சொன்னால் நம்பமாட்டீர்கள்/ராஜாஜியின் மதிநுட்பம்

ராஜாஜியின் மதிநுட்பம்

துவரையில் நான் ஏராளமாகச் சொற்பொழிவு செய்திருப்பேன். நான் தமிழில் பேசி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லப்பட்ட சொற்பொழிவு ஒன்றே ஒன்றுதான்.

சொற்பொழிவு நடந்த இடம் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன். ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ரசிகமணி டி.கே.சி.

வங்காள கவர்னராக ராஜாஜி 1947ல் பதவி ஏற்றபோது நாங்கள் கல்கத்தா சென்றிருந்தோம்.ராஜாஜியின் விருந்தினராகத் தங்கும் பாக்கியம் கிடைத்தது. சாந்திநிகேதனில் ராஜாஜிக்கு ஒரு வரவேற்பு நடந்தது.

மிகவும் ரம்யமான வரவேற்பு வங்காளத்தின் பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் கூடியிருந்த அந்தச் சபையில் என்னைப் பேசும்படி தலைமை வகித்த திரு பி.சி.கோஷ் (அப்போதைய வங்காள முதன் மந்திரி) அழைத்தார். நான் திடுக்கிட்டுப் போனேன். ராஜாஜியைப் பரிதாபகரமாகப் பார்த்தேன்.

“சும்மா தமிழிலேயே பேசுங்கள். ரசிகமணி டி.கே.சி. ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார்” என்று ராஜாஜி கூறினார். “சரி” என்று “மைக்” அருகில் வந்தேன்.

திடீரென்று ராஜாஜியே எழுந்து ஒரு மாலையை என் கழுத்தில் போட்டார். சபையோரின் கரகோஷம் அடங்கக் கொஞ்சநேரமாகியது. நான் ராஜாஜியின் அன்பினால் திணறித் திக்குமுக்காடிப் போய் பேச்சை ஆரம்பித்தேன்.

“ராமபிரானுடைய ஆண்மையும், கிருஷ்ணனுடைய ராஜதந்திரமும், புத்தருடைய தூய்மையும், சிபிச்சக்ரவர்த்தியின் தியாகமும், ராமானுஜரின் மதப் பக்தியும், வள்ளுவரின் வாய்மையும் சேர்ந்து உருவெடுத்து வந்திருப்பவர் ராஜாஜி.”

“ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் மூலம் இந்து மதத்திற்குப் புத்துயிர் உண்டாயிற்று. தமிழ்நாடு அப்பொழுது விழித்தெழுந்தது. அவர்கள் இருவரும் இந்த வங்காளத்தில் பிறந்தவர்கள்.

பின்னர் மற்றொரு வங்காள வீரர் விபின் சந்திரபாலர் சென்னைக்கு விஜயம் செய்து தம்முடைய ஆறு பிரசங்கங்களின் மூலம் தமிழ் நாட்டில் தேசபக்தியை உண்டாக்கினார்.

“தேசபந்து தாஸ் வக்கீல் தொழிலை விட்டு நாடு முழுதும் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கினார். ராஜாராம் மோகன்ராய், ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி போஸ் முதலியோர்களால் தமிழ் நாட்டுக்கு எவ்வளவோ லாபம் ஏற்பட்டிருக்கிறது”

“சென்ற பல வருஷ காலமாக வங்காளம் எங்களுக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கிறது. அப்பேர்ப்பட்ட வங்கத்திற்கு நாம் என்ன கைமாறு செய்யலாம். செய்ய முடியும் என்று ஏங்கிக் கொண்டிருந்தோம்.

“ஆனால் அதெற்கெல்லாம் வட்டியும் முதலுமாக எங்கள் ராஜாஜியை உங்களுக்குக் கவர்னராகக் கொடுக்கிறோம். ராஜாஜியை கவர்னராக அடைய இவ்வங்காளம் 100 வருஷ காலம் தவம் செய்திருக்க வேண்டும்,“ என்று கூறியபோது, “ராஜாஜிக்கு ஜே” என்ற கோஷம் வானை அளாவியது.

நானும் மரியாதையாக அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டேன். விழா முடிந்தது. கல்கத்தாதிரும்பும்போது ராஜாஜி அவர்களிடம் நான், “என்னை எதற்குப் பேசும்படி பணித்தீர்கள். ரசிகமணி டி.கே.சி. பேசினால் போதாதா?” என்றேன்.

அதற்கு ராஜாஜி “ரசிகமணி ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தது. ஆகவே நம் தமிழ் மொழியை வங்காளிகள் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதற்காகத்தான் உங்களைப் பேசச் சொன்னது” என்று சொல்லிய பிறகு சிறிது மெளனமாக இருந்து விட்டு, “நானே உங்களுக்கு மாலை போட்டது ஏன் தெரியுமா?” என்ற் கேள்வியும் போட்டு பதிலையும் சொன்னார்.

“உங்களை இங்கு ஒருவருக்கும் தெரியாது. நீங்கள் பேசும்போது யாரோ என்று அசிரத்தையாக வங்காளிகள் இருந்துவிட்டால் உங்கள் தமிழை யாரும் கவனித்துக் கேட்க முடியாது.

நான் மதித்து மாலை போடக்கூடிய ஆள் என்று தெரிந்து விட்டால் எல்லோரும் கவனமாகக் கேட்பார்கள் அல்லவா? அதற்காகத்தான்” என்று கூறினார்.

ராஜாஜியின் பெருந்தன்மையை நினைத்து உருகிப் போனேன்.