சேரமன்னர் வரலாறு/8. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் காலத்தில், அவனுக்கு நேர் இளையவனும், அவன் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய மற்றொரு மனைவியான சோழன் மணக்கிள்ளியின் மகனுமான செங்குட்டுவன் குடநாட்டுப் பகுதியில் இருந்து தன் தமையனுக்குக் கீழ் நின்று துணை புரிந்து வந்தான். நார்முடிச் சேரல் இறந்தபின் செங்குட்டுவனே சேர நாடு முழுதிற்கும் முடிவேந்தனாயினான். செங்குட்டுவன் சிறந்த மெய்வன்மையும், பகைவரும் வியந்து பாராட்டும் திண்ணிய கல்வியறிவும், நண்பர்பாலும் மகளிர்பாலும் வணங்கிய சாயலும், பிறர்பால் வணங்காத ஆண்மையும் உடையவன். போர்கள் பல செய்து வெற்றிபெற்ற காலத்துப் பகைவரிடத்திலிருந்து பெரியவும் அரியவு மான பொருகள் பல பெறுவான்; ஆயினும், அவற்றை அத்தன்மையனவானக் கருதாது பிறர்க்கு ஈத்துவக்கும் இன்பத்தையே நாடுவது செங்குட்டுவனது சிறந்த பண்பாகும். மேலும், தனக்கு ஒரு குறையுண்டாயின், அது குறித்துப் பிறரை அடைந்து இரந்து நிற்கும் சிறுமை செங்குட்டுவன்பால் கனவினும், செங்குட்டுவன், உலகியல் பொருளின்பங்களில் மிகக்குறைந்த பற்றும், தன் புகழ் நிலைபெறச் செய்வதில் ஊற்றமும் ஊக்கமும் உடையன் எனச் சாலும்.
குடவர் கோமான் என்ற இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் ஆட்சிசெய்த காலத்தில், சோழவேந்தர் நட்புப் பெற்று அவருள் சிறந்தோன் ஒருவனுடைய மகளான மணக்கிள்ளி யென்பவளை மணந்து கொண்டான். அவளுக்குப் பிறந்த செங்குட்டுவன், இளமையில் சோழநாட்டு வேந்தன் மனையில் இருந்து சோழர்களின் குணஞ் செயல்களையும் நாட்டின் நலங்களையும் அறிந்திருந்தான். செங்குட்டுவன் குட் நாட்டில் அரசு புரந்து வருகையில், ஒருகால், சோழருட் சிலர் தம்முள் ஒருவனான கிள்ளியென்பான்[1] அரசு கட்டிலேறுவது பற்றிப் பகை கொண்டு ஒருவரோ டொருவர் பூசலிட்டனர். அதனால் நாட்டின் நலம் குறைந்தது. அந் நாளில் பாண்டி வேந்தர் அவர்களை அடக்கி நன்னிலைக்கண் நிறுத்தும் அத்துணை வலியின்றியிருந்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மோகூரில் இருந்த குறுநிலத்தலைவர்களே மேம் பட்டிருந்தனர். ஆயினும் அவர்கள் நடுநிலை பிறழ்ந்தொழுகினர். இதனால் சோழநாட்டுச் சான்றோர் சிலர், குடவர் கோமானாய்த் திகழும் செங்குட்டுவனை அடைந்து நிகழ்ந்தது முற்றும் நிலைபெறக் கூறினர்.
செங்குட்டுவன் வலிமிக்க தொரு படையைத் திரட்டிக்கொண்டு சோழ நாட்டிற்குச் சென்றான். சோழ நாட்டில் தன் மைந்தனுமான கிள்ளிவனோடு ஒன்பது சோழர்கள் போரிடுவது கண்டு அவர்களை ஒன்று படுத்த முயன்றான். அம் முயற்சி கைகூடாது போகவே அவர்களோடு தானும் போர் தொடுத்தான். அவர்களும் பலர் தம்மிற் கூடி உறையூரை நோக்கித் திரண்டு வந்தனர். செங்குட்டுவன் கிள்ளிக்குத் துணையாய் நின்று உறையூர் நேரிவாயிலிலேயே[2] அவர்களை எதிரேற்று வலியழித்தான்; அதனால் அவர்கள் மீட்டும் போர் தொடுக்கும் ஆற்றலின்றிக் கெட்டழிந்தனர். முடிவில் செங்குட்டுவன் தன்மைந்துன்னைச் சோழர் வேந்தனாக முடிசூட்டிச் சிறப்பித்துவிட்டுத் தன் குடநாடு வந்து சேர்ந்தான். இதனையே, “வெந்திறல் ஆராச் செருவில் சோழர் குடிக்குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்து இறுத்து[3] நிலைச் செருவின் ஆற்றலை அறுத்துக் கெடலருந்தானை யொடு” திரும்பினான் என்று பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது.
நார்முடிச்சேரலுக்குப் பின் செங்குட்டுவன், சேரநாட்டு முடிவேந்தனாய் வஞ்சிமாநகர் வந்து சேர்ந்தான். இவனது புகழ் பெருகுவது குடநாட்டுக்கு வடக்கிலிருந்து வட வேந்தர்களுக்கு மனக்காய்ச்சலை உண்டுபண்ணிற்று. அவர்கள் கடம்பகுல வேந்தர் எனப்படுவர். அவர்கள் நெடுஞ்சேரலாதனோடு கடற்போர் செய்து கடம்பு மரமாகிய தங்கள் காவல் மரத்தை இழந்து மீளப் போர் தொடுக்கும் பரிசிழந்திருந்தனர். அவன் வானவரம்பனாக இருந்து போய் இமயவரம்பன் என்ற இசை நிறுவிச் சிறந்தது அவர்களுடைய புகழ்க்கும் மானத்துக்கும் மாசு செய்வதாகக் கருதினர். அவன் காலத்தில் மேலைக் கடலில் சேரரும் அவர் நண்பரும் ஒழிய, ஏனோ எவரும் கலம் செலுத்துதல் இயலாது என்னும் பேரிசை நாடெங்கும் பரவியிருந்தது. அதனால் அவ் வட வேந்தர்கள் கடல் வழியாகப் போர் தொடுப்பதை விடுத்து நிலத்து வழியாக ஒரு பெரும்படை திரட்டி வரக் கருதினர். செங்குட்டுவன் குடநாட்டினின்றும் நீங்கிக் குட்டநாட்டில் அரசு வீற்றிருப்பது கண்டு குடநாட்டின் வட பகுதியில் நுழைந்து போர் தொடுத்தனர். தொடக்கத்தில் குடவர் படை வடவர் படைமுன் நிற்கலாற்றது பின்வாங்கியது. பின்பு, குட்டுவர் படை போந்து இடுப்பில் என்னுடமிடத்தே தங்கி வடவர் படையை வெருட்டவே, இரண்டும் வயலூர் என்னு மிடத்தே கடும்போர் புரிந்தன. வடவர் படை அழிந்தது; அவரது முழுமுதல் அரணம் தவிடுபொடியாயிற்று. உய்ந்தோடிய வடவர் சிலர் கொடுகூர் என்னுமிடத் திருந்த அரண்களில் ஒளித்தனர். சேரர் அதனை யுணர்ந்து இடையிலோடிய ஆற்றைக் கடந்து கொடுகூரை அடைந்து அரணையழித்து வடவர் படையைத் தகர்த்தனர். இந்த வயலூர் இப்போது பெயிலூர் என வட கன்னட நாட்டில் உளது. இடும்பில் என்பது இப்போது உடுப்பியென வழங்குகிறது. கொடுகூர் கோட்கூரு என மருவியுளது.
இவ்வாறு, தமது சேர நாட்டுப் படையெடுப்பு (வஞ்சிப்போர்) வெற்றி பயவாமை கண்ட வடவேந்தர் வேறு செயல்வகை அறியாது திகைத்து நின்றனர். மேலை நிலத்து யவனர்கள், சேரர் ஆதரவால் அச்சமின்றிப் பொன் சுமந்து கலங்களுடன் போந்து மிளகும் சந்தனமும் அகிலும் பிற விரைப் பொருளும் கொண்டு சென்று பெரு வாணிகம் செய்து பெருஞ்செல்வராயினர். அந்த யவன நாட்டுப் பொருணூலறிஞர் முற்போந்து யவன நாட்டவர் தம்மை உயர்ந்த பட்டாடையாலும் விரைப் பொருளாலும் ஒப்பனை செய்து கொள்வதில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பொன்னைச் செலவிடுவது கூடாது என்றெல்லாம் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினர். அதனைச் செவிமடுத்த சில யவனர்க்கட்குச் சேர வேந்தர் பால் வெறுப்பும் மன வெரிச்சலும் உண்டாயின. அக் குறிப்பை அறிந்த வட வேந்தர், அவர்களோடு உறவு செய்துகொண்டு சேரரைச் சீரழித்தற்குச் சூழ்ச்சி செய்தனர். நிலத்து வழியே சென்று பொருதால் சேரரை வெல்ல முடியாதென்பதை வியலூர் போர் காட்டி விட்டதனால், கடல் வழியாகப் படை கொண்டு சென்று சேரரைத் தாக்க முயன்றனர். யவனர் சிலர் அவர்கட்கு உதவி செய்தனர்.
வஞ்சிநகர்க்கண் அரசு வீற்றிருந்த செங்குட்டுவன். யவனரும் வடவரும் கூடிப் பெரியதொரு கடற்படை கொண்டு போர்க்கு வரும் செய்தியை ஒற்றரால் அறிந்தான். உடனே வில்லவன்கோதை அழும்பில்வேள் முதலிய அமைச்சர்களை வருவித்து நால்வகைப் படையும் திரட்டுமாறு ஆணையிட்டான். படைகள் பலவும் திரண்டன.
கடற்போர் செய்தற்குத் தேரும் களிறும் குதிரையும் பயன்படாமையின் அவற்றைக் கடற்கரையையும் ஏனை எல்லைப் புறங்களையும் காவல் செய்யுமாறு பணித்து, விற்படையும் வேற்படையும் வாட்படையும் கொண்ட பெரும்படையை கலங்களில் செல்லப் பணித்தான்.
சேரநாட்டுக்கு அண்மையிலன்றித் தென்பாண்டிக் கரை வழியாகப் பகைவர் நிலத்திற் புகுந்து போர் தொடுக்கக் கூடும் என்று எண்ணி, தென் பாண்டிப் பகுதியில் இருந்து அரசுபுரிந்த அறுகையென்னும் குறுநிலத் தலைவனைப் பாண்டிக் கடற்கரையைக் காக்குமாறு திருமுகம் விடுத்தான். அறுகையும் செங்குட்டுவன் கருத்துணர்ந்து அவ்வாறே படை திரட்டிக் காவல் புரியலுற்றான். செங்குட்டுவனுடைய தேர் முதலிய மூன்று படைகளும் சேரநாடு முழுதும் பரந்து அருங்காவல் புரிந்தன. இச் செயலை அறிந்த பரணர் என்னும் நல்லிசைச் சான்றோர்,
- “மன்பதை மருள் அரசுபடக் கடந்து
- முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்,
- ஒளிறுநிலை உயர்மருப் பேந்திய களிறூர்ந்து
- மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின்
- தேரொடு சுற்றம் உலகுடன் மூய[4]”
என்று பாடிக் காட்டுகின்றார்.
வில்லும் வேலும் வாளும் ஏந்திய படைவீர்ரகள் உடன்வரச் செங்குட்டுவன் கலங்கள் பலவற்றை அணிவகுத்துக் கடலிடத்தே செலுத்தினான்; பகைவர் படை வீரரைச் சுமந்த கலங்கள் வரும் திசையை ஒற்றரால் அறிந்து எதிர்நோக்கிச் சென்று அவருடைய கலங்களைச் சூழ்ந்து நின்று தாக்கலுற்றான். நாற்புறமும் சேரர் கலங்கள் போந்து சூழ்ந்து கொண்டதனால் பகைவர்கள், இடையே அகப்பட்டு எத்துணையோ முயன்றும் மாட்டாது தோற்றனர். பெரும்பாலோர் மாண்டனர்; எஞ்சினோர் சிறைப்பட்டனர். அவர்களுடைய கலம் கொணர்ந்த அரியவும் பெரியவுமாகிய பொருள்கள் செங்குட்டுவன் கைவயமாயின. கடற் போரில் வாகை சூடிக் கரையை அடைந்த செங்குட்டு வனது புகழ் தமிழக மெங்கும் பரந்தது. சோழவேந்தரும் பாண்டி வேந்தரும் அவனைப் பாராட்டினர்.
பரிசிலர் பலர், சேர நாட்டை அடைந்து செங் குட்டுவனது கடல் வென்றியை முத்தமிழ் வழியாலும் இசைத்தனர். தமிழ்நாட்டுச் சோழ பாண்டிய மண்டலங் களில் இருந்த வேந்தர்களையும் செல்வர்களையும் பாடிச் சிறப்பித்து வந்து பரணர் என்னும் சான்றோர், மலையும் கானமும் கடந்து வஞ்சிநகர் அடைந்து செங்குட்டுவனைக் கண்டு,
- “மழை பெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்
- ஒன்று இரண்டு அல்ல பல கழிந்து திண்டேர்
- வசையில் நெடுந்தகை காண்கு வந்திசினே[5]“
என்று தொடங்கி, நாளும் குதிரை யூர்ந்து பயின்ற நின் தாள், வெற்றிமுரசு முழங்க, அலைகள் பிசிர் பிசிராக உடையுமாறு “படுதிரைப் பனிக்கடல்” உழந்ததனால் வருந்தா தொழிவதாக என்று வாழ்த்தி, “வேந்தே, வழி வழியாகக் கடற்போர் செய்து பயின்றவன் போல நீ இக் கடற் போரைச் செய்து பெருவென்றி எய்தினாய்;
- ‘இனியார் உளரோ? நின்முன்னும் இல்லை;
- மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
- விலங்குவளி கடவும் துனிங்கிருங் கமஞ்சூல்
- வயங்குமணி இமைப்பின் வேல் இடுபு
- முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே[6]’
என்று எடுத்தோதிப் பாராட்டினார்.
இவ்வாறு பாடி வந்த பாணர் கூத்தர் விறலியர் பலருக்கும், செங்குட்டுவன், கடலிற் பகைவர்பாலும் பிற பகைவர்பாலும் பெற்ற அரும்பெரும் பொருள்களை மழைபோல் வரையாது நல்கி, “இனிது புறந்தந்து அவர்க்கு இன்மகிழ்” சுரந்தான். அதனால், அவர்கள் பலரும் அவன் திருவோலக்கத்தே நெடிது தங்கினர். அதனை நேரிற் கண்ட பரணர்,
- “கோடுநரல் பௌவம் கலங்க வேலிட்டு
- உடைதிரைப் பரப்பில் படுகடல் ஒட்டிய
- வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர்
- செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே[7]”
என்று பாடிச் செங்குட்டுவன் சீர்த்தியைச் செந்தமிழில் நிலைபெறுவித்தார். செங்குட்டுவனது வரையாத வள்ளன்மையால், பாட்டினும் கூத்தினும், வல்லுநர் மாட்டாதவர் என்ற வேறுபாடின்றி, யாவரும் பெரும்பொருள் பெறுவதை. அவருள் இளையர் பலர் கண்டு, தமக்குள்ளே, “இச் செங்குட்டுவன் கல்லா வாய்மையன்” என்று பேசிக்கொண்டனர். இதனைக் கேட்ட பரணர், செங்குட்டுவனைப் பாடிய பாட் டொன்றில்,
- “பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி,
- ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டிக்,
- கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
- கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ !
- ‘ஆண்டு நீர்ப் பெற்ற தாரம் ஈண்டு இவர்
- கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும்
- கல்லா வாய்மையன் இவன் எனத் தத்தம்
- கைவல் இளையர்[8]”
கூறுகின்றனர் எனக் குறித்து அவனது கொடைமடத்தை எடுத்தோதிச் சிறப்பித்தார்.
செந்தமிழ் வளஞ் சிறந்து திகழும் பரணருடைய நல்லிசைப் புலமையின் பால் செங்குட்டுவனுக்கு மிக்க விருப்பமுண்டாயிற்று. அவரைக் கொண்டு தமிழ் இளைஞர்க்கு அகமும் பொருளுமாகிய பொருணூல் களை அறிவுறுக்குமாறு ஏற்பாடு செய்தான். அதற்காகச் சேர நாட்டு உம்பற்காடு என்ற பகுதியின் வருவாயைப் பரணற்கு நல்கித் தன் மகன் குட்டுவன் சேரல் என்பவனை அவர்பால் கையடைப்படுத்துக் கல்வி கற்பிக்குமாறு செய்தான். பிற்காலத்தே, சேர நாட்டுக் கானப்பகுதி யொன்று பரணன் கானம் என்ற பெயரெய்தி இன்றும் திருவிதாங்கூர் நாட்டில் மினச்சில் பகுதியில் உளது.
ஆசிரியர் பரணர், செங்குட்டுவன் விரும்பியவாறு தமிழ்ப்பணி செய்யுங்கால், களவொழுக்கம் பூண்டு ஒழுகும் தமிழ்த் தலைமகன் இரவுக்குறிக்கண் தலை வேற்றுக்குறி நிகழக் கண்டு அவ்விடம் வந்து அவனைக் காணாமல் சென்ற தலைவி, அவன் மெய்யாக வந்து செய்த வரவுக் குறியையும் வேற்றுக்குறி யென்று நினைந்து வாரா தொழிந்தாள்; தலைமகன் ஏமாற்றம் எய்தித் தன் நெஞ்சை வெகுண்டு, “பெறலருங் குரையள் என்னாள், வைகலும் இன்னா அருஞ்சுரம் நீந்தி நீயே என்னை இன்னற் படுத்தினை; அதனால்,
- “படைநிலா விளங்கும் கடல்மருள் தானை
- மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன்
- பொருமுரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து
- செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி
- ஒங்குதிரைப் பௌவம் நீங்க ஒட்டிய
- நீர்மாண் எஃகம் நிறத்துச் சென்றழுந்தக்
- கூர்மதன் அழியரோ நெஞ்சே[9]"
என்று கூறும் கருத்தமைந்த பாட்டில், செங்குவன் கடலிற் பகைவர் மேல் வேலெறிந்து அவர் பிறக்கிடச் செய்த திறத்தைப் பாடிச் சிறப்பித்துள்ளார். இவ்வாற்றால் செங்குட்டுவனுக்குக் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் என்று பெயர் பிறங்குவதாயிற்று.
இவ் வண்ணம் செங்குட்டுவன், தான் கடல் பிறக்கோட்டிய சிறப்பைச் சான்றோர் பரவ இனிது இருந்து வரும் நாளில், தென் பாண்டி நாட்டில் அவன் மன அமைதியைக் கெடுக்கும் செயலொன்று நிகழ்ந்தது. மதுரை மாவட்டத்து மோகூர்[10] என்னும் ஊரில் பழையன் என்னும் தலைவன் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் காவிரி நாட்டுப்போர் என்னும் ஊர்க்குரிய பழையன் என்பான் வழிவந்தான். போர்ப் பழையன், சோழர்க் குரியனாய், செங்குட்டுவனால் நேரிவாயிலில் அலைத்து வருத்தப்பட்ட சோழர் ஒன்பதின்மர்க்குத் துணைவனாய் நின்று வரிசை யிழந்தான். அதனால் அவற்குச் சேரன் செங்குட்டுவன் பால் மனத்தே பகைமை உண்டாயிருந்தது. அன்றியும், தென்பாண்டி நாட்டு அறுகை செங்குட்டுவற்குத் துணை செய்தது, பழையன் உள்ளத்தில் அவ்வறுகையாலும் பகைமை பிறப்பித்தது.
அறுகை யென்பான் இருந்த ஊர் குன்றத்தூர் என்பது. அவற்குப்பின் அவ்வூர் அறுகை குன்றத்தூர் என்று வழங்குவதாயிற்று. இடைக்காலத்தே, அப் பகுதியில் அரசுபுரிந்த வேந்தர் அறுகை குன்றத்தூரி லிருந்து தமது ஆணையைப் பிறப்பிப்பது உண்டு எனச் சோழபுரத்துக் கல்வெட்டு ஒன்றால்[11] அறிகின்றோம்.
சோழர் பொருட்டுப் போர் ஒப் பழையன், கொங்கு : நாட்டவரோடு ஒருகால் பெரும் போர் செய்து வெற்றி பெற்றான்; அறுகை, கொங்கு நாட்டினின்றும் தென்பாண்டி நாட்டிற்குட் போந்திருந்த ஒரு குடியிற் பிறந்தவன். அதனால், பழையர்பால் அறுகைக்கு வெறுப்புண்டாகி யிருந்தது; சேரன் செங்குட்டுவனோடு நேரிவாயிலிற் பொருத்தமிழிந்த சோழர் ஒன்பதின்மர்க்குத் துணை செய்து தனக்கு நண்பனான செங்குட்டுவனது வெகுளிக்கு இரையாகியவன் என்பதனாலும், தனக்குச் செங்குட்டுவன் நண்பன் ஆதலாலும், மோகூர்ப் பழையன்மேல் போர்க்கெழுந்தால் அவன் அஞ்சி யோடுவன் என்று அறுகை படையை மோகூர்மேல் செலுத்தி அதனைச் சூழ்ந்து கொண்டு உழிஞைப் போர் தொடுத்தான். மோகூர் மன்னன், சோழவேந்தரும் வேளிரும் துணைவரத் தனது பெரும்படையைச் செலுத்தி அறுகையின் படையை வென்று வெருட்டி னான். அறுகை போரிழந்து புறந்தந்து ஓடி ஒளிந்து கொண்டான். இவ் வேந்தர் பண்டு செங்குட்டுவற்குத் தோற்ற சோழர் என அறிக.
இச் செய்தி செங்குட்டுவனுக்குத் தெரிந்தது. உடனே, அறுகை தன்னாட்டிற்கு மிக்க சேணிடத்தே இருப்பதை அறிந்திருந்தும், தான் செய்த கடற்போர் செவ்வே நிகழ்ந்து வென்றி விளைப்பதற்கு அவ்வறுகை துணைசெய்தமையின், அவன் தனக்குக் கேளான் என வஞ்சினம் மொழிந்து, செங்குட்டுவன் தன் பெரும் படையுடன் போந்து மோகூர்ப் பழைனோடு போர் தொடுத்தான். பழையனும் நெடுமொழி நிகழ்த்திக் கடும்போர் உடற்றினான். அவனுக்குச் சோழவேந்தர் சிலரும் வேளிர் சிலரும் துணை புரிந்தனர். செங் குட்டுவன் அவனுடைய மோகூர் அரண்களை அழித்து, வேந்தர் முதலியோரது துணையைச் சிதைத்து, அவனுடைய காவல் மரமான வேம்பினை வெட்டி, அது போர்முரசு செய்வதற்கு ஏற்றதாய் இருப்பது கண்டு, ஏற்றவாறு துண்டஞ் செய்து களிறு பூட்டிய வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வஞ்சி மாநகர் வந்து சேர்ந்தான். இதனைப் பரணர், “நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை ஒழுகை யுய்த்தோய்[12]” என்றும், விறளியாற்றுப் படையாக, “யாமும் சேறுகம் நீரும் வம்மின், துயலும் கோதைத் துளங்கியல் விறலியர், கொளைவல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர். கருஞ்சினை விறல் வேம்பு அறுத்த, பெருஞ்சினக் குட்டுவன் கண்டனம் வரற்கே[13]” என்றும் பாடினர்.
பரணர் பாடிய பாட்டுக்குச் செங்குட்டுவன் மிக்க பரிசில் தந்தான். அவர், பின்பு பொறை நாடு கடந்து ஆவியர் தலைவனான வையாவிக் கோப்பெரும் பேகன் நாட்டுக்குச் சென்றார். செங்குட்டுவன் வஞ்சி நகர்க்கண் இனிதிருக்கையில் சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டி னத்தில் தோன்றிப் பாண்டி நாட்டு மதுரை மாநகரை அடைந்த கோவலன் கண்ணகி என்ற இருவருள், கோவலன், தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பு விற்க முயலுகையில், பாண்டியனால் தவறாகக் கொலை யுண்டான். அவன் மனைவி கண்ணகியென்பாள் மன்னனது தவற்றை வழக்குரைத்துக் காட்டி மதுரை மூதூரை எரித்துவிட்டு வைகையாற்றின் கரை வழியே சேர நாடுவந்து ஒரு வேங்கைமரத்தின் நிழலில் தங்கி விண்ணுலகடைந்தாள். இதற்குச் சிறிது காலத்துக்கு முன் செங்குட்டுவன் தம்பி இளங்கோ என்பார், அரசுரிமையைக் கையிகந்து துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னுமிடத்தே உறைவாராயினர். பொறை நாட்டுப் பகுதியிலுள்ள சீத்தலையென்னும் ஊரில் சாத்தனார் என்ற சான்றோர் ஒருவர் தோன்றி மதுரை மாநகர்க் கண் கூலவாணிகம் செய்து பெருஞ்செல்வம் ஈட்டினார். பின்னர், அவர் அச் செல்வத்தையும் வாணிகத்தையும் தம் மக்கள்பால் விடுத்துத் துறவு பூண்டு சேரநாடு வந்து சேர்ந்தார். செங்குட்டவன் அவர்க்கு வேண்டுவன நல்கிச் சிறப்பித்து தோடு சாத்தனூர் என்று ஓர் ஊரையும் நல்கினான். அது யவன நாட்டுத் தாலமி (Ptolemy) என்போரால் மாசாத்தனூர் (Mastanour) என்று குறிக்கப்பட்டுள்ளது.
ஒருகால் செங்குட்டுவன் மலைவளம் காண விரும்பித் தன் மனைவி இளங்கோ வேண்மாள் உடன்வரப் பேரியாற்றங்கரைக்குச் சென்றான். அங்கே, அதற்கு இலவந்திகை வெள்ளிமாடம் என்றோர் அரண்மனை இருந்தது அப்போது அவனுடன் அரசியற் சுற்றத்தாரும் தண்டமிழாசானாகிய சாத்தனாரும் வந்திருந்தனர். அவ்விடம், நேரிமலையின் அடியில் பேரியாற்றங்கரையில், இப்போது உள்ள நேரிமங்கலம் என்னும் இடமாகும். இன்றும் அங்கே இடிந்து பாழ்பட்டுப்போன அரண்மனைக் கட்டிடங்கள் உள்ளன எனத் திருவாங்கூர் நாட்டியல் நூல்[14] கூறுகிறது. இடைக்காலத்தில் வாழ்ந்த அரச குடும்பத்தின் ஒரு கிளை அங்கே இருந்தது என அங்கு வாழ்பவர் கூறுகின்றனர்.
சேரமான் வந்திருப்பதை அறிந்த மலைவாணர் மலைபடு செல்வங்களான யானைக்கோடு, அகில், மான்மயிர்க் கவரி, மதுக்குடம், சந்தனக்கட்டை முதலிய பலவற்றைக் கொணர்ந்து தந்து, கண்ணகி போந்து வேங்கை மரத்தின் கீழ் நின்று விண்புக்கதைத் தாம் கண்டவாறே வேந்தர்க்கு எடுத்துரைத்தனர். உடனிருந்த சாத்தனார் கண்ணகியின் வரலாற்றை எடுத்து உரைத்தார். அது கேட்டு மனம் வருந்திய செங்குட்டுவன், தன் மனைவியை நோக்கி, “பாண்டியன் மனைவியான கோப்பெருந்தேவியோ கண்ணகியோ, நின்னால் வியக்கப்படும் நலமுடையோர் யாவர்?” என்று வினவி காணாது கழிந்த மாதராகிய கண்ணகியார் வானத்துப் பெருந்திருவுறுக; அது நிற்க, நம் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்” என்று தெரிவித்தாள். கேட்ட வேந்தன் சாத்தனாரை நோக்க, அவரும் அதுவே தக்கது எனத் தலையசைத்தார். பின்னர், வேந்தன், பத்தினிக் கடவுளாகிய கண்ணகியின் உருவம் சமைத்தற்குக் கல் வேண்டும் என அரசியற் சுற்றத்தாரை ஆராய்ந்தான். முடிவில் இமயத்தினின்றும், கல் கொணர்வதே செயற்பாலது எனத் துணிந்தனர்.
பின்னர், வேந்தர் பெருமானான செங்குட்டுவன் மலைவளம் கண்டு மகிழ்ச்சி கொண்டு வஞ்சிமா நகருக்குத் திரும்பிப்போந்து, இமயம் சேறற்கு வேண்டும் செயல் முறைகளைச் செய்யலுற்றான். இதற்கிடையே வடநாட்டில் ஒரு நிகழ்ச்சியுண்டாயிற்று. சேரநாட்டுக்கு வடக்கெல்லையாக விளங்கும் வானவாசி (Banavasse) நாட்டில் நூற்றுவர் கன்னர் (Satakarni) என்பார் ஆட்சி புரிந்துவந்தனர்.[15] இச் செய்தியை வானவாசி நகரத்தில் உள்ள கல்வெட்டுக்கள் உரைக்கின்றன. அவர்கள் பெயரடியாகத்தான் புன்னாடு[16] என முன்னாளில் வழங்கிய அப் பகுதி கன்னட நாடு எனப்படுவதாயிற்று; அவர் வழங்கும் திராவிட மொழியும் கன்னட மொழி எனப் பெயர் பெறுவதாயிற்று. சேர வேந்தர் வானவரம்பராகிப் பின் இமயவரம்பரான காலமுதல், அந்நூற்றுவர் கன்னர் சேரரோடு நண்பர்களாகவே இருந்தனர். அவர்கட்கு வடக்கில் இருந்த கடம்பரும் பிற ஆரிய வேந்தரும் சேரர்பால் அழுக்காறும் மனக்காய்ச்சலும் கொண்டிருந்தனர். அந்த மன்னர் ஒரு கால் திருமணத்திற் கூடிவேட்டுப் புகன்றெழுந்து, மின் தவழும் இமய
நெற்றியில் விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள், எம்போலும் முடிமன்னர் ஈங்கு இல்லை போலும்” என்று பேசிக் கொண்டனர்; அச் செய்தியைச் செங்குட்டு வனுக்கு அப் பகுதியிலிருந்து வந்த மாதவர் சிலர் தெரிவித்தனர். அதனால், அவ் வடவாரிய வேந்தரின் செருக்கை அடக்குதற்கு இதுவே ஏற்ற செவ்வி எனச் செங்குட்டுவன் கருதினான்.
கணிகள் கூறிய நன்னாளில் சேரர் பெரும்படை இமயம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. நூற்றுவர் கன்னர் வழியிற் குறுக்கிட்டு ஓடிய ஆறுகளைக் கடத்தற்கு வேண்டும் துணை புரிந்தனர். வடவாரிய நாட்டில் கனகன் விசயன் என்ற இரு வேந்தர்கள், உத்தரன், விசித்திரன், உருத்திரன், பயிரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் முதலிய வேந்தர்களைத் துணையாகக் கொண்டு பெரும்போர் உடற்றினர்; அப்போர் பதினெட்டு நாழிகை நடந்தது; ஆரிய மன்னர் படை அழிந்து மாறிப் புறந்தந்து ஓடினர். கனகனும் விசயனும் சிறைப்பட்டனர். இமயத்தில் கண்ணகி பொருட்டு எடுத்த படிமக் கல்லை அக் கனக விசயர் முடியில் ஏற்றிக் கங்கையில் நீர்ப்படை செய்து சிறப்பித்துக்கொண்டு செங்குட்டுவன் சேரநாடு வந்து சேர்ந்தான். கனக விசயர் வஞ்சிநகர்ச் சிறைக் கோட்டத்தே இருந்தனர். பின்னர்க் கண்ணகியின் உருவமைந்த கோயிலுக்குக் கடவுள் மங்கலம் செய்தான். தமிழ்நாட்டினின்றும், ஈழம் முதலிய நாட்டினின்றும், பிறநாடுகளிலிருந்தும் வேந்தர் பலர் அவ் விழாவுக்கு வந்திருந்தனர். கனக விசயரையும் சிறை நீக்கித் தன் வேளாவிக்கோ மாளிகையில் (வேண்மாடத்தில் அரசர்க்குரிய சிறப்புடன் இருத்திக் கண்ணகி விழாவில் கலந்து கொள்ளச் செய்தான். ஈழ நாட்டிலிருந்து வந்த வேந்தன் முதற் கயவாகு எனப்படுகின்றான். பின்பு செங்குட்டுவன்,
- “கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
- வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
- முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
- பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
- வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்
- கடவுண் மங்கலம் செய்கென ஏவினன்.[17]”
பிறகு வேந்தர் அனைவரும் தங்கள் தங்கள் நாட்டிலும், தங்களாற் செய்யப்படும் திருக்கோயிலில் எழுந்தருள் வேண்டும் என்று கண்ணகித் தெய்வத்தைப் பரவினர். கண்ணகித் தெய்வமும் “தந்தேன் வரம்” என்று மொழிந்தது.
இது செய்த காலத்துச் செங்குட்டுவன் ஐம்பதாண்டு நிரம்பியிருந்தான். மேலும், ஐந்தாண்டுகள் தன் வாழ்நாளைச் செங்குட்டுவன் அறத்துறை வேள்விகள் செய்து கழித்து மகிழ்ந்தான். பதிற்றுப்பத்து ஐந்தாம் பதிகம், செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான் என்று கூறுகிறது. கண்ணகி வரலாற்றை நேரிற் கூறிச் செங்குட்டுவன் கருத்தைப் புகழ்க்குரிய துறையில் செலுத்திய சாத்தனாரது சிறப்பை வியந்து, அவர் பெயரால் “மாசாத்தனூர்” என்ற ஊரோடு, இந் நிகழ்ச்சியைச் செந்தமிழ்க் கோயிலாகிய சிலப்பதிகாரம் அமைத்துச் சிறப்பித்த இளங்கோ அடிகள் பெயரால் “இளங்கோவூர்[18]” என்று ஊரும் சேர நாட்டில் ஏற்படுத்தி னான். அவையிரண்டும் யவன அறிஞரான தாலமயின் குறிப்பில் உள்ளமை ஆராய்ச்சி யறிஞர் கண்டு இன்புறுவாராக[19].
- ↑ இவனைக் கரிகாலனெனக் கருதுவோரும் உண்டு. அகம். 125.10
- ↑ உறையூரின் தென்புற வாயில் நேரிவாயிலாகும்.
- ↑ சிலப். 27: 118-23: 116-9, பதிற். iv பதி.
- ↑ பதிற். 42.
- ↑ பதிற். 45.
- ↑ பதிற். 46.
- ↑ பதிற். 2.
- ↑ பதிற். 48.
- ↑ அகம். 219.
- ↑ மோகூரும் பழையன் பெயரால் உண்டான பழையானூரும் மாற நாட்டில் இன்றும் உள்ளன.
- ↑ Ep. A.R. No. 493 of 1909
- ↑ பதிற். 44.
- ↑ பதிற். 49.
- ↑ Travancore State Manual Voi. iv. p. 223.
- ↑ Bombay Gazetteer: Kanara. part ii p. 178.
- ↑ Punnata of Ptolemy M. Crindle P.72. Robert Sewell’s Antiquities. p. 226. Heritage of karnataka. p. 6. அகம். 396
- ↑ சிலப் 28: 288-33.
- ↑ Ilankour.
- ↑ MC. Crindle’s Translation: Ptolemy P. 54.