சொன்னால் நம்பமாட்டீர்கள்/வெள்ளி மணி
1946ஆம் ஆண்டு வெள்ளி மணி என்ற பத்திரிகையைத் துவக்கினேன். நான் பத்திரிக்கை துவக்கிய அதே தினத்தில்தான் குமுதம் பத்திரிக்கையும் துவக்கப்பட்டது. குமுதம் மாதம் இருமுறையாக முதலில் வெளிவந்தது.
பிறகு மும்முறையாக வெளிவந்தது, அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து வாரப்பத்திரிக்கை ஆக்கினார்கள். நான் எடுத்த எடுப்பிலேயே வெள்ளிமணியை வாரப் பத்திரிக்கையாக்கினேன். சாவி அவர்கள் அதன் ஆசிரியராக இருந்து வந்தார். பத்திரிகை நல்ல பரப்பரப்பாக நடந்து வந்தது.
ஆனந்த விகடன், கல்கி, முதலிய பத்திரிக்கைகள் வெளியிடும் தீபாவளி மலரைப் போல் வெள்ளி மணியிலும் ஒரு தீபாவளி மலர் அதிகச் செலவு செய்து நல்ல முறையில் வெளியிட்டோம்.
ஆனந்த விகடன், கல்கி தீபாவளி மலர்கள் விற்பனை ஆனதுபோல் வெள்ளி மணி தீபாவளி மலர் விற்பனை ஆகவில்லை. ஏராளமான நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. சொந்த அச்சகம் இல்லாமல் பத்திரிக்கை நடத்தியது பெருந்தவறு என்று தெரிந்தது.
ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்களுக்குச் சொந்தமான கம்மர்ஷியல் பிரிண்டிங் அண்டு பப்ளிஷிங் ஹவுஸ் என்ற அச்சகத்தில்தான் வெள்ளி மணி அச்சாகிக் கொண்டிருந்தது. பத்திரிக்கை நஷ்டம் ஏற்பட்டு நிறுத்தும்படி ஆகிவிட்டது. அச்சகத்துக்கு 18,000 ரூபாய் பாக்கி நின்று விட்டது. பலமுறை அவர்கள் பாக்கியை கேட்டுப் பார்த்தார்கள்.
என்னால் கொடுக்க இயலாமல் இருந்தது. அதனால் அவர்கள் என்மீது வழக்கு தாக்கல் செய்து கோர்ட் சம்மன் அனுப்பினார்கள். முதன் முதலில் நான் பெற்ற கோர்ட் சம்மன் அதுதான். அது வரையில் கடனுக்காக கோர்ட் சம்மன் பெற்றதில்லை.
அதனால் கையும் காலும் ஓடவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து என்னிடம் எப்பொழுதும் அன்பும் ஆதரவும் காட்டி வரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் சென்றேன்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சம்மனைப் பார்த்துவிட்டு ஒன்றும் கவலைப்படவேண்டாம். இப்பொழுதே ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களைப்பார்த்து இது விஷயமாகப் பேசி கோர்ட்டுக்குப் போகாமல் முடிவு செய்யலாம் என்று சொன்னார்.
சிறிதும் தாமதியாமல் கல்கி என்னை அடையாறில் உள்ள ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களின் பங்களாவிற்கு அழைத்துச் சென்றார். கல்கி அவர்கள் ராஜா சர்ரிடம் என்னைப் பற்றி மிகவும் பாராட்டிச் சொல்லி முன்னுக்கு வந்திருக்கும் ஒரு இளைஞனுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். அதனால் இந்தக் கடனை நீங்கள் தள்ளுபடி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு ராஜா சர் அளித்த பதில் “கடனை வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்பதுதானே முன்னேற்றத்திற்கான வழி. ஆகவே சீக்கிரமாகவே திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்கள். சிறிது காலம் வேண்டுமானால் நான் பொறுத்துக் கொள்கிறேன்.” என்று சொல்லி விட்டார்.
கல்கி அவர்கள் மிகக் கோபமாக எழுந்து வந்து விட்டார்கள். உடனே என்னிடம் இன்று இரவு ரயிலில் நாம் இருவரும் கோயம்புத்தூர் செல்கிறோம். இது விஷயமாக திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களைச் சந்தித்து ஆவன செய்வோம் என்று சொன்னார்.
அதன்படி மறு நாள் காலை கோவைக்கு சென்று திரு ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களைச் சந்தித்தோம்.
திரு ஆர்.கே.எஸ். அவர்கள் என்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள், ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் ஊட்டிக்கு என்னைக் கூட்டிச்சென்று சுமார் ஒரு மாத காலம் தன் இல்லத்தில் பல பிரமுகர்களுடன் என்னையும் இருக்கச் செய்வார். தினமும் இலக்கிய சர்ச்சைகள், கேளிக்கை, விளையாட்டுகள், பல பொழுதுபோக்கு அம்சங்கள் இவைகள் நடைபெறும்.
இதில் என்னுடைய பங்கு கணிசமான அளவு இருக்கும். எனது நகைச்சுவையை அனைவரும் ரசித்துச் சிரிப்பார்கள். இப்படி ஒரு மாதம் சிரிப்பும் கொம்மாளியுமாகக் கழியும். ஆகவே ஆர்.கே.எஸ். அவர்களுக்கு என்னிடம் ஈடுபாடு உண்டு.
என் விஷயமாகக் கல்கி அவர்கள் எடுத்துச் சொன்னதைக் கேட்டதும், சரி நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி நாம் அனைவரும் இன்றே சென்னைக்குப் புறப்படுவோம் என்றார் ஆர்.கே.எஸ்.
அதன்படி மறுநாள் காலை சென்னைக்கு வந்து சேர்ந்தோம். சென்னைக்கு வந்ததும் திரு. ஆர்.கே.எஸ். கல்கியைப் பார்த்து நீங்கள் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டு என்னைத் தன்னுடன் கூட்டிக் கொண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் உடனடியாக டெலிபோனில் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களைத் தன் வீட்டிற்கு வரும்படி சொன்னார்.
ராஜா சர் அவர்களும் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் தனிமையில் பேசினார்கள். சிறிது நேரத்தில் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
அதன் பின்னர் திரு.ஆர்.கே.எஸ். என்னைக் கூப்பிட்டு ரூ.18,000 பாக்கி இருப்பதாக முத்தையா சொல்லுகிறார். உங்களால் ரூ.6,000ந்தான் கொடுக்க முடியும் என்று நான்சொல்லி விட்டேன்.
அவர் “சரி” என்று சொல்லி ஒப்புக் கொண்டு விட்டார்.
11 மணிக்கு பணம் கொண்டு வந்து கொடுப்பீர்கள் என்று சொல்லிவிட்டேன். அதனால் சரியாக 11 மணிக்கு, பணத்தைக் கொண்டு போய் கொடுத்துவிடுங்கள் என்று கூறினார்.
நான் சரி என்று... கொஞ்சம்... இழுத்துபடி சொன்னேன். எனது முகபாவத்தையும் என் பதிலில் உள்ள வழ வழ கொழ கொழ தன்மையையும் பார்த்த ஆர்.கே.எஸ். அவர்கள் உன் கையில் பணம் இல்லையா என்று கேட்டார்.
தற்சமயம் கைவசம் பணம் இல்லை என்றேன்.
அடடே அப்படியா சமாசாரம்.... சரி நான் 11 மணிக்கு நீ பணம் கொண்டு வந்து கொடுப்பாய் என்று சொல்லி இருக்கிறேன். அதனால் சொன்ன வார்த்தைப் படி நடந்து கொள்ள வேண்டும். செக் எழுதித் தருகிறேன்.
அதை மாற்றிப் பணத்தைக் கொடுத்து ரசீது பெற்றுக்கொள் என்று சொல்லி செக் எழுதி கொடுத்தார்.
எனக்கு என்ன சொல்வது என்று தோன்றவில்லை. திரு.ஆர்.கே.எஸ். அவர்கள் சொல்லியபடி செக்கை மாற்றி பணத்தைக் கொண்டு போய் கட்டிரசீதைப் பெற்றுக் கொண்டு நேராக கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் சென்றேன்.
அவரிடம் சென்று நடந்த விஷயங்களைச் சொன்னதும், சேச்சே அவாள்டே போய் பணம் வாங்கி விட்டீர்களே அவர்களெல்லாம் நமக்கு எதிர் கட்சிக்காரர்கள் அல்லவா? நாளை ஏதாவது ஒரு விஷயத்தில் சொல்லிக் காட்டுவார்கள். அதனால் அந்தப் பணத்தை உடனே திருப்பிக் கொடுத்து விடவேண்டும், என்று சொன்னார்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், வீட்டினுள் சென்று ரூ.6,000 கொண்டு வந்து என்னிடம் கொடுத்து. உடனே இதைக் கொண்டு போய் ஆர்.கே.எஸ். அவர்களிடம் கொடுத்து விடுங்கள் என்று சொன்னார்.
அவர் சொல்லியபடி பணத்தை திரு.ஆர்.கே.எஸ். அவர்களிடம் அன்று மாலையே திருப்பிக் கொடுத்து விட்டேன். அதன் பின்னர் சிறுகச்சிறுக அந்தப் பணத்தை கல்கி அவர்களிடம் திருப்பிக் கொடுத்தேன்.