சொன்னால் நம்பமாட்டீர்கள்/டி.கே.சண்முகம் அடைந்த பேரின்பம்

டி.கே.சண்முகம் அடைந்த
பேரின்பம்

1960 -ல் “கடவுளின் குழந்தை” என்ற திரைப்படம் எடுத்தேன். அதில் சிவஞான பாரதி என்ற ஒரு தமிழ் ஆசிரியர் வேடம். தமிழை மூச்சாகக் கொண்டு தமிழ் பரப்பிவரும் கதாபாத்திரம். “தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற பாடலைப் பாடும் சிறந்த வேடம்.

அந்த வேடத்தை யாருக்குக் கொடுப்பது என்று யோசித்தேன். அப்போது தமிழரசுக் கழகத்தில் என்னுடன் மிகவும் ஈடுபாடு கொண்டு தமிழ்த்தொண்டு செய்து கொண்டிருந்த முத்தமிழ் கலாவித்வரத்ன அவ்வை டி.கே.சண்முகம் அவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்தேன்.

இதை திரு. சண்முக அண்ணாச்சி அவர்களிடம் நான் சொன்னபோது மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார்.

“நடிப்பதற்குப் பணம் எவ்வளவு வேண்டும்” என்று கேட்டேன். “படம் முடிந்ததும் பணம் கொடுக்கலாம்” என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு படத்திற்குப் பல யோசனைகள் சொன்னார். கூடவே இருந்து நடித்துப் படத்தை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்தார். படம் முடிந்து வெளி வந்தது. படத்திற்கு நல்ல பேரும் கிடைத்தது.

அதன் பிறகு நான் ஒரு நாள் திரு. சண்முக அண்ணாச்சி அவர்களிடம் சென்று படம் தான் முடிந்துவிட்டதே. “தங்களின் ஒத்துழைப்பை நான் ஒரு நாளும் மறக்கமாட்டேன். இப்போதாவது சொல்லுங்கள் எவ்வளவு பணம் வேண்டும்” என்று கேட்டேன்.

உடனே அண்ணாச்சி சண்முகம் அவர்கள் சொன்னதைச் சொன்னால் நம்ப மாட்டீர்கள்,

“நான் பெரிய பணக்காரன் அல்ல. எனக்கு பணம் தேவைதான், ஆயினும் நீங்கள் கொடுத்த வேடம் என் மனதிற்கு மிகவும் பிடித்த வேடம்.

நமது கொள்கையைப் பரப்புவதற்கு நீங்கள் செலவு செய்து சினிமா எடுத்திருக்கிறீர்கள்.

இதில் என் பங்கும் இருக்கிறது என்ற ஒன்றே எனக்குக் கோடி கொடுத்தாற்போல ஆகவே எனக்குப் பணம் வேண்டாம்” என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.