சோழர் கால அரசியல் தலைவர்கள்/மணவில் கூத்தன்
ஊரும் பேரும்
மணவில் கூத்தன் என்பான் தொண்டை மண்டலத்து மணவில் என்னும் ஊரினன்; "மட்டார் பொழில் மணவில் வாழ் கூத்தன்" என்பது சாசனப் பாடல். இவன் வேளாண்குடியிற் பிறந்தவன். இவற்கு அருளாகரன், அரும்பாக்கிழான், நரலோக வீரன், காலிங்கர்கோன், பொன்னம்பலக்கூத்தன் என்ற பெயர்களும் வழங்கலாயின. இவனுக்கு மானாவதாரன் என்ற விருதுப் பெயரும் இருந்ததெனச் சித்தலிங்கமடம் என்ற ஊரில் கிடைத்த கல்லெழுத்தால் அறியப்பெறுகிறது. (No. 367 of 1909.)
அலுவலும் வெற்றிகளும்
இவன் முதல் குலோத்துங்கன் (1070-1120) காலத்துப் படைத்தலைவனாய் இருந்தவன்; குலோத்துங்கன் வேணாடு, மலைநாடு, பாண்டி நாடு, வடநாடு முதலிய நாடுகளில் பல போர்கள் நடத்தியபொழுது, இம்மணவில் கூத்தன் படைத்தலைமை பூண்டு வெற்றி பெற்றுத் தன் புகழையும் தன் அரசன் புகழையும் நிலை நிறுத்தினன். இவன் வெற்றிகளைக் கூறும் சாசனப் பகுதிகள் பின்வருமாறு :—
1. தென்னாடன் சாவேற்றின் திண்செருக்கை
- அன்றமைத்தான் தொண்டையர்கோ னாங்கு.
2. ・・・・・・ போரில்
கொலைநாடு வெஞ்சினவேல் கூத்தன் குறுகார்
மலை நாடு கொண்டபிரான் வந்து.
3. தென்னர், குடமலை நாடறிந்து கொண்ட வேற்கூத்தன்.
4. ............ கொல்லம்
அழிவுகண்டான் சேரன் அளப்பரிய ஆற்றற்
கிழிவுகண்டான் தொண்டையர்கோன் ஏறு.
5. ............ தென்னர்
மலைமன்னர் ஏனை வடமன்னர் மற்றக்
குலமன்னர் செல்வமெலாம் கொண்டு.
விக்கிரமசோழன் காலத்தில்
முதற்குலோத்துங்க சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசனாகத் திகழ்ந்தவன் விக்கிரமசோழன். இவ் விக்கிரம சோழனுடைய ஆட்சியின் முற்பகுதியினும் மணவிற்கூத்தன் நிலவியிருந்தான்.
விக்கிரசோழனுலா
விக்கிரம சோழனது அவைக்களப் புலவராய் வீற்றிருந்தவர் ஒட்டக்கூத்தர். இவ்வொட்டக்கூத்தர் விக்கிரமசோழனுலா என்னும் நூலொன்று விக்கிரமசோழன் பேரில் இயற்றியுள்ளார். இவ்வுலாவில் இம்மணவிற் கூத்தனான காலிங்கர் கோனின் வெற்றிகள் பற்றிப் பின்வருமாறு காணப்பெறுகிறது :-
............ வேங்கையினும்
கூடார் விழிஞத்தும் கொல்லத்தும் கொங்கத்தும்
ஓடா விரட்டத்தும் ஒட்டத்தும்-நாடா
தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக்
கொடியெடுத்த காலிங்கர் கோன்...
சிவபக்தி
இத்தகைய பெருவீரனாகிய மணவிற் கூத்தன் பெருஞ் சிவபக்தனாகத் திகழ்ந்தான். இவன் தில்லையிலும் திருவதிகையிலும் செய்த சிவப்பணிகள் அளப்பில. அவற்றைத் தில்லையம்பதியில் கல்லெழுத்தாக அமைந்துள்ள 36 வெண்பாக்களாலும், திருவதிகை வீரட்டானத்தில் சிலாசாசனம் செய்யப் பெற்றுள்ள இருபத்தைந்து வெண்பாக்களாலும் அறியலாம். (பிறநலப்பணிகள் என்ற தலைப்பிலும் காண்க.)
இவனைப்பற்றித் தில்லையில் காணும் பாடற் கல்லெழுத்துக்கள் தென்னிந்திய சாசனங்கள் நான்காவது தொகுதியில் 225-ம் எண்கொண்ட கல்வெட்டாகப் பதிப்பிக்கப்பெற்றுள்ளன (A. R. No. 120 of 1888); பெருந்தொகை என்ற நூலில் 1059-1094 எண்கொண்ட பாடல்களாக அச்சிடப்பெற்றுள்ளன. திருவதிகை வீரட்டானத்தில் நடராசப் பெருமான் சன்னிதியிலுள்ள இரண்டு தூண்களில் இவனைப்பற்றிய 25 வெண்பாக்கள் 1921-ஆம் ஆண்டுக்குரிய 369-ஆம் எண் கொண்ட கல்வெட்டாகப் படியெறிக்கப் பெற்றுள்ளன; பெருந்தொகை என்ற நூலிலும் 1095-1119 எண்கொண்ட பாடல்களாக அச்சிடப் பெற்றுள்ளன.
தில்லைத் திருப்பணிகள்
இவன் பகைவேந்தரை வென்று கொணர்ந்த செல்வமெலாம் கொண்டு தில்லைச்சிற்றம்பலத்துத் திருக்கொடுங்கைக்குப் பொன் வேய்ந்தான்; பொன்னம்பலத்தையும் பொன் வேய்ந்தான்; பேரம்பலத்துக்குச் செம்பு வேய்ந்தான்; செம்பொற் காளம் செய்து கொடுத்தான்; “ஆடும் தனித் தேனுக்கு அம்பலத்தே கர்ப்பூரம்-நீடும் திருவிளக்கு நீடமைத்தான்.” பொன்னம்பலம் சூழப் பொன்னின் திருவிளக்குகளை அமைத்தான்; “ஆடும் தெளிதேனை ஆயிர நாழி நெய்யால் ஆடும்படி கண்டான்.”
“மல்லல் குலவரையா நூற்றுக்கான் மண்டபத்தைத் தில்லைப்பிரானுக்குச் செய்தமைத்தவன்” இவனே. இந்நூற்றுக்கால் மண்டபத்தில் 12 தூண்களில் விக்கிரம சோழன் திருமண்டபம் என்ற பெயர் காணப்படுவதனால், இத்தலைவனால் (மணவில் கூத்தனால்) விக்கிரம சோழன் ஆணையின்படி இத்திருப்பணி நடைபெற்ற தாதல் வேண்டும்[2] என்று அறிஞர் கருதுகின்றனர்.
“தில்லைப் பெரிய திருச்சுற்று மாளிகையை எல்லைக்குலவரை போல்” அமைத்தான்; புட்கரணிக்குக் கல்படிக்கட்டுகள் அமைக்கச் செய்தான்; “வீதிசூழ் நல்விளக்கும் வீற்றிருக்க மண்டபமும்” செய்வித்தான்.
திருநந்தவனத்தை ஏற்படுத்தினான்; நூறாயிரம் கமுகு மரங்களை வைத்தான்; ஒராயிரம் கறவைப் பசுக்களைக் கொடுத்தான் ; குழந்தைகளுக்குப் பாலும் எண்ணெயும் நாடோறும் கொடுக்கச் செய்தான்; தில்லைப் பேரேரிக்குக் கல்லினால் மதகு ஒன்று அமைத்தான்.
மாசி மாதத்தில் (மக விழாவில்) இறைவனைக் கடலில் நீராட்டுவித்து வீற்றிருக்கச் செய்ய ஒரு மண்டபத்தைக் கட்டினான்; நீராடச் செல்லுவதற்கு ஒரு பெரு வழியொன்றும் அமைத்தான். அம்மண்டபம் இற்றை நாளில் சிதம்பரத்துக்கு அருகில் கிள்ளை என்னும் ஊரில் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.[3]
தில்லையில் சிவகாமக் கோட்டத்தை யமைத்தவன் இவனே; காமக்கோட்டத்தின் திருச்சுற்றினையும் இவன் கட்டுவித்தான்; இச்செய்திகளைக் கூறும் பாடல்கள் படித்து இன்புறத்தக்கன :-
நடங்கவின்கொள் அம்பலத்து நாயகச்செந் தேனின்
இடங்கவின்கொள் பச்சையிளந் தேனுக்கு-அடங்கார்
பருமா ளிகைமேல் பகடுகைத்த கூத்தன்
திருமா ளிகையமைத்தான் சென்று.
எவ்வுலகும் எவ்வுயிரும் ஈன்றும் எழிலழியாச்
செல்வியாள் கோயில் திருச்சுற்றைப்-பவ்வஞ்சூழ்
எல்லைவட்டம் தன்கோற் கியலவிட்ட வாட்கூத்தன்
தில்லைவட்டத் தேயமைத்தான் சென்று.
தேவாரம் ஒதுவதற்கும், இருந்து அன்பர்கள் செவிமடுத்து இன்புறுவதற்குமாக ஒரு மண்டபத்தைக் கட்டினான்.
“நட்டப் பெருமானார் ஞானங் குழைத்தளித்த
சிட்டப் பெருமான் திருப்பதியம்-முட்டாமைக்
கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்”
“அன்றியும் சம்பந்தர் கோயிலுக்கு இவன் பொன் வேய்ந்தான் என்று ஒரு பாடல் கூறுகிறது.
“தென்வேந்தன் கூனிமிர்த்த செந்தமிழர் தென்கோயில்
பொன்மேய்ந்து திக்கைப் புகழ்வேய்ந்தான்”.
இதனுள் ’தென்வேந்தன்’ என்றது கூன்பாண்டியனை 'கூன்நிமிர்த்த செந்தமிழர்’ என்றது ஞானசம்பந்தரை.
இனி, இம்மணவிற் கூத்தன் திருமுறைகளைச் செப்பேடு செய்வித்தான் என்பது சிறப்பாகக் குறிப்பிடத் தக்க செய்தியாகும்.
முற்திறத்தார் ஈசன் முதல் திறத்தைப் பாடியவாறு
ஒத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி-இத்தலத்தின்
எல்லைக் கிரிவாய் இசையெழுதி னான்கூத்தன்
தில்லைச்சிற் றம்பலத்தே சென்று.
இதில் ”பாடியவாறு” என்ற சொற்றாெடர் கவனிக்கற்பாலது. சம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகியவர்கள் பதிகங்களை எம்முறையில் பாடியருளினார்களோ அம் முறையிலேயே அப்பதிகங்கள் மனவிற்கூத்தனது முயற்சியால் எழுதப்பட்டன என்று இச்சொற்றாெடரால் அறியலாகும். எத்தலத்துக்குப் பின் எத்தலத்திற்குச் சமய (குரவர் சென்றார்கள் என்றும், அங்குப் பாடிய பதிகங்கள் எவை என்றும், ஆய்ந்து, திருவருட்டுணைகொண்டு, பெரிய புராணத்தை எழுதியவர் சேக்கிழார் என்பது யாவரும் அறிந்ததொன்று. சேக்கிழார் காலத்துக்கு முன்பே பதிகங்கள் பாடிய வரிசைமுறை கொண்ட செப்பேடுகள் இருந்தன என்பது இப்பாடலால் உறுதி பெறுமாயின், சேக்கிழார் சுவாமிகளுக்கு இச்செப்பேடு களும் பயன்பட்டிருத்தல் கூடும் என்று கூறலாம். “ஒத்தமைத்த” என்ற சொற்றாெடரும் கவனிக்கத்தக்கது. செப்பேடுகள் ஒவ்வொன்றும் ஒரே அளவினதாக இருந்திருத்தல் வேண்டும் ; ஒவ்வொரு செப்பேட்டில் ஒவ்வொரு பதிகம்மட்டும் எழுதப்பட்டது போலும் என்று இதனால் கூர்ந்து அறியலாம்.
திருவதிகைத் திருப்பணிகள்
தில்லையில் பல திருப்பணிகளைச் செய்தவனாகிய மணவிற்கூத்தன் திருவதிகையில் செய்த திருப்பணிகளும் பல. “பொன்மகர தோரணமும் பூணணியும் பட்டிகையும், தென்னதிகை நாயகர்க்குச் செய்தமைத்தான் ’’; பொற் சதுக்கம், மேகடம்பம்[4] என்றிவற்றை சேர்ப்பித்தான்; மண்டபமும் மாளிகையும் எடுப்பித்தான் நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டினான்; திருக்கோயில் மடைப்பள்ளியையும் பெரிய திருச்சுற்றையும் கருங்கல்லால் கட்டுவித்தான்; பகைவேந்தரைவென்று கொணர்ந்த செம்பொன்னால் பரிகலங்களைச் செய்தான் ; வீரட்டர் கோயிலைச் செம்பொனால் வேய்ந்தான் ; ஆயிரம் நாழி நெய்யால் விரட்டானேசுவரருக்கு அபிஷேகம் செய்வித்தான் ; நல்ல திருநந்தாவனம் அமைத்தான் , ஐம்பதினாயிரம் கமுக மரங்களை வைத்து வளர்த்தான்; குராற்பசு ஐஞ்ஞூறு கொடுத்தான் ; 10 பொன் விளக்களை அமைத்தான் ; எண்ணில் வயல் விளக்கும் பேரே! ஒன்று அமைத்தான்; அருளாகர நல்லூர் என்று தன் பெயரால் ஒரு ஊரையும் ஆங்கொரு ஏரியையும் உண்டாக்கினான்.காமக்கோட்டம் (அம்மையார் திருக்கோயிலைக்) கட்டுவித்துப் பெருவிபவம் கண்டான் : அம்மையார்க்கு நிறைய அணிகலன்களை அளித்தான் :-
மாசயிலத் தம்மைக்கு வாழதிகை வீரட்டத்
தீச னிடமருங்கி லேந்திழைக்கு—மாசில்
முடிமுதலா முற்றணிகள் சாத்தினான் வேளாண்
குடிமுதலான் தொண்டையர் கோன்.
நடராசப் பெருமான் எழுந்தருளத் திருக்கோயிலைக் கட்டச் செய்தான்; ”நீடும் அதிகையான் நித்தல் பெருங் கூத்தை, ஆடும் அரங்கமைத்தான் ... ... தொண்டையாரேறு” என்றமை காண்க.
இனித் திருவதிகைதான் திருநாவுக்கரசர் சூலை நீங்கித் திருநாவுக்கரசு என்னும் நாமத்தை மன்னிய தலமாகும். இத்தலத்தில் திருநாவுக்கரசருக்குத் திருக்கோயில் கட்டப் பெற்றது:
”ஈசன் அதிகையில்வா கீசன் எழுந்தருள
மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான்”
என்பது திருவதிகைச் சாசனக் கவியாகும்.
உமாதேவியார் காஞ்சிபுரத்தில் எண்ணான்கு பேரறங்களையும் செய்தருள்கிறார் என்பது சைவரறிந்த உண்மை. இதனைச் சேக்கிழார் சுவாமிகள்,
”நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலின் நீடிய வாழ்க்கைப்
புண்ணியத்திருக் காமக்கோட்டத்துப்
பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்”
அண்ணல் அதிகையரன் ஆகம் பிரியாத
பெண்ணினல்லாள் எண்ணான்கு பேரறமும்-எண்ணி அவை
நாணாள் செலவமைத்தான்...
}} இதில் “நாணாள்” என்பது நாடோறும் என்று பொருள்படும்.
நற்பண்புகள்
இது காறும் கண்டவாற்றான் இவனது சிவபக்தி சிறப்புத் தெற்றென விளங்கும். இவனைப்பற்றிய பாடல்களினின்று இவன் ஒரு பெரு வீரன் என்றும், பெரு கொடையாளி என்றும், தன் அரசனுடைய புகழை மிகுவித்தவன் என்றும் அறிகிறோம். “தொல்லை மழை வளர்க்க வெங்கலியை மாற்றி, வழுவாமல் அறம் வளர்த்தவன்” இவன். “பொன் மழையோடொக்கத் தரும் கொடையான்” ஆகவும் இவன் திகழ்ந்தான். இவன் சமய குரவரிடத்தில் கொண்ட பக்தி, தில்லையில் திருஞான் சம்பந்தர் கோயிலுக்குப் பொன் வேய்ந்தமையாலும் திருவதிகையில் திருநாவுக்கரசருக்குக் கோயிலமைத்தமையாலும் அறியப் பெறுகின்றது. இவன் சைவ சமயத்துக்கு ஆற்றியுள்ள சிறந்த பணி மூவர் தேவரங்களையும் செப்பேடு செய்வித்தமையேயாகும். இதனால் இவன் சைவர் நெஞ்சில் நிலவுபவன் ஆவன்.பிற நலப்பணிகள்
நெய்வணை என்று இந்நாளில் வழங்கும் ஊர் முன்னாளில் திருநெல் வெண்ணெய் என்று வழங்கப்பட்டது. இது சம்பந்தரால் பாடப்பட்ட தலம். முதற் குலோத்துங்க சோழனது 26-ஆவது ஆட்சியாண்டில் அரும்பாக் கிழான் வேண்டுகோட்படி இவ்வூர் சுங்கம் தவிர்த்த சோழநல்லூர் என்று பெயரிடப்பட்டது; பொற்குடம் கொடுத்தருளிய தேவர்க்கு நிலங்கள் அளிக்கப்பட்டன. (374 of 1908) இதில் அரும்பாக் கிழானுக்குப் பொற்கோயில் தொண்டைமான் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. (இப்பெயர் திருப்பாசூரிலுள்ள இவன் மகனைப்பற்றிய கல்வெட்டிலும் (128 of 1930) குறிக்கப் பெற்றுள்ளது.)
கீழுர் என்பது திருக் கோவலூரில் சிவன் கோயிலுள்ள பகுதி. இவ்வூரில் முதற் குலோத்துங்க சோழனுடைய 31-ஆம் ஆட்சியாண்டில் அரும்பாக்கிழான் இருக்கோவலூரான மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடத்தில் தெங்கந் தோட்டம் விலைக்குக் கொண்டு திருவீரட்டான முடையார்க்குத் திரு நந்தவனமாகக் கொடுத்தான் (264 of 1902; S.I.I. Vol VII No. 892) என்றுள்ளது.
தக்கோலம் என்பது முன்னாளில் திருவூறல் என்று வழங்கப்பட்டது. இது தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற தலம். முதற் குலோத்துங்கனுடைய 45ஆவது ஆட்சியாண்டில் சங்கரப்பாடி நகரத்தாரிடத்து அரும்பாக் கிழான் அறுபது பொன் கொடுத்துப் பத்து விளக்குகள் எரிக்க எற்பாடு செய்தான். இக்கல்வெட்டில் தக்கோலம் குலோத்துங்க சோழபுரம் என்று குறிக்கப்பட்டுள்ளது (264 of 1924).
திருப்புலிவனம் என்ற ஊரிலுள்ள முதற் குலோத்துங்கனுடைய 45-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டிலிருந்து அரும்பாக்கிழான் நான்கு விளக்குகள் எரிக்கப் பன்னிரண்டு கழஞ்சு பொன் கொடுத்ததாக அறிகிறோம் (207 Of 1923).
திருப்பாசூர் என்பது செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு பாடல் பெற்ற தலம். இவ்வூர்க் கோயிலில் முதற் குலோத்துங்கனுடைய 45ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று உள்ளது. அது சிவப்பிராமணரும் ஜயதரபுரத்து நகரத்தாரும் முறையே நான்கும் ஆறும் விளக்குகளை எரிக்க அரும்பாக் கிழானிடமிருந்து பொன் பெற்றார்கள் என்று கூறுகின்றது.
எலவானாசூர் என்றவூரில் முதற் குலோத்துங்க சோழனுடைய 48-ஆவது ஆட்சியாண்டில் அரும்பாக் கிழான் பள்ளியறை நம்பிராட்டியாரை எழுந்தருளுவித்தான். அப்பள்ளியறை நம்பிராட்டியாருக்கு இறையா நரையூரான சோழகேரளச் சதுர்வேதி மங்கலச் சபையார் ஓடிப்போன இரண்டு கணக்கரது நிலங்களை அவர்கள் கொடுக்க வேண்டிய வரியின் பொருட்டு விற்றளித்தார்கள் (164 of 1906).
திருவதிகை, திருநாவுக்கரசருக்குச் சூலை நோய் நீங்கிய தலம். திருநாவுக்கரசரும் இத்தலத்தை அதி அரைய மங்கை என்று குறிப்பிடுவர். முதற் குலோத்துங்கனுடைய 48-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இவ்வூர் அதிராஜ மங்கல்யபுரம் என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தார் அரும்பாக் கிழானுக்குரிய 48,000 குழி புன்செய் நிலத்தை நன்செய் நிலமாக மாற்றுவதற்கு ஆதரவு அளித்த செய்தி கூறப்படுகிறது; அந்நிலம் திருநாவுக்கரச தேவமடத்துக்கு மடப்புறமாகவும் அளிக்கபட்டது (382 of 1921).
சித்தலிங்கமடம் என்றவூரில் முதற் குலோத்துங்க சோழனுடைய, ஆட்சியாண்டு தெரியாத கல்வெட்டொன்று உள்ளது. அது வடமொழிச் சுலோகமாகும்; திருக்கோவலூர் ஆண்டபிள்ளை பட்டன் என்பான் எழுதியது. ”மணவிலாதிபதி சபாநர்த்தக காலிங்கராயன்” என்பான் அவ்வூர்ச் சிவன் கோயிலைப் புதுப்பித்தான் என்பது அச்சுலோகத்தில் கண்ட செய்தியாகும் (367 of 1909). இன்னோரு கல்வெட்டில்[5] விமானமும் கமுகுகள் சூழ்ந்த பிராகாரமும் ஒரு மண்டபமும் சகம் 1025-ல் வியாக்கிரபாத முனிவர் தொழும் திருவடிகளையுடைய சிவபெருமானுக்கு மணவிலாதிபதி அமைத்தனன் என்று கூறப்பட்டுள்ளது. (இவ்வூர்ப் பெருமானுக்கு வியாக்கிர பாதீஸ்வரர் என்பது வடமொழிப் பெயர்; திருப்புலிப் பகவர் என்பது தமிழ்ப் பெயர்.)
ஆத்தூர் எனப்படும் திருச்செந்தூர்த் தாலூகாவிலுள்ள ஊரில் கிடைத்த வடமொழிச் சுலோகமாகவுள்ள கல்வெட்டொன்று, அரும்பாக் கிழான் மகரதோரணம் ஒன்றை இறைவனுக்கு அளித்தான் என்றும் இரண்டு விளக்குகள் எரிக்கப் பொன் கொடுத்தான் என்றும் அறிவிக்கின்றது (405 of 1929-30). இக்கல்வெட்டில் அரசன் பெயர் ஜயதரன் என்றும், தலைமை அமைச்சன் பெயர் மானாவதாரன் என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. ஜயதரன் என்பது முதற் குலோத்துங்கனயும், மானாவதாரன் என்பது இம்மணவிற் கூத்தனையும் குறிக்கும்.
திருவாரூரில் விக்கிரம சோழனுடைய நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று உள்ளது. அக் கல்வெட்டினால்,திருநல்லூர்ச் சபையினர் இரண்டேமுக்காலே சின்னம் பரப்புடைய நெடுங்குளம் ஒன்றை அரும்பாக் கிழானுக்கு நூறு காசுக்கு விற்றனரென்றும், அரும்பாக் கிழான் அதைப் பெற்றுத் திருவாரூர்த் திருமூலட்டான முடையார்க்குச் செங்கழுநீர் மாலைகள் அளிக்க ஏற்பாடு செய்தான் என்றும் அறிய வருகிறது (563 of 1904.)
திண்டிவனம் என்ற வூரிலுள்ள விக்கிரம சோழனுடைய 5-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுள்ளது. அவ்வாண்டில் அரும்பாக்கிழான் 120 அன்றாடு நற்காசு கொடுக்கக் கிடங்கிலான இராசேந்திர சோழ நல்லூர் என்னும் ஊரவர் திருத்திண்டீசுவரம் உடையார்க்கு 6- வேலி நிலம் நீர்ப்பாசன உரிமைகளுடன் விற்றுக் கொடுத்தனர். நிலத்துக்கு விலை இருபது காசு. எஞ்சிய நூறு காசுக்குரிய வட்டியைக் கொண்டு அந்நிலத்துக்குச் செலுத்த வேண்டிய திருவெழுச்சிக் குடிமை, பெருவரி, சில்லிறை, வெட்டிமுட்டையாள் முதலியவற்றை ஊரவரே செலுத்த ஒப்புக்கொண்டனர். நத்தக் கொல்லையையும் பத்துக்காசுக்குக் குடிகள் குடியிருக்க விற்றுக் கொடுத்தனர். அந்தக் கொல்லைக்கு உப்புக்காசு, செந்நீர் அமஞ்சி, திருவெழுச்சிக் குடிமை முதலாகிய வரிகள் நீக்கப்பட்டன (205 of 1902; S. I. 1. Vol VII No 832).
திருபுவனி என்ற புதுச் சேரிக் கண்மையிலுள்ள ஊரில் விக்கிரம சோழனின் ஆறாம் ஆட்சியாண்டிற்குரிய கல்வெட்டொன்று உள்ளது. அரசனுடைய நன்மையின் பொருட்டு அருளாகர ஈசுவர முடையாரை ஐந்தாவது ஆட்சியாண்டில் அரும்பாக்கிழான் எழுந்தருளுவித்தான். அக்கோயில் கட்டவும் திருமுற்றம் பூந்தோட்டம் ஆகியவை அமைக்கவும் திருபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தார் இக்கோயிலுக்கு நிலம் கொடுத்தனர் (175 of 1919).
நரலோகவீரன் மண்டபம்
திருப்புகலூர்த் திருக்கோயிலில் உள்ள மண்டபங்களுள் ஒன்றிற்கு நரலோகவீரன் மண்டபம் என்று பெயரிருந்ததென்று ஒரு கல்வெட்டு (97 of 1927-28) அறிவிக்கிறது. அம்மண்டபத்தில் ஊர்ச்சபை கூடிற்று. எனவே இப்பெருவீரர் பெயரால் ஒரு மண்டபம் விக்கிரம சோழனது ஆட்சியின் தொடக்கத்திலேயே கட்டப்பெற்றது என அறியலாம்.
நரலோகவீரநல்லூர்
திருநெல்வேலி மாவட்டத்தில் மருவாய்க் குரிச்சி என்ற ஊர் நரலோகவீரகல்லூர் என்ற பெயரால் அழைக்கப்பெற்றது என்று நாங்குனேரியிலுள்ள சுந்தர பாண்டியனுடைய கல்லெழுத்தொன்று (265 of 1927-28) கூறுகிறது. நரலோக வீரன் தென்னாட்டுக்குப் படையெடுத்துச் சென்று வென்றபொழுது அவ்வூர்க்குத் தன் பெயரமைத்தனன் என்று அறியலாம்.
இவன் மகன்
சூரைகாயகன் மாதவராயன் என்பவன் இம்மணவிற் கூத்தனுக்கு மகன் என்று தெரிய வருகிறது. திருப்பாசூரிலுள்ள கல்வெட்டொன்று (128 of 1930) இம்மாதவராயன் செய்த சிவத்தொண்டினைக் குறிப்பிடுகிறது. இவன் திருப்பாசூர்க் கோயிலுக்குப் பல அணிகலன்களை அளித்தனன்; அவற்றுள் ஒன்று பொன்னால் செய்த மகர தோரணமாகும்; அதன் முடியில் இரத்தினம்பதித்த குடை கவிக்கப்பட்டிருந்தது; அன்றியும் பொன்னாலாகிய முப்புரி நூலும், பலநூறு மணியும் இரத்தினங்களும் பதித்த, பொற்றகடும் மாதவராயன் அளித்தான்;[6] சில பசுக்களை அளித்து நான்கு விளக்குகளை எரியச் செய்தான். இவன் விக்கிரம சோழனது ஆட்சியில் இருந்தவன். இவனும் இவன் தந்தையைப் போல் சிவபக்தியில் சிறந்து விளங்கியவன் என்பது அறியத்தகும்.
முடிப்புரை
முதற்குலோத்துங்கனும், விக்கிரம சோழனும் பல சிவப்பணிகளை ஆற்றியுள்ளனர். விக்கிரமசோழனது தில்லைத்திருப்பணிகளைத் திருமழபாடிச் சாசனம்[7] விளக்கமாகக் கூறுகிறது. மன்னன் எவ்வழியோ அவ்வழியில் மன்னுயிர் மன்னும் ஆகையால் பேரரசர் போலவே அவர்களது உயர்தர அலுவலர்களும் சிவபக்தியிற் சிறந்து விளங்கினர் ; சிவப்பணிகள் ஒல்லும்வா யெல்லாம் செய்தார்கள். இற்றை ஞான்று சைவர்கள் ஆகிய நாம் புதிய பணிகளைச் செய்ய வேண்டியதில்லை; முன்னேர் செய்த சிவப்பணிகளை அழிவுறாவண்ணம் காத்தலும், பழுதுற்றவற்றைப் புகுக்குதலும் நாம் செய்ய வேண்டுவனவாம். இந்நெறியில் நின்று தில்லைத் திருமதில் போன்றவற்றைப் புதுக்கும் முயற்சியில் ஒவ்வொருவரும் உதவினால் நரலோகவீரன் போன்றவர்களை நினைவு கூர்ந்து போற்றியவ ராவோம்.