி, இருபெரும் வேந்தர் குடிக்கும் இளிவரலைப் பயந்தது. சேர பாண்டிய செல்வர்களது செயலின் புன்மை கண்ட இந்த இளங்கடுங்கோவின் புலமையுள்ளம் வருந்திற்று. பரத்தைமை பூண்ட ஒருவன் தன் மனைவிக்கு வாயில் வேண்டி வந்தானாக, தோழி அவனுடைய மனைவி பக்கல் நின்று அவனை மறுக்கத் தொடங்கினாள். அப்போது அவள் வெகுண்டுரைக்கும், சொல்லின்கண் அச் செல்வர்கள் செயலை உவமமாக நிறுத்தி, “ஐய நீ இப்போது ஒரு பரத்தையைக் கைப்பற்றியுள்ளாய் எனப் பலரும் கூறுவர். அதனால் உண்டான அலர், அஃதை பொருட்டுப் போர் செய்து தோற்ற சேர பாண்டியரின் யானைகளைச் சோழர் கைக்கொண்ட போது எழுந்த ஆரவாரம் போல் ஊரெங்கும் பரவிவிட்டது; அதனை இனி மறைப்பதில் பயனில்லை” என்று எடுத்தோது கின்றான். அவ்வுரையில் தோற்றோடிய சேர பாண்டியர் இயற்பெயரைக் குறியாது குடிப்பழி மறைக்கும் இவரது செயல் இவருடைய மான மாண்பைக் காட்டுகிறது.
தலைமைக்கு இழுக்குத் தோன்றுதற்குக் காரணம் அவனது பரத்தைமையும் அதன்கண் அவனை உய்த்த பாணனுமாம் என்ற கருத்தைத் தமது பாட்டில் உய்த்துணர வைக்கும் இளங்கடுங்கோவின் புலமைத் திறம் நமக்கு இன்பம் தருகிறது.
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் மாக்கோதை. சேர மன்னர் குடிநிரலில் இறுதியில் நின்றது கோதையர் குடி. அக் குடியில் தோன்றிய வேந்தர்களான குட்டுவன் கோதை, கோக்கோதை மார்பன் என்போர் வழியில் இச் சேரமான் மாக்கோதை காணப்படுகின்றான். இவன் முடிவில் இறந்துபட்ட இடம் கோட்டம்பலம் என்பது. அஃது இப்போது கொச்சி நாட்டு முகுந்தபுரம் வட்டத்தில் அம்பலக்கோடு என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு உளது.
இந்த மாக்கோதை தன் மனத்துக்கினிய மங்கை ஒருத்தியை மணந்து உயிரொத்த காதலாற் பிணிப்புண்டு இனிது வாழ்ந்தான். அவள் இறந்து போகவே அவன் கொண்ட துயரத்துக்கு எல்லையில்லை. ஒருவனுக்கு மனைவியை இழப்பதால் உண்டாகும் துன்பம் மிகப் பெரிது; அதனிற் பெரியது பிறிதில்லை என அறிஞர் கூறினர். “அத்துணைப் பெரிதாயின், இங்கே என் மனைவியின் உடல் புறங்காட்டில் அடுக்கிய ஈமத்தில் எழுந்த தீயில் எரிந்து போயிற்று; அவளும் மறைந்தாள்; அதனைக் கண்டிருந்தும் என் உயிர் நீங்கவில்லை; இன்னும் யான் உயிர் வாழ்கின்றேனே! என்னே இதன் பண்பு!” என்று எண்ணினான். அந்த எண்ணம் ஒரு பாட்டாய் உருக்கொண்டது.
- “யாங்குப் பெரிதாயினும் நோய் அளவு எனைத்தே!
- உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்;
- கள்ளி போகிய களரியம் பறந்தலை
- வெள்ளிடைப் போகிய விளைவிற்கு ஈமத்து
- ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
- ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை;
- இன்னும் வாழ்வல்! என் இதன் பண்பே”[13]
என்பது அப் பாட்டு. தன் உயிரை உண்ணமாட்டாமையால், மனைவி இறந்ததால் உண்டாகிய துயரத்தை இகழ்ந்து, “யாங்குப் பெரிதாயினும் நோய் அளவு எனைத்தே” என்பது அவனது கையறவை எத்துணை மிகுத்துக் காட்டுகிறது! எனக்கும் அவட்கும் உயிர் ஒன்று என்பது உண்மையானால், அவனது உயிர் நீங்கிய போதே எனது உயிரும் நீங்க வேண்டும்; நீங்கவில்லையே, உயிர் வாழ்கின்றேனே என்பானாய், “இன்னும் வாழ்வல்” என்று இகழ்ந்தான்.
இப் பெற்றியோன் சின்னாட்கெல்லாம் உடல் நலம் குன்றக் கோட்டம்பலத்தே இருந்து இறந்து போனான், வஞ்சி நகர்க்கண் அவன் உறைந்த பகுதி மாக்கோதை என்ற பெயர் எய்திற்று. அவனைப் பள்ளிப்படுத்த இடம் மாக்கோதைப் பள்ளி என வழங்குவதாயிற்று. பின் வந்தோர் அவனைப் புத்த சமயத்தவனாக்கி அதனைப் பௌத்தப் பள்ளி என மாற்றிக் கல்லில் பொறித்து விட்டனர்.[14]
இவ்வாறே, காவிரி நாட்டிலும் பிற சமயத்தவர்க் குரிய சிராப்பள்ளி குராப்பள்ளி என்பன சைவ சமயத்துக்கு உரியவாக மாறியது காணும் வரலாற்றறி ஞர்க்கு இது புதுமையாகத் தோன்றாது.
இம் மாக்கோதை வழியில் இறுதியாக இருந்தவர் பெருமாக்கோதையாராவர். இவர் காலத்தே வஞ்சிக் களம் வஞ்சிக்குளம் எனவும், அஞ்சைக்களம் எனவும், மாக்கோதை மகோதை எனவும் மக்கள் வழக்கில் மருவத் தலைப்பட்டுவிட்டன. வஞ்சி மாநகரிடத்தே கொடுங் கோளூர் தோன்றிவிட்டது. கொடிய (வளைந்த) கடல் கொண்டவூர், கொடுங்கோளூர், முசிறித்துறைக் கடலில் மூழ்கி மறைந்தது.
இப் பெருமாக்கோதையார், சைவசமயக் குரவருள் ஒருவராகிய நம்பியாரூரர் காலத்தில் இருந்து சிவ நெறியிற் சிறந்த சேரமான் பெருமான் நாயனாராவர். இப் பெருந்தகை பாடியருளிய நூல்கள் சில சைவத் திருமுறைகளில் தொகுக்கப்பட்டிருப்பதையும் அவரது வரலாறு சேக்கிழாரால் செந்தமிழாற் பாடப்பட்டிருப் பதையும் அறியாமையால் மிக்க பிற்காலத்தே தோன்றிய கேரள மான்மியம் கேரளோற்பத்தி என்று நூல்கள் அவர் முகமதியராகி மெக்காவுக்குப் போய்விட்டார் எனப் பொய்யெழுதிவிட்டன. பிற்காலக் கல்வெட்டுகள் அவர்கள் கண்ட மகோதையை மகோதையார் பட்டினம்[15] எனச் சிறிது மாற்ற . அதன்பிறகு அது மகாதேவர் பட்டணமாக்கப்பட்டது.[16] எல்லாவற்றிற்கும் முடிவில், மகாதேவர் என்ற பெயரும் போய் மகோத்தியா பட்டினமாகி இதிகாசத்தோடு தொடர்புபடுத்திக் கூறப்படுவதாயிற்று.
டாக்டர் சேய்சு, (Dr. Sayee), ஈவிட் (Hewitt) என்பார் கூறுவது[17]போலக் கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே சால்டியர், கிரேக்கர், யவனர், எகிப்தியர், சிரியர், பாபிலோனியர், கோசியர், பாரசிகர் முதலிய மேனாட்டவரும் வடபுல ஆரியரும் வந்து மக்களிடையே கலந்து கொண்டதனால் சேர நாட்டவர்களுடைய மொழியும் நடையும் உடற்கூறும் திரிந்து, தமிழ்நாட்டின்கூறு என்ற குறிப்பே தோன்றாதவாறு பெரிதும் மாறிவிட்டன.
இதுகாறும் கூறியவற்றால் பண்டை நாளைச் சேர மன்னர்கள், அறிவு, ஆண்மை , புலமை நலம் பெற்றுப் புலவர் பாடும் புகழ் பெற்று விளங்கியதும், நாடு காவல் புரிந்து நல்லிசை நிறுவியதும் ஒருவாறு காட்டப் பட்டமை விளங்கும். அவ்வேந்தர் செயல்வகைகளில் தமிழ் மொழியால் அவர்களுக்கிருந்த பற்று மிகுதி நன்கு விளங்குகிறது. அரசுக்குரிய வெற்றி முரசு இருக்கும் கட்டிலில் பிறர் யாரும் ஏறியிருத்தல் கூடாது; அஃது அரசைக் கைப்பற்றியது போலும் செயலாகும் எனவும், அப்படிச் செய்வோர் கொலைத் தண்டத்துக்கு உரியர் எனவும் தமிழரசு கருதியிருந்தது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை காலத்தில் மோசிகீரனார் என்ற தமிழ்ச் சான்றோர் முறைமை தெரியாமல் முரசு கட்டிலில் கிடந்து உறங்கிவிட்டார். செய்தி தெரிந்ததும் வேந்தன் சினத்துடன் அவரை நெருங்கினான். தமிழ் முழுதறிந்த சான்றோர் என்பது தெரிந்து அவருக்கு அவன் தன் கையில் விசிறி கொண்டு வீசலுற்றான். சான்றோர் விழித்தெழுத்து அவனுடைய தமிழன்பை வியந்து பாராட்டி அரசியல் அறிவுரை பல வழங்கினார் என்ற வரலாறு நாடறிந்ததொன்று. இதனால் சேர வேந்தரின் செந்தமிழ்ப் பற்று எத்துணைச் சிறந்திருந்தது என்பது தெற்றென விளங்கும். சங்கத் தொகை நூல்களில் காணப்படும் சான்றோர் நிரலில் சேர நாட்டுச் சான்றோர் பலர் இருப்பதே மேலே கூறிய தமிழ் வளத்துக்குச் சான்று பகரும்.
இவ்வேந்தர் காலத்து அரசியல், வாணிகம், சமயம், சமுதாயம் முதலிய கூறுகள் தனித் தனியே ஆராயத் தகுவன. இவ்வரசர் பெருந்தகைகளின் வரலாற்றுக் குறிப்பும், அவை வழங்கும் கருத்துகளும் நுணுகி நோக்கின, சேரநாட்டு அரசின் கீழ் வாழ்ந்த செந்தமிழ்க் குடிகளின் சிறப்பு நமக்குப் புலனாகாது மறையவில்லை . விரிவஞ்சிப் பரிபாடல் கூறும் பாட்டொன்றைக் காட்டி அமைவாம்:
- “மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
- பூவொடு புரையும் சீரூர்; பூவின்
- இதழகத் தனைய தெருவும்; இதழகத்து
- அரும்பொருட்டு அனைத்தே அண்ணல் கோயில்;
- தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்.”
❈❈❈
(Upload an image to replace this placeholder.)
- ↑ S.I.I. Vol. VII No. 497.
- ↑ புறம். 368.
- ↑ புறம். 62
- ↑ புறம். 63.
- ↑ புறம் 65
- ↑ புறம். 66.
- ↑ குறுந்தொகை 22.
- ↑ நற். 245.
- ↑ நற். 236.
- ↑ நற். 345.
- ↑ குறுந். 109.
- ↑ குறுந். 243.
- ↑ புறம். 245
- ↑ Ep. A.R. No.609 of 1912.
- ↑ A.R. No. 481 of 1929-30.
- ↑ W. Logan’s Malabar P.207.
- ↑ The Origin and growth of religion among the Babylonians of Dr. Sayee - Hibbert Lectures for 1887.