சொன்னால் நம்பமாட்டீர்கள்/மஞ்சள் பத்திரிகை
1952-ல் மீண்டும் ராஜாஜி முதலமைச்சரான போது ‘இந்து நேசன்’ என்ற மஞ்சள் பத்திரிகையும் மற்றும் அது போன்ற பத்திரிகைகளும் கடைக்கு கடை ஏராளமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. மேற்படி பத்திரிகைகளில் ஆண் பெண் உறவு சம்பந்தமான விஷயங்கள் அப்பட்டமாக எழுதப்பட்டன.
ஒருநாள் நான் மேற்படி பத்திரிகைகள் அனைத்தையும் சேகரித்து முதலமைச்சர் ராஜாஜி அவர்களின் மேஜையின்மீது வைத்தேன்.
இதெல்லாம் என்னவென்று முதலமைச்சர் ராஜாஜி கேட்டார்.!
“தாங்கள் முதலமைச்சராக இருக்கும் ராச்சியத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் இலக்கியங்கள்” என்று சொன்னேன். உடனே ராஜாஜி மேலாக இருந்த இந்து நேசன் பத்திரிகையை எடுத்துப் பார்த்தார். அதில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் “அஞ்சலிக்கு அது இருக்கா?"என்று எழுதியிருந்தது.
“அது இருக்கா என்றால் என்ன அர்த்தம்” என்று ராஜாஜி குழப்பமாகக் கேட்டார். “தாங்கள் பெரிய மேதை உயர்ந்த விஷயங்களையே சிந்திப்பவர்கள். அதனால் தான் இதன் அர்த்தம் உங்களுக்குச் சட்டென்று பிடிபடாது. ‘செக்ஸ்’ சம்பந்தமான மிக மட்டமான கருத்துடன் இந்தப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள்.
இதைவிட இன்னும் அசிங்கமான விஷயங்கள் இப்பத்திரிகை முழுவதும் இருக்கின்றன. இப்பத்திரிகை நிறைய விற்பனை ஆகிறது என்பதைத் தெரிந்து கொண்ட சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் இம்மாதிரி பத்திரிகைகள் நிறைய வெளியிடுகிறார்கள்” என்று சொன்னேன்.
‘ஓ’ “Yellow Magazine’ (மஞ்சள் பத்திரிகை) என்று சொல்லிவிட்டு அப்பத்திரிகைகள் அனைத்தையும் வேறு பக்கம் தூக்கி போட்டுவிட்டார். நானும் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
“போலீஸ் கமிஷனர் பார்த்தசாரதி ஐயங்கார் டெலிபோனில் பேசினார்கள். தங்களைப் போனில் பேசச் சொன்னார்கள்” என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னார்கள். போலீஸ் கமிஷனருக்கு போன் செய்தேன்.
“இன்று ராஜாஜியிடம் என்ன ரிப்போர்ட் செய்தாய்?” என்று கேட்டார். “மஞ்சள் பத்திரிகைப் பற்றி சொல்லியிருக்கிறேன்” என்று கூறினேன். “சரி மாலையில் சந்திப்போம் “என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
மாலையில் அவரைச் சந்தித்தபோது முதலமைச்சர் ராஜாஜி அவரை நேரில் வரச் சொல்லி சொன்னாராம். அதன்படிபோலீஸ் கமிஷனர் முதலமைச்சர் முன் ஆஜரானார். நான் கொண்டு போய் கொடுத்த பத்திரிகைகள் அனைத்தையும் முதலமைச்சர் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்து இந்தப் பத்திரிகைகள் இனிமேல் கடைகளில் விற்கவும் கூடாது. அச்சகத்தில் அச்சாகவும் கூடாது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை உடனே எடுக்கும்படி உத்தரவிட்டாராம்.
போலீஸ் கமிஷனர் சிறிது தயக்கத்துடன் எந்தச்சட்டத்தை வைத்து பத்திரிகையைத் தடுத்து நிறுத்த இயலும் என்று கேட்டாராம். அதற்கு ராஜாஜி “சமூகத்தின் நன்மைக்காகச் செய்யப்படுவதுதான் சட்டம்.
சமூகத்தின் நன்மைக்காக நாம் எதைச் செய்தாலும் அது சட்டந்தான். உங்களுக்குள்ள அதிகாரத்தை வைத்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் ஒருவாரத்தில் இம்மாதிரிப் பத்திரிகைகள் ஒன்று கூட நம் தமிழ் நாட்டில் இருக்கக்கூடாது” என்று கண்டிப்பான உத்தரவு போட்டாராம்.
உடனே போலீஸ் கமிஷனர் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் உத்தரவு போட்டு கடைகளில் உள்ள மஞ்சள் பத்திரிகைகளை பறிமுதல் செய்யும்படியும் இனிமேல் இம்மாதிரி பத்திரிகைகள் விற்றால் கைது செய்வோம் என்று மிரட்டியும் இரண்டே நாட்களில் ஒரு மஞ்சள் பத்திரிகைகள் கூட இல்லாமல் செய்துவிட்டார்.
பின்பு ஒவ்வொரு அச்சகத்திற்கும் போலீஸார் நேரடியாகச் சென்று மஞ்சள் பத்திரிகைகள் அச்சடித்தால் அச்சகங்களை மூடும்படிசெய்வோம் என்று எச்சரிக்கை செய்ததையொட்டி எந்த மஞ்சள் பத்திரிகையும் தமிழ்நாட்டில் அச்சாகாமல் அவ்வளவும் நின்றுவிட்டன.
ஆனால் இந்துநேசன் பத்திரிகை மட்டும் பெங்களூரில் இருந்து அச்சாகித் திருட்டுத்தனமாக தமிழ்நாட்டுக்கு விற்பனைக்கு வந்தது. அதையும் போலீஸார் தடுத்து நிறுத்தி எந்தவிதமான மஞ்சள் பத்திரிகையையும் தமிழ் நாட்டில் தலைகாட்டாதபடி செய்துவிட்டார்கள்.
அதன் பின்னர் பல முக்கிய பிரமுகர்கள் மஞ்சள் பத்திரிகைகளை ஒழித்தது குறித்து போலீஸ் கமிஷனர் திரு.பார்த்தசாரதி ஐயங்கார் அவர்களைப் பாராட்டிய போது அவர் கூறிய பதில் அவ்வளவு பாராட்டுதலுக்கும் உரியவர் சின்ன அண்ணாமலைதான் என்பதாகும்.