சொன்னால் நம்பமாட்டீர்கள்/பத்திரிகை ஆசிரியர்

பத்திரிகை ஆசிரியர்

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் எப்போதும் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள் கல்கி அவர்களும் ரெட்டியார் அவர்களிடம் பக்தி உடையவர்.

ஓமந்துர் ரெட்டியார் அவர்கள் முதன் மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றதும் கல்கி அலுவலகத்தில் ஒரு விருந்து நடைபெற்றது.

விருந்துக்கு ராஜாஜி, டி.கே.சி. போன்ற மேதைகளும் அரசியல் இலக்கிய அறிஞர்களும் வந்திருந்தார்கள்.

விருந்து முடிந்ததும் ஓமந்தூர் ரெட்டியார் அவர்கள் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பார்த்து ‘தாங்கள் எனது மந்திரி சபையில் ஒரு மந்திரியாக இருந்து சேவை செய்ய வேண்டுமென்பது என் விருப்பம்’ என்று சொன்னார்.

உடனே சிறிது நேரம் மெளனம் நிலவியது. நிசப்தத்தைக் கலைத்து நான் பத்திரிகை ஆசிரியராக இருந்து கொண்டு மந்திரியாக இருக்க முடியுமா? என்று கேட்டேன். அது முடியாது என்றார், ராஜாஜி.

‘அப்படியானால் கல்கி பத்திரிகை ஆசிரியர் பதவியை விட்டுவிட்டு மந்திரிபதவி ஏற்றால் ஆசிரியர் பதவியை விட மந்திரி பதவி உயர்ந்தது என்று தானே அர்த்தம்’ என்றேன்.

உடனே கல்கி கிருஷ்ணமூர்த்தி, மந்திரி பதவி என்பது ஐந்து ஆண்டுகள்தான். அதிலும் அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தது.

ஆனால் பத்திரிகை ஆசிரியர் பதவி என் கடைசி மூச்சு வரை உள்ளது.

நான் மந்திரி பதவியைவிட பத்திரிகை ஆசிரியர் பதவியைத்தான் உயர்வாகக் கருதுகிறேன் என்றார்.

ரசிகமணி டி.கே.சி.அவர்கள் பேஷ், பேஷ் நன்றாகச் சொன்னீர்கள் என்று பேச்சை முடித்தார்கள்.

வீடு தேடிவந்த மந்திரி பதவியை வேண்டாம் என்று சொன்னவர் கல்கி.