சொன்னால் நம்பமாட்டீர்கள்/பூட்டை உடையுங்கள்
1942 போராட்டத்தில் நான் சிறையிலிருந்து விடுதலை அடைந்ததும் சென்னை தியாகராய நகரில் தமிழ்ப்பண்ணை என்ற புத்தக வெளியீட்டகம் துவக்கினேன். அப்போது பல தலைவர்களும் தொண்டர்களும் விடுதலையாகாமல் சிறையி லிருந்தார்கள்.
அவர்களை எல்லாம் விடுதலைசெய்து தேசத்தில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டையைத் தகர்க்க வேண்டும் என்ற கருத்துடன், “பூட்டை உடையுங்கள்“ என்று ஒரு நூல் வெளியிட்டேன். இந்தத் தலைப்பைப் பார்த்த ஆங்கிலேய அரசு, சிறைப்பூட்டை உடைக்கும்படி தூண்டுகிறேன் என்று கூறி என்னைக் கைது செய்தது. இத்துடன் “வங்காளப் பஞ்சம்-“ “ஜப்பான் வருவானா?” என்ற புத்தகங்களை வெளியிட்டதற்காகவும் கைது செய்யப்பட்டேன்.
வழக்கு எழும்பூர் பிரதம மாகாண மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடைபெற்றது. மாஜிஸ்ட்ரேட் ஒரு தெலுங்கர், பெயர் கோடீஸ்வர ராவ், சுத்தமாகத் தமிழ் தெரியாது.
“பூட்டை உடையுங்கள்” என்பதை அவருக்கு Break open the lock என்று மொழிபெயர்த்துக் கொடுத்து விட்டார்கள். இதை வைத்துக் கொண்டு அவர் “எதுக்கு மேன் ஜெயில் பூட்டை உடைக்கும்படி சொன்னே?” என்று கேட்டார்.
நான் அவருக்குப் பணிவுடன், “பூட்டை உடையுங்கள் என்பதற்கு நாள் கொள்ளும் அர்த்தம் Desolve the dead lock என்பதாகும்.” என்றேன்.
அவர் அதை ஒப்புக் கொள்ளாமல், “பூட்டை“ என்றால் “lock?“ “உடை” என்றால் “Break“ என்று அர்த்தம் செய்து சொன்னார். சர்க்கார் வக்கீலும் என்னைக் கைதுசெய்த இன்ஸ்பெக்டரும் மாஜிஸ்ட்ரேட்டுக்குத் தலையாட்டினார்கள்.
உடனே நான் Kicked the bucket என்றால் இறந்து போனான் என்று அர்த்தமே தவிர பக்கெட்டை உதைத்தான் என்றா சொல்வது? என்றேன். கோர்ட் சிரித்தது. மாஜிஸ்ட்ரேட்டும் சிரித்து விட்டு “வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா?” என்று கேட்டார்.
உடனே நான் “நீங்கள் தெலுங்கர், உங்களுக்குச் சரியாகத் தமிழ் தெரியவில்லை. என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டேரோ கன்னடக்காரர். அவருக்கும் தமிழ் தெரியாது. கேஸ் நடத்த வந்த சர்க்கார் வக்கீலோ மலையாளி நான் வெளியிட்டிருக்கும் புத்தகமோ தமிழ்ப் புத்தகம். ஆகவே தமிழ் தெரிந்தவர்கள் இந்த வழக்கை நடத்தவேண்டுமென்று விரும்புகிறேன்” என்றேன்.
மாஜிஸ்ட்ரேட்டுக்கு கோபம் வந்துவிட்டது “வாட் டமில்-டமில்“ என்று கூறி ஆறு மாதம் சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கிவிட்டார் என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டரே என்னிடம் வந்து “காரியத்தைக் கெடுத்துவிட்டீர்களே!” மாஜிஸ்ட்ரேட் மூன்று மாதம்தான் தண்டனைக் கொடுப்பதாக இருந்தது. ஆனால் நீங்கள் தமிழ் கிமிழ் என்று பேசி ஆறுமாதம் வாங்கிக் கொண்டீர்கள் என்று அனுதாபப்பட்டார்.
நான் சென்னை சிறைக்குப் போனதும் அங்கிருந்த பேராசிரியர் என்.ஜி.ரங்காவிடம் மாஜிஸ்ட்ரேட் விஷயம் சொன்னேன். அவர் கூறியது: “தாய் நாட்டுப் பற்றுக்காக மூன்று மாதம், தாய் மொழிப் பற்றுக்காக மூன்று மாதம். ஆக ஆறு மாதம் சரிதான்“ என்றார்.