சோழர் வரலாறு/கி.மு. இரண்டாம் நூற்றாண்டுச் சோழன்
6. கி.மு. இரண்டாம் நூற்றாண்டுச் சோழர்
1. மகனை முறை செய்த மன்னவன்
வரலாறு
இவன் திருவாரூரில் இருந்து சோணாட்டை ஆண்டு வந்தவன். இவன் சிறந்த சிவபக்தன். இவனுக்கு வீதிவிடங்கன் என்ற பெயர்கொண்ட ஒப்பற்ற மைந்தன் ஒருவனே இருந்தான். அவன் ஒரு நாள் கோவிலுக்குத் தேரூர்ந்து சென்ற பொழுது பசுங்கன்று ஒன்று திடீரெனப் பாய்ந்தோடித் தேர்க்காலில் அகப்பட்டு இறந்தது. இதனை அறிந்த தாய்ப்பசு ஆராய்ச்சி மணியைத் தன் கொம்புகளால் அசைத்து அரசர்க்குத் தன் குறையை அறிவித்தது. நிகழ்ந்ததை அறிந்த சோழ மன்னன், தன் மைந்தனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தித் தான் தேரூர்ந்து சென்றான். பிறகு இறைவன் அருளால் கன்றும் மைந்தனும் பிழைத்ததாகப் பெரிய புராணம் புகல்கிறது.[1]
இலங்கை வரலாறு
இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் பின்வரும் சுவைதரத்தக்க செய்தியைச் செப்புகிறது:-
“கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் உயர்குடிப் பிறந்த சோணாட்டான் ஒருவன் ஈழத்திற்கு வந்தான். அப்பொழுது இலங்கை அரசனாக இருந்தவன் ‘அசேலன்’ என்பவன். வந்த சோணாட்டான் படையொடு வந்தான் ஆதலின் எளிதில் ஈழத்தரசனை வென்று, 45 ஆண்டுகள் ஈழ நாட்டை ஆண்டான்: அவன் பெயர் ஏழாரன்'[2] என்பது. அவ்வரசன் பகைவர்க்கும் நண்பர்க்கும் ஒரு படித்தாகவே நீதி வழங்கினான். தன் மகன் தேர் ஊர்ந்து சென்று அறியாது பசுங்கன்றைக் கொன்றதாக அத்தனி மகனைக் கிடத்தி, அவன்மீது தானே தேர் ஊர்ந்து கொன்ற உத்தமன். அப்பேரரசன் பெளத்த சமயத்தினன் அல்லன்; ஆயினும், பெளத்தத் துறவிகளிடம் பேரன்பு காட்டி வந்தான். அவனது அரசாட்சி குடிகட்கு உகந்ததாகவே இருந்தது. அவன் ஆண்ட பகுதி இலங்கையின் வடபகுதியே ஆகும். பின்னர் இலங்கை அரசனான துத்தகாமனி என்பவன் ஏழாரனைப் - போரில் வென்று தமிழ் அரசைத் தொலைத்தான்; ஏழாரனைத் துரத்திச் சென்று அநுராதபுரத்தில் எதிர்த்தான். அங்கு நடந்த போரில் ஏழாரன் இறந்தான். தமிழர் சமயக் கொள்கைகள் இலங்கையிற் பரவாமலிருக்கவும் தூய பெளத்தமதத்தைக் காக்கவுமே துத்தகாமனி ஏழாரனை எதிர்த்து வெற்றி பெற்றான். இங்ஙனம் வெற்றி பெற்ற இலங்கை இறைவன் ஏழாரனுக்குரிய இறுதிக் கடன்களைச் செய்து முடித்தான்; அவன் இறந்த இடத்தில் நினைவுக்குறி எழுப்பி, வழிபாடு நடைபெறச் செய்தான். பின்வந்த ஈழத்தரசரும் அந்த இடத்தை அடைந்த பொழுதெல்லாம் இசை ஒலியை நிறுத்தி அமைதியாக வழிபட்டுச் செல்லல் மரபாகும்.[3]
சோழன் பெயர் யாது?
செயற்கரிய இச்செயலைச் செய்த சோழன் பெயரை, இச்செயலைப் பாராட்டிக் கூறும் சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆகிய பழைய நூல்கள் கூறாது விட்டன. கி.பி. 11, 12 - ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார் ஆகிய புலவர்கள் இவனை ‘மநு’ நீதிச் சோழன் என்றே கூறிப் போந்தனர். ‘மநு’ மநுநீதி, மநுநூல் என்னும் பெயர்கள் சங்க நூல்களிற் காணுமாறில்லை. பிற்காலத்து நிகண்டுகளிற்றாம் இப்பெயர்கள் காணப்படுகின்றன. செவ்விய கோலோச்சிய நம் சோழன் ‘மனு நீதிச் சோழன், ‘மனு’ என இவனது செயல் நோக்கிப் பிற்காலத்தார் இட்ட பெயரையே சயங்கொண்டார் முதலிய புலவர் வழங்கினராதல் வேண்டும்.[4] இச்சோழனை, ‘அரும் பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்’[4] எனச் சிலப்பதிகாரமும், ‘மகனை முறைசெய்த மன்னவன்’ என மணிமேகலையும் குறிக்கின்றனவே அன்றிப் பெயரால் குறிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது. இவற்றால் இவ்வரசன் பெயர் இன்னது என்பது சிலப்பதிகார காலத்திலும் தெரியவில்லை என்பது தெரிகிறதன்றோ? மேலும், சங்க நூல்களைக் கொண்டு இவனைப் பற்றிய வேறு செய்திகள் அறியக் கூடவில்லை.
வரலாற்று ஒப்புமை
சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் சோழன் மகனை முறை செய்த ஒன்றையே குறிக்கின்றன. ஆயின், பெரிய புராணம் ஒன்றே இவனுடைய சிவப்பற்று முதலிய நல்லியல்புகளை விரிவாகக் குறிக்கின்றது. இவ்வியல்புகளனைத்தும் மகாவம்சம் குறிக்கும் தமிழ் அரசனிடம் காண்கின்றன. பெயர் ஒன்றே வேறுபடுகிறது. ‘ஏழரசன்’ என்பது சிறப்புப் பெயராக இருக்கலாம், அல்லது கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் சயங்கொண்டார், கூத்தர், சேக்கிழார் ஆகியோரைப் போலப் பெயரைத் தவறாகவும் குறித்திருத்தல் கூடியதே. ஆதலின், பெயர் கொண்டு மயங்க வேண்டுவதில்லை. மகனை முறை செய்த நிகழ்ச்சி எங்கு நடந்ததென்று சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறவில்லை. சேக்கிழார் ஒருவரே அச்செயல் திருவாரூரில் நடந்ததாகக் கூறியுள்ளார்.[5] மகனை முறை செய்த நிகழ்ச்சியைக் குறிக்கும் கல் தேர் திருவாரூரில் கோவிலுக்கு அண்மையில் இருக்கின்றது. இச்சோழன், மகனை முறை செய்த பிறகு, இலங்கையைக் கைப்பற்றி முறை வழுவாது ஆண்டிருக்கலாம்.
இலங்கைப் படையெடுப்பு நடந்திருக்குமா?
‘கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழ் அரசன் ஒருவன் இலங்கையை வென்று 45 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்று இலங்கை வரலாறே கூறுதல் மெய்யாகத்தானே இருத்தல் வேண்டும்? ஆயின், அப்பழங்காலத்தில், கடல்சூழ் இலங்கையைக் கைப்பற்றத் தக்க கப்பற் படை சோழரிடம் இருந்ததா? அதற்குச் சான்றுண்டா?
கி.மு. 6 அல்லது 7-ஆம் நூற்றாண்டு முதலே சோழர் முதலிய தமிழரசர் மேனாடுகளுடன் கடல் வாணிகம் நடத்தினர் என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மையாகும். மேனாடுகளுடன் கடல் வாணிகம் நடத்திக் கொண்டிருந்த நாட்டாரிடம் கடற்படை இருந்தே தீர வேண்டும் என்பது கூறாதே அமையும். இன்றுள்ள ஆங்கிலேயர், ஜப்பானியர், அமெரிக்கர் முதலியோர் கடல் வாணிகத்திற்காகவன்றோ, கப்பற்படை வைத்துள்ளனர். இஃதன்றி, அப்பழங் காலத்தே கடல் கடந்து நாடு பிடித்தல் வேண்டும் என்ற வேட்கையும் சோழ மன்னரிடம் இருந்தது. நாம் முதற் கரிகாலன் காலம் ஏறத்தாழக் கி.மு. 120 முதல் கி.மு. 90 எனக் கொண்டோம் அன்றோ? அம்முதற் கரிகாலனைப் பாடவந்த வெண்ணிக் குயத்தியார் என்ற பெண்பாற் புலவர்,
“நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிப் போர் செய்வதற்குக் காற்றின்றி நாவாய் ஒடவில்லை. அதனால் காற்றுக் கடவுளை அழைத்து ஏவல் கொண்ட (காற்று வீசச் செய்து மரக்கலம் செலுத்திச் சென்று வெல்ல விரும்பிய நாட்டை வென்ற) வலிய அரசன் மரபில் வந்தவனே!” என்று ஒரு செய்யுளிற் பாடியுள்ளார். இதனால் ஏறத்தாழக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றுப் பகுதியில் இருந்த முதற் கரிகாலனுக்கு முற்பட்ட சோழ மன்னருள் ஒருவன் (பாட்டனாக அல்லது முற்பாட்டனாக இருக்கலாம்) கடல் கடந்து நாடு வென்றமை[6] அறியப்படுகிறது.
அந்நாடு எது?
சிறப்பாகத் தமிழகத்தை அடுத்து இருப்பது இலங்கைத் தீவேயாகும். பிற நெடுந்தொலைவில் இருப்பன. அவை கி.பி. 11-ஆம் நூற்றாண்டினனான இராஜேந்திர சோழனால் வெல்லப்பட்டவை; அதற்குமுன் எத்தமிழரசரும் சென்று வென்றதாக வரலாறு பெறாதவை. கி.மு.2-ஆம் நூற்றாண்டு முதல் பன்முறை வெல்லப் பெற்றும் ஆளப்பெற்றும் வந்தது இலங்கை ஒன்றே என்பது வரலாறு அறிந்த உண்மை. ஆதலின் புதிய சான்றுகள் கிடைக்கும் வரை, மேலே குறிப்பிடப்பெற்ற படையெடுப்பு இலங்கை மேற்றே எனக் கோடலில் தவறில்லை. அங்கனமாயின், அதன் காலம் யாது?[குறிப்பு 1]
‘சோழர் இலங்கைமீது படையெடுத்த முதற்காலமே கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி’ என்று மகாவம்சமே கூறலால், அதுவே, மேற்குறித்த படையெடுப்பு நிகழ்ந்த காலம் எனக் கோடல் பொருத்தமாகும், அஃதாயின், ஏறத்தாழக் கி.மு. 160-கி.மு. 140 எனக் கூறலாம். அக்காலம் முதற் கரிகாலனுடைய தந்தை அல்லது பாட்டன் இருந்த காலமாகும்.[குறிப்பு 2] இது மேலும் ஆராய்தற்குரியது.
2. முதற் கரிகாலன்
(கி.மு. 120 - கி.மு. 90)
சென்னி - கிள்ளி மரபினர்
முதற் கரிகாலன் ‘சென்னி’ மரபைச் சேர்ந்தவன்,[7] சென்னி மரபினர் அழுந்துரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவர். "கிள்ளி" மரபினர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோணாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டனர்.
கோநகரங்கள்
முதற்கரிகாலன் அழுந்துரைத் தலைநகராகக் கொண்டிருந்தான், பிறகு குடவாயிலையும் தன் கோநகரமாகக் கொண்டான்.
போர்கள்
இக்கரிகாலன் பதினோரு வேளிரையும் அவருடன் வந்து மலைந்த வேந்தரையும் (சேர பாண்டியர்?) வெண்ணி வாயில் என்ற இடத்திற் பொருது வென்றான்.[8] இச்சோழன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் வாகைப் பறந்தலை என்ற இடத்தில் அரசர் ஒன்பதின்மரைப் போரில் புறங்காட்டி ஒடச் செய்தான்.[9] இவனுடைய தானைத் தலைவன் திதியன் என்பவன். அவனிடம் பண்பட்ட போர்த் தொழிலில் வல்ல கோசர் என்னும் வடநாட்டு வீரர் இருந்து வந்தனர். அவர்கள் எக்காரணம் பற்றியோ ‘அன்னிதிமிலி’ என்ற பெண்ணின் தந்தையினுடைய கண்களைப் பறித்து விட்டனர். அவள் துயரம் மிகுந்தவளாய்த் திதியனிடம் சென்று முறையிட்டாள். அங்கனம் அவள் முறையிட்ட இடம் அழுந்துாராகும்.[10] இக்கரிகாலன் யாது காரணம் பற்றியோ, சேர அரசனான பெருஞ்சேரலாதன் என்பானுடன் வெண்ணிப்பறந்தலை யிற் போர் செய்தான். போரில் கரிகாலன் விட்ட அம்பு சேரலாதனது மார்பைத் துளைத்து ஊடுருவி முதுகினின்றும் வெளிப்பட்டது. அம்முதுகிற் பட்ட புண்ணைப் புறம் புண்ணாகும் என்று நாணிச் சேரன் தன் கையிற் பிடித்த வாளுடன் வடக்கிருந்து. பட்டினி கிடந்து உயிர் விட்டனன். இதனால், அற்றை நாளில் முதுகிற் புண்படல் தோல்வியாகக் கருதப் பட்டதென்பதை அறிலாம். வடக்கிருந்த பெருஞ்சேரலாதனைக் கழாத் தலையார்[குறிப்பு 3] என்ற புலவர் பாடித் தம் துயரத்தை அழகுற விளக்கியுள்ளார்.[11] வென்ற முதற் கரிகாலனை வெண்ணிக் குயத்தியார்[குறிப்பு 4] என்னும் நல்லிசைப் புலமை மெல்லியலார் பாராட்டிப் பாடியுள்ளார்.[12]
“நீர் நிறைந்த பெருங்கடலில் மரக்கலத்தை ஒட்டிப் போர் செய்வதற்குக் காற்றின்றி நாவாய் ஒடவில்லை. அதனால் வளிச்செல்வனை (காற்றுக் கடவுளை) அழைத்து ஏவல் கொண்டு (காற்று வீசச் செய்து) மரக்கலம் செலுத்திக் குறித்த நாட்டை வென்ற வலிய அரசன் (இவன் யாவன் என்பது தெரியவில்லை) மரபில் வந்தவனே, மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவனே மேற்சென்று போரை எதிர் நின்று கொன்ற நினது வலிதோற்ற வென்றவனே, தழைத்தலைக் கொண்ட புது வருவாயையுடைய ‘வெண்ணி’ என்னும் ஊர்புறத்துப் போர்க்களத்தின் கண் மிக்க புகழை உலகத்துப் பொருந்திப் புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்த பெருஞ் சேரலாதன் அவ்வாறு இருத்தலால் நின்னினும் நல்லன் அல்லன்.”
- ↑ இஃது இப்படியே கல்வெட்டிலும் காணப்படுகிறது;- Vide. I.I. Vol 5, No.436.
- ↑ ஏழாரன் ஏழ் + ஆரன் ஏழுமாலைகளை அணிந்தவன் எனப்பொருள் படலாம், ‘மும்முடிச் சோழன்’ என்றாற்போல் ஏழு அரசரை வென்றமைக்கு அடையாளமாக ஏழு மாலைகளை அணிந்தனனோ? அல்லது வள்ளுவர் வரலாற்றில் இணைப்புண்ட ‘ஏலேலன்’ என்ற பெயர் இங்ங்னம் பாலி மொழியில் திரிபுண்டதோ?
- ↑ 1. Geiger's Mahavamsa, Chap. 21-25.
- ↑ 4.0 4.1 N.M.V. Nattar’s ‘Cholas’, pp.14-15.
- ↑ விக்ரம சோழன் காலத்துக் கல்வெட்டும் கூறுகிறது S.I.I. Vol. No.436.
- ↑ புறம் 66.
- ↑ அகம். 246
- ↑ அகம்
- ↑ அகம் 125
- ↑ அகம் 196
- ↑ புறம் 65
- ↑ புறம் 66.
- ↑ இந்த இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரவேலன் என்ற கலிங்க அரசன், தனக்கு முன் 113 ஆண்டுகளாக இருந்த தமிழரசரது கூட்டு எதிர்ப்புத் திட்டத்தைச் சிதற வடித்ததாகக் கூறிக் கொள்கிறான். ஆயின் அவன் காலச் சோழன் இன்னவன் என்று கூறக் கூடவில்லை.
- ↑ முதற் கரிகாலனது உத்தேச காலம் கி.மு. 120- கி.மு. 90 எனக் கொள்ளின், அவன் தந்தையின் காலம் கி.மு. 150 - கி.மு. 120 ஆகும்; பாட்டன் ஆட்சி கி.மு. 180-150 ஆகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடையில் படையெடுப்பு நிகழ்ந்தது’ என மகாவம்சம் கூறலால், அந்த இடைப்பட்ட காலம் கி.மு. 160 கி.மு. 140 எனக்கோடல் பொருத்தமாகும். அஃதாயின், தந்தையைவிடப்பாட்டனே படையெடுத்தவன் எனக் கோடல் நல்லது. என்னை? ‘தந்தை’ எனின், இவ்வளவு அண்மையில் இருந்தவனைப் புலவர் தெளிவாகக் குறித்திருப்பார் ஆதலின் என்க.
- ↑ கழாத்தலை - ஒர் ஊர்
- ↑ வெண்ணி - கோவில்வெண்ணி என்ற ஊர்; அவ்வூரில் இருந்த வேட்கோவர் மரபில் வந்த புலமை மிக்க அம்மையார் இவர்.