சோழர் வரலாறு/முதற் குலோத்துங்கன்

பாகம் 3

1. முதற் குலோத்துங்கன்

கி.பி. (1070 - 1122)

குலோத்துங்கன் பட்டம் பெற்ற வரலாறு

(கி.பி. 1070)

பிறப்பும் இளமையும் : இராசேந்திர சோழன் மகளான அம்மங்காதேவி இராசராச நரேந்திரனை மணந்து, கி.பி. 1043-ஆம் ஆண்டில் பூச நாளில் ஒரு மகனைப் பெற்றாள்[1]. அவனுக்குத் தாய்-பாட்டன் பெயரான ‘இராசேந்திரன்’ என்பது இடப்பட்டது. அவன் சாளுக்கிய மரபுக்கு ஏற்ப ‘ஏழாம் விஷ்ணுவர்த்தனன்’ என்று பெயர் பெற்றான்[2].

குடும்ப நிலை : இராசராச நரேந்திரனது சிறிய தாய் மகனான (தந்தையான விமலாதித்தற்குப் பிறந்த) ஏழாம் விசயாதித்தன் என்பவன் இருந்தான். இராசராச நரேந்திரன் கி.பி. 1018 முதல் 1059 வரை (41 ஆண்டுகள்) வேங்கி நாட்டை அரசாண்டான். அப்பொழுது விசயாதித்தன் அவனுக்கு உதவியாக இருந்து நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்குச் ‘சக்திவர்மன்’ என்னும் மகன் இருந்தான். குலோத்துங்கன் இளவரசுப் பட்டம் பெற்றுத் தந்தையுடன் இருந்தான்.

குழப்பம் : கி.பி. 1050-இல் இராசராசன் இறந்தான். ஆனால் இளவரசுப் பட்டம் பெற்ற குலோத்துங்கன் நாடாளக்கூடவில்லை. அவன் தன் சிறிய தந்தையிடம் நாட்டை ஒப்புவித்து வடக்கு நோக்கிச் சென்றான்; வயிராகரம், சக்கரக்கோட்டம் முதலிய இடங்களைக் கைப்பற்ற முனைந்தான். மேலும், அவனது எண்ணம் முழுவதும் சோழப் பேரரசின் மீதே இருந்தது. இதற்கிடையில் ஆறாம் விக்கிரமாதித்தன் வேங்கியைக் கைப்பற்றச் சாமுண்டராயனைப் பெரும் படையுடன் அனுப்பினான். இதனை உணர்ந்த வீரராசேந்திரன் கூடல் சங்கமத்திலிருந்து நேரே சென்று பகைவரை வென்று வேங்கியை மீட்டு விசயாதித்தனிடம் கொடுத்தான். இது சென்ற பகுதியிலே கூறப்பட்டதன்றோ?

அதிராசேந்திரன்: வீரராசேந்திரன் கி.பி.1059-1070-இல் இறந்தான். அவன் மகனான அதிராசேந்திரன் பரகேசரி என்னும் பட்டத்துடன் அரசன் ஆனான். அவனை அரசனாக்கிய பெருமை சாளுக்கிய விக்கிரமாதித்தற்கே உரியது. அவன் வீரராசேந்திரன் இறந்தவுடன் காஞ்சிக்கு வந்தான் பின் கங்கைகொண்ட சோழபுரம் சென்றான்; தன் மைத்துனனான அதிராசேந்திரற்கு முடிசூட்டி ஒரு திங்கள் தங்கி இருந்தான்; பிறகு தன் மைத்துனன் அச்சமின்றி நாடாள்வான் என்று எண்ணித் தன் நாடு மீண்டான்.

முடி சூடல் : அவன் சென்ற பிறகு சோணாட்டில் குழப்பம் உண்டாயிற்று. அக்குழப்பத்தில் அதிரா சேந்திரன் கொல்லப்பட்டான். நாடு அல்லலுற்றது. இதனை அறிந்த குலோத்துங்கன் வேங்கிக்கும் வடக்கே சக்கரக் கோட்டத்தில் போரிட்டிருந்த குலோத்துங்கன் சோழ நாட்டை அடைந்தான்; கி.பி. 1070-இல் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்டான்: வேங்கி நாட்டைத் தன் சிறிய தந்தையான ஏழாம் விசயாதித்தன் ஆட்சியில் விட்டான்.

போர்கள்

சக்கரக் கோட்டம் : வீரராசேந்திரனது இறுதிக் காலத்தில் முதற் குலோத்துங்கன் பெரும் படையுடன் வேங்கிக்கு வடக்கே சென்றான்; நடு மாகாணத்திலுள்ள ‘வயிராகரம்’ என்ற ஊரில் எண்ணிறந்த யானைகளைக் கைப்பற்றிக் கொண்டு அவ்வூரை எரியூட்டினான்[3]; தாரா வர்ஷனைப் போரில் வென்று தனக்குத் திறை செலுத்தும்படி செய்தான். ‘சக்கர கோட்டம்’ என்பது இப்பொழுது ‘சித்திரகூடம்’ என்பது. இது நடு மாகாணத்தில் ஜகதல்பூருக்கு மேற்கே 25 கல் தொலைவில் உள்ளது. குருஸ்பால் என்ற இடத்துக் கல்வெட்டு, ‘சக்கரகூடா தீசுவரனாம்...... தாராவர்ஷ நாமே நரேசுவரா’[4] என்று குறிப்பதால், தாராவர்ஷன் என்பவன் சக்கரக் கோட்டத்தரசனே என்றல் மெய்யாதல் காண்க.

சாளுக்கியருடன் போர் : இஃது ஆறாம் விக்கிரமாதித்தற்கும் முதற் குலோத்துங்கற்கும் நடந்த பேராகும். இது கி.பி. 1076-இல் நடந்தது - தன் மைத்துனனான அதிராசேந்திரன் கொல்லப்பட்டான், குலோத்துங்கன் சோழப்பேரரசன் ஆனான் என்பதைக் கேள்வியுற்ற விக்கிரமாதித்தன் கலங்கினான்; சோழப் பேரரசும் வேங்கி நாடும் ஒரே அரசன் ஆட்சிக்கு மாறியது, தனக்கு நன்மை யன்று என்பதை எண்ணிப் புழுங்கினான். அவ்வமயம் விக்கிரமாதித்தற்கும் அவன் தமையனான இரண்டாம் சோமேசுவரற்கும் மனத் தாங்கல் மிகுதிப்பட்டது. அதனால் விக்கிரமாதித்தன் கலியாணபுரத்தைவிட்டுத் தம்பியான ஜயசிம்மனுடன் வெளியேறினான்[3]. அதனால் இரட்டபாடி இரு பகுதிகள் ஆயின. ஒன்று சோமேசுவரனாலும் மற்றொன்று விக்கிரமாதித்தனாலும் ஆளப்பட இருந்தன. இப்பிரிவினை உணர்ந்த குலோத்துங்கன் சோமேசுவரனைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டான். உடனே போர் மூண்டது. திரிபுவனமல்ல பாண்டியன், கதம்பகுல ஜயகேசி, தேவகிரியை ஆண்ட யாதவ அரசன், ஹொய்சளனான எறியங்கன் முதலிய அரசர் விக்கிர மாதித்தன் பக்கம் நின்றனர். விக்கிரமாதித்தன்[5] முதலிற் படையெடுத்துக் கோலார் வரை சென்றான். குலோத் துங்கன் அவனைத் தடுத்துத் துங்கபத்திரைவரைத் துரத்திச் சென்றான்; வழியில் அளத்தி, மணலூர் என்னும் இடங்களிற் போர் நடந்தது. முடிவில் போர்துங்கபத்திரை ஆற்றங்கரையில் கடுமையாக நடந்தது. போரில் சோமேசுவரன் தோற்று, விக்கிரமாதித்தனிடம் சிறைப்பட்டு நாட்டை இழந்தான்[6]. குலோத்துங்கனை வெல்ல முயன்ற விக்கிரமாதித்தன் இறுதியில் தன் தமையனை வென்று, இரட்டபாடி முழுவதும் தன் ஆட்சிக்கு உட்படுத்திக் கொண்டான். ஜயசிம்மன் வனவாசியைத் தலை நகராகக்கொண்டு இரட்டபாடியின் தென் பகுதியை ஆண்டான். இப்போரில், மைசூர் நாட்டின் பெரும்பகுதி குலோத்துங்கன் கைப்பட்டது. இஃது உண்மை என்பதை அங்குக் கிடைத்த அவனுடைய கல்வெட்டுகள் மெய்ப்பிக்கின்றன. குலோத்துங்கன் நவிலையில் யானை களைப் பிடித்தான் என்று பரணி பகர்கின்றது. இவன் மேற்கடலை அடைந்து, வனவாசியையும் வென்றான் என்று விக்கிரம சோழன் உலா உரைக்கிறது.

இலங்கை பிரிந்தது : இலங்கையின் தென் பகுதியை ஆண்ட விசயபாகு கி.பி.1070-ல் வடபகுதியைத் தனதாக்க முற்பட்டான். அந்த ஆண்டில் சோழ நாட்டில் குழப்பம் மிகுந்திருந்தது. அது, குலோத்துங்கன் பட்டம் பெற்றுப் பேரரசில் அமைதி உண்டாக்க முயன்ற காலம். ஆதலின், அவன் இலங்கை மீது கவனம் செலுத்த முடியவில்லை. அச்சமயம் விசயபாகு படையெடுத்துச் சென்று பொலநருவாவைத் தாக்கிச் சோழர் படையை முறியடித்தான்; சோழர் சேனைத் தலைவனைப் பிடித்துக் கொன்றான். ஆனால், விரைவில் சோழநாட்டிலிருந்து பெருஞ் சோழர் சேனை ஒன்று ஈழ நாட்டை அடைந்தது. அநுராதபுரத்தண்டைப் பெரும்போர் நிகழ்ந்தது. விசயபாகு தெற்கு நோக்கி ஓடினான். அவ்வமயம் சோழர், விசயபாகுவைச் சேர்ந்தாருக்குள் கலகம் உண்டாக்கினர். ஆயின் திறம் படைத்த விசயபாகு கலகத்தை அடக்கிவிட்டான்; கலகத் தலைவரைச் சோழர்பால் விரட்டிவிட்டான்; பிறகு தம்பலகிராமம் சென்று அரண் ஒன்றைக் கட்டினான்; புதிய படைகளைத் தயாரித்தான்; இரண்டு பெரிய படைகளை இரண்டு பக்கங்களில் அனுப்பிச் சோழர் படைகளைத் தாக்கச் செய்தான். ஒரு படை அநுராதபுரத்தைத் தாக்கியது; மற்றொன்று பொல நருவாவைத் தாக்கியது; கடும்போருக்குப் பிறகு பொல நருவா வீழ்ச்சியுற்றது.அதுராதபுரமும் வீழ்ந்தது. அங்ஙனம், இராசராச சோழனால் ஏற்படுத்தப்பட்ட சோழ அரசு இலங்கையில் கி.பி. 1076-இல் வீழ்ச்சியுற்றது. விசயபாகு அநுராதபுரத்தில் முடி சூடிக்கொண்டான்; உடனே தன் முன்னோர் முறையைப் பின்பற்றிப் பெளத்த சமயத்தைப் போற்றி வளர்க்கலானான்.[7]

பாண்டி மண்டலம் : பாண்டியர் காலமெல்லாம் சோழர்க்குத் துன்பம் கொடுத்துக்கொண்டே வந்தவர். கி.பி. 1070-ல் பேரரசு நிலைகெட்ட பொழுது பாண்டிய நாட்டில் குழப்பம் மிகுதிப்பட்டது. முற்பட்ட சோழர் ஏற்படுத்தி இருந்த சட்ட திட்டங்கள் அனைத்தும் அரசியல் அமைப்பும் பாண்டிய நாட்டில் புறக்கணிக்கப் பட்டன. சேரநாடும் பாண்டிய நாட்டைப் பின்பற்றியது. இந்நிலையில், குலோத்துங்கன் மேலைச் சாளுக்கிய முதற்போரை முடித்துக்கொண்டு நாடு திரும்பினான்; தெற்கே இருந்த குழப்ப நிலையை உணர்ந்தான்; அவன் இலங்கையைப் பற்றிக் கவலை கொள்ளவே இல்லை. என்னை? அது கடலுக்கு அப்பாற்பட்டதாதலின் என்க. பாண்டிய நாடோ சோழ நாட்டை அடுத்தது. அது தனிப்படுவது சோழப் பேரரசுக்கே தீமை விளைப்பதாகும். விடுதலை பெற்ற பாண்டியர் பழிக்குப் பழிவாங்கத் தவறார் என்பதை அவன் அறிந்தவன். ஆதலின், அவன் முதலில் பாண்டிய நாட்டை அடக்கப் புறப்பட்டான்.

பாண்டிய நாட்டுப் போர் : கடல் அலைபோன்ற குதிரைகளையும் கப்பல்களை ஒத்த கரிகளையும் தண்ணிரை ஒத்த காலாட் படைகளையும் குலோத்துங்கன் அனுப்பினான்; அப்படைசென்றது-வடகடல் தென்கடலை உண்ணச் சென்றது போல் இருந்தது; பாண்டியர் ஐவர் (கலகக்காரர்) சோழர் படைக்கஞ்சிக் காட்டிற்குள் புகுந்துகொண்டனர். சோழர்படை அக்காட்டை அழித்தது: பாண்டிய மண்டலத்தை வென்றது; நாற்புறமும் வெற்றித் தூண்களை நட்டது; பாண்டியர் ஐவரைக் கொடிய மலைக்காடுகளிற் புகுந்து ஒளியச்செய்தது; முத்துக் குளிக்கும் இடங்களையும் முத்தமிழ்ப் பொதியமலையையும் கைப்பற்றியது. இவ்வளப்பரிய வெற்றிக்கு மகிழ்ந்து குலோத்துங்கன் தன்படை வீரர்க்கும் பாண்டிய மண்டலத்தில் அங்கங்கு ஊர்களை நல்கிச் சிறப்புச் செய்தான்; கோட்டாற்றில் நிலைப்படை ஒன்றை நிறுத்தி விட்டான்[8].

குலோத்துங்கன் பாண்டியனை அழித்துச் சேரர் செருக்கை அடக்கி இருமுறை காந்தளூர்ச்சாலையில் கலமறுத்தான் என்று விக்கிரம சோழன் உலா உரைக்கின்றது. குலோத்துங்கன் படை பாண்டியரை முறியடித்துச் சோழரை ஒடச் செய்தது; கடற்றுறைப் பட்டினமான சாலையும் விழிஞமும் கைப்பற்றியது, என்று கலிங்கத்துப் பரணி கூறுகிறது.

எனவே, குலோத்துங்கன் பாண்டி மண்டலத்தையும் சேர மண்டலத்தையும் வென்று அமைதியை நிறுவினான். அவன் அதனை அமைதியாக ஆளுமாறு சிற்றரசரை எற்படுத்தினான்; தன் சொந்த நிலைப் படைகளைப் பல இடங்களில் நிறுத்தினான்; எனினும், அதன் சிற்றரசர் ஆட்சியில் தலையிட்டிலன். அவர்கள் பெரும்பாலும் சுயாட்சி பெற்றே இருந்தனர் என்னலாம். அவர்கள் தனக்கு அடங்கி இருத்தல் ஒன்றையே கப்பல் கட்டல் என்ற ஒன்றையே குலோத்துங்கன் எதிர்பார்த்தான். இஃது, இம்மண்டலங்களில் குலோத்துங்கன் கல்வெட்டுகள் குறைந்திருத்தல் கொண்டும் துணியப்படும்[9].

தென்னாட்டில் குழப்பம் : மேற்சொன்ன நிகழ்ச்சிகளுக்குப் பதினைந்து ஆண்டுகட்கு அப்பால், தெற்கே மீண்டும் குழப்பம் உண்டானது. அக்குழப்பத்தில் வேள்நாடு (தென் திருவாங்கூர்) சிறந்து நின்றது. குலோத்துங்கன் அக்குழப்பத்தை அடக்க நரலோக வீரன் என்னும் தானைத் தலைவனை அனுப்பினான். அவனுக்குக் காலிங்கராயன் என்னும் வேறு பெயரும் இருந்தது. அவனைப் பற்றிப் பல கல்வெட்டுகளில் குறிப்பும் காணப்படுகிறது. அப்பெரு வீரன் குழப்பத்தை அடக்கிப் பகைவரை ஒடுக்கித் தென்னாட்டில் அமைதியை நிறுவினான்[10].

ஈழத்து உறவு : குலோத்துங்கன் சுயாட்சி நடத்திவந்த விசயபாகுவுடன் நட்புப் பெற விழைந்து தூதுக்குழுவை அனுப்பினான். அதே சமயம் விக்கிரமாதித்தனும் தூதுக் குழு ஒன்றைத் தக்க பரிசுகளுடன் அனுப்பினான். விசயபாகு இருவரையும் வரவேற்றுச் சிறப்புச் செய்தான்; முதலில் சாளுக்கிய நாட்டுத் தூதுவரைத் தன் நாட்டுத் தூதருடன் அனுப்பினான். அவர்கள் சோழ நாட்டிற்குள் நுழைந்ததும், சோழ நாட்டார் ஈழ நாட்டுத்தூதர் மூக்குகளையும் காதுகளையும் அறுத்து அனுப்பினர். இதனை அறிந்த விசயபாகு வெகுண்டெழுந்தான் சோழர் தூதுக்குழுவை அழைத்து ‘உம்மரசனை என்னோடு தனித்துப் போரிட வரச் செய்க, இன்றேல், இரு திறத்துப் படைகளேனும் போரிட்டுப் பலத்தைக் காணச் செய்க’ என்று கூறி, அவர்கட்குப் பெண்உடை தரித்துச் சோணாடு செல்ல விடுத்தான்; சேனை வீரரைக் கப்பல்களில் சென்று சோணாட்டைத் தாக்கும்படி ஏவினான். கப்பல்களில் சேனைத் தலைவர் இருவர் செல்ல இருந்தனர். அவ்வேளை, ஈழப்படைகளில் இருந்த வேளைக்காரப் படையினர் (தமிழர்) தாம் சோணாடு செல்ல முடியாதெனக் கூறிக் கலகம் விளைத்தனர்; சேனைத் தலைவர் இருவரையும் கொன்றனர்; பொலநருவாவைக் கொள்ளையிட்டனர்; அரசனது தங்கையையும் அவளுடைய மக்கள் மூவரையும் சிறைப்பிடித்தனர்; அரண்மனையைத் தீக்கிரை ஆக்கினர்.

விசயபாகு தென்மாகாணம் நோக்கி ஓடினான். தன் செல்வத்தை ஒளித்துவைத்து, தக்க படையுடன் பொல நருவாவை அடைந்தான், கடும்போர் செய்து பகைவரை ஒடச் செய்தான்; பிறகு அவர்களில் தலைவராயினாரைப் பிடித்துக் கைகளைக் கட்டி நிற்க வைத்துச் சுற்றிலும் தீ மூட்டிப் பழிக்குப் பழி வாங்கினான். எனினும், இதனுடன் விசயபாகு நின்றானில்லை; தனது 45ஆம் ஆட்சி ஆண்டில் தக்க படையுடன் கீழக் கடற்கரையில் சோழனை எதிர்பார்த்து நின்றிருந்தான். சோழ அரசன் வராததைக் கண்டு சலிப்புற்று மீண்டான் இந்நிகழ்ச்சி ஏறத்தாழக் கி.பி. 1088-இல் நடந்ததாகும்.[11]

இந்நிகழ்ச்சிகட்குப் பிறகு குலோத்துங்கன் விசயபாகுவுடன் நண்பன் ஆனான், ஈழத்தில் பாண்டியன் கட்சியைச் சேர்ந்த சிங்கள இளவரசனான வீரப்பெரு மாள் என்பவனுக்குச் சூரியவல்லியார் என்ற தன் மகளை மணம் செய்து கொடுத்தான்[12].

சீனத்துடன் உறவு : இராசராசன், இராசேந்திரன் இவர்கள் சீனத்துக்குத் தூதுவரை அனுப்பிக் கடல் வாணிகத்தைப் பெருக்கினாற் போலவே கி.பி. 1077-இல் குலோத்துங்கன் 72 பேர்கொண்ட தூதுக்குழு ஒன்றைச் சீன நாட்டிற்கு அனுப்பினான். அவர்கள் கண்ணாடிப் பொருள்கள், கற்பூரம், காண்டாமிருகத்தின் கொம்புகள், தந்தம், வாசனைப் பொருள்கள், கிராம்பு, ஏலக்காய் முதலிய பல பண்டங்களைச் சீன அரசர்க்குப் பரிசிற் பொருள்களாகக் கொண்டு சென்றனர். சீன அரசன் அவர்களை வரவேற்றான்; அப்பொருள்களைப் பெரு மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டான், அவற்றுக்குப் பதிலாக 81,800 செம்புக் காசுகள் கொடுத்துப் பெருமைப் படுத்தினான்[13].

கடாரத்துடன் உறவு : குலோத்துங்கன் கடாரத்தை அழித்தான் என்று பரணி பகர்கிறது. கடல் கடந்த நாடுகளிலிருந்து உயர்ந்த பொருள்கள் பரிசிலாக அனுப்பப்பட்டன என்று குலோத்துங்கன் கல்வெட்டுகள் கூறுகின்றன. காம்போச நாட்டு அரசன் குலோத்துங்கற்கு விலை உயர்ந்த கல் ஒன்றைக் காட்சியாகக் காட்டினான் என்று ஒரு கல்வெட்டுக் குறிக்கிறது[14]. கி.பி. 1090-இல் ஸ்ரீவிசயன் என்னும் கடாரத்தரசன், நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு பெளத்த விஹாரங்கட்குப் பள்ளிச் சந்தமாக விட்ட சிற்றுரர்களைக் குறித்துத் தானக் கட்டளை பிறப்பிக்குமாறு குலோத்துங்கனை வேண்டினான். அப்பள்ளிகள் இராசராசப் பெரும்பள்ளி, இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்ற பெயரைக் கொண்டவை. இப்பட்டயம் பெறக் கடாரத்திலிருந்து வந்தவர் இராச வித்தியாதர ஸ்ரீ சாமந்தன், அபிமநோத்துங்க சாமந்தன் என்பவராவர். இப்பட்டயம் பழையாறை (ஆயிரத்தளி)[15] அரண்மனையில் ‘காலிங்கராயன்’ என்னும் அரியணை மீது இருந்து அரசனால் விடுக்கப்பட்டது. வந்த பரிசுகள் அரண்மனைவாயிலில் நின்ற யானைகள் மீது அழகு செய்தன[16]. சுமத்ராவில் கிடைத்த கல்வெட்டு, ‘திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்’ என்னும் பெயர் கொண்ட சோணாட்டு வாணிகக் குழுவினர் இருந்தனர் என்பதை உணர்த்துகிறது. இக்குழுவின் பெயர் ‘நாற்றிசையும் உள்ள ஆயிரம் ஊர்களிலிருந்து சென்ற நூறு வணிகர்’ என்னும் பொருளைக் கொண்டது[17]. இக்குறிப்புகளால், குலோத்துங்கன் ஸ்ரீ விசய நாட்டுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தான் என்பதும், நன்முறையில் கடல் வாணிகம் நடந்து வந்தது என்பதும் அறியக் கிடக்கின்றன அல்லவா?

வேங்கி நாடு : குலோத்துங்கன் சோணாட்டைச் சீர்ப்படுத்திக் கொண்டு இருந்தபொழுது கி.பி. 1072-3-ல் திரிபுரியை ஆண்ட ஹெய்ஹய அரசனான யசகர்ண தேவன் என்பவன் வேங்கிமீது படையெடுத்து வந்தான். அவன் தன் கல்வெட்டில், ‘வன்மை மிக்க ஆந்திர அரசனை வென்று திராக்ஷாராமத்தில்[18] உள்ள பீமேச்சுர தேவர்க்குப் பல அணிகலன்களைப் பரிசாகத் தந்தேன்’ என்று கூறியுள்ளான்[19]; இவன் குறித்த ஆந்திர அரசன் குலோத்துங்கன் சிற்றப்பனான ஏழாம் விசயாதித்தனே ஆவன். குலோத்துங்கன் ஆகான். யசகர்ணதேவன் வந்து சென்றனனே தவிர, வேங்கி நாட்டை வென்றதாகவோ, ஆண்டதாகவோ கூறச் சான்றில்லை.

வேங்கியை ஆண்ட இளவரசர் : வேங்கியை ஆண்ட ஜயசிம்மன் குலோத்துங்கனிடம் நல்லெண்ணம் கொண்டவனாக இருந்ததில்லை. அவனுக்கும் குலோத்துங்கனுக்கும் இடையே கீழைக்கங்க அரசனான இராசராசன் நின்று சந்து செய்தான் போலும் அவன் விசயாதித்தற்காகக் குலோத்துங்கனிடம் போரிட்டான் என்று அவனுடைய கல்வெட்டுகள் குறிக்கின்றன. விவரம் விளங்கவில்லை. அக்கங்க அரசன் குலோத்துங்கன் மகளான இராச சுந்தரி என்பவளை மணந்து கொண்டான்.

ஜயசிம்மன் கி.பி. 1076-இல் இறந்தான். உடனே குலோத்துங்கன் தன் மக்களுள் ஒருவனான இராச ராச மும்முடிச் சோழன் என்பவனை வேங்கி நாட்டை ஆளும்படி அனுப்பினான். இவன் ஓராண்டு அந்நாட்டை ஆண்டு, விட்டுவிட்டான். கி.பி.1077-ல் மற்றோர் இளவரசனான வீர சோழன் ஆளத் தொடங்கினான். அவன் ஆறு ஆண்டுகள் வேங்கியை ஆண்டான். கி.பி.1084 முதல் 1089 வரை மற்றொரு மகனான இராசராச சோழ கங்கன் என்பவன் வேங்கி நாட்டை ஆண்டான். இவனே குலோத்துங்கனது மூத்த மைந்தன். கி.பி.1089-இல் மீண்டும் வீர சோழனே வேங்கி நாட்டை ஆண்டுவர அனுப்பப்பட்டான். அவன் கி.பி. 1092-93 வரை அந்நாட்டை ஆண்டுவந்தான். கி.பி.1093 முதல் 1118 வரை விக்கிரம சோழன் என்ற மற்றோர் இளவரசன் வேங்கி நாட்டை ஆண்டான். இம்மைந்தனே குலோத்துங்கற்குப் பிறகு சோழப் பேரரசன் ஆனவன்.

முதற் கலிங்கப் போர்: இது குலோத்துங்கனது ஆட்சி ஆண்டு 26-இல் (கி.பி. 1006-இல்) நடந்தது. இப்போர் வேங்கியை ஆண்ட இளவரசனான விக்கிரம சோழனுக்கும் தென் கலிங்க நாட்டு அரசனுக்கும் நிகழ்ந்ததாகும். இப்போரில் கொலநு (எல்லூர்)வை ஆண்ட தெலுங்க வீமன் (சிற்றரசன்) என்பவன் கலிங்க அரசற்கு உடந்தையாக இருந்தான்; ஆதலின், இருவரையும் விக்கிரமசோழன் ஒரே காலத்தில் எதிர்த்துப் போரிட வேண்டியவன் ஆனான். சோழப் பேரரசற்கு அடங்கிய பராக்கிரம பாண்டியன் வடக்கு நோக்கிச் சென்று விக்கிரம சோழற்கு உதவி புரிந்தான்[20]. இவ்விருவரும் நிகழ்த்திய போரில் தென் கலிங்கம் பிடிபட்டது. வீமன் சிறைப்பட்டான். தென் கலிங்கம் என்பது கோதாவரிக்கும் மகேந்திர மலைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியாகும்[21]. இப்பகுதி வேங்கி நாட்டைச் சேர்ந்திருந்ததேயாகும்[22]. இங்கிருந்த அரசன் சிறைப்பட்டு ஒடுங்கியதால் தென் கலிங்கம் அமைதியுற்ற நாடானது. கி.பி. 1098-இல் வெளிப்பட்ட குலோத்துங்கனுடைய கல்வெட்டுகள் இப்பகுதியைச் சேர்ந்த சிம்மாசலத்திலும் திராக்ஷாராமத்திலும் கிடைத்துள்ளன.

இரண்டாம் கலிங்கப் போர் : இஃது ஏறக்குறைய கி.பி. 1111இல் நடந்தது இதைப் பற்றிக் குலோத்துங்கன் கல்வெட்டுகள் கூறுகின்றன. கலிங்கத்துப் பரணி மிக்க விரிவாக விளக்கியுள்ளது. முதலில் கல்வெட்டுகள் கூறுவதைக் காண்போம்: சோழர் படை வேங்கி நாட்டைக் கடந்தது; பகைவன் சோழர் படையைத் தடுக்க யானைப் படையை ஏவினான். அந்த யானைகள் அனைத்தும் கொல்லப்பட்டன. சோழர் படை கலிங்க நாட்டில் எரி பரப்பியது; கலிங்கப் படையில் சிறப்புற்றிருந்த வீரர் அனைவரையும் கொன்றது. அவர் தலைகள் போர்க் களத்தில் உருண்டன; கழுகுகள் அவற்றைக் கொத்தித்தின்றன. முடிவில் வடகலிங்கம் பணிந்தது’[23].

கலிங்க அரசன் அனந்தவர்மன் என்பவன். அவன் சோழனை மதியாது திறை கட்டாதிருந்தான். அதனால் சோழன் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் என்பவனைப் பெரும்படையுடன் அனுப்பினான். அத்தலைவனுடன் சென்ற படை பாலாறு, பொன்முகரி, பழவாறு. கொல்லியாறு, வட பெண்ணை, வயலாறு, மண்ணாறு, குன்றியாறு, ஆகியவற்றைக் கடந்து கிருஷ்ணையையும் தாண்டியது; பிறகு கோதாவரி, பம்பையாறு, கோதமை ஆறுகளைக் கடந்து கலிங்க நாட்டை அடைந்தது; அங்குச் சில நகரங்களில் எரி கொளுவிச் சில ஊர்களைச் சூறை ஆடியது. படையெடுப்பைக் கேட்ட கலிங்க அரசன் சினந்து, தன் படைகளைத் திரட்டினான். அப்பொழுது எங்கராயன் என்னும் அமைச்சன், சோழன் படை வலிமையைப் பல சான்றுகளால் விளக்கிச் சந்து செய்துகொள்ளும்படி அறிவுறுத்தினான். அரசன் கேட்டானில்லை. இறுதியில் போர் நடந்தது. கலிங்க அரசன் தோற்றோடினான். அவனைக் கருணாகரத் தொண்டைமான் தேடிப் பிடிக்க முடியாது, பெரும் பொருளோடு சோணாடு மீண்டான்.

சயங்கொண்டார் புலவர் முறையில் சில இடங்களில் செய்திகளை மிகுத்துக் கூறி இருப்பினும், படையெடுப்பு, வெற்றி என்பவை உண்மைச் செய்திகளே என்பது கல்வெட்டுகளால் உறுதிப்படுகிறது. கலிங்க அரசனான அனந்தவர்மன் யாவன்? இராசராச கங்கனுக்கும் குலோத்துங்கன் மகளான இராச சுந்தரிக்கும் பிறந்தவனே ஆவன். எனினும் என்ன? அரசன் என்னும் ஆணவம் உறவை மதியாதன்றோ? இப்போருக்குப் பரணி கூறும் காரணம் பொருத்தம் அன்று. வட கலிங்கம் சோழனுக்கு உட்பட்டதன்று. சோழன் வட கலிங்கத்தைப் பிடித்து ஆண்டதாகவும் சான்றில்லை[24]. ‘வடகலிங்கத்தரசன் நாடு வேட்கையால் தென் கலிங்கத்தைக் கைப்பற்ற முனைந்திருக்கலாம். இச்செய்தி காஞ்சி அரண்மனை[25] யிலிருந்து குலோத்துங்கற்கு எட்டியது. அவன் உடனே தொண்டைமானை வேங்கி இளவரசற்கு உதவியாக அனுப்பினான்’ எனக் கோடலே பொருத்தம் உடையது; அல்லது, முதற் கலிங்கப் போரும் இந்த இரண்டாம் கலிங்கப் போரும் சாளுக்கிய விக்கிரமாதித்தன் சூழ்ச்சியால் நடந்தன என்றும் கூறலாம். வேங்கியைச் சோழர் ஆட்சியிலிருந்து ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்ட அவன், பலமுறை சிற்றரசர் பலரை வேங்கியை ஆண்ட இளவரசர்க்கு மாறாகத் தூண்டினனாதல் வேண்டும். இத் துண்டல் முயற்சி ஏறத்தாழக் கி.பி.1118-ல் பயனளித்த தென்னலாம்.

வேங்கி அரசு : குலோத்துங்கன் தன் இறுதி நெருங்குவதை அறிந்து, கி.பி.1118-இல் விக்கிரம சோழனை வேங்கியிலிருந்து அழைத்துக்கொண்டான். உடனே வேங்கி நாட்டிற்குழப்பம் உண்டானது[26]. இஃது உண்மை என்பதைக் குலோத்துங்கன் 48-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளும் விக்கிரமசோழன் கல்வெட்டுகளுமே உணர்த்துகின்றன. திராக்ஷாராமத்தில் குலோத்துங்கனுடைய 48-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகள் வரைதாம் கிடைத்துள்ளன. வேங்கியில் விக்கிரம சோழன் பட்டம் பெற்ற பிறகு உண்டான கல்வெட்டுகள் இல்லை. அவை குண்டுரையே வட எல்லையாகக் கொண்டுவிட்டன. இதனால், வேங்கிநாடு வேறாகிவிட்டதை நன்குணரலாம் அன்றோ? ஆனால், வேங்கியிலும் திராக்ஷாராமம் முதலிய இடங்களிலும் விக்கிரமாதித்தனுடைய 45 முதல் 48 வரை உள்ள ஆட்சி ஆண்டுகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள் வேங்கி நாட்டில் இருந்த சிற்றரசர் பலருடையன. இவற்றுள் விக்கிரம ஆண்டும், விக்கிரமன் பேரரசிற்குத் தாங்கள் பணிந்தவர்கள் என்றும் அச்சிற்றரசர் குறிப்பிட்டுள்ளனர். கி.பி.1118-இல் விக்கிரமாதித்தனின் தண்டநாயகனான அனந்தப்பாலையன் என்பவன் வேங்கியை ஆண்டான் என்று கல்வெட்டொன்று. குறிக்கிறது[27]. கி.பி. 1120-இல் இவன் மனைவி பீமேசுவரர் கோவிலுக்களித்த தானத்தைக் குறிக்கும் கல்வெட்டில் விக்கிரம ஆண்டேகுறிக்கப்பட்டுள்ளது[28]. திராக்ஷாராமத்துக் கல்வெட்டுகள் கி.பி. 1132-3 வரை சாளுக்கிய-விக்கிரம ஆண்டுகளைக் குறிக்கின்றன. அனந்தபாலையன் உறவினன் ஒருவன் கிருஷ்ணைக் கோட்டத்தில் உள்ள ‘கொண்ட பல்லி’யைக் கி.பி. 1727-இல் ஆண்டுவந்தான்[29]. கிருஷ்ணையாற்றுக்குத் தென்பாற்பட்ட நாட்டைக் ‘கொள்ளிப்பாக்கை’யின் அரசன் என்னும் பட்டத்துடன் நம்பிராசன் என்பவன் கி.பி. 1131-இல் ஆண்டுவந்தான்[30]. இதுகாறும் கூறிய சான்றுகளால், குலோத்துங்கன்பேரரசிற்கு உட்பட்டிருந்த அவனுக்கு உரிமையான வேங்கிநாடு, அவனது ஆட்சி இறுதியில் கி.பி.1118-இல் விக்கிரமாதித்தனால் கைப்பற்றப்பட்டது விளங்குகிறதன்றோ? இம்முடிவினால் விக்கிரமாதித்தன் முதலிற் கொண்ட (சோழ நாட்டையும் வேங்கியையும் வேறு பிரிக்க வேண்டும் என்ற) எண்ணமும் நிறைவேற்றிக் கொண்டான் என்பதும் தெளிவாகின்றது.

கங்கபாடி பிரிந்தது : மைசூரில் அஸ்ஸன், கடுர் கோட்டங்களையும் நாகமங்கல தாலுகாவையும் கொண்ட நிலப் பரப்பை முதலில் ஆண்டவர் ஹொய்சளர் என்னும் மரபினர். இவர்கள் மேலைச் சாளுக்கிய்ர்களுக்கு அடங்கி ஆண்டு வந்த சிற்றரசர். இவருள் ஒருவனான எரியங்கன் என்பவனே குலோத்துங்கற்கும் விக்கிரமாதித்தற்கும் நடந்த போரிற் பின்னவன் பக்கம் நின்று போரிட்டவன். ஹொய்சளர் இராசராசன் காலம் முதலே இருந்து வந்தனர்.

அவருள் முதல் அரசன் திருமகாமன் (கி.பி. 1022-1040) என்பவன். அவன் மகன் விநயாதித்தன். அவன் மகனே எரியங்கன். விநயாதித்தன் கி.பி.1040 முதல் 1100 வரை ஆண்டான். கி.பி.1100-இல் பிட்டிக விஷ்ணு வர்த்தனன் அரசன் ஆனான். இவன் கி.பி.1116-இல் சோழரிடமிருந்து தழைக்காட்டை மீட்டான், அதனால் ‘தழைக் காடு[குறிப்பு 1] கொண்ட’ என்னும் தொடரைத் தன் பெயர்க்கு முன் பூண்டான். அந்த ஆண்டிலே இவன் கங்கபாடி முழுவதும் தனதாக்கி ஆண்டான் என்பது இவன் கல்வெட்டால் தெரிகிறது[31].

கங்கபாடி நீண்ட காலமாகச் சோழர் ஆட்சியில் இருந்து வந்த நாடாகும். அது கொங்கு நாட்டை அடுத்தது; ஆசலால், கொங்கு நாட்டை ஆண்டுவந்த அதியமான் மேற்பார்வையில் இருந்து வந்தது. அதியமான்கள் சோழர் படைத்தலைவராகவும் சிற்றரசராகவும் இருந்தார்கள். விஷ்ணுவர்த்தனன் தானைத் தலைவனான ‘கங்கராசன்’ அதியமானைச் சரண்புக அழைத்தான். அதியமான் மறுக்கவே, போர் மூண்டது. அதியமான், தாமோதரன், நரசிம்மவர்மன் முதலிய சோழர் படைத் தலைவர்கள் போரிட்டனர்; இறுதியில் தோற்றனர். அதன் விளைவாகக் கங்கபாடி ஹொய்சளர் ஆட்சிக்குச் சென்றுவிட்டது[32]. குலோத்துங்கன் கல்வெட்டுகள் 15 வரையே கங்கபாடியிற் கிடைத்துள்ளன. ஆதலின், கி.பி.1115-இல் கங்கபாடி கை மாறியது உண்மையாகும்.

வெளிநாடுகளின் தொடர்பு : குலோத்துங்கன் ஆட்சிக்குட்பட்ட சோழப் பெருநாடு வெளிநாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. கடாரத்துடனும் சீனத்துடனும் கொண்டிருந்த தொடர்பு முன்னரே விளக்கப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்துக் கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் வடநாடுகளுடன் சோழப் பெருநாடு கொண்டிருந்த தொடர்பு குறிக்கப்பட்டுள்ளது. கன்னோசி அரசனான மதனபாலன் அல்லது அவன் மகனான கோவிந்த சந்திரனது மெய்ப்புகழ் அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் முதலில் குலோத்துங்கனது 41-ஆம் ஆட்சி ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது; பிறகு கன்னோசி அரசன் புகழ் பொறிக்கப்பட்டுள்ளது; பின்னர்க் கல்வெட்டின் காரணம் வரையப்பட்டுள்ளது. கன்னோசிக்கும் சோழ நாட்டிற்கும் என்ன தொடர்பு இருந்தது என்பது தெரியவில்லை. கன்னோசி நாட்டார் கதிரவன் வணக்கத்திற் கைதேர்ந்தவர். சோழ நாட்டில் குலோத்துங்கன் ஆட்சியில் அவ்வணக்கம் சிறப்பிடம் பெற்றிருந்தது[33]. சோழ நாட்டு வாகீசுவரரrவிதர் என்பவர் ஒரிஸ்ஸா நாட்டுச் சாக்கியரசுழிதர் மாணவராவர் என்பதைக் கோவிந்த சந்திரன் செப்புப்பட்டயம் கூறுகிறது. கோவிந்த சந்திரன் (கன்னோசி அரசன்) விட்ட கல்வெட்டின் காலம் கி.பி.1129 ஆகும்[34]. காம்போச நாட்டு அரசன் குலோத்துங்கனுக்கு விலை உயர்ந்த கல் ஒன்றைக் காட்டினான்; பிறகு அதனை அவனுக்குப் பரிசாக அளித்தான். குலோத்துங்கன் அதனைச் சிதம்பரம் உட்கோவிற்கு எதிரேயுள்ள சுவரிற் பதித்தான் என்று சிதம்பரம் கோவில் கல்வெட்டு ஒன்று குறிக்கிறது. அதன் காலம் கி.பி.1114[35].

சோழப் பேரரசு : குலோத்துங்கன் ஆட்சியில் 45 ஆண்டுகள் வரை (கி.பி.1115 வரை) சோழப் பேரரசு முன்னோர் வைத்த அளவிலேயே இருந்தது. தெற்கே ஈழ மண்டலம் ஒன்றே ஆட்சியிலிருந்து பிரிந்துவிட்டது. கி.பி.1116-இல் கங்கபாடி பிரிந்தது. கி.பி.1118-இல் வேங்கி நாட்டின் பெரும் பகுதியும் சாளுக்கியர் ஆட்சிக்கு மாறிவிட்டது. குலோத்துங்கன் இறக்குந் தறுவாயில் கடப்பை, கர்நூல் கோட்டங்கனே வட எல்லையாக இருந்தன எனலாம். கடப்பைக் கோட்டத்தில் உள்ள நந்தலூர் ‘குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலம்’ எனப் பெயர் பெற்றது[36].

தலைநகரங்கள் : (1) குலோத்துங்கனுடைய சிறப் புடைக் கோ நகர் கங்கை கொண்ட சோழபுரமே ஆகும். (2) அடுத்தது காஞ்சிபுரமாகும். அதில் இருந்த அபிஷேக மண்டபத்தில் இருந்தே அரசன் சிறப்புடைய பல பட்டயங்களை வெளியிட்டுள்ளான்[37]. (3) கங்கை கொண்ட சோழன் வளர்த்த சிறப்புடைய அரண்மனை யான ஆயிரத்தளி (பழையாறை)யில் இருந்த அரண்மனை ஒன்று[38] (4) திருமழபாடி அரசற்கு உகந்த சிறந்த நகரமாக இருந்தது[39].

சிற்றரசர் : குலோத்துங்கன் ஆட்சியில் வெளிப்பட்ட கல்வெட்டுகளில் சிற்றரசர் பலர் குறிக்கப்பட்டுள்ளனர். (1) தென் ஆர்க்காடு கோட்டத்தின் வடமேற்கு மலைப் பகுதியைச் சேதிராயர் என்னும் பெயர் கொண்ட சிற்றரசர் ஆண்டு வந்தனர். அவர் தலைநகர் கிளியூர் என்பது. (2) பெரிய உடையான் இராசராசன், சந்திரன் மலையனான இராசேந்திர சோழன் என்பவர் திருமுனைப்பாடிநாட்டில் பேரரசர். அவருக்கு அடங்கிய தலைவர் சிலர் இருந்தனர். அவர்கள் மலையகுலராசன் முதலியோர். (3) வட ஆர்க்காட்டில் மேற்குப் பகுதியும் மைசூரின் கிழக்குப் பகுதியும் சேர்ந்த நாடு ‘முள்வாய் நாடு’ எனப்பட்டது. அதனைக் கங்க நுளம்பன் ஒருவன் ஆண்டு வந்தான்[40]. (4) வேங்கி நாட்டில் வெலனாண்டித் தலைவனான ‘கொங்கன் வடபகுதிச் சிற்றரசருட் சிறந்தவன். அவன் மரபினர் நீண்டகாலம் தம் நாட்டை அமைதியாக ஆண்டு வந்தனர்[41]. குலோத்துங்கன் இக்கொங்கன் மகனைத் தன் மைந்தன் போலக் கருதிச் சிறப்புச் செய்தான் என்று கல்வெட்டுக் கூறுகிறது. (5) கடப்பையை ஆண்ட சிற்றரசன் பொத்தப்பிகாம சோட மகாராசன் என்பவன். அவனுடைய சேனைத் தலைவர்கள் இராமண்ணன், பெக்கட பீமய்யன் என்பவர்[42]. (6) மற்றொரு தெலுங்கச் சிற்றரசன் பல்லவ மரபினன் ஆவன். அவன் தன்னை மகா ‘மண்டலேசுவரன்’ என்றும் ‘காஞ்சிபுரேசுவரன்’ என்றும் கூறியுள்ளான்[43].

அமைச்சரும் தானைத் தலைவரும் : இவர் பலராவர். இவருட்சிறந்தவர் சிலரே. இவருள் ‘ஞானமூர்த்தி பண்டிதன் ஆன மதுராந்தகப் பிரமாதிராசன்’ என்பவன் ஒருவன். இவன் நாலூரைச் சேர்ந்தவன்; வத்ச கோத்திரத்தான். இவன் சோழன் தானைத் தலைவருள் ஒருவன்[44]. ‘பாரத்வாசன் மன்ற நாராயணன்’ என்பவன் ஒருவன். இவனுக்கு ‘வீர சந்தோஷ பிரம சக்கரவர்த்தி’ என்ற பெயரும் இருந்தது. இவன் திருப்பத்துரை ஆண்ட சிற்றரசன் போலும் இவன் குலோத்துங்கன் அமைச்சருள் ஒருவன்[45]. கருணாகரத் தொண்டைமான் புகழ் பெற்ற சேனைத் தலைவனும் அமைச்சனும் ஆவன். இவன் பல்லவர் குலத் தோன்றல்; ‘வண்டையர் அரசன்-அரசர்கள் நாதன் - மந்திரி - உலகு புகழ் கருணாகரன்’ என்று சயங்கொண்டாரால் கலிங்கத்துப் பரணியிற் புகழப் பெற்றவன். இவன் விக்கிரம சோழனது ஆட்சியிலும் இருந்தான் என்பதை விக்கிரம சோழன் உலாகுறித்துள்ளது. இவனது ஊர் வண்டை என்பது. அது,சோழமண்டலத்தில் குலோத்துங்க சோழ வளநாட்டைச் சார்ந்த திருநறையூர் நாட்டில் உள்ள வண்டாழஞ்சேரி என்பதைக் கல்வெட்டு ஒன்று உணர்த்துகிறது[46]. அஃது இப்பொழுது ‘வண்டுவாஞ்சேர’ என்னும் பெயருடன் இருக்கிறது. இத்தொண்டைமான் மனைவி பெயர் ‘அழகிய மணவாளனி மண்டையாழ்வார்’ என்பது. அவள் சில கோவில்கட்கு நிபந்தங்கள் விடுத்துள்ளாள். கருணாகரத் தொண்டை மான் தமையன் ‘சேனாபதி-பல்லவராசர்’ என்பவன். அவன் கொடி, பழைய பல்லவர் கொடியாகிய நந்திக் கொடியாகும்[47]. அவனும் கலிங்கப் போரிற் கலந்து கொண்டவன் என்பதைப் பரணி பகர்கிறது. கருணாகரன் திருவாரூர்ச் சிவபிரானிடம் நீங்காத பேரன்பு உடையவன்; அக்கோவிலில் பல திருப்பணிகள் செய்தவன்; அக்கோவிற் பெருமான் திருவடிகளிற் கலந்தவன், தியாகேசர் பெயர்களுள் கருணாகரத் தொண்டைமான் என்பதும் ஒன்றாகும். அப்பெயர் இவனாற்றான் உண்டானது என்று திருவாரூர் உலா குறிக்கின்றது. இக்குறிப்பால் இவன் சிறந்த சிவபக்தன் என்பது விளக்கமாகின்றது.

அரையன் மதுராந்தகன் ஆன குலோத்துங்க சோழ கேரளராசன் என்பவன் ஒருவன். இவன் சிறந்த சேனைத் தலைவன்; சோழ மண்டலத்து மண்ணி நாட்டில் உள்ள முழையூருக்குத் தலைவன்: ‘குலோத்துங்க சோழக் கேரள ராசன்’ என்ற பட்டம் பெற்றவன். இவன் சேரநாட்டுப் போரில் சேனையை நடத்திச் சென்று வெற்றி பெற்றதால் இப்பெயர் பெற்றவன். இவன், குலோத்துங்கன் கோட்டாற்றில் நிறுவிய நிலைப்படைக்குத் தலைவனாக இருந்தவன். இத்தலைவன் கோட்டாற்றில் 'இராசேந்திர சோழேச்சரம்' என்ற கோவிலைக் கட்டினான்[48]. அக்கோவிற்குக் குலோத்துங்கன் நிலதானம் செய்துள்ளான். இத் தலைவனும் சிறந்த சிவபக்தன் என்பது தெரிகிறது.

மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் பெருஞ் சிறப்புற்ற சேனைத் தலைவன் ஆவன். இவன் தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றான ‘மணவில்’ என்ற ஊரின் தலைவன். இவன் குலோத்துங்கன் படைத்தலைவனாக அமர்ந்து, பாண்டி நாடு, வேணாடு, மலைநாடு முதலிய நாடுகளோடு போர் நடத்திப் புகழ் பெற்றவன்[49]. இவனால் சோழனுக்கு நிலைத்த புகழ் உண்டானது. இவனது திறமையைக் கண்டு பாராட்டிய குலோத்துங்கன் இவற்குக் ‘காலிங்க ராயன்’ என்னும் பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தான். இவன் விக்கிரம சோழன் ஆட்சியிலும் உயர்நிலையில் இருந்தான்[50].

இவன் சிறந்த சிவபக்தன். இவன் சிதம்பரம் கூத்தப் பிரானிடம் பேரன்பு பூண்டவன்; அங்குப் பல திருப்பணிகள் செய்தான், தில்லை அம்பலத்தைப் பொன் வேய்ந்தான்; நூற்றுக்கால் மண்டபம், பெரிய திருச்சுற்று மாளிகை, தேவாரம் ஓதுவதற்குரிய மண்டபம், சிவகாம கோட்டம் முதலியன கட்டுவித்தான்; ‘தியாகவல்லி’ முதலிய சிற்றூர்களை இச் சிதம்பரம் கோவிலுக்குத் தேவதானமாக அளித்தான்; மூவர் தேவாரப் பதிகங்தளைச் செப்பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம் பதியிற் சேமித்து வைத்தான்[51]. இவ்வீரன் திருவதிகைக் கோவிலில் காமகோட்டம் எடுப்பித்துப் பொன் வேய்ந்தான்; அடரங்கு அமைத்தான்; வேள்விச் சாலை ஒன்றை அமைத்தான்; தேவதானமாக நிலங்களை விட்டான். இங்ஙனம் இப் பெரியோன் செய்த திருப்பணிகள் பல ஆகும். இவற்றை விளக்கக்கூடிய வெண்பாக்கள் சிதம்பரம் கோவிலிலும் திருவதிகைக் கோவிலிலும் வரையப்பட்டுள்ளன[52].

அரசன் விருதுப் பெயர்கள் : இராசகேசரி முதல் குலோத்துங்க சோழதேவன், திரிபுவன சக்கரவர்த்தி, இராசேந்திரன், விஷ்ணுவர்த்தனன், சர்வலோகாச்ரயன், பராந்தகன், பெருமான் அடிகள், விக்கிரம சோழன், குலசேகர பாண்டிய குலாந்தகன், அபயன், சயதரன் முதலிய பட்டங்களைக் கொண்டிருந்தான். திருநீற்றுச் சோழன் என்ற பெயரும் இவனுக்குண்டு. இப்பெயரால் ஒரு சிற்றூர் இருந்தது. ’சுங்கம் தவிர்த்த சோழன்’ என்றும் குலோத்துங்கன் பெயர் பெற்றான். ‘உலகுய்ய வந்தான், விருதராச பயங்கரன்’ என்பனவும் குலோத்துங்கன் சிறப்புப் பெயர்களே என்பது பரணியால் தெரிகிறது.

நாட்டுப் பிரிவுகள் : குலோத்துங்கன் ஆட்சியில் இருந்த சோழப் பெருநாடு பல மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. அவை (1) சோழ மண்டலம் (2) சயங் கொண்ட சோழ மண்டலம் (3) இராசராசப் பாண்டிமண்டலம் (4) மும்முடிச் சோழ மண்டலம் (5) வேங்கை மண்டலம் (6) மலைமண்டலம் (7) அதிராசராச மண்டலம் என்பன. இவற்றுள் சோழ மண்டலம் என்பது தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளிக் கோட்டங்களும் தென் ஆர்க்காடு கோட்டத்தின் ஒரு பகுதியும் தன்னகத்தே கொண்டதாகும்; சயங்கொண்ட சோழமண்டலம் - தென் ஆர்க்காடு கோட்டத்தின் பெரும் பகுதியும் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, சித்துர் ஆகிய கோட்டங்களையும் தன்னகத்துக் கொண்டதாகும். இராசராசப் பாண்டி மண்டலம் என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய கோட்டங்களைப் பெற்ற நிலப்பரப்பாகும். மும்முடிச் சோழமண்டலம் என்பது ஈழ நாட்டின் வடபகுதிகளாகும். வேங்கை மண்டலம் என்பது கீழைச் சாளுக்கிய நாடாகும். மலைமண்டலம் என்பது திருவாங்கூர், கொச்சி, சேலம் கோட்டத்தின் ஒரு பகுதி, மலையாளக் கோட்டம் ஆகியவை அடங்கிய நிலப்பரப்பாகும். அதிராசராச மண்டலம் என்பது கோயமுத்தூர்க் கோட்டத்தையும் சேலம் கோட்டத்தின் பெரும் பகுதியையும் கொண்ட கொங்குநாடு ஆகும்.

இவன் காலத்தும் மண்டலம் பல வளநாடுகளாகவும், வளநாடு பல நாடுகளாகவும் பிரிக்கப்பட்டன. குலோத்துங்கன் தன் ஆட்சிக் காலத்தில் இவ் வளநாடுகட்குரிய பெயர்களை நீக்கித் தன் பெயர்களை அவற்றுக்கு இட்டனன்; ‘க்ஷத்திரிய சிகாமணி வளநாடு’ என்பதைக் ‘குலோத்துங்க சோழ வளநாடு’ என மாற்றினான்; இராசேந்திர சிங்கவள நாட்டை இரண்டாகப் பிரித்தான்; மேற்குப் பகுதிக்கு ‘உலகுய்யவந்த சோழவளநாடு’ என்றும் கிழக்குப் பகுதிக்கு ‘விருதராச பயங்கர வளநாடு’ என்றும் பெயரிட்டான். இவ் வளநாடுகள் பெரும்பாலும் இரண்டு ஆறுகளையே எல்லையாகக் கொண்டிருந்தன என்பது கல்வெட்டுகளால் நன்கறியலாம். சயங்கொண்ட சோழ மண்டலமாகிய தொண்டை நாடு மட்டும் பல்லவர் காலத்தில் இருந்தாற் போலவே 24 கோட்டங்களைப் பெற்றே இருந்து வந்தது.[53]

அரசியல்: குலோத்துங்கன் சிறந்த அரசியல் நிபுணன், குடிகள் உள்ளத்தைத் தன்பால் ஈர்த்தலே தன் கடமை என்பதை நன்குணர்ந்தவன்; ஆதலின் முதலில் ஒவ் வொருவரும் அரசர்க்கு ஆண்டுதோறும் செலுத்திவந்த சங்கம் நீக்கினான். இச்சுங்கம் ஏற்றுமதிப் பொருள்கட்கு இடப்படும் தீர்வையாகும். இச் செயலால் மக்கள் இவனைச் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ எனப் பாராட்டினர்; ‘தவிராத சுங்கம் தவிர்த்தோன்’ எனப் பரணி பாடிய சயங்கொண்டார் இவனை வாயாரப் புகழ்ந்தனர். இச்சுங்கம் தவிர்த்தமை சோழநாட்டளவே இருந்தது போலும்! கி.பி.194-இல் வெளிப்பட்ட கல்வெட்டு ஒன்று, ‘சோழ நாட்டில் சுங்கம் வசூலிப்பதில்லை’ என்பதைக் சுட்டுகிறது[54]. தஞ்சாவூரைச் சேர்ந்த கருந்திட்டைக் குடி ‘சுங்கம் தவிர்த்த சோழநல்லூர்’ எனப் பெயர் பெற்றது[55]

குலோத்துங்கன் தன் 17-ஆம் ஆட்சி ஆண்டிலும் 40-ஆம் ஆட்சி ஆண்டிலும் நிலத்தை அளக்குமாறு கட்டளையிட்டான் அளந்து முடிந்த பிறகு குடிகளிடம் ஆறில் ஒரு கடமை வாங்கினான். குலோத்துங்கன் ஆட்சியில் வரி விதிக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட நிலங்களும் உண்டு. இவையே இவனது ஆட்சியின் சிறந்த செயல்கள். ஏனையவை ‘சோழர் அரசியல்’ என்னும் பிற்பகுதியில் விளக்கம் பெறும் ஆண்டுக் காண்க.

அரசன் : குலோத்துங்கன் சிறந்த கல்விமான். இவன் வேங்கி நாட்டிற் பிறந்தவன்; நன்னைய பட்டனைக் கொண்டு தெலுங்கில் பாரதம் பாடச் செய்த இராசராச நரேந்திரன் செல்வமகன் ஆதலின் இவன் தெலுங்கு மொழியில் வல்லவனாக இருந்தான்; வடமொழி அறிவும் பெற்றிருந்தான் என்பது கூறப்படுகிறது. தமிழில் சிறந்த அறிவுடையவன் என்று பரணி ஆசிரியர் குறித்துள்ளார். இவன் ‘கலையினொடும் கவிவாணர் கவியி னொடும் இசையினொடும், பொழுது போக்கியவன்[56]. கவிவாணர்’ என்றமையால், இவனது அவைக்களத்தில் இருந்த சயங்கொண்டார் தவிர வேறு புலவர் பலரும் இவனை அடிக்கடி சென்று கண்டனர் போலும் இவன் புலவர் பலரை ஆதரித்தான் போலும் இவன் சிறந்த வீரன்! கலக்க முற்றுக் குழம்பிய நிலையில் இருந்த பெருநாட்டைத் தான் பட்டம் ஏற்றவுடன் அமைதிக்குக் கொணர்ந்த அரசியல் நிபுணன், சுங்கம் தவிர்த்துக் குடிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன், கடாரம், சீனம், கன்னோசி முதலிய வெளி நாடுகளுடன் அரசியல் உறவுகொண்டு, வாணிகத்தைப் பெருக்கிய அறிஞன் இழந்த ஈழநாட்டை மீட்கும் முயற்சியில் உயிர்களைப் பலியிடாத உத்தமன். சுருங்கக் கூறினால், இராசராசன், இராசேந்திரன் போன்ற பேரரசருள் இவனும் ஒருவன் ஆவன் என்னல் மிகையாகாது.

சமயநிலை : இப்பேரரசன் சிறந்த சிவபக்தன். சோழர் வழிவழியாகவே சிவபக்தராவர். இவன் தில்லைப் பெருமானைப் பேரன்பு பொங்க வழிபட்ட துரயோன்; ஆயின், பிற சமயங்களையும் மதித்துவந்த பெரியோன். இவன் கல்வெட்டுகள் எல்லாச் சமயத்தார் கோவில்களிலும் இருக்கின்றன. மன்னார்குடியில் உள்ள பெருமாள் கோவில் இவன் பெயரால் எடுப்பித்ததே ஆகும். அதன் பழைய பெயர் ‘குலோத்துங்க சோழ விண்ணகரம்’ என்பது. அஃதன்றி இப்பெரியோன் காலத்தில் இருந்த சிற்றரசர் பலர் வைணவக் கோவில்கள் பல எடுத்துள்ளனர், நிபந்தங்கள் விடுத்துளர். குலோத்துங்கன் கி.பி.1090-இல் நாகப்பட்டினத்தில் இருந்த இராசராசப் பெரும் பள்ளிக்கு (புத்த விஹாரத்திற்கு) நிலங்களைத் தானம் செய்துள்ளான். அதனைக் குறிக்கும் செப்பேடுகள் ஹாலந்து நாட்டு ‘லீடன்’ நகரப் பொருட்காட்சி சாலையில் உள்ளன. அவையே 'லீடன் செப்பேடுகள்’ எனப்படும். இவன் காலத்துச் சிற்றரசர் சிலரும் தனிப்பட்டார் சிலரும் சமணப் பள்ளிகட்கு நிபந்தங்கள் விடுத்துள்ளனர். எனவே குலோத்துங்கன் ஆட்சியில் எல்லாச் சமயங்களும் தத்தமக்குரிய சிறப்பைப் பெற்று வந்தன என்பது தெரியலாம். ஆயினும், அரசன் தன்னளவில் சிறந்த சிவபக்தனாகவே இருந்து வந்தான். தன்னைத் திருநீற்றுச் சோழன் என்று இவன் அழைத்துக் கொண்டமையே இவனது சிவநெறிப் பற்றை விளக்கப் போதியதன்றோ?

அரச குடும்பம்

மனைவியர் : குலோத்துங்க செப்புப் பட்டயங்கள், இவன் இராசேந்திரதேவன் மகளான மதுராந்தகியை மணந்தான் எனக் கூறுகின்றன. இவளுக்கு மக்கள் எழுவர் பிறந்தனர். இவர்கள் கி.பி.1017 முதல் வேங்கி இளவரசர் ஆயினர் என்பதைக் காணின், குலோத்துங்கன் கி.பி.1070இல் பட்டம் பெற்றதை எண்ணின், குலோத்துங்கன் ஏறத்தாழக் கி.பி.1060-இல் மதுராந்தகியை மணந்தான் என்னலாம். மதுராந்தகியே கோப்பெருந்தேவியாக இருந்தாள். அவள் புவன முழுதுடையாள், அவனிமுழுது டையாள் எனப்பட்டாள். அவள் தீனசிந்தாமணி என்னும் பெயரையும் உடையவள்.[57] அவள் குலோத்துங்கனது 30ஆம் ஆட்சி ஆண்டிற்கு முன்பு இறந்தனள். அதனால், தியாகவல்லி என்பவள் பட்டத்தரசி ஆனாள். மற்றொரு மனைவி ஏழிசை வல்லபி. இவள் ‘ஏழ் உலகுடையாள்’ பற்றி ‘ஏழிசை வல்லபி’ எனப்பட்டாள் போலும்! பிற அரச மாதேவியருள் திரைலோக்கிய மாதேவி ஒருத்தியாவாள். இவள் தன் தாயான உமைநங்கையின் நல்ம் கருதி ஆர்ப்பாக்கம் கோவிலில் கி.பி.1072-இல் விளக்கு ஒன்று எரிய ஏற்பாடு செய்தாள்.[58] சோழன்-சோறுடையான் ஆன காடவன் மாதேவி என்பவள் ஒரு மனைவி. இவள் பல்லவர் குலப்பாவை.[59] திரிபுவன மாதேவி என்ற கம்பமாதேவி ஒரு மனைவி. இவள் விஷ்ணுபக்தி உடையவள்[60]. ஆதித்தன் ஆண்ட குட்டியார்’ என்ற சோழகுல வல்லியார் ஒரு மனைவி[61]. இதுகாறும் கூறியவற்றால், இவனுக்கு (1) மதுராந்தகி (2) தியாகவல்லி (3) ஏழிசைவல்லபி (4) திரைலோக்கியமாதேவி (5) காடவன் மாதேவி (6) கம்ப மாதேவி (7) சோழகுலவல்லி என மனைவியர் எழுவர் இருந்தமை அறியக் கிடக்கிறது.

உடன் பிறந்தார் : இவனுக்குக் குந்தவ்வை, மதுராந்தகி என்ற உடன் பிறந்த பெண்மணிகள் இருவர் இருந்தனர் என்பது சிதம்பரம் கல்வெட்டுகளால் தெரிகிறது.[62]

மக்கள் : குலோத்துங்கற்கும் மதுராந்தகிக்கும் பிறந்த ஆண்மக்கள் எழுவர், பெண்மக்கள் இருவர். ஆடவருள் இராசராசன், வீர சோழன், சோழகங்கன், விக்கிரம சோழன் ஆகியவரே கல்வெட்டுகளில் இடம் பெற்றுள் ளனர். இவருள் மூத்தவன் சோழகங்கன்; அவற்கு இளையவன் இராசராசன், அவற்கு இளையவன் வீரசோழன்; நான்காம் மகன் விக்கிரம சோழன்[63]. இவருள் குலோத்துங்கன் உள்ளம் கவர்ந்த மகன் விக்கிரம சோழனே ஆவன். இவனே தந்தைக்குப் பின் அரசு கட்டில் ஏறியவன். குலோத்துங்கன் வீரசோழனையும் மிக்க அன்புடன் நேசித்து வந்தான்; அவனை இருமுறை வேங்கியை ஆளுமாறு அனுப்பினான்[64].

குலோத்துங்கன் பெண்மக்களில் மூவர் பெயர்களே கல்வெட்டுகளில் அறியக் கிடக்கின்றன. அவை இராசசுந்தரி, சூரியவல்லி, அம்மங்கை என்பன. இப் பெண்மணிகளுள் இராசசுந்தரி கலிங்க அரசனான இராசராசனை மணந்தவள். சூரியவல்லி இலங்கை இளவரசன் ஒருவனை மணந்தவள். பிள்ளையார் அம்மங்கை ஆழ்வார் என்பவளைப் பற்றிய குறிப்புத் தெரியவில்லை; பெயர் மட்டுமே தெரிகிறது[65].

இராசகேசரி முதற் குலோத்துங்கன் கி.பி. 1022 வரை சோழப் பேரரசை (52 ஆண்டுகள்) அரசாண்டான் என்பது அறிந்து இன்புறத்தக்கது[66]. இவனுக்குப்பின் விக்கிரமசோழன் சோழப் பேரரசன் ஆனான். இக்குலோத்துங்கன் கல்வெட்டுகள், திருமன்னி வளர’, ‘திருமன்னி விளங்க’, ’பூமேல் அரிவையும்', ‘பூமருவிய திருமடந்தையும், புகழ் மாதுவிளங்க', ‘புகழ் சூழ்ந்த புணரி’, ‘பூமேவி வளர முதலிய தொடக்கங்களை உடையன.


  1. S.I.I. Vol.6, No. 167
  2. Ibid. No. 201.
  3. 3.0 3.1 S.I.I. Vol.3, No. 68, K. Parani, K. 239.
  4. Ibid. No. 68 and Ep Ind. Vol. 9. pp, 161 and 179.
  5. Vikrmaditya charita, p.30
  6. Ibid, p.34.
  7. Mahavamsa, chap. 58
  8. S.I.I. Vol. 3, p. 147
  9. A.R.E. 1927, II 18.
  10. K.A.N. Sastry’s ‘Studies in Chola History p.178-180,
  11. Cula Vamsa, (Geiger) Vol.1, pd. 216-218.
  12. K.A.N. Sastry’s ‘Cholas II.p.25
  13. K.A.N. Sastry’s “Cholas’, Vol.II. pp. 25,26
  14. Ep. Ind Vol. 5, p. 105
  15. ‘ஆகவமல்ல குலகாலபுரம்’ என்ற பெயரும் உண்டு.
  16. S.I.I. Vol, 3, p. 146
  17. K.A.N. Sastry's cholas', Vol. II, p. 30
  18. இது ‘தாக்ஷாராமம்’ என்று இருத்தலே பொருத்தமுடையது
  19. R.D. Banerji's, Haihayas of Tiripuri, p.57.
  20. Travancore Archealogical Series, Vol. I, p.22
  21. Cunningham's Ancient Geography'. p.591.
  22. Ep. Ind. Vol. 6, p.335.
  23. 44 of 1891.
  24. K.A.N. Sastry’s Chola’s, Vol. II, pp. 37-38.
  25. இவ்வரண்மனை பற்றிய குறிப்பு உத்தமசோழன் கல்வெட்டுகளிற் காணலாம்.
    S.I.I. Vol.3. p. 269.
  26. Ep. Ind. Vol. 4, No.33.
  27. 819 of 1922
  28. 330 of 1893.
  29. 258 of 1905
  30. 266 of 1893.
  31. Rice’s ‘Mysore and Coorg from Ins.’ p.93
  32. Ep. Carnataka, Vol. II, No.240.
  33. A.R.E. 1927, Vol.II, 19-21.
  34. Ep. Ind VI. II, No.3.
  35. 29 of 1908; A.R.E. 1908, Vol.II, 58-60.
  36. 600 of 1907
  37. S.I.I. Vol.3, No.73; M.E.R. 1917, pp. 42-44
  38. A.S of S.I. Vol. 4, 224
  39. 231 of 1916
  40. 568 of 1906
  41. A.R.E. 1917, Vol. II, 27
  42. 262, 263 of 1905
  43. 405 of 1893
  44. 119 of 1912
  45. 519 of 1022; A.R.E. 1923, II. 33,
  46. S.I.I. Vol.4, No.862
  47. 46 of 1914.
  48. S.I.I. 3, Vol. No.73
  49. S.I.I. Vol. 4. No.225
  50. V.Ula-K. 78,79.
  51. S.I.I. Vol. 4, 225.
  52. 369 of 1921; M.E.R. 1921; Vide ‘Sentamil’ Vol.23
  53. S.I.I. Vol. II, No.4
  54. 288 of 1907
  55. 374 of 1908
  56. க பரணி, 263
  57. S.I.I. Vol.3. No.72
  58. 138 of 1923
  59. 39 of 1921
  60. 45 of 1921
  61. 39,45 of 1921
  62. 117,119 of 1888
  63. Ep.Ind.Vol. 6.p.335; S.S.I.I. Vol. 3.p. 179, K.A.N. Sastry's ‘Cholas’, Vol 2, p.52.
  64. Ep. Ind. 5, No.10
  65. S.I.I. Vol.4, No.226
  66. K.A.N Sastry’s ‘Cholas’.
  1. இஃது இராசராசபுரம் என்று சோழர் ஆட்சியில் பெயரிடப்பட்டது.