தஞ்சைச் சிறுகதைகள்/பெட்டிவண்டி



தி. ஜ. ரங்கநாதன்

சிறுகதை இலக்கியத்திற்கு ஒரு புதுவேகத்தைத் தந்த ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்கு, முன்னோடிகளில் குறிப்பிடத் தகுந்தவர் தி.ஜ. ரங்கநாதன்.

தஞ்சைமாவட்டம் மேலவழுத்தூர் - அய்யம்பேட்டையில் பிறந்த அவரை கம்பனுக்கு வேண்டப்பட்ட ஊரில் பிறந்தவர் என்று க.நா.சு வால் செல்லமாக தட்டிக் கொடுக்கப்பட்டவர்.

"அவன் காலத்துப் பள்ளிக் கூடத்தில் கம்பன் எத்தனாங்கிளாஸ் வரையில் படித்தானோ - எனக்குத் தெரியாது. நான் எலிமெண்டரி ஸ்கூலை தாண்டியதில்லை" என்று சொல்லுவாராம் தி.ஜ.ர.

எழுத்தாளர் மத்தியில் நன்கு மதிக்கப் பெற்றிருந்த தி.ஜ. ரங்கநாதன் பல பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும், பிரதான ஆசிரியராகவும் இருந்து அனுபவம் பெற்றவர். ‘எந்த விஷயத்தையும், எளிய வசனத்தில் எழுதுவதில் வ.ராவின் வாரிசாகக் கருதப்படும், இவர் வடிவ உணர்வுடன் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மனிதர்களை ஏமாற்றிப் பிழைக்கும் சிலரைப் பற்றி லேசான கிண்டலுடன், ஆனால் அழுத்தம் தொணிக்கும் சொற்களுடன் கதைகள் படைத்திருக்கிறார்' என்று சிறுகதை விமர்சன இரட்டையர்களான சிட்டி-சிவபாதசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவரின் முதல் சிறுகதை ‘சந்தனக்காவடி.’ விமர்சனங்களின் பாராட்டையும் நல்ல அபிப்பிராயத்தையும் பெற்ற சிறுகதை ‘நொண்டிக்கிளி’.

சிறுகதைகளில் தடம்பதித்தவர்.

நாவல் எழுதும் முயற்சியில் இருந்தாரோ இல்லையோ... “நீங்கள் ஏன் நாவல் எழுத முயலக்கூடாது?” என்று கேட்பவர்களுக்கு அவர் அளித்த பதில் இது தான்.

“எழுத முயன்று பார்க்கவில்லை என்று நீங்கள் நினைப்பது சரியில்லை. பலதடவை முயன்று பார்த்திருக்கிறேன். முதல் அத்யாயத்துக்கு மேல் நகரமாட்டேன் என்கிறது. கதைக்காக உருவாக்கிக் கொண்ட மூன்று, நாலு பேர்களையும் மேலே என்ன செய்யச் சொல்வது என்று புரியவில்லை”..



பெட்டி வண்டி

இதோ இந்தப் புளியமரத்தின் கீழே, ஆரங்கள் போன மூளிக் கால்கள், விரிந்து பிளந்த மூக்கணை, கிழிந்த கூண்டு இந்த லட்சணங்களோடு சீந்துவாரற்றுக் கிடக்கிறதே, இந்த வண்டிதான் என்ன என்ன சம்பவங்களையெல்லாம் ரெத்தினசாமிக்கு நினைவூட்டுகிறது! இந்தப் பெட்டி வண்டி-ஆம், இது பெட்டி வண்டி தான்; வில் வண்டி; ‘மைனர்’ வண்டி. ‘மைனர்’ என்றால், ‘வயசாகாத குட்டி’ என்று அர்த்தம் அல்ல. குஷியான பணக்கார வாலிபர்களை ‘மைனர்’ என்பார்கள் இல்லையா? அந்த மாதிரி மைனர்களுக்குரிய ஒரு வண்டியாகத் தான் இது உருவாயிற்று; விளங்கியது ஒரு காலத்தில்.

இதைப் பார்க்கும்போது, அவள், அந்தக் கோமளமான ரூபவதி-அந்த முகம், கண்ணழகு. அந்தக் கண்மணியிலிருந்து புறப்பட்ட ஒளி நினைவு வருகிறது. வெறும் நினைவா? வேதனை! வேதனை! ஓரே வேதனை!

ஐயோ! ஏன் இந்த வண்டி இன்னமும் இங்கே கிடைக்கிறது? ஏன் அடியோடு அழியவில்லை? இதைச் செய்தவன் போய்விட்டான்; இதன் உரியவர் போய்விட்டார். அவள் போய்விட்டாள். பூமியில் படியும் களங்கமெல்லாம் மடிந்தோ, மட்கியோ, நீரில் கலந்தோ, காற்றில் பறந்தோ போய்விடுகிறது. அந்தக் களங்கத்திலே — ரத்தினசாமிக்கு நினைவு வரும் களங்கத்திலே- இந்த வண்டியும் அவனுந்தான் மிச்சம். களங்கமா? சீ! அப்படி ஒன்று உண்டா ? உண்டானால் அதற்கு நிலைப்பு உண்டா ? — ஒன்றுமே அறியாத குருட்டுத் தனத்தோடு தான் எல்லாரும் உலகத்துக்கு-பிரபஞ்சச் கழலுக்கு- வருகிறோம். எங்கிருந்துதான் வருகிறோமோ! வருகிறோம் என்றுதான் சொல்லமுடியுமா? — நீரிலே காற்றுப்புக உண்டாகும் நீர்க் குமிழியா மனிதப் பிறவி? ஒன்றுமே புரியவில்லை. புரிந்தவரோ, புரிந்ததுபோல பேசுபவரோ சொல்வதையும் நம்ப முடியவில்லை. பிரபஞ்சம் பொய்யா? மெய்யா? பொய்யிலே களங்கம் ஒட்டாது. பொய்யே களங்கந்தானே. அதிலே களங்கம் ஒட்டாது, இரண்டறக் கலந்துவிடும். உலகம் மெய்யா? மெய்க்குக் களங்கமே இல்லை. உலகம் பொய் அல்ல, மெய் அல்ல; இரண்டும் கலந்த ஒன்று. வெளிப்படத் தெரிவதெல்லாம் பொய்; உள்ளே மறைந்திருப்பதெல்லாம் மெய்.

ரத்தினசாமிக்கு இப்டியெல்லாம் என்ன என்னவோ வேதனையும் வேதாந்தமுமான சிந்தனைகள், மூளி வண்டியைக் கண்டதும் உண்டாயின. இதன் மேலே கவிந்திருக்கும் புளிய மரங்கூடச் சாக்குச் சாக்காய்ப் பழம் உதிர்ந்த காலம் போக, இப்போது நரைத்துத் திரைத்து விறகாகத் தயாராகி மொட்டையிட்டு நிற்கிறது. இதுதான் பிரபஞ்சு விந்தை-அற்புதம்! இந்தப் புளியமரத்திலிருந்து உதிரும் பழங்களைக் காலையிலே பலநாள் புன்னகை தவழும் முகத்தோடு அவள் வந்து பொறுக்கிக் கொண்டு போவதை. அவன் பார்த்திருக்கிறான். அவன் கூடச் சில சமயம் இப்படிப் பொறுக்குவதில் அவளுக்கு உதவியிருக்கிறான். அப்போதெல்லாம் பிந்திய சம்பவங்கள் நேரும் என்று அவனுக்குத் துளிக்கூடத் தெரியாது. ஒருவேளை அவளுக்குத் தெரிந்திருக்குமோ? பிந்திய சம்பவங்களுக்கு ஏதுவான எண்ணம், எதும் அவள் உள்ளத்திலே அப்போதே எழுந்திருக்குமோ? எப்படி? ஒரு நாளும் இல்லை; சாத்தியமே இல்லை. அது நிச்சயம். தோட்டத்தில் மேயும் பசுவைத் துள்ளித் தொடர்ந்து வரும் கன்றுக்குட்டிபோல, அவளுடைய சிறு மகள் சரசுவும் அவள் சேலை முன்றானையைப் பல்லில் வைத்துக் கடித்தபடி அவளோடு கூடவே வரும் காட்சியைத் தான் மறக்க முடியுமா? அந்தப் பெண் சரசு இப்போது எங்கே எப்படி வாழ்கிறாளோ? அது தெரியவில்லை. யாரைக் கேட்டாலும், புலனாகவில்லை. அக்கம்பக்கத்தில் அன்றைக்கு இருந்த எவரையுமே, இப்போது காணவில்லை. குமார் முப்பது வருஷத்துக்குப் பிறகு ஊருக்குத் திரும்பி வந்தால்........? முன்னே பழகிய முகம் ஒன்றைக்கூடக் காண முடியாமல் போய்விட்டது? ஹும்! இதுதான் உலகம்!

அழகான பொருள் அழியாதா, என்றுமே ஆனந்தம் தருவதால்? தெய்வப் பதுமைபோல் இருந்த அவள் ஏன் அழிந்தாள்?. சாலைக்கு அழகு தரும் ஒளி மரம் போன்ற இந்த வண்டி ஏன் இப்படிச் சிதைந்து கிடக்கிறது. பச்சைப்பசேல் என்று இலையும், பூவுங், காயுமாய் நின்ற இந்தப் புளியமரங்கூட இப்படிக் கொம்பொடிந்து தறிபட்டு வந்திருப்பதேன்? அழகு சாசுவதமா? பொய் ! பொய் ! பொய்!

இந்தப் பெட்டி வண்டியைச் செய்த ஆசாரி சோம்பேறிச் சாந்தப்பன். இந்தப் புளியமரத்தடியிலே தான் இந்த வண்டி உருவாயிற்று. ஊரிலே தொழிலாளிகளின் அந்தக் காலத்து வழக்கம் இப்போதும் அப்படியேதான் இருக்கிறதோ, அல்லது மாறிவிட்டதோ? ரத்தினசாமிக்குத் தெரியாது. இன்றுதான் அவன் இங்கே வந்தான். எல்லாருக்கும் அந்நியனாக இருக்கிறான். முன்னே ஊர் முழுக்க எல்லாருக்கும் அவனைத் தெரியும்.

ஊருக்கே செல்லப்பிள்ளை என்றுகூட அவனைச் சொல்லலாம். அப்படித்தான் எல்லாரும் ‘ரத்தினு’வைக் கொண்டாடினார்கள். கடைசியிலே, ‘விழுந்த தேவதூனை’ப் போல அவன் ஊரைவிட்டு வெளியேறினான். எங்கேயாவது மூலை முடுக்கிலே அவனுக்குப் பழகிய பழைய முகங்கள் கிழடுதட்டிக் கிடக்குமோ என்னவோ! இனித்தான் தட்டுப்படவேண்டும்.

தச்சு, கொல்லு, பொன்வேலை இவையெல்லாம் செய்யும் ஆசாரிகளுக்கும் சரி, சலவை, ஷவரம் இவை செய்யும் தொழிலாளிகளுக்கும் சரி, சாதாரண வேலைகளுக்கு ஊரிலே யாரும் கூலி கொடுக்கும் வழக்கமில்லை. அறுவடைக் காலத்திலே அவர்கள் நிறைய நிறைய வர்த்தனை பெறுவார்கள். திருவிழாக்கள், ‘கலியாணம் கார்த்தி’, பண்டிகைகள் முதலிய விசேஷ நாட்களில் அவர்களுக்குப் பல வருமானங்கள் உண்டு. ஏர்க்காலுக்கு ஓட்டுப்போட வேண்டும், எரு வண்டிச் சக்கரத்துக்குப் பட்டம் மாட்ட வேண்டும் என்ற மாதிரி சகஜமான வேலைகளையெல்லாம் செய்வது ஆசாரிமார் கடமை. ஆனால், இதற்காக ‘ஒரு வண்டியே செய்’ என்றால் அதற்குக் கூலி கொடுத்தாக வேண்டும். வேலைப்பட்டறையிலும் சரிதான், அறுவடைக் களத்திலும் சரிதான், சாந்தப்பன் பெரிய சோம்பேறி. வேலைக்கு மழுப்புவான். வர்த்தனை கேட்கப் போகமாட்டான்; அவனுடைய மனைவி மக்கள் தான். ஏதோ யாசகம் கேட்பது போலக் கொஞ்சம் வர்த்தனையை வாங்கிவர வேண்டும். ஊர்ச் சமுதாய நிலத்தில் அவன் குடும்பத்துக்கும் சிறிது பங்கு உண்டு. அதன் ‘வெள்ளாமை’யைக் கொண்டு தான் என்னவோ கொஞ்சம் கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தது அந்தக் குடும்பம்.

சாந்தப்பனுக்கும், குருமூர்த்திக்கும் ஒரு சமயம். ஒரு ‘சவால்’ வந்தது. ரகசியம் என்னவென்றால், சாந்தப்பனை வேலை செய்யும்படி தூண்டச் சவால் தான் சரியான யுக்தி என்பது குருமூர்த்திக்குத் தெரியும். ஊரிலே கௌரவமான ‘பெரிய’ மிராசுதார் குருமூர்த்தி. ‘பெரிய’ என்றால் பல வேலிக் குடித்தனக்காரர் அல்ல. கொங்கணச்சேரி கிராமத்தில் அவர்தான் பெரிய மிராசுதார். இரண்டரை வேலி நிலம் அவருக்கு உண்டு. ஒரு வேலி நிலத்துக்கு மேல் உடையவர் மற்ற யாருமே அங்கில்லை. எல்லாருக்குமே குருமூர்த்தியிடம் நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு. அவர் பெரிய மிராசுதார். என்பதால் அல்ல;

குணசீலர் என்பதால்தான். யாரையும் ஒரு வார்த்தை தவறாகப் பேசமாட்டார். தெய்வபக்தர் ஒருவிதத்தில் வேதாந்தி என்றே சொல்லவேண்டும். முறையாக அதிகமாய்ப் படித்தவர் இல்லை, சொல்லப்போனால், இரண்டாம் வகுப்புக்கு மேல் பள்ளியில் படிக்கவேயில்லை. ஆயினும், பல புஸ்தகங்களை அவருடைய அலமாரியிலே பார்க்கலாம். எல்லாம் பெரும்பாலும் ஸ்தோத்திரங்களும் வேதாந்தபரமான நூல்களுமாகவே இருக்கும். வெறும் வறளிக் கதையெல்லாம் அவருக்குப் பிடிக்காது. நுட்பமான கலைகளை அவர் பயின்றிருந்தால் நிச்சயம் அவருக்குப் புரிந்திருக்கும். ஆனால், அதெல்லாம் வியர்த்தம் என்பது அவருடைய எண்ணம். எனவே, அவை பற்றிய நூல்களையும் அவர் நாடவில்லை. சித்தர், தாயுமானவர், பட்டினத்தார் பாடல்கள், ஆஞ்சநேய பராக்கிரமம், விநாயகர் மான்மியம், திருவிளையாடல் புராணம், தனிப்பாடல் திரட்டு இந்த மாதிரி புஸ்தகங்கள் அவரிடம் ஏராளம். எல்லாவற்றிற்கும் மேலாகத் ‘தஞ்சை பகவத்கீதை வசன'மே அவருக்கு மிகவும் பிடித்தமான புஸ்தகம். அதை அவர் திரும்பத் திரும்பப் படித்திருந்தார். ஆனால், அந்தப் புஸ்தகத்தைத்தான் யாரோ இரவல் வாங்கிக்கொண்டு போய்த் திருப்பிக் கொடுக்கவேயில்லை. அது போனது ஒரு துரதிருஷ்டம் என்றே அவர் கருதினார்.

கேட்டபோதெல்லாம் இல்லையென்னாது கால் அரை பணங்காசு சாந்தப்பனுக்குக் கொடுப்பவர் குருமூர்த்திதான். ஆனாலும் அவனை அவர் கேலி செய்து கொண்டே இருப்பார்.

அவர் வீட்டுக்குச் சித்திரக்கொடியும், சுவாமி உருவங்களும் அமைந்த அலங்கார நிலைப்படியைச் செய்தவன் சாந்தப்பன்தான். ஆனால், அவனும் அறியாமல் அந்த நிலைப்படிக்குக் கீழே குடும்பத்துக்குச் சிரேயஸைத் தருவதற்காக, சில நவரத்தினங்களை அவர் போட்டு வைத்தது ரத்தினசாமிக்குத் தெரியும். எந்தத் தொழிற்கலாசாலையிலும் சாந்தப்பன் பயிலவில்லை. அந்த நாளில் அந்த வழக்கம் ஏது? அவன் கண் கண்டதைக் கை செய்யும். அப்படிச் சொல்வது கூடச் சரி அல்ல; கண் கண்டதன் குறைகளையெல்லாம் நீக்கிக் கற்பனையோடு அற்புதமாய்ப் புதுமையைப் படைக்கும் திறன் வாய்ந்தது, அவன் கை.

“சோம்பேறிச் சாந்தப்பனுக்கு என்ன தெரியும்? ஸ்லிப்பர் கட்டை செய்வான். வேலை செய்ய முடியாத கிளுவைக் கட்டையில் கூட அதைச் செய்துவிடுவான். கேட்டால், அது மிக லேசு; ‘கண்ணுக்குக் குளிர்ச்சி’ என்றெல்லாம் வர்ணிப்பான். ஆனால், ஒரு பெட்டி வண்டி செய்யத் தெரியுமா, பெட்டி வண்டி?” என்று ஒருநாள் சொன்னார் குருமூர்த்தி.

அதையே சவாலாக மதித்து, வேலைக்கு ஆயத்தமாகி விட்டான் சாந்தப்பன்.

மரக்கட்டைகளையும், ஆணி, பிரம்பு, மெழுகு சிலை, ரெட்டு, வில், கண்ணாடி முதலிய சாமான்களையும் ஒன்றுக்குப் பின் ஒன்றாகக் குருமூர்த்தி வாங்கிப்போட்டார். உதவிக்கு ஆட்களையும் அமர்த்திக் கொடுத்தார். அவர்களுக்கெல்லாம் கூலி உண்டு. சாந்தப்பன் மாத்திரம் ஒரு கூலியும் பேசிக்கொள்ளவில்லை. குருமூர்த்தியிடம் சாந்தப்பன் கூலி வாங்கிக் கொள்வதா? அவர் அவனுடைய வள்ளல்; அவன் அவருடைய கலைஞன். ஆனால், அவர் கொடுக்கும் பணத்தையெல்லாம்விட, “பேஷ்! சாந்தப்பா!” என்று அவர் புகழ்ந்து இரண்டு வார்த்தை சொன்னால், அதுவே அவனுக்குப் பெரும் பரிசு.

எந்தக் காலத்திலுமேதான் ‘குருமூர்த்தியின் வீட்டில் சாந்தப்பனுக்குச் சர்வோபசாரமும் நடக்கும். வேலை செய்யும் காலத்தில் கேட்க வேண்டுமா? காபி, பலகாரம், சாப்பாடு எல்லாம் அவனுக்கு அங்கேதான். ஆனால், அவற்றை அவன் பூர்ணமாய் ரசித்து அனுபவிக்கவில்லை. பட்டினியோடு வேலை செய்வதில்தான், அவனுக்கு அதிக இஷ்டம். சுடச் சுடச் சரியான நேரத்தில் எதையும் அவன் உண்டதில்லை. எடுத்த வேலையை முடித்துவிட்டே எதுவானாலும் உண்பான். அதற்குள் எல்லாம் ஆறி அவலாய்ப் போய்விடும்.

பெட்டிவண்டி வெகு சீக்கிரத்திலே உருப்பெற்றது. நாலு மாதத்துக்கெல்லாம் அசலூரிலே ஒரு கல்யாணம். “அதற்கு என் வண்டியிலேதான் குருமூர்த்தி ஐயா போகவேண்டும்” என்று சொன்னான் சாந்தப்பன். அப்படியே தயாராகிவிட்டது பெட்டி வண்டி.

கூண்டுகட்டி, ‘பெயிண்ட்' எல்லாம் மூன்று கோட்டிங் கொடுத்தாயிற்று. கூண்டிலே பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம், ஊதா முதலிய வர்ணக் கண்ணாடிகள் பதித்தாயிற்று. கூண்டுக்கு மேலே வர்ணங் கொண்டு அழகான சித்திரங்களைத் தன் கையாலேயே தீட்டினான் சாந்தப்பன். ஓவியத்தில் கூட வல்லவன் தான் அவன்!

“பேஷ்! ஜோரான பெட்டி வண்டி! பலே வேலைக்காரன் சாந்தப்பன்!” என்றார் குருமூர்த்தி.

சாந்தப்பன் மீசைக்காரன் அல்ல; ஆனால், மீசை இருக்க வேண்டிய இடத்தை அவன் தடவிக்கொண்டான்.

இப்படி இந்தப் பெட்டி வண்டி உருவான காலத்தில் சரசு சின்னக்குழந்தை அல்ல; அவளுக்குப் பிறகு எட்டுக் குழந்தைகள் பிறந்திருக்கவேண்டிய அளவு அவள் வளர்ந்துவிட்டாள். சரசுவின் வயசு பதினொன்று. அப்படியிருந்தும், அவளுக்குப் பின் அவள் அம்மாள் சிவகாமி கருத்தரிக்கவே இல்லை. ஒரு பிள்ளைக் குழந்தை பிறந்திருக்கலாகாதா? பாழுந்தெய்வம்; குருட்டுத் தெய்வம்! ஏன் அவளுக்கு இந்தக் குறையை வைத்தது? இதனால்தானே, இதனால் தானே... ஐயோ! நினைக்கவும் பதறுகிறதே!

ரத்தினத்தின் அப்பாதான் அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்துக்கு வாத்தியாராக வந்திராமலே போயிருக்கப்படாதா? எத்தனையோ ஊரில் பள்ளிக்கூடம் இல்லை. இந்த ஊரில் அது இல்லையென்று யார் அழுதார்கள்? இங்கேயும் அது இல்லாது போயிருந்தால், எவ்வளவு மேலாக இருக்கும்! அப்பா வாத்தியார். அதனாலேயே ரத்தினசாமி இங்கே வந்து வாழ நேர்ந்தது; குருமூர்த்தியோடு சிநேகமாக நேர்ந்தது; அவருடைய தம்பிபோல உறவாட நேர்ந்தது. அவன் வேதாந்தி ஆனால் ரத்தினசாமியின் விதண்டாவாதங்களையெல்லாம் கேட்டு, அவனுக்குப் பதில் சொல்லுவதிலே அவருக்கு ஓர் ஆனந்தம். விளையாட்டிலேகூடக் குருமூர்த்தி ஒழுங்கு பிறழ மாட்டார்; ஆயினும் சீட்டாடும்போது ரத்தினம்’ செய்யும் தில்லுமுல்லுகளையெல்லாம் கண்டு அவர் மகிழ்வார். ‘ரத்தினம் புத்திசாலி; ஆனால் அதிலே தினையளவு கோணல் புத்தி கலந்திருக்கிறது’ என்பது அவர் கருத்து. எந்தவிதமான முரட்டுக் காரியத்துக்கும் ரத்தினத்தைத்தான் அவர் கூப்பிடுவார். அவர் என்ன? அவர் மனைவி சிவகாமியேதான் கூப்பிடுவாள். கிணற்றில் விழுந்த செம்பைக் கயிற்றின் துணைகூட இல்லாமல் இறங்கி எடுக்க வேண்டுமா? தென்ன மரமேறி நாலு இளநீர் பறித்துப்போட வேண்டுமா? எப்பேர்ப்பட்ட சண்டிக்காளை பூட்டிய வண்டியையும் சல்லியன் மாதிரி லாவகமாய்ச் சாரத்தியம் செய்ய வேண்டுமா? எதற்கும் ரத்தினசாமி தயார். ஆமாம்; அப்படி வண்டி ஓட்டியதால் தானே வந்தது வினை!

வண்டி பூர்த்தியாகிவிட்டது. கல்யாணத்துக்குப் புறப்பட வேண்டிய நாளைக்கு முந்திய நாள் மாலை. சிவகாமி ஒரு குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு குடிநீர்க் கிணற்றுக்குப் புறப்பட்டாள். ஊர்ப் பொதுமக்களின் சௌகரியத்துக்காக, அதிலே இப்போது புதிதாகப் பம்புக்குழாய் போட்டிருந்தார்கள். ஆகவே, அவள் தாம்புக்கயிறு எடுத்துச் செல்லவில்லை. குடத்தை ஒரு கையால் அணைத்து, மறுகையால் அழகாகப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல அவள் நடந்தாள்.

“ரத்தினு, பார்த்தாயா அண்ணியை? பாலகிருஷ்ணனை இடுப்பில் வைத்துயசோதை போவதை! பாவம் பிள்ளைக் குழந்தை இல்லை என்று பெருங்குறை இந்த யசோதைக்கு!” என்று கேலி செய்தார் குருமூர்த்தி.

மனைவியை இப்படித் தமாஷ் செய்வதிலே அவருக்கு ஒரு குஷி. அவளுடைய ஏக்கத்தின் பரிமாணத்தை அவர் அறியவில்லை. உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் எரிமலையின் உஷ்ணத்தை, சாந்தமான சமவெளியில் இருப்பவன் எப்படி அறிவான்?

“இனி உனக்குப் பிள்ளையே பிறக்காது” என்று ஒருநாள் கனவில் வந்து சிவபெருமான் அவருக்குச் சொல்லிவிட்டாராம். சிவகாமியிடம் தாம் இதைத் தெள்ளத் தெளியத் தெரிவித்து விட்டதாகச் சொல்லிச் சிரித்தார் குருமூர்த்தி. என்ன துர்ப்பாக்கியம்! நிராசை என்பது நீற்றுப்போன நெருப்பல்ல என்று அவர் அறியவில்லை. அது நீறு பூத்த நெருப்பு; காற்றடித்ததும் கிளர்ந்து கனன்று ஜவாலை ஆகிவிடுமே! ஆகிவிட்டதே! அந்தத் தீ இதோ இன்றுகூட எரிகிறதே!

கல்யாணத்துக்குப் புறப்பட்டாயிற்று. தெருவிலே இருந்த இரண்டு, மூன்று குடும்பங்கள் வண்டிகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டன. எல்லாரும் ஒன்றுக்குள் ஒன்று; உறவினர்கள், ரத்தினம் சம்பந்தமில்லாதவன். ஆனால், அவன் தான் குருமூர்த்தியின் குடும்பத்துக்கு உற்ற துணைவனாகிவிட்டானே. குருமூர்த்தியின் ஆஸ்தானக் கலைஞன் சாந்தப்பன்; ஆஸ்தானப் புலவன் ரத்தினசாமி. இருவரும் கூடவே புறப்பட்டார்கள்.

ரத்தினத்தின் அப்பாவுக்கு அவன் ஒரு தறுதலை. “கட்டுக்கடங்காத பிள்ளையை வெட்டிப் போட்டால் என்ன?” என்று, அவன் இல்லாத சமயத்திலெல்லாம் அவர் திட்டிக் கொண்டிருப்பாரே ஒழிய, நேரிலே ஒன்றும் சொல்வதில்லை. எந்த விதமாகவும். அவனைக் கண்காணிப்பதில்லை. இப்போதுதான் அவன் உச்சிக் குடுமியாயிருக்கிறான். அப்போதெல்லாம் அவன் தலையிலே கட்டுக் குடுமி. பாதித் தலைக்கு மேலே அது பரவியிருக்கும். அதற்கு முன்னே சன்னமாகக் கன்றுக்குடுமி வைத்துக் கொண்டிருப்பான். அதைப் பார்த்து அவன் அப்பாவுக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும். ‘இந்தப் பயலின் கேராவும் கிருதாவும்’ என்று அவர் பெருமூச்செறிவார். ‘கன்றுக் குடுமிக்கும்’ ‘கோ-கிருதாவுக்கும்’ அவருக்கு வித்தியாசம் தெரியாது. சரியான வாலிபம். இருபத்தைந்து வயசு. ரத்தினம் டில்பஹார் தைலந்தான் பூசி வருவான். தலையிலே அடத்தியில்லாது மயிர் சொற்பமாக இருந்தாலும், முடிச்சுப் ‘புஸு புஸு’ என்று விலத்தியாய்ப் பெரிசாய் இருக்கும்படி தளுக்காக முடிந்து கொண்டையூசி செருகிக் கொள்ளுவான். சில சமயம் பெண்களைப்போல் செருகு கொண்டையும் போட்டுக்கொள்வான். கோதி வாரிவிட்ட மயிர் பறக்காது. ஆனாலும் அதைப் படிய வைக்கும் ‘கமான் வளைவுச் சீப்பு’ அவன் தலையிலே எப்போதும் அலங்காரப் பொருளாய் அமர்ந்திருக்கும். மஸ்லின் ஜிப்பா. வெண்பட்டு அங்கவஸ்திரம்.. இடுப்பிலே அழகாகக் கட்டமிட்ட வர்ணக் கைலி, நெற்றியிலே சன்னமாக வாசனைச் சாந்துப்பொட்டு, எப்போதும் வெற்றிலை மென்று சிவந்திருக்கும் அவன் உதடுகள், கதுப்பிலே புகையிலையைக் கிள்ளி அடக்கிக்கொண்டு தளைக் கயிற்றைக் கையிலே பிடித்தானானால், ஓடாத மாடெல்லாம் இறக்கை கட்டிய குதிரைகள் மாதிரி பறக்கும். அன்று இந்தப் பெட்டி வண்டியை அவன் தான் ஓட்டினான். அதுதானே பொல்லாத தீங்காய் முடிந்தது?

குருமூர்த்தி இந்தப் பெட்டி வண்டியில் வெள்ளோட்டத்துக்கென்றே புதிதாக மிக அழகான ஒரு ஜோடி காளைகள் வாங்கினார். அவற்றுக்குக் கொப்பி, சதங்கை, மணிமாலை -முதலிய அணிகளெல்லாம் போட்டுவிட்டார். அந்த மாடுகளுக்கேற்ற சாரதி ரத்தினந்தான். என்னிடம் விதம் விதமாய்ப் பூணும் சாட்டைகளும் கட்டிய தார்க்குச்சிகள் உண்டு. மணிமுடிச்சுச் சாட்டை, சன்ன வார்ச் சாட்டை, பூக்குஞ்சலச் சாட்டை இப்படிப் பல உண்டு அவனிடம். சாட்டையோடு, கறுப்புக் குடை ஒன்றையும். வண்டியோட்டும் சாதனமாகச் சில சமயம் அவன் கையாளுவான். - குடைக்கு மிரளும் மாடுகள் விஷயத்தில் அவனுக்கும் வெகு உற்சாகம். சாட்டையடிக்கும், தார்க்குத்துக்கும் மசியாத மாட்டை, விறுக்கென்று குடையை விரித்து வெறித்தோடச் செய்யும்போது, ஏதோ ‘பாரசூட்டில்’ பறப்பதுபோல அவனுக்கு ஆனந்தம் ஏற்படும். இந்தப் புது மாடுகளுக்குப் பூச்சாட்டை போலவே குடையும் அவசியம் என்று அவன் எடுத்துவந்தான்.

“அடே , ரத்தினம், தார்க்குச்சியால் குத்தி ரத்தக்காயம் செய்துவிடாதே. ஹத்திலே ஓட்டு” என்று தொடக்கத்திலேயே எச்சரித்தார் குருமூர்த்தி.

“அந்தக் கவலை உங்களுக்கு வேண்டியதே இல்லை” என்று உறுதி சொன்னான் ரத்தினம். தாரைச் சுர் என்று குத்தி எடுக்கக்கூடாது; மென்மையாகக் குத்தி ஒரு திருகு திருகி எடுத்தால் பொட்டு ரத்தம் வராது. தவறி வந்தால் சிறிது சாணத்தைத் தடவிவிட்டால் போயிற்று. இது தார்க்குச் சிக்களை பற்றி அவனுடைய சித்தாந்தம்.

ரத்தினம் வண்டியோட்டினான். அழகான பெட்டி வண்டி, அதில் அழகான பெண்களே உட்கார்ந்திருந்தார்கள். குருமூர்த்தி பின் வண்டி ஒன்றில் வந்தார். பெட்டி வண்டியில் முன் பாரம், பின் பாரங்களையெல்லாம் சரி செய்தபோது, சிவகாமி முன்பக்கத்தில் மூக்கணைக்கு அருகே உட்காரவேண்டி வந்தது. பெட்டி படுக்கை இவற்றோடு மற்றும் இரண்டு பெண்கள் அந்த வண்டியிலே இருந்தார்கள். சற்றுப் பருத்திருந்த ஒருத்தி, வண்டியின் நடு மத்தியிலே உட்கார்ந்திருந்தாள். அவள் சிவகாமியின் அத்தங்காள்; கொஞ்சம் வாயாடி; சம வயசுக்காரி.

வண்டியில் இருந்த மூன்று பேருக்குள்ளும் அதிக அழகி சிவகாமிதான். முழுமதிபோல் சற்று வட்டமான முகம், செக்கச் செவேல் என்றிருக்கும் அவள் மேனி, கறுத்த கூந்தல் தானாகச் சுருண்டு சுருண்டு, ஓவியன் எழுதிய லலித ரேகைகள் அடர்ந்து அலை மோதுவது போல் வளைந்து சென்றது. அவளுக்கு ஒன்றும் அப்படி வயசாகி விடவில்லை. இருபத்தேழோ எட்டோதான் இருக்கும். கூந்தலை வாரி வகிடெடுத்துக் கால் வாங்கிப் பின்னித் தொங்கவிட்டு, பூச்செருகிக் கொண்டிருந்தாள். நெற்றியின் நடுவில் புருவங்களின் இடைக்குச் சற்று மேலே பச்சை குத்திய பொட்டு ஒன்று துவங்கியது. அந்தப் பொட்டை மறைக்காமல், அதை ஒட்டினாற்போல் அதற்குக் கீழே ரம்யமான செஞ்சாந்துப் பொட்டு இட்டிருந்தாள். ஜரிகைக் கரைச் சிவப்பு ரவிக்கை, கரும்பட்டுச் சேலை, அதிக நகைகள் இல்லை. கழுத்திலே இரண்டு வடச் சங்கிலி, கையிலே காப்பு, காதிலும், மூக்கிலும் மூளியில்லாமல் சாதாரண நகைகள்.

‘ட்ரு! ட்ரு! ட்ரு! ஹை!’ என்று பூச்சாட்டையை ஓங்கி இடது மாட்டின் வாலை முடுக்கினான் ரத்தினம். கொஞ்சம் துடியான மாட்டைத்தானே பெரும்பாலும் இடத்தில் கட்டுவார்கள்? இது என்னவோ சற்று மந்தமாக இருந்ததுபோல் ஆரம்பத்தில் தோன்றியது. இடம் வலம் மாற்றிப் பார்க்கலாமா என்று எண்ணினான் ரத்தினம். இல்லை; கொஞ்ச தூரம் போனதும் சரியாகிவிட்டது. புது ஆளைக்கண்டு வெறிப்புத் தணியச் சிறிதுநேரம் ஆயிற்றுப் போலிருக்கிறது.

வண்டிகள் ஓடின. பெட்டி வண்டி தான் எல்லாவற்றுக்கும் முன்னே சென்றது. மற்ற வண்டிகளுக்காகச் சிறிது சிறிது தளைக் கயிற்றை இழுத்துப் பிடித்து மெதுவாகவே ரத்தினம் அதை ஓட்டவேண்டியதாயிற்று. வண்டியோ வில்வண்டி; பாதையோ சற்று ஈரம் பாய்ந்தது. மாடுகளுக்குத்தான் கொஞ்சம் கஷ்டமாயிருந்திருக்கும். உள்ளே உட்கார்ந்து சவாரி செய்தவர்களுக்கு மிகவும் சொகுசாகவே இருந்தது. அந்தப் பெண்கள் உற்சாகமாகத் தொண தொண என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். ரத்தினத்தின் காதிலும் அது விழுந்தது.

பருத்த அத்தங்காள், சிவகாமியை ஓயாமல் ஏதாவது கேலி செய்து கொண்டே வந்தாள். சிவகாமிக்கு ஒரே பெண் இல்லையா? இதனால் அவள் பெரிய ‘சோடை’யாம். தனி மரம் தோப்பாகாதாம்; ஒரு குழந்தை பிள்ளைப்பேறு அல்லவாம். குறைந்தபட்சம் ஒரு பெண்ணும், ஓர் ஆணுமாக இரண்டு குழந்தைகளாவது ஒருத்தி பெற்றால்தான் பெண்மை பலித்ததற்குச் சான்றாகுமாம். அதுவும் எப்படி?

“ரோஜா மாதிரி ஒரு பெண்; ரத்தினம் மாதிரி ஒரு பிள்ளை!”

ரத்தினசாமி திடுக்கிட்டான்: அவள் வேண்டுமென்றே அவனை ஜாடையாகக் குறிப்பிட்டுத்தான் பேசினாளோ? என்ன! குறும்பு!

இந்தச் சமயத்தில் சிவகாமியின் ஒரு புஜம் அவன் மீது தீண்டியது. தவறித் தன்னை அறியாமலே தான் தீண்டியிருக்க வேண்டும். அப்பாடா! அப்போது, அவள் மேனி எப்படி நடுங்கியது! தன் முதுகைத் தீண்டிய புஜத்தின் அதிர்ச்சியால் அதை அவன் அறிந்து கொள்ள முடிந்தது.

பிறகு தீப்பட்ட கொடிபோலச் சட்டென்று அது விலகியது. ஆனால்...ஆனால்...அதுதான் ஆரம்பம்.

கொஞ்சநேரம் கழித்து அது மறுபடியும் மெல்ல மெல்ல நெருங்கி அவன் மீது பட்டது. விலகியது. இப்படிப் பலமுறை அவன் உணர்ச்சியிலே உள்ளத்திலே ஒரு லாகிரி-பித்தம் ஏறிவிட்டது. உலகத்திலே சரி-தவறு, நன்றி- துரோகம், நன்மை-தீமை என்றெல்லாம் பகுத்துச் சொல்லுகிறார்களே, அந்த விவேகத்தையெல்லாம் நியாயங்களையெல்லாம் கடந்த அதீத நிலையொன்றில் அவன் உள்ளம் சிறகு முளைத்த குருவிபோல் பறக்கத் தொடங்கியது.

பிறகு, நடந்ததெல்லாம் என்னவோ கனவு மாதிரி இருக்கிறது. அப்புறம் ஐந்தாறு நாள்தான் அவன் பூலோகத்தில் ஜீவனோடு, உலவிய மனிதனாகவே இல்லையே; எங்கேயோ மேகத்தோடு மேகமாக மிதக்கும் ஆவிபோல் தான் அவனுக்கு உணர்ச்சி இருந்தது. அந்த நாட்களில் காதுந் தலையுமற்றுச் சின்னபின்னமா கனவை எப்படி ஒட்டவைத்து உருவாக்கிக் காணமுடியும்?

கல்யாணம் முடிந்து எல்லாரும் திரும்பி ஊருக்கு வந்தாயிற்று. அப்போதுகூட, எவனோ குழந்தை காற்றில் பறக்கவிட்ட காகிதப் பட்டம்போல அவன் வீட்டுக்குச் சென்றான்.

ரத்தினசாமி எந்த நாளிலுமே வீட்டில் படுத்ததில்லை. குருமூர்த்தி வீட்டு ஒட்டுத் திண்ணையில்தான் படுப்பது வழக்கம். இது ஏழெட்டு வருஷமாகவே ஏற்பட்டுவிட்ட பழக்கம். அந்த வராந்தா ஒட்டுத் திண்ணையிலேயே சுருட்டி வைத்திருக்கும் அந்தப் படுக்கை, அதை யாரும் கலைக்கமாட்டார்கள், நகர்த்தமாட்டார்கள்.

மாலையில் அங்கே தள்ளாடித் தள்ளாடியபடி வந்தான் ரத்தினசாமி. அவன் தூரத்தில் வரும்போதே, பெரிய திண்ணையில் குருமூர்த்தி உட்கார்ந்திருப்பதை அவன் கண்டான். எப்போதும் அவனைக் கண்டதுமே புன்சிரிப்போடு வரவேற்கும் வழக்கமுள்ள அந்த முகத்திலே அன்று ஈயாடவில்லை, ரத்தினமே கிட்ட வரவர அவருடைய முகம் குரூரமாயிற்று. கடைசியிலே சரேல் என்று எழுந்து மகா ஆத்திரத்துடன் அந்த ஒட்டுத் திண்ணைப் படுக்கைமீது அவன் கண் பார்க்கப் பலமாக ஓர் உதைவிட்டார். அது இரண்டு, கஜதூரம் எழும்பி நடுரோட்டிலே போய் விழுந்தது.

ரத்தினம் பிரமித்துப் போய், வாசல் பூவரச மரத்தடியிலே சப்த நாடியும் ஒடுங்கிக் குன்றியவனாய்ச் சிலைபோல் நின்றான். குரூமூர்த்தியும் சிறிது நேரம் எங்கேயோ வெட்டவெளியைப் பார்த்தவராய் நின்றார். பிறகு அந்த இடத்தை விட்டு அப்பால் போய்விட்டார்.

ரத்தினத்துக்குச் சிறிது சுயநினைவு வந்தது. “மனிதன் மிருகம்! மனிதன் மிருகம்! மனிதன் மிருகம்...!” என்று முணுமுணுத்துக் கொண்டே நடந்தான்; நடு வீதியில் அவந்தரையாய்க் கிடந்த படுக்கையைச் சுற்றிக் கையில் எடுத்துக்கொண்டான். மனிதனுக்கும் பசியும், தாகமும் இருக்கின்றன; இயற்கையின் தூண்டுதல்களுக்கு அவனுந்தான் ஆட்படுகிறான்; தீ, காற்று, நீராவி, மின்சாரம் இவையெல்லாம் விசை கொண்டு கண்மூடித் தொழிற்படுவது போல, உணர்ச்சி வேகத்திலே, உடம்பின் விறுவிறுப்பிலே, உள்ளத்தின் பரபரப்பிலே தன்னை அறியாமல் என்ன என்னவோ செய்து விடுகிறான்! நியாயம், தர்மம், சத்தியம், பாவம், புண்ணியம் எல்லாம் விவகாரப் பேச்சுக்கு, உள்ளம் பொங்கிவிடும்போது, இவையெல்லாம் அர்த்தமற்றுப் போகின்றன.

உண்மை என்ன? கல்யாணச் சந்தடியிலே அது நடந்துவிட்டது. ரத்தினத்தின் ஆயுள் பரியந்தம் நிரந்தர வேதனையை நல்கிட்ட அதுதான். நாலு பேர் அங்கேயே கிசுகிசு என்று அதுபற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால், குருமூர்த்தியின் காதில் அதைப் போட யாரும் துணியவில்லை. ஆனால் ஊர் திரும்பி வந்ததுமே அவருக்கு எப்படியோ அது எட்டிவிட்டது. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால், ஒரு மனிதனுக்கு எப்படித்தான் இருக்கும்! குருமூர்த்தி அந்த நிமிஷத்திலே என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். ஆனால், அவர் மானி; வேதாந்தி; சாந்தமூர்த்தி. சாந்தம் என்ற குன்றைக் குடைந்து வரும் ஆத்திரம் கங்கையின் வீழ்ச்சியாக இருக்குமா? அது அருவி நீர்போல் வலியற்றுப் போய்விட்டது.

அன்று முதல் குருமூர்த்தி வேறு மனிதராகிவிட்டார். நஞ்சு தோய்ந்த பாம்புபோல் ரத்தினமும் அவர் கண்ணிலுமே படத் துணிவின்றி ஒளிந்து ஒளிந்து நடமாடினான்.

சிவகாமி அதற்குப் பிறகு வெகுகாலம் உயிரோடிருக்கவில்லை. அவளுடைய கடைசி நாட்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை, சில நடைமுறைகளாலும் அரையுங் குறையுமாய்க் கேள்விப்பட்ட சில தகவல்களாலும் ஊகித்து அவன் கற்பனை செய்ய முடிந்தது.

அவளைக் குருமூர்த்தி ஒரு வார்த்தையும் கடிந்து சொல்லவில்லை. ஓடு, வெளியே என்று துரத்தவில்லை. தாமரையிலை நீர்போல், வீட்டிலே இருந்தும் இராதவராக ராஜரிஷிபோல், மனத்துறவு பூண்டு அவர் வாழத் தொடங்கினார்.

சிவகாமி? அவள் சாகு முன்பே, விஷயம் குருமூர்த்தியின் காதுகளை எட்டியவுடனேயே, உண்மையில் செத்துவிட்டாள்; நடமாடும் சவமானாள். அதோடு அன்று ஆரம்பித்த காய்ச்சல், படிப்படியாக உயிர் குடிக்கும் பெருநோயாக மாறி, சில மாத காலத்தில் அவள் ஆயுளைத் தீர்த்துவிட்டது.

இதெல்லாம் ஒன்றும் விந்தை இல்லை. மயானத்திலே அவளுக்குக் கொள்ளி வைத்தபின் குருமூர்த்தி தம்மை மீறி வாய்விட்டுச் சொன்னாராமே சில வார்த்தைகள், அவை தான் ரத்தினத்தின் நெஞ்சை இன்னமும் வாள்போல் அறுக்கின்றன.

“நீ இனிப் புனிதையாகிவிட்டாய். உன் மூடத்தனத்துக்குப் பிராயச்சித்தம் ஏற்பட்டுவிட்டது. போ, சுமங்கலியாய்ப் போய் வா; ஆனால், அவன்.... அவன்... அந்த அறியாத வாலிபன்!...” இதோடு அவர் நின்றுவிட்டாராம். என்ன சொல்ல எண்ணியிருப்பார்? என்னதான் எண்ணியிருப்பார்? இனி அதை அறியும் வகை ஏது? ஆறு மாதத்துக்கு முன் வரையில் முனிவரைப்போல் வாழ்ந்து வந்து அவருந்தான் போய்விட்டாராமே!

இந்தப் பெட்டி வண்டி? இதை அந்தச் சாந்தப்பனைத் தவிர வேறு யாரும் தொடக்கூடாது என்று அவர் சொன்னாராம், அவனும் வெகுநாள் வரைக்கும் இதிலேயே எந்நேரமும் துக்கம் நிறைந்த முகத்தோடு வந்து படுத்திருந்து சில வருஷங்களுக்கு முன் உயிரை விட்டானாமே! என்ன விந்தை!

அவள் மாண்ட பிறகு, யாரும் அறியாமல் ஊரை விட்டு ஓடிய ரத்தினம், எங்கெங்கோ திரிந்தான். எவ்வளவோ பொருள் சம்பாதித்தான். - உள்ளத்தின் சுமை மாத்திரம் சுமக்க முடியாப் பெரும் பாரமாக இருந்தது. பல பெண்கள் அவனை நாடி வந்தும், மணம்புரிய அவன் மனம் இசையவில்லை. கொங்கணச் சேரியை வந்து பார்க்க, எத்தனையோ தடவை என்னவோ ஓர் ஆசை வந்து உந்தியது. ஆனால் ஒரு பயமும் கூடவே வந்து அதை அத்தனை தடவையும் தடுத்தது. கடைசியாக இந்தத் தடவை வந்தேவிட்டான்.

வந்து இந்தக் காட்சியைக் காணவா? இதை அவன் கனவும் காணவில்லை.

வாழ்க்கையிலே அவருடைய மன்னிப்பு ரத்தினத்துக்கு இல்லை. இனி என்ன பரிகாரம்? என்ன பிராயச்சித்தம்? செல்லரித்த அவன் மனத்துக்குக் கடைசி வரைக்கும் நிம்மதியே கிடையாது.

அவனுடைய உள்ளத்திலே, ஒரு சங்கல்பம் எழுந்தது. குருமூர்த்தியின் வீடு இன்று யாருக்குச் சொந்தமானாலும் சரி, அவர்களுக்கு என்ன விலை கொடுத்து வேண்டுமானாலும் இந்த வீட்டை வாங்கப் போகிறான். வண்டியைத் தன் ஆயுள் வரைக்கும், குருமூர்த்தியைப் போலவே தானும் காப்பாற்றப் போகிறான். அப்புறம்? அப்புறம்? வீட்டுக் கூடத்திலே அவர்கள் இருவருடைய படங்களையும் வைத்து நித்தமும் மன்னிப்புக் கோரிப் பிரார்த்திக்கலாமா? ஐயோ! அப்போதாவது இரவிலே என்றாவது அயர்ந்த தூக்கம் வருமோ? இல்லை; வராது அவன் தான் மக்பெத்மாதிரி தூக்கத்தை என்றைக்கோ கொலை செய்து விட்டானே. அவனுக்கு இனி ஒரே தூக்கந்தான் உண்டு—கடைசிநாளில். ஆனால் கடுந்தவம் இன்றி இனி வாழ முடியாது. இன்றே அதை அவன் தொடங்கப் போகிறான்.

சிந்தனைப் புயலில் அலைக்கழிக்கப் பெற்ற ரத்தினம் ஏதோ கடின உழைப்புப் பிரிந்தவனைப்போல, உடல் சோர்ந்து அந்தப் பழைய ஓட்டுத் திண்ணையிலே போய்ப் பொத்தென்று உட்கார்ந்து, அதன் சார்மணையிலே தலையைச் சாய்த்தான். இனி என்றும் இங்கே தான் அவனுக்குப் படுக்கை. ஆனாலும், விரிப்பு மாத்திரம் ஒன்றும் கிடையாது; கண்டிப்பாய்க் கிடையாது.