சோழர் கால அரசியல் தலைவர்கள்/அருணிதி கலியன்

அருணிதி கலியன்[1]

முன்னுரை

“அருணிதி தரவரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி எழுந்தருளாயே“ என்ற மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி வரியும், கலியநாயனார்[2] திருப்பெயரும், “அருணிதிகலியன்” என்ற மாத்திரையானே நினைவுக்கு வரும். இந்நாட்டில் வாழ்ந்த பண்டைப் பெரியோர்கள் இங்ஙனம் சமயகுரவர் வாக்குகளைத் தம் பெயராகக் கொண்டிருந்தனர் என்பது நாம் நன்கறிந்த தொன்று[3] . தந்திவர்மனது திருவல்லிக்கேணிக் கல்லெழுத்தில் (கி. பி. 787ல்) புகழ்த்துணை விசையரையன்[4] என்று ஒருவன் குறிக்கப்பெற்றுள்ளான் ; இவன் பெயர் புகழ்த்துணை நாயனார்[5] திருப்பெயரை நமக்கு நினைவூட்டும். இங்ஙனம் நாயன்மார் பெயர்களை நினைவூட்டும் பல பெயர்கள் கல்லெழுத்துக்களிற் பயிலுதல் நன்கு தெரியவரும். அருணிதி கலியன்

அருணிதி கலியன் என்பான் முதற் பராந்தகன் என்னும் சோழ அரசனுடைய அதிகாரிகளில் ஒருவன். இவன் சோழ நாட்டவன் ; மருதூர் என்னும் ஊரவன் ; மருதூருடையான் அருணிதி கலியன் என்றும் கூறப்பெறுபவன். இவனைக் குறித்து முதற்பராந்தக சோழனுடைய ஆனைமலைக் கல்வெட்டால் அறியப்பெறுகின்றது. அக்கல்லெழுத்துப்பகுதி வருமாறு :-


"மதிரை[6] கொண்ட கோப்பரகேசரி[7] பன்மற்கு யாண்டு முப்பத்து மூன்றாவது இவ்வாண்டு தேவதானம்[8] கீழிரணிய முட்டத்துப்[9] படும் பிரமதேயம்[10] நரசிங்க மங்கலத்துச்[11] சபையோம் சோழப் பெருமானடிகள் அதிகாரிகள் சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு[12] மருதூர் மருதூருடையான் அருணிதி கலியனுக்கு ஒட்டிக் குடுத்த பரிசாவது.”★

சோழப் பெருமானடிகள்

மேற்குறித்த கல்லெழுத்துப் பகுதியில் அருணிதி கலியன் என்பான் சோழப் பெருமானடிகள் அதிகாரிகள் என்று மரியாதையாகக் கூறப்பெற்றுள்ளான். சோழப் பெருமானடிகள் என்பது சோழவரசன் எனப் பொருள்படும். இங்குக் குறித்த சோழவரசன் முதற் பராந்தக சோழன் ஆவன். இவன் 907 முதல் 953 வரை ஆட்சி செய்தவன் ; மதுரை கொண்ட கோப்பர கேசரி பன்மன் என்றும் இக்கல்லெழுத்தில் குறிக்கப் பெற்றுள்ளான் ; இவனுடைய 3-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்களிலிருந்தே இவன் இங்ஙனம் கூறப்பெற்றுள்ளமையின் இவன் கி. பி. 910 லேயே மதுரையைக் கைப்பற்றினான் என்றறியலாம். இவனிடம் தோற்ற பாண்டிய அரசன் மூன்றாம் இராசசிம்மன் ஆவன்.[13]

அருணிதி கலியனுக்கு ஒட்டிக்கொடுத்த பரிசு[14]

அருணிதி கலியனொடு ஆனைமங்கலத்துச் சபையார் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அது மேற்குறிப்பிட்ட முதற் பராந்தகசோழனது முப்பத்துமூன்றாவது, ஆட்சியாண்டில் தரப்பெற்ற ஆனைமங்கலக் கல்லெழுத்தில்[15] கூறப்பெற்றுள்ளது. அவ்வொப்பந்தம் பின்வருமாறு :-


'நரசிங்கப் பெருமானடிகள்[16] தம்முடை நிலத்தால் சபையார்க்குக் கொடுக்கவேண்டிய ஈழக்காசு பதினெட்டு. இத்தொகையின் மூன்றில் ஒருபங்காகிய ஆறு ஈழக் காசுகளை வட்டியாகப் பெறும்பொருட்டு அருணிதி கலியன் சபையார்க்கு இறைகாவலாகப்[17] பதினைந்து ஈழக்காசுகளை அளித்தான்.


ஒரு ஈழாக்காசுக்குத் திங்கள் ஒன்றுக்கு வட்டி புத்தக்கம் ; பதினைந்து ஈழாக்காசுகளுக்குத் திங்கள் ஒன்றுக்கு 3 புத்தக்கம்.[18] இது ஆண்டொன்றுக்கு 45 புத்தக்கம் ஆகிறது. ஒரு ஈழக்காசுக்கு 7, புத்தக்கம் எனில் 45 புத்தக்கம் 6 ஈழாக்காசு ஆகிறது. இங்ஙனம் 15 ஈழக்காசுக்கு 6 ஈழக்காசு வட்டி.


நரசிங்கப் பெருமானடிகள் சமையார்க்கு இன்னும் கொடுக்கக் கடவ 12 ஈழாக்காசுகளும் நீக்கப்பெற்றன.


இனி ௸ இறைகாவலாகக் கொடுத்த 15 காசினால் ஊருடையான் குளமான கலியனேரி[19] என்ற (ஏரியுள்ள) நிலப்பகுதி விலைக்கு வாங்கப்பெற்றது. இவ்வொப்பந்தப்படி அருணிதி கலியன் இக்குளத்தைக் கல்லி ஆழமாக்கலாம் ; கரை நீளமாக்கலாம் ; கரையை உயர்த்தலாம் ; குளத்தில் வேண்டிய அளவு நீரை நிறைத்துக் கொள்ளலாம்.

இக்குளத்தின்கீழ் நீர்நிலன்[20] இருவேலியை அருணிதி கலியன் விலைக்குக் கொண்டான். இதிலிருந்து வந்த வருமானம் அஞ்ஞாழிக்காலால்[21] முன்னூறு கலம் நெல் ஆகும். இதில் 150 கலம் நரசிங்கப் பெருமானுக்கு மூன்று சந்தியும் திருவமுது செய்விக்க வேண்டும். எஞ்சிய 150 கலமும் பிற்குறித்தவாறு செலவு செய்யவும் ஏற்பாடு :-

உத்தம அக்கிரமாகத்[22] தேவர்[23] அமிர்து செய்யும்பொழுது வேதப் பிராமணர் நிசதம்[24] ஐவர்க்கு அமுது செய்விக்க வேண்டும் ; பத்தெட்டுக் குத்தல் அரிசி [25] நாள் ஒன்றுக்கு இருநாழி ; கறிமூன்று : தயிர் நாழி ; நெய் இருசெவிடு[26] ; காயிலை[27] இரண்டு ;. தாலம்[28] ஐந்து; வட்டில்[29] ஐந்து; ஒட்டூட்டி[30] ஒன்று: சட்டுவம்[31] ஒன்று.

அடுவான் ஒருவனுக்கு நாடோறும் நெல் ஐந்து நாழி; ஆறு திங்களுக்கு ஒரு புடவை[32]

மேற்குறித்தவாறு நரசிங்கப் பெருமானுக்கு நிவேதனம் செய்விக்கவும், வேதப்பிராமணர்க்கு அன்னம் பாலிப்பு நடத்தவும் ஏற்பாடு.

தொடங்கவேண்டிய காலம் : இவ்வாட்டை கற்கடக நாயிற்று[33] வெள்ளிக்கிழமைபெற்ற ஆயிலியத்துநாள் குரிய கிரகண வேலை குறைகிராணம்[34] பற்றின. அன்று முதலாக நடத்தப்பெற வேண்டும் என்றும், சிறீ காரியம்[35] ஆராய்கின்ற திருவாய்ப்பாடி[36] நாராயணனும் இவ்வூர்ச் சபையாரும் சந்திராதித்தவல்[37] நடத்தவும் ஒப்புக் கொண்டனர்.

நடத்தாவிடில் ! ஸ்ரீ காரியம் ஆராய்பவன் அல்லது சபையாருள் ஒருவன் இத்தருமத்தை நடத்தாவிடில் நாடோறும் இருகாசு அன்றாள் கோவினுக்குத் தண்டம் கொடுத்தல் வேண்டும். அக்காசு கொண்டு திருமாலுக்குத் திருவிளக்கு எரிக்க வேண்டும். சபையார் எல்லோரும் சேர்ந்து இத்தருமத்தை நடத்தாவிடில் ஆறு காசு தண்டம் செலுத்த வேண்டும். இத்தண்டம் இறுத்தும் முட்டின்றிச் சந்திர சூரியர் உள்ளவரை இத்தருமம் நடத்தவேண்டும்.

இதிற்குறித்த வட்டி வீதம்

15 ஈழக்காசுகளுக்கு 6 ஈழக்காசுகள் வட்டியென இக்கல்லெழுத்துக் கூறுகிறது ; எனவே இங்குக் குறித்த வட்டி 100-க்கு 40 வீதம் ஆகிறது. இது அதிகமாகத் தோன்றுவது இயல்பே. இங்ஙனம் அதிக வட்டி பெறுவது மிக அருகி இருந்திருத்தல் வேண்டும். சில சமயத்து 37%-ம் 50%ம் வட்டி பெற்றதாகக் கல்லெழுத்துக்கள் பகர்கின்றன. கடன் தருதல் வாங்குதல் இவற்றின் தரத்துக்கு ஏற்பவும், மக்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படக்கூடிய அரசியல் நிலைக்கு ஏற்பவும், அதிக வட்டி வாங்கப்பெற்றது என்று கூறவும் முடியாது. எனவே அதிகவட்டி வாங்கியதேன் ? என்பதற்கு விடை எளிதில் தரவியலாது.[38] (அருணிதி கலியன் அளித்த தொகையை வட்டிக்கு விடவில்லை ; இவ்வாறு வட்டி கணக்கிடப் பெற்றது என்பதே அறிதற்பாலது.)


ஈழக்காசு

இருபது ஈழக்காசு 10 கழஞ்சு பொன் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.[39] எனவே ஒரு ஈழக்காசு கழஞ்சு எடையுடையதென அறியலாம். ஈழக்காசு ஈழ நாட்டினின்று வந்த நாணயமுறை என்றும், சோழ அரசர் ஈழத்தை வெல்வதற்கு முன்னதாகவே காசுகள் அங்கு வழக்கிலிருந்தன என்றும், சோழ நாட்டில் 9, 10 நூற்றாண்டுகளில் இக்காசுகள் வழங்கப் பெற்றன என்றும், பராந்தகன் காலத்து ஈழக்கிரசும் ராசராசனது காசும் துாய்மையிலும் எடையிலும் ஒத்திருந்தன என்றும் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.[40]


அக்கம்

அக்கம் எத்தகைய நாணயம் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. 7 புத்தக்கம் (புது அக்கம்) ஒரு ஈழக்காசு என்று இக்கல்லெழுத்துப் பகர்கிறது. ’’அக்கம் என்பது காசில் 12-ல் ஒரு பங்கு என்றும், கழஞ்சில் 24-ல் 1 பங்கு என்றும் உறுதியாகக் கூறலாம்.’’[41]

திருவிளக்குத் திருத்தொண்டு

வேதாரண்யத்தில் ஒரு விளக்கு எரிக்க 90 ஆடுகளை இவ்வருணிதி கலியன் அளித்ததாகப் பராந்தக சோழனது 28-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக் கூறுகிறது.[42]

ஆனைமலைக் கோயில் கட்டிய காலம்

இனி, ஆனைமலையிலே நரசிங்கப் பெருமாள் கோயில் கட்டப்பெற்ற காலத்தை அறிதலும், ஏற்புடைத்தே. ”பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீண்முடி நிலமன்னவன்” என்று சீவரமங்கலத்துச் செப்பேடுகளில் புகழப்பெற்ற நெடுஞ் சடையன் பராந்தகன் (765-790) என்னும் பாண்டிய அரசன் காலத்தில் இத்திருக்கோயில் அமைக்கப்பெற்றது. இவ்வரசனின்முதலமைச்சன் மாறன் காரி என்ற பெயருடையவன். இவனே கி. பி. 770-ல் நரசிங்கப் பெருமாள்கோயிலைக் குடைவித்து அக்கோயிற் கண்மையில் அந்தணர்களைக் குடியேற்றினன். இவன் தம்பி மாறன் எயினன் எனப்பெற்றான்; அவனே முக மண்டபம் அமைத்துக் கடவுள் மங்கலமும் செய்வித்தவன் ஆவன்.[43] கலி 3871-ல் இக்கற்றளியமைக்கப் பெற்றதென்று வடமொழிக் கல்வெட்டொன்றும் கூறுகிறது.[44]

முடிப்புரை

ஆனைமங்கலத்து நரசிங்கப் பெருமாளுக்குத் தொண்டு செய்தமையின் அருணிதி கலியனின் திருமால் பக்தியும், வேதாரணியத்துத் திருவிளக்குத் திருத்தொண்டு ஆற்றியமையின் சிவபக்தியும் விளங்கும். கலியனேரியை ஆழமும் நீளமும் உள்ளதாக ஆக்கி ஏரிகரையைச் செப்பனிட்டமையின், அருணிதி கலியன் குடிகளின் நலத்தின் பொருட்டுப் பாடுபட்டவன் என்றும் அறியலாம்.



  1. இது ஞானசம்பந்தம் திங்களிதழில் வெளிவந்தது.
  2. கலியநாயனார் வரலாற்றை உமாபதி சிவாசாரியார் எழுதிய பின்வரும் திருத்தொண்டர் புராணசாரச் செய்யுளால் அறிக :-

    தடமதில் சூழ் ஒற்றியூ ரதனில் வாழும்
    சக்கரப்பா டியர் குலமெய்த் தவமா யுள்ளார்
    படர்புகழார் கலியனார் நலியும் கூற்றைப்
    பாய்ந்தவர்க்கு விளக்கெரிக்கும் பரிவால் மற்றோர்
    உடலிலராய்ச் செக்குழல்வார்க் கதுவும் நேரா(து)
    உயர்மனைவி யைக்கொள்வார் ஊரும் இன்றி
    மிடறுதிரம் அகல்நிறைய அரிய நாதன்
    வியன்கைகொடு பிடிப்பஅருள் மேனாவிர.

  3. “பொன்னார் மேனி“ என்ற சுந்தரர் வாக்கு, “பொன்னார் மேனி பட்டன்“ என்று ஒருவர் பெயராக அமைந்தது. இவ்வாசிரியர் வெளியிட்ட இலக்கியக்கேணி என்ற நூலில் “பொன்னார் மேனியன்“ என்ற கட்டுரை காண்க. நீறணி பவளக்குன்றம், எடுத்த பாதம், மழலைச் சிலம்பு என்ற திருவிசைப்பாத் தொடர்கள் முற்காலத்து மக்கள் பெயராக வழங்கின. (திரு. மு. இராகவையங்கார் சாஸனத் தமிழ்க்கவி சரிதம், பக்கம் 38). முதலாம் இராசராசன் காலத்துத் திருப்பதிகம் ஓத நியமிக்கப்பெற்றவர் பெயர்களையும் காண்க.
  4. புகழ்த்துணை விசையரையனைப் பற்றி ஞானசம்பந்தம் மலர் 18, இதழ் 4, பக்கம் 260 - 264 காண்க.
  5. புகழ்த்துணை நாயனார் வரலாற்றைப் பின்வரும் , திருத்தொண்டர் புராணசாரத்தான் அறிக :-

    "புண்ணியர்கள் புகழ் அழகார் திருப்பத் தூர்வாழ்
    புகழ்த்துணையார் அகத்தடிமைப் புனிதர் சின்னாள்
    மண்ணிகழ மழைபொழியா வற்கா லத்தால்
    வருந்துடலம் நடுங்கிடவும் மணி நீர் ஏந்தி
    அண்ணல்முடி பொழிகலசம் முடிமேல் வீழ
    அயர்ந்தொருநாள் புலம்பஅரன் அருளால் ஈந்த
    நண்ணவரும் ஒருகாசுப் படியால் வீழ்ந்து
    நலமலி சீர் அமருலகம் நண்ணி னாரே."

  6. மதிரை - மதுரை.
  7. பரகேசரி, ராசகேசரி என்பன சோழவரசர்கள் மாறி மாறிப் புனைந்துகொண்ட பட்டப் பெயர்கள்.
  8. தேவதானம் - கோயில்களுக்கு விடப்பட்ட இறையிலி நிலம்.
  9. கீழிரணியமுட்டம் - ஆனைமலையைச் சுற்றியுள்ள பகுதி, இரணியமுட்டத்துப் பெருங்கௌசிகனார் என்ற புலவர் கடைச்சங்க காலத்தவர் ; மலைபடுகடாம் என்ற நூலின் ஆசிரியர். இரணியமுட்டம் என்ற நாட்டின் பகுதி சங்க காலத்திலேயே இப்பெயரோடிருந்தமை இப்புலவர் பெயரான் அறியப்பெறும்.
  10. பிரமதேயம்-அந்தணர்களுக்கு விடப்பெற்ற இறையிலி நிலம்.
  11. நரசிங்கமங்கலம் - ஆனைமங்கலத்துக்கு ஒரு பெயர்
  12. இஃது பிற்காலத்து அருமொழிதேவ வளநாட்டின் பகுதியாயிற்று.
  13. கி. பி. 575-ல் கடுங்கோனால் நிறுவப்பெற்ற பாண்டிய அரசு கி. பி. 915- ல் பராந்தகசோழனால் இராசசிம்மன் காலத்தில் அழிவுற்றது.
  14. ★ ஒட்டிக்கொடுத்த பரிசு - ஒப்புக்கொண்டு எழுதிக்கொடுத்த ஒப்பந்தம்.
  15. S. I. I. Vo1. III, Part III No 106.
  16. நரசிங்கப் பெருமானடிகள் - ஆனைமங்கலத் திருக்கோயிலில் எழுந்தருளியிருந்த திருமால் திருநாமம்.
  17. இறைகாவல் - இறைதிரவியம் - வரிப்பணத்துக்குப் பதிலாகச் செலுத்தப்படும் முதற் பொருள்.
  18. புத்தக்கம் - புதிய அக்கம்; அக்கம் - ஒரு நாணயம்.
  19. கலியனேரி - அருணிதிகலியன் பெயரால் அமைந்த ஏரி.
  20. நீர்நிலன் - நன்செய் நிலம்.
  21. அஞ்ஞாழிக்கால் - மரக்கால் பெயர்.
  22. உத்தம அக்கிரமாக - சிறந்த முறையில்.
  23. தேவர் - நரசிங்கப் பெருமாள்.
  24. திசதம் - நாடோறும்.
  25. பத்தெட்டுக் குத்தல் அரிசி - பலதடவை குற்றிய அரிசி
  26. செவிடு - ஆழாக்கு.
  27. காயிலை - பாக்கு வெற்றிலை
  28. தாலம் - தாம்பாளம்.
  29. வட்டில் - கிண்ணம் (CUP).
  30. ஒட்டூட்டி - தண்ணீர் வார்க்கும் செம்பு போலும் (?)
  31. சட்டுவம் - அகப்பை.
  32. புடவை - ஆண்கள் உடுக்கும் ஆடையும் புடவையெனப் பெற்றது. (தமிழ்ப்பொழில் - ஏழாம்துணர் - பக்கம் 552 - 3 ல் காண்க.)
  33. கற்கடகநாயிறு - ஆடி மாதம்.
  34. குறைகிராணம் - குறைகிரகணம்: நிறைகிரகணம் என்று பாடமிருப்பின் சிறக்கும்.
  35. சிறீகாரியம் - சிரீகாச்சியம் - சிரிகாற்றியம் என்று ஸ்ரீகாரியம் என்ற சொல் பிழையாக இக் கல்லெழுத்தில் காணப்பெறுகிறது.
  36. திருவாய்ப்பாடி - சண்டீசப்பெருமான் தலம் போலும்! ( திருப்பனந்தாளுக்கு அண்மையிலுள்ளது.)
  37. சந்திராதித்தவல் - சந்திர சூரியர் உள்ளவரை.
  38. K. A. N. COLAS Part II, Page 426.
  39. S. I. I. Vol. v No 720.
  40. K. A. N. COLAS Part II, Page 450.
  41. do do Page 450.
  42. K.A.N. COLAS Part I, Page 426; 445 of 1904
  43. திரு. பண்டாரத்தார் - பாண்டியர் வரலாறு - பக்கம் 55-56.
  44. திரு. K. S. சீனிவாசபிள்ளை - தமிழ் வரலாறு - பிற். பக்கம் - பாகம் 154.