சோழர் வரலாறு/மூன்றாம் குலோத்துங்கன்

6. மூன்றாம் குலோத்துங்கன்
(கி.பி. 1178 - 1218)

இளமைப்பருவம்: இராசாதிராசனுக்கு இவன் தம்பியாவன் என்பது உண்மை ஆயின் அவனுக்கு ஒராண்டு இளையவனே ஆவன். எனவே இராசாதிராசன் பட்டம் ஏற்றபொழுது இவன் மூன்று வயதுச் சிறுவனாக இருந்தான்; தமையனுடனே இருந்து அரசியல் பழக்கம் சிறுவயதிலே கைவரப் பெற்றான். தமையன் 17 ஆண்டுகள் அரசாண்டு 20-ஆம் வயதில் இறந்தானாதல் வேண்டும். இவன் கி.பி. 1178-இல் தன் 18ஆம் வயதில் பட்டத்தைப் பெற்றான் நல்ல இளமைப் பருவத்தில் பட்டம் பெற்றமையானும் அதற்குள் தமையனுடன் இருந்து அரசியல் அமைதியை நன்கு அறிந்திருந்தவன் ஆதலாலும், சிறுவயதில் அரசமாதேவியார் பக்கலில் இருந்து வளர்ந்தமையாலும் பெருநாட்டின் நிலையையும் அரசமரபின் வரலாற்றையும் பிறவற்றையும் நன்கறிந்தவன். இளமைப் பருவத்தில் ஒட்டக்கூத்தர் போன்ற பெரும் புலவர் பழக்கம் இவனுக்கு இருந்திருத்தல் இயல்பே அன்றோ?

பிறந்த நாள் : இப்பேரரசன் பிறந்த நாள் தைத்திங்கள் அத்த நக்ஷத்திரம் ஆகும். இவன் தன் பெயரால், திருநறுங்கொண்டைப் பெரும்பள்ளி அருகதேவற்கு “ஆறாவது முதல் நம்பேராலே இராசாக்கள் நாயன் திருநாள் என்று தைத்திங்களில் அத்தத்திலே தீர்த்தமாகத் திருநாள் எழுந்தருளுவிப்பதாகச் சொன்னோம்”[1] என்று கட்டளையிட்டுள்ளதனால் இது தெரிகின்றது. இங்ஙனம் முதல் இராசராசன் தான் வென்ற சேரநாட்டில் தன் பிறந்தநாள் விழாக் கொண்டாட ஏற்பாடு செய்ததை முன்னர்ப் படித்தோம் அன்றோ?

உடல் அமைப்பு : இவன் கருவீர மேகம், கருமேக வண்ணன், ஒண்பூவை வண்ணன், உருவால் மதனன்; உறுப்பால் மதனன், கட்டாண்மை வீமன், அழகு, ஆண்மை எல்லாம் கண்டார் கொண்டாடும் குலோத் துங்கன் சோழன்’ என்று குலோத்துங்கன் கோவை ஆசிரியர் இவனைப் பற்றிக் கூறியுள்ளனர்.

கல்வெட்டுகள் : இவன் காலத்துக் கல்வெட்டுகள் பலவாகும். அவற்றில் பெரிதும் காணப்படும் தொடக்கம் ‘புயல் வாய்த்து வளம்பெருக’ என்பது. பிற தொடக்கங்கள் ஆவன-‘மலர் மன்னும் பொழில் ஏழும்’ பூமேவி மருவிய’, ‘பூமேவிவளர்’, ‘பூமருவிய திசைமுகத்தோன்’ என்பன. இவற்றுள் சில இரண்டாம் இராசராசன், இரண்டாம் குலாத்துங்கன் கல்வெட்டுத் தொடக்கங்கள் எனினும், போர்ச் செயல்களைக் கொண்டு வேறு பிரித்துக் காட்டலாம்.

நாட்டு நிலைமை : மூன்றாம் குலோத்துங்கன் அரசு கட்டில் ஏறிய ஞான்று சோழப் பெருநாடு திறமை மிக்க அமைச்சரால் திறம்பட ஆளப்பட்டு வந்தது. ஆயினும், பெருநாட்டு நடு அரசியல் அமைப்புச் சீர்கெட்டுக் கொண்டே வந்தது. இதற்குச் சிறந்த காரணம், சிற்றரசரும் படைத்தலைவரும் உயர் அலுவலாளரும் தம் நாடுகளில் தனிப்பட்ட உரிமைகளை நாட்டிக்கொண்டு நடு அரசியல் அமைப்பை மதியாது நடந்து வந்ததே ஆகும். இந்நிலைமை முதற்குலோத்துங்கற்குப் பின் தோன்றி இராசாதிராசன் காலத்தில் வலுப்பெற்றது. பெருநாட்டிற்கு வெளியே ஈழத்தரசன் பாண்டி மண்டல அரசியலிற் புகுந்து குழப்பம் உண்டாக்கி வெற்றியும் தோல்வியும் கலந்து நுகர்ந்து வந்தான். தெலுங்கு நாட்டில் இருந்த சிற்றரசரும் தம் மனம் போனவாறு நடக்கத் தலைப்பட்டனர். இராசராசன், இராசாதிராசன் கல்வெட்டுகளே நெல்லூர்க்கு வடக்கே இல்லாததற்குக் காரணம் இதுவே ஆகும். அதற்கு வடக்கே சாளுக்கியப் பெருநாட்டை விழுங்கிக் காகதீயர் வன்மை பெற்று வந்தனர். மேலைச் சாளுக்கியர் ஒடுங்கிவிட்டதால், மைசூர்ப் பகுதியில் ஹொய்சளர் வன்மையுற்று அரசியல் செல்வாக்குப் பெறலாயினர்.இந்நிலைகளை நன்கு கவனித்த மூன்றாம் குலோத்துங்கன், முதலில் சோழப் பெருநாட்டில் அமைதியை உண்டாக்கிப் பலப்படுத்தத் துணிந்தான்.

போர்ச் செயல்கள்

படைகள் : சோழர் படைகள் திறம் வாய்ந்தவை. அவை முதற்பராந்தகன் காலமுதலே நல்ல பயிற்சிபெற்று வழி வழி வந்தவையாகும். இக்குலோத்துங்கன் காலத்தில் இருந்த யானைப்படை சிறப்புடையது. கி.பி.1178-இல் சீன ஆசிரியர் ஒருவர் சோணாட்டுப் படையைப்பற்றி இங்ஙனம் வரைந்துள்ளார் :-

“சோழர் அரசாங்கத்தில் 60 ஆயிரம் யானைகள் கொண்டபெரும்படை இருக்கிறது. ஒவ்வொரு யானையும் 2 அல்லது 3 மீ உயரம் உடையது. போர்க்களத்தில் இந்தக் கரிகள் மீது வீரர் பலர் செல்கின்றனர். அவர் கைகளில் ஈட்டி, வில், அம்பு முதலியன கொண்டுள்ளனர்; நெடுந்துரம் அம்பு எய்வதில் வல்லுநர். போரில் வெற்றி பெறும் யானைகட்குச் சிறப்புப் பெயரிட்டு அழைக்கின்றனர். அவற்றின் மீது சிறப்பை அறிவிக்க உயர்தரப் போர்வைகள் விரிக்கப்படும். நாள்தோறும் அரசன் திருமுன் யானைப் படை நிறுத்தப்படும்.” 

பாண்டி நாட்டுப் போர் : இவ்வரசன் கல்வெட்டுகளில் தென்னாட்டுப் போரே சிறந்து காணப்படுகிறது. இவன் (1) மதுரை கொண்டது, (2) பாண்டியன் முடித்தலை கொண்டது, (3) ஈழநாடு கொண்டது, (4) கருவூர் கொண்டது, (5) கச்சி கொண்டது, (6) மதுரையில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்துகொண்டமை ஆகிய செயல்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஆதலின், இவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

மதுரை கொண்டது : அண்ணன் பல்லவராயனிடம் தோற்றோடிய குலசேகர பாண்டியன் இறந்தான். அப்பொழுது மதுரையை ஆண்டு வந்தவன் வீரபாண்டி யன். குலசேகரன் மகனான விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோத்துங்கனை அடைக்கலம் புகுந்தான்.[2] இரண்டாம் இராசாதிராசனால் துரத்தப்பெற்ற குலசேகரன் மகனை அவனுக்குப் பின் வந்த குலோத்துங்கன் ஏன் சேர்த்துக் கொண்டான்? ஒன்று, வீரபாண்டியன் சோழனுக்கு எதிராக, இலங்கை அரசனுடன் நட்புக் கொண்டிருத்தல் வேண்டும்; அல்லது சோழனுக்கு மாறாக வேறு துறையில் நடந்திருத்தல் வேண்டும்; அல்லது வீரபாண்டியன் பாண்டிய அரசு பெறத் தகாதவனாக இருத்தல் வேண்டும். காரணம் யாதாயினும் ஆகுக. குலோத்துங்கற்கும் வீரபாண்டியற்கும் உதவியாக வந்த சிங்களவர் மூக்கறுப்புண்டு இறந்தவர் போக எஞ்சியவர் கடல் வழியே இலங்கை நோக்கி ஓடினர். இங்ஙனம் முதற்போர் குலோத்துங்கற்கு வெற்றி அளித்தது. சோழன் மதுரையும் அரசும் கொண்டு வெற்றித் தூண் நாட்டினன், மதுரையும் அரசும் விக்கிரம பாண்டியற்கு அருளி மீண்டனன்.[3]

முடித்தலை கொண்டது : தோற்று ஒடிய வீரபாண்டியன் சேர நாட்டை அடைந்தான் சேரன் உதவியைப் பெற்று இழந்த நாட்டை மீட்க முயன்றான்; சிதறிக்கிடந்த தன் பழைய சேனையையும் திரட்டிச் சேரப் படையுடன் பாண்டி நாட்டிற்குள் நுழைந்தான்; இதனை அறிந்த குலோத்துங்கன் உருத்தெழுந்து தன் பெரும் படையுடன் சென்று நெட்டுரிற் பகைவனைச் சந்தித்தான். இருதிறப் படைகட்கும் போர் நடந்தது. முடிவென்ன? வீரபாண்டியன் தோற்றான்; அவன் படைவீரர் நாலாப் பக்கங்களிலும் ஒடலாயினர். அவனது முடி சோழன் கைப்பட்டது. அவன் கோப்பெருந்தேவியும் சிறைப்பட்டாள்.குலோத்துங்கன் அவனைத் தன் வேளத்திற்கு[4] அனுப்பிவிட்டான். வீரபாண்டியன் பொறுக்க இயலாத அவமானத்துடன் சேரநாட்டை அடைந்தான். சேரன் தான் பாண்டியனுக்கு உதவிபுரிந்த தவற்றை உணர்ந்து, வீரபாண்டியனுடன் வந்து குலோத்துங்கனைச் சரண் அடைந்தான். பெருந்தகையான குலோத்துங்கன் அவ்விருவரையும் அரசர்க்குரிய முறையில் வரவேற்றுச் சிறப்புச் செய்தான்;[5] வீரபாண்டியற்குப் பாண்டிய நாட்டில் ஒரு பகுதியை ஆள உரிமை அளித்து முடியும் ஈந்தான். வீரபாண்டியன் தான் ஈன்ற மைந்தற்குப் பரிதி குலபதி (சோழர்குலத் தலைவன்) என்ற குலோத்துங்கன் விருதுப் பெயரினை இட்டுச் சோழன் முன் நிறுத்த, குலோத்துங்கன் மகிழ்ந்து அவற்குச் சிறப்புப் பல செய்தான்.[6] இதுகாறும் கூறிய செய்திகள் இரண்டாம் பாண்டிப்போர் ஆகும். பாண்டியனது முடித்தலை கொண்ட களம் ஆதலின் மதுரை, ‘முடித்தலை கொண்ட சோழபுரம்’ எனப்பட்டது. இவ்விரு போர்களும் இவன் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகட்குள் நடந்தனவாகும். இது, இவனது இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் (திருவக்கரையில்) இவை குறிக்கப்பட்டிருந்ததால் என்க. இச்செயல்களையே இவன்மீது பாடப்பெற்ற ‘குலோத்துங்கன் கோவை'யும் புகழ்ந்து பாராட்டியுள்ளது.

வேள் நாட்டுப் போர்: மேற் கூறப்பெற்ற போர்கட்குப் பிறகு வேள் நாட்டை ஆண்ட வீரகேரளன் என்பவன் குலோத்துங்கனைப் பகைத்துக் கொண்டான். அதனால் இருவர்க்கும் போர் நிகழ வேண்டியதாயிற்று. அப்போரில் வீரகேரளன் தன் கைவிரல்கள் தறிக்கப் பட்டுத் தோற்றான்; வேறு வழியின்றிச் சோழனிடமே அடைக்கலம் புகுந்தான். அடைந்தார்க்கு எளியனான அண்ணல் குலோத்துங்கன் அவனை வரவேற்றுத் தன்னுடன் இருந்து உண்ணுமாறு உபசரித்து, அவனது நாட்டை அவனுக்கே அளித்து மகிழ்ந்தான்.[7]

ஈழம் கொண்டது : இராசாதிராசன் காலம் முதலே சோழர் செல்வாக்கை ஒழிக்க முயன்று முடியாது தவித்த முதலாம் பராக்கிரமபாகு, குலோத்துங்கன் காலத்திலும் ஈழத்தரசனாக இருந்தான். இவன் முன் போலவே மதுரையிற் பூசல் விளைக்க முனைந்தான். இதனை உணர்ந்த குலோத்துங்கன் கி.பி. 1888 அல்லது 1889 இல் படை ஒன்றை ஈழத்திற்கு ஏவினான். அப்படை சென்று சிங்களரைப் புறங்காட்டி ஒடச் செய்து மீண்டது. இக்குலோத்துங்கன் ‘ஈழவேந்தன் முடிமீது தன் அடியினைச் சூடியவன்’ என்று திருமாணிக்குழி கல்வெட்டுக்[8] கூறலால், ஈழத்தரசன் இவனைப் பேரரசனாக ஒப்புக்கொண்டு அடங்கி விட்டான் என்று கோடல் தகும்.

கருவூர் கொண்டது : கருவூர் சேர நாட்டின் தலைநகராக ஒரு காலத்தில் இருந்தது; கொங்கு மண்டலத்தின் கோநகரமாகவும் இருந்தது. இதனைத் தலைநகராகக் கொண்டுசேரர் மரபினர் சோழர்க்கு அடங்கி ஆண்டுவந்தனர். அவருள், குலோத்துங்கன் காலத்தில் அரசனாக இருந்தவன் தன் மனம் போனவாறு சோழனை மதியாது நாட்டை ஆண்டு வந்தான். அதனால், குலோத்துங்கன் அவனை அடக்கப் படையெடுத்தான். போர் மிகவும் கடுமையாக நடந்தது; சேரன் படுதோல்வி அடைந்தான். போரில் தோற்ற சேரன் குலோத்துங்கனைச் சரணடைந்தான். இதனால், கருவூர் சோழன் கைப்பட்டது. இவன் அந்நகருள் நுழைந்து ‘சோழ கேரளன்’ என்று மன்னர் தொழ வெற்றிமுடி சூடி விளங்கினான். அன்றுமுதல் குலோத்துங்கன் ‘சோழகேரளன்’ எனப்பட்டான்; கொங்குமண்டலம் ‘சோழ கேரள மண்டலம்’[9] எனப்பட்டது.ஆயினும், பெருந்தன்மை பெற்ற குலோத்துங்கன், தன்னைச் சரண்புக்க சேரனுக்கே நாடாளும் உரிமை அளித்து மீண்டான். அதுமுதல் சேரன் பேரரசற்கு அடங்கித் தன் நாட்டை அமைதியுற ஆண்டுவந்தான். இங்ஙனம் அவனுக்குக் கருவூரில் முடிவழங்கினமையின், அந்நகரம் ‘முடிவழங்கு சோழபுரம்’ எனப் பெயர் பெற்றது.[10] இக் கொங்குப் போர் இவனது 16-ஆம் ஆண்டிலிருந்து புறப்பட்ட கல்வெட்டுகளிற் குறிப்பிடப்படலால், இப்போர் ஏறத்தாழக் கி.பி.1194-இல் நடந்ததாதல் வேண்டும் எனக் கொள்ளலாம்.

கச்சி கொண்டது : ‘கருவூரும் கச்சியும் கொண்டருளிய’ என்பது இவனது கல்வெட்டுகளிற் பயின்று வரலால், கருவூர் வெற்றிக்குப் பிறகு அடுத்து நடந்த செயல் கச்சி கொண்டதாகும் எனக் கோடல் தவறாகாது. இச்செயலைப் பற்றிய விவரம் உணரக்கூடவில்லை. ‘மகாராசப்பாடி ஏழாயிரம்’ ஆண்ட தெலுங்கு சோடனான ‘நல்லசித்தன் தேவன்’ என்பவன் கச்சியிலிருந்து தான் திறைபெற்று வந்ததாகக் கூறிக்கொள்கிறான்.[11] அதனால், அவன், குலோத்துங்கன் தென்னாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த போது, கச்சியைத் திடீரெனத் தாக்கிக் கைப்பற்றி இருக்கலாம். உடனே குலோத்துங்கன் வடக்கு நோக்கிச் சென்று அதனைக் கைப்பற்றி இருக்கலாம். குலோத்துங்கன் இங்ஙனம் கி.பி.1196-இல் கச்சியைக் கைப்பற்றியதோடு நல்ல சித்தனது தனிப்போக்கையும் அடக்கி ஒடுக்கி இருக்க வேண்டும். என்னை? சித்தரசன் குலோத்துங்கன் ஆட்சி முழுவதிலும் அவனுக்கு அடங்கிய சிற்றரசனாகவே இருந்து வந்தனன் ஆதலின் என்க.

மூன்றாம் பாண்டிப் போர் : கி.பி. 1202-க்குச் சிறிது முன் குலோத்துங்கன் மதுரையில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டதாக இவனுடைய 26ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் குறிக்கிறது. இதன் விவரம் குடுமியான் மலைக்கல்வெட்டில் விளக்கப்பட்டுள்ளது:

குலோத்துங்கனால் சிறப்புப்பெற்ற விக்கிரம பாண்டியன் மகனான ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் பாண்டி நாட்டைக் கி.பி. 1190 முதல் ஆண்டு வந்தான். இவன் சில ஆண்டுகளுக்குள் செருக்குற்றுச் சோழற்கு அடங்காமல் (தன் மனம் போனவாறு) நாட்டை ஆண்டுவந்தான் குலோத்துங்கற்கு மாறான செயல்களையும் செய்து வந்தான். அவனுடைய மெய்ப்புகழ்கள் அவன் வெறுப்புற்ற மனப்பான்மையை நன்கு உணர்த்துகின்றன.

குலசேகரன்செய்துவந்ததுரோகச்செயல்கள் சோழற்கு எட்டின. அவன் அரும்பாடுபட்டு அமைதி நிலவச் செய்த பாண்டிநாடு குலசேகரன் ஆட்சியால் பாழாவதை அறிந்து சீற்றங்கொண்டான் அவனைத் துரத்திவிட்டுப் பாண்டிய நாட்டைச் சோழர் அரசியற் பார்வையில் வைத்தலே நேர்மையானது எனத் துணிந்தான். உடனே பெரும் படையுடன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தான். உடனே மட்டியூர், கழிக்கோட்டை என்ற இடங்களிற் கடும்போர் நடந்தது. அதிகம் அறைவதேன்? குலசேகரன் படை அழிந்தது. அவன் காடுகளிற் புக்கு ஒளித்தான். உடனே சோழப்படை மதுரையைக் கைப்பற்றியது: அரண்மனையுள் முடிசூட்டு மண்டபம் முதலியவற்றை இடித்து அழித்தது; அவ்விடங்களைக் கழுதை ஏர் கொண்டு உழுது வரகு விதைத்துப் பாழ் படுத்திவிட்டது. இங்ஙனம் மதுரை பாழானது. குலோத்துங்கன் சீற்றமும் தணிந்தது. இப்பெருமகன் மதுரையில் ‘சோழ பாண்டியன்’ என்ற பட்டமும், வீரமாமுடியும் தரித்து வெற்றித்துரண் நாட்டினான்; இங்ஙனம் பாண்டியனையும் சேரனையும் வென்றமையால் திரிபுவன வீரன் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான். இப்போருக்குப் பின்னர்ப் பாண்டி மண்டலம் ‘சோழபாண்டிமண்டலம்’ எனப்பெயர்பெற்றது:சோழரது நேர் ஆட்சியில் அடங்கி விட்டது. மதுரை ‘முடித்தலைகொண்ட சோழபுரம்’ எனப்பட்டது; மதுரை அத்தாணி மண்டபம் ‘சேர பாண்டியர் தம்பிரான்’ எனப் பெயர் பெற்றது. இங்ஙனம் பெரு வெற்றி பெற்ற குலோத்துங்கன் மதுரையில் விசய அபிடேகமும் வீர அபிடேகமும் செய்துகொண்டான் என்று அவன் புதுக்கோட்டைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.[12] குலோத்துங்கன் கொண்ட இப்பெரு வெற்றி கி.பி. 1201-ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டில் இவன் ‘திரிபுவன வீரதேவன்’ எனக் கூறப்பட்டிருத்தலின் என்க.

வட நாட்டுப் போர் : குலோத்துங்கன் ‘ஏழு கலிங்கமும் கொல்லாபுரமும் உரங்கை, (ஓரங்கல்) பொருதோன்’ என்று இவனது கோவை கூறுகிறது. இவனைப் பற்றிய புதுக் கோட்டைக் கல்வெட்டுகள் இரண்டும் இச்செய்தியைக் குறிக்கின்றன. ஆயின், அவ்விடங்களில் இவனது, கல்வெட்டு ஒன்றும் இல்லை. மேலும், காகதீயப் பேரரசனான கணபதி கி.பி.1799-இல் பட்டம் பெற்று, மேலைச் சாளுக்கியரை அடக்கிப் பெரு நாட்டை ஆண்டு வந்தான். அக்காலத்தில் சோழன் வடநாடு சென்று வெற்றி கொண்டான் என்பதற்கு வடநாட்டில் ஒரு கல்வெட்டும் சான்றில்லை. ஆதலின், இது புகழ்ச்சி மொழி எனக் கோடலே நன்று.[13] கம்பர் பெருமான் இக் குலோத்துங்கன் அவைப் புலவர் என்பது அறிஞர் ஒப்புக் கொண்டதே ஆகும். அவர் இச் சோழனிடம் மனம் வேறுபட்டவராய் ஓரங்கல்லைக் கோநகராகக் கொண்டு பெருநாட்டை ஆண்ட காகதீய முதற் பிரதாபருத்திரன் (கி.பி. 1162-1197) என்பவனிடம் சென்று தங்கியிருந்தார் என்பது உண்மை ஆயின் கம்பர் சோழற்குப் பகைவனான காகதீய அரசனிடம் சென்றிருந்தார் எனக் கோடலே பொருத்தமாகும். இது பொருத்தமாயின், சோழனுக்கும் பிரதாபருத்திரற்கும் பகைமை அல்லது பேரரசர் என்ற முறையில் பொறாமை இருந்திருத்தல் வேண்டுமன்றோ? பகைமை ஆயின், புதுக்கோட்டைக் கல்வெட்டுகளிற் குறித்த குலோத்துங்கன் செய்த வடநாட்டுப் போர்கள் உண்மையெனக் கோடவில் தவறில்லை அன்றோ? கோவையும் கல்வெட்டுகளும் சேர்ந்து கூறும் வடநாட்டுப் போர் ‘நடந்திராது’ என்று ஒதுக்கி விடுவதற்கில்லை. உண்மை மேலும் ஆராயற்பால தேயாம்.

சோழப் பெருநாடு : மூன்றாம் குலோத்துங்கனுடைய கல்வெட்டுகள் வடக்கே நெல்லூர், கடப்பைக் கோட்டங்களிற் காண்கின்றன; தெற்கே திருநெல்வேலி முடியக் கிடைக்கின்றன; மேற்கே ஹேமாவதி, அவனி, எதுரூர் முதலிய மைசூர்ப் பகுதிகளிலும் கொங்கு மண்டலத்திலும் இருக்கின்றன. ஆதலின் வடக்கே கடப்பை முதல் தெற்கே கன்னி முனை வரையும், மேற்கே மைசூர் முதல் கீழ்க்கடல் வரையும் இவனது ஆட்சி பரவி இருந்ததென்பதை அறியலாம்.[14]

இவனது ஆட்சிக்குட்பட்ட மண்டலங்களுட் சிறந்தது சோழ மண்டலமே ஆகும். அது 9 வள நாடுகளாகவும் 79 நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ மண்டலம் ‘பெரியநாடு’ எனப் பெயர் பெற்றிருந்தது[15].

கோ நகரங்கள் : விசயாலயன் வழிவந்த சோழவேந்தர் காலங்களில் ஆயிரத்தளி, தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம்,இராசராசபுரம் என்பன அரசர் வசிப்பதற்கேற்ற கோ நகரங்களாக இருந்தன. ஆயிரத்தளி-நந்திபுரம், பழையாறை, முடிகொண்ட சோழபுரம் என்னும் பெயர்களைக் கொண்டது. மூன்றாம் குலோத்துங்கன் இறுதிக் காலத்தில் அல்லது அவனுக்கு அடுத்துவந்த மூன்றாம் இராசராசன் காலத்தின் தொடக்கத்தில் சோணாட்டை வென்ற சடாவர்மன் சுந்தர பாண்டியன் இந்த ஆயிரத்தளி நகரை அழித்து வீர அபிஷேகமும் விசய அபிஷேகமும் (குலோத்துங்கன் மதுரையிற் செய்தாற் போல) செய்து கொண்டான் என்பதிலிருந்து, மூன்றாம் குலோத்துங்கன் கோநகரமாக இருந்தது ஆயிரத்தளியே ஆகும் என்பது தெரிகிறது. இப்பிற்காலச் சோழர் காலத்திற் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது நாகப்பட்டினமாகும்.

அரசியல் : மூன்றாம் குலோத்துங்கனது நீண்ட அரசாட்சியில் நேர்மை மிக்கிருந்தது. அரசியல் அலுவலா ளராகப் பலர் இருந்தனர். அவருள் களப்பாளராயர், தொண்டைமான், நுளம்பாதிராசர், விழுப்பரையர், நந்தியராசர், வயிராதிராசர், வாணாதிராசர், காடவராயர், கொங்கராயர், சித்தரசர். விழிஞத்தரையர் என்போர் குறிப்பிடத் தக்கவராவர். இவர்கள் நடு அரசாங்கத்திற்கு வந்த வழக்குளை விசாரித்து வேண்டியன செய்தனர்[16]; சிற்றூர் அவைகள் செய்து வந்த வேலைகளைக் கண்காணித்து வேண்டியன செய்தனர்[17]. எனவே, நடு அரசாங்கம் இச் சோழன் காலத்தில் செம்மையாகப் பணி ஆற்றிவந்ததை நன்கறியலாம். இவனது 38-ஆம் ஆட்சி ஆண்டில் தஞ்சாவூரில் நிலம் அளக்கும் வேலை நடைபெற்றது[18]. அரசனுக்கு அந்தரங்கச் செயலாளராக இருந்து நாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிவித்தும், அரசன் ஆணைபெற்றுச் செயலாற்றலை மேற்கொண்டும் இருந்தவருள் இராசநாராயண மூவேந்தவேளான், மீனவன் மூவேந்த வேளான், நெறியுடைச் சோழ மூவேந்த வேளான் என்பவர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இங்கனம் திறமை பெற்ற அரசியல் உயர் அலுவலாளர் பலர் இருந்தமையால் பேரரசு நிலை தளராது நன்னிலையில் இருந்தது.

சிற்றரசர் :

மலையமான்கள் : இக் குலோத்துங்கன் காலத்தில் முன் பிருந்தவாறே சிற்றரசர் அனைவரும் இருந்துவந்தனர். இவருள் நெடுங்காலமாக வந்த மரபினர் சேதிராயர் என்ற மலையமான்கள் ஆவர். இவர்கள் சேதிராச மரபினர் என்று தம்மைக் கூறிக்கொண்டதால், ‘சேதிய ராயர்’ எனப்பட்டனர். இவர்கள் நடு மாகாணங்களில் இருந்த (சேதி நாட்டிலிருந்த) ஹெய் ஹெயர் மரபினர் என்று கூறிக்கொள்ள முயன்று இங்ஙணம் ‘சேதியராயர்’ எனக்கொண்டனர் போலும்! அந்தக் காலம், ஒவ்வொரு சிற்றரச மரபினரும் புராணத்துள் கூறப்பட்டுள்ள ஒரு மரபைச் சேர்ந்தவராகக் கூறிக்கொண்ட காலமாகும்[19]. இவர்கள் மலைநாட்டை ஆண்டவராதலின் ‘மலையர், மலையரையர், மலையகுலரயர், மலையமான்கள்’ எனப்பட்டனர்; கோவலூரைத் தலைநகராகக் கொண்டமையின் ‘கோவ்லராயர்’ எனப்பட்டனர். முதல் இராசராசனது தாய் இம்மலையர் மரபினளே ஆவள்[20], இம்மரபினர் திருக்கோவலூர், கிளியூர், ஆடையூர், ஆகியவற்றைத் தலைநகரங்களாகக் கொண்டு ஆண்டு வந்தனர். இவர்கள் சோழப் பேரரசன் ஒருவன் காலத்தில் இருவராகவும் மூவராகவும் இருத்தல் காண - இத்தலை நகரங்களைக் காண-இம்மரபினர் மலைநாட்டை இரண்டு மூன்று பிரிவுகளாகக் கொண்டு ஆண்டு வந்தனர் எனக் கோடல் பொருந்தும். நமது மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த இம்மரபரசருள் ‘மலையமான் பெரிய இராசராசச் சேதியராயன் ஒருவன்; ‘மலையமான் நரசிம்மவர்மன் கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான்’ மற்றொருவன். இவருள்முதல்வற்குச்சேனை மீகாமன் என்ற சிறப்புப் பெயர் இருந்தது[21]. இதனால் சோழர் படைக்குச் சிறப்புடைத் தலைவனாக இவன் இருந்தான் என்பது தெரிகிறது. பின்னவன், இரண்டாம் ராசாதிராசன் காலத்தில் பெருமான் நம்பிப் பல்லவ ராயனுடன் பாண்டிய நாட்டுப் போரில் ஈடுபட்டு ஈழப்படையை வென்றவன் ஆவன். இவ்விருவரன்றி, ‘மலையமான் சூரியன் நீறேற்றான் இராசராச கோவல ராயன்’ என்பவனும் மலை நாட்டுச் சிற்றரசனாக இருந்தனன் என்பது கல்வெட்டுகளால் தெரிகிறது

சாம்புவராயர் :இவர்கள் பழைய பல்லவர் மரபினர்; வட ஆர்க்கர்டு, தென் ஆர்க்காடு கோட்டங்களைச் சோழர் அரசாங்கப் பொறுப்பாளராக இருந்து ஆண்டவர்கள் குடியினர். இவர்கள் நாளடைவிற் சிற்றரசராகிப் பொறுப்புடன் நாடுகளை ஆளலாயினர் இவருள் குலோத்துங்கனது முற்பகுதி ஆட்சியில் இருந்தவன் செங்கேணி அம்மையப்பன் - பாண்டி நாடு கொண்டான் - கண்டன் சூரியன் இராசராசச் சம்பு வராயன் என்பவன் ஆவன். இவன், இக்குலோத்துங்கன் அல்லது இராசாதிராசன் நடத்திய பாண்டிய நாட்டுப் போர்கள் ஒன்றில் படைத்தலைவனாகச் சென்று வெற்றி பெற்றவன் என்பது இவனது சிறப்புப் பெயரால் தெரிகிறதன்றோ? இவன் தென் ஆர்க்காடு கோட்டத்துப் பிரம்ம தேசத்தில் உள்ள கோவில் காரியங்களை ஒழுங்கு செய்தவன் எண்ணாயிரம் என்னும் ஊரில் ஒரு மண்டபம் கட்டியவன்; அச்சிறுபாக்கம் கோவிலுக்கு இரண்டு பட்டயங்களை வழங்கியவன்[22]. இவன் காலத்திலும் இவற்குப் பின்னரும் குலோத்துங்கன் காலத்தில் - ‘செங்கேணிமிண்டன் அத்திமல்லன் சாம்புவராயன்’ என்பவனும் செங்கேணி அம்மையப்பன் கண்ணுடைப் பெருமான் ஆன விக்கிரம சோழன் என்பவனும், ‘வீரசோழன் அத்திமல்லன்’ என்பவனும் ‘குலோத்துங்க சோழச் சாம்புவராயன்’ என்பவனும் ‘ஆளப் பிறந்தான்; எதிரிலி சோழச் சாம்புவராயன்’ என்பவனும் குறிப்பிடத்தக்கவர் ஆவர்[23]. இவருள் குலோத்துங்க சோழன் சீய மங்கலம் தூணாண்டார் கோவிலில் மாளிகை ஒன்று கட்டினான்; அக்கோவிற்கு 12 வேலி நிலம் தேவதானமாக விட்டான்[24]. அத்தி மல்லன் என்பவன் திருவோத்தூர், திருவல்லம், அச்சிறுபாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோவில்கட்குப் பல நிபந்தங்கள் செய்துள்ளான்[25].

காடவராயர் : இவர்கள் செங்கோணிக் குடியினரைப் போலவே பல்லவ மரபினர் ஆவர். இவர்கள் தங்களைப் பண்டைப் பல்லவர் மரபினர் என்றே கூறிவந்தனர். இவர்கள் திருமுனைப்பாடிநாட்டுக் கூடலூரிலும் சேந்த மங்கலத்திலும் இருந்துகொண்டு அந்நாட்டை ஆண்ட சிற்றரசர் ஆவர். இவர்கள் சோழப் பேரரசிற்குப் பெருந்துணை புரிந்தவர்கள். இவருள், குலோத்துங்கன் காலத்தவர் - ‘ஆளப் பிறந்தான் வீரசேகரன்’ ‘வாள்நிலை கண்டான் இராசராசக் காடவராயர்’ என்போராவர். அடுத்த சோழ அரசன் காலத்தில் சோழப் பேரரசை நிலை கலங்க வைத்த கோப்பெருஞ் சிங்கன் இம்மரபரசனே ஆவன். இவன் அழகிய பல்லவன் மகனாவன்[26].

வாணகோவரையார் : இவர்கள் மகாபலிமரபினர். இவர்கள் மாவலிராயர்’ என்றும் ‘பாண அரசர்’ என்றும் கூறப்பட்டனர். இவர்கள் சங்ககாலச் சோழர் காலம் முதல் பிற்காலச் சோழர் காலம் முடியப் பாணராட்டிரத்தை ஆண்ட சிற்றசரர் ஆவர். இவர்கள் பல்லவர் காலத்திலும் இருந்தனர். இம்மரபினர் நடுநாடான மகதை மண்டலத்தை ஆண்டனர்.இவர் தலைநகரம் ‘ஆரை’ எனப்படும் ஆரகழுர் (சேலம் கோட்டத்தில் உள்ளது) ஆகும். குலோத்துங்கன் காலத்தில் இம்மரபினர் இருவர் இருந்தனர். அவருள் ஒருவன் ‘ஏகவாசகன் குலோத்துங்க சோழ வாண கோ அரசன்’ என்பவன். இவன் கல்வெட்டுகள் சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சைக் கோட்டங்களில் அமைந்துள்ளன[27]. மற்றொரு தலைவன் ‘பொன்பரப்பினான் வாணகோவரையன்’ என்பவன். இவனைப் பற்றிய பாடல்கள் பல திருவண்ணாமலை முதலிய இடங்களில் உள்ள கோவில் கல்வெட்டுகளில் இருக்கின்றன[28]. அப்பாடல்கள் சிறந்த தமிழ்ப் புலவர் பாடியனவாகக் காண்கின்றன. எனவே, இச்சிற்றரசன், நல்ல தமிழ்ப் புலவர்களைப் பாராட்டி ஊக்கி வந்தான் என்பது தெளிவாகிறதன்றோ? இவன் திருவண்ணாமலைக்  கோவிலைப் பொன் வேய்ந்தமையால் ‘பொன் பரப்பினான்’ எனப் பெயர் பெற்றான். இவன் பாண்டிய தாட்டுப் போரில் ஈடுபட்டுச் சோழன் ஏவற்படி, பாணன் ஒருவனைப் பாண்டிய நாட்டிற்கு அரசனாக்கினன் என்ற செய்தி ஒரு பழம் பாடலால் தெரிகிறது[29]. இச் செயல் சோழன் செய்ததாக அவனது கல்வெட்டுக் குறிக்கிறது. எனவே, இச்செய்தி ஒரளவு உண்மை என்பது தெரிகிறது. இவனைப் பற்றிய கல்வெட்டுகள் இவன் மதுரையை வென்ற செய்தியையே மிகுதியாகக் குறிக்கின்றன.

அதியமான்கள் : இம்மரபினர் சங்க காலம் முதலே சிறப்புடன் இருந்தவர். இவர்கள் தகடுரைத் தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தவர். ‘இவர்கள், அதியேந்திரர், தகடாதிராயர்’ என்ற பட்டங்களை உடையவர். குலோத்துங்கன் காலத்தில் தகடுரை ஆண்ட அதியமான்கள் ‘அதியமான் இராசராச தேவன்’ ஒருவன். இவன் தகடூர் நாட்டில் பெண்ணையாற்று வட கரையில் உள்ள மலையனூர் என்பதைத் திருவண்ணாமலைக் கோவிலுக்குத் தேவதானமாக விட்டவன்[30]. அவன் மகன் ‘விடுகாது அழகிய பெருமான்' ஒருவன்; குலோத்துங்க சோழத் தகடாதிராயன்' ஒருவன்; 'சாமந்தன் அதியமான்' ஒருவன். இவருள் விடுகாதழகிய பெருமான் என்பவன் தன்னை ‘அதியமான் நெடுமான் அஞ்சி’ என்ற சங்ககால அரசன் மரபினன் என்று கல்வெட்டுகளில் குறித்துளன். இவன் மலையான் ஆகிய முன்சொன்ன ‘கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான்’ என்பவனுடனும் செங்கேணிக் குடியினனான அத்திமல்லன் என்பவனுடனும் ஓர் உடன் படிக்கை[31] செய்து கொண்டான். அதனில், பேரரசனுடன் ஒத்துழைப்பதே வற்புறுத்தப்பட்டுள்ளது. இதனால், இம்மூவரும் குலோத்துங்கனிடம் உள்ளன்பு உடையவராக இருந்தனர் என்பது தெரிகிறது. இவன் தன் முன்னோருள் ஒருவனான எழினி, திருமலை மீது வைத்த யக்ஷன் யகசினி படிமங்களைப் புதுப்பித்தான் என்று திருமலைக் கல் வெட்டு கூறுகிறது[32].

கங்கர் : இம் மரபினர் கங்கபாடியை ஆண்ட சிற்றரசர் இவர்கள் சங்க கால முதல் கங்கபாடியை ஆண்டு வந்தவர்; பல்லவர் காலத்தில் அவர் உதவிபெற்றுக்கதம்பருடன் அடிக்கடி போரிட்டவர்; பிற்காலச் சோழர் ஆட்சியில் சோழர்க்கு அடங்கிய சிற்றரசராக வாழ்ந்துவந்தனர். இவர் தம் தலைநகரம் கோலார் எனப்படும் ‘குவலாளபுரம்’ என்பது, இந்நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழர்க்குட்பட்ட கங்கபாடியை ஆண்டவருள் ‘பங்களநாட்டுப்பிருதிவி கங்கன் அழகிய சோழன்’ ஒருவன்; ‘உத்தம சோழ கங்கன்’ ஒருவன்; மற்றொருவன் மராபர ணன் சீயகங்கன் என்பவன்[33]. இவன் 33 ஆண்டுகள் அரசாண்டவன். இவன் மனைவி பெயர் அரிய பிள்ளை[34] என்பது. இவன் கல்வெட்டுகள் எல்லாம் தமிழில் உள்ளன. இவன் தமிழ்நாட்டுக் கோவில்கட்கே நிபந்தங்கள் விடுத்துள்ளான்; தமிழ்ப் புலவர்களையே ஆதரித் துள்ளான். பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூல் செய்வித்தவன் இவனே. கங்க நாட்டு அரசனான இவன் கன்னடம் அல்லது துளுவத்தைப் போற்றி வளர்க்காமல் தமிழை வளர்த்ததும் தமிழிலே பெயர்கள் கொண்ட மையும் தமிழ்நாட்டுத் தலங்கட்கே நிபந்தங்கள் விடுத்ததும் பாராட்டற்பாலனவே ஆகும்.இத் தமிழ்ப்பற்று, அருங்கலை விநோதனான மூன்றாம் குலோத்துங்கன் தொடர்பால் உண்டாயிற்று எனின், மிகையாமோ?

சீயகங்கனைத் தவிர அம்மரபைச் சேர்ந்த பிறருள் பிருதிவிகங்கன் அழகிய சோழன் என்பவன் ஒருவன்.இவன் பங்களநாடு ஆண்டவன். இவன் திருவண்ணாமலைக் கோவிலுக்குப் பல நிபந்தங்கள் விடுத்துள்ளான்[35], உத்தம சோழ கங்கன் என்ற செல்வகங்கன் மற்றொருவன். இவன் மனைவி வட ஆர்க்காடு கோட்டத்தில் அகத்தியமலையில் திருநாவுக்கரசதேவர் படிமம் செய்துவைத்தாள்[36].

தெலுங்குச் சோடர்: இவர்கள் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு ஆகியவற்றின் வட பகுதியையும் சித்துர், நெல்லூர், கடப்பை முதலிய கோட்டங்களையும் சிறு நாடுகளாகப் பகுத்து ஆண்டவர். இவர்கள் தங்களைக் ‘கரிகாலன் மரபினர்’ என்று கூறிக்கொண்டனர்; பொத்தப்பியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர் ‘பொத்தப்பிச் சோடர்’ எனப் பட்டனர். தெல்லுரைத் தலைநகராகக் கொண்டு ‘சோடா சித்தரசர்’ என்பார் ஆண்டுவந்தனர். இம் மரபினர் அனைவரும் காளத்தி முதலிய இடங்களில் உள்ள கோவில்கட்கு நிபந்தங்கள் மிகப்பலவாக விடுத்துள்ளனர். இவருள் குலோத்துங்கன் காலத்தவர் - மதுராந்தக பொத்தப்பிச் சோழன், நல்ல சித்தரசன், சோடன் திருக்காளத்தி தேவன் என்பவராவர்[37].

இதுகாறும் கூறப்பெற்றவர் குறிப்பிடத்தக்க பெரிய சிற்றரசர் ஆவர். இவர்கள் சிற்றரசராகவும், அமைச்சர், படைத் தலைவர், நாடு பார்ப்போர், நாடு காப்போர், இறை பெறுவோர் என்ற பலதிற உயர் அலுவலாளராகவும் இருந்தவர் ஆவர். இவர் ஒவ்வொருவரிடமும் தனித்தனிப் படைஉண்டு. அப்படை பேரரசன் வேண்டும் போது உறுதுணை செய்ய விடப்படும். இச்சிற்றரசர் அன்றிப் பல்வேறு சிற்றுார்களையும் பேரூர்களையும் ஆண்டவர் பலராவர்; அவர்கள் பல அறப்பணிகள் செய்துள்ள மையால் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர். 

சிற்றரசர் ஒப்பந்தம் : இத்தலைவர்கள் அடிக்கடி தங்கட்குள் கூடிப் ‘பேரரசனுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்போம்’ என்று ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் உண்டு. இருவர்மூவராகக் கூடித் தமக்குள் ஒப்பந்தம் செய்தலும் உண்டு. குலோத்துங்கன் 27-ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1025-இல்) சிற்றரசர் பதின்மர்கூடிப் பேரரசர்க்கு மாறாக ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அது பின்வருமாறு[38]:-

‘இவ்வனைவோரும் எங்களில் இசைந்து கல்வெட்டின் படியாவது நாங்கள் ஒரு காலமும் இராச காரியத்துக்குத் தப்பாமே நின்று, சேதிராயர் அருளிச் செய்தபடியே பணி செய்யக் கடவோமாகவும். இப்படிச் செய்யுமிடத்து, மகதை நாடாள்வானான வாணகோவரையனும் குலோத்துங்க சோழர் வானகோவரையனும் இவர்கள் பக்கம் ஆளாதல்ஒலையாதல்போகக் காட்டுதல் உறவு பண்ணுதல் அறுதி செய்தல் செய்யக் கடவோம் அல்லாதோம் ஆகவும்.... இவர்களும் இவர்கள் அனுதாபத்துள்ளார் பக்கல் நின்றும் ஆளாதல்-ஓலையாதல் வந்துண்டாகில் தேவர் ஸ்ரீ பாதத்திலே போகக் காட்டக் கடவோம் ஆகவும்.... எங்களில் ஒருவன் வேறுபடநின்று இராசகாரியத்துக்கும் சேதிராயர் காரியத்துக்கும் எங்கள் காரியத்துக்கும் விரோதமாகச் சில காரியம் செய்த துண்டாகில்.... தேவரும் நாங்களும் இவனை... அறச் செய்யக்கடவோமாகவும். எங்களிலே ஒருவரை வாணகோவரையாராதல் இராசராசக் காடவராயனாதல் வினை செய்தார் உண்டாகில், படையும் குதிரையும் முதலுக்கு நேராகக் கொண்டு குத்தக் கடவோமாகவும்.... இப்படிச் செய்திலேமாகில் வாணகோவரையருக்குக் கடைகாக்கும் பறையருக்குச் செருப்பு எடுக்கிறோம்.”

இவ்வொப்பத்தத்தில் வாணகோவரையனும் காடவ ராயனும் பேரரசற்கு மாறுபட்டவர் என்பது அறியக் கிடத்தல் காண்க.

இங்ஙனமே தனிப்பட்ட சிற்றரசர் இருவர்-மூவர் கூடிச் செய்துகொண்ட ஒப்பந்தங்களும் உண்டு. அவற்றுள் ஒன்று குலோத்துங்கனது 15-ஆம் ஆண்டிற் செய்துகொண்டது. அதன் விவரம் காண்க[39] :

“மலையன்... ஆடையூர் நாடாள்வாருக்கும் விக்கிரம சோழச் சாம்புவராயருக்கும், விடுகாதழகிய பெருமானான இராசராச அதிகைமானேன் கல்வெட்டின் படியாவதுஇவர்கள் எனக்கு ஒருகாலமும் தப்பாதிருக்க நானும் இவர்கட்குத் தப்பாதிருக்கக் கடவேனாகவும், எனக்கு இன்னாதார் இவர்கட்கு இன்னாதார்கள் ஆகவும், இவர்கள் பகை என் பகையாகவும், என்பகை இவர்கள் பகையாகவும், யாதவராயர் பக்கலும் செய்யகங்கர் பக்கலும் குலோத்துங்கச் சோழச் சாம்புவராயர் பிள்ளைகள் பக்கலும் ஆளும் ஒலையும் போகக் காட்டுதல் உறவு பண்ணுதல் செய்யாதேனாகவும். இப்படி சம்மதித்தேன் விடுகாதழகிய பெருமானேன். இப்படிக்குத் தப்பினேன் ஆகில் எனக்கு இன்னாத சரியாள்வான்செருப்பும் எடுத்துத் தம்பலமும் தின்றேன் ஆவேன்.”

இத்தகைய ஒப்பந்தங்கள் பேரரசன் அறிவின்றியே நடந்தன. அதனால், நாளடைவில் சிற்றரசர்களுக்குள் பல கட்சிகள் ஏற்பட்டு இருந்தன. இக் கட்சிகள் பிற்காலத்தில் வலுப்பெற்றுப் பேரரசையே நிலைகுலையச் செய்து விட்டன. இவை முதல் இராசராசன் காலமுதல் முதற் குலோத்துங்கன் காலம்வரை இல்லாதிருந்தன. அதனால் சிற்றரசர் பேரரசிற்குக் கட்டுப்பட்டு ஆணைவழி நின்றனர்; நடு அரசாங்கமும் பொறுப்புடன் வேலை செய்துவந்தது.

கலை வளர்ச்சி : மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுகள் முதல் 24 ஆண்டுகள்வரை இவனுடைய போர்ச் செயல்களைக் குறிக்கின்றன. பிற்பட்டவை 1. போரைக் குறித்தில. ஆதலின் அப்பிற்பட்ட 15 ஆண்டுகள் அமைதி நிலவிய காலம் எனக் கொள்ளலாம். அக்காலத்திற்றான் இவனது பேரவையில் புலவர் பலர் தமிழ் வளர்த்தனர் போலும்! இவன் காலத்து இருந்த புலவர் (1) குலோத்துங்கன் கோவை ஆசிரியர், (2) வீராந்தப் பல்லவராயர், (3) சங்கர சோழன் உலா ஆசிரியர், (4) கம்பர், (5) குணவீர பண்டிதர், (6) அரும்பாக்கத்து அருள்நிலை விசாகன், 97) திருவரங்கத் தமுதனார், (8) பவணந்தி முனிவர் முதலியோர் ஆவர். இவர்களைப்பற்றி விரிவாக ‘இலக்கிய வளர்ச்சி’ என்னும் தலைப்பில் (பிற்பகுதியில்) காண்க.

குலோத்துங்கன் கோவை ஆசிரியர் இக்குலோத்துங்கனை, ‘எண்ணெண் கலையே தெரியும் குலோத்துங்க சோழன்’ என்றும், ‘கலைவாரி’ என்றும், ‘பல நூற் புலவோர்க்குத் தாபரன்’ எனவும் புகழ்தலால், இவன் கல்வி கேள்விகளிற் சிறந்தவன் என்பதும் புலவரைப் போற்றின வன் என்பதும் அறியக்கிடக்கின்றன. அவர் இவனை, ‘தமிழ்வாணர் தெய்வக் கவியாபரணன்’ எனவும் ‘பாவலர் காவியம் சூடும் குலோத்துங்க சோழன்’ எனவும். ‘கொழித்துத் தமிழ் கொள்ளும் கிள்ளி’ எனவும். வியன்பார் அனைத்தும் கோதே பிரித்தெறி கோமான்’ எனவும் பாராட்டி இருத்தலால், இவன் புலமை மிக்கவன் என்பதும், புலவர் தகுதி அறிந்து பரிசளித்தவன் என்பதும் விளங்குகின்றன அல்லவா? இவன் இங்ஙனம் பெரும் புலவனாக இருத்தமையாற்றான் - கல்வியிற் சிறந்த கம்பர் தம் அவைக்களத்தில் இருக்கும் பேற்றைப் பெற்றான்; உலகம் புகழும் பேற்றைப் பெற்றான்! இராமாயணம் உள்ளளவும் கம்பர் பெயர் உள்ளளவும் குலோத்துங்கன் பெயர் நின்று நிலவும் அன்றோ?

வீராந்தப்பல்லவ ராயர் : இவர் குலோத்துங்கன் அவைப் புலவர். இவர் வேண்டுகோட்படி அரசன் ‘காலவிநோத நிருத்தப் பேரரையானான பரராசவன் பொன்னன்’ என்பவற்குத் திருக்கடவூர்ச் சிவன் கோயிலில் ‘நட்டுவ நிலை’ என்ற தொழில் நடத்தும்படி ஆணையளித்தான்[40]. இதனால் இப்புலவர்பால் அரசன் கொண்டிருந்த மதிப்புத் தெரிகிறதன்றோ?

இலக்கண மண்டபம்: இது ‘வியாகரனதான வியாக்யான மண்டபம்’ என வடமொழியிற் பெயர் பெறும். திருவொற்றியூரில் கோவிலைச் சேர்ந்து இம்மண்டபம் இருந்தது. அங்கு மாணவர் பலர் வடமொழி இலக்கணப் பயிற்சி பெறுவதற்காக மண்டபம் ஒன்று இருந்தது. இதனைக் கட்டியவன் நெல்லூரை ஆண்ட சித்தரசர் அதிகாரி ஒருவன். அவன் இக் கல்விச்சாலை நன்கு நடைபெறக் குலோத்துங்கன் காவனுர் என்ற சிற்றுரை உதவினான்.அவ்வூரைக் குலோத்துங்கன் இறையிலியாக்கக் கட்டளை பிறப்பித்தான்[41].

இங்ஙனம் இக்குலோத்துங்கன் கல்வி நிலையைத் தன் பெருநாட்டில் பலபடியாகச் சிறப்பித்துள்ளான்; தமிழ் வாணரைப் போற்றி ஆதரித்து நாட்டில் தமிழ்க்கல்வி பரவும் படி செய்துள்ளான்; கோவில்களில் திருப்பதிகங் களை ஒதவும் வடமொழிப் பயிற்சியை மாணவர்க்கு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளான்.

சமய நிலை : மூன்றாம் குலோத்துங்கன் சிறந்த சிவ பக்தன். இவனைக் ‘காமாரிக்கு அன்பன்;’ ‘வெள்விடை யோன் தன்னேயம் தன்னை மறவாதவன்’, ‘நாகாபரணனை ஏத்துவோன்’ என்றெல்லாம் குலோத்துங்கன் கோவை புகழ்ந்துள்ளது. திருவாரூர் வீதி விடங்கப் பெருமானே இவனை ‘நம் தோழன்’ என்று கூறியதாகத் தம் கோவில் தானத்தார்க்கு அப்பெருமானே கட்டளை இட்டாற் போல இவனத 24-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் குறிக்கிறது. [42]இக்கல்வெட்டுச் செய்தியால், இவன் சிவபெருமானிடம் கொண்டிருந்த பற்று நன்கு விளங்குகின்றதன்றோ?

ஞான குரு : இராசராசன் முதலியோர்க்கு ஞானகுரு இருந்தாற் போலவே இவனுக்கும் ஞானகுரு ஒருவர் இருந்தார். இவர் ஈசுவர சிவன் என்பவர். இவர் ஒரு சைவப் பெரியார். இவர் லாட நாட்டவர்; சாண்டில்ய கோத்திரத்தார்; ‘கண்ட சம்பு’ என்பவர் மகனார். இவரே திரிபுவனம் என்னும் பதியில் உள்ள சிவன் கோவிலைப் பிரதிட்டை செய்தவர் ஆவர்.

சுவாமி தேவர் : இவர் சைவ மடத்துத் தலைவர். இவர் தம் தவச் சிறப்பால் ஈழப்படைகளைத் தோல்வியுறுமாறு செய்தவர் என்று சிற்றரசன் கல்வெட்டொன்று கூறுகிறது. இவர் பிரதிட்டித்த அச்சுதமங்கலம் சிவன் கோவிலுக்குக் குலோத்துங்கன் இறையிலி அளித்துள்ளான். இவன் திருக்கடவூரில் இச்சோழன் விதித்திருந்த சில ஒழுக்கங்களை மாற்றி அமைத்தான்.[43] அம்மாற்றத்தை அரசனும் ஏற்றான் என்பதிலிருந்து அரசன் இவர் மாட்டுக்கொண்டிருந்த அளப்பரிய மதிப்புத் தெற்றெனத் தெரிகிறதன்றோ?

பிற மடங்கள் : ‘மாவிரதிகள்’ எனப்பட்ட காளாமுகரது ‘கோமடம்’ என்பது திருவானைக்காவில் இருந்தது. ‘சதுரானன பண்டித மடம்’ என்பது திருவொற்றியூரில் இருந்தது. ‘வாரணாசி பிக்ஷா மடம்’ என்பது பந்தணைநல்லூரில் இருந்தது. ‘வாரணாசிலக்ஷாத்யாய இராவாளரது கொல்லா மடம்’ என்பது திருப்பாசூரில் இருந்தது. இவை அனைத்தும் சைவ ஆசாரிய பீடங்களாகக் குலோத்துங்கன் ஆட்சியில் திகழ்ந்தன.[44]

அரசன் சைவத் திருப்பணிகள் : குலோத்துங்கன் செய்துள்ள கோவில் திருப்பணிகள் பல ஆகும்; அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இவை:-(1) இவன் தனது 26ஆம் ஆட்சி ஆண்டில் உத்தரமேரூர்ப் பிடாரியார்க்கும் ஏழு மாதர் இடங்கட்கும் பத்துவேலி நிலம் தேவதானமாக விடுத்துள்ளான்.[45] (2) அதே ஆண்டில் திருஒற்றியூர்ச் சிவபெருமானுக்குத் திரு அணிகலன்களும் திருவாடு தண்டும் இருமுறை அளித்துளன்; (3) மதுரை ஆலவாய்ப் பெருமானுக்குத் தன் பெயரால் திருவீதியும் திருநாளும் அமைத்தான்; தான் தென்னாட்டாரிடம் திறைகொண்ட பொன்னால் அக்கோவிலை வேய்ந்தான்; இறையிலி நிலங்கள் பல அளித்து, மகிழ்ந்தான்[46]: (1) திரிபுவனத்தில் ‘கம்பஹரேசுவரர்’ என்ற ‘திரிபுவனேசுவரர்’ கோவிலைக் கட்டி முடித்தான். இஃது இவனது ஆட்சியின் சிறந்த நினைவுக்குறியாக விளங்குகின்றது. இக்கோவிலின் திருமதில்கள் முழுவதும் அழகிய சிற்ப வேலைகளாலும் ஒவியங்களாலும் நிரப்பப்பட்டுள்ளன. இங்குள்ள இராமாயண வரலாறு உணர்த்தும் சிற்பங்கள் பார்க்கத் தக்கவை. (4) குலோத்துங்கன் தில்லை நடராசப் பெருமானது திருமுக மண்டபத்தையும் அம்மன் கோபுரத்தையும் கோவில் திருச்சுற்றையும் கட்டுவித்தான்;[47] ‘முடித்தலை கொண்ட பெருமாள் திருவீதி’ என்று மேற்குத்தெரு ஒன்றை எடுப்பித்தான். (5) திருவாரூரில் உள்ள சபாமண்டபமும் பெரிய கோபுரமும் இவன் முயற்சியால் இயன்றவை. இவன் கச்சி ஏகம்பர் கோவிலையும் புதுப்பித்தான்.[48]

வைணவத் திருப்பணிகள் : குலோத்துங்கன் தன் முன்னோரைப்போலவே சமய நோக்கில் விரிந்த மனப்பான்மை உடையவன். இவன், வேலூரில் உள்ள திருமால் கோவிலுக்கு மூன்று சிற்றுார்களை ஒன்றாக்கிக் ‘குலோத்துங்க சோழநல்லூர்’ எனத்தன் பெயரிட்டுத் தேவதானமாக அளித்தான்; அக்கோவிற்குக் ‘குலோத்துங்க சோழ விண்ணகரம்’ எனப்பெயரிட்டான்.[49] இவன் இசைவு பெற்றுத் திருக்கோவலூர் மலையமான்கள் செய்த பெருமாள் திருப்பணிகள் பலவாகும். இங்ஙனமே பிறரும் செய்துள்ளனர்.

சமணத் திருப்பணி : இவனது ஆட்சியில் மண்டியங் கிழான் குலோத்துங்கசோழக் காடுவெட்டி என்பவன் ஒர் உயர்அலுவலாளன் ஆவன். இவன் சமணப் பற்றுடையவன் ஆவன். இவன் வேண்டுகோளின்படி குலோத்துங்கன், சைனக் கோவில் ஒன்றுக்கு 20 வேலி நிலம் பள்ளிச் சந்தமாக விட்டான், சமண குருவான ‘சந்திரகிரி தேவர்’ என்பார்க்குக் கொட்டையூர் ஆசிரியப்பட்டம் கொடுத் தருளி, அம்பையிலே 20 வேலி நிலம் தானமாக அளித்தான்.[50] இப்பெருந்தகையாளன் இவற்றுடன் நிற்கவில்லை; திருநறுங்கொண்டைச் சமணப் பெரும் பள்ளிக்கு வேண்டிய நிபந்தங்களுக்கும் அமணப் பிடாரர்க்கும் பத்துவேலி நில வருவாயை இறையிலி செய்துள்ளான்; ‘இந்நிலத்துக்கு அமணப்பிடாரர் சொன்னவாறு செய்வது; இவர் வசமே இருக்க’ எனத் திருவாணையும் பிறப்பித்தான்; அப்பெரும் பள்ளியிற் கோவில் கொண்டிருந்த அப்பாண்டார் வைகாசித் திருநாளுடனே தன் பெயராலேயும் (‘இராசாக்கள் நாயன் திருநாள்’ என்பது) ஒரு திருநாள் நடத்த ஏற்பாடு செய்து, அவ்விழாவிற்காகத் தனியே நிலம் அளித்துள்ளான்.[51]

சுருங்கக்கூறின், இவனது ஆட்சியில் எல்லாச்சமய நிலையங்களும் சிறப்புப்பெற்றன எனலாம்; கோவில்கள் செம்மையாக மேற்பார்வை இடப்பட்டன; விழாக்கள் நன்முறையில் நடைபெற்றன; கோவில் கண்காணிப்பு வேலை செவ்வனே நடந்தன; குற்றவாளிகள் அவ்வப்போது தண்டிக்கப்பெற்றனர்.[52]

அரசன் சிறப்புப் பெயர்கள் : இவன் பரகேசரி குலோத்துங்க சோழ தேவன் எனப்பட்டான். ‘திரிபுவன சக்கரவர்த்தி என்ற பெயரும் இருந்தது. இவற்றுடன் இவன் வீரராசேந்திரன், குமார குலோத்துங்கன், முடிவழங்கு சோழன், திரிபுவன வீரதேவன், முடித்தலை கொணட பெருமான், உலகுடைய நாயனார், உலகுடைய பெருமான், உலகுய்ய வந்த நாயனார், இராசாக்கள் தம்பிரான், இராசாக்கள் நாயன்,தனிநாயகன், தியாக விநோதன் முதலியன பெற்றிருந்தான். இவை அனைத்தும் இவனுடைய எண்ணிறந்த கல்வெட்டுகளில் பயின்றுள்ளன. இவற்றுடன் இவனுக்குக் கோனேரின்மை கொண்டான்’ என்றதொரு சிறப்புப் பெயரும் இருந்தது. ‘கோனேரின்மை கொண்டான் வீரராசேந்திரன் திரிபுவன வீரதேவன்’ என்பது இவனது கல்வெட்டு.[53]

தியாக விநோதன் : இப் பெயர்களுள் இவன் பெரிதும் விரும்பியது தியாக விநோதன் என்பது. இதனை இவன் காலத்துமக்கள் வழங்கினர். ‘தியாகவிநோதபட்டன்’, ‘தியாக விநோத மூவேந்த வேளான்’, ‘தியாக விநோதன்’ என்ற பெயர்களைக் கல்வெட்டுகளிற் காணலாம். ஊர்கட்கும் இப்பெயர் இடப்பட்டிருந்தது.தியாக விநோதன் திருமடம்’ என மடத்துக்கும் இப்பெயர் இடப்பட்டிருந்தது. ‘தியாக மேகம்’ என்று இராசராசன் வழங்கப்பட்டான்; ‘தியாக சமுத்திரம்’ என்று விக்கிரம சோழன் குறிக்கப்பட்டான். ஆனால் இச் சோழனோ தியாக விநோதன் எனக் கூறப் பெற்றான். இவ்வரிய முற்சோழர்க்கு இல்லாத இவனுக்கே சிறப்பாக அமைந்த பெயரைத் தானே கம்பர் பெருமான், “சென்னிநாட் டெரியல் வீரன் தியாகமா விநோதன்” என்று தமது இராமாயணத்துள் கூறி மகிழ்ந்தனர்! அப்பெரும் புலவர் இவனை ‘அமலன்’ என்றும் குறித்துள்ளார். ‘அகளங்கன்’ என்றாற் போல ‘அமலன்’ என்பதும் ‘குற்றமற்றவன் என்னும் பொருளையே தரும்.

அரச குடும்பம் : இவனது பட்டத்தரசியின் இயற்பெயர் தெரியவில்லை. இவள் ‘புவனமுழுதுடையாள்’ எனப்பட்டாள். இவள், சோழ முடிமன்னர் மரபுப்படி நாளோலக்கத்தில் அரசனுடன் அரியனைமீது அமரும் பேறு பெற்றவள். மற்றொரு மனைவி ‘இளைய நம்பிராட்டியார்’ என்பவள். இஃது இவள் பெயரன்று. அரசன் தன் கல்வெட்டில் ‘நம் பிராட்டியாரில் இளைய நம்பிராட்டியார்’ என்பதால், இவனுக்கு மனைவியர் இருவரே இருந்தனர் என்பது தெரிகிறது. பிள்ளைகள் இருந்தனர் என்பது தெரியவில்லை. அரச குடும்பத்தில் இருந்த முதியவள் அம்மங்கா தேவி என்பவள். இவள் ‘சுங்கம் தவிர்த்த பூரீ குலோத்துங்கசோழ தேவரின் திருமகளார் பெரிய நாச்சியாரான அம்மங்கை ஆழ்வார்[54]’ என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டவள். இவள் பெயர் குலோத்துங்கனது 5-ஆம் ஆட்சியாண்டில் காணப் படுகிறது. அப்பொழுது இவளுக்கு ஏறத்தாழ 80 வயது இருக்கலாம் என்று கோடல் பொருத்தமாகும். இவள் தன் வாணாளில் முதற் குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆக அறுவர் அரசாண்ட பெருங்காட்சியை விழியாரக் காணும் பேறு பெற்ற பெருமகள் ஆவள். 

நல்லியல்புகள் : பரகேசரி மூன்றாம் குலோத்துங்கன் செய்த போர்களிலிருந்தும் பெற்ற வெற்றிகளிலிருந்தும் “இவன் சிறந்த மானவீரன்” என்பது தெரிகிறது. தன்னை அடைக்கலம் புகுந்த பாண்டியன், சேரன், வேணாட்ட ரசன், கரூர் அரசன் இவர்களைத் தக்க சிறப்புடன் நடத்தி அவர்கட்கு அவர்தம் நாடுகளை ஆளக்கொடுத்த இவன், ‘அடைந்தார்க்கு எளியன்’ என்பதை உணர்த்துகிறது. தன்னிடம் பகைத்த அரசரை வென்று அவர் நகரங்களை அழித்தனன் என்பதிலிருந்து இவன், ‘பகைவர்க்குக் காலன்’ என்பது விளங்குகிறது. கம்பர்போன்ற பெரும் புலவர் நட்பைப்பெற்ற இவன் சிறந்த தமிழ்ப் புலவனாகவும் புலவரைப் போற்றும் புரவலனாகவும் இருந்தான் என்பதுதெரிகிறது. இவனுடைய சைவ சமயத் திருப்பணிகளை நோக்க, இவ்வள்ளல் ‘சிறந்த சிவ பக்தன்’ என்பதை அறியலாம். ஆனால் அதே சமயம் இவன் செய்துள்ள பிற சமயத் திருப்பணிகளைக்கான, இவனது பரந்த சமய நோக்கம் நன்கு விளங்குகிறது. இவன் மதுரை சென்று வெற்றி கொண்டபோது “அருமறை முழுதுணர்ந்த அந்தணரை அகரம் ஏற்றி ஆதரித்தான்” என வருதலையும், திருவொற்றியூர் வியாகரனசாலைக்கு இறையிலி அளித்தனன் என வருவதனையும் நோக்க, இவன் வடமொழிமீதும் வடமொழியாளர்மீதும் கொண்டிருந்த பற்றும் மதிப்பும் நன்கு விளங்குகின்றன. இவன் கொடைத்திறத்தில் எப்படிப்பட்டவன்?

“தண்டமிழ்க்குப் பொன்னே பொழியும் குலோத்துங்கன்”
“முகில் ஏழுமென்னப் பொன்போத நல்கும் குலோத்துங்க சோழன்”

என்று பலபடியாக இவனைக் கோவை ஆசிரியர் புகழ்தலால், இவனது வள்ளற்றன்மை தெற்றெனத் தெரிகிறதன்றோ? கம்பரும் இவனது ஈகைத் தன்மையை உவமை முகத்தால் பாராட்டி இருத்தல் காண்க.

“புவிபுகழ் சென்னிபோர் அமலன் தோள்புகழ்
கவிகள்தம் மனையெனக் கனக ராசியும்
சவியுடைத் தூசுமென் சாந்து மாலையும்
அவிரிழைக் குப்பையும் அளவிலாதது.!”


  1. M.E.R. 458 of 1915.
  2. S.I.I, Vol.3, No.86.
  3. 94 of 1918; S.I.I. Vol.3, p.212
  4. ‘வேளம்’ என்பது அரண்மனையில் அரசரிடமும் அரசியரிடமும் இருந்த பணியாளர் படை. அரசியர்க்குப் பணிப்பெண்கள் படை’ உண்டு.
  5. 254 of 1925, 42 of 1906.
  6. S.I.I. Vol, 3, No.88
  7. V.R.R. Dikshitar's ‘Kulothunga Chola III, p.45
  8. S.I.I. Vol.7, No.797 (170 of 1902)
  9. M.E.R. 75 of 1925; 126, 127, of 1900.
  10. S.I.I. Vol.3, No.23. 3. 483 of 1906.
  11. 483 of 1906.
  12. 163, 166 of Pudukkota Inscriptions.
    இங்ஙனமே பிற்காலத்தில் வீரபாண்டியன் என்பவன் சோணாட்டைக் கைப்பற்றித் தில்லையில் இவ்விரு அபிடேகங்களையும் செய்து கொண்டான். சுந்தரபாண்டியன் பிற்காலத்தில் இக் குலோத்துங்கன் செய்தவை அனைத்தும் சோணாட்டில் செய்தான்.
  13. K.A.N. Sastry’s ‘Cholas’ Vol.2, p.141-42
  14. K.A.N. Sastry’s ‘Cholas II, p. 155.
  15. M.E.R. 521 of 1912
  16. 83 of 1926
  17. 113 of 1928
  18. 188 of 1908
  19. K.A.N. Sastry's ‘Cholas,’ Vol.2. p.164
  20. S.I.I.Vol. 7, No.863
  21. Ibid No.890
  22. 167, 176 of 1918, 345 of 1917, 239 of 1901.
  23. S.I.I, Vol. 3. Nos. 60. 61.
  24. 61, 62. of 1900.
  25. 80 of 1900
  26. 74 of 1918; 463 of 1921; 487 of 1921; 316 of 1902.
  27. 72 of 1890,476 of 1907, 461 of 1913.
  28. Sen Tamil Vol. 3, pp. 427-433.
  29. பெருந்தொகை, செ. 1188
  30. 626 of 1902.
  31. S.H.I. Vol. 7, No.119
  32. S.I.I. Vol. 1, No.75
  33. M.E.R. 1 16 of 1992
  34. S.I.I. Vol.3, No.62
  35. 546, 558 of 1902
  36. 559 of 1906
  37. K.A.N. Sastry's Chołas's. Voi, 2, pp. 134-140
  38. S.I. Vol.8, No. 106
  39. S.I.I. Vol. 7, No. 119.
  40. M.E.R. 255 of 1925
  41. M.E.R. 201 of 1931.
  42. M.E.R. 554 of 1904.
  43. M.E.R. 40 of 1906; 393, 395 of 1920
  44. M.E. R. 357 of 1911, 72 of 1931, III. of 1930.
  45. S.I. IV. 849.
  46. 163, 166 of Pudukkottai Ins
  47. A.R.E. 1908, II. 64, 65.
  48. 163, 166 of Pudukkottai Ins.
  49. M.E.R. 114 of 1919.
  50. S.I.I. Vol. 4, No.366
  51. S.I.I. Vol. 7, 1011-1014
  52. 80 of 1925 of 1929.
  53. இதனுடன் வீரராசேந்திரன் கல்வெட்டுத் தொடக்கத்தைக் குழப்பலாகாது.அது ‘வீரசோழ கரிகால சோழ வீரராசேந்திர இராசகேசரி பன்மரான கோனேரின்மை கொண்டான்’ என வரும்.
    Vide M.E.R. 51 of 1931.
  54. S.I.I. Vol 4, No.226.