சொன்னால் நம்பமாட்டீர்கள்/சங்கப்பலகை

சங்கப் பலகை

1947ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது. மேற்கு வங்காளத்தின் முதல் கவர்னராக ராஜாஜி அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அந்த வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் நானும் கல்கத்தா சென்றோம்.

கல்கத்தாவில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். அதில் ஒரு நிகழ்ச்சியில் கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படத்தைத் திறந்து வைத்து பேசும்படி என்னைப் பணித்தார்கள். நானும் மிக்க மகிழ்ச்சியுடன் கல்கியின் திரு. உருவப்படத்தைத் திறந்து வைத்து விட்டுப் பேசலானேன்.

“தமிழ்நாட்டில் மதுரை மாநகர் மிகவும் பிரசித்திபெற்றது. அறுபத்து நான்கு திருவிளையாடல்கள், பாண்டிய மன்னர்களின் ஆட்சித் திறமை, தமிழ் வளர்த்த சங்கம்-இவைதான் அதற்குக் காரணமாகும்.

இதெல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் நாகரீகத்தையே உலகிற்கு எடுத்துக் காட்டுவது போன்ற விண் மறைக்கும் கோபுரமாகவும், வினை மறக்கும் கோயிலாகவும், கண்ணமைந்த காட்சியாகவும் மீனாட்சி அம்மன் ஆலயம் மதுரை மாநகரத்தின் நிரந்தரமான சிறப்புக்குச் சிகரம் வைத்தது போல அமைந்திருக்கிறது.

தற்போது மதுரை அரசியல் துறைகளிலும் பிரசித்த மடைந்திருக்கிறது. தேசீய இயக்கத்தில் மதுரை எப்போதும் முன்னணியில் நின்று வருகிறது. ஆலயப் பிரவேசம் கூட முதன் முதலில் மதுரையில்தான் நடந்தது.!

இப்படி எல்லாத் துறைகளிலும் முன்னணியில் நிற்கும் மதுரை, சங்கீத விஷயத்திலும் முன்னணியில் நிற்பதில் ஆச்சரியமில்லை.

பிரபல சங்கீத வித்வான் புஷ்பவனம் அய்யர், மதுரை.மணி அய்யர், ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி முதலிய முதல்தர வித்வான்களைத் தமிழ் நாட்டுக்கு ஈந்த பெருமை மதுரைக்குத் தான் உண்டு.

இத்தகையப் பிரசித்திவாய்ந்த மதுரை மாநாகரத்தில் “பொற்றாமரைக் குளம்” என்று ஒரு குளம் இருக்கிறது. அந்தக் குளத்தில் வெகுகாலத்துக்கு முன்பு ‘சங்கப்பலகை’ என்பதாக ஒரு பலகை இருந்ததாம்.

அந்தப் பலகைக்குத் தயை தாட்சண்யம் என்பது கொஞ்சமும் கிடையாதாம். தகுதியுள்ளவர்களை ஏற்றுக் கொள்வதும், மற்றவர்களைத் தள்ளிவிடுவதும் அதன் பிடிவாத துர்க்குணமாக இருந்ததாம்!

இதனால் அநேகர் அதில் ஸ்தானம் பெறமுயன்றும் முடியாமற் போய்விட்டது. சங்கப் பலகை அங்கீகரித்த வித்வான்கள்தான் வித்வான்கள் என்றும் மற்றவர்கள் எல்லாம் போலி என்றும் ஆகிவிடுமாம்.

ஆகவே சங்கப் பலகையால் ஏற்றுக் கொள்ளப்படாத பண்டிதர்கள், கவிஞர்கள் கலைஞர்கள் அனைவரும் கோபம் கொண்டு மேற்படி பலகையைச் சுக்கு நூறாக்கிவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

ஒரு சிலர் பொற்றாமரைக் குளத்தில் படகேறிச் சென்று சங்கப் பலகையில் தொத்திக்கொள்ள முயன்றார்கள். சிலர் கட்டு மரம் கட்டிக் கொண்டு போய்ப் பலகையைத் துண்டு துண்டாக வெட்டிவிடவேண்டுமென்று கோடாலியுடன் புறப்பட்டார்கள்.

சிலர் ஜலத்துக்குள் கண் மறைவாக நீந்திப்போய் முக்குளித்துப் பலகையில் ஏறிவிடப் பிரயத்தனப்பட்டனர். ஒன்றும் பலிக்கவில்லை. ஏமாற்றத்துக்குள்ளான பண்டிதர்கள் பலர் ஆத்திரமடைந்து, பலகையைப் பொசுக்கிவிட நெருப்புப் பந்தத்துடன் கிளம்பினார்கள். நெருப்புதான் அணைந்ததே ஒழியப் பலகையைப் பொசுக்க முடியவில்லை.

கடைசியாக, “இது தெய்வீக சக்தி வாய்ந்தது. தமிழ் ஆங்களின் தரத்தையும் தகுதியையும் அறிந்து கொள்ளத் தமிழ்க் கடவுளால் அளிக்கப்பட்ட தராசு, இதில் ஏறுவதற்கு நம்மை நாம் தகுதியாக்கிக் கொள்ள வேண்டுமே ஒழியப் பலகை மீது கோபப்படுவதில் பயனொன்றுமில்லை” என்று கண்டு கொண்டார்கள்.

இப்படி மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்த மேற்படி சங்கப்பலகை திடீரென்று ஒரு நாள் காணாமற்போய்விட்டது. சங்கப் பலகை எப்படி மறைந்தது எங்கே போயிற்று என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அனைவரும் கையை நெரித்துக் கொண்டார்கள். செம்படவர்களை வரவழைத்துப் பொற்றாமரைக் குளத்தில் வலைபோட்டுப் பார்த்தார்கள். ஊஹூம் சங்கப் பலகை

சில ஆண்டுகளுக்கு முன் ‘கர்நாடகம்’ என்ற பெயரில் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலைகளைப் பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். நாடகம், சங்கீதம், நாட்டியம் சம்பந்தமாக அவர் எழுதிய விமரிசனங்களைப் படிக்கப் படிக்கத் தமிழ் மக்களுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது.

“இப்படியும் தராதரம் அறிந்து எழுத முடியுமா?” என்று அதிசயித்து மூக்கின் மேல் விரல் வைத்தார்கள் தமிழ் நாட்டில் காணாமற்போன சங்கப் பலகைதான் இப்படி மனித உருவத்தில் ‘கர்நாடகம்’ (கல்கி) என்ற பெயரில் தோன்றித் தமிழர்களுக்குத் தராசாக இருக்கிறதோ என்றுகூடச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். அவர்களுடைய சந்தேகம் நாளடைவில் ஊர்ஜிதமாயிற்று.

“தமிழ்க்கடவுள் ‘சங்கப் பலகை'க்கு வேறு எந்த தேசமும் லாயக்கில்லை. அது தங்குவதற்குரியஇடம் தமிழ்நாடுதான்” என்று முடிவு கட்டியிருக்க வேண்டும். எனவே, மேற்படி பலகைக்கு மனித ரூபமளித்து கல்கியை ‘கர்நாடகம்’ என்ற பெயருடனே தமிழ் மக்களின் இதயத்திலே மிதக்க விட்டிருக்கிறார்கள்.

அன்று முதல் கல்கி ஏற்றுக்கொண்ட கலைஞர்தான் உண்மையான கலைஞர் என்ற மனப்பான்மை தமிழ் மக்களுக்கு உண்டாகியிருக்கிறது.

ஆம், தெளிந்த நீரோட்டத்தைத் தெளிந்த நீரோட்ட மென்றும் பாசி பிடித்த குட்டையைப் பாசி பிடித்த குட்டை என்றும் கர்நாடகம் (கல்கி) எப்போதும் சொல்லத் தயங்கியதேகிடையாது. தம்முடைய ஊரில் ஓடும் சாக்கடையாயிற்றே என்பதற்காக அவர் அதற்கு விஷேச சலுகைகாட்டி அதைப் புண்ணிய தீர்த்தம் என்றும் கூறுவது கிடையாது. கல்கியின் பாரபட்சமற்ற கலை விமரிசனங்களுக்குத் தகுந்த உதாரணங்களும் உண்டு.

ஒரு சமயம் காங்கிரஸ்வாதியும் கதர் அபிமானியுமான ஒரு பெண்மணியின் திரைப்பட நடிப்பு சுகமில்லை என்று கல்கி எழுதினார். உடனே சிலர், “அடடா அந்த பெண்மணி எப்போதும் கதர் அணிபவராயிற்றே, தேர்தல் கூட்டத்தில் வந்துகூட பாடுவாரே! அவரைப் பற்றி இப்படி எழுதலாமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு கல்கி “அந்தக் கதரபிமானமுள்ள பெண்மணி காங்கிரஸ் அபேட்சகராக எங்கேயாவது தேர்தலுக்கு நின்றால், அவருக்கு ஒட்டுக் கொடுங்கள் என்று பிரச்சாரம் செய்வேன்.

ஆனால் ஒருவர் காங்கிரஸ்வாதி என்பதற்காக அவருடைய அபஸ்வரங்களை ஸுவரங்கள் என்றோ மோசமான தடிப்பை நல்ல நடிப்பு என்றோ நான் ஒப்புக் கொள்ள முடியாது. அம்மாதிரி நிலைமை ஏற்பட்டுவிட்டால் அப்புறம் டாக்டர் ராஜன் பாட்டுக்கச்சேரி செய்தால் நன்றாயிருக்கிறதென்று சொல்ல வேண்டும். நீ முத்துரங்க முதலியார் கதாகாலட்சேபம் செய்தால் அதற்கும் பலே போடவேண்டும்.

ஸ்ரீமதி ருக்மணி லக்ஷ்மிபதி பரதநாட்டியம் ஆடினால் கூடத் தலையை ஆட்டவேண்டி நேரும், இப்படியெல்லாம் வந்துவிட்டால் தமிழ்நாட்டில் கலைகள் உருப்பட்டாற் போலத்தான்? என்றார்.

பரத நாட்டியத்திலும் சங்கீதத்திலும் அவருக்குள்ள அபிமானம் காரணமாகத் தமிழ் நாட்டில் காலைத் தூக்கிக் குதிப்பவர்களையெல்லாம் உயர்ந்த நாட்டியக்காரர்களென்றோ, வாயைத் திறந்து பாடுபவர்களையெல்லாம் சிறந்த சங்கீத வித்வான்களென்றோ, வேஷம் போட்டு மேடையில் தோன்றுபவர்களையெல்லாம் சிறந்த நடிகர்களென்றோ கூறிவிடமாட்டார்.

ஒரு வித்வானுடைய சங்கீதம் கல்கிக்குப் பிடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், மேற்படி வித்வான் பிடிவாதமாய் “தமிழ்ப் பாட்டுப் பாடமாட்டேன் வேறு பாஷையில்தான் பாடுவேன்” என்றால் அதற்காக அவருடைய சங்கீதம் நன்றாயில்லையென்று சொல்லும் வழக்கம் கல்கிக்குக் கிடையாது. “ஐயாே இந்தப் பாவி மனிதர் இவ்வளவு நன்றாகப் பாடுகிறாரே, இவர் தமிழ் அபிமானியாகவும் இருக்கக்கூடாதா?” என்று எண்ணித்தான் வருந்துவார்.

திரு. ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி) அவர்கள் சிறு பையனாக இருந்தபோது, நமது இந்திய தேசம் அவருடைய சேவையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயமே அவருக்குத் தெரியாமலிருந்ததாம். அப்போதெல்லாம் அவர் மனதறிந்து தேசத்திற்காக ஒருவிதச் சேவையும் செய்ததில்லையாம். ஒரே ஒரு தடவை செய்ய முயன்ற சேவையும் விபரீதமாக முடிந்ததாம்.

அந்தக் காலத்தில் ஒருநாள் தேசம் அவருடைய பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலிருந்த பாழும் கிணற்றில் விழுந்து விட்டதாம், முழுகுவதற்கு வேண்டியதண்ணீர் இல்லாமல் தேசம் தத்தளித்துக் கொண்டிருந்த சமயம் பக்கத்திலிருந்த தேசபக்தர்கள் சிலர் கல்கியைப் பார்த்து, “அப்பா தேசத்தைக் காப்பாற்ற ஒரு துரும்பையாவது நீ எடுத்துப் போடக் கூடாதா?” என்று சொன்னார்களாம்.

“உடனே கல்கி துரும்பு என்னத்திற்கு? கல்லைத்துக்கியே போடுகிறேன்” என்று கூறிவிட்டு ஒரு கல்லைத் துக்கிக் கிணற்றுக்குள் போட்டாராம். உடனே, தேசம் அந்த நாலு விரற்கடைத் தண்ணீரில் தலை கீழாக அமிழ்ந்து பிராணனை விட்டுவிட்டதாம்!

இதன் பலனாக கல்கியின் தகப்பனார் ஒருவராகன் தண்டம் கொடுக்கும்படி நேர்ந்ததாம். தகப்பனாரிடம் மூன்றரை ரூபாய் வாங்கிக் கொண்டு போய் புதிய இந்தியா தேசப் படம் ஒன்றை வாங்கி வந்து பள்ளிக்கூடத்துச் சுவரில் மாட்டிய பிறகுதான் உபாத்தியாயர் அவரைப் பெஞ்சுமேலேயிருந்து கீழே இறக்கினாராம்.

அதற்குப் பிறகு வெகுகாலம் வரையில் தேசம் என்றாலே கல்கி வெறுப்புக் கொண்டிருந்தாராம். அப்புறம் ஒரு நாள் தற்செயலாக “தேசத்திற்காக உழைக்க ஜென்மம் எடுத்தோம்” என்ற பாட்டை அவர் கேட்க நேர்ந்ததாம். உடனே ஜன்ம தேசத்திற்கு உழைக்க வேண்டுமென்ற ஆசை அவர் பிடரியைப் பிடித்து உந்தியதாம்.

மேல் சட்டை, மேல் வேஷ்டி எல்லாவற்றையும் கழற்றித் தலையைச் சுற்றி எறிந்து விட்டு, காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினாராம்.

மாகத்மாஜி ! நான் தேசத்திற்கு உழைக்கத் துணிந்து விட்டேன். அவ்விடம் நான் வரட்டுமா? அல்லது தேசத்தை இங்கே அனுப்பிவைக்கிறீர்களா? என்று கேட்டாராம்.

மகாத்மாஜி, கேட்டதற்குப் பதில் சொல்லாமல், கைராட்டையில் தினம் இரண்டாயிரம் கெஜம் நூல் நூற்றுவா! உன் மனது தெளிவடையும் என்று பதில் கடிதம் எழுதினாராம்.

ரொம்ப லட்சணம்: நான் தேசத்துக்கு உழைக்க வந்தேனா? நூல் நூற்க வந்தேனா? என்று கல்கி தமக்குத்தாமே கேட்டுக் கொண்டு மகாத்மாஜியை விட்டுவிட்டாராம்.

பின்னர், திடீரென்று தம் உடையை மாற்றினாராம். ஒரு கதர் ஜிப்பாவும், அதன்மேல் கம்பளி வெயிஸ்ட் கோட்டும் அணிந்து தலையில் ஒரு காந்திக் குல்லா தரித்துக் கொண்டாராம். உடனே அச்சமயம் காங்கிரஸ் தலைவராயிருந்த பண்டித ஜவஹர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதினாராம்.

“தேச சேவைக்குத் தயார் ! காங்கிரஸ் தலைமைப் பதவி வகிப்பது சிரமமாயிருந்தால் தந்தியடிக்கவும்; உடனே புறப்பட்டு வருகிறேன்! “ என்று குறிப்பிட்டிருந்தாராம். ஜவஹர்லால்ஜி யிடமிருந்து பதில் வந்ததாம்.

“தற்சமயம் இந்தியாவுக்குச்சேவை சீனப் போர்க்களத்தில் செய்யவேண்டும். உடனே புறப்பட்டு போகவும்” என்பதுதான் அந்தப் பதில்.

இதைப் பார்த்ததும் கல்கிக்கு கோபம் கோபமாய் வந்ததாம். உடனே வெயிஸ்ட் கோட்டையும் காந்திக் குல்லாவையும் எடுத்தெறிந்து விட்டுத் தலையில் உச்சிக்குடுமி வைத்துக் கொண்டாராம். கறுப்புக் கண்ணாடியும் வாங்கி மாட்டிக் கொண்டாராம். பின்னர் நமது சொந்த மாகாணத் தலைவர் ராஜாஜிக்குக் கடிதம் எழுதினாராம்.

“தேசத்திற்காக உயிரைவிடக் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டேன். எவ்விடத்தில் ஆரம்பிக்கலாம்?” என்று யோசனை கேட்டிருந்தாராம்.

“கள்ளுக்கடையில் ஆரம்பிக்கலாம். ஒரு குடிகாரனைக் குடியை விடும்படி செய்தால், ஒன்பது தடவை உயிரை விடுவதைவிட அதிகப்பலன் உண்டு என்று ராஜாஜி பதில் எழுதினாராம்.

“இதென்ன பிரமாதம்? ஒரு குடிகாரனைக் குடியை விடும்படி செய்து ஒன்பது தடவை தேசத்திற்கு உயிர்விடுவோம்” என்று தீர்மானித்துக் கொண்டு கல்கி அவர்கள் திருச்செங் கோட்டுக்கு ராஜாஜியிடம் போய்ச் சேர்ந்தாராம்.

ராஜாஜி இவரைப் பார்த்தவுடன் “ஓ நீங்கள்தானா தேசத்திற்காக உயிரைவிடக்கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்? உம்மிடம் உயிர் இருப்பதாகவே தெரியவில்லையே; பின் எப்படி அதை விடப் போகிறீர்?” என்றாராம்.

உடனே கல்கி, “அதுவா? ரயிலில் பஸ்ஸில் வண்டியில் வரும்போது பத்திரமாக இருக்கவேண்டுமென்பதற்காகப் பெட்டியில் வைத்திருக்கிறேன் என்று சொல்லிப் பெட்டியிலிருந்து சில துண்டுப் பிரசுரங்கள், சின்னப் புத்தகங்கள் முதலியவற்றை எடுத்து வெளியில் போட்டாராம்.

ராஜாஜி அவற்றைப் படித்துவிட்டு “பேஷ் இதை நீர் உம்முடைய உயிர் என்று சொன்னது சரிதான்! “ என்று மெச்சிவிட்டு அதைப்போல நிறைய எழுதும்படி கல்கியைத் தூண்டினாராம்

கல்கி தமிழ் எழுத ஆரம்பித்தார்.

அடடா தமிழ்மொழிக்கு யோகமல்லவா பிறந்து விட்டது!

கல்கியின் எழுத்துப் பைத்தியத்தை ராஜாஜி போலவே ஆசிரியர் திரு.வி. கலியாணசுந்தரமுதலியாரும் வளர்த்து வந்தார்.

“தமிழ் நாட்டில் பலர் செய்வதுபோல என்னுடைய தமிழ் நடையைக் காப்பி அடித்துக் கெட வேண்டாம்; உன் போக்கிலேயே செல்” என்று திரு.வி.க.அவர்கள் கல்கிக்கு போதனை செய்தார்.

இதெல்லாம் ஒரு புறமிருக்க, தமிழ் மக்களாகிய நாம் மிஸ்டர் வாரன் என்னும் ஆங்கில துரை மகனாருக்கு ஒரு கோவில் கட்டிக் கும்பாபிஷேகமும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம், ஏனெனில் கல்கியைத் தமிழ் எழுத்தாளராக ஆக்கியதற்கு முக்கியப் பொறுப்பாளி அவர்தான்!

1922-ம் ஆண்டிலே கூடலூர் சிறைச்சாலைக்கு கல்கியை மேற்படி துரைமகனார் அனுப்பி வைக்கப் போக, அங்கே கம்மா இருப்பதற்கு முடியாமல் கல்கி தமிழ் எழுத ஆரம்பிக்க, பின்னர் தமிழும் கல்கியும் ஓருயிரும் ஈருடலுமாகி, தமிழ் என்றால் கல்கி-கல்கி என்றால் தமிழ் என்பது போன்ற பொய்யா மொழிகளும் உண்டாகி விட்டன.

தமிழ் வாழ்க! அதை வாழ்விக்க வழிசெய்த வாரன் துரை மகனாரும் வாழ்க என்று வாழ்த்துவோமாக!

கம்பன் பிறந்த தமிழ்நாடு என்றும், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றும், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்படைத்த தமிழ்நாடு என்றும், தமிழ் நாட்டின் பெருமைகளைப் பலர் பலவிதமாகச் சொல்லிப் பாராட்டி மகிழ்கிறார்கள்.

“கல்கி பிறந்த தமிழ்நாடு” என்று சொன்னாலும் மிகையாகாது. ஏனெனில் கம்பரும், வள்ளுவரும், இளங்கோவும், பாரதியும், கல்கியின் உருவத்தில் தமிழ்நாட்டில் உலாவுகிறார்கள். ஆகவே கல்கி பிறந்த தமிழ் நாடு என்று கூறுவதுதான் சரி.

என் பேச்சு முடிந்ததும் சபை மகிழ்ச்சியில் திளைத்தது. பலர் மேடைக்கு வந்து கைழுலுக்கினார்கள். சிலர் மாலை அணி வித்தார்கள். ஒரு பெண்மணி ஒரு டாலருடன் கூடிய தங்கச் சங்கிலி ஒன்றைப் பரிசாக அளித்தார்.

உடனே பெண்மணிக்கு நன்றி தெரிவித்து விட்டு, “கல்கியைப் பற்றி நான் பேசியதற்குக் கிடைத்தது இந்தப் பரிசு. இதை நான் கல்கி அவர்கள் சேர்க்கும் பாரதி மண்டப நிதிக்கு அளிக்கிறேன்.

இதை கல்கி அவர்களே ஏலத்திற்கு விட்டு, கிடைக்கும் பணத்தை நிதியில் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்", என்று சொல்லி பலத்த கரகோஷத்துக்கிடையில் கல்கி அவர்களிடம் மேற்படி தங்கச் சங்கிலியைக் கொடுத்தேன்.

கல்கி அவர்களும் தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த சிறிய சொற்பொழிவு ஒன்றைச் செய்து மேற்படி தங்கச் சங்கிலியை ஏலத்துக்கு விட்டார். சங்கிலி எவ்வளவு தொகைக்கு ஏலம் போயிற்று என்று நம்புகிறீர்கள்?

சொன்னால் நம்பமாட்டீர்கள். ரூபாய் ஐயாயிரத்துக்கு ஏலம் போயிற்று. அதைவிட அதிசயம் ஏலம் கேட்ட மற்றவர்களும் எங்களுக்குச் சங்கிலி மேல் ஆசையில்லை. பாரதி நிதிக்கு நாங்களும் பணம் தருகிறோம் என்று கூறித் தாங்கள் கேட்ட ஏலத்தொகையை அவரவர்களும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதையும் சேர்த்து மொத்தத்தொகை ரூ.9780 சேர்ந்தது.

கல்கத்தா தமிழர்களின் பாரதி பக்தியைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம்.