சோழர் வரலாறு/நெடுமுடிக் கிள்ளி

12. நெடுமுடிக்கிள்ளி
(கி.பி.150-200)

பட்டம் பெற்றமை: சிலப்பதிகார காலத்தில் வாழ்ந்தவன் செங்குட்டுவன் எனவும் அவன் காலம் கி.பி.150-200 எனவும் முன் சொன்னது நினைவிருக்கும் அல்லவா? அக்காலத்தில், அவனால் ஆக்கம் பெற்றவனே இந் நெடுமுடிக்கிள்ளி என்பவன்.இவனுடைய தகப்பனும் செங்குட்டுவன் தாயான நற்சோணை என்பவளும் உடன் பிறந்தவராவர். ஆதலின், இவன் செங்குட்டுவற்கு 'மைத்துனச் சோழன்’ எனப்பட்டான். இவன் தந்தையான சோழ மன்னன் இறந்தவுடன் பங்காளிகள் ஒன்பதின்மர் இவனுடன் போரிட்டனர். அதனை உணர்ந்த செங்குட்டுவன் அவர்கள் அனைவரையும் நேரிவாயில் என்ற இடத்தில் வென்று, தன் மைத்துனச் சோழ வேந்தன் ஆக்கினன்.[1]

பல பெயர்கள்: இச்சோழன் வெண்வேற் கிள்ளி, மாலண் கிள்ளி, வடிவேற்கிள்ளி, கழற்கிள்ளி, கிள்ளி எனப் பலவாறு மணிமேகலையிற் குறிக்கப்பட்டுள்ளான்.

மனைவியும் மகனும் தம்பியும்: இவன் பாண மரபிற் பிறந்த அரச மகளை மணந்தவன், அவள் பெயர் சீர்த்தி என்பது. பாணர் என்பவர் “மாவலி” மரபினராவர். அவர் வட ஆர்க்காடு கோட்டத்தை ஆண்ட சிற்றரசர். இம்மரபினர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளனர். சீர்த்திக்கு ஒரே மகன் பிறந்து வளர்ந்தான். அவனே உதயகுமரன் என்பவன். நெடுமுடிக் கிள்ளியின் தம்பி இளங்கிள்ளி என்பவன். இவன் சோழப் பேரரசின் வட பகுதியாகிய தொண்டை மண்டலத்தைக் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தான். காரியாற்றுப் போர்: நெடுமுடிக்கிள்ளி பட்டம் பெற்ற சில ஆண்டுகட்குள் பாண்டியன் ஒருவனும் சேரனும் வஞ்சியிலிருந்து படையுடன் புறப்பட்டுச் சென்று சோணாட்டின் வடமேற்குப் பகுதியாகிய காரியாறு என்ற இடத்திற்சோழனைத் தாக்கினார். அந்த இடம் தொண்டை நாட்டது. ஆதலின், இளங்கிள்ளி தன்படையுடன் சென்று கடும்போர் செய்து பகைவரை வென்றான்; பகைவர் குடைகள் முதலியவற்றைக் கைப்பற்றி மீண்டான்.[2]

‘காரியாறு’ எது? : திருவள்ளூரிலிருந்து காளத்திக்குப் போகும் பாதையில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் பாடல் பெற்ற சிவன் கோவில் ஒன்று உண்டு. அஃது உள்ள இடம் ‘இராமகிரி’ எனப்படும். அந்த இடத்தில் உள்ள சிவபெருமான் ‘காரிக்கரை உடைய நாயனார்’ என்று அங்குள்ள கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டுள்ளார். அக்கோவில் அருகில் நகரி மலையைச் சுற்றிக் காளிங்கியாறு ஒடுகின்றது. அஃது இரண்டு சிற்றாறுகளால் ஆனது: ஒன்று காளிங்கி எனவும், மற்றொன்று காலேறு எனவும் பெயர் பெற்றவை. கால்-கருமை, ஏறு-ஆறு, காரியாறு. எனவே, ‘காலேறு’ என்று தெலுங்கில் கூறப்படுகின்ற யாறே, அப்பர் காலத்திலும் அதற்கு முன்னரும் ‘காரியாறு’ எனத் தமிழ்ப் பெயர் பெற்றதாதல் வேண்டும்.”[3]

அந்த இடத்தின் நிலைமை: சங்க காலத்தில் நெல்லூர் வரை சோழநாடு விரிந்து இருந்தது. வேங்கடத்தைச் சேர்ந்த நிலப்பகுதியைத் திரையன் என்பவன் ஆண்டுவந்தான். அவனது தலைநகரம் பாவித்திரி என்பது. அதுவே இக்காலத்துக் கூடூர்த் தாலுகாவில் உள்ள ‘ரெட்டி பாளையம்’ என்பது. ‘கடல் கொண்ட காகந்தி நாட்டுப் பாவித்திரி’ என்று அங்குள்ள கல்வெட்டுகள் குறிக்கின்றன. எனவே, பண்டைக்காலத்தில் தொண்டை மண்டலம் அதுவரை பரவி இருந்ததென்றால் தவறாகாது. அந்தப்பகுதி முழுவதும் மலைப்பகுதியாக உள்ளதாலும் சாதவாகனரது தென்பகுதி அங்கு முடிவதாலும் எல்லைப்புறப் போர்கள் அங்கு நிகழ்ந்தனவாதல் வேண்டும். அப்போர்களால் அந்தப் பகுதி வன்மை குறைந்திருந்ததோ என்னவோ, தெரியவில்லை. அங்குக் சென்று சேர பாண்டியர் சோணாட்டு மண்ணாசையால் தாக்கினர் என்று மணிமேகலை கூறுகிறது.[4]

சேர - பாண்டியர் யாவர்? இங்ஙனம் போரிட்ட சேர பாண்டியர் யாவர்? செங்குட்டுவன் பேரரசனாக இருந்த போதிலும் அவனது சேர நாட்டில் ஞாதியர் பலர் பல பகுதிகளை ஆண்டு வந்தனர்; அங்ஙனமே பாண்டி நாட்டில் சிற்றரசர் சிலர் இருந்திருக்கலாம். இன்றேல், கண்ணகியால் கொல்லப்பட்ட பாண்டியற்குப் பின்வந்த பாண்டியனே இப்போரிற் கலந்தவனாகலாம்.

கிள்ளியும் மணிமேகலையும்: கோவலனுக்கும் மாதவிக் கும் பிறந்த மணிமேகலை பெளத்த மந்திர வலியால் வேற்றுருக் கொண்டு புகார் நகரத்து ஏழைகட்கு உணவு படைத்து வந்ததைக் கேள்வியுற்ற நெடுமுடிக்கிள்ளி அவளை அழைப்பித்து உபசரித்தான்; அவள் வேண்டுகோட்படி சிறைச்சாலையை அழித்துத் துய்மை செய்து அவ்விடத்தைப் பல வகையான நற்செயல்களும் நடத்தற்குரிய இடமாகச் செய்வித்தான்.[5]

மணிமேகலையும் உதயகுமரனும்: அரசனது தவப்புதல்வனான உதயகுமரன் மணிமேகலை மீது காதல் கொண்டு அவளைத் தன் வயப்படுத்தப் பலவாறு முயன்றான். அவள் இவனுக்கஞ்சிக் காயசண்டிகை என்பவளது உருவத்தைப் பூண்டு அன்னதானம் செய்து வந்தாள் தன்னிடம் வந்த உதயகுமரனை அறமொழிகளால் தெருட்டினாள். உண்மை உணராத - காய சண்டிகையின் கணவனாக வித்தியாதரன், தன் மனைவி உதயகுமரனை நேசிப்பதாகத் தவறாக எண்ணினான். ஒர் இரவு மணிமேகலையைத் தேடிவந்த உதயகுமரனை வாளால் வெட்டி வீழ்த்தினான்; பிறகு தன் குற்றத்தை உணர்ந்து வருந்தித் தன் நாடு மீண்டான்.[6]

அரசன் மாணவீரன்: தன் தனிப்புதல்வன் இறந்ததைக் கேட்ட அரசன் அதற்குச் சிறிதும் வருந்தாமல், "இளங்கோனுக்கு யான் செய்ய வேண்டிய தண்டனையை வித்தியாதரன் செய்துவிட்டான்.

மாதவன் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனில் இன்றால்;

‘தன் ஒரு மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற சோழன் மரபில் இங்ஙனம் ஒரு கொடியவன் தோன்றினன்’ என்ற செய்தி சேர, பாண்டியர்க்கு எட்டு முன்னரே அவனை ஈமத்தேற்றி விடுக; அக்கணிகை மகளையும் சிறை செய்க" என்று தன் தானைத் தலைவனான சோழிக ஏனாதிக்குக் கட்டளையிட்டான்.[7]

அரசியும் மணிமேகலையும்: நெடுமுடிக்கிள்ளியின் மனைவியான சீர்த்தி என்ற கோப்பெருந்தேவி மணிமேகலையைச் சிறை நீக்கித் தன்னிடம் வைத்துக் கொண்டு அவளுக்குப் பல துன்பங்களைச் செய்தாள். அவள் ஒவ்வொன்றிலும் கட்டுப்படாதிருத்தலைக் கண்டு வெருண்டு. தன் குற்றத்தைப் பொருத்தருளுமாறு வேண்டினாள்; பின் அறவண அடிகள் அறவுரை கேட்டு அரசமாதேவி மணிமேகலையை விட்டாள்.[8]

காஞ்சியில் மணிமேகலை: மணிமேகலை பல இடங்களிற் சுற்றிப் பெளத்த சமயத் தொண்டு செய்து வருகையில், காஞ்சிபுரத்தில் பசிக்கொடுமை தலைவிரித்தாடலைக் கேட்டு அங்குச் சென்றாள். அவளை இளங்கிள்ளி வரவேற்றான்; தான் கட்டியிருந்த புத்தர் கோவிலைக் காட்டினான்; அதற்குத் தென்மேற்கில் ஒரு சோலையில் புத்த பீடிகையை அமைத்து, பொய்கை எடுத்து, தீவதிலகையையும் மணிமேகலா தெய்வத்தையும் வழிபடற்குரிய கோவிலையும் அங்கு உண்டாக்கி, நாட்பூசை, திருவிழா முதலியன அரசனைக் கொண்டு நடைபெறுமாறு செய்வித்து, அறம் வளர்ப்பாள் ஆயினள்.[9]

அரசனும் பீலிவளையும்: ஒரு நாள் நெடுமுடிக்கிள்ளி பூம்புகார்க் கடற்கரையைச் சார்ந்த புன்னைமரக் சோலையில் பேரழகினளான மங்கை ஒருத்தியைக் கண்டு மயங்கினான்; அவளுடன் ஒரு திங்கள் அச்சோலை யிற்றானே உறைந்து இருந்தான். ஒரு நாள் அவள் திடீரென மறைந்து விட்டாள். அரசன் அவளைப் பல இடங்களிலும் தேடி அலைந்தான்; அவன் ஒருநாள் பெளத்த சாரணன் ஒருவனைக் கண்டு வணங்கி, “என் உயிர் போல்பவளாகிய ஒருத்தி இங்கே ஒளித்தனள், அவளை அடிகள் கண்டதுண்டோ?” என்று கேட்டான். அச்சாரணன், “அரச, அவளை யான் அறிவேன். அவள் நாக நாட்டு அரசனான வளைவணன் மகள் ஆவாள். அவள் பெயர் பீலிவளை என்பது. அவள் சாதகம் குறித்த கணி, ‘இவள் சூரியகுலத்து அரசன் ஒருவனைச் சேர்ந்து கருவுற்று வருவாள்’ என்று தந்தைக்குக் கூறினன். அவளே நீ கூறிய மடந்தை. இனி அவள் வாராள். அவள் பெறும் மகனே வருவான். இந்திர விழாச் செய்யாத நாளில் மணிமேகலா தெய்வத்தின் சொல்லால் உன் நகரத்தைக் கடல் கொள்ளும், இந்திரன் சாபமும் இருத்தலால் அது தப்பாது; ஆதலின், என் கூற்றை நம்பி, இந்நகரைக் கடல் கொள்ளாதபடி இந்திர விழாவை ஆண்டு தோறும் மவாது செய்து வருக” என்று கூறி அகன்றான்.[10]

புகார் அழிவு: புகார் நகரில் கம்பளச் செட்டி என்றொருவன் இருந்தான். அவன் நாகநாடு சென்றிருந்த பொழுது பீலிவளை, தான் பெற்ற மகனை அவனிடம் ஒப்புவித்தாள். அவன் அக்குழந்தையுடன் கப்பலில் வரும் பொழுது, கப்பல் தரை தட்டி உடைந்து விட்டது. வணிகன் உயிர் பிழைத்துப் பூம்புகாரை அடைந்தான். குழந்தை என்ன ஆயிற்று என்பது அவனுக்குத் தெரியாது. வந்த வணிகன் நடந்ததை அரசனுக்கு அறிவித்தான். சோழர் பெருமான் அது கேட்டு ஆற்றொனாத் துயர் அடைந்து, அக்குழந்தையைத் தேடி அலையலானான்; அவனது துன்ப நிலையில் இந்திர விழாவை மறந்தான். உடனே இந்திரன் - மணிமேகலா தெய்வம் இவர் தம் சாபங்களால் பூம்புகாரைக் கடல் கொண்டது[11] இந்த அழிவினால், மாதவி, அறவண அடிகள் முதலியோர் காஞ்சியை அடைந்தனர்.[12]

முடிவு: இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இந் நெடுமுடிக்கிள்ளியைப் பற்றி ஒன்றும் தெரிந்திலது. இவனுக்குப் பிள்ளைப் பேறு இன்மையால், இவனுக்குப் பின் சோழ அரசன் ஆனவன் இன்னவன் என்பது தெரியவில்லை.

கடல் வாணிகம்: மணிமேகலை, சிலப்பதிகாரங்களை நன்கு ஆராயின், கி.பி.2ஆம் நூற்றாண்டில் சோணாடு மேனாடுகளுடன் கிழக்கு நாடுகளுடனும் சிறந்த முறையில் கடல் வாணிகம் நடத்தி வந்தது என்பதை அறியலாம். இதனைப் பற்றிய விளக்கம் அந்நூல்களிலும் பரக்கக் காணலாம். இவற்றோடு, அவ்விரு நூற்றாண்டுகளிலும் இந்நாடு போந்த மேனாட்டுச் செலவினர் (யாத்ரிகர்) எழுதியுள்ள குறிப்புகளும் நோக்கத் தக்கனவாகும்.

பெரிப்ளூஸ்-பிளைநி-தாலமி: கி.மு.3-ஆம் நூற்றாண்டிலிருந்து தென் இந்தியா - சிறப்பாகத் தமிழகம் மேல் நாடுகளுடன் வாணிகம் நடத்தி வந்ததை அவ்வக்கால மேனாட்டு ஆசிரியன்மர் குறிப்பிட்டுள்ளனர்.[13] கி.பி. முதல் நூற்றாண்டின் கடைப் பகுதியில் (கி.பி. 70-100) இருந்த அலெக்ஸாண்டிரிய வணிகர் ஒருவர் குறித்த பெரிப்ளுஸ் என்னும் நூலில் தமிழ் நாட்டுத் துறைமுகப்பட்டினங்கள், தமிழ்நாட்டுப் பிரிவுகள், ஏற்றுமதிப் பொருள்கள், இறக்குமதிப் பொருள்கள் முதலியன குறிக்கப்பட் டுள்ளன. அக்காலத்தில் சோழ நாடு இரண்டு மரபினரால் ஆளப்பட்டு வந்தது. ஒரு பகுதி புகாரைத் தலைநகராகக் கொண்டது; மற்றது உறையூரைத் தலைநகராகக் கொண்ட உள்நாட்டுப் பகுதி. இக்கூற்று உண்மை என்பதை ‘உறையூர்ச் சோழர்’, ‘புகார்ச் சோழர்’ என வரும் சங்க காலப் பாக்களில் வரும் செய்திகளைக் கொண்டு நன்கறியலாம். காவிரிப்பூம்பட்டினம் எனப் பட்ட புகார் நகரம் குறிக்கப்பட்டுள்ளது. உறையூர் குறிக்கப்பட்டுள்ளது. மரக்காணம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது.[14] ஏறக்குறையக் கி.பி.80இல் பிளைநி என்பார் குறித்துள்ள குறிப்புகளுள் சில சோழநாட்டைக் குறிக்கின்றன. அவர் குறித்துள்ள பல பொருள்கள் புகாரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவாகக் காண்கின்றன.[15]

புகார் நகரம், நாகப்பட்டினம் ஆகிய இரண்டும் சோழர் துறைமுகங்களாக இருந்தன என்று கி.பி.140-இல் வாழ்ந்த தாலமி என்பார் குறித்துளர்; உறையூரையும் குறித்துளர்; ஆர்க்காடு குறிக்கப்பட்டுளது; அவ்விடத்தே நிலைத்து வாழாத குடிகள் இருந்தனர் என்று தாலமி கூறியுள்ளார்.[16]


  1. சிலப்பதிகாரம், காதை 27,28.
  2. மணிமேகலை, காதை 19, வரி 119-129.
  3. Dr.S.K. Aiyangar’s ‘Manimekalai in its Historical Setting.’ pp.46-48.
  4. Dr.S.K. Aiyangar’s ‘Manimekalai in its Historical Setting.’ pp.46-48.
  5. மணிமேகலை, காதை, 19.
  6. மணிமேகலை, காதை, 20.
  7. மணிமேகலை, காதை, 22, வரி, 205-215.
  8. மணி, காதை 24.
  9. மணி, காதை, 28.
  10. மணி, காதை 24.
  11. இந்தக் காலத்தில் நகரத்தின் ஒரு பகுதியே அழிந்து விட்டது.கி.பி.450-இல் புத்ததத்தர்பூம்புகாரில் இருந்தார் என்பதும், கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலும் புகார் நகரம் சிறப்புடன் இருந்தது என்பதும் அறியத் தக்கன.
  12. மணி, காதை, 29.
  13. Vide Kennedy's article in J.R.A.S. 1898 pp. 248-287; Cholas, Vol.I.p.29.
  14. Rawlinson’s Intercourse bet. India and the W.World', pp. 120-130 and ‘Periplus’ (Tamil) by S. Desikar.
  15. Pliny, XXI; Kanakasabai Pillai’s ‘Tamils 1800 years ago’ pp.25-32.
  16. Coldwelt’s ‘Comparative Grammar’, pp.92 - 100; Tamils 1800 yars ago, pp.29-32.