தஞ்சைச் சிறுகதைகள்/நாடகவாத்தியார் தங்கசாமி

சி.எம். முத்து


ஞ்சை - இடையிருப்பு கிராமத்தைத் தாய் மண்ணாய்க் கொண்ட முத்து, தான் உண்மையான கலைஞன் என்பதை 'நெஞ்சின் நடுவே', 'கறிச்சோறு' ஆகிய நாவல்கள் மூலம் நிரூபித்துக் கொண்டார்.

மேலத்தஞ்சை வாழ்மக்களின் - குறிப்பாக கள்ளர் மரபினரின் வாழ்க்கையோடு அந்த மண்ணின் மணத்தையும் பொய்மை கலவாது முத்து வெளிப்படுத்திய கலைவடிவம் படிப்பவரைத் தன் வயப்படுத்திக் கொள்ளும் என்று சொன்னால் மிகையில்லை.

எழுபதுகளில் எழுத ஆரம்பித்தவர். நாட்டுப்புறப் பாடல்களில் ஈடுபாடு கொண்டு நாட்டுப்புறக்கலையை மேடையேற்றினாலும் சிறுகதை வடிவத்தில் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்திருக்கிறார்.

இந்தியா டுடே முதலாம் இலக்கிய ஆண்டு மலரில் திரு. வெங்கட்சாமிநாதன் இப்படிக் கூறுகிறார். "அறுபது ஆண்டு கால இலக்கிய வரலாற்றில் திராவிட பாரம்பரியத்தில் எழுத வந்த அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி உட்படவும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் உட்படவும் கலையைப் பிரச்சாரப்படுத்தி விட்டனர். அதனால் தான் உலகத் தரத்தை எட்டமுடியாமல் போய்விட்டது. இது தமிழ்மொழிக்கு நேர்ந்த ஆபத்து. தமிழ்நாட்டு சி.எம். முத்துவால் மட்டுமே அந்த வெற்றிப் பாதையை அடைய முடிந்தது. சாதி பற்றிய விஷயங்களை கலாப்பூர்வமாக சொல்லமுடியும் என்று சாதித்துக்காட்டிய அவரை தமிழகம் கவனிக்காதது அவருக்கு நேர்ந்த துரதிஷ்டமல்ல. தமிழின் துரதிஷ்டம் என்றால் மிகையில்லை ...” என்று அவர் சொன்னது சி.எம். முத்துவைப் பொறுத்தவரை மிகையில்லை தான்.

ஆனால் வெங்கட் சாமிநாதன் திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகளின் மீது சந்தேகப்படுவதும் கொச்சைப்படுத்துவதும், ஓரவஞ்சனையே.

நாடக வாத்தியார் தங்கசாமி


நாடக வாத்தியார் தங்கசாமி இந்த பொளப்புக்கு வந்து வள்ளுசா நுப்பது வருசம் ஓடியே போச்சி. அவருக்கு இப்பக்கி வயசு தோராயமா அறுவத்தஞ்ச தாண்டி வச்சிகிட்டாலும் அவுரு நாடாவம் பளக்க வந்ததெல்லாம் அவுரோட பதினஞ்சாவது வயசுல தான். அந்த பதினஞ்சாவது வயசுலயே அவுருக்கு நாடாவ ஞானமெல்லாம் அத்துப் படியாயி போயிருச்சி. அரிச்சந்திராவிலேருந்து ஆரம்பிச்சா ராம நாடாவம்; பவளக்கொடி; வள்ளித் திருமணம்; சத்தியவான் சாவித்திரி; நல்லதங்காள்; நந்தன் சரித்திரம் அப்படின்னு பல நாடாவத்துல கரைகண்டு போயிருந்தாலும், அவுரு தனக்குன்னு மெயினா வச்சிகிட்டதெல்லாம் அரிச்சந்திராவ மட்டும் தான். அந்த நாடாவம்ன்னா அவுருக்கு ரொம்ப இஷ்டம். அவுருக்கு மட்டும்தானா? நாடாவத்துல வேசம் கட்டிகிட்டு நடிக்க வந்த பலபேருக்கு அதுதான் இஷ்டம். அவுரோட பதுநாலாவது வயசுலேருந்து நுப்பத்தஞ்சாவது வயசு வரைக்கும் தமிழ்நாட்டுல சும்மா ஐநூறு நாடாவ மேடையாவது ஏறியிருப்பாருன்னு தான் தோராயமா சொல்லணும். கணக்கெல்லாம் வச்சிகிட்டா அதத்தாண்டிதான்னு வச்சுக்கங்க. அவுரோட பதினாலாவது வயசுல மொத மொதலா உள்ளூரு நாடாவத்துல லோகிதாசனா வேசம் கட்டி ஜனங்களோட பரிதாபத்தையும், பாராட்டையும் வெகுசா பெத்துக் கிட்டதுல 'இன்னாம நாடாவம்தான் நம்ப பொளப்புன்னு' அன்னிக்கி நெஞ்சுல உறுதி எடுத்துக்கிட்டவருதான் இந்த தங்கசாமி. தங்கசாமிக்கு நாடாவம் பழக்கிக் குடுத்தது ஆருங்குறீங்க...? தஞ்சாவூர் ஜில்லா ஊத்துக்காடு மொட்ட வாத்தியாருதான். அந்த மொட்ட வாத்திக்கு பேரெல்லாம் கூட உண்டு. தங்கவேலுன்னு அழகான பேரு. அவுரு வயச ஒத்த மனுசங்க தங்கசாமியோட குருநாதரை தங்கவேலுன்னு கூப்பிட்டு பார்த்ததே இல்ல. 'மொட்ட வாத்தியாரு, மொட்ட வாத்தியாரு'ன்னு தான் கூப்பிட்டு பாத்துருக்காரு இவுரு. தங்கசாமி கூட ஆர்கிட்டயாவது இவுருப் பத்தி பேசிக்கிட்டிருக்கப்ப 'மொட்ட வாத்தியாரு' அப்படின்னுதான் குறிப்பிட்டு சொல்லுவாரு. ரொம்ப நாளு வரைக்கும் அவுருபேரு 'மொட்டதானான்னு' ஒரு சந்தேகம் தங்கசாமிக்கு நெஞ்சில் இருந்திச்சி. கேட்டுதான் பாத்துருவேமேன்னு மொட்ட வாத்தியாருகிட்டயே போயி கேட்டாரு. துணிஞ்சி கேட்டுப்புட்டாரே ஒளிய உள்ளுக்குள்ள நடுக்கம்தான். அவருக்கு வாத்தியாரு தப்பா எடுத்துக்கு வாரோன்னு தான். கூனிக் குறுவிப்போயி நின்னுக்கிட்டிருந்தாரு. நடுக்கமா போயிருச்சி. 'என்னா துணிச்சலா கேட்டுப்புட்டம்' அப்படிங்குற கவலதான். மொட்ட, வாத்தியாரு கேட்டதுக்கு பதிலு சொல்லாட்டி கூட பரவால்ல தான். அதத் தெரிஞ்சிகிட்டுதான் என்னாப் பண்ணப் போறாம்னு அப்றமா தான புத்தில படுது. மொட்ட வாத்தியாரு இதுக்காவ ஒண்ணும் கோச்சுக்கலை. ஆனா பேசாம குந்திருக்காரே... டக்குன்னு செவ்வுல நாலு குடுத்து நாலு வார்த்தை பேசிபுட்டா கூட தேவலாம் தான். அவுரு மௌனம்தான இவுர சில்லு சில்லா நொறுக்கிட்டிருக்கு.

மொட்ட வாத்தியாரு மேல தங்கசாமிக்கு ரொம்ப இஷ்டம். நிமுசம் வுடாம அவுரு 'ஆ....ஆ...'ன்னு மூச்சுவுடாம இளுத்து பாடுறதும், வெட்டிப் பாடுறதும், சுளுச்சி பாடுறதும், ஜாலக்கு பண்றதும் காதுக்குள்ள தேவாமிர்தமா கேட்டுகிட்டேருக்கே. எம்புட்டு மரியாதை வச்சிருக்காரு தங்கசாமி அவரு மேல. நிமுச நிமுசமா மொட்ட வாத்தியாரப் பத்தியேதான் நெனச்சிகிட்டிருப்பாரு இவுரு. குரு பக்தில அப்டி ஒரு பக்தி. அவுரு சொல்லிகுடுக்குற பாட்டும், வசனமும், நடிப்பும் நெஞ்சுல டேப்பா பதிஞ்சி போயிருச்சி.. தங்கசாமி தா வூட்டுக்குள்ள மாட்டி வச்சிருக்குற அநேக சாமி படத்தோட மொட்ட வாத்தியாரு படத்தத்தான் முக்கியப்படுத்தி மாட்டி வச்சிருக்காரு. நெத்தில் சந்தன பொட்டு வச்சி பூ போட்டு லைட்டு குடுத்து கூட வச்சிருக்காருன்னா பாத்துக்கங்களேன். அவுரு குருபத்திய மதிச்சதால தான இன்னியவரைக்கும் நாடாவத்திலே கெடந்து. ஒலண்டு இந்தால ஓஞ்சிப் போயி குந்தப்போறதும்... தங்கசாமி மட்டும் பாட்டுல கெட்டிக்காரரு இல்லியா என்னா? ரேடியோ பெட்டி, மைக்கு கிய்க்கு இல்லாம ஒரு பர்லாங் தூரத்துக்கு கேக்கும்படியா பாடுவார் ஆசாமி... ஆ...ஆ...ஆன்னு இளுத்து ஆ...ன்னு வெட்டிப் பாடயில பெட்டிக்காரனுக்கும், சட்டிக்காரனுக்கும் டவுசரு கிளிஞ்சிப் போயிராது... என்னா கொரலுடா. சாமி அது தவுள டகடகடகடகன்னு உருட்ற மாறில்லா ராகத்தை எளச்சிப்புடுவாரு எளச்சி... தவள கக்கரக்கா கக்கரக் காக்குற மாறில்லா கொரலு உருண்டு உருண்டு வரும். பாட்ட எம்புட்டுக்கு ருசி படுத்த முடியுமோ அப்புட்டுக்குல்ல ருசிபடுத்திபுடுவாரு. இவுரு எளச்சிப் பாடுற ராகத்தக் கேட்டு எம்புட்டு எடத்துல எம்புட்டு பொம்பளைங்க மயங்கி கீள வுளுந்துருக்காங்க. ஐயோ ஐயோ அதெல்லாம் தனிக்கதைடா சாமி. இவுரோட குருநாதரு மொட்ட வாத்தியாரு ரெண்டு பொண்டாட்டிக்காரரு. அஞ்சு புள்ளங்க வேற. மொட்ட வாத்தியாரு மட்டும் உசுரோட நல்லபடியா இருக்குற காலத்துலே நெனச்சிருந்தாருன்னா எவனோ ஒரு ராஜன் தொன்னுத்தாறு பொண்டாட்டி கட்டிக்கிட்டிருந்தாராமே. அதுமாறி கட்டிருந்துருக்கலாம்தான். அவுருதான் மனஞ்சளிச்சிப் போயி வேண்டாம்னு வுட்டுட்டாரு. பொண்டாட்டிய கட்டிகிட்டு வந்தது சேத்துக்கிட்டு வந்து கட்டிக்கிட்டதுதான்? அவுரோட வேஷம் கட்டிக்கிட்டு சந்திரமதியா ஆக்கிட்டு பண்ணிகிட்ட பொம்பள...ச்சீ... பொண்ணு அவுர வுடுவனா தொடுவனான்னு இருந்து இம்சை பண்ணில்ல கட்டிகிட்டா மனுசி. ஆங்...எங்கியோ ஆரம்பிச்சி எங்கியோல்ல போவுது கதை... தங்கசாமி மொட்ட வாத்தியாரப் பாத்து 'எப்டி மொட்டைன்னு ஓங்களுக்கு பேரு வந்துச் சி'ன்னு கேட்டாருல்ல. அதுக்கொண்ணும் மொட்ட வாத்தியாரு கோச்சுக்கலை. அதுல கோச்சுக்குறதுக்குதான் என்னாருக்கு?

அவுரு செத்த நேரம் மௌனமா குந்திருந்துட்டு சொன்னாரு. “அந்தக் கதைய ஏங்கேக்குற தங்கசாமி... எங்க அம்மா அப்பா வெகுநாளா கல்யாணம் ஆயி பத்துவருஷ காலமா கொளந்த இல்லாம தவிச்சி தவமா தவமிருந்து என்னப் பெத்தாங்களாம். எங்களோட கொல தெய்வம் கொரடாச்சேரிக்கும் பக்கத்துல கீரந்தங்குடி மகமாய்ய வேண்டிகிட்டு அங்கப்பெரட்டம் பெரண்டு பாடகாவடி தூக்கி பால் காவடி எடுத்து... ஓடம்பெல்லாம் ரணமாவுறாப்பல அலகு காவடி எடுத்து என்னான்ன சிகிச்சை ஆக்கிணை பண்ணி அப்றமா நா பொறந்தேனாம். ஆம்பளப்புள்ளையா பொறந்ததுல எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பரமசந்தோசம். அதுல தான் கொளந்தை இல்லாமலிருந்த பத்து வருச காலத்தப் போல பத்து வருச காலத்துக்கு ஏம்புள்ளக்கி ஓஞ்சன்னதிக்கு வந்து மொட்டப் போட்டு முடியிறக்கி காணிக்க வச்சிபுட்டு போறன்னு வேண்டிகிட்டாங்களாம் பெத்தவங்க. முடி மொளக்கிறதும், மொட்டையடிக்கிறதும்ன்னு ஆயிப் போனதுல நா பத்து வருச காலமாக மொட்டைத் தலையாவே வெளையாண்டுகிட்டு கெடந்தனா? அதுல எங்க அம்மா அப்பா வச்ச தங்கவேலுங்குற பேரு வுட்டுப்போயி ஜனம் அம்புட்டும் மொட்டன்னு வச்சப் பேருதான் நெலச்சிப் போச்சி. ஊருக்குள்ள ஆருக்கும் தங்கவேலுன்னா சுளுவா தெரியாது. மொட்டன்னா டகாருன்னு புரியும். நா நாடாவத்த வாத்தியாரு வச்சி பழக்கிட்டு நானே வாத்தியாரா வந்ததும் மொட்ட வாத்தியாருன்னு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்க." அப்படின்னு கதைபோல சொல்லி முடிச்சாரு. ‘கூத்துடா சாமி’ன்னு நெனச்சிக்கிட்டாரு தங்கசாமி. தங்கசாமிக்கி கூட மொட்ட வாத்தியாரு ரெண்டாவது பொண்டாட்டி கட்டிக்கிட்ட சமாச்சாரமெல்லாம் கூடத் தெரியும். அதப்பத்திக் கூட லேசா நெனச்சிப் பாத்துக்கிட்டாரு. மொட்ட வாத்தியாரு மேடையில் ஏறி நடிக்கிற காலத்துல சக்கரவேசமோ, நக்குற வேசமோ போட்டுக்க மாட்டாரு... செத்த நாளி வந்துட்டுப் போற சைடு ஆக்கிட்டும் பண்ணமாட்டாரு. வேசம் கட்டிக்கிட்டா ராஜபார்ட் மட்டும் தான். அவுரு மெயினாக்கிட்டு பண்ணிகிட்டு நடிக்கிறப்பல்லாம் எம்புட்டோ பேர்போன பொம்பளைங்களோடல்லாம் ஆக்கிட்டு பண்ணிருக்காரு. அப்புடி நடிச்சி வர்ற காலத்துல திருவாளூருலேருந்து ஒருத்தி சந்திரா சந்திரான்னு அவுருகூட மெயினாக்கிட்டா நடிச்சிக்கிட்டிருந்தா. அந்தக் குட்டி மொட்டவாத்தியாரு ராகத்துக்கோ நடிப்புக்கோ ஈடுவல்லைன்னாலும், கிட்டத்தட்ட அவுரோட ஒத்துப்போற அளவுக்கு நடிக்கவும் பாடவும் செய்வா. மொட்ட வாத்தியாரு தா நடிக்கிற மேடையிலெல்லாம் அவளதான் ஜோடியா போட்டுக்குவாரு. அப்புடி ரெண்டு பேரும் ஜோடி ஜோடியா நடிச்சிவர்ற காலத்துல ஜனங்க எல்லோரும் அவரையும், அவளையும் சம்பந்தப்படுத்திப் பேசிப்பாங்களாம். இந்த விசியபசியம் மொட்ட வாத்தியாரு காதுக்கும் சந்திரமதி சந்திராவோட காதுக்கும் எட்டிப் போனதுல மொட்ட வாத்தியாரு. கவலைப்பட்டாலும் சந்திரா கவலைப்படலியாம். அவளுக்கு என்னடான்னாக்கா அப்டி கேக்குற சங்கதிபங்கதியெல்லாம் ருசிபசியாயிருந்துச்சாம். பஞ்சுல தீக்குச்சி கொளுத்திவச்சா என்னாவும் கதை...? அப்டிதான் ஆச்சி சமாச்சாரம்.

சந்திரா மொட்டவாத்தியாரு மேல பிரியப்படுற ரகசியத்த நேரடியாவே சொல்லிப்புட்டாளாம். மொட்டவாத்தியாரு லேசுல சம்மதப்படாமருந்தவரு அவ தன் உசுரை மாச்சிக்கிறதுக்காவ மருந்து மாயத்தக் குடிச்சி காப்பாத்திவுட்டு, கதை முத்திப் போச்சி, இன்னிம தாக்குப் புடிக்க முடியாதுன்னு ஒத்துக்கிட்டு கொஞ்ச நாளக்கி அவள வப்பாட்டி மாறி சேத்து கிட்டு வச்சிருந்து அப்றமாதான் ரெண்டாந்தாரம் கட்டிக்கிட்டாரு. நாடாவ கலைஞர்களோட வாழ்க்கையில இதெல்லாம் சகஜமானதுதான் அப்டின்னு தங்கசாமிக்கும் தெரியும். தங்கசாமி மட்டும் இப்புடிபட்ட புடியில்லாம் இன்னிவரைக்கும் சிக்கிக்கிட்டதுல்ல. வந்தவளை வாடின்னு கூப்ட்டு கீப்ட்டு நாச்சியமா பேசி கீசி என்னமோ அப்டி இப்டி பண்ணிக்கிண்ணி வச்சாலும் வச்சிருப்பாரேத் தவுர, கல்யாண அளவுக்கு சங்கதி முத்திப் போயிர வுட்றலை. கட்ன பொண்டாட்டிகிட்ட கொஞ்சம் பயந்த மனுசனாச்சே என்னா பண்றது?

தங்சாமி தனது நுப்பத்தஞ்சாவது வயசு வரைக்கும் உள்ளூரு ஆளுங்களோட நாடாவத்துல நடிக்கிறதுக்கு ஆரம்பிச்சிதுலேருந்து பேர் பெத்த எம்புட்டோ பேர்களோட நடிச்சி பாத்துப்புட்டாரு. எம்புட்டோ பாத்திரங்கள்ளயும் ஆக்கிட்டு பண்ணிப்புட்டாரு. ஒன்னுலயும் சோட போனதுல்ல மனுசன். அவுருகிட்ட இருந்த தெறமைகளை மொட்ட வாத்தியாரு மட்டும் கண்டுபுடிக்காட்டி வய வாய்க்கான்னு விவசாயத்துலதான் ஈடுபட்டுப் போயிருப்பாரு. நாடாவம் நடிக்க ஆரம்பிச்சி அவுருக்கு பேர் கெடச்ச பொறவு அவுருக்கு விவசாயம் பண்றதுலல்லாம் நாட்டமே வந்ததுல்ல. கோடை எப்ப பொறக்கும் கொட்டாவ எங்க போடுவான் அப்டின்னுதான் எதுபாத்துக்கிட்டு கெடப்பாரு. வருசத்துல ஆறுமாசம் கையையும், காலையும் கட்டிப் போட்டாப்புலதான் இருக்கும். திண்ணையில குந்தி ஆசதீர பாடிகிட்டிருப்பாரு. உணர்ச்சிவசப்பட்டு வசனம் கூட பேசிப்பாக்குறதும் உண்டுதான். அவுரு பாட்டையும், வசனத்தையும் கேட்டு ஊரு ஜனங்க வேல வெட்டிகளை வுட்டுபுட்டு செத்தநேரம் கேட்டு பாராட்டிப்புட்டு போய்ச் சேருவாங்க. பொண்டாட்டிக்காரி பெருசா கத்தி நாறடிப்பா. ‘கஞ்சிக்கி கதியத்த நாயிக்கி பாட்டும் கூத்தும்தான் மிச்சம்’ன்னு அத்தோடயா வுடுவா...? ‘கூலிக்காரனுக்கு வாக்கப்பட்டு, போயிருந்த கா வவுத்து கஞ்சிநாச்சும் தட்டுப்படாம கெடைக்கும். இந்த மனுசனக் கட்டிக்கிட்டு அதுக்கும் வக்கத்துப் போச்சி’ம்பா, பொண்டாட்டி வசது செத்தநேரத்துக்கு குறுகுறுன்னுருக்கும். அவ சொல்றதுல நாயமுல்லாமலாயான்னு தன்னையேக் கூட நொந்துக்குவாரு. அவிரு வயித்துப் பாட்டப் பத்தியெல்லாம் ஒருநாளும் கவலப்பட்டுகிட்டதே இல்ல. பாட்டும் கூத்தும் தான் அவுருக்கு சோறு தண்ணி எல்லாமும். கத்தி சிரிக்கடிக்கிற பொட்டாட்டிகிட்ட 'கவலைப்படாம கெட்டி குச்சிவூட்ட இடிச்சி மச்சிவூடா கட்டத்தான் போறன். சீக்கிரத்துல நீயும் நானும் சேந்தர்னயா கார்ல போற டயத்தப் பாரு' அப்படின்னு ஆள அசமடக்கிப்புடுவாரு.

வூட்டுக்குள்ள அடுப்பு எரியறதும், எரியாததும் பொண்டாட்டி சாமார்த்தியதுலதான்... அவ மட்டும் வேலவெட்டிக்கி போவாட்டி நடக்குமா பொலப்பு? தங்கசாமியோட பொண்டாட்டி இப்டி கன்னாப்பின்னான்னு கத்துனாலும் கொண்டாலும், அடி மனசுக்குள்ளார கொஞ்சம் எரக்க சுபாவம் உள்ளவதான். கூத்தாடுற மனுசனக் கட்டிக்கிட்டு நாளும் அவதிப்படுறது ஒரு பக்கத்துல இருந்தாலும், இப்டி நாலு ஜனம் பெருமைபடுத்துறாப்பலயும், மரியாதை மனுசன் தனக்கு கெடச்சாரே அப்டின்னு சமயங்கள்ல சந்தோசப்பட்டுக்றதும் உண்டுதான். அவுரு சொன்ன மாறி காரூல ஏறி போறதுக்கு கனவு காணலன்னாலும், கட்ட வண்டில போறதுக்காவதும் டயம் வராமலயா போயிரும் அப்படின்னுதான் நெனச்சிக்குவா. ஆம்பளப் புள்ளைங்களா ரெண்டு பெத்து அதுங்களுக்கு வேற வயசாயிட்டு வருது. பயலுங்க ஆளாயி மனுசனாயிப் போயித்தா தின்ன வச்சி காப்பாத்தமயா போயிருவானுங் கங்குற நம்பிக்கையில் தான் காலத்த கெடத்திக்கிட்டு கெடக்கா.

தங்கசாமிக்கி மட்டும் குடும்பம் ஒசறனுமே அப்டிங்குற கவலையெல்லாம் இல்லாமயா? இருக்குது...? மனசு எம்புட்டுதான் கூத்துலயும், பாட்டுலயும், குடும்பம் ஒசறனுமே அப்டிங்குறதுலயும் கவல உண்டுதான். எம்புட்டுதான் நாடாவத்துல நடிச்சோ பழக்கிக் குடுத்தோ வருமானம் வந்தாலும், வர்ற காசம்புட்டும் ஏனோ நின்னு தொலைக்கமாட்டேங்குது. வாமடை ஒன்னுருந்தா வடிமடை ஒன்னுருக்குமில்ல. கன்னா புன்னாவா போயிருது. தொயிலுக்கு வந்ததுலேருந்து இன்னிவரைக்கும் முளுசா ஒரு ஆயிரம் ரெண்டாயிரம்னு கண்ணாலப் பாத்ததுல்லயே என்னாப் பண்றது? ராசா வேசம் கட்டிகிட்டா ராசாவாருந்ததுர முடியுமா?

‘அரிச்சந்திரன்’ வேசம் கட்டி ‘அரிச்சந்திரன்’னே பேரு பெத்துக்கிட்ட ‘முட்டம் பெரியசாமி’ சொத்து சொவம் சேத்துகிட்டதுல கூட கில்லாடிதான். அவுரு சாவுறப்ப சாவுறதண்டிக்கி முன்னாலேயே பொறந்த ஊர்ல தன் சமாதிய தானே கட்டி முடிச்சிவச்சிபுட்டுதான் செத்தாரு. அவுரு மாறி தானும் வந்துரணும்னுதான் நெனச்சாரு தங்கசாமி. நெனப்பு நடக்குதா? முட்டம் பெரியசாமிக்கு இவரு மட்டும் சோடையா என்னா? அவுரு மாறி கொரல ஒசத்திப் பாடுறதுலயும், வெட்டி நடக்குறதுலயும், ஜாலக்கு பண்றதுலயும் பலே கில்லாடிதான் மனுசன். அரிச்சந்திரா மயான காண்டத்துல, ‘ஆரடி கள்ளி’ன்னு பாடி முடிக்கிறப்ப அண்டம் குலுங்கும். அம்புட்டு பேர் கண்ணுலயும் நீர் வடியும். எம்புட்டுருந்து என்னா பெரோசனம். முட்டம் பெரியசாமிக்கு ஒரு ரேட்டு தங்கசாமிக்கு ஒரு ரேட்டுன்னுல்ல ஆயிப்போச்சி கதி. அட ரேட்டு பேசி அளச்சிக்கிட்டு போற மக்கமனுச பேசுன ரேட்ட ஒழுங்கா குடுத்து கணக்கு தீர்த்ததுண்டா? ஐநூறு பேசி அளச்சிக்கிட்டு போனா முந்நூறு குடுகறதே பெரிய காரியம்தான். வாக்குல ஒன்னு செய்கையில் ஒன்னு. ‘கலைக்கு என்னடா காசு மசுரு’ அப்டின்னு தங்கசாமிதான் தன்னை சமாதானப்படுத்திக்குவாரு.

முட்டம் பெரியசாமின்னா அப்டிவுட்றுவாரா மனுசன்? அவுருக்கு பேசுன ரேட்ட ஒழுங்கா குடுக்காட்டி மறு வருசத்துக்கு நடக்கிறதுக்கு ஒத்துக்க மாட்டாரு. எப்பவும் அவரப் பொறுத்தவரைக்கும் நாக்கு சுத்தமாருக்கணும். நடிப்பும் சுத்தமாருக்கணும். பாடுற பாட்டும் சுத்தமாருக்கணும். ஜனங்க ரசனைக்கு தவுந்தாப்புல ஒருநாளக்கிம் பாட்டுல சினிமா மெட்ட கலக்கவே மாட்டாரு. கலப்புல்லாத பாட்டத்தான் பாடுவாரு.

கேக்குறதுக்கு ஒருத்தன் இருந்தாகூடப் போறும்னு வீம்பா நெனச்சிக்குவாரு. கொடல்லேருந்து தான் பாட்டு வரும். வெங்கலம் மாறி கணீருங்கும். ஒரு பிசிறு பிசகு வருமா? ‘சும்மாவா சொன்னான் கொடப்புடுங்கி நாடாவும்’ன்னு தங்கசாமியும் அப்டிதான் கொடல்லேருந்து பாட்டெடுத்து பாட்டெடுத்து வத்துன வவுரும் ஒடம்புமா போயித்தாரு. முட்டம் பெரியசாமியோட தங்கசாமி நடிக்கிறப்பல்லாம் நக்குற வேசமானாலும் பரவால்லன்னுதான் ஆக்கிட்டு பண்ணுவாரு. ராஜபார்ட்டுதான் கெடைக்காதே... குத்தப்போறது கலிக்கி, கமுகக்கட்டி மயிரு தெரியுதுன்னு கவலப்பட முடியுமா? நாய் வேசம் போட்டா கொலச்சிதானே ஆவணும்? நச்சத்திரனா விசுவாமுத்திரனா எந்த வேசமானாலும் கட்டிக்குவாரு. அந்த வேசத்தக் கட்டிக்கிட்டா எம்பியல்லோ குதிச்சாவணும். அதுக்குத்தான் தனி பிராக்கிட்டெல்லாம் பண்ணி குடுத்துருக்காரே. மொட்டவாத்தியாரு. உத்தரத்துக்கு தாவுவாரு. பூமிய கொடையலாம்னா கொடஞ்சிகிட்டு கீழக்கூட போயிருவாரு. எல்லாம் மொட்டவாத்தியாரு தயாருதான். ந்தால நாலடி ஓசறம் முளுசாருப்பாராள்னுதான் சொல்லணும். கன்னங்கரேல்னு காரித்துப்புனா காக் காசுக்கு பொறமாட்டாரு. அந்த மனுசன் எம்புட்டு வித்தையெல்லாம் கத்து வச்சிருந்துருக்காரு. பாவம் பத்து பதுனஞ்சி வருசத்துக்கு முந்தியே செத்துப் போயித்தாரு.. செத்த எடம் புல்லு மொளச்சி பூச்சி மரமாவும் போயித்தாரு. மரத்துலதான் மொட்ட வாத்தியாரு குந்திருக்காருன்னு நெனச்சிகிட்டு தங்கசாமி, வருசத்துக்கு கொருக்கா மால கூட கட்டிப்போட்டுட்டு வருவாரு. தங்கசாமி ஒரு தபா ஸ்திரீ பார்ட்டா ஆக்கிட்டு பண்ணனும்னு ஆசப்பட்டு காக்காமுளி கோயிந்தசாமி பிள்ளையோடயே சுத்தி திரிஞ்சாரு. அந்த காக்கமுளி கோயிந்தசாமி எப்டிபட்டவருன்னா சந்திரமதியா வேசம் கட்டிக்கன்னு பொறந்த மனுசன் அவுரு ஒருத்தருதான்னு சொல்லணும். பொம்பள மாறியே கீச்சுக்கொரல்லதான் பாடுவாரு. சாரீரம் சுத்தமாவும், கேக்குறதுக்கு ஏஞ்சிப்பாவும் இருக்கும். அநேவமா முட்டம் பெரியசாமி; கஞ்சனூரு முத்துக்குமர பத்தரு; பிளேட்டு கதிரேசம் பிள்ளை; பசுபதிகோயிலு கதிரேசன் காடவராய்ரு இவுங்களுக்கு ஜோடியா ஸ்திரீ பார்ட்டுல நடிப்பாரு. சந்திரமதிய தவுர வேற பாத்திரங்கள்ல நடிக்கமாட்டாரு. மயான காண்டத்துல லோகிதாசன பறிகுடுத்துபுட்டு கதர்ற கட்டத்துல பின்னிபுடுவாரு பின்னி ஆசாமி.

அவுரு ஸ்திரீ பார்ட்டா வேசம் கட்டிக்கிட்டு மேடையில் வந்து நின்னா ஆம்பளையெல்லாம் ஆ...ன்னு வாயப் பொளந்துகிட்டு பாத்துகிட்டிருப்பானுவ. அசல் பொம்பளை தோத்துப் போயிருவா. அடா அடா என்னா நடை என்னா ஒயிலு- குலுக்கறதும், மினுக்குறதும் காக்கா முளி கோயிந்தசாமியால மட்டும் தான் முடியும். என்னா மூக்கு அது... கத்தி மாறி அம்புட்டு கூர்மையா... அவுரு தாம்பேர மட்டும் ‘காக்கா முளி கோயிந்தசாமி’ன்னு மட்டும் வச்சுக்காமருந்துருந்தாருன்னா தமிழ்நாட்டுல அநேவம் பேரு பொண்ணு, கேட்டு போயிருப்பாங்கன்னா பாத்துக்கங்களன், என்னா கூந்தல்... என்னா பொடவக்கட்டு... அம்புட்டுலயுமுல்ல கில்லாடி. நம்ப தங்கசாமிக்கு அதப் பாத்துதான ஸ்திரீபார்ட்டா ஆக்கிட்டு பண்னும்னு ஆச வந்துச்சி. மொட்டவாத்தியாரு. கிட்ட தன் ஆசய சொன்னப்ப அவரும் ‘குஷி’பட்டுப் போயி, ‘ஒனக்கு இதெல்லாம் தூசுடா தங்கசாமி’ அப்டினுல்ல சூர் ஏத்திவுட்டு நடிக்க வச்சாரு. ரொம்ப காலத்துக்கு முந்தி நாடவத்துல பொம்பள வேசம் கட்டிக்கிறதுக்கு எந்த பொம்பள முன்னாடி வந்து நின்னா? அது என்னமோ தமிழ்நாட்டுல அத்திப்பூத்தாப்லதான் இருந்துச்சி. பொம்பள வேசத்த ஆம்பளதான் நடிச்சாவணும். அப்டி ஆளாளுக்கு நடிச்சிதான் தீத்தாங்க. ஸ்திரீபார்ட்டுன்னு மட்டுமுல்ல, டப்பாங் குத்தாருந்தாலும் சரி, டான்சாருந்தாலும் சரி எல்லாத்தையும் ஆம்பளதான் ஆக்கிட்டு பண்ணுனான். அதுக்கப்பறமாதான் நாகரீகமும், சினிமாவும் வந்த காலத்துல பொம்பளைங்களும் நடிக்க வந்தாங்க. ஒருத்திய பாத்து ஒருத்தியா வந்து ஈசப்பூத்தாப்புல பொம்பளையோளே அரிதாரம் பூசிக்க முன்னாடி வந்துட்டாங்க. அந்த காக்கா முளி கோயிந்தசாமி புள்ளயும் தான் செத்துப் போயிட்டாரே மனுசன்... காக்காமுளி செத்தப்பவும், முட்டம் பெரியசாமி செத்தப்பவும் நம்ப தங்கசாமி அன்னந்தண்ணி இல்லாம ஒருவாரம் வரைக்கும் பட்னியா கெடந்தாரு. அம்புட்டு துக்கம் அவுரு நெஞ்சுல. நாடாவத்துல நடிக்கிறதுக்கு அப்டிபட்ட மனுசங்களெல்லாம் இன்னம வருவாங்களா அப்டின்னுதான் நெனச்சுக்குவாரு தங்கசாமி.

எம்புட்டுதான் மனுச உசுர குடுத்து நடிச்சாலும் கொண்டாலும், பாட்டுதான் பாடினாலும் ரசிக்கிற மனுசனுங்களுமல்லவா கூடருந்து ரசிக்கணும். அதுதான் ஒழுங்கா நடந்துருக்கா நாட்டுல? ராசா வேசம் கட்டிக்கிட்டு நடிப்பாளி மேடையில் வந்து நின்னாக்கா பாக்குற ஜனத்துல பாதிபேரு வெளியே கௌம்பிக்கிட்டல்லவா அங்குட்டும், இங்குட்டுமா போயிருது. ஏதோ அப்பல்லாம் அந்த ராகத்தையும் நடிப்பை அனுபவிக்கிறதுக்கு வயசான கௌங்கட்டைங்கதான இருந்து தொலச்சாங்க. எளவட்டமான பசங்களோ பசங்கிகளோ நய்யாண்டி கூத்த ரசிக்கிறதுக்குத்தான நாடாவத்துக்கு வர்றதெல்லாம் நாடாவ கொட்டவையில் சீன்படுதா கட்டி லைட்டெல்லாம் போட்டுக்கிட்டு நடிக்கிற ஆளுவளும் பின்பாட்டுக்காரனும் பெட்டிக்காரனும் சுக்லாம்பர்தனம் பாடி, ‘கிர்ரத்தா கிர்ர்ரத்தா’ன்னு கொட்டுக்காரனெல்லாம் தட்டி முடிச்சப்புறம் சீன தொறந்துவுட்டா பவுனாக்கிட்டு எப்பவரும், டான்சுக்காரி எப்ப வருவா அப்டின்னுதாள் பாத்துகிட்டு குந்திகிட்டிருக்கும் சனம் அம்புட்டும்.

பவுனாக்கிட்டும் டான்சுக்காரியும் மேடையில வந்து குதிக்க ஆரம்பிச்சா சனங்களுக்கு சிரிச்சிசிரிச்சி வயுரெல்லாம் புண்ணாயிப்போயிரும். அவுங்க கும்மாளம் போடுறதும், சீட்டி அடிக்கிறதும் அதுவே ஒரு நாடாவம்தான். நாடாவம் நடத்துரதுக்கு முன்னாடி பொம்பளை குட்டிங்க அரிதாரம் பூசி ஓடை மாத்திக்கிட்டிருக்கப்ப உள்ளூரு பசங்களும், வெளியூசு பசங்களும் மறப்புல வச்சிருக்க கீத்த நீக்கி நீக்கிகிட்டு வேடிக்க பாக்க கௌம் பிருவானுவ. என்னமோ அங்கயே அவ அவுத்துப் போட்டுப்புட்டு ஆடுற மாதிரி, நடிக்க வந்தவன் அவனுவள வெரட்டி வெரட்டி அப்பயே தொண்ட பாதிப் புண்ணாப் போயிரும். அப்புடி என்னா ருசியத்தான் பொம்ளகிட்ட கண்டானுவளோ? ராஜபார்ட்டு வந்து. மேடையில் நடிக்கிறப்ப நாடாவம் பாக்க வந்தவனுவல்ல பாதி பயலுவ போயிருவான், நடிக்கிறத பாக்க வந்தவனுளா அவனுவ... நய்யாண்டிய ரசிக்க வந்தவனுவளாச்சே.... அங்கன புதுசா மொளச்சக் கடையில டீ குடிக்க போயிருவானுவ. பொட்ணம் திங்கப் போயிருவானுவ. புரோட்டா சாப்டப் போயிருவானுவ. காவாசிப்பேரு சூதாட்டம் ஆட கௌம்பிப் போயிருவான். வய வாய்க்காலுல கண்டு ரசிச்சு பேசிப்பழகுன குட்டிங்க ஆராச்சும் நாடாவம் பாக்க வந்துருந்தாளுவன்னா அவள மை போட்டு இழுத்துக்கிட்டு போயிருவானுவு... எங்கங்குறீங்க.... கணக்கு பண்ணத்தான். இதெல்லாம் முடியாதப் பயலுவ கொறட்டையடிச்சிக்கிட்டு தூக்கம் போட்டுகிட்டு கெடப்பான். வேட்டி அவுந்தது தெரியாமக் கூட பல்லு வுளுத்தவனும் பாக்கியடிக்கிற பயலுவளும் தான் ஆன்னு பொளந்த வாயி பொளந்தபடி ராஜாவ ரசிச்சிக்கிட்டிருப்பான். இப்புடி வந்த சனம் அம்புட்டும் மெயின் நடிப்ப பாக்காம போயிருதேன்னு கவலப்பட்டுதான் நாடாவக்காரன் தந்தரம் பண்ணுனான். மெயினாக்கிட்டு ஆக்கிட்டு பண்ணிகிட்டிரக்கப்பயே சைடையும் வுட்றுவான். சில்ற ஆக்கிட்டு வந்து தையா தக்கான்னு குதிச்சி ரெட்ட அர்த்தத்துல வசனம் பேசுனாதான் நம்ம ஆளுவ குந்தி நாடாவம் பாக்குறான்... அரிச்சந்திர நாடாவம் அரிச்சந்திரா நய்யாண்டி நாடாவமா ஆயிப்போயிரும். தங்கசாமி ராஜபார்ட் கட்டிகிட்டு முக்கி முக்கி மூணு மூணரை கட்டைக்கு எவ்வுறப்ப மூக்குல, சளியே வந்துரும். அனாயசமா நாலு கட்டக்கி கூட பாடுனவருதான். ரொம்ப காலத்துக்கு முந்தியே அது முடியாமப் போச்சி. அந்தக் காலத்துல வடக்குத்தி ஆளுவ தமிழ உச்சரிக்கத் தெரியாத காலத்துல நாடாவ மேடையில ஏறி ராசாவேசம் கட்டிக்கிட்டு இப்புடித்தான் சொல்ல வுட்டுபுட்டு பாடுவானுவளாம்... சும்மானாச்சுக்கும் ஒன்னே ஒன்னு பாருங்க...

ராசாதி ராசா வந்துச்சே - அதுவுங்கூட
சந்த்ரமதி பொண்ணு வந்துச்சே - அதுவுங்கூட
லோகிதாசன் குஞ்சி வந்துச்சே
கார்ல கறுக்கன் மார்ல பறக்கம்

அப்டின்னு தமிழ கொல பண்ணி பாடுவானுங்களாம்.

கால கறுக்கன்னா என்னா மார்ல பறக்கம்னா என்னா தெரியுமா? காதுல கடுக்கன். மார்புல பதக்கம். புரிஞ்சிச்சா சங்கதி! எடுத்துப் பாடுற பின்பாட்டுக்காரனுங்கூட அதையேத்தான் திருப்பி திருப்பி பாடுவானுவளாம். கேக்குறவனுக்கு மதி எங்க போச்சி. என்னமோ வாக்கியத்தக் கண்டான் வர்ணத்தக் கண்டான் கேக்க ரஞ்சிப்பா இருந்தா சரிதான்னு பாட்ட கேப்பானுவளாம். இந்தக் கூத்தையெல்லாம் கண்டு மனம் நொந்துபோயிதானோ என்னமோ தமிழ் நாட்டுல அநேகம் பேர நாடாவம் நடிக்க வந்தாங்களாம். அப்புடி வந்தவங்கள்ல இன்னும் தங்கசாமி நெனப்புல இருக்குற பேரு அநேகம் உண்டு. ராஜபார்ட்டுன்னு வச்சிகிட்டா ‘கஞ்சனூரு முத்துக்குமர பத்தர்’, ‘பிளேட்டு கதிரேசம் பிள்ளை’, இவுரு எப்புடின்னாக்கா, அரிச்சந்திரா நாடாவத்த ஆகமப்படி ஏளு நாளக்கி நடத்துவாராம். நாடாவப் பாட்டை எசத்தட்டுல கொண்டாந்தவரும் அவுருதானாம். அதனாலத்தான் அவருக்கு ‘பிளேட்டு கதிரேசம்பிள்ளை’ன்னு ஆச்சாம். முட்டம் பெரியசாமி, மதுர உடையப்ப தேவரு, பசுபதி கோயிலு கதிரேசன் காடவராயரு, புதுக்கோட்ட முத்துமணி பாகவதரு, திருப்பாமாபுரம் முருகைய்யன், திருவிழி மழலை எம்மெம் மாரியப்பா நந்தன் சரித்திரத்துல பலே கெட்டிக்காரராம். நவாப் ராஜமாணிக்கம், டி.கே.எஸ்.சகோதரர்கள் இப்புடின்னு அநேகம் பேரு ராஜபார்ட்டுல கெட்டிக்கார ஆசாமிகளாம். இதுல மொட்ட வாத்தியாரையும் அவசியமா சேத்துக்கணும். ஸ்திரீபார்ட்டுக்கு பேர் போனவங்க காக்காமுளி கோயிந்தசாமி பிள்ளை; சன்னாவூரு செல்லம். வடுவூர் கண்ணம்மா, மாயவரம் இந்திரா இவுங்கள்லாம் ஸ்திரீபார்ட்டுல எக்ஸ்பர்ட்டாம். பின்னையும் சில்ற ஆக்கிட்டுகளுக்கு காரமேட்டு கண்ணு, வெண்ணூர் சாமிதொரை, டான்சு மற்றும் காமிக்கிக்கு ஆடல் அழகி அபிநயசுந்தரி, திருவாளூரு மோகனா, மதுர மல்லிகா, புதுக்கோட்ட பத்துமா இப்புடின்னு வந்தாங்களாம். தஞ்சாவூரு வடக்கிவாச நாடிமுத்துராவ் வகையறா கூட டான்சு கீன்சுன்னு அமுக்களப்படுத்துவாங்களாம். ஆர்மோனியம் புண்ணிய நல்லூர் சித்திரவேலு, தங்கசாமிக்கு ஸ்திரீபார்ட்டா கூட ஆக்கிட்டு பண்ணிருக்காராம் இந்த சித்திரவேலு தபேலா - டோலக்கு - கோடையிடி மாரிமுத்து. ரெண்டு கண்ணும் தெரியாத மனுசன்தான்னாலும் தபேலாவும், டோலக்கும் இவுருகிட்ட சங்கதி பேசுமாம். ஐயம்பேட்டை கிருஷ்ணமூர்த்தியும், தபேலா டோலக்குல கெட்டிக்காரராம். வுட்டுப் போச்சுல்ல ஆர்மோனியம் பொட்டில தஞ்சாவூரு ஜெகன்னாதனும் பலே கில்லாடியாம். கைப்பொட்டி கால் கொட்டி ரெண்டுலயும் படுசூரத்தனம் பண்ணுவாராம். பொட்டி போட்டுக்கிட்டே பாடுறதுலயும் அநேக கெட்டிக்காரரு. ராகம் புரிஞ்சி பாடுவாராம். மெல்லிய சாரீரம் தான்னாலும் மூணு சுதிக்கு பாடுவாராம். அப்றம் சிஞ்சக்கு மணப்படுவை நடேசன். சிஞ்சக்கு சிஞ்சக்குன்னு அடிச்சாருன்னா செவுளெல்லாம் பிஞ்சிப் போயிருமாம். பின்பாட்டுல பலே ஆசாமி ஆரங்குறீங்க? குருங்களூரு முருகைய்யன். சீன் படுதா டிரஸ் சமிக்ஞைகள்ல தஞ்சாவூரு சிங்காரம்பிள்ளை தட்டிக்க ஆருருக்கா? இவுரு செத்துப்போனதுக்கப்புறம் இப்பக்கி திருக்களாவூரு பூண்டி மூக்கையன் மேக்கப்புல கெட்டிக்காரராம்.

தங்கசாமி இவுங்களப்பத்தியெல்லாம் இப்ப ஓஞ்சிப்போன காலத்துல குந்தி நெனையா நெனச்சிக்கிறாரு. தங்கசாமி தன்னோட நுப்பத்தஞ்சாவது வயசுலயே நடிக்கிறத்த கொறச்சிகிட்டு ஊரு ஊரா போயி நாடாவம் பழக்கிக் குடுக்க ஆரம்பிச்சிட்டாரு. அவுரு நடிக்க வந்த பதுனஞ்சி இருவது வருச காலத்துல எத்தனை மேடை ஏறியிருந்தாலும் முட்டம் பெரியசாமி மாறியோ பிளேட்டு கதிரேசம்பிள்ள மாறியோ, காக்க முளி கோயிந்தசாமி மாறியோ பேரெடுக்க முடியலியேன்னு கவலப்பட்டு கெடக்காரு. காசுபணம் சேத்துக்கலையே அப்டிங்குற கவலையும் உண்டுதான். ஊரு ஊரா நாடாவம் பழக்கி குடுக்குற காலத்துல வந்த சம்பாத்தியத்த கெட்டிப் பத்தரம் கெவுளிப் பத்தரம்னு வச்சுக்காம போனது எம்புட்டு குத்தமா போச்சி... சதா நேரமும் பொண்டாட்டிகாரிகிட்ட வாங்கிக்கட்டிக்க வேண்டியதில்லையேன்னு நொந்து போறாரு. ஆகாத மனுச தைப்பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்னு பொண்டாட்டிக்காரிக்கு எம்புட்டுதான் சொத்து பத்து சேத்து குடுத்துருந்தாலும் பேசுற கழுதை பேசித்தான் ஆவா. ஒரு காலத்துல ஊருக்கு ஊரா நாடாவம் பழக்கி தங்கள் ஊருல தாங்களே மேடை ஏறி நடிக்கணும்னு ஆசப்பட்டவங்க தங்கசாமி மாறி ஆளுங்களப்பாத்து நாடாவம் பழக்கி குடுக்குறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டாங்க. இதுல நாடாவ வாத்தியார்களுக்கும் கொஞ்சம் வரும்புடி சாஸ்திதான். ஒரு ஊருக்குள்ள குந்தி நாடாவம் பழக்கி குடுக்க ஆரம்பிச்சிட்டா மூணு வேள அந்த ஊருக்குள்ளயே நாளக்கி ஒருத்தரு வூடுன்னு கணக்கு பண்ணி சாப்ட்டுக்கலாம். நாடாவம் பளவுறவனுக்கு இம்புட்டுன்னு நெல்லு வசூலும் பண்ணிக்கலாம். ஆளுவால பாட்டுக்கும் கூத்துக்குமா வசப்படுத் துறகுள்ள தங்கசாமிக்கு தாவு தீந்து பேயிரும். வல்லினம்; மெல்லினம்; இடையினம் அப்படின்னெல்லாம் ஒரு எனமும் வராது பளகுறவனுவளுக்கு. ஆ...ஆ....ஆன்னு கத்துவானுவளே தவுர எளப்புள்ளி போர்ரதெல்லாமோ பம்மாத்தோ ஒன்னும் வரவே வராது. குட்டு குட்டா பாடி தீத்துப்புடுவானுவ. அவனுவளுக்கு நாடாவத்துல நடிச்சி பெரியாளா ஆவணும்னு ஒண்ணும் ரோசனையெல்லாம் இல்ல. மாமங்காரன், மச்சாங்காரன் செய்வினையா எதுருபார்த்துதான் இந்தக் காரியமெல்லாம் பண்றது. ஒரோருந்தனும் அழுவுற சீன்ல சிரிப்பானுவ. சிரிக்கிற சீனுல அழுவானுவ. தங்கசாமி வாத்தியாரு எம்புட்டுதான் தலையில அடிச்சிகிட்டு திருத்துனாலும் கொண்டாலும் வேதாளம் முருங்க மரத்துல ஏறிக்கும். என்னமோ பாட்டுப் பாடுறதுல சூரன் மாறி நெனச்சிக்கிட்டு பனங்கள்ளையோ, சாராயத்தையோ ஊத்திக்குவானுவ. அப்பதான் பாட்டு நல்லா எடுப்பா வருமாம். ஊத்திக்கிட்டுதான் பாடுறானுவளே பாட்டுதான் நல்லா வருமா? என்னமோ தேஞ்சுபோன எசத்தட்டு மாறி கொரல் கீச்சு மூச்சுங்கும்.. கேக்றவன்ல்லாம் காரித் துப்பாத கொறையாயிருக்கும். கஷ்ட காலமேன்னு வுட்றுவாரு தங்கசாமி. நாடாவம் நல்ல கட்டத்துல நடந்துகிட்டிருக்கும்.

ராஜா வந்து மந்திரியப்பாத்து, “மந்தீர்... நமது ராஜாங்கத்தில் மாதம் மும்மாரி பொழிகிறதா?” என்று கேட்கவும், கூட்டத்தில் ஒரு கில்லாடிப் பயல், “இதப்போயி மந்திரிகிட்ட கேட்டுதான் தெரிஞ்சுக்கணுமா ராஜா... நீங்க ஊர்தேசத்துல இருக்குறதில்லையா?"ன்னு பெலக்கமா சத்தங்குடுப்பான். “சும்மா நிறுத்துடா கம்னாட்டி, ஒன்னக் கேக்கலை”ன்னு ராஜா பாய்வாரு. அவனும் பாய்வான். கூட்டத்துல சலசலப்பு. எல்லோரும் எந்திரிச்சி சமாதானம் பண்ணி கூட்டம் அசமடங்கும். ராஜா நடிக்கிறதுக்கு தயங்குவாரு. தங்கசாமி சமாதானப்படுத்தி கூட்டமெல்லாம் குந்தி நாடாவம் தொடரும். மறுவவும் ராஜா மந்திரிகிட்ட கேப்பாரு. “மந்த்ரீ... நமது ராஜாங்கத்துல மாதம் மும்மாரி பொழிகிறதா?” மந்த்ரீ சொல்லுவாரு, “அதுக்கெல்லாம் கொறச்சலில்லை மகாராஜா. மாசம் மும்மாரி பொழிந்து ஜனங்களெல்லாம் சகலவிதமான சௌக்யபௌக்யங்களோடு இருக்கிறார்கள்” அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கப்பதான் ராஜா வேசம் கட்டிக்கிட்டவனோட மாமனோ, மச்சானோ வேகவேகமா ஓடியாருவான் மேடக்கி. கையில வச்சிருக்க மாலையை ராஜா கழுத்தில் போட்டுப்புட்டு சட்டப்பையிலயோ மடியிலயோ வச்சிருக்குற தங்கமோதிரத்தை கைவெரல்ல மாட்டிபுட்டு அவசர அவசரமா தங்கசாமி வாத்தியாரக் கூப்டுவான். அவுரு வர்றாரா... வந்தொடனே சொல்லுவான். “வாத்தியாரய்யா! ஒத்தப்பன மாரியப்பன் மாமன் மொறைன்னு செஞ்சது மாலை ஒன்னு அரப்பவுனு மோதிரம்னு ரேடியாவுல சொல்லிப்புடுவாங்க”ன்னு சொல்லிப்புட்டு அவுரு மைக்குல பேசி சொல்றதட்டும் நின்னு கேட்டுபுட்டு போவான். வாத்தியாரு கோவப்பட்டுக்காம இதெல்லாத்தையும் மெனக்கெட்டுதான் சொல்ல ஆரம்பிப்பாரு.

இல்லாட்டி சோத்துப் பையில கிளிஞ்சி போயிரும். “ராஜபார்ட்டா வேசம் கட்டிக்கிட்ட கரம்பத்தூரு கலியனுக்கு ஒத்தபன மாரியப்பன் மாமன் மொறைன்னு செஞ்சது மாலையும், அரப்பவுனு மோதரமும்”. இந்தக் கூத்து முடிஞ்சப்புறம் பின்னயும் நாடாவம் தொடரும். எப்புடிக்கின்னா, மறுவடியும் ஆரம்பிச்ச எடத்துலருந்தே ராஜா கேப்பாரு. “மந்திரி... நமது நாடு நகரத்தில் மாசம் மும்மாரி பொழியுதா?” இப்ப மந்திரி பேசமாட்டாரு. ராஜாவுக்கு புரியுமா மந்திரி படு எரிச்சல்ல இருக்காருன்னு. அவுருக்கு என்னடா ராஜா சொன்ன வசனத்தையே திருப்பி திருப்பி பேசிகிட்டிருக்காரேன்னு கோவம்ன்னா நெனச்சீங்க. அதுதான் இல்லன்னன். பின்ன கோவத்துக்கு...? ராஜாவுக்கு செய்வினையை மொறையுள்ளவன் நாலு பேருத்துக்கு முன்னாடி வச்சி செஞ்சிபுட்டு போயித்தான் தனக்கு செய்ய வேண்டிய மொறக்காரன் வந்து செய்யலியே அப்டிங்குற கோவந்தான். முன்னாடியே உள்ளுக்குள்ள ஏத்தி வச்சிருக்குற சாராயம் வேற ஊச்சத்துல நிக்கிறதா உப்புன்னு சொல்றதா, புளின்னு சொல்றதான்னு பல்லக் கடிச்சிக்கிட்டு நிப்பாரு மந்திரி.

‘வசனத்த மறந்துப்புட்டாரா மந்த்ரி?’ன்னு தங்கசாமி எரிச்சலாயிருக்கறப்பத்தான ராஜா சமயோசிதமா வசனத்த மாத்தி, “மந்திரி ஏமேல கோவமா... கேட்டதுக்கு ரொம்ப நாளியா வதுலு வரலியே என்னா காரணம் சொல்ல முடியுமா?”ன்னு கேக்க, மந்திரி வெகு கடுப்பாயி, "ஓங்க மேல என்னா ராசா எனக்கு கோவம்... ஓங்க மாமன் அக்கறையா. வந்து செய்வினையை செஞ்சிபுட்டு போயித்தாரு. ஏ மாமன் வரலியே அப்டிங்குறதுலதான் கோவம். செய்வினையை வாங்கிக்காம மட்டும் வசனத்தப் பேசுறாப்ல இல்ல. இப்டி தான் ஏ மாமன அவுமானப்படுத்தணும்” அப்படின்னு எரிச்சலா சொல்லிக்கிட்டிருக்கப்பதான் அவுரு மாமன் புத்தில் ஓரச்சிப்போயி வேட்டி அவில அவில மேடைக்கி ஓடியாருவாரு. வாழ எலையில சுத்திவச்சிருக்குற மாலைய அவுக்குறப்ப அவசரத்துல பாதிப்பூவு கொட்டிப் போயி நாராருக்கும். அத கழுத்துல போட்டுட்டு சட்டப்பையில ஒம்போது பேப்பரு சுத்தி பதுவுசா மடிச்சி வச்சிருந்த ஒரு பவுனு சங்கிலிய எடுத்து மந்திரி கழுத்துல மாட்டிப்புட்டு தங்கசாமிய பாப்பாரு. தங்கசாமி புரிஞ்சிகிட்டு மைக்குக்கு முன்னாடி ஓடியாந்து “கொத்தங்குடி சின்ராசு கரம்பத் தூரு கருப்பையாவுக்கு செஞ்சது ரோசாப்பூ மாலை ஒன்னு. ஒரு பவுனு சங்கிலி” அப்டின்னு சொல்லி நிறுத்தி புட்டு கூட்டத்தப் பாத்து சொல்லுவாரு, “கூட்டத்துல செய்வன செய்யிறவுங்க இருந்தா வந்து செஞ்சிபுட்டு போயிருங்க... நாடாவத்த சட்டுபுட்டுன்னு முடிச்சாவணும். சூரியன் வந்து எழுப்பறவரைக்குமா நாடாவத்த நடத்திகிட்டிருக்க முடியும்? இப்பத்தானா ராசா நாடு நவரங்கள எளக்கணும்.

பொண்டாட்டிய வெல கூறணும். நச்சத்தரய்யர் வாங்கணும். சந்திரமதி அல்லல்படனும்... இன்னும் எம்புட்டே கத இருக்குல்ல. நாளக்கி தான் மயான காண்டம்...”ன்னு சொல்லி முடிச்சதும் பின்னயும் நாடாவம் தொடரும்.

“மந்திரி... மாசம் மும்மாரி பொழியுதா...?”ன்னு ராஜா மந்திரியைப் பாத்து கேட்டுகிட்டுருக்கபத்தான கூட்டத்துல ஒருத்தன் கடுப்பாயி போயி கத்துவான், “மாசம் மும்மாறி என்ன நாமாறி போயிது அடுத்த வசனத்த சட்டுபுட்டுனு பேசிபுட்டு உள்ளாரப் போயித்தொலைய்யா. ஆட்டக்காரியும் காமிக்கும் வரட்டும்... யோவ் வாத்தியார தொம்பன் தொம்பச்சி உண்டாய்யா... வரச்சொல்லு. டப்பாங்குத்து போடட்டும்.” தங்கசாமிக்கு இப்பத்தான தர்மசங்கடமா போயிரும். ராசா வந்ததுலேருந்தே தொல்லமயமாயிருக்கே... ஆட்டக்காரி வுட்டு தையா தக்கான்னு ரெண்டு குதியாலம் போடச் சொன்னா தான் கூட்டத்த அசமடாக்கலாம்னு நெனச்சிக்கிட்டே “சட்னா வசனத்தை பேசிபுட்டு சீன் முடிங்கைய்யா... தொம்பன் தொம்பச்ச வுட்டாத்தான் சனம் குந்திப்பாக்கும். வந்த சனத்துல முக்காவசி சனம் எந்திரிச்சி போயித்து”ன்னு சொல்லிபுட்டு உள்ள போவாரு. வாத்தியாரு சடாருன்னு இப்புடி சொல்லிபுட்டாரேன்னு ராஜாவும், மந்திரியும் சொச்ச வசனத்த பேசாமக்கூட சீன முடிச்சிபுட்டு உள்ளாரப் போயிருவாங்க. “எப்படா ராஜபார்ட் உள்ளாரப் போவும்னு காத்துக்கிட்டிருந்த பொட்டிக்காரனும், தாளக்காரனும் அப்பத்தான நிம்மதியா மூச்சுவுடுவான்”. ராசாவும், மந்திரியும் சேந்துகிட்டு வாசிக்கிறதுக்கு டயம் குடுக்கலியே அப்டிங்குற கோவந்தான். அவுங்க போன செத்த நாளிக்கெல்லாம் பெட்டிக்காரரு பாட ஆரம்பிச்சிருவாரு. ‘டிய்ய டிய்யோ டிய்ய டிய்யோ டிய்யமாமா டிய்யாலோ... அத்திரி பச்சா ஆளுபச்சா உய்யாலோ... தலாங்கு தரிகிட தலாங்கு தரிகிடதா... ஏ த்தா...த்தா...த்தா... டிய்ய டிய்யோ டிய்ய டிய்யோ டிய்ய மாமா டிய்யாலோ... இப்பத்தான சனங்க மூஞ்சில அநேக சந்தோசம் தூங்கிகிட்டிருந்தவன் எந்திரிச்சி குந்துவான். மூத்தரம் பேயப் போனவன் பேஞ்சது பாதி போயாதது பாதியா ஓடியாந்துருவான். டீ குடிச்சிகிட்டிருந்தவன் கிளாசை தூக்கி வுட்டேஞ்சிட்டு காசக் குடுக்காமக் கூட ஓடியாந்து முன்னாடி எடம் புடிச்சி... குந்திக்குவான். ரோட்டுப்பக்கம் போனவன் வாய்க்காபக்கம் போனவன் நாடாவம் நல்லால்லன்னு சொல்லிகிட்டு வூட்டப்பக்கம் பாய சுருட்டிக்கிட்டு கெளம்பிப் போனவன் நாடாவம் எல்லாருமா சொராத்து கிளம்பிப் போயி 'தொம்பன் தெரம்பச்சி வந்துட்டுடோய்'ன்னு சொல்லிகிட்டு இடிச்சி புடிச்சிகிட்டு ஓடியாந்து குந்தராத்தப்பாத்தா தொம்பனையும், தொம்பச்சியையுமே கடைசி பரியந்தொட்டும் நடத்திகிட்டிருக்கலாமான்னு தான் தங்கசாமி நெனச்சிக்குவாரு.

தங்கசாமி ஓஞ்சிப்போயி வூட்ல குந்திட்டப்புறம் இதெல்லாத்தையும் வரிசை வரிசையா நெனச்சிக்கிறாரு... அம்பது வருசம் எப்புடி ஓடிப்போச்சி பொழுது...‘ லோகிதாசனா நேத்தக்கி வசனம் கட்னாப்புல இருக்கேன்னு...’ அருவியா கண்ணீரு கொட்டுது... அம்பது வருசமா ஒளச்சிபுட்டு கட்ன துணிக்கி மாத்துதுணிக் கூட கட்ட கதியில்லாமப் போச்ச அப்புடிங்குற கவல நெஞ்சுல வண்டி வண்டியா தேங்கிக் கெடக்க இப்ப நெனச்சி முடியுமா இன்னமத்தான் சம்பாரிக்க முடியுமா? இப்பல்லாம் முந்திக்கி மாறி அவுரால கொரலை ஒசத்தி பாடமுடியல; எம்புட்டுக்கு தான் எவ்வுனாலும் தொண்டைக்குள்ளார ஏதோ கெடந்து அடச்சிக்குது. இவுரு கொரலு ஒடுங்கிப் போயி குந்திட்டாருன்னு முந்திக்கி மாறி எந்த ஊர்தேசத்துலருந்தும் வந்து இரவு நாடாவம் பழக்கிகுடுக்க கூப்டுறதில்லை. இவுரு ஒசரத்துக்கு வளந்து நிக்கிற ரெண்டு மவனை அண்டித்தான் சொச்சக்காலம் ஓடப் போவுதோன்னு நென்க்கிறப்ப கவல பத்திக்கும். மவங்காரனுங்க சோறு போட்டாலும் மருமவளுவ வுடுவாளுவளா அப்டிங்குற கவலதான். ஒரு ஆபிசு உத்தியம்தான் பாத்தமா கடைசியா கெடைக்கிற பிஞ்சினு பணத்தவச்சி காலத்த ஓட்டலாம். ஒரு ஏக்கரு நஞ்சையோ, புஞ்சையோ வாங்கிப் போட்ருந்தாகூட உளுது சாப்ட்டுக்கலாம்... ஒன்னுமுல்லாத அப்ராணியா போயித்தமே... ஒரு டீ தண்ணி குடிக்கனுமுன்னாலும் புளிக்கிற வாயிக்கி வெத்தலப் போட்டுக்கலா முன்னாலும் மவனுவகிட்ட கையேந்து நிக்கிற காலம் வந்து போச்சே... பொண்டாட்டிக்காரி துப்புறான்னா ஏந்துப்பமாட்டா?

இன்னிக்கு அப்படிதான் பொண்டாட்டிக்காரி தட்டுல சோத்தப் போட்டு நாய்க்கி வச்ச மாறி வச்சிபுட்டு சாப்டுன்னா... அவ சோத்த வச்சிப்புட்டு போன ரோக்கிதியப் பாத்தா சாப்ட மனங்கொள்ளல. பட்டினியா கெடந்து செத்துப் போயிரணும்னு கூட நெனச்சிக்கிட்டாரு. அப்பத்தான் பாருங் ‘கொளா’ சட்ட போட்ட ரெண்டு பேரு வந்து ‘நாடாவ வாத்தியார் தங்கசாமி’ ஆருங்கன்னு இவுருகிட்டயே வந்து விசாரிக்கவும் இவுரு என்னமோ ஏதோன்னு பதறிப்போயி; ‘நாந்தான் நீங்க ஆரங்கய்யான்னு’ பதுவுசா கேட்டாரு. “நாங்க கலைட்டரு ஆபீஸிலேருந்து வர்றம். கெவுருமுண்டு. நீங்க நாடாவத்துக்காவ ரொம்பகாலமா ஒளச்சிருக்கீங்க அப்டிங்கறதுக்காவ மாசாமாசம் ஒங்க காலம் பரியந்தொட்டும் நானூறு ரூவா குடுக்கச் சொல்லி உத்தரவு போட்டுருக்குது. அதான் நீங்க ஆரு எவுருன்னு சொல்லி விசாரிக்க வந்தம் அப்டின்னு சொல்லவும் இவுரு வந்தவுங்களை திண்ணையில குந்தச் சொன்னாரு. ரொம்ப தூரத்துலருந்து வந்தவுங்களுக்கு ஒரு காப்பித்தண்ணி கீப்பித்தண்ணிகூட வாங்கிக்குடுக்கக் கூட கெதியில்லாமருக்கனேன்னு நொந்துக்கறாரு. பொண்டாட்டிக்காரி என்னடா பணங்காசுன்னு பேச்சு அடிபடுதே அப்படின்னு வூட்டுக்குள்ளேருந்து வெளியில வந்தவ வந்தவுங்களுகிட்ட விசியத்தக் கேட்டு சந்தோசப்பட்டு போயித்தா. புரஷங்காரரு இம்புட்டுக் காலமா ஒளச்சதுக்கு இப்பத்தான் பலன் கெடச்சிருக்கோன்னு மனசுக்குள்ள நிம்மதி, இன்னம மவனுவள நம்பி காலம் ஓடாதுல்ல அப்டின்னு நெனச்சிக்கிறா. தங்கசாமி இப்பத்தான பொண்டாட்டிக்காரிய பெருமையாவும் அதே சமயத்துல வீம்பாவும் பாக்குறாரு. எவனோ ஒரு படிச்ச மனுசன் போன வருசத்துல சலுகைக்காவ வேண்டி கலைட்டரு ஆபீசுக்கும் மொதலமைச்சருக்கும் மனு எழுதிக்குடுத்து போடச் சொன்னாரு. அவுரு கைப்பட எழுதிபோட்டதுல வந்த பலனோ இதுன்னு தங்கசாமி புரிஞ்சிக்கிறாரு. ‘அடுத்த மாசத்துலேருந்து ஓங்களுக்கு மாசாமாசம் பணம் வரும்னு’ சொல்லிபுட்டு ஏதேதோ பேப்பருல தங்கசாமிகிட்ட கைநாட்டு வாங்கிகிட்டு போயிடுறாங்க. பொண்டாட்டிக்காரி தங்கசாமியப் பாத்து ‘ஏங்க சோத்த திங்கலியா ஈமொச்சிகிட்டுகெடக்கே... கொளம்பு ஊத்தட்டா ஊருகா வய்க்கட்டுமா’ அப்புடின்னு பாசமா கேக்குற மாறி கேக்குறா. எல்லாம் தங்கசாமிக்கு புரியிது. பணத்ததான இவ மதிக்கிறா... புருஷங்கிட்ட இருந்த தெறமையை அறியலியே அப்டின்னு மனசு நொந்துக்குறாரு. இப்பவும் கூட - இவுரு பணத்த பெருசா நெனைச்சுக்கலை. தான் செத்தப் பொறவு முட்டம் பெரியசாமி மாறியோ, டேப்பு கதிரேசம்புள்ள மாறியோ காக்காமுளி கோயிந்தசாமிபுள்ள மாறியோ தன்னயும் ஊருசனம் பெருமையா எடுத்துகிட்டு பேசிகிட்டிருக்குமா அப்டின்னுதான் கவலப்பட்டுக்குறாரு.. அப்புடி பெருமையா பேசிகிட்டாங்கன்னா அது. மட்டும் தான் இம்புட்டு காலமா நாடாவத்துல ஒளச்சதுக்கான பலன் அப்டின்னு நெனச்சிக்கிறாரு. பொண்டாட்டியப் பாத்து “எனக்கு பசிக்கலடி சோத்த எடுத்துட்டுப் போயிரு” அப்டின்னு சொல்லிகிட்டே நாடாவப்பாட்டை தனக்கு பிரியமான பாட்டை ராகம் போட்டு பாடுறாரு.... இஷ்டமேனிக்கு பாடுறாரு... கொரல் ஓடையாம பாட்டு வருது. பாட்டக்கேட்டு சனம் கூடுது... தனக்கு இப்பயும் ஓச்சல்ல ஒளிச்சல்ல தொண்டயும் கொரலும் உள்ளவரைக்கும் சாவுற தொட்டும் பாட முடியும்னு தெம்பா நெனச்சிகிட்டவரு... இப்பெல்லாம் ஊருதேசத்துல நாடாவம் போடுறது வுட்டு புட்டு டீவி பெட்டி வக்கிறானுவளாமே... சினிமா காட்டுறானுவளாமே... அதெல்லாம் எதுக்கு... ஒரு நாடாவத்துக்கு ஈடாவுமா அம்புட்டும்னு நெனச்சிகிட்டு பாடிகிட்டே கெடக்காரு. சனந்தான் பாட்டக்கேக்க வந்துருச்சுல்ல பாடாம என்னா பண்ணுவாரு மனுசன். பொண்டாட்டிக்காரி பணங்கெடச்ச சந்தோஷத்துல பாடுறாரே அப்டின்னு நெனச்சிக்கிட்டே சோத்த எடுத்துகிட்டு உள்ளாரப் போறா... அறியாதவ அதத்தான் நெனப்பா?