சொன்னால் நம்பமாட்டீர்கள்/அரசவைக் கவிஞர்
ஓமந்தூர் திரு.ராமசாமி ரெட்டியார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது “தமிழுக்கு நீங்கள் ஏதாவது செய்யக் கூடாதா?” என்று கேட்டேன். “என்ன செய்யலாம். நீங்களே சொல்லுங்கள்” என்றார்.
“ஏன் நாமக்கல் கவிஞரை “அரசவைக் கவிஞர்” என்று செய்யலாமே, அதுவும் தமிழுக்கு ஒரு பெருமை தானே” என்றேன். “சரி யோசிக்கிறேன்” என்றார்.
சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு அரசாங்க அழைப்பு வந்தது. அதில் நாமக்கல் கவிஞருக்கு அரசவைக் கவிஞர் என்ற பட்டமளிப்பு விழா ராஜாஜி மண்டபத்தில் நடைபெறும். அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறேன். என்று முதலமைச்சரே கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார். மிக்க மகிழ்ச்சியாக விழாவிற்குச் சென்றேன்.
கவர்னரும் நகரப் பிரமுகர்களும் கூடியிருந்தனர். முதலமைச்சர் ஓமந்தூர் ரெட்டியார் துவக்க உரை நிகழ்த்துகையில், “இந்த அரசவைப் புலவர்” என்ற பட்டத்தைத் தேசீயக் கவி நாமக்கல் இராமலிங்கம் பிள்ளைக்கு அளித்து, தமிழுக்கு இதன் மூலம் பெருமை கிடைக்கும்படி செய்ய வேண்டுமென்று இந்த யோசனையை எனக்குக் கூறியவர் திரு. சின்ன அண்ணாமலை அவர்கள்தான். அவருக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்” என்று சொன்னார். சபையோர் உற்சாகமாக கரகோஷம் செய்தார்கள். நான் ஓமந்தூர் ரெட்டியாரின் நேர்மையை நினைத்து மகிழ்ந்தேன்.