சொன்னால் நம்பமாட்டீர்கள்/போலீஸ் அதிகாரி
ராஜாஜி முதலமைச்சராக இருந்த சமயம். படித்த ஹரிஜன் இளைஞர்களுக்கு உத்யோகம் பண்ணி வைப்பதில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.
வகுப்பு வாரியாகச் சர்க்கார் உத்தியோகங்களைக் கொடுக்க வேண்டுமென்ற விதி ஒன்று ஏற்பட்டிருக்கிறதல்லவா? இந்த விதியானது ஒவ்வொரு சாதியாகத் தாண்டி ஹரிஜனங்களிடம் வரும்போது பயனில்லாமல் போய்விடுவது வழக்கம்.
அதாவது அந்த உத்யோகத்துக்குத் தகுந்த ஹரிஜன் அபேட்சகர் இல்லை என்று காரணம் சொல்லிவிட்டு, மேல் சாதிக்காரர்களுக்குக் கொடுத்து விடுவது வழக்கம்.
ஒரு சமயம் போலீஸ் டெபுடி சூபரின்டெண்ட் வேலைக்கு ஹரிஜன் வகுப்பின் உரிமை வந்தது. வழக்கம்போல் ‘ஹரிஜனர் ஒருவரும் இல்லை’ என்று ஒரு சாதி இந்துவுக்கு வேலையைக் கொடுக்க சிபாரிசு வந்தது.
ராஜாஜி அதை ஒப்புக் கொள்ளாமல் அப்போது சபாநாயகராக இருந்த திரு. சிவசண்முகம் பிள்ளையையும் இன்னும் சில ஹரிஜன் தலைவர்களையும் கூப்பிட்டனுப்பி விஷயத்தைச் சொல்லி தகுதியான ஆளைக் கூட்டி வரும்படிச் சொன்னார்.
அவ்விதமே ஹரிஜனத் தலைவர்கள் பி.ஏ. பாஸ் செய்த ஒரு ஹரிஜன் இளைஞரைக் கொண்டு வந்தார்கள். அவரைக் காரியாலயத்திற்கு வரச்சொல்லி அங்கேயே பரீட்சை செய்யும்படி சொன்னார்.
திரு. சிவசண்முகம் பிள்ளையையும் தன் அருகிலேயே இருக்கும்படி செய்தார்.
பரீட்சை முடிந்தவுடன் மேற்படி அதிகாரி, “மற்ற தகுதியெல்லாம் இருக்கிறது; ஆனால் ஆள் ரொம்பவும் மெலிவாக இருக்கிறார். போலீஸ் உத்தியோகத்திற்கு ஆள் ஆஜானுபாகுவாக இருக்கவேண்டும்” என்றார்.
அதற்கு ராஜாஜி “இவர் ஏழை ஹரிஜன் இளைஞர். இதுவரை சரியான சாப்பாடே இவருக்குக் கிடைத்திராது. ஆகையால் இப்படி மெலிந்திருக்கிறார்.
உத்யோகத்தைக் கொடுத்தால் சந்தோஷத்தினாலேயே சீக்கிரம் பருத்து விடுவார்,” என்று கூறியதும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் “சரி” என்று சொல்லி, அந்த ஹரிஜன் இளைஞருக்கு வேலையைக் கொடுத்தார்.
ராஜாஜி சொன்னது போலவேதான் நடந்தது. மேற்படி இளைஞர் உத்யோகம் ஏற்றுக் கொண்ட ஆறுமாதத்திற்குள் கட்டி பிடிக்க முடியாதபடி பருத்துப் போய்விட்டார். மிகத் திறமையான போலீஸ் ஆபீசராக, இப்போதும் பணியாற்றி வருகிறார்.
அவர்தான் சென்னை நகரின்போலீஸ் கமிஷனராக இருந்த திரு. சிங்காரவேலு அவர்கள்.