சோழர் கால அரசியல் தலைவர்கள்/அம்பலவன் பழுவூர் நக்கன்

அம்பலவன் பழுவூர் நக்கன்[1]

கோவந்தபுத்தூர், விசயமங்கை

கோவந்தபுத்தூர், கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவதலம். இதனை அப்பரும் சம்பந்தரும் பாடியுள்ளனர். கோவந்தபுத்தூர் என்பது ஊரின் பெயர்; செயமங்கை என்பது திருக்கோயிலின் பெயராகும். இதனை,

‘கொள்ளி டக்கரை கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை‘

என்ற அப்பர் தேவாரத்தான் அறியலாம்.

ஒரு பசு சிவலிங்கத் திருமேனியின்மீது பால் சொரிந்(து அபிஷேகம் செய்)தமையால் இதற்குக் கோவந்தபுத்தூர் என்ற பெயர் எய்தியது என்பர். இது,

‘கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே‘

என்று ஞானசம்பந்தர் கூறியமையால் அறியப்பெறும். ‘வெள் விடைக் கருள்செய் விசயமங்கை‘ என்று அப்பர் கூறியபடியால் இடபதேவருக்கு அருள் செய்த வரலாறும் இங்கு அறியப்படுவ தொன்றாகும்.

இனி, விசயன் (அருச்சுனன்) வழிபட்டமையால் இத் திருக்கோயில் விசயமங்கை என்ற பெயர் எய்தியதென்பர்.

‘பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து

வேண்டும் நல்வரங் கொள் விச யமங்கை‘

என்ற திருநாவுக்கரசர் தேவாரம் இதனை வலியுறுத்தும்.

பிரமதேயம்

“வேதியர் தொழுதெழு விசயமங்கை“ என்று அப்பர். குறித்தமையின் இங்கு வேதியர்கள் பலர் வாழ்ந்திருத்தல் கூடும். இடைக்காலத்திலும் இத்தலத்தில் வேதியர் நிறைந்து வாழ்ந்திருந்தமையின் சோழர் கல்லெழுத்துக்களில் இவ்வூர் பிரமதேயமாகவே குறிக்கப்பெற்றது; “வடகரைப் பிரமதேயம்[2] பெரிய வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்கலம் (165 of 1929) என்றமை காண்க. இச்சிலைமேல் எழுத்தினின்று இவ்வூர்க்குப் “பெரிய வானவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம்“ என்ற பெயர் வழங்கிவந்தது என்றும் அறியலாம். இறைவன் விஜய மங்கலத்து மகாதேவர் எனப்பெற்றார் (164 of 1929).

கோயில் திருப்பணி செய்தவன்

இச்சிறப்பு வாய்ந்த கோயிலைக் கருங்கல் திருப்பணி செய்தவனைக் குறித்துக் கோவிந்தபுத்தூர்க் கோயிலில் பல கல்லெழுத்துக்கள் கிடைத்துள்ளன. அத்தலைவன் ’அம்பலவன் பழுவூர்நக்கன்’ என்ற பெயருடையவன். இவன் உத்தமசோழனது 10ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 979) முதற்கொண்டு (170 of 1929), முதலாம் இராசராசனின் 7-ம் ஆட்சியாண்டு (கி. பி. 992) வரை (160 of 1929) கல்லெழுத்துக்களில் குறிக்கப் பெற்றுள்ளான்.

சிறப்புப் பெயர்களும் பண்புகளும்

பழுவூர்நக்கன் உத்தமசோழனது பெருந்தரம்; உத்தம சோழனால் விக்கிரமசோழமாராயன்[3] என்ற சிறப்புப்பெயர் அளிக்கப்பெற்றவன் (164, 165. 1929); இவன் குவளாலத்தினின்று[4] போந்தவன் (166 of 1929; 291 of 1917); வேளாள குலத்தவன்; பெருங் கொடையாளி. இவன் முதலாம் இராச ராசசோழனது மூன்றாம் ஆட்சியாண்டில் விக்கிரமசோழ மகாராசன் என்று குறிக்கப்பெற்றிருப்பினும், மும்முடிச்சோழப்[5] பெருந்தரம் ஒன்றும் வழங்கப்பெற்றன். இனி இராசராசனது 7ஆம் ஆட்சியாண்டில் இவன் ராசராசப்பல்லவரையன் என்று குறிக்கப்பெற்றிருக்கிறான் என்று அறியப்படுதலின், இராசராசனும் தன் பெருந்தரத்து அதிகாரிகளில் ஒருவனை இப்பழுவூர்நக்கனுக்கு இப்பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தனன் என்பது தெள்ளிது.

சிவத் தொண்டுகள்

அம்பலவன் பழுவூர்நக்கன் விசயமங்கைத் திருக்கோயிலைக் கல்லால் கட்டுவித்தமையோடு ஸ்ரீவிமானத்தையும் கல்லால் கட்டுவித்து (165 of 1929), நெடுவாயில் என்ற ஊரைத் தானமாக அளித்தான். இக்கோயிலில் - நான்கு வேளைகளிலும் திருவமுதுக்கு அரிசிக்கும், பொறிக்கறியமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காயமுது, சந்தனம், கற்பூரம் ஆகியவற்றுக்கும், ஆடியருளப் பாலுக்கும், ஆடைக்கும் நுந்தா விளக்கு ஐந்தினுக்கும், சிறுகாலை எட்டு-உச்சியம்போது எட்டு-இரவுக்குப் பதினான்கு சந்தி விளக்குகளுக்கும்”[6] இந்நில் வருவாய் பயன்படுத்தப்பெற்றது (175 of 1929).

முதலாம் இராசராசனது 3-ஆம் ஆட்சியாண்டில் விநயாபரணவிண்ணகர்[7] எம்பெருமான் கோயிலில் முன்னர் உள்ள மண்டபத்தில் சபை கூடியது; இத்தலைவனிடம் இருந்து அச்சபையார் 2000 கழஞ்சு (பொன்னை) இறைகாவலாகப்[8] பெற்றுக் கொண்டு 15 வேலி நிலத்தை இறையிலியாக்கிக் கோவிலுக்கு அளித்தனர்.

இனி, இவ்வரசனது 7-ஆம் ஆட்சியாண்டில் இத் தலைவன் இத்திருக்கோயிலில் கூத்தப்பெருமானையும், உமாபட்டாலகியையும் எழுந்தருள்வித்து அவர்களுக்குப் பொன் அணிகலன்களை யளித்துள்ளான் என்று ஒரு கல்லெழுத்து (163 of 1929) நுவல்கின்றது.

திருவிளக்குத் திருத்தொண்டு

பரகேசரிபன்மரது[9] 10 ஆவது ஆண்டில் ஒரு விளக்கு எரிக்கவும் (170 of 1929), 12 ஆவது ஆண்டில் 4 விளக்குகள் எரிக்கவும் (169 of 1929) இவன் ஆடுகளைத் திருவிசய மங்கையில் அளித்துள்ளான். இவனுடைய தொண்டு கூகூரிலும் நிகழ்ந்துளது; அங்கு ஒரு விளக்கு எரிக்க 90 ஆடுகளை அளித்ததாக ஒரு கல்வெட்டினின்று (291 of 1917) அறிகிறோம்.

கோயிலதிகாரியை நியமித்தல்

இவன் முதல் இராசராசசோழனது 7-ஆம் ஆட்சி யாண்டில் வங்கிப்புரத்துச் சேட்டபோசன் வெண்ணய கிரமவித்தன்[10] என்பானைக் கோயிலதிகாரியாக நியமித்தான் (160 of 1929). கோயில் காரியம் பார்ப்பவர்களை மேற்பார்வை செய்ய இவ்வதிகாரிக்கு உரிமை தரப்பெற்றது. அன்றியும் வேளாளர் இவனை எதிர்த்தால் வேலையினின்று நீக்கவும், பிராமணர் எதிர்த்தால் 25 கழஞ்சு பொன்தண்டம் விதிக்கவும் இவற்கு அதிகாரம் அளிக்கப் பெற்றது (ARE 1929 1129).

பழுவூர்நக்கப்புத்தேரி

மேற்கூறியாங்கு இரண்டு பேரரசர்களால் சிறப்பிக்கப் பெற்றமையின், பழுவூர்நக்கன் சோழநாடு முழுவதும் நன்கு அறியப்பெற்றவகை அந்நாளில் விளங்கியவனாதல் கூடும். இவன் காலத்துக்கு ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு (அதாவது இரண்டாம் இராசேந் திரனின் 4-ஆம் ஆட்சியாண்டில் கி. பி. 1055ல்) தரப். பெற்ற மணிமங்கல சபையார் சாஸசனத்தில் (s. I. I., Vol. II Part No. 29) பழுவூர்நக்கப்புத்தேரி என்று ஓரேரி குறிக்கப்பெற்றுள்ளது. தொண்டைமண்டலத்து மணிமங்கலத்து இவ்வேரி இருந்ததாகக் காணப்பெறினும், இவ்வேரிக்குப் பெயர் இவன் பெயரையொட்டி யமைந்ததாகவே கொள்ளலாம்.

இவன் மனைவியர்

இவ்வதிகாரிக்கு இருமனைவியர் இருந்தனர் என்று இரண்டு கல்லெழுத்துக்களினின்றும் அறியப் பெறுகின்றது. ஒருவர் அபராஜிதன் செய்யவாய்மணி என்பவர்; மற்றாெருவர் சிங்கபன்மன் காஞ்சி அக்கன் என்பவராவர். (அக்கன் என்றமையால் இவரே மூத்த மனைவியாதலும் கூடும்). இவ்விருவரும் விசய மங்கைக் கோயிலில் விளக்கு எரிக்க ஆடுகளை யளித்துத் தம் புகழை நிறுவியுள்ளார்கள்.

புறவுரை

நெடுவாயில் தானசாஸனத்தில் ’அறம் மறவற்க; அறமல்லது துணையில்லை’ என்றுள்ள அறிவுரை கவனிக் கற்பாலது. இவ்வூரில் திருத்தொண்டத்தொகையான் திருமடம்[11] என்று ஒரு மடம் இருந்தது. மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் ஒரு கல்வெட்டுத் தொடக்கத்தில்[12] ‘வாழ்க அந்தணர்‘ என்ற திருப்பாடல் எழுதப் பெற்றுள்ளது.

முடிப்புரை

இத்தலைவன் உத்தமசோழன் காலத்தில் குவளாலத்தினின்று வந்திருந்தனன் என்றதிலிருந்து ஒரு அரசியல் செய்தி ஊகித்து அறியப்பெறுகின்றது; உத்தமசோழன் காலத்தில் கங்கநாடு வரையில் சோழர் ஆட்சி பரவியிருந்தது என்பதே அச்செய்தியாகும். இங்ஙனம் குவளாலத்திலிருந்து, சோணாட்டுக்கு வந்து, தேவாரம் பெற்ற தலத்தில் வதிந்து, சிவத்தொண்டுகள் பல புரிந்து, அந்நாள் சைவர் நெஞ்சுள் அமர்ந்து, இந்நாளில் ஆய்வாளர் சிந்தைக்கு விருந்தாய் விளங்கும் அம்பலவன் பழுவூர்நக்கனின் பெயரும் பீடும் நீடுவாழ்க! (இவ்வூர்க் கல்லெழுத்துக்களுட் சிலவற்றைத் தமிழ்ப்பொழில் துணர் 7, பக்கம் 296-301ல் காண்க).


  1. இது ‘குமரகுருபரன்‘ ‘ஞானசம்பந்தம்‘ ஆகியவற்றுள் வெளிவந்துள்ளது.
  2. பிரமதேயம்-அந்தணர்களுக்கு விடப்பட்ட இறையிலி நிலம்.
  3. இச்சிறப்புப் பெயரை அளித்தமையால் சோழனுக்கு விக்கிரம சோழன் என்ற பெயரிருந்த பெறும்.
  4. குவளாலம் - கோலார்.
  5. மும்முடிச்சோழன் என்பது முதலாம் இராசராசனுக்கு வழங்கிய சிறப்புப் பெயர்களில் ஒன்று.
  6. தருமபுர ஆதீனப் பதிப்பு-சம்பந்தர் தேவாரம்-3 ஆம் திருமுறை-கல்வெட்டுக் குறிப்பு-திரு. சு. வாண்டையார்.
  7. விண்ணகர் - திருமால் கோயில்.
  8. இறைகாவல்-பின்னால் செலுத்தவேண்டிய வரிக்காக மொத்தமாகச் செலுத்தும் பணம் (S.I.T.1. பாகம் 3, பக்கம் 1 40 1 ). பக்கம் 5, குறிப்பு 16 காண்க.
  9. பரகேசரி என்று மட்டும் உள்ள கல்வெட்டுக்களிலும், பரகேசரி உத்தமசோழன் என்றுள்ள கல்லெழுத்துக்களிலும் அம்பலவன் பழுவூர் நக்கன் குறிக்கப் பெற்றுள்ளான். ஆகவே இத்தலைவனைக் குறித்துள்ள பரகேசரிவர்மனது கல்வெட்டுக்கள் உத்தமசோழன் காலத்தவை என்பது திண்ணம்.
  10. கிரமவித்தன்-வேதத்தைக் கிரமமுறையில் அத்தியயனம் செய்தவன். [கிரமமாவது முதற்பதமும் இரண்டாவது பதமும் கூறிப், பின்னர் இரண்டாவது பதமும் மூன்றாவது பதமும் கூறிப், பின்னர் மூன்றாவது பதமும் நான்காவது பதமும் கூறி, இங்ஙனமே தொடர்ந்து சொல்லுவது].
  11. இவ்வாசிரியர் வெளியிட்ட ‘’இலக்கியக்கேணி‘’ என்ற நூலில் ‘’திருத்தொண்டத் தொகை‘’ என்ற கட்டுரை காண்க.
  12. 1932 Of 1939.