சொன்னால் நம்பமாட்டீர்கள்/அறிஞர் அண்ணாவுடன்
திருச்சியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு சென்னைக்கு ரயில் ஏற ஜங்ஷனுக்கு வந்தேன். முதல் வகுப்பு டிக்கட் கையிலிருந்தாலும் அந்த வண்டியிலே இடமில்லாமல் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு போலீஸ் ஆபீஸர் என் முன்னால் வந்து “உங்களை சி.எம். கூப்பிடுகிறார்” என்றார்.
“யார் திரு. அண்ணாதுரை அவர்களா?” என்றேன்.
“ஆம்” என்றார்.
‘சரி’ என்று அவரைப் பின்பற்றி அண்ணா இருந்த கம்பார்ட்மெண்ட்டுக்குப் போனேன். அண்ணா என்னை அன்புடன் வரவேற்று, “சென்னைக்குத் தானே” என்றார்.
“ஆம்” என்றேன்.
“என்னுடனே பிரயாணம் செய்வதில் ஆட்சேபமில்லையே?” என்றார்.
“ஆட்சேபமில்லை; ஆனால் தங்களுக்கு அசெளகரியமாக இருக்குமே” என்றேன்.
“எனக்கு ஒரு அசெளகரியமுமில்லை. சொல்லப் போனால் உங்களுக்குத்தான் அசெளகரியமாக இருக்கும்” என்றார்.
“எனக்கென்ன அசெளகரியம்?” என்றேன்.நான்.
“சீக்கிரத்தில் தூங்கவிடாமல் வெகுநேரம் நான் பேசிக் கொண்டிருப்பேனே” என்றார்.
“தங்கள் பேச்சைக் கேட்க எவ்வளவோ பேர் தவம் கிடக்கிறார்கள். வலிய வரும் சீதேவியை இழந்து விடுவேனா? என்று சொல்லி அவருடன் பிரயாணத்தைத் துவங்கினேன். ரயில் நகர ஆரம்பித்ததும் “தங்களிடம் முதல் வகுப்பு டிக்கட் இருக்கிறதா?” என்று கேட்டார்.
“வித் அவுட்டில் வருவதாக நினைத்துவிட்டீர்களா?” இதோ எனது முதல் வகுப்பு டிக்கட்” என்று டிக்கெட்டைக் காண்பித்தேன்.
‘என் தம்பிமார்களில் சிலர் இப்படி என்னுடன் ஏறிக்கொண்டு அந்தத் தைரியத்தில் டிக்கட் வாங்காமல் பிரயாணம் செய்ததுண்டு. அவர்களுக்காக நான் டிக்கட் வாங்கிவிடுவது வழக்கம்” என்றார்.
“நான் உங்களை நம்பிப் பிரயாணம் செய்பவனில்லையே” என்றேன்.
“நீங்கள் சொல்லும் அரசியல் கருத்து எனக்குப் புரிகிறது. திருச்சிக்கு எங்கே வந்தீர்கள்?” என்று கேட்டார்.
“ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டத்திற்காக வந்தேன்’ என்றேன்.
‘ரொம்பத் தாக்கிப் பேசினீர்களோ?’ என்று சொல்லிவிட்டு, “நீங்க தாக்கிப் பேசினாலும் நானும் என் தம்பிமார்களும் கோபப்படுவதில்லை. ஏனென்னறால் அதிலுள்ள நகைச்சுவை எங்களைச் சிரிக்க வைத்து விடுகிறது.” என்றார்.
“வஸிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி பட்டம்” என்றேன். “அது சரி. திமுக ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்குமென்று நினைக்கிறீர்கள்?” என்று ஒரு எக்கச்சக்கமான கேள்வியைக் கேட்டார். நான் சிறிது யோசனை செய்தேன். ஆனால் அண்ணாவோ, “எதற்கு யோசனை செய்கிறீர்கள்? உங்கள் மனதில் இருப்பதைச் சொன்னால்தானே எனக்கும் சில விஷயங்கள் புரியும்” என்றார்.
“நூல் தீருகிறவரை கழி சுற்றிக் கொண்டேயிருக்கும்” என்றேன்.
“விளக்கம் தேவை” என்றார்.
“இந்தி எதிர்ப்பு என்ற மாயை தீரும்வரை தி.மு.க.ஆட்சி இருக்கும்,” என்றேன்.
“இதுதான் காங்கிரஸ்காரர்களுடைய அபிப்பிராயமா?” என்றார்.
“பெரும்பாலோருடைய எண்ணம்”, என்றேன்.
“அது சரி. 67 தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா?” என்றார்.
“என் சொந்த அபிப்பிராயம் 62 தேர்தலில் தங்களைக் காஞ்சீபுரத்தில் தோற்கடித்ததுதான் 67-ல் காங்கிரஸ்தோற்றதற்குக் காரணம்,” என்றேன்.
“எப்படி” என்றார்.
“தங்களை 62-ல் வெற்றிபெற விட்டிருந்தால் தாங்கள் இவ்வளவு முனைப்பாக வேலை செய்து தங்களுக்குப் பரம எதிரியான ராஜாஜி முதலியவர்களுடன் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கமாட்டீர்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டிருந்திருப்பீர்கள். காலம் ஓடியிருக்கும். இதை நான் அப்போதே காமராசரிடம் சொன்னேன். காஞ்சிபுரம் தேர்தல் கூட்டங்களில் பேசவும் மறுத்துவிட்டேன்,” என்றேன்.
“தாங்கள் சொல்வது மனித இயல்பை ஒட்டிய சங்கதிதான் இருந்தாலும், மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்திய பிறகு மக்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டாமா?” என்றார்.
“மக்களுக்கு மதிப்புக் கொடுப்போம். ஆனால் உங்கள் கட்சியை நாங்கள் மதிக்க முடியவில்லையே,” என்றேன்.
“பந்தை காங்கிரஸ்காரர்களாகிய நீங்கள் எங்கோ வீசி எறிய, அது உங்கள் மீதே வந்து தாக்கும் போது நீங்கள் வேறு யாரையும் குறை கூறிப் பயன் இல்லை,” என்றார்.
பின்னர் இருவரும் படுத்துத் துங்கிவிட்டோம். காலை எழுந்ததும் செங்கற்பட்டு ஸ்டேஷனில் அன்புடன் எனக்குக் காலை ஆகாரத்தை அவரே பரிமாறினார். அது முடிந்ததும், என்னிடமிருந்த ஒரு புத்தகத்தை வாங்கிப் பார்த்தார்.
அது நான் எழுதிய ஒருநாவல். தலைப்பு “மானமே பெரிது என்பதாகும்."இந்த நாவல் நம் சந்திப்பின்நினைவாக என்னிடமே இருக்கட்டும். அதில் அன்பளிப்பு என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தாருங்கள்,” என்று புத்தகத்தை நீட்டினார். கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.
மாம்பலம் ஸ்டேஷன் வந்ததும் அண்ணாவிடம் விடைபெற்றுக்கொண்டு ரயிலைவிட்டு இறங்கினேன்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், உண்மையில் என்மனத்தில் அது வரையில் அண்ணாவைப் பற்றி இருந்த துவேஷ எண்ணம், ஸ்டேஷனைவிட்டு ரயில் போனதைப்போல் என் இதயத்தை விட்டுப் போய்விட்டது.