ஜெயகாந்தன் சிறுகதைகள்/குருபீடம்

அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.

அவன் ஜெயிலிருந்து வந்திருப்பதாகச் சில பேர் பேசிக்கொண்டார்கள். அவன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்றப்பட்டவனென்றும் சிலர் சொன்னார்கள்.

ஆனால், இப்போது அவன் நோயாளியோ பைத்தியக்காரனோ அல்ல என்று அவனைப் பார்த்த எல்லாரும் புரிந்து கொண்டார்கள். உண்மையும் அதுதான். சோம்பலும், சுயமரியாதை இல்லாமையும், இந்தக் கோலம் அசிங்கமென்று உணர முடியாத அளவுக்கு அவனிடம் ஊறி உறைந்துபோன தாமசத்தின் மதமதப்பினாலும் அவன் இவ்வாறு திரிகிறான். பசிக்கிறதோ இல்லையோ தன் கையில் கிடைத்ததையும் பிறர் கையில் இருப்பதையும் தின்ன வேண்டுமென்ற வேட்கை அவன் கண்ணில் அலைந்தது. ஒரு குழந்தை சாப்பிடுவதைக்கூட ஒரு நாய் மாதிரி அவன் நின்று பார்த்தான். அவர்களும் அவனை நாயை விரட்டுவது மாதிரி விரட்டினார்கள். அவ்விதம் அவர்கள் விரட்டி அவன் விலகிவரும்போது அவன் தனது பார்வையால் பிறர் சாப்பிடும் பொருளை எச்சில் படுத்திவிட்டு வந்தான். அவன் எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருந்தான். அவன் கடைவாயிலும் பல்லிலும் அவன் தின்றவை சிக்கிக் காய்ந்திருந்தது. யாராவது பீடியோ சுருட்டோ புகைத்துக் கொண்டிருந்தால் அதற்கும் அவன் கையேந்தினான். அவர்கள் புகைத்து எறிகிற வரைக்கும் காத்திருந்து, அதன் பிறகு அவற்றைப் பொறுக்கி அவர்களை அவமரியாதை செய்கிற மாதிரியான சந்தோஷத்துடன் அவன் புகைத்தான்.

சந்தைக்கு வந்திருக்கிற நாட்டுப்புறப் பெண்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போதும், குனிந்து நிமிர்கையில் ஆடை விலகும்போதும், இவன் காமாதூரம் கொண்டு வெட்கமில்லாமல் அவர்களை வெறித்துப் பார்த்து ரசித்தான்.

அவனுக்கு உடம்பில் நல்ல வலுவும் ஆரோக்கியமும் இருந்தது. எனினும் எப்போதும் ஒரு நோயாளியைப்போல் பாசாங்கு செய்வது அவனுக்குப் பழக்கமாகிப் போய்விட்டது. அவனுக்கு வயது நாற்பதுக்குள்தான் இருக்கும். கடுமையாக உழைக்காததாலும், கவலைகள் ஏதும் இல்லாததாலும் அவன் உடம்புவாகே ஒரு பொலிகாளை மாதிரி இருந்தது. இளமையும் உடல் வலுவும் ஆரோக்கியமும் இயற்கையால் அவனுக்கு அனுக்கிரகிக்கப்பட்டிருந்தும் அவன் தன்னைத்தானே சபித்துக் கொண்டது மாதிரி சேற்றில் மேய்கிற பன்றியாய்த் திரிந்தான்.

சந்தைத் திடலுக்கும் ரயிலடிக்கும் நடுவேயுள்ள குளக்கரையை அடுத்த சத்திரத்தில் உட்கார்ந்துகொண்டு அங்கே குளிக்கிற பெண்களை வேடிக்கை பார்ப்பது அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு. ஆனால், ஒரு நாளாவது தானும் குளிக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியதே இல்லை. மற்ற நேரங்களில் அவன் அந்தத் திண்ணையில் அசிங்கமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருப்பான். சில சமயங்களில் பகல் நேரத்தில் கூட உறங்குவது மாதிரி பாவனையில் வேண்டுமென்றே ஆடைகளை விலக்கிப் போட்டுக்கொண்டு தெருவில் போவோர் வருவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி ரகசியமாக மனத்திற்குள் மகிழ்ச்சி அடைவான்.

இரண்டு தினங்களுக்கு முன்பு லேசாக மழை பெய்து கொண்டிருந்த இரவில் ஒரு பிச்சைக்காரி இந்தச் சத்திரத்துத் திண்ணையில் வந்து படுக்க, அவளுக்கு ஏதேதோ ஆசை காட்டிக் கடைசியில் அவளை வலியச்சென்று சல்லாபித்தான். அதன் பிறகு இவனைப் பழிவாங்கிவிட்ட மகிழ்ச்சியில் தனது குறைபட்டுப்போன விரல்களைக் காட்டித் தான் ஒரு நோயாளி என்று அவள் சிரித்தாள். அதற்காக அருவருப்புக் கொள்கிற உணர்ச்சிகூட இல்லாமல் அவன் மழுங்கிப் போயிருந்தான். எனவே, இவள் இவனுக்குப் பயந்துகொண்டு இரண்டு நாட்களாக இந்தப் பக்கமே திரும்பவில்லை. இவன் அவளைத் தேடிக்கொண்டு நேற்று இரவெல்லாம் சினிமாக் கொட்டகை அருகேயும், சந்தைப்பேட்டையிலும், ஊரின் தெருக்களிலும் கார்த்திகை மாதத்து நாய் மாதிரி அலைந்தான்.

மனித உருக்கொண்டு அவனிடம் உறைந்துபோன தாமசத் தன்மையினால், சோம்பலைச் சுகமென்று சுமந்து கொள்கிற புத்தியின் மந்தத்தினால் அருவருக்கத்தக்க ஒரு புலை நாய் மாதிரி அவன் அங்கு அலைந்து கொண்டிருந்தான். வயிற்றுப்பசி, உடற்பசி என்கிற விகாரங்களிலும் உபாதைகளிலும் சிக்குண்டு அலைகின்ற நேரம் தவிர, பிற பொழுதுகளில் அந்தச் சத்திரத்துத் திண்ணையில் அவன் தூங்கிக்கொண்டே இருப்பான்.

ஃஃஃ ஃஃஃ ஃஃஃ ஃஃஃ

காலை நேரம்; விடியற்காலை நேரம் அல்ல. சந்தைக்குப் போகிற ஜனங்களும், ரயிலேறிப் பக்கத்து ஊரில் படிப்பதற்காகப் போகும் பள்ளிக்கூடச் சிறுவர்களும் நிறைந்து அந்தத் தெருவே சுறுசுறுப்பாக இயங்குகின்ற - சுரீர் என்று வெயில் அடிக்கிற நேரத்தில், அழுக்கும் கந்தலுமான இடுப்பு வேட்டியை அவிழ்த்துத் தலையில் இருந்து கால்வரை போர்த்திக் கொண்டு, அந்தப் போர்வைக்குள் க்ருப்பிண்டம் மாதிரி முழங்கால்களை மடக்கிக் கொண்டு, கைகளிரண்டையும் காலிடையே இடுக்கியவாறு வாயிலிருந்து எச்சில் ஒழுக, ஈ மொய்ப்பது கூடத் தெரியாமல் அவன் தூங்கிக் கொண்டிருந்தான். தெருவிலே ஏற்படுகிற சந்தடியும் இரைச்சலும் ஏதோ ஒரு சமயத்தில் அவன் தூக்கத்தைக் கலைத்தது. எனினும் அவன் விழித்துக் கொள்ள விரும்பாததனால் தூங்கிக் கொண்டிருந்தான்.

- இதுதான் சோம்பல். உறக்கம் உடலுக்குத் தேவை. அனால், இந்தத் தேவையற்ற நிர்ப்பந்தத் தூக்கம்தான் சோம்பலாகும். இந்த மதமதப்பைச் சுகமென்று சகிக்கிற அறிவுதான் தாமசமாகும்.

விரைவாக ஏறி வந்த வெயில் அவன்மீது மெதுவாக ஊர்ந்தது. அவன் தெருவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு சுவர் ஓரமாகப் படுத்திருந்தான். சத்திரத்துச் சுவரின் நிழல் கொஞ்சங் கொஞ்சமாகச் சுருங்க ஆரம்பித்தது. முதலில் வெயிலின் விளிம்பு அவனது விலாவுக்கும் தரைக்கும் இடையே மெள்ள மெள்ளப் புகுவதை அவனது மதர்த்த தேகம் ரொம்பத் தாமதமாக உணர்ந்தது. வெயிலின் உறைப்பை உணரக்கூடிய உணர்ச்சிக் குறுகுறுப்பு மழுங்கிப் போனதால் ஒரு மலைப்பாம்பு மாதிரி அவன் அசிங்கமாக நெளிந்தான். அந்த வெப்பத்திலிருந்து - அந்த வெயிலின் விளிம்பிலிருந்து ஒரு நூல் இழை விலகுவதற்கு எவ்வளவு குறைவான, மெதுவான முயற்சி எடுத்துக் கொள்ளலாமோ, அவ்வளவே அவன் நகர்ந்து படுத்தான். சற்று நேரத்தில் மறுபடியும் வெயில் அவனைக் கடித்தது. அவனது அசமந்தம் எரிச்சலாகி அவன் தூக்கம் கலைந்தான். ஆனாலும் அவன் எழுந்திருக்கவில்லை. இன்னும் கொஞ்சம் நகர்ந்து சுவரோடு ஒட்டிக் கொண்டான்.

எதிரே இருந்த டீக்கடையிலிருந்து டீ அடிக்கிற சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் அவன் டீ குடிப்பது மாதிரி கற்பனை செய்து கொண்டான்.

மறுபடியும் வெயில் அவனை விடாமல் போய்க் கடித்தது. அதற்குமேல் நகர முடியாமல் சுவர் தடுத்தது. ஒரு பக்கம் சுவரும் ஒரு பக்கம் வெயிலும் நெருக்க அவன் எரிச்சலோடு எழுந்து உட்கார்ந்தான். அவனுக்குக் கண்கள் கூசின. ஒரு கண்ணைத் திறக்கவே முடியவில்லை. பீளை காய்ந்து இமைகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

அவன் ஒரு கையால் கண்ணைக் கசக்கிக் கொண்டே இன்னொரு கையால், தலைமாட்டில் சேகரித்து வைத்திருந்த துண்டு பீடிகளில் ஒன்றை எடுத்தான். பீடியைப் பற்ற வைத்து அவன் புகையை ஊதிய போது அவனது அரைக் கண் பார்வையில் மிக அருகாமையில் யாரோ நின்றிருக்கிற மாதிரி முகம் மட்டும் தெரிந்தது. புகையை விலக்கிக் கண்களைத் திறந்து பார்த்தான்.

எதிரே ஒருவன் கைகளை கூப்பி, உடல் முழுவதும் குறுகி, இவனை வணங்கி வழிபடுகிற மாதிரி நின்றிருந்தான். இவனுக்குச் சந்தேகமாகித் தனக்குப் பின்னால் ஏதேனும் சாமி சிலையோ, சித்திரமோ இந்தச் சுவரில் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்து நகர்ந்து உட்கார்ந்தான். இவனது இந்தச் செய்கையில் ஏதோ ஒரு அரிய பொருளைச் சங்கேதமாகப் புரிந்துகொண்டு வந்தவன் மெய்சிலிர்த்து நெக்குருகி நின்றான்.

" இவன் எதற்குத் தன்னை வந்து கும்பிட்டுக் கொண்டு நிற்கிறான் - பைத்தியமோ ? " என்று நினைத்து உள்சிரிப்புடன் -

" என்னாய்யா இங்கே வந்து கும்பிடறே ? இது கோயிலு இல்லே - சத்திரம். என்னைச் சாமியார் கீமியார்னு நெனச்சுக்கிட்டியா ? நான் பிச்சைக்காரன் ..." என்றான் திண்ணையிலிருந்தவன்.

" ஓ !.. கோயிலென்று எதுவுமே இல்லை.. எல்லாம் சத்திரங்களே ! சாமியார்கள் என்று யாருமில்லை. எல்லாரும் பிச்சைக்காரர்களே ! " என்று அவன் சொன்னதை உபதேச மொழிகள் மாதிரி இலக்கண அலங்காரத்தோடு திரும்பத் திரும்பச் சொல்லிப் புதிய புதிய அர்த்தங்கள் கண்டான் தெருவில் நின்றவன்.

" சரி சரி ! இவன் சரியான பைத்தியம்தான் " என்று நினைத்துக் கொண்டான் திண்ணையிலிருந்தவன்.

தெருவில் நின்றவன் இவனிடம் விண்ணப்பித்துக் கொள்கிற பவ்யத்துடன் ' சுவாமி ' என்றழைத்தான்.

இவனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. வந்த சிரிப்பில் பெரும் பகுதியை அடக்கிக் கொண்டு புன்முறுவல் காட்டினான்.

" என்னைத் தங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்; தங்களுக்குப் பணிவிடை புரியவும், தாங்கள் அழைத்த குரலுக்கு ஓடி வரவும் எனக்கு அனுக்கிரகிக்க வேண்டும். "

திண்ணையிலிருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. " சரி, இப்போ எனக்கு ஒரு டீ வாங்கியாந்து குடு " என்றான்.

அந்தக் கட்டளையில் அவன் தன்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டுவிட்டான் என்று புரிந்துகொண்ட மகிழ்ச்சியுடன் இடுப்புத் துண்டிலிருந்த சில்லரையை அவிழ்த்துக் கொண்டு ஓடினான் வந்தவன். அவன் கையிலிருந்த காசைப் பார்வையால் அளந்த ' குரு ', ஓடுகின்ற அவனைக் கைதட்டிக் கூப்பிட்டு " அப்படியே பீடியும் வாங்கியா " என்று குரல் கொடுத்தான்.

அவன் டீக்கடைக்குச் சென்று பார்வைக்கு மறைந்ததும் இவன் வந்து சீடனாக வாய்த்த அதிர்ஷ்டத்தை எண்ணிப் பெருங்குரலில் சிரித்தான் குரு. " சரியான பயல் கிடைத்திருக்கிறான். இவன் மயக்கம் தெளியாதபடி பார்த்துக்கணும். திண்ணெயெ விட்டு எறங்காமல் சொகமா இங்கேயே இருக்கலாம். பிச்சைக்கு இனிமே நாம்ப அலைய வேணாம். அதான் சிஷ்யன் இருக்கானே... கொண்டான்னா கொண்டுவரான். முடிஞ்சா சம்பாரிச்சுக் குடுப்பான்... இல்லாட்டி பிச்சை எடுத்துக்கினு வரான்.. என்னா அதிர்ஷ்டம் வந்து நமக்கு அடிச்சிருக்கு..." என்று மகிழ்ந்திருந்தான் குரு.

சற்று நேரத்தில் சீடன் டீயும் பீடியும் வாங்கி வந்து நிவேதனம் மாதிரி இரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்டு குருவின் எதிரே நின்றான்.

குரு அவனைப் பார்த்து பொய்யாகச் சிரித்தான். அவன் கையிலிருந்த டீயையும் பீடியையும் தனக்குச் சொந்தமான ஒன்று - இதனை யாசிக்கத் தேவையில்லை - என்ற உரிமை உணர்ச்சியோடு முதன் முறையாய்ப் பார்த்தான். அதனை வாங்கிக் கொள்வதில் அவன் அவசரம் காட்டாமல் இருந்தான். தான் சீடனை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு சாமர்த்தியமாக நடந்து கொள்வதற்காக அவன் பீடிகையாகச் சொன்னான்:

" என்னை நீ கண்டுபிடிச்சுட்டே. நீ உண்மையான சிஷ்யன்தான். என்னை நீ இன்னிக்குத்தான் கண்டுபிடிச்சே. ஆனால், நான் உன்னை ரொம்ப நாளாப் பார்த்துக்கினே இருக்கேன். நான் உன்னைக் கொஞ்சம் கேள்விங்கள்ளாம் கேப்பேன். அதுக்கெல்லாம் நீ பதில் சொல்லணும். அதுக்கோசரம் எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுக்காதே. எனக்கு எல்லாம் தெரியும் ! தெரிஞ்சாலும் சிலதெல்லாம் கேட்டுத்தான் தெரிஞ்சுக்கணும். "

இந்த வார்த்தைகளைக் கேட்டு இரண்டு கையிலும் டீயையும் பீடியையும் ஏந்தி இருந்த சீடன் அவனைக் கரங்கூப்பி வணங்க முடியாமல் பார்வையாலும் முகபாவத்தாலும் தன் பணிவைக் காட்டினான்.

" நீ யாரு ? எந்த ஊரு ? பேரு என்ன? நீ எங்கே வந்தே? நான்தான் குருன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது ? ... டீ ஆறிப் போச்சில்லே ? குடு " என்று டீயை வாங்கிக் குடித்துக் கொண்டே சீடன் சொல்கிற பதிலை மெத்தனமாகத் தலையை ஆட்டியவாறே கேட்டான்.

" குருவே... நான் ஒரு அனாதை. அதோ இருக்கிறதே முருகன் கோயில், அங்கே ஒரு மடப்பள்ளி இருக்குது. அங்கே தண்ணி எறைச்சுக் கொண்டு வர்ற வேலை. மடப்பள்ளியிலே இருக்கிற ஐயிரு மூணு வேளையும் சாப்பாடு போட்டுச் செலவுக்கு நாலணா தினம் குடுக்கிறாரு. எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு. இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லேன்னு தெரிஞ்சும் உடம்பைச் சுமந்துகிட்டுத் திரியற சுமையைத் தாங்க முடியலே.. துன்பத்துக்கெல்லாம் பற்று தான் காரணம்னு எல்லாரும் சொல்றாங்க. எனக்கு ஒரு விதப் பற்றும் இல்லே... ஆனாலும் நான் துன்பப்படறேன்... என்ன வழியிலே மீட்சின்னு எனக்குத் தெரியலே... நேத்து என் கனவிலே நீங்க பிரசன்னமாகி, ' இந்தச் சத்திரந்தான் குருபீடம், அங்கே வா ' ன்னு எனக்குக் கட்டளை இட்டீங்க குருவே ! நீங்க இதெல்லாம் கேட்கிறதனாலே சொல்றேன். தாங்கள் அறியாததா ? விடியற்காலையிலேருந்து சந்நிதானத்திலே காத்துக்கிட்டிருந்தேன். என் பாக்கியம் தங்கள் கடாட்சம் கிட்டியது.... "

" ம்...ம்... " என்று மீசையை நெருடிக்கொண்டே அவன் கூறுவதைக் கேட்ட குரு, காலியான தம்ளரை அவனிடம் நீட்டினான்.

சீடன் டீக்கடையில் காலித் தம்ளரைக் கொடுக்கப் போனான். கடவுள் இந்தப் பயலை நன்றாகச் சோதிக்கிறார் என்று நினைத்து அவனுக்காக அனுதாபப்பட்டுச் சிரித்தான் குரு. " ம்.. அதனால் நமக்கென்ன ? நமக்கு ஒரு சிஷ்யன் கிடைத்திருக்கிறான் " என்று திருப்திப்பட்டுக் கொண்டான்.

சீடன் வந்தபிறகு அவன் பெயரைக் கேட்டான் குரு. அவன் பதில் சொல்வதற்குள் தனக்குத் தெரிந்த பல பெயர்களைக் கற்பனை செய்த குரு திடீரெனச் சிரித்தான். இவன் கூறுமுன் இவனது பெயரைத்தான் சொல்ல முடிந்தால் இந்த நாடகத்தில் அது எவ்வளவு அற்புதமான லீலையாக அமையும் என்று நினைத்தே அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பினால் சீடன் பதில் சொல்லச் சற்றுத் தயங்கி நின்றான்.

அப்போது குருசொன்னான்: " பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா - ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான் பாத்தியா ? ஒரு கேள்விக்கு எம்மாம் பதில் ! " என்று ஏதோ தத்துவ விசாரம் செய்கிற மாதிரிப் பிதற்றினான். சீடன் அதைக் கேட்டு மகா ஞானவாசகம் மாதிரி வியந்தான்.

" சரி, உன் பேரு என்னான்னு நீ சொல்ல வேண்டாம். நான் குரு. நீ சிஷ்யன் ... எனக்குப் பேரு குரு; உனக்குப் பேரு ச ஠ஷ்யன். நீதான் என்னை ' குருவே குருவே ' ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டே.... நானும் உன்னை ' சிஷ்யா சிஷ்யா ' ன்னு கூப்பிடறேன்... என்னா ? சரிதானா ? ..." என்று பேசிக்கொண்டே இருந்தான் குரு.

"எல்லாமே ஒரு பெயர்தானா?" என்று அந்தப் பேச்சிலும் எதையோ புரிந்துகொண்ட சீடனின் விழிகள் பளபளத்தன.

"நான் என்ன இப்படியெல்லாம் பேசுகிறேன்..." என்று குரு தன்னையே எண்ணித் திடீரென வியந்தான். இப்படியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

மத்தியானமும் இரவும் அந்தச் சீடன் மடப்பள்ளியிலிருந்து தனக்குக் கிடைக்கிற புளியோதிரை, சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் பயபக்தியுடனும் அன்போடும் கொண்டுவந்து இந்தக் குருவுக்குப் படைத்தான். அவ்வளவு ருசியும் மணமும் புனிதமும் அன்பும் உபசரணையும் உடைய அமிர்தத்தை இவன் ஜென்மத்தில் ருசி பார்த்ததில்லை. ஆவல் மிகுதியால் தனது நடிப்பைக்கூட மறந்து அவற்றை அள்ளி அள்ளி இவன் உண்பதை அன்பு கனியப் பார்த்துக் கொண்டிருந்தான் சீடன்.

குருவுக்கு எதனாலோ கண்கள் கலங்கின. சீடன் தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்.

மறுநாள் காலை அதே மாதிரி திண்ணைக்குக் கீழே வந்து காத்து நின்றிருந்தான் சீடன். அவனுக்கு டீயும் பீடியும் வாங்கி வந்தான். குருவை அழைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போய் அவனது ஆடைகளைத் துவைத்துக் கொடுத்தான். அவனைக் குளிக்க வைத்து அழைத்து வந்தான்.

உச்சியில் வெயில் வருகிற வரை - குருவுக்குப் பசி எடுக்கும்வரை - அவர்கள் ஆற்றில் நீந்திக் குளித்தார்கள்.

"குளிக்கிறது சொகமாகத்தான் இருக்கு. ஆனா, குளிச்சி என்னா பிரயோசனம்... குளிக்க குளிக்க அளுக்கு சேந்துக்கிட்டுத்தானே இருக்கு?... அது அப்படித்தான். பசிக்குது... திங்கறோம்... அப்புறமும் பசிக்கத்தானே செய்யிது... குளிக்க குளிக்க அளுக்காகும். அளுக்கு ஆக ஆகக் குளிக்கணும். பசிக்கப் பசிக்கத் திங்கணும்... திங்கத் திங்கப் பசிக்கும்... என்ன வேடிக்கை!" என்று சொல்லிவிட்டு குரு சிரித்தான். சிரித்துக் கொண்டே இருக்கும் போது "என்ன இது, நான் இப்படியெல்லாம் பேசுகறேன்" என்று எண்ணிப் பயந்துபோய்ச் சட்டென நிறுத்திக் கொண்டான்.

சீடன் கை கட்டிக்கொண்டு இவன் சொல்வதைக் கேட்டான்.

ஃஃஃ ஃஃஃ ஃஃஃ ஃஃஃ

அன்றும் அதற்கு மறுதினமும் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் இதே மாதிரி காலையில் டீயும் பீடியும் வாங்கித் தந்து, குளிப்பாட்டி, மத்தியானம் உணவு படைத்து, அவனைத் தனிமையில் விடாமலும், அவன் தெருவில் அலையாமலும் இந்தச் சீடன் எப்போதும் அவன் கூடவே இருந்தான்.

அவன் பேசுகிற எல்லா வார்த்தைகளிலும் அவனே புதிதாகப் புரிந்து கொள்ளுகிற மாதிரி பலவிதமான அர்த்தங்கள் கண்டு இந்தச் சீடன் புளகாங்கிதம் அடைவதைச் சந்தைக்கு வருகிற சிலர் சத்திரத்துத் திண்ணையில் ஓய்வுக்காகத் தங்கி இளைப்பாறும்போது வேடிக்கை பார்த்தார்கள்.

சிலர் குருவை அடையாளம் கண்டு கொண்டு இவன் யாரோ ஒரு சித்தன் என்று அப்போதே நினைத்ததாகவும், அப்படிப்பட்டவர்கள் இப்படியெல்லாம் கந்தலுடுத்தி, அழுக்கு சுமந்து, எச்சில் பொறுக்கித் திரிவார்கள் என்றும் தன்னைப் பற்றி இவனுக்குத் தெரியாத ஒன்றைத் தெரிவித்தார்கள். அதைத் தெரிந்து கொள்வதற்கே ஒருவருக்குப் பக்குவம் வேண்டுமென்றும், அந்தப் பக்குவம் இந்தச் சீடனுக்கு இருப்பதாகவும் கூறிச் சீடனைப் புகழ்ந்தார்கள்.

அதில் சிலர், இப்படியெல்லாம் தெரியாமல் இந்தச் சித்த புருஷனை ஏசி விரட்டியடித்ததற்காக இப்போது பயமடைந்து இவனிடம் மானசீகமாவும், கீழே விழுந்து பணிந்தும் மன்னிப்பு வேண்டினார்கள்.

இந்த ஒரு சீடனைத் தவிர குருவுக்குப் பக்தர்கள் நாள்தோறும் பெருக ஆரம்பித்தார்கள். சந்தைக்கு வருகிற வியாபாரிகளும் மற்றவர்களும் இவனை வேடிக்கை பார்த்து நின்றுவிட்டு இவனுக்கு டீயும், பீடியும், பழங்களும் வாங்கித் தந்தார்கள்.

இவன் அவற்றைச் சாப்பிடுகிற அழகையும், தோலை வீசி எறிகிற லாவகத்தையும், பீடி குடிக்கிற ஒய்யாரத்தையும், விழி திறந்து பார்க்கிற கொலத்தையும், விழி மூடிப் பாராமலிருக்கிற பாவத்தையும், அவர்கள் புகழ்ந்தும் வியந்தும் பேசினார்கள்.

குருவுக்கு முதலில் இது வசதியாகவும், சந்தோஷமாகவும், பின்னர் ஒன்றும் புரியாமலும் புதிராகவும் இருந்து, கொஞ்ச நாட்களில் எல்லாம் புரியவும் புதிர்கள் விடுபடவும் தொடங்கின.

ஒரு நாள் இரவு குருவுக்குத் தூக்கம் வரவில்லை. அவன் எது எது பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தான். அதாவது, அந்தச் சிஷ்யனோடு பேசுகிற மாதிரித் தனக்குள்ளே பேசிக்கொண்டிருந்தான்.

அவன் நட்சத்திரங்களைப் பற்றியும், தான் இந்த உலகத்தில் வருவதற்கு முன்னால் இருந்த காலத்தைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும், தனக்குப் பின்னால் உள்ள காலங்களைப் பற்றியும் எந்த முடிவிலும் மனம் நிற்க முடியாத விஷயங்களைப் பற்றியெல்லாம் யோசித்தான்.

அவன் தூங்காமலே கனவு மாதிரி ஏதோ ஒன்று கண்டான். அதில் தன் குரலோ, சீடனின் குரலோ அல்லது சந்தையில் திரிகிற இவனை வணங்கிச் செல்கிற யாருடைய குரலோ மிகவும் தெளிவாகப் பேசியதைக் கேட்டான்.

"உனக்கு சிஷ்யனாக வந்திருக்கிறானே, அவன்தான் உண்மையிலே குரு... சிஷ்யனாக வந்து உனக்குக் கற்றுத் தந்திருக்கிறான்... அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து சிஷ்யனாய் வந்திருக்கிறான். எந்தப் பீடத்திலே இருந்தால் என்ன? எவன் கற்றுத் தருகிறானோ அவன் குரு. கற்றுக் கொள்கிறவன் சீடன். பரமசிவனின் மடி மீது உட்கார்ந்துகொண்டு முருகன் அவனுக்குக் கற்றுத் தரவில்லையா? அங்கே சீடனின் மடியே குருபீடம். அவனை வணங்கு..."

பறவைகள் பாடிச் சிறகடித்துப் பறந்து சந்தைத் திடலின் மரச் செறிவில் குதூகலிக்கிற காலைப்பொழுது புலர்கிற நேரத்தில் அதே மாதிரியான குதூகலத்துடன் கண் விழித்தெழுந்த குரு, சீடனை வணங்குவதற்காகக் காத்திருந்தான். மானசீகமாய் வணங்கினான். அவன் வந்தவுடன் சாஷ்டாங்கமாய் அவன் பாதங்களில் தான் விழப்போவதை எண்ணி மெய்சிலிர்த்தான்.

ஆனால், அந்தச் சிஷ்யன் வரவே இல்லை. இந்தக் குரு அந்த மடப்பள்ளிக்கு - தன்னை ரசவாதம் செய்து மாற்றிவிட்ட சீடனைத் தேடி ஓடினான்.

மடப்பள்ளியில் உள்ளவர்கள் இவனை வணங்கி வரவேற்று உட்காரவைத்து உபசரித்தார்கள்.

குருவுக்கு அப்போது சீடனின் பெயர் தெரியாத குழப்பத்தால் என்னவென்று கேட்பது என்று புரியாமல் "என் சிஷ்யன் எங்கே?" என்று விசாரித்தான்.

அவர்கள் விழித்தார்கள். குரு அடையாளம் சொன்னான். கடைசியில் அவர்கள் ரொம்ப அலட்சியமாக "அவன் நேற்றே எங்கோ போய்விட்டானே" என்றார்கள்.

"அவன்தான் நமக்கெல்லாம் குரு!" என்றான் குரு.

"அப்படியா!" என்று அவர்கள் ஆச்சரியம் கொண்டனர்.

அதுபற்றி அவனது வேதாந்தமான விளக்கத்தை, அவர்கள் எதிர்பார்த்து நின்றனர். ஆனால், இவன் ஒன்றும் பேசவில்லை. அதன் பிறகு, ஒன்றுமே பேசவில்லை. எழுந்து நடந்தான்.

சந்தைத் திடலிலும் ஊரின் தெருக்களிலும் சீடனாகி வந்த அந்த குருவைத் தேடித் திரிந்தான் இவன். சீடனைக் காணோம். இவன் சிரித்தான். தேடுவதை விட்டு விட்டான்.

இப்போதெல்லாம் சந்தைத் திடலில் அழுக்கும் கந்தையும் உடுத்தி ஒவ்வொருவரிலும் எதையோ தேடுவது மாதிரியான கூர்த்த பார்வையுடன் இவன் திரிந்து கொண்டிருக்கிறான். இவனை யாரும் விரட்டுவதில்லை. குழந்தைகள் இவனைப் பார்த்துச் சிரித்து விளையாடுகின்றன. பெண்களூம் ஆண்களும் இவனை வணங்கி இவனுக்கு எதையாவது வாங்கித் தந்து அன்புடன் உபசரிக்கிறார்கள்.

அந்தச் சீடனிடம் என்ன கற்றானோ அதனை இவன் எல்லாரிடத்தும் எல்லாவற்றிலும் காண்கிற மாதிரி நிறைவோடு சிரித்துச் சிரித்துத் திரிந்து கொண்டிருக்கிறான்.

முற்றும்