சோழர் கால அரசியல் தலைவர்கள்/சேக்கிழார்



சேக்கிழார்

தொண்டை நன்னாடு

"உயிர்களுக்கு எல்லையில் கருணைத் தாயனாள் அரும் தவம் புரியத் துாய மாதவம் செய்தது "தொண்டை நன்னாடு; நடுநிலை ஒழுக்கத்துத் தலைமைசால் பெருங்குடி தழைத்தது தொண்டை நன்னாடு; பழையனூர் சிறுத் தொண்டர் தம் சொல்லையே காக்க வணிகன் பொருட்டு உயிர் நீத்த பெரும் சிறப்புடையது பெருந் தொண்டை நாடு: சேரனார் திருமலை நாட்டு வயவர்கள் மைத்துனக் கேண்மை பூண்டது பெருந்தொண்டை நாடு; செங்கண் மால் விடையார் திருக்காளத்தியும், ஆறுசூழ் அண்ணலார் திருவிடைச் சுரமும், நீள் வரைப்பின் உம்பர் நாயகர் திருக்கழுக்குன்றமும், செங்கண் மால் தொழும் திருமுல்லை வாயிலும், மறையவர் பூதிசாதனம் போற்றிய வல்லமும், மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற் பேறும், பருங்கை யானையை உரித்தவர் திருப்பாசூரும், மன்னவன் இறக்கிய வரியை 'ஒற்றியூர் நீங்க’ என்று எழுதும் திருவொற்றியூரும், மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டு இட்டங் கொண்ட காபாலிச் சரத்தான் மகிழும் திருமயிலாபுரியும், தண் பொழில் சூழ் திருவான்மியூரும், எவ்வுகங்களுள்ளும் உள்ளது என்று யாவரும் ஏத்தும் காஞ்சிமா நகரமும் முதலாய தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருத்தலங்கள் எண்ணான்கு கொண்டது தொண்டை நன்னடு; தீய என்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர் வாழ்ந்ததும் தொண்டை நன்னாடு; தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகை விரி வாக்கினால் சொல்ல வல்ல பிரான்—எங்கள் பாக்கியப் பயன் வாழ்பதி குன்றத்தூர் இருப்பதும் இத்தொண்டை நன்னாடே.

வேளாளர் சிறப்பு

"வேளாளர் என்பவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர்” என்று ஞானசம்பந்தரால் புகழப் பெற்றவர்கள். 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்று சிறப்பிக்கப் பெற்றவர்கள் இவர்கள். “வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி" என்ற கம்பர் சொல்லுக்கு ஏற்ப அரசனுக்கு முடி கொடுக்கும் உரிமையுடையவர்கள் இவ்வேளாளர்கள். இவர்கள்,

"மேழி பிடிககுங்கை; வேல் வேந்தர் நோக்குங்குங்கை;
ஆழி தரித்தே அருளுங்கை;- சூழ்வினையை
நீக்குங்கை; என்றும் நிலைக்குங்கை; நீடுழிக்
காக்குங்கை; காராளர் கை"

எனப் புலவர்களால் பாராட்டப் பெற்றுள்ளார்கள். மேலும் வேளாளர்கள் பாராளும் திறலரசருக்கு வெற்றி விளைவிக்கும் தானைத் தலைவர்களாகவும் விளங்கினர்.

வாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர்
வாக் கரையர் சாக்கியர்கோட் புலிகஞ் சாறர்
ஏயர்கோன் கலிக்காமர் முளைவித் தாக்கும்
இளையான்றன் குடிமாறர் மூர்க்கர் செங்கைத்
தாயனார் செருத்துணையார் செருவில் வெம்போர்
சாதித்த முனையடுவார் ஆக நம்பி
பாயிரஞ்சேர் அறுபதுபேர் தனிப்பேர் தம்மில்
பதின் மூவர் வேளாளர் பகருங் காலே (செ. 17)

என்ற திருத் தொண்டர் புராண வரலாற்றிற்கண்ட வண்ணம் அறுபான் மும்மை நாயன்மார்களுள் பதின்மூவர் வேளாண் குலச் செம்மல்கள் ஆவர்.

சேக்கிழார்குடி

தொண்டை நாட்டு இருபத்து நான்கு கோட்டங்களுள் புலியூர்க் கோட்டத்தைச் சேர்ந்த திரு ஆம் ஊர் குன்றத்தூர். இக்குன்றத்தூரில் குடியேறிய வேளாளர்களில் கூடல்கிழான், புரிசைகிழான், வெண்குளப்பாக் கிழான், குளத்துழான், சேக்கிழான் என்ற பல முதன்மைக் குடிமக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அறிவு, ஒழுக்கம், சீலம், வாய்மை முதலிய நற்பண்புகள் உடையராய்ச் சிவபக்தியில் சிறந்து வாழ்ந்தனர்.

அருண் மொழித் தேவர்

அன்னோருள் சேக்கிழார் குடியில் வெள்ளியங் கிரியார் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவியார் அழகாம்பிகை எனப் பெற்றர். “எங்கள் பாக்கியப் பயனால்“ இவர்களுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு அருண் மொழித் தேவர் எனப் பெயர் சூட்டப்பட்டது. அருண்மொழித் தேவன் என்பது சோழ அரசர்களுள் முதலாம் இராசராச சோழனுடைய பெயர்; இராசராசனும் சிவபக்தியில் சிறந்தவன். சிறந்த சிவபக்தியுடைய வெள்ளியங் கிரியாரும் தம் அருமை மைந்தற்குப் பண்டு வாழ்ந்த சோழ அரசனது பெயரையே இட்டார். அந்நாளில் அருண் மொழித்தேவர் என்ற பெயர் பலரும் பூண்டிருந்ததாகவும் தெரியவருகிறது. எனவே இப்பெயர் சேக்கிழாருக்குப் பெற்றாேரிட்ட பெயராகவும் கொள்ளலாம். இனி இப்பெயரைக் காரணப் பெயராகக் கொள்ளினும் அமையும். சேக்கிழார் பாடிய நூலாகிய பெரிய புராணம் திரு அருள் வாய் மொழி ஆகும். ஆகவே இவருக்கு அருள் மொழித்தேவரென்ற பெயர் வந்ததெனவும் கொள்ளலாம்.

சேக்கிழார்

இனி இவருக்குச் சேக்கிழார் என்ற பெயரே எல்லோராலும் அறியப் பெற்ற தொன்று. சேக்கிழார் என்பது இவர் பிறந்த குடிப்பெயர். அக்குடிப் பெயராலேயே இவருக்குப் பெயரமைந்தது.

அமைச்சரானமை

கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்தவராகச் சேக்கிழார் வாழ்ந்து வருங்கால் சோழவரசனாகிய அநபாய சோழன், “ஞாலம், மலை, கடல் இவற்றினும் பெரியன யாவை?“ என்று ஒரு வினா விடுத்தனன். புலமை சான்ற பலரும் விடை பகரகிற்றிலர். இதனை அருண் மொழித் தேவர் அறிந்து சோழனது வினாவுக்கு விடையாகக்,

“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது“
“நிலையில் திரியா(து) அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது“
“பயன்றூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது”

என்னும் மூன்று குறட்பாக்களை எழுதி அரசனுக்கு ஓலை விடுத்தார். அரசன் மனமகிழ்ந்து, சேக்கிழாரைத் தனது அவைக்கு வரச் செய்து, அவரை அமைச்சராக ஆக்கி, உத்தம சோழப் பல்லவன் என்னும் பட்டமும் அளித்தனன். இச்செய்தியைச் சபாபதி நாவலர் அவர்கள் இயற்றிய சிதம்பர சபாநாத புராணத்திலே அமைத்துள்ள சேக்கிழார் தோத்திரப் பாடலினின்றறியலாம்:

“ஞாலமலை கடல்தன்னில் பெரிய தெ(து)
எனஎடுத்து ஞால மாள் செங்

கோலன் அநபாயன் வினவிய முத்திறக்
     குறிப்பைக் குறிப்பி னோர்ந்து
சாலவுயர் திருக்குறளில் மூன்று இறையாக
     எழுதியவன் அரசு தாங்கி
வாலறிவால் திருத்தொண்டின் புகழ் விரித்த
     சேக்கிழார் மலர்த்தாள் போற்றி”

என்பது அப்பாடல். கம்பர் பாடியதாகக் கருதப்படும் திருக்கை வழக்கம் என்னும் நூலிலும்,

“மண்ணில் கடலில் மலையில் பெரியதென
எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக்கை”

என்ற வரிகளில் இச்செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

இவர் அமைச்சர் தலைவராக வீற்றிருக்குங் கால்

“எண்ணி இதுசெய் திடின் இதனால்
      எய்தப் படுவ(து) இஃ(து) எய்தா (து)
இரியப் படுவ(து) இஃ(து) உண்மை
      எய்தப் படலாற் பயனின்றே
கண்ணி யவதை மறந்தொழிக
      நள்ளார் முனை மேல் இப்பொழுது
நயந்து படர்ந்து பொருதுவமே
      நமதே யாகும் நகுவாகை
தண்ணிம யம்போற் புகழ்ப்போர்வை
     தாங்கற் காய கருமமிது
தப்பா தாற்றப் பொருள் வருவாய்
     தவாதுண் டாமென்(று) இவைமுதலாங்
கண்ணி வளவற்(கு) உரைத் தருள்செய்
     கனிவாய் முத்தம் தருகவே
கனகக் குன்றை யனகசெழுங்
     கனிவாய் முத்தம் தருகவே”

என்று சேக்கிழார் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் கூறிய வண்ணம், ‘நன்கு ஆராய்ந்து இச்செயல் செய்தால் இச்செயல் நிறைவேறும் ; இச்செயல் நிறைவேறாது என எண்ணிக் காரியங்களைச் செய்ய வேண்டும்’ என்றும், “ஒரு பொருளைப் பெற்றால் அதனால் பயனில்லை யென்றால் மறந்தொழிதல் வேண்டு மென்றும், பகைவரை இன்ன சமயத்தில் சென்று பொருதால் வெற்றி எய்தலாம்’ என்றும், புகழெய்தற் குரிய காரியங்கள் இன்னவை” என்றும், இன்ன காரியங்களைச் செய்யின் உறுதியாகப் பொருள் வரும்’ என்றும், இன்னோரன்னவற்றைத் தம் அரசனாகிய அநபாய சோழனுக்கு அறுவுறுத்தி வந்தார்.

பெரிய புராணம் பாடியமை

அந்நாளில் பலரும் ஐம் பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய சீவகசிந்தாமணியைக் கற்று அதன் சுவைகளை நுகர்வாராயினர். அங்ஙனமே அரசனாகிய அநபாயனும் அந்நூலையே பெரிதும் பாராட்டிக் கேட்பானாயினான். சேக்கிழார் அரசனை நோக்கிச், ‘சமணப் பொய்ந் நூல் இது ; மறுமைக்கு ஆகாது ; இம்மைக்கும் அற்றே , வளம் மருவு சிவகதை இம்மைக்கும் மறுமைக்கும் உறுதி” என்று புகன்றார். சேக்கிழார் பிள்ளைத்தமிழாசிரியரும் இச் செய்தியைப் பின் வருமாறு கூறியுள்ளார்:-

”கார்கொண்ட அமணசிந் தாமணியை வளவர்கோன்
கங்குல்பகல் ஆராய்தரக்
கண்டொழித் தாவதிது வேயென்று தொண்டர்தம்
மகத்துவங் கருதவுய்த்துப்
பார்கொண்ட மன்னரல் லவைநீக்கி நல்லவை
பரித்திடச் செயலமைச்சர்
பண்பெனத் தெரித்தகுன் றத்தூ ருதித்தவெம்
பரமனைக் காக்கவென்றே” (காப்புப்பருவம், 8.)

அரசனும் இது பயனற்ற கதையானால் அம்மையும் இம்மையும் உறுதி பயக்கத்தக்க சிவகதை யாது ? அதனை அடைவுபடக் கூறுக” என்று கேட்டுக் கொண்டான். சேக்கிழாரும், “திருவாரூரில் இறைவன் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்குத் தில்லைவாழ் அந்தணர்என்று அடியெடுத்துக் கொடுக்க அந் நம்பியாரூரரும் திருத் தொண்டத் தொகையைப் பாடி அடியார்களைத் துதித்தார் ; பின்னர்த் திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாரின் திருவருள் பாலிக்கப்பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலைப் பாடி அடியார்களைத் துதித்தார்; அத்திருவந்தாதியை இராசராச சோழன் (1) சிவலாய முனிவர் முதலியோர் கேட்டுப் பாராட்டினர்’’ என்று கூறினார். அரசன், அத்தூயகதையை அடைவுபடச் சொல்வீர்” எனக்கேட்கச் சேக்கிழாரும் தில்லை நகரை அடைந்து கூத்தப் பெருமானை வணங்கி ‘உனது அடியர் சீர் அடியேன் உரைத்திட அடியெடுத்து இடர் கெடத் தருவாய் ’’ என வழுத்தினார். இறைவனும் தொண்டர் சரித்திரமனைத்தும் அவரது மனஅறையில் குவித்ததோடு[1] “உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார். அதனையே முதலாகக் கொண்டு அச்சொற் றொடரையே தமது புராணத்தின் நடுவிலும் ஈற்றிலும் பொருத்திச் “சைவ பரிபாஷைகளையும் சம்பிரதாயங்களையும் தெரித்து நாயன்மார் வரலாறுகளைச் சேக்கிழார் பாடி முடித்தார்.

நூல் அரங்கேற்றம்

இச்செய்தியை அரசன் கேட்டு மகிழ்ந்து தில்லைக்கு வந்து சேர்ந்தான். வளவர்கோன் வரவறிந்து தில்லை மறையோரும், வண்மை மடபதிகளும், மற்றுமுள்ள பெரியோர்களும், சேக்கிழார் பெருமானும் வரவேற்றனர். யாவரும் ஒருங்கு சென்று நடராசப் பெருமானை வணங்கினர். நடராசப் பெருமானும், இந்நூலை அரங்கேற்றுக என அருள் செய்தார் ; திருச்சிலம் பொலியும் உடன் கேட்டது. அரங்கேற்றத்துக்குத்,

”திருநெறித்தமிழ் வல்லபேர்கள் சிவாகமங்கள் படித்தபேர்
கருநெறிப்பகை ஞானநூல்பல கற்றபேர்மறை கற்றபேர்
குருநெறிக்குரி யோர்இலக்கண லக்கியங்கள் குறித்தபேர்
பெருநெறிப்பல காவியங்கதை பேசவல்லவ ரனைவரும்.[2]

வந்திருந்தனர். சேக்கிழார் பெருமான் சித்திரைத் திங்கள் ஆதிரைநாள் தொடங்கி எதிராம் ஆண்டு சித்திரைத்திங்கள் ஆதிரை வரையிலும் தாம்செய்த சிவகதையினை விளங்க விரித்துச் சொல்ல அடியாரெல்லாம் சுருதி மொழி இதுவெனக் கை தொழுது, நெஞ்சம் கனியக் கனியக் கண்ணீர் வாரக் கேட்டனர்.

அங்ஙனம் கேட்டவர்கள்[3] சேக்கிழாரை, நாடிய விரி நூல் சொற்றிடு திறனால் நன்னூலாசிரியன்’ என்று புகழ்ந்தார்கள். 'நகு பாசுரமுதல் உரை செய்தலினால் நவில் உரையாசிரியன் என்று சில ரியம்பினர். “பரசமயக் குழி வீழ்ந்தவர் நீப்பப் போதனை செய்நிலையால் போதகாசிரியன்’ என்று சிலர் புகழ்ந்தனர். சிலர் இவர் பாடல்களை ‘அத்தி தருங்கவி‘ [4]என்றனர். வேறுசிலர் ‘புத்திதருங்கவி‘ எனப் புகன்றனர். மற்றுஞ் சிலர் ‘சித்தி தருங்கவி’ எனச் செப்பினர். மேலுஞ்சிலர் ’எல்லாத் தீர்த்தங்களும் விளைவியாத சுத்தி தருங்கவி’ என்றனர். பின்னும் ‘பத்தி தருங்கவி’ என்றும், பல்லோர்க்கும் முத்தி தருங்கவிஎன்றும் பலரும் புகன்றனர்; இம்மட்டோ ?

‘நனவி லிரும்புகழ் மிகுசம் பந்தரும்
நாவுக் கிறைய வரும்
நாவலர் கோவும் சிரகர கம்பித
நன்கு புரிந்தருள
முனிவில் தமிழ்க்கவி பாடிய புலவன்’

என்று சேக்கிழாரையும் அவர் பாடல்களையும்புகழ்ந்துரைத்தனர். புராணவுரை நிறைவேறிய பின் சேக்கிழாரையும் அவரியற்றிய புராணத்தையும் யானைமேலேற்றித் தானும் ஏறி ’இணைக்கவரி துணைக்கரத்தால் வீசி இது வன்றாே யான் செய்த தவப்பயன்’ என்று அரசன் மகிழ்ந்து உலாவரச் செய்தனன். பின்னர்த் தொண்டர் சீர் பரவுவார் என்ற திருப் பெயரைச் சேக்கிழாருக்குச் குட்டி அரசனும் ஏனையோரும் வணங்கினர். முன் நம்பியாண்டார் நம்பிகள் தொகுத்த பதினொரு கிருமுறைகளோடு சேக்கிழார் பாடிய இப்புராணத்தையும் பன்னிரண்டாம் திருமுறை என்று நியமித்துச் செப்பேடு செய்து நடராசர் சந்நிதியில் ஏற்று வித்தார்கள். பின்னர்ச் சேக்கிழார் பெருமானும் தில்லை நகரில் அடியார்களுடன் கூடி அருந்தவந் தனிலிருந்து ஒரு வைகாசிப்பூச நாளில் சிவ பெருமான் திருவடி நீழலை எய்தினார்.

புராணத்துக்கு இட்ட பெயர்

“இங்கிதன் நாமங் கூறின்..... திருத்தொண்டர் புராணம் என்பாம்” என்ற சேக்கிழார் வாக்கின்படி இந்நூலுக்குத் திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் இட்ட பெயராதல் கூடும். 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவாசாரியார் இந்நூல் பாடியவரலாற்றைத் திருத்தொண்டர் புராண வரலாறு என்று தாமே பெயரிட்ட நூலில் ”சேண்டகைய திருத்தொண்டர் புராண மெனப் புராணத் திருமுறைக்குத் திருநாமம் சீர்பெற அமைத்திட்டு” (53) என்று பாடி யிருக்கின்றமையின் இந்நூலுக்குத் திருத்தொண்டர் புராணம் என்பதே முன் நாளிலும் வழங்கிய பெயராகக் கோடல் பொருந்தும். ”எடுக்கு மாக்கதை இன் தமிழ்ச் செய்யுளாய்” என்ற சேக்கிழார் வாக்கின்படி இதற்குப் பெரியபுராணம் என்ற பெயர் வந்தது என்று கூறுவாரு முளர். ஏனைய புராணங்களினும் சிறந்து விளங்கும் பெற்றியுடைத் தாதலின் இந்நூற்குப் பெரியபுராணம் என்ற பெயர் சாலவும் பொருந்தும.

இப்புராணத்துக்கு ஆதரவுகள்

சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகை இப் புராணத்துக்கு முதல் நூல்; நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி வழிநூல். இப் புராணம் அவற்றின் வழியே வந்த விரிநூல். மற்றும் வித்தகப்பாடல் முத்திறத்து அடியார் பாடிய திருநெறிய மெய்ஞ்ஞானத்தமிழ் ஆகிய தேவாரங்களும், காரைக்கால் அம்மையாருடைய அருள் நூல்களும், சேரமான் பெருமாள் நாயனார் போன்றவர்கள் அருளிய நூல்களும், செவிவழிச் செய்திகளும் இந்நூலுக்கு ஆதரவுகளாம். உமாபதி சிவாசாரியாரும் இவற்றை யெல்லாம் இந்நூலுக்கு உறுப்பாகவும், பொருள்கோள் உயிராகவும், விருத்தப்பா உடல் ஆகவும் கொண்டு நடந்தது என்று சுவைபடக் கூறுகிறார். (செய்யுள், 81.)

காலம்

சேக்கிழார் தம்காலத்து அரசனைத் தம் புராணத்தில் பத்து இடங்களில் குறித்துள்ளார். அப்பத்து இடங்களிலும் அநபாயன் என்றே குறிக்கின்றர். சேக்கிழார் புராண ஆசிரியர் (உமாபதி சிவம்) ஓரிடத்தில் (செய் 98) அநபாயன் என்று குறிக்கின்றார். இவ்வாசிரியர் அபயன் என்று (செய் 59) குறித்தாற் போலவே, சேக்கிழாரும் இரண்டிடங்களில் அபயன் என்று குறித்துள்ளார். பெரிய புராணத்தில் பத்து இடங்களில் அநபாயன் குறிக்கப்பெற் திருத்தலின் அன்னவனே சேக்கிழார் காலத்தரசன் என்று துணிந்து கூறலாம். அநபாயன் பேரம்பலம் பொன் வேய்ந்தவன் என்று சேக்கிழார் பெருமான் செப்புவர். இவ்வநபாயனுக்குத் திருநீற்றுச் சோழன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

அநபாயன் யார் ? : இரண்டாம் குலோத்துங்க சோழனுடைய 7-ஆம் ஆட்சியாண்டிற்குரிய திருவாரூர்க் கல்வெட்டில் (269 of 1901) ”ஆடிய நம்பிக்கும் பரவை நாச்சியார்க்கும் அர்ச்சனா போக இறையிலியாக அநபாய நல்லூர் என்னும் திருநாமத்தால்” என்ற பகுதியாலும், திருவாரூரிலுள்ள வடமொழிக் கல்வெட்டொன்றில் (73 of 1890) வியாக்கிராக்ரஹாரா ஹேம சபா நடேச பாதாரவிந்த மதுப அநபாயதாமாங்“[5] என்ற பகுதியாலும், இவனது 12-ஆம் ஆட்சியாண்டுக்குரிய களத்தூர்க் கல்வெட்டில் (346 of 1911) இவனது திருமந்திர வோலை “அநபாய மூவேந்த வேளான்” என்று காணப்படுவதாலும், அநபாயன் என்ற சிறப்புப் பெயர் இரண்டாங் குலோத்துங்க சோழனுக்கே உரியது என்பது உறுதியெய்தும். இவ்விரண்டாங் குலோத்துங்க சோழன் கி. பி. 1133 முதல் கி. பி. 1150 வரை அரசாண்டவன்; விக்கிரம சோழனுடைய மகன்; இரண்டாம் இராசராசனுடைய தந்தை.

திருமழபாடிக் கல்வெட்டு : சேக்கிழார் எக்காலத்தில் வாழ்ந்தார் என்பதை அறிய இரண்டாம் இராசராச சோழனுடைய 17-ஆம் ஆட்சியாண்டுக் குரிய திருமழபாடிக் கல்வெட்டுச் சான்று பகர்கின்றது. அக்கல்வெட்டுப் பகுதியாவது:-

”ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் இராம தேவனை உத்தம சோழப் பல்லவ ராயன்” (95 of 1920) என்பது.

பாலறாவாயர் : மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய இரண்டாம் ஆண்டிற்குரிய கோட்டுர்ச் சாசனத்தில் (445 of 1912) சேக்கிழார் பாலறாவாயர் என்று ஒருவர் குறிக்கப் பெறுகிறார் சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவராயன் என்ற சிறப்புப் பெயருண்மையை உமாபதி சிவாசாரியர் தாம்பாடிய சேக்கிழார் புராணத்தே குறிப்பிட்டமையா லறியலாம். சேக்கிழாருக்குப் பாலறாவாயர் என்ற இளவல் ஒருவர் இருந்தமையையும், சேக்கிழார் பெரிய புராணம் பாடிய பின்பு அரசர் பாலருவாயரை அழைத்து அவரையே தம் அமைச்சராகக் கொண்டார் என்றும் சேக்கிழார் புராணத்தில் உமாபதி சிவாசாரியர் பாடியுள்ளார் (செய் 98-99). இனிச் சாசனத்தில் கண்ட பாலறாவாயரும், உமாபதி சிவாசாரியர் கூறிய பாலறாவாயரும் ஒருவரே என்பதற்குத் தடையில்லை.

மாதேவடிகள் : இனித் திருமழபாடிச் சாசனத்தில் கண்ட சேக்கிழார்க்கு மாதேவடிகள், இராமதேவன் என்ற சிறப்புப் பெயர்கள் இருந்தமை அக்கல்வெட்டால் அறியப் பெறுகின்றது. இச் சிறப்புப் பெயர்களை உமாபதி சிவாசாரியர் கூறவில்லை; எனினும், சேக்கிழாருடைய சிவபக்திச் சிறப்புக் கருதி மாதேவடிகள் என்று குறிக்கப்பட்டார் என்னலாம். உமாபதி சிவாசாரியர் 'குன்றை முனி சேக்கிழார்’ என்றும் (செய் 84), *அண்டவாணர் அடியார்கள் தம்முள் அருந் தவந்தனில் இருந்தவர்’ என்றும் (செய்யுள் 100) கூறியிருத்தலால், சேக்கிழாரை மாதேவடிகள் என்று சாசனம் குறித்தது. சாலப் பொருந்தும்.

இராமதேவன் : சாசனத்தில் சேக்கிழாருக்கு இராமதேவன் என்ற பெயருண்மையைக் காண்கிறோம். சாசனத்திலுள்ள முறையைக் காணின் இராமதேவன் என்பது சேக்கிழாரது இயற் பெயராகக் கொள்ளத் தோன்றுகின்றது. இராமதேவன் என்பது வைணவப் பெயராயிற்றே! சிறந்த சிவபக்திச் செல்வம் வாய்ந்த தந்தை வெள்ளியங்கிரியார் இவருக்கு இப்பெயர் அமைத் திருப்பரோ?’ என்ற ஐயம் எழக்கூடும். அறுபான் மும்மை நாயன்மார்களுள் நரசிங்க முனையரையரும், ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் புருஷோத்தம நம்பியும் சிவனடிமைத் திறம் உடைய வைணவப் பெயரினராவர். எனவே இராமப் பெயர் வைத்திருப்பினும் சாசனச் சேக்கிழார், பெரிய புராணம் பாடிய சேக்கிழாராதற்குத் தடையின்று.

முடிந்தது முடித்தல்: இதுகாறும் கூறியவாற்றான் இரண்டாம் இராசராசனுடைய 17-ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருமழபாடிக் கல்வெட்டில் கண்ட சேக்கிழாரே பெரிய புராணம் அருளிய சேக்கிழார் ஆவர் என்று கொள்ளலாம். இரண்டாம் குலோத்துங்கன் கி. பி. 1150 வரை அரசாண்டவன். இரண்டாம் இராசராசனது ஆட்சி 1146 முதல் கணக்கிடப் பெறும். எனவே திருமழபாடிக் கல்வெட்டு கி. பி. 1163-க்கு உரியதாகும். எனவே சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சில ஆண்டுகள் அமைச்சராக இருந்து ஒய்வுபெற்று, இரண்டாம் இராசராச சோழனுடைய காலத்தில் சோழ நாட்டிலேயே வாழ்ந்திருந்தவராதல் கூடும் என்றும், அங்ஙனம் வாழ்ந்த பொழுது திருமழபாடி முதலிய தலங்களில் அறங்கள் புரிந்தாரென்றும் கொள்ளலாம். (மு. ரா. சாசனத்தமிழ்க்கவி சரிதம்.)

சேக்கிழாரும் திருநாகேச்சுரமும்

சேக்கிழாருக்குச் சோழ நாட்டுத் திருநாகேச்சுரத்து எம்பெருமான் மீது மிக்க அன்புண்டு. அவர் அத்தலத்தைத் தனக்குரிய அபிமானத் தலமாகவும், ஆன்மார்த்த தலமாகவும் கொண்டார்; அத்தலத்திலே பலகாலும் தங்கியிருந்து பல திருப்பணிகள் செய்துள்ளார். அத்தலத் திருக்கோயில் உட்பிராகாரம் தென் புறத்தில் சேக்கிழார், அவர் தம்பி பாலருவாயர், அவர் தாயார் ஆகிய மூவ உருவங்களும் எழுந்தருளுவிக்கப் பெற்று, வழிபாடுசெய்யப் பெறுகிறது. இத்தலத்தின் மேல் தனக்குள்ள அன்பு காரணமாகத் தொண்டை நாட்டிலே குன்றத்தூர் எல்லையில் திருநாகேச்சுரத்தைப் போன்றதோர் கோயிலைக் கட்டி அவ்வூர்ப் பகுதிக்கும் திருநாகேச்சுரம் என்று பெயரிட்டார். அக்கோயிலில் சேக்கிழாருக்கும் தனிக் கோயில் இருக்கிறது. உமாபதி சிவாசாரியாரும் இச் செய்திகளைப் பின்வரும் பாடலில் புகன்றுள்ளார்:-

“ஆங்கவர் நீர் நாட்டு நித்தனுறை திருநாகேச் சுரத்தில்
நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்” [அன்பு
                                      (செய் 18)

என்பதும்,

“தம்பதிகுன் றத்துாரில் மடவ ளாகம்
தானாக்கித் திருக்கோயில் தாபித் தாங்கண்
செம்பியர் கோன் திருநாகேச் சுரம்போ லீதுந்
திருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி
அம்புவியில் அங்காங்க வைப வங்கட்(கு)
ஆணபதி கலந்திருநாள் பூசை கற்பித்(து)
இம்பர் புகழ் வளவன்அர சுரிமைச் செங்கோல்
இமசேது பரியந்தம் இயற்று நாளில்” (செய். 1 9)

என்பதும் அவை.

சேக்கிழாரைப்பற்றிய நூல்கள்

இங்ஙனம் சைவசமய உலகிற்கு ஆதவன் போன்ற சேக்கிழார் பெருமானின் வரலாற்றை உமாபதி சிவாசாரியார் இயற்றிய திருத் தொண்டப் புராண வரலாறு என்னும் இலக்கியத்திலும், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியத்திலும் நன்கு சுவைக்கலாம். மேலும், சைவ புராணங்களிலும், சைவத்தல புராணங்களிலும் சேக்கிழாரைப் பற்றிய தோத்திரங்கள் பல காணப்படுகின்றன. சேக்கிழாரைப் பற்றித் திரு. சோமசுந்தர தேசிகர் அவர்கள் சைவ சிகாமணிகள் இருவர் என்ற நூலில் உரை நடையில் வரைந்துள்ளார். திரு கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் சேக்கிழார் சுவாமிகள் சரித்திரம் என்ற நூலையும், திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் சேக்கிழார் என்ற நூலையும் இயற்றித் தந்துள்ளனர். டாக்டர் திரு மு. இராசமாணிக்கனார் அவர்கள் பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலிலும், திரு மு. இராகவையங்கார் அவர்கள் சாசனத் தமிழ்க் கவி சரிதம் என்ற நூலிலும், திரு. தி. கி. நாராயணசாமி நாயுடு அவர்கள் பெரிய புராணம் சமாஜப் பதிப்பிலும், சேக்கிழார் காலத்தை ஆய்ந்துள்ளனர்.

முடிப்புரை

”தாங்கும் வளவன் அநபாயன்
தங்கள் மணியாய் அவனமைச்சர்
தங்கள் சூளா மணியாயுத்
தமச்சோ ழப்பல் லவன்எனும்பேர்
ஓங்கும் படிகொள் விண்மணியாய்
உவக்கும் அடியார் சரித்திரமுற்(று)
உரை செய்து அருள் சிந்தாமணியாய்”

விளங்கும் சேக்கிழார் பெருமானின் மா புராணமாகிய திருத்தொண்டர் புராணத்தை மக்கள் ஓதி யுய்க!


  1. சேக்கிழார் பிள்ளைத் தமிழ், காப்புப் பருவம், செய்யுள் 4.
  2. திருத் தொண்டர் புராண வரலாறு செய்யுள், 77
  3. சேக்கிழார் பிள்ளைத் தமிழ், சப்பாணிப் பருவம் செய்யுள் 29.
  4. அத்தி தருங் கவி-முப்பொருள் உண்மையைக் கூறும் கவி‘
  5. இப்பகுதியின் பொருள்:- சிதம்பரத்தில் பொற்சபையில் உள்ள நடேசப் பெருமானின் திருவடித் தாமரைகளில் ஊதும் வண்டாக உள்ள அநபாயன் என்ற பெயருடையவன்.