தஞ்சைச் சிறுகதைகள்/சைக்கிள்

சாருநிவேதிதா


க்ஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ என்ற நாவல் மூலம் இலக்கியத்தில் கலகக்குரல் எழுப்பிய சாருநிவேதிதா கீழ்த்தஞ்சைக்காரர்.

‘எண்பதுகளின் பிற்பகுதியில் சாருநிவேதிதா, சில்வியா போன்றோர் அறிமுகப்பட்டு, விமர்சகர்களின் புறக்கணிப்புக்கும் இளைய தலைமுறையினரின் வரவேற்புக்கும் ஆளாயினர்’... புதிய இலக்கியப் போக்கு பற்றிக் குறிப்பிடுகிறார். (தளம் 1990 ஆகஸ்ட்) அ.மார்க்ஸ்.

‘...மனிதர்களின் செக்ஸ் வக்கரங்களையும், ஓடுகாலித்தனத்தையும் சித்தரிப்பது தான் தத்துவங்களுக்கும், அறவியலுக்கும் எதிரான கலகம் என்று சாருநிவேதிதா கருதுகிறார் போலும். இது மிக ஆபத்தானது. நவநவீனக் கோட்பாட்டை இலக்கிய நாசகாரப் போக்கு, இலக்கிய வெறுமைப் போக்கு என்று கூறலாம்’... என்று மார்க்ஸிய விமர்சகர், தி.க.சி. குறிப்பிடுகிறார்.

‘சாரு நிவேதிதா தன் கதைக்களங்களை மிகவும் நேர்த்தியாகப் பயன்படுத்தும் ஆற்றல் படைத்தவர். சொல்ல வேண்டியதை முழுமையாகவும், சிக்கனமாகவும் கூறவல்லவர். அவருடைய உரையாடல் பதிவு சிறப்பாகவே இருக்கும். (நேநோ சிறுகதைத் தொகுதியில் அசோகமித்திரன்) இவருடைய நோக்கில் நானும் உடன்படுகிறேன். ஆனால் அதே சமயத்தில்....

அடுப்பெரிக்க முடியாத பெரியக்கட்டையை உடைத்து அடுப்பெரிக்க பயன்படுத்தினால் சரி. அதை அப்படியே சிதைத்து மண்ணோடு மண்ணாக்கிவிட்டால்....

வாழ்க்கையைக் கட்டு உடைத்து எளிய மனிதனுக்காக குரல் கொடுக்கும்போது இலக்கை ஏற்றுக் கொள்ள முடிகிறது. மனிதநேயத்தை சிதைப்பு செய்யும்போது அந்த இசம் நாசகாரப் போக்குக்கு உட்படுத்திக் கொள்கிறது.

இந்த நவநவீனத்துவமே பெண்ணியத்தின் தலித்தியத்தின் உச்சக்குரல் என்ற கோஷத்தை வைத்துவிட்டு இந்த இசம் வார்த்த ‘ஸிரோடிகிரி; நாவலையும், நேநோ’ சிறுகதைத் தொகுதியும் முன் வைத்து பார்த்தால்... தலித்தியத்திற்கும் பெண்ணியத்திற்கும் எதிராகவே உள்ளதை மறுப்பதற்கு இடமில்லை.

சைக்கிள்


வீட்டுக்கு எதிரே தெரிந்த கூட்டத்தை பார்த்ததும் ‘பகீர்’ என்றது. கிட்டத்தில் போனதும் தான் எதிர் வீட்டில் கூடியிருந்த கூட்டம் என்று தெரிந்தது. ரூபவதியின் கணவர் கத்திக் கொண்டிருந்தார். ‘அடிப்பேன், வெட்டுவேன், குத்துவேன், கூறு கூறாகக் கிழித்துப் போடுவேன்’ என்றும் இன்னும் பிரசுரிக்க முடியாத வகையிலும் வசைகள் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருந்தன.

பக்கத்துத்தெரு சண்முகத்தின் மனைவிதான், ரூபவதியின் கணவனோடு மல்லுக்கு நின்று கொண்டிருந்தாள். இரண்டு பேரையும் ஒரு பத்து பதினைந்து பேர் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். விட்டால் இரண்டு பேரும்தெருவில் கிடந்து புரளுவார்கள் போல் தெரிந்தது அல்லது சண்டை போடும் ஆர்வம் அணைந்து ஒன்றும் பேசாமல் அவரவர் ஜோலியைப் பார்த்துக்கொண்டு போனாலும் போய் விடலாம் சொல்வதற்கில்லை.

கத்திக் கத்தி, இரண்டு பேருக்குமே தொண்டை கட்டிவிட்டது போலும் ரூபவதியின் கணவனுக்கு பெண் குரலும், சண்முகத்தின் மனைவிக்கு ஆண் குரலும் வந்து விட்டிருந்தது. சண்டையை விலக்கி விட்டுக் கொண்டிருந்தவர்கள் சோர்வடைந்து விட்டதனாலோ அல்லது சுவாரசியம் குறைந்து விட்டதனாலோ ஒவ்வொருவராக சண்டைக் களத்திலிருந்து விலகிக் கொண்டிருந்தார்கள்.

ரூபவதி தன் பெயருக்கேற்ற அழகு பொருந்தியவள் என்று சொன்னால். கதைக்காக பொய் சொல்வதாகிவிடும். ஆனால், அதே, சமயத்தில் அவலட்சணமும் அல்ல என்றுதான் சொல்லவேண்டும். பெண்களின் சராசரி உயரத்தைவிட சற்று அதிகப்படியான உயரம். ஊடுருவிப் பார்க்கும் பார்வை வசீகரிக்கும் சிரிப்பு. இதில் சண்முகம் எதைக் கண்டு மோகம் கொண்டானோ தெரியவில்லை. ரூபவதியே கதியாகக் கிடந்தான் தன் கடையையும் மறந்து.

ரூபவதிக்கு இரண்டு பையன்கள். முதல் பையன் எட்டாம் வகுப்பு. இரண்டாவது பையன் ஐந்தாம் வகுப்பு. ரூபவதியின் கணவர் ஒரு அரசாங்க அலுவலகத்தில் டிரைவர். அதிகாரிகளோடு இன்ஸ்பெக்க்ஷன் என்று சொல்லி அடிக்கடி வெளியூர் போய்விடுவார். ஊரில் இருந்தாலும் ‘சைடு’ பிசினசாக வீட்டு மனை வாங்க, விற்க உதவும் தரகு வேலையும் பார்க்கிற காரணத்தால் வீட்டுக்கு வர இரவு பத்து மணிக்கு மேல ஆகிவிடும். இதற்கெல்லாம் வசதியாக ஒரு பைக்கும் வைத்திருக்கிறார்.

ஆனால், அவர் மனைவி ரூபவதிக்கோ சைக்கிள் மீது தான் மோகம் சைக்கிள், சண்முகத்தின் சைக்கிளாக இருந்தால் இன்னும் அதிக மோகம் வரும்.

காலையில் ரூபவதியின் கணவர் வெளியே போகும் பைக் சத்தம் கேட்டதும், ஒருசில நிமிடங்களிலியே சண்முகத்தின் சைக்கிள் மணிச்சத்தம் ரூபவதியின் வீட்டு வாசலில் கேட்கும். சைக்கிளை விட்டு, இறங்காமலேயே ஒரு காலை தரையில் ஊன்றிக் கொண்டு பெல்லை அழுத்துவான். சத்தம் கேட்டதும், சிரித்துக் கொண்டே வெளியே ஓடி வருவாள் ரூபவதி. (நிஜமாகவே ஓடித்தான் வருவாள். அப்போது அவளைப் பார்த்தால் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பையனின் அம்மா என்றே நம்ப முடியாது. ப்ளஸ் டூ மாணவி ஒருத்தியின் துள்ளலுடன் ஓடி வருவாள்) சில வேளைகளில் ஓரிரு நிமிடங்கள் சைக்கிளை விட்டு இறங்காமலேயே பேசிக் கொண்டிருந்து விட்டு போய் விடுவான். சண்முகம். சில வேளைகளில் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு உள்ளே போவான்.

நான் ஜன்னலுக்கு பக்கத்தில் நின்று முகச் சவரம் பண்ணிக் கொண்டிருக்கும் போது தெரியும் காட்சி அது. ஆர்வ மிகுதியால், சற்று எட்டிப் பார்த்தால் ‘அப்படி என்ன அடுத்தவங்க விஷயத்தில் அக்கறை?’ என்று கேட்டு ஜன்னலை சாத்துவாள் என் மனைவி. ஜன்னல் சாத்தப்பட்ட தினங்களில் லைட்டைப் போட்டுக் கொண்டுதான் சவரம் செய்ய வேண்டியிருக்கும்.

‘காதல் ஜோடி இருவரும் ஏன் தத்தம் கணவனையும், மனைவியையும் ‘டிவோர்ஸ்’ செய்துவிட்டு புதிதாகக் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது?’ என்று ஒருநாள் என் மனைவியிடம் கேட்டேன்.

‘இது என்ன அமெரிக்கான்னு நினைச்சீங்களா? வாயை மூடுங்க. யாராவது கேட்டால் என்ன நினைப்பாங்க?’ என்றாள் அவள்.

அவள் சொல்வதும் சரிதான். ஏதோ ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையில் படித்தது ஞாபகம் வந்தது. வழக்கம்போல் நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி, நீதிமன்றத்தில் அன்றையதினம் ஜோடிகள் கூட்டம் எக்கசக்கமாக நின்று கொண்டிருக்கவே விஷயம் புரியாமல் முழித்திருக்கிறார். பிறகு ஒருவாறு, தெளிந்து அவர்களிடம் ‘லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் நீங்கள் தவறான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள். இது திருமணம் பதிவாளர் அலுவலகம் அல்ல. இது நீதிமன்றம்!’ என்று சொல்லியிருக்கிறார். உடனே அந்த ஜோடிகள் கோரசாக, ‘சாரி மிலாட்! இது நீதிமன்றம் என்று தெரிந்துதான் வந்திருக்கிறோம். நாங்களெல்லாம் ‘டிவோர்ஸ் வாங்க வந்திருக்கும் ஜோடிகள்’ என்று சொல்ல அதிர்ந்து போனாராம் நீதிபதி.

சண்டை எல்லாம் முடிந்து தெரு அமைதியான பிறகு, என் மனைவி நல்ல மூடில் இருக்கிறாளா என்பதையும் சோதித்து அறிந்த பிறகு சண்டையைப் பற்றி தெரிந்துக் கொள்ள அவ்வளவாக ஆர்வமில்லாதவன் போல் ஏதோ எதேச்சையாகக் கேட்பவனின் ‘தொனியை’ சிரமப்பட்டு வரவழைத்துக் கொண்டு விசாரித்தேன்.

“கேக்கலேன்னா உங்களுக்கு மண்டை வெடிச்சிடும்னு எனக்குத் தெரியும்... விஷயம் ரூபவதியின் புருஷனுக்குத் தெரிந்து விட்டது. அதுதான் ரகளை” என்றாள்.

இதுமாதிரி விஷயத்தில் மட்டும் கணவனுக்குத்தான் கடைசியில் தெரிகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

பிறகு சண்டை தினமும் தொடர்ந்து ‘உன் மனைவியைக் கண்டித்து வை’ என்று சண்முகத்தின் மனைவியும், ‘உன் புருஷன் இங்கே இனிமேல் வந்தால் அவன் குடலை உருவி விடுவேன்’ என்று ரூபவதியில் கணவனும் பரஸ்பரம் மிரட்டிக் கொண்டார்கள்.

இப்போதெல்லாம் தெருவாசிகள் யாரும் சண்டையை விலக்கி விடப் போவதில்லை. சண்டை முடிந்து கடைசியில் சண்முகத்தின் மனைவி தெரு மண்ணை வாரி வாரி இறைத்துவிட்டுப் போவாள். இவ்வளவுக்கும் அவளுடைய ஒரு வயதுக் குழந்தை அவள் இடுப்பிலேயே தொற்றிக் கொண்டு கிடக்கும்.

இவ்வளவு சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோதும், சண்முகத்தின் சைக்கிளை எதிர்வீட்டில் நான் பார்க்கத் தவறியதில்லை.

“இப்போது எல்லாம் பகல் பூராவும் சைக்கிள் எதிர் வீட்டிலேயே தான் கிடக்கிறது” என்று நான் கேட்காமலேயே சொன்னாள் என் மனைவி.

இப்படி இருந்து கொண்டிருக்கும் போதுதான், ஒரு நாள் சண்முகத்தை போலீசார் வந்து அழைத்துக்கொண்டு போனார்கள். ரூபவதிதான் தன்னை தினமும் வீட்டுக்கு அழைக்கிறாள் என்றும், அவள் தனக்கு எழுதிய கடிதங்களே கத்தை கத்தையாக இருக்கிறது என்றும் சொல்லி, வீட்டுக்கு வந்து அந்தக் கடிதங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷனில் காட்டினானாம் சண்முகம். இது எல்லாவற்றையும் அவன் மனைவி தெருவில் நின்று கொண்டு அடிக்கடி ரூபவதி வீட்டுப் பக்கம் மண்ணை வாரித் தூற்றிக் கொண்டே சொல்லி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். போலீசார் ரூபவதியையும் வந்து அழைத்துக்கொண்டு போனார்கள். அவளுடன் அவள் கணவரும் போனார்.

ஸ்டேஷனிலிருந்து ரூபவதி தம்பதியர் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது எதேச்சையாக நான் வாசலில் நின்று கொண்டிருந்தேன். (எதேச்சையாக என்பதை என் மனைவி ஆட்சேபிப்பாள். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எனக்கு அவசர ஜோலி எதுவும் இல்லை என்று சொன்னாலும் கூட அவளிடம் எடுபடாது.) ரூபவதியின் கணவர் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். ஒரு வெற்றிப் புன்னகை மாதிரி இருந்தது. என்னுடன் ஏதோ பேச விரும்புகிறார் போலவும் தோன்றியது. பதிலுக்கு நானும் பூத்து வைத்தேன். உடனே ‘சிக்னல்’ கிடைத்துவிட்டது போல், “அந்தத் தறுதலைப் பயலை எனக்கு யாரென்றே தெரியாது. அடிக்கடி எங்கள் வீட்டுப் பக்கமாக வந்து என்னைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறான் என்று ஸ்டேஷனில் சொல்லி விட்டார். சார் இவள்” என்று பெருமிதத்துடன் தன் மனைவியைச் சுட்டிக்காட்டி என்னிடம் சொன்னார்.

நான் பதிலுக்கு, ‘அப்படி என்றால் உங்கள் மனைவி அவனுக்கு எழுதின கடிதங்கள்?’ என்று கேட்க வாயெடுத்து, ஆனால், அது அவ்வளவு நாசுக்கான தல்ல என்பதை உடனே உணர்ந்தவனாய், “அப்படீங்களா? அப்படீன்னா சரி” என்று சொல்லி தலையை பலமாக ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு உள்ளே போனேன்.

இனிமேல், ரூபவதியின் வீட்டுப் பக்கம் போனால் தோலை உரித்து விடுவோம் என்று மிரட்டி போலீசார் சண்முகத்தை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்ற செய்தி காதில் விழுந்தது.

ஆனால், அதற்குப் பிறகும்கூட சண்முகத்தின் சைக்கிளை எதிர் வீட்டில் பார்த்த போது தான் விஷயம் சீரியசாகிவிட்டது புரிந்தது. என்னதான் எனக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனையாக இருந்தாலும், சண்முகத்தின் மனைவியின் இடுப்பிலேயே எப்போதும் தொற்றிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் ஞாபகம் வந்து என் வயிற்றைக் கலக்கியது.

பிறகு, போலீசார் மறுபடியும் வந்து சண்முகத்தை அழைத்துப் போனார்கள். போலீசாரை ரூபவதியின் கணவர் நன்றாக கவனித்து விட்டார் என்று தெருவில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய தினம் மாலையே தெருவில் திடீரென்று ‘புசு புசு’ வென்று ஒரு வதந்தி பரவியது. சண்முகத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஆடைகளை எல்லாம் கழற்றிவிட்டு, நிர்வாணமாக்கி, அடியோ தண்டதென்று அடிக்கிறார்கள் என்ற வதந்தியே அது. வதந்தி உண்மையா என்ற சர்ச்சை கிளம்பியது. யார் யாரோ பார்த்தேன் என்றார்கள். ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள சில தைரியசாலிகள் ஸ்டேஷனை நோக்கி நடந்தார்கள். நானும் ஓரளவு தைரியம் பெற்றவனாய் கிளம்பினேன். வதந்தி உண்மைதான் உடம்பு பூராவும், ரத்தக் காயங்களுடன், தோல் கிழிந்து சதை தெரிய உடம்பில் வஸ்திரம் எதுவுமின்றி குப்பையாய்க் கிடந்தான் சண்முகம்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே தரையில் கிடந்த அவனை சில பேர் தூக்கி இடுப்பில் துண்டைக்கட்டி ரிக்ஷாவில் போட்டு வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.

மறுநாள் நான் ஆபீசுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய போது சண்முகத்தின் வீட்டு வாசலில் கூட்டம். வேகத்துடன் போய் எட்டிப் பார்த்தேன்.

உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான் சண்முகம். இரண்டு மூன்று பேர் ஆஜானுபாகுவான அவனை உத்தரத்திலிருந்து இறக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு வெளியே கேட்பாரற்று விழுந்து கிடந்தது சைக்கிள்.