சொன்னால் நம்பமாட்டீர்கள்/அன்பிற்கு அளவுண்டோ?
சக்கரவர்த்தி திரு. ராஜகோபாலசாரியார் அவர்களிடம் எனக்குச் சிறு வயது முதற்கொண்டு அதிகப்படியான ஈடுபாடு உண்டு. காரணம் சிறுவயதிலேயே கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதியவைகளைப் படித்து, அதை மனதில் பதிய வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது.
கல்கி அவர்கள் அடிக்கடி ராஜாஜி அவர்களைப் பற்றி எழுதும் கட்டுரைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்து அரசியலில் ராஜாஜியைப் பின்பற்றுபவனாக என்னை அறியாமலேயே நான் மாறிவிட்டேன்.
ராஜாஜியிடம் ஒரு தெய்வீகப் பக்தியை கல்கி அவர்களின் எழுத்து எனக்கு ஊட்டியது. நான் சென்னைக்கு வந்து குடியேறியபோது ராஜாஜி அவர்களின் அன்பை நம்பியே வந்தேன்.
ராஜாஜி அவர்களும் என்னிடம் மிகுந்த பிரியம் காட்டி என்னுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருந்து வந்தார்கள். சென்னையில் தியாகராய நகர் பனகல் பார்க் எதிரில் தமிழ்ப் பண்ணை என்ற புத்தக வெளியீட்டுப் பதிப்பக நிலையம் துவக்கியபோது ராஜாஜி அவர்களின் ஆசியுடன் துவக்கினேன்.
அப்போது அரசியலில் குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் ஒரு சிக்கலான நிலைமை உருவாகி இருந்தது. காங்கிரஸ் தலைவர்களும் ஊழியர்களும் பெரும்பாலோர் 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் சிறைச்சாலையில் இருந்தார்கள்.
ராஜாஜி அவர்கள் ஆகஸ்ட் புரட்சியை ஆதரிக்காததினால் அவர் மட்டும் வெளியில் இருந்தார் கட்சி வேலைகளோ அரசியல் வேலைகளோ எதுவும் இல்லாததினால் இலக்கியத்தில் மனதை செலுத்திக் கொண்டு இருந்தார். அதனால் நான் தமிழ்ப்பண்ணை ஆரம்பித்தது அவருக்கு ஒரு வாய்ப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
ஆகவே தினம் தினம் தமிழ்ப் பண்ணைக்கு வந்து சிறிது நேரம் புத்தகங்களின் நடுவில் பொழுதுபோக்குவதை ஒரு வழக்கமாகக் கொண்டு இருந்தார்.
தினம் தினம் ராஜாஜி அவர்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்றதனால் பல உயர்ந்த விஷயங்களை அவரிடம் அப்போதைக்கப்போது நான் கற்றுக் கொள்ள ஏதுவாக இருந்தது. திடீரென்று ஒருநாள் ராஜாஜி அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நான் காலைச் சிற்றுண்டி அருந்திக் கொண்டு இருந்தேன்.
ராஜாஜி வந்தது அறிந்ததும் வேகமாக கை அலம்பி விட்டு ஓடி வந்தேன். அதற்குள் ராஜாஜி நான் சிற்றுண்டி அருந்தும் இடத்திற்கு வந்துவிட்டார். பாதி சாப்பிட்டதுடன் எனக்காக எழுந்திருக்க வேண்டாம். உட்கார்ந்து சாப்பிடுங்கள் என்று சொன்னார்.
தாங்களும் ஏதாவது சாப்பிடுவதாக இருந்தால் நானும் சாப்பிடுவேன் என்று அடக்கமாகப் பதில் கூறினேன்.
“செட்டி நாட்டு இட்லி பூப்போல் இருக்கும் என்று சொல்வார்களே. உங்கள் வீட்டு இட்லி எப்படி இருக்கும். இரண்டு கொடுங்கள்” என்று சொன்னார்.
வாழை இலையைப்போட்டு இரண்டு இட்லி எடுத்து வைத்து என் மனைவி, “பிராமணர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்டால் பெரும் பாவம் என்று எங்கள் பெரியவர்கள் சொல்லுவார்களே? எல்லாம் அறிந்ததாங்கள் அதைப்பற்றி என்ன அறிவுரை எங்களுக்கு கூறப் போகிறீர்கள்” என்று கேட்டுவிட்டாள்.
அதற்கு ராஜாஜி அவர்கள் என் மனைவியின் நேர்மையான கேள்வியை மெச்சி சுத்தமான இடத்தில் சமையலாகும் எதையும் யாரும் சாப்பிடலாம்.
அதற்கு விதிவிலக்கு கிடையாது. பிராமண குலத்தில் உதித்தவர்கள் எல்லாம் பிரமணர்கள் என்றும், பூணுல் போட்டவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்றும் கருத வேண்டாம். வேதத்தை அறிந்தவனும் பிராமணியத்தை ஒழுங்காகக் கடைபிடிப்பவனும்தான் பிராமணன். அவன் எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும் அவன் பிராமணனே.
“காந்தியத்தைப் பின்பற்றுபவர்கள் கதர் அணிகிறோம். தலையில் குல்லா வைத்துக் கொள்கிறோம். கம்யூனிசத்தைப் பின்பற்றுபவர்கள் செஞ்சட்டை அணிகிறார்கள். அதைப்போல பிராமணியத்தைப் பின்பற்றுகிறவர்கள் அக்காலத்தில் பூணூல் அணிந்தார்கள்.
இப்போது எல்லாத் தவறுகளும் பண்ணுகிறவர்களும், பிராமணியத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டிருக்கும் பலர் அந்தக் குலத்தில் பிறந்ததற்காகத் தங்களைப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களை எல்லாம் விடநீங்கள் பல மடங்கு உயர்ந்த பிராமணர்கள். அதனால் உங்கள் வீட்டில் சாப்பிடுவதில் ஒரு பாவமும் இல்லை” என்று ராஜாஜி கூறினார்.
என் மனைவி அவர் காலில் விழுந்து கும்பிட்டு அவர் கையில் இருந்து குங்குமம் வாங்கி இட்டுக் கொண்டாள்.
“என்றும் சுமங்கலியாகவே நீங்கள் இருப்பீர்கள் என்று ராஜாஜி ஆசீர்வாதம் செய்தார். அதிலிருந்து ராஜாஜியிடம் என் மனைவிக்கு எப்பொழுதும் ஒரு தெய்வீக பக்தி ஏற்பட்டது. ஏதாவது ஒரு நல்லநாள் பெரியநாள் என்றால் ராஜாஜியிடம் ஆசி பெறாமல் எதையும் என் மனைவி செய்ய மாட்டாள்.
நாளுக்கு நாள் ராஜாஜி மீது பற்றும் பாசமும் என் மனைவி அதிகம் கொண்டு இருந்தாள்.
அரசியல் அபிப்பிராய பேதங்கள் பல ஏற்பட்டு ராஜாஜி சுதந்திரா கட்சி ஆரம்பித்த காலத்தில் என்னை அந்தக் கட்சிக்கு வந்து பணிபுரியும்படி சொன்னார்.
“நான் கடைசி வரையில் காங்கிரஸ்காரனாகவே இருந்து சாக விரும்புகிறேன். உங்களை அரசியல் தலைவராக நான் கருதவில்லை. எங்கள் குடும்பத்தின் தெய்வமாகத்தான் நாங்கள் கருதுகிறோம்” என்று சொல்லிவிட்டேன்.
ராஜாஜிகூட நான் சுதந்தரா கட்சியில் சேரவில்லை என்று என் மனைவி என் மீது கோபப்பட்டு இரண்டு நாள் சாப்பிடமாட்டேன் என்று பட்டினியாகக் கிடந்தாள்.
ராஜாஜி என் வீட்டிற்கு வந்து என் மனைவியை சமாதானப்படுத்தி, தான் இருக்கும்போதே தனக்கு நேராகவே உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி செய்தார்.
கடைசியாக ராஜாஜிக்கு உடல் நலம் இல்லை என்று கேள்விப்பட்டதும் என் மனைவி ஒருமுறை சென்று பார்த்து வந்தாள். பின்னர் இவளுடைய உடல் நலம் பாதிக்கப்பட்டு எங்கும் போக முடியாமல் ஆஸ்பத்திரியிலும் வீட்டிலும் மாறி மாறி வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தோம்.
திடீரென்று ஒருநாள் ராஜாஜி இறந்த செய்தி கேள்விப்பட்டு அவரது சடலத்தைத் தரிசிப்பதற்காக நான் ராஜாஜி மண்டபத்திற்குச் சென்றிருந்தேன். பகல் சாப்பிடும் நேரம் வந்ததும் என்னை என் மனைவி விசாரித்து இருக்கிறாள்.
பக்கத்தில் இருந்த ஒருவர் ராஜாஜி அவர்கள் இறந்துவிட்டர்கள். அதற்காகப் போயிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். ராஜாஜி இறந்துவிட்டாரா?
அவர் சடலத்தையாவது நான் போய்ப் பார்க்கவேண்டும். ஐயோ யாரும் சொல்லவில்லையே, என்று அழுதுகொண்டே படுக்கையை விட்டு எழுந்திருந்தாளாம். பக்கத்தில் இருந்த உறவினர் எழுந்திருக்கக் கூடாது என்று எவ்வளவோ சொல்லியும் ராஜாஜியின் சடலத்தை தரிசிக்காமல் நான் எதற்கு இருக்க வேண்டும் என்று தட்டுத்தடுமாறி எழுந்து அருகில் இருந்த தன் தங்கையின் மீது விழுந்துவிட்டாள்.
எல்லோருமாகத் தூக்கிப் படுக்கையில் வைத்தபோது ராஜாஜி போய்விட்டாரே என்று சொன்னவாறு அந்த நிமிடமே உயிர் பிரிந்துவிட்டது.
ராஜாஜி ஆசி உரைத்தது போலவே “சுமங்கலியாகவே” ராஜாஜியைப் பின்பற்றி அவளும் சென்றுவிட்டாள்.