சொன்னால் நம்பமாட்டீர்கள்/ராஜாஜி காமராஜ்

ராஜாஜி-காமராஜ்

“காங்கிரசிற்கு ராஜாஜி வேண்டாம்” என்று தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்களில் ஒரு பகுதியினர் கிளர்ச்சி நடத்தினர். இந்தக் கிளர்ச்சியைத் தலைவர் காமராஜ் ஆதரித்தார். மற்றும் பல காங்கிரஸ் தலைவர்களும் அதே எண்ணங்கொண்டு தொண்டர்களைத் தூண்டி வந்தனர்.

“காங்கிரசிற்கு ராஜாஜி வேண்டும்” என்று தலைவர்களில் ஒரு சாராரும். தொண்டர்களில் சிறுபான்மையினரும் வாதாடினார்கள்.

நான் சிறுவயது முதற்கொண்டே ராஜாஜியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வந்தவன். அரசியலிலும் சரி-தமிழ்த் தொண்டிலும் சரி ராஜாஜி உடன் இருந்து பல காரியங்கள் செய்து வருபவன். ஆகவே “ராஜாஜி வேண்டும்” என்ற கோஷ்டியில் நான் சேர்ந்து பணிபுரிவது இயற்கையே! ஆனால் காமராஜ் என்மீது தனி அபிமானம் கொண்டிருந்தார். 1942 போராட்டத்தில் எனது ‘சாகசம்’ அவரைக் கவர்ந்திருந்தது. எனது நகைச்சுவைப் பேச்சு அவருக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு நாள் நான் காமராஜ் அவர்களைப் பார்க்கப் போயிருந்தபோது என்னிடம் மிகவும் கோபமாக பேசினார் “ராஜாஜி 1942 போராட்டம் செய்தவர்களை எல்லாம் குண்டர்கள்-பலாத்காரவாதிகள் என்றெல்லாம் ஏசிப்பேசி நமது போராட்டத்தை எதிர்த்தாரே மறந்து விட்டீர்களா? 1942 போராட்டத்தை நடத்திய நீங்கள் குண்டரா- நான் குண்டாவா, இப்படிப்பட்டவர்களைக் காங்கிரசில் வைத்துக் கொள்ளலாமா? 1942 ஆகஸ்டில் தியாகம் செய்யாதவர்கள் காங்கிரசிற்கே வேண்டாம்” என்று பொரிந்து தள்ளினார்.

நான் அமைதியாகச் சொன்னேன். “ராஜாஜியை ஆகஸ்ட் “தியாகி இல்லை என்று சொல்லுகிறீர்கள். அதனால் என்ன, அவர் செப்டம்பர் தியாகி, அக்டோபர் தியாகி, நவம்பர் தியாகி, டிசம்பர் தியாகி-பல ஆண்டுகளாகப் பல மாதங்கள் தியாகம் செய்த பெரியவரை-சிறந்த அறிஞரை நான் இழக்க விரும்பவில்லை” என்றேன்.

காங்கிரஸ் தொண்டர்கள் பெரும்பாலோர் வேண்டாம் என்று சொல்லும்போது நீ மட்டும் ஏன் கிறுக்கனாக இருக்கிறாய் என்றார். காந்தி கிறுக்கு-காந்தியடிகளை நம்பி காங்கிரசிற்கு வந்தவன். மகாத்மாஜி’ ராஜாஜியை வேண்டாம்’ என்று சொல்லவில்லையே, ராஜாஜியை ஏற்றுக் கொள்ளும்படிதானே “ஹரிஜன்” பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.

நீங்கள் எல்லாம் ஏன் காந்திஜி பேச்சை மீறுகிறீர்கள்? காந்திஜிக்கு விரோதமான இக்காரியம் செய்யும் உங்களுடன் நான் ஒருக்காலும் ஒத்துழைக்கமாட்டேன். காந்தியடிகளின் விருப்பத்தைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பிரசாரம் செய்வேன்” என்றேன்.

“சரி சரி போ-போய் அந்தக் கிழவனைக் கட்டிக் கொண்டு அழு” என்று சீறினார். நான் அமைதியாக வந்துவிட்டேன்.

அதன் பின்னர் “ராஜாஜி வேண்டும்” “வேண்டாம்” கிளர்ச்சி பெரிதாக நடந்தது. ராஜாஜியை காங்கிரஸ் உறுப்பினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அபுல்கலாம் அசாத் அவர்கள் சேர்த்துக் கொண்டார். “ராஜாஜியை வேண்டாம்” என்று சொல்பவர்களை ‘கிளிக்’ என்று மகாத்மாஜீ ஹரிஜன் பத்திரிகையில் எழுதினார்.

உடனே காந்திஜியைக் கண்டனம் செய்து காங்கிரஸ் தொண்டர்கள் பலர் பேசினார்கள். சில ஊர்களில் காந்தியடிகளின் படங்கள் கூட எரிக்கப்பட்டன. இப்படியாகத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லோல கல்லோலப்பட்டது.

கடைசியில் ஒரு வழியாக ராஜாஜி மத்திய அரசில் மந்திரியானார். அத்துடன் அந்தப் பிரச்னை தீர்ந்தது. ஆனால் திரு. காமராஜ் அவர்கள் அதன் பின்னர் ராஜாஜியை ஆதரித்தவர்களை நம்புவதில்லை. காங்கிரஸ் கமிட்டிகளில் எதிலும் வந்துவிடாதபடி பார்த்துக் கொண்டார்.

நான் எப்போதும்போல் காங்கிரஸ் பிரசாரம் செய்து கொண்டிருந்தேன். நாளாக ஆக, தலைவர் காமராஜ் அவர்கள் பழையபடி என்னுடன் சுமூகமாகப் பழக ஆரம்பித்தார்கள்.

ராஜாஜி வங்காள கவர்னராகி-அதன் பின்னர் இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகி மிகுந்த புகழுடன் பதவிவிட்டு சென்னை வந்து தங்கியிருந்தார்.

1952 தேர்தலில் காமராஜ் சுற்றுப்பயணம் செய்யும்போது என்னைக் கூடவே கூட்டிக்கொண்டு போனார். ரொம்பவும் அன்பு காட்டினார். நானும், “இனி காமராஜ் நம்பிக்கையைப் பெற்றுவிடலாம் என்று மகிழ்ந்திருந்தேன். தேர்தலில் முதலமைச்சர் குமாரசாமி ராஜா தோற்றார். காங்கிரஸ் பெரும்பான்மை இழுபறியாகிவிட்டது. காமராஜ் பார்லிமெண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் மந்திரிசபை அமைப்பதானால் ராஜாஜியைத் தவிர வேறு யாராலும் சமாளிக்க முடியாது என்று குமாரசாமி ராஜா கருதினார். மீண்டும் ராஜாஜியை முதலமைச்சராகக் கொண்டு வருவதை காமராஜ் எதிர்த்தார்.

கடைசியில் சர்தார் வல்லபாய்படேலும், நேருஜியும் ராஜாஜிதான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று தீர்மானமாகக் கூறிவிட்டார்கள். காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால் காங்கிரஸ்காரர்கள் கீழ்ப்படிய வேண்டியதுதானே? ஆனால் காமராஜ் எதுவும் கூறாமல் மெளனமாக இருந்து வந்தார். ராஜாஜி மந்திரிசபை அமைத்தார். கம்யூனிஸ்டுகள் வன்மையாக எதிர்த்தார்கள். “ராஜாஜி மந்திரிசபை எதிர்ப்புக் கூட்டம்” என்று மூலைக்கு மூலை போட்டார்கள். அவர்களுடன் காங்கிரஸ் எதிரிகள் அனைவரும் சேர்ந்து கொண்டார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டிகள் மெளனமாகவே இருந்தன. காமராசரும் நமக்கென்ன என்பது போல வாளாவிருந்தார். இதை என்னால் கொஞ்சங்கூட பொறுக்க முடியவில்லை. நேராக காமராஜரிடம் போனேன். “இப்படி இருந்தால் எப்படி?” என்றேன்.

“என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்றார். “மந்திரிசபை காங்கிரஸ் மந்திரி சபைதானே. அதை ஆதரித்து நாம் கூட்டம் போட்டு எதிர்க்கட்சிகளின் போக்கை அம்பலப்படுத்த வேண்டாமா?” என்றேன்.

“ராஜாஜியை எவன் கொண்டுவந்தானோ அவன் செய்யட்டும். நான் ஒன்றும் செய்யப்போவதில்லை” என்றார்.

“நீங்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர். நடப்பது காங்கிரஸ் மந்திரிசபை. இதை ஆதரிப்பது ஒரு காங்கிரஸ்காரன் கடமை அல்லவா?” என்றேன்.

“ஆமா கடமைதான். நீ வேண்டுமானால் உன் கடமையைச் செய்” என்று கோபமாகப் பேசினார்.

“கடமையைக் கண்டிப்பாகச் செய்வேன்” என்று கூறிவிட்டு, திரு. ம.பொ.சி.யிடம் போனேன். பின்னர் சி. சுப்ரமண்யத்தைச் சந்தித்தேன். கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியவர்களையும் சந்தித்துப் பேசினேன்.

அதன் பலன் சென்னை கடற்கரையில் திரு. ம.பொ.சி. தலைமையில் ராஜாஜி மந்திரிசபை ஆதரிப்புக் கூட்டம் பிரம்மாண்டமான முறையில் நடந்தது. ராஜாஜியும் வந்து கலந்து கொண்டார்.

பின்னர் பட்டி தொட்டிகளிலெல்லாம் மந்திரிசபைக்கு ஆதரவுக்கூட்டம் நடந்தது. கம்யூனிஸ்டுகள் ஒருவாறு அடங்கினார்கள். இவைகள் எதிலும் காமராஜ் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. என்மீது மீண்டும் அவர் கோபங்கொண்டார்.

ராஜாஜிக்கு இக்கட்டான நிலைமை உண்டானது. புதிய கல்வித் திட்டத்தைத் திரித்துக் கூறி ராஜாஜியை திராவிடக் கழகம்-முன்னேற்றக் கழகம் எல்லாம் எதிர்த்தார்கள். அப்போதும் தலைவர் காமராஜ் ராஜாஜிக்கு ஆதரவாக இருக்கவில்லை. அதனால் ராஜாஜி தன் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் காமராஜ் முதன் மந்திரியானார்.

ராஜாஜி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரு அண்ணாதுரை அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து 1967 தேர்தலில் காமராஜ் அவர்களையும் தோற்கடித்து, காங்கிரஸ் கட்சியையும் தோற்கடித்தார்.

ராஜாஜி - காமராஜ் சண்டையினால்தான், காங்கிரஸ் நாளாவட்டத்தில் பலவீனமடைந்தது. தேசிய சக்திகள் குன்ற, தேசவிரோத சக்திகள் பலமடைந்தன.

காமராஜ் அவர்களை முறியடிக்க ராஜாஜி அவர்கள் செய்த முயற்சியில், தி.மு.க. ஆட்சியில் அமர்ந்து விட்டது.

பின்னர் ராஜாஜி-காமராஜ் இருவரும் ஒன்று சேர்ந்தும்கூட தி.மு.க வைத் தோற்கடிக்க முடியவில்லை.

தேசீய சக்திகள் மீண்டும் தமிழகத்தில் தலைதூக்க முடியாதபடி ராஜாஜி-காமராஜ் பகை செய்து விட்டது.

அரசியலில் ராஜாஜி காமராஜ் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களே ஒழிய, தனிப்பட்ட முறையில் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் மதித்தார்கள்.

ராஜாஜி தன் கடைசி காலத்தில் தமிழக அரசை காமராஜரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று மிகவும் விரும்பினார்.

காமராஜரைப் போன்ற நாணயமான வாழ்க்கை உடையவர்கள் அரசியலில் கிடைப்பது அரிது என்று ராஜாஜி கருதினார். இதைப் பகிரங்கமாக எழுதினார். பேசினார்.

ஆனால் ராஜாஜியின் எண்ணம் நிறைவேறவில்லை. அவர் அமரரானார். சொன்னால் நம்பமாட்டீர்கள். யாருக்கும் கண்ணீர் விடாத காமராசர், ராஜாஜியின் சடலத்தைப் பார்த்ததும் பொல பொல வென்று கண்ணீர் சிந்தினார்.