சொன்னால் நம்பமாட்டீர்கள்/இரண்டு அல்வா- இரண்டு வடை

இரண்டு அல்வா
இரண்டு வடை

1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்றதும், கட்சித் தொண்டர்கள் சோர்வடையாமல் இருக்கவும், அவர்களுக்கு உற்சாக மூட்டவும் தமிழ்நாடு முழுவதும் நானும் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் சுற்றுப் பயணம் செய்தோம்.

கவிஞர் கண்ணதாசன் பல அபூர்வ ஆற்றல்கள் நிறைந்தவர். சினிமாவிற்குப் பாடல்கள் எழுதி பிரசித்தி பெற்றுவிட்டதால், அவரது கவிதை நயம் பலரால் இன்னும் உணரப்படவில்லை. ஒரு சிறந்த கவிஞர், சிறந்த பேச்சாளராக இருப்பது அபூர்வம்.

கண்ணதாசன் கூட்டத்தில் பேச ஆரம்பித்தால் சகல நயங்களும் துள்ளி வரும் சங்கீதத்தின் பின்னணியில் ஒரு சுருதி இழையோடுவதுபோல, அவர் பேச்சின் மத்தியில் ஒரு சப்தம் வந்து கொண்டேயிருக்கும்.

தலைவர் காமராஜ் ரஷ்யா சென்று வந்த சமயம். எல்லா ஊர்களிலும் பெரிய வரவேற்பு நடந்தது. நானும் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் சிதம்பரத்தில் நடைபெற்ற வவேற்பைப் பார்க்கச் சென்றோம்.

நாங்கள் சென்ற சமயம் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த திரு. ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் வெகு சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

எங்கள் இருவரைக் கண்டதும் கூட்டம் ஆரவாரத்துடன் கரகோஷம் செய்தது. “என்ன” வென்று தலைவர் காமராஜ் திரும்பிப்பார்த்தார். எங்கள் இருவரைப் பார்த்ததும் அவரும் ஒரு புன்னகை புரிந்து, திரு. கிருஷ்ணசாமி நாயுடு அவர்களைப் பார்த்து, -

“சரி சரி நிறுத்துங்க, அவங்க இரண்டு பேரும் வந்துட்டாங்க, இனி ஒங்க பேச்சு எடுபடாது” என்று சத்தம் போட்டுச் சொன்னார்.

கூட்டம் ‘கொல்’ என்று சிரித்தது.

தலைவரும் கலகலவென்று சிரித்தார். ‘சடக்கென்று நாயுடு அவர்கள் உட்கார்ந்தார், படக் கென்று என் கையைப்பிடித்து தலைவர் காமராஜ் எழுப்பிவிட்டார்.

நான் பேசும் கூட்டத்தில் காமராசர் இருந்தால், என் பேச்சைக் கடைசி வரையில் இருந்து கேட்டுரசிப்பார், சிரிப்பார் கைதட்டுவார்.

சேலத்தில் ஒரு சமயம் ஒரு மாபெரும் கூட்டம் தலைவர் காமராசருக்காகக் கூடியிருந்தது. அக்கூட்டத்தில் பேசுவதற்காக நானும் மேடையிலிருந்தேன். காமராசர் மேடைக்கு வந்ததும், மழைக்காற்று வீசிற்று.

அதை உணர்ந்த தலைவர் நேராக மைக் அருகில் வந்து நின்று, “மழை வரும் போலிருக்கிறது. அதனால் வேறு யாரும் பேசவேண்டாம்.

நம்ம சின்ன அண்ணாமலை பேசினால் போதும், காங்கிரஸ் கொள்கைகளை-சாதனைகளை அவர் நீங்கள் ரசிக்கும்படி பேசும் சக்தி உளளவர். நானும் இருந்து கேட்கிறேன். அவர் பேசிய பிறகு மழை இல்லை என்றால் நான் பேசுவேன்” என்று சொல்லி அமர்ந்தார். அந்த மாதிரி பெருமையை எனக்கு அவர் அளித்தது இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.

அன்றும் சிதம்பரத்தில் அப்படிச் செய்து மக்களிடம் அவர் என்னிடம் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் கண்ணதாசன் பேசிய பேச்சு சபையை உலுக்கிவிட்டது. அப்போது திரு. கிருஷ்ணசாமி நாயுடு தன்னை மறந்து எழுந்து கவிஞரைக் கட்டித் தழுவிப் பாராட்டினார்.

திரு. ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் பரம ரசிகர். அவரும் ஒரு கவிஞர், குழந்தை உள்ளம் கொண்டவர்.

பண்டிதநேருஜி அமரரானதும் நான் நேராக சத்யமூர்த்தி பவனம் சென்றேன். அங்கு திரு. ரா. கிருஷ்ணசாமி நாயுடு இருந்தார். என்னைப் பார்த்ததும் ‘கோ’ வென்று கதறி அழுது,

“ஐயோ, நம் தலைவர் போய்விட்டாரே, போய்விட்டாரே” என்று தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டார். அவ்வளவு உண்மையான ‘பக்தி’ கொண்டவர் நாயுடு அவர்கள்.

தேர்தல் தோல்வியைச் சரிப்படுத்த நானும் கண்ணதாசனும் சுற்றுப் பயணம் வந்தபோது ஸ்ரீவில்லிபுத்துருக்குச் சென்றோம். தேர்தலில் சாத்தூர் தொகுதியில் நின்று திரு. ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் தோல்வி அடைந்திருந்தார்.

ஆகவே அவரைப் பார்ப்பதற்காக மாலை 4 மணி அளவில் அவர் இல்லம் சென்றோம். எப்பொழுதும் தாம்பூலம் தரித்துக் கொண்டிருக்கும் பழக்கமுடையவர் திருநாயுடு அவர்கள். நாங்கள் போன நேரத்திலும் வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் ஏக உப்சாரம் செய்து வரவேற்றார்.

நாங்கள் தேர்தல் தோல்வி பற்றி பேசி ஒருவருக்கொருவர் தைரியமூட்டிக் கொண்டிருந்தோம். நாங்கள் புறப்படலாமென்று நினைத்தபோது, திரு. நாயுடு அவர்கள், அங்கிருந்த ஒரு பையனைப் பார்த்து, “டேய், போய் இரண்டு அல்வா, இரண்டு வடை, இரண்டு காபி சீக்கிரம் வாங்கிக் கொண்டு வா” என்று உத்தரவிட்டார். பையன் போன வேகத்தில் சொன்னவைகளை வாங்கி வந்து திரு. நாயுடு அவர்கள் முன்னிலையில் வைத்தான்.

அச்சமயம் நாயுடு அவர்கள் தேர்தலில் துரோகம் செய்தவர்களைப் பற்றி ரொம்ப ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டிருந்தவர், அல்வா பொட்டலத்தை அவிழ்தது அல்வாத் துண்டைக் கையிலெடுத்து, “நாம் எவ்வளவு உண்மையாக இருந்தாலும் முஸ்லிம்கள் நம்மை நம்பவில்லை” என்று கோபமாகச் சொல்லி தன்னை மறந்து மேற்படி அல்வாத் துண்டை வாயில் போட்டுக் கொண்டார். அதன் பிறகு ஹரிஜனங் களைப்பற்றி கோபமாகப் பேசி இன்னொரு அல்வாத்துண்டையும் தின்றுவிட்டார்.

உடனே நான் பொய்க்கோபமாக “தலைவர் சார், எங்களுக்கு வாங்கி வந்த இரண்டு அல்வாத் துண்டையும் நீங்களே தின்றுவிட்டீர்கள். இந்த ஊரில் எங்களுக்கு ஓட்டு இருந்தால் நாங்கள் கூட உங்களுக்கு ஒட்டுப்போட மாட்டோம். ஆகவே நீங்கள் தோற்றது ரொம்ப நியாயம்” என்றேன்.

அப்போதுதான் திரு. நாயுடு அவர்கள் தன்நிலைக்கு வந்து, “அடடா” என்று வருந்தினார்.

“பின்னர் விடாப்பிடியாக அன்று இரவு சாப்பிட்டுத்தான் போகவேண்டும் என்று வற்புறுத்தி தடபுடலானவிருந்து செய்து கெளரவித்தார்.”