சோழர் வரலாறு/இரண்டாம் இராசராசன்

4. இரண்டாம் இராசராசன்
(கி.பி. 1146 - 1173)

அரசியல் : இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சி கி.பி.1150-இல் முடிவுற்றது. ஆயினும், அவன் தன் மகனான இரண்டாம் இராசராசனைக் கி.பி.1146-ஆம் ஆண்டிலேயே அரசனாக்கித் தன்னுடன் கொண்டு நாட்டை ஆண்டு வந்தான் என்பது முன்பே கூறப்பட்டது. ஆதலின், இராசராசன் ஆட்சி கி.பி. 1146-லிருந்தே கணக்கிடப்பட்டது. இவனுடைய கல்வெட்டுகளில் போரைப் பற்றிய குறிப்பே இல்லை. ஆதலின், இவனது ஆட்சி இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சியைப் போல அமைதி நிலவிய ஆட்சியாகும் என்பது தெரிகிறது. இவனுடைய கல்வெட்டுகளில் பெரும்பாலன ‘பூ மருவிய திருமாதும்’ என்ற தொடக்கத்தைக் கொண்டவை. அவற்றில் அவனது அரசியல் நேர்மையாக நடந்தது என்பதே குறிக்கப்பட்டுள்ளது.

இவனது பெருநாட்டின் பரப்பென்னை? இவனது 7-ஆம் ஆட்சியாண்டில் குவலால நாட்டில் (கோலார் கோட்டம்) காடுவெட்டி என்ற சிற்றரசன் மலை மீது ஒரு கோவில் கட்டினான்[1]. நிகரிலி சோழமண்டலம் எனப்பட்ட கங்கநாட்டில் தகடுர்நாட்டைச் சேர்ந்த ‘பெரும்பேர்’ என்ற இடத்தில் தானம் செய்த கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. அதனைச் செய்தவன் ‘தகடுர் கிழவன்’ என்பவன். அது கி.பி.164-இல் செய்யப்பட்டது[2]. இதனால் கொங்கு நாடும், கங்கபாடியின் ஒரு பகுதியும் இராசராசன் பெருநாட்டின் பகுதிகள் என்பதே அறியக் கிடக்கிறது. வேங்கி நாட்டில் இராசராசன் காலத்துக் கல்வெட்டுகள் பல கிண்டத்துள்ளன. அவை திராக்ஷாராமம் வரை பரவிக் கிடக்கின்றன.[3] இக்குறிப்பால் வேங்கிநாட்டிலும் சோழ அரசு பரவி இருந்தமை நன்குணரலாம். சுருங்கக் கூறின், விக்கிரம சோழன் காலத்துப் பெருநாடு அப்படியே இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் இரண்டாம் இராசராசன் காலத்திலும் நிலைத்திருந்தது எனக் கூறலாம்.

அரசு நிலை : முதற் குலோத்துங்கன் ஆட்சிக்குப் பிறகு சோழ நாட்டு நடு அரசியல் அமைப்பு வலியற்று விட்டது. சிற்றரசர் பலராயினர். அவரவர் பேரரசிற்கு ஒருவாறு அடங்கினாற்போலக் காட்டிக் கொண்டனரேனும், தமது நாட்டளவில் முற்றும் சுயேச்சையே கையாண்டனர். அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை நிலவவும் போரிடவும் தொடங்கினர். நடு அரசியல் இவற்றைத் தடை செய்ய முடியவில்லை. பேரரசன் படைவன்மை மேலைச் சாளுக்கியர் படையெடுப்பையும் ஹொய்சளர் படை யெடுப்பையும் பாண்டிய சேரநாட்டுக் குழப்பங்களையும் தடுப்பதிலேயே ஈடுபட வேண்டியதாயிற்று. வெளிநாடு களின் படையெடுப்புகட்குச் சிறப்புக் கவனம் செலுத்த நேர்ந்ததால், பெரு நாட்டுச்சிற்றரசர் நிலையைக் கவனித்து அவ்வப்போது ஒழுங்குபடுத்தப் போதிய சமயம் வாய்த்திலது.பேரரசனது இத்துன்பநிலையை நன்குணர்ந்த சிற்றரசர் தத்தம் படை வலிமையைப் பெருக்கிக் கொண்டே வந்தனர். ஆனால் பெருநாட்டில் இருந்த சிற்றூர் அவைகளும் நகர அவைகளும் தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்துவந்தன. எனினும், முதல் இராசராசன் ஏற்படுத்திய வலிமையுற்ற நடு அரசாங்க அமைப்புத் தளர்ச்சியுற்று விட்டதென்பதில் ஐயமில்லை.

சிற்றரசர் : இரண்டாம் இராசராசன் காலத்துச்சிற்றரசர் யாவர்? 1. ‘மலாடு 2000’ என்பதை ஆண்டவன், திருக்கோவ லூரில் பெருமாள் கோவிலைக் கட்டிய நரசிம்மவர்மன் என்பானுக்குப் பெயரன் ஆவன்[4]. 2. அதே மலை நாட்டின் ஒரு பகுதியை ‘மலையமான்கள்’ ஆண்டுவந்தனர். அவருள் ‘மலையமான் பெரிய உடையான்’ ஒருவன், ‘அத்திமல்லன் சொக்கப் பெருமான்’ ஒருவன்; இவன் கிளியூரை ஆண்டவன்[5] 3. கூடலூரை ஆண்ட ‘காடவராயர்’ மரபினன் ஒருவன். அவன் ‘கூடலூர் ஆளப் பிறந்தான் மோகன்’ என்பவன். அவனுக்கு ‘இராசராசக் காடவராயன்’ என்ற பெயரும் உண்டு.[6] 4. சோழ நாட்டில் காரிகைகுளத்துரை ஆண்ட பல்லவராயன் ஒருவன். அவன் பல்லவராயன்பேட்டையில் இராசராசேசுவரம் உடையார் கோவில் ஒன்றைக் கட்டினான். அவனே இராசராசன் இறுதிக் காலத்திலும் இராசராசன் இறந்த பிறகும் சோணாட்டை நிலைகுலையாமற் காத்த பெருவீரன்[7]. 5.நித்தவிநோத சாம்புவராயன் என்பவன் ‘செங்கேணித்[8] தலைவருள் ஒருவன், இவன் மனைவி சீருடையாள் என்பவள். முன்னூர், அச்சரப்பாக்கம் கோவில்களில் திருப்பணி செய்த ‘இராச நாராயண சாம்புவராயன்’ ஒருவன். இவன் ‘அம்மையப்பன் சீயன் பல்லவாண்டான்’ என்றும் வழங்கப்பட்டான்[9]. இச் செங்கேணித் தலைவர்க்கும் காடவராயர்க்கும் நெருங்கிய உறவுண்டு. 6.புதுக்கோட்டைச் சீமையில் குலோத்துங்க சோழக் கடம்பராயன் என்பவன் ஒருவன்[10]. 7. சேந்தன் கூத்தாடுவான்’ என்ற இராசராச வங்கார முத்தரையன் என்பவன் பாடிகாவல் தலைவன் இவன் தென் ஆர்க்காடு கோட்டத்தில் ‘திட்டகுடி’யில் இருந்தவன்.[11] 8. தெலுங்கு நாட்டுச் சிற்றரசருள் கரிகாலன் மரபினர் எனக் கூறிக்கொண்ட ‘திரிபுவன மல்ல தேவன் சோழ மகாராசன் ஒருவன்; ஜிக்கிதேவ சோழ மகாராசன் மற்றொருவன். இவரன்றிக் கோணராசேந்திர லோகராசன், கொண்ட பருமட்டி புத்தராசன், குலோத்துங்க இராசேந்திரன் சோடையன், கொட்டாரி எர்ரம நாயகன் சனகவர்மன்’ முதலியோர் நெல்லூர் முதல் வேங்கிவரை பரவி இருந்த சிற்றரசர் ஆவர்.

அரசன் விருதுப் பெயர்கள்: இவன், இராசராசன் உலாவில் கண்டன், வீரதயன், விரோதயன் என்ற பெயர்களை உடையவனாகக் காணப்படுகிறான். உலாவிலும் கல்வெட்டுகளிலும் இவன் ‘சோழேந்திர சிம்மம்’ என்பதைச் சிறப்பாகப் பெற்றவன். இவன், கல்வெட்டுகளில் ‘இராச கம்பீரன், எதிரிலி சோழன், நெறியுடைச் சோழன்’ என்ற விருதுகளையும் பெற்றுள்ளான்.

அரச குடும்பம் : இராசராசனது பட்டத்தரசி அவனிமுழுதுடையாள் என்பவள். மற்ற மனைவியர் ‘புவன முழுதுடையாள், தரணி முழுதுடையாள் என்பவர்[12]. இரண்டாம் இராசரர்சனுக்கு மகப்பேறு இல்லை என்பர். இளவரசன் : இராசராசற்கு மகப்பேறு இன்மையால், தன் பாட்டனான விக்கிரம சோழனது மகன் வயிற்றுப் பெயரனான (இரண்டாம்) இராசாதிராசன் என்பானை இளவரசனாக ஏற்றுக் கொண்டான். இளவரசனது ஆட்சி ஆண்டு கி.பி.1153-இல் தொடக்கமானதைக் கல்வெட்டு உணர்த்துகிறது[13]. எனவே, இராசாதிராசன் பத்தாண்டு வரை இராசராசனுடன் இருந்து அரசியல் முறையை நன்கறிந்தான் என்னலாம். கி.பி.1153-க்குப் பிறகு இராசராசன் இறப்பதற்குள் பாண்டிய நாட்டில் பெருங்குழப்பம் பாண்டிய சிற்றரசர்க்குள் உண்டானது. ஒரு பாண்டியற்கு ஈழத்தரசன் உதவி செய்தான். மற்றொருவருக்கு சோழர் உதவி புரிந்தான். இப்போராட்டச் செய்திகளைப் பற்றிய விவரம் இராசாதிராசன் ஆட்சியில் விளக்கப்படும்.


  1. 486 of 1911
  2. 18 of 1900, 267, of 1901
  3. 216 of 1893
  4. 119 of 1909
  5. 163 of 1906, 411 of 1900
  6. 166 of 1906
  7. 434,435 of 1924
  8. 168 of 1918, 52 of 1919, 244 of 1901
  9. 168 of 1918, 52 of 1919, 244 of 1901
  10. 355 of 1904
  11. 16 of 1903
  12. 16 of 1903, 369 of 1911; Vide 219 of 1901, 538 of 1 104 உலகுடை ‘முக்கோக் கிழான்’ என்பது பட்டத்தரசியைக் குறிப்ப தென்பர்.
  13. Ep. Ind. Vol. 9, p.211