தஞ்சைச் சிறுகதைகள்/வண்ணார வீரம்மாள்

வ.ரா



ணிக்கொடி' காலத்துக்கு மூலபுருஷர் என்பதும், பார்தியைத் தமிழகத்துக்கு எடுத்துக்காட்டியவர் என்பதும் தெரியாதனவல்ல. படைப்புத் துறையில் புதுப்புது இலக்கிய உருவங்களைத் தாமே படைத்துக் காட்டிய கலைஞன் வ.ரா.

'1889 இல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திங்களுரில் பிறந்தவரான வ. ராமசாமியிடம் எனக்கு ரொம்ப ஈடுபாடு உண்டு. அவர் எழுத்தில் பிரச்சார நோக்கம் அதிகமாக இருந்தாலும் ஒரு கவர்ச்சியும் இருந்ததை யாரும் தவிர்க்க முடியாததாக இருந்தது. மறுமலர்ச்சி இலக்கியத்திற்கு பாரதியார் எப்படி முன்னோடியோ அப்படியே வ.ராவும் ஒரு முன்னோடி என்று சொல்லவேண்டும்.’ என்று க.நா.க சொல்லுவது மிகையில்லை.

அவரின் படைப்பின் பெருமையை எழுதிய தி.க.சி அவர்கள் "வ.ரா வின் வசன நடைக்காகவும், முற்போக்குக் கருத்துக்களுக்காகவும், அவரை நான் போற்றுகிறேன். அவர் எழுதும் வசனம் அற்புதமானது. அபூர்வமானது. விறுவிறுப்பும், வேகமும், தெளிவும், ஆழமும் கொண்டது. எதையும் சுற்றி வளைத்து எழுதத் தெரியாதவர். நேராகப் பளிச்சென்று தான் விஷயத்தைச் சொல்லுவார். சொற்கள் அவர் கையில் கூரிய அம்புகள், அரசியல், சமுதாயம், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றின் மேன்மைக்காக அயராது தொண்டு செய்தவர் வ.ரா." என்கிறார். -

வ.ரா வின் சிறுகதைகளைப் பற்றி அவரிடமே நண்பர் அழகாகச் சொன்னாராம், இப்படி... “கதைகள் துவக்கத்தில் வெகு விரிவாக ஆரம்பமாகின்றன. முடியும் பொழுது சட்டென்று முடிந்து போகின்றனவே”

“ஆம், உங்களுடைய அபிப்பிராயம் சரியானதே...” என்று கூறியதாக அவரது சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலேயே குறிப்பிட்டிருப்பது அவரது நேர்மையைச் சுட்டுகிறது.

வண்ணார வீரம்மாள்


சித்தூர் சமஸ்தானத்தில் புளியந்தோப்பு என்று ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் புளிய மரங்கள் மிகவும் அதிகம். அதனாலேதான் ஊருக்கு புளியந்தோப்பு என்று பெயர் வந்தது. புளியந்தோப்பு, கிராமமானதால், வீடுகள் அதிகமில்லை. அந்தணர்களின் வீடுகள் சில. அவர்கள் தனித்தெருவில் வசித்து வந்தார்கள். வியாபாரிகள் சிலர். அவர்களுக்குப் பெருத்த வியாபாரம் கிடையாது. குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான உப்பு, மிளகாய் முதலியன அவர்கள் விற்று வந்தார்கள். அதிகமான ரூபாய் நாணயங்கள், அவர்களுக்குத் தினசரி வியாபாரத்தின் மூலமாய்க் கிட்டுவதில்லை. செப்புக் காசு வாணிபம் தான் அதிகம். பயிர்த் தொழிலில் ஈடுபட்டு குடியானவர்கள் வசித்தார்கள். இவர்களின் தொகைதான் பெரும்பான்மை. இந்தப் பண்டை காலத்து கிராமத்தில் ஒரு நாவிதன், ஒரு தச்சன், ஒரு கொல்லன், ஒரு வண்ணான், ஒரு ஜோசியன், ஒரு (தங்க) ஆசாரி - முதலியவர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஊரின் ஒரு கோடியில் உழைத்தும், வயிறாற உண்ண கூலி கிடைக்காத தீண்டாதார்கள் குடியிருந்து, எவ்வாறோ காலங்கழித்து வந்தார்கள்.

புளியந்தோப்பு விஸ்தாரமான கிராமம் இல்லை. ஊரில் குடியிருக்கும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூற்றுக்கு அதிகப்படாது. நஞ்சை, புஞ்சை வகையறா யாவும் இருநூறு ஏகரா நிலமிருக்கும். அதாவது புளியந்தோப்பு ஆள் ஒவ்வொருவருக்கும் அரை ஏகரா நிலம் கூட பங்கு வராது. ஆனால் பூமி இப்படிப் பங்கிடப்பட்டது என்று நினைக்க வேண்டாம். புளியந்தோப்பில், சொந்த பூமியுள்ள குடும்பங்கள் இருபது இருக்கலாம். பாக்கி சுமார் அறுபது குடும்பங்களுக்கு நிலம் இல்லை. குடியிருக்கும் வீடுகள் கூட அவர்களுக்குச் சொந்தமில்லை. பூமி சம்மந்தப்பட்ட வரையிலும், மேற் கூறியவாறு பங்கு ஏற்பட்டிருந்தாலும், பொதுவாக மனக்குறையும், பொறாமையுமில்லாமல், புளியந்தோப்பார் வாழ்ந்து வந்தனர். ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கைத் தேவைகள் அதிகம் இல்லை. கல்யாணம் முதலியன மிகச் செட்டாக நடைபெற்றன. விலைபெற்ற ஆடைகள் அவர்கள் அணிந்ததில்லை. தங்க நகைகள் சில வீடுகளில் மட்டுமிருந்தன. ஏழைக் குடியானவர்கள் வீட்டில் மண்பாத்திரங்கள் புழங்கி வந்தன. வெள்ளிக்காப்புகள் சில வீடுகளில் உண்டு. கள்ளுக்கடை அந்த ஊரில் இல்லை. இருக்கிறவர்கள் இல் லாதவர்களுக்கு கொடுத்து உதவி எப்படியோ பொதுவாழ்க்கையில் அதிகமாக மேடுபள்ளமில்லாமல் நடத்தி வந்தார்கள். இவ்வாறு வெளியுலகத்தை அதிகமாக ஏறிட்டுப் பார்க்காமல் வாழ்க்கை நடைபெற்று வந்த புளியந்தோப்பில், சோமதேவ சாஸ்திரிகள் என்று ஒருவர் இருந்தார். அவர் பரம்பரை வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சோமதேவரின் பாட்டனார் காலத்தில் அவருக்கு மூன்று ஏகரா நிலம் அரசனால் சன்மானம் கொடுக்கப்பட்டது. மானியமாய் வந்த நிலத்தைக் கொண்டும் வித்வான் என்ற பெயரினாலும் அவர் திருப்திகரமாய் இல்லறம் நடத்தி வந்தார்.

அவருக்குப் பெரிய வீடு இல்லை. இல்லறம் இனிது நடத்திய சோமதேவரின் பாட்டனாருக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் ஒருவர் தான் சோமதேவரின் பிதா, சோமதேவரின் பிதாவுக்கு அவரது தகப்பனாரின் மூலமாய் மூன்று சாஸ்திரங்களில் தேர்ச்சி கிடைத்ததாயினும், பூமியில் பூர்வ சொத்தான மூன்று ஏகரா நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு (ஒரு ஏகரா) பாகமாய் கிடைத்தது. ஒரு ஏகரா நிலத்தையும், தனது மூன்று சாஸ்திரப் பயிற்சியையும் கொண்டு, அவர் இல்லறம் நடத்தத் துணிந்தார். குடியிருப்பு விட்டில், அவருக்கு மூன்றிலொரு பங்கு.

சோமதேவ சாஸ்திரிகளும், மூன்று சகோதரிகளும் அவர்களது பிதாவுக்குப் பிறந்தனர். இவர்கள் குழந்தைகளாயிருக்கும் பொழுதே, புளியந்தோப்பின் பழைய நிலைமை மாறத் தலைப்பட்டது. தங்க நகைள் ஏற்பட்டுவிட்டன. ரூபாய்கள் தோன்றின. நோட்டுகளும் வந்து விட்டன. போதாக்குறைக்கு மதுபானக்கடையும் ஸ்தாபிக்கப் பெற்றது. சோமதேவ சாஸ்திரிகளுக்கு சமஸ்கிருதத்திலேதான் பயிற்சி. அவருடைய மூன்று சகோதரிகளும் தங்கள் புக்ககம் செல்லுமுன்னரே, தங்கள் பிறந்த வீட்டு பூமி ஒரு ஏகராவும் விலை போகும்படியாயிற்று காலம் மாறின விந்தை அது. நாகரிகம் தோன்றிய மயக்கால் நகைகளுக்கு ஆசை பெண்களின் உள்ளத்தில் உண்டாயிற்று. சீர் வரிசைகள் சரியாய்ச் செய்யாவிடின், பெண்களுக்குக் கல்யாணம் செய்ய முடியாதோவென்று பெற்றோர்கள் மனம் ஏங்கும் காலம் வந்துவிட்டது. சோமதேவ சாஸ்திரிகளின் வீட்டில் தரித்திரம் இவ்வளவு தாராளமாய் விளையாடி வந்தபோதிலும், அவருக்கும் பரம்பரை மாமூலையொட்டி கல்யாணம் நடைபெற்று விட்டது.

“எனக்கு ஏற்பட்டது கலியாணம் இல்லை. எனக்குக் கட்டை கட்டி விட்டார்கள்” என்று அலுத்துக் கொண்டு சொல்லுவார் சோமதேவ சாஸ்திரிகள். கலியானமாயிற்று என்றால் குழந்தைகள் பிறந்தனவென்று சொல்லவும் வேண்டுமா? தரித்திரனுக்குச் சோற்றுக்குப் பஞ்சமே அன்றி, குஞ்சுகளுக்குப் பஞ்சமில்லை என்று கிராமத்தார் சொல்லிக் கொள்ளுவது உண்டு. அதுபோல சோமதேவ சாஸ்திரிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள், நான்கு பெண் குழந்தைகள். குழந்தைகள் பிறக்கப் பிறக்க சாஸ்திரிகளின் வயிற்றில் இடி விழுந்தது போலாயிற்று.

“மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்” என்று நொண்டித் தத்துவத்தைக் கொண்டித்தனமாய்ப் பேசிக் கொண்டிருந்தால், வாயில்லாக் குழந்தைகள் வளர வேண்டாமா? என்ன செய்வார் பாவம்? அவர் காலத்தில் சோமதேவ சாஸ்திரிகள் கற்ற வித்தைக்கும் அவர் தரித்திருந்த சாஸ்திரிகள் என்ற பட்டத்துக்கும் விலையுமில்லை, கெளரவமும் கிடையாது. அறிவு விற்பனைப் பொருளாய் வேண்டப்பட்டாலன்றி, அறிவாளி பிழைப்பது எங்ஙனம்? மேலும் சாஸ்திரிகள் படித்த படிப்பு பயன்படக்கூடாத காலம் வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிச்சயமாய் ஒரு புதுக் குழந்தையை வீட்டில் எதிர்பார்த்த சாஸ்திரிகள் வெளியே போய் சம்பாதிக்கும் இயல்பில்லாதவராகவும் ஆகிவிட்டார். எனவே சாஸ்திரப் பயிற்சியை மூட்டை கட்டி வைத்துவிட்டு, பக்கத்துக் கிராமங்களில் பிச்சை எடுக்கத் துணிந்து விட்டார். இவ்வாறு அவரது குடும்ப காலட்சேபம் நடைபெற்று வந்தது.

தான் கெட்டது போல தனது குழந்தைகளும் கெடலாகாது என்று எண்ணி, சாஸ்திரிகள் தனது பிள்ளைகளை வடமொழிக் கல்வியில் பழக்கவில்லை. நாகரிக முறையில் நவீன அறிவும், ஆராய்ச்சியும் பெறுதற் பொருட்டு தனது பையன்களை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பி வந்தார். அவ்வாறு ஆங்கிலம் கற்றவர்களில் ஒருவன் நாராயணன். இவன் சோமதேவ சாஸ்திரிகளின் நடுப்பிள்ளை. ஆங்கிலம் சிறிது கற்றுக்கொண்டான். அதிகமாகக் கற்றுக்கொள்ள அவனுடைய குடும்பத்தின் வறுமை இடங்கொடுக்கவில்லை. தான் பிழைப்புத் தேடினாலன்றி, தனது குடும்பம் அழிந்துபோகும் என்று அறிந்து கொண்ட நாராயணன் வேலைக்கு அலைந்தான். எந்த வேலைக்குத் தான் தகுதியுள்ளவன் என்று அவனுக்கே தெரியவில்லை. கூலிவேலை செய்வதற்கு உடம்பில் சக்தி போதாது. இவ்வாறு திகைத்துக் கொண்டிருக்கையில், காலவசத்தால் கமலாபுரம் என்ற ஊரில், பள்ளிக்கூட உபாத்தியாயர் வேலை அவனுக்குக் கிடைத்தது. கலாபுரத்துக்கும், புளியந்தோப்புக்கும் சுமார் நூறு மைல் இருக்கும். வண்டிப்பாதை சரியாக இருக்காது.

கமலாபுரம் புளியந்தோப்பைக் காட்டிலும் பெரிய ஊர். அந்த ஊரில் சுமார் முன்னூறு வீடுகளுக்கு அதிகமிருக்கும். தங்கள் ஊர் வளர்கிற ஊர் என்று கமலாபுரத்தார் சொல்லிக் கொள்ளுவார்கள். “அஷ்டமத்திலே சனி உட்கார்ந்து அனர்த்தங்களுக்குள்ளாகித் தேய்ந்து போகிற ஊர் போகட்டும். நம்ம ஊருக்குக் குருவின் ஒன்பதாம் மடத்து வீட்சிண்யம் (பார்வை) பூராவாக இருக்கிறது. அது வளர்ந்து கொண்டே போகும். அதற்கு ஒரு நாளும் அழிவு கிடையாது” என்று கமலாபுரத்து குட்டைச்சுவடி ஜோசியர் சொல்லுவார். அவர் சொல்லுவதற்கு ஏற்றாற்போல, ஊரில் பள்ளிக்கூடம் ஏற்பட்டது. இந்தப் பள்ளிக்கூடத்துக்குத்தான் நாராயணன் உபாத்தியாயராக வந்திருக்கிறான். முன்னிருந்த “அம்மை மூஞ்சி” வாத்தி இறந்து போகவே, பள்ளிக்குப் பின்னர், “பவுண்டு” (பட்டிமேச்சல் மேயும் கால்நடைகளை அடைத்து அபராதம் வாங்கும் இடம்) வந்தது. அதற்குப் பின்னர் பஞ்சாயத்து ஏற்பட்டது. பிறகு சிறு கோயில் தோன்ற, அதற்குத் திருவிழாவும் அமைக்கப் பெற்றது. மேலும் கமலாபுரம் நீலா நதிக்கரையில் உள்ளதாகையால், அதன் வெள்ளம் கமலாபுரத்தை வளம்பெறச் செய்து வந்தது.

பெற்றோர்களிடம் விடைபெற்றுக் கொண்டு நாராயணன் கமலாபுரத்துக்குக் கால்நடையிலே (நூறு மைலும்) வந்து சேர்ந்தான். வழியிலே எங்கே படுத்துறங்கினான், என்ன உண்டான் என்பது தெரியாது. கமலாபுரத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. ஒரு கனவானுடைய சிபாரிசு கடிதத்தின் மூலமாக.

அப்பொழுது நாராயணனுக்குப் பதினெட்டு வயது. “சொட்டவாளைக் குட்டி” மாதிரியிருப்பான். அவன் இடுப்பு குறுகி, மார்பு விரிந்திருக்கும். நல்ல அழகிய தோற்றமுள்ளவன். மாநிறத்தான். பதினெட்டு அடிக்கு மேல் பாய்ந்து தாண்டுவான். திவ்யமான தொண்டை, குழந்தைகளை அரவணைத்து அழைத்து வைத்து, தித்திக்கும்படி அவர்களுக்குச் சிறுகதைகள் சொல்லுவான். ஓட்டம் பிடித்தால் மூன்று மைல் வரையில் மூச்சுத் திணறாமல் ஓடுவான். புளியந்தோப்பில் ஆறாவது ஆழமான குளமாவது இல்லாமையால் அவனுக்கு நீந்தத் தெரியாது. அந்தக் குறையையும், கமலாபுரத்து நீலாநதியைக் கண்டபின்னர் தீர்த்துக் கொள்ளலாம் என்று சந்தோஷமடைந்தான்.

கால்நடையாக வழிப் பிரயாணம் செய்து களைத்துப் போன நிலைமையில், நாராயணன் பள்ளி நிர்வாகிப் பெரியார் முன்னிலையில் போய் நின்றான். “உட்காரு, அப்பா! யார் நீ" என்றார் பெரியார்.

“தங்கள் ஊர்ப் பள்ளிக்குத் தாங்கள் உபாத்தியாயராக நியமித்த நாராயணன்” என்றான்.

“வாத்தியாரே! வாரும் நல்ல வேளை! பழைய வாத்தியார் இறந்த ஒரு மாத காலமாக, இந்த ஊர்ப் பையன்கள் கழுதை மேய்க்கிறார்கள். நீர் வந்திருக்கும் லக்கினம் முகூர்த்தத்துக்கு எடுத்ததாகும். சுகஸ்ய சிக்கிரம் என்பது சுலோகம். ஆளைவிட்டுப் பள்ளிக்கூடத்தைக் காண்பிக்கச் சொல்லுகிறேன். அங்கே போயிரும். பையன்களை அழைத்து வருவார்கள். லக்கினம் தவறிப் போகாமல், பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து விடும்” என்றார்.

“சரி” என்றான் நாராயணன்.

ஆள் முன் செல்ல, நாராயணன் பின் நடந்தான். “கமலாபுரத்தில் எல்லோரும் இந்தப் பெரியவரைப் போலத்தான் இருப்பார்களோ? சாப்பிட்டாயா என்று மரியாதைக்குக்கூட அவர் கேட்க மறுத்துவிட்டாரே! வாத்தியார் வந்த சந்தோஷத்திலேயே, அவர் அதை மறந்து விட்டாரோ? என்னமோ, போகப் போகத் தெரிகிறது. பார்த்துக் கொள்வோம். வந்த முதல் நாளே வருந்துதல் கூடாது” என்று எண்ணிக் கொண்டே போனான் நாராயணன்.

“எந்த ஊர்” என்று வழியிலே ஒருவர் கேட்டார்.

“இந்த ஊருக்குப் புதிதாய் வந்திருக்கும் வாத்தியார் நான்” என்றான் நாராயணன்.

“சரிதான்” என்று அவர் போனார்.

நல்ல கமலாபுரம் என்று நினைத்தான் நாராயணன்.

“யார் ஐயா அங்கே போகிறது” என்று பின்னிருந்து ஒரு குரல் வந்தது.

“அயலூர்” என்றான் நாராயணன்.

“இந்த ஊர் இல்லை என்று எனக்குத் தெரியும். அதை நீர் சொல்ல வேண்டுமா? காலமே கெட்டு வருகின்றது. உம்மை நான் கேள்வி கேட்டது பிசகு, நீர் யாராயிருந்தால் எனக்கென்ன” என்று சொல்லிக்கொண்டே அவர் போனார்.

“வாத்தியார் வேலை இந்த ஊரில் அழகாயிருக்கும் போலிருக்கிறதே” என்று எண்ணிக்கொண்டே போகையில், “களைப்பாய்ப் போகிறீர்களே? சாப்பிடவில்லை போலிருக்கிறது. இந்தாருங்கள்; இந்தப் பழங்களைச் சாப்பிடுங்கள்” என்று ஒரு சிறு பெண் சொன்னாள். வாய் பேசாமல், நாராயணன் அவைகளை வாங்கிக் கொண்டான்.

“நான் இந்த ஊர் பள்ளிக்கூடத்தின் புது வாத்தியார். அங்கே நீ வருவாயானால், உன் பழங்களுக்குக் காசு கொடுக்கிறேன்” என்றான் நாராயணன். “சும்மா போங்கள், சுவாமி” என்றாள் அந்தப் பெண்.

அக்கினி திராவகத்தைப் போல கொதிக்கும் மணல் பரந்த பாலைவனத்தில் நீர்ச்சுனையைப் பிரயாணி கண்டால், அவன் மனம் எவ்வாறு இருக்கும்? அதைப்போல நாராயணன் மனது துள்ளிக் குதித்தது.

நாராயணன் (அவன் பள்ளி வாத்தியாராக நியமிக்கப்பட்ட சிறிது காலத்திற்கு முன்னரிலிருந்து தன்னை நாராயண சர்மா என்று அழைத்துக்கொண்டான்.) பள்ளியை அடைந்தான். வந்த ஆள் பள்ளியின் கதவைத் திறந்தான். பள்ளியாவதற்கு முன் அது குடியிருப்பு வீடாக இருந்தது. வீடு, திண்ணை எங்கே பார்த்தாலும் புழுதிமயமாக இருந்தது.

“நான் போய் வருகிறேன்” என்றான் கூடவந்த ஆள். அவனும் போய்விட்டான்.

“இவ்வளவு புழுதியில் எப்படி பள்ளியைத் துவக்குகிறது” என்று எண்ணி, துடைப்பத்திற்காக, வீடு முழுவதும் தேடி அலைந்தான். உத்தரக் கட்டையில் ஒடிந்த விளக்குமாறு ஒன்றைக் கண்டான். அதைச் சீர்படுத்தி, பெருக்க ஆரம்பித்தான். இதற்குள் தத்தம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, தகப்பன்மார்கள் பலர் அங்கே வந்தார்கள். நிர்வாகிப் பெரியவரும் அங்கே வந்து சேர்ந்தார்.

“என்ன வாத்தியாரே! உமக்குச் சமயம், பொழுது தெரியவில்லையே! கூட்டுகிற வேலையை நாளைக் வைத்துக்கொள்ளக் கூடாதா? அதற்கு லக்கினம் தவறிப் போய்விடவில்லையே! குப்பை கிடந்தால் படிப்பு வராதா” என்று பெரியவர் பிரசங்கம் செய்தார்.

நாராயண சர்மா துடைப்பத்தைச் சிறிது தூரத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு, கைக்கூட துடைத்துக் கொள்ளாமல் வந்து சேர்ந்தான்.

“என்ன அய்யா! கையிலே முழ நீளக் குப்பையை வைத்துக்கொண்டு, கையைச் சுத்தம் செய்து கொள்ளாமல் சொல்லிக் கொடுக்க வந்து விட்டீரே” என்றார் பெரியவர். கைகளைத் தனது உடையின் பின்புறத்தில் துடைத்துக் கொண்டான் நாராயண சர்மா. தரித்திரத்திற்கும் அடிமைத்தனத்துக்கும் எவ்வளவு நெருங்கிய சம்பந்தம் உண்டு என்று அவனுக்கு அப்பொழுது தெரிய வந்தது. குரங்காட்டி, குரங்கை “லங்காபட்டினம் தாண்டராயா” எனக்கேட்டு, அதைத் தாண்டச் செய்யும் வீதி வினோதம் அவனுக்கு ஞாபகம் வந்தது. லக்கினம் தவறிவிடாமல், அன்றைக்கு ஒருவாறு பாடம் முடிந்துவிட்டது. பெற்றோர்களும் பையன்களும் கலைந்து போனார்கள்.

“அவஸ்தப்படாதேயும், உமக்கு அரிசி அனுப்புகிறோம் இந்தப் பள்ளியின் அடுத்த பக்கத்தில் சமைத்துக் கொள்ள இடமிருக்கிறது” என்று சொல்லிவிட்டு நிர்வாகிப் பெரியார் அகன்றுவிட்டார்.

பள்ளிக்கூட வீட்டைச் சுற்றிப் பார்த்தான் நாராயணன். பக்கத்தில் ஒரு அறையிருந்தது. அதற்கும், வெளி வீதிக்கும் தனி வழியிருந்தது. அடுப்புக்கட்டிகள் இரண்டு இருந்தன. உடைந்ததும், உடையாததுமாக நாலைந்து மண்பாண்டங்கள் இருந்தன. பள்ளி ஊர்க்கோடியில் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். பள்ளிக்கூட கட்டிடத்துக்குப் பக்கத்தில் நடைபாதையின் ஒதுக்குப்புறத்தில் ஒரு கிணற்றைக் கண்டான். அந்தக் கிணறு ஊர் தண்ணிர்ப் பந்தலுக்காக ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிந்து கொண்டான்.

பள்ளிக்கும் நீலாநதிக்கும் இரண்டு பர்லாங்கு தூரம் இருக்கும். தண்ணீர் பந்தல் வாளியை எடுத்து, கிணற்றினின்றும் தண்ணீர் இறைத்து, தனது உடம்பைக் கழுவி சுத்தம் செய்து கொண்டான். பிறகு கையில் வைத்திருந்த பழங்களைத் தின்று ஏப்பமும் விட்டான். ஆனால் பள்ளியில் குவிந்து கிடந்த குப்பை மட்டும் அவன் கண்ணை உறுத்திற்று.

தண்ணீர்ப்பந்தல் துடைப்பத்தைக் கடன் வாங்கிக்கொண்டு பள்ளியில் நுழைந்தான். இதற்குள் அரிசி, பருப்பு, கொஞ்சம் எண்ணெய், மிளகாய், சிறிது மோர், சிறிது நெய்-இத்தனையும் வந்து சேர்ந்தன. ஆனால் எதைக்கொண்டு அவைகளைச் சமைப்பது? விறகு இல்லை; பாத்திரங்கள் கிடையாது. கையால் தொட்டதும் பதார்த்தங்களைப் பக்குவமாய்ச் சமைத்து விடும் சக்தி நளனுக்கு இருந்ததைப்போல, நாராயணனுக்கு இல்லை. சாமான்கள் கொண்டு வந்தவர்கள் அவைகளைச் சாண் குப்பையிலே வைத்துவிட்டு, கூடையைப் பின்னால் அனுப்புங்கள் என்று உத்தரவிட்டுச் சென்றார்கள்.

பழம் சாப்பிடுவதற்கு முன், களைப்பையறியாத நாராயணனுக்குப் பசியால் இப்பொழுது காது அடைத்தது. தனது குடும்பத்தாரை நினைத்து, தனது தரித்திரத்தை நினைத்து, தனது தற்போதைய கமலாபுரத்து நிலைமையை நினைத்து, “கோ” வென்று அழுதான் நாராயண சர்மா. அப்பொழுது பிற்பகல் இருபது நாழிகையிருக்கும். கோடைகாலம் களைப்பும், கண்ணீரும் சேர்ந்தவுடன், அவனையறியாமல் அவன் குப்பையிலேயே படுத்துக்கொண்டு. தூங்கிவிட்டான். எவ்வளவு காலம் அவன் இப்படித் துங்கினான் என்பது அவனுக்குத் தெரியாது; கண்விழித்துப் பார்த்தான். பள்ளிக்கூடத்து வாயிற்படியண்டை சிறிய பெண் ஒருத்தி உட்கார்ந்திருந்ததைக் கண்டான். தனக்குப் பழம் கொடுத்த பெண் என அவனுக்குத் தெரிந்தது.

“சுவாமி! நெடுநேரம் தூங்கிப் போனீர்களே! பொழுது போக இன்னும் இரண்டு நாழிகைதானே இருக்கிறது? நான் இங்கே வந்தேன். எல்லாம் திறந்திருந்தது. நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள். கூடைச் சாமான்கள், பள்ளிக்கூடச் சாமான்களைப் பார்த்துக் கொண்டு இங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன். பொழுது போயிற்றே, எழுப்பலாமா என்று நினைத்தேன். அசதி என்று சும்மாயிருந்து விட்டேன். நீங்கள் ஆகாரத்திற்கு என்ன வழி செய்தீர்கள்” என்றாள் அந்தப் பெண்.

நாராயண சர்மாவுக்கு என்ன சொல்லுவது என்று ஒன்றுமே தெரியவில்லை. அந்தப் பெண்ணில் செயலைக் கண்டு, அவன் மனம் குழம்பிப் போனான்.

“எங்கள் வீட்டில் மோர் இருக்கிறது; கொண்டு வரட்டுமா” என்றாள். -

“நீ யார்” என்றான்.

“என் பெயர் வீரம்மாள். நான் வண்ணார வீடு” என்றாள்.

“வீரம்மா! நீ சொன்னதற்கு ரொம்ப சந்தோஷம். ஆபத்துக்காலத்தில், அந்தணர்கள் வேறு ஜாதியாரிடமிருந்து உப்புப் போடாத மோர் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்றிருக்கிறது. நீ கொடுக்கும் எதையும் தட்ட எனக்கு இஷ்டமில்லை. ஆண்டவன் உன்னைக் காப்பாற்றவேண்டும்” என்றான் சர்மா.

“சுவாமி! ஆண்டவனைக் கூப்பிடாதேயுங்கள். எங்கள் வீட்டில் நாங்கள் பத்துக் குழந்தைகள் பிறந்தோம். பாவி நான் ஒண்டிதான் பாக்கி. அந்த ஆண்டவனுக்கு எங்கள் குடும்பத்திலே இரக்கம் கிடையாது. ஊரைச் சுற்றி வரும் போதெல்லாம் அவனுக்குக் கண் இருக்கிறது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலே, அவன் கண் அடைத்துப் போகிறது. எங்கள் அம்மா, அப்பா அழுகிறது.

'ஆண்டவனுக்குத் தெரிந்தால், அவன் கம்மாயிருப்பானா?' நீங்கள் எங்கள் குடும்பத்தைப் பற்றி கவலைப்பட்டால், அது சாத்தியப்படாது. இப்பொழுது நீங்கள் ஆகாரத்திற்கு என்ன வழி செய்யப் போகிறீர்கள்” என்றாள் வீரம்மாள்.

“அதுதான் தெரியவில்லை. பாத்திரங்கள் இல்லை; விறகு இல்லை. வீடு புழுதிமயமாய் இருக்கிறது. கடைசியாக, எனக்குச் சமைக்கத் தெரியாது. ஆனால் பசியோ காதடைக்கிறது. எங்கள் ஊரிலிருந்து இங்கு வந்து சேர, நூறு மைல் நடந்து வந்து சேர்ந்தேன். வழியிலே சரியாக சாப்பாடு கிடையாது” என்றான். சொல்லச் சொல்ல, அவன் கண்களில் நீர் பெருகிற்று.

“ஒன்று சொல்லுகிறேன். வருத்தப்படாமலிருந்தால் சொல்லுகிறேன். என்னிடம் நீங்கள் கோபங் கொள்ளலாகாது. எங்கள் வீட்டிலிருந்து விறகும் சிறு வெங்கலப்பானையும் கொண்டு வந்து, நான் சோறு சமைத்து விடுகிறேன். இன்றைக்கு மோரை ஊற்றிச் சாப்பிட்டு விடுங்கள். நாளைக்கு நன்றாக நீங்களே சமைத்துக் கொள்ளலாம்” என்றாள்.

“நீ சொன்னதில் எனக்கு வருத்தமில்லை, கோபமுமில்லை; ஆனால் சாத்தியப்படாத சங்கதி. நான் அந்தணன். உன்னைப் போல உத்தமப் பெண் சமைத்துச் சாப்பிடுவதை என் மனம் ஏற்றாலும், ஊரார் சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் திட்டுவார்கள். என்னை ஊரைவிட்டுத் துரத்தி விடுவார்கள். வயிற்றுப் பிழைப்பு தேடிவந்த என் கதி என்னவாகும்? என்னை நம்பிக்கொண்டிருக்கிற என் குடும்பத்தின் கதி என்னவாகும்? நீ புத்திசாலி எனத் தோன்றுகிறது. நினைத்துப் பார்” என்றான் வாத்தி.

“சுவாமி! சுவரை வைத்துத் தானே சித்திரம் எழுதவேண்டும்? நீங்கள் பட்டினி கிடந்து இறந்து போனால், உங்கள் கதி என்னவாகும்? உங்கள் குடும்பத்தின் கதி என்னவாகும்? நினைத்துப் பாருங்கள்” என்றாள் பெண்.

“நீ சொல்லுவது சரிதான். நான் ஒப்புக்கொள்ளுகிறேன். நீ சமைத்து நான் சாப்பிட்டேன் என்பதை என் தகப்பனார், தாயார் கேள்விப்பட்டால், அவர்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு, பிராணனை விட்டு விடுவார்கள். என் தேகம் அவர்கள் எனக்குக் கொடுத்த தேகமாகும் ஒரு வழி சொல்லுகிறேன் கேள்; நீ சொன்னபடி கொண்டு வா. நீ இங்கேயே உட்கார்ந்து கொண்டு நீ எனக்குச் சமைக்கும் வித்தையைச் சொல்லிக் கொடு. நான் சமைக்கிறேன். அவ்வளவு தான். வைதீகத்தை, ஜாதியை முறிக்காமல், என்னால் செய்ய முடிந்தது” என்றான் நாராயண சர்மா.

பேச்சை வளர்க்க மனமில்லாமல், வீரம்மாள் வீட்டிலிருந்து சாமான்களைக் கொண்டு வந்தாள். சமையல் அறையை ஒருவாறு சுத்தம் செய்து, அடுப்புமூட்டி உலையை வைத்தான் சர்மா. அடுப்பை எரியவிடுகிற ரகசியம் அவனுக்குத் தெரியவில்லை. அடுப்பு முழுவதும் ஒரே புகைமூட்டமாக இருந்தது. இதனிடையே, துடைப்பத்தைக் கையிலெடுத்து, ஒரு வினாடியில், பள்ளி முழுமையையும் வீரம்மாள் சுத்தமாகக் கூட்டி, குப்பையை வெளியே கொண்டுபோய் எரிந்துவிட்டாள். வீரம்மாள் என்ன சொல்லிக்கொடுத்தும், பதம் பார்த்து வடிக்கும் வழக்கம் தெரியாமல், சோற்றைக் களியாக்கிவிட்டான் சர்மா. அந்தக் களியிலே மேரை ஊற்றிச் சாப்பிட்டு, அன்றிரவைப் போக்கினான். பசியிலே அந்தக் களியும் அமுதமாய் இருந்தது என்று சொல்லவும் வேண்டுமா? ஏழைக்கு ஒரு நாள் ஒரு வருஷமாகக் கழியும். பொருள் உள்ளவனுக்கு வருஷம், நிமிஷத்தில் பறந்துபோகும்.

மறுநாள் காலையில் குயவனிடம் கடனாக, சமையலுக்கு வேண்டிய மண்பாத்திரங்களைச் சர்மா வாங்கிக்கொண்டான். வீரம்மாளின் உதவியால் குழம்பு வைத்தான். குழம்பிலே என்னன்ன சாமான்களோ போட்டுப் பார்த்தான். அதிலே ருசி மட்டும் இல்லை. பழகினால் எல்லாம் தானாக வந்துவிடும் என்று எண்ணிக் கொண்டான். தினந்தோறும் வீரம்மாள் பள்ளிக்கு வந்து, அதைக்கூட்டி மெழுகி சுத்தம் செய்வாள். கூலிவேலையன்றல்லவா? எனவே, அதைக் குறைகூற, யாரால் முடியும்? ஆனால் சமையல் பாண்டங்களைச் சுத்தம்செய்ய, சர்மா அவளுக்கு அனுமதி கொடுப்பதில்லை. ஏன் என்று அவள் கேட்டாள், ஜாதி என்று சொல்லி விழிப்பான்.

பள்ளிக்கூடத்தில் சுமார் இருபத்தைந்து பையன்களும், ஒரு சிறுபெண்ணும் படித்து வந்தார்கள். ஏன் ஒரு பெண் மட்டும் என்று கேட்கலாம். அந்த ஒரு பெண் வந்ததுகூட ரொம்ப நிர்ப்பந்தத்தினாலே, அந்தப் பெண்ணின் தகப்பனாருக்குத் தன் பெண் படிக்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாயிருந்ததால், அவர் மட்டும் தனது குழந்தையை அனுப்பி வைத்தார். ஊராருக்கு இது பிடிக்காத சங்கதியாகும்; என்றாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். அந்தத் தனி மனிதனுடைய பிடிவாதத்தையும், பணத்தையும் கருதி.

சர்மாவின் சம்பளம் என்ன? மாதம் ஐந்து ரூபாயும் அமாவாசை நாளன்றைக்கு பையனுக்குக் கால் மரைக்கால் வீதம் அரிசியும். ஊரார் எவரும் விரும்பாத் மரக்கட்டை, சர்மாவுக்கு, விறகாக அனுப்பப்பெறும். புதுப்பிள்ளை வந்து சேர்ந்தால் ஒரு தேங்காய், பாக்கு வெற்றிலை, ஒரு அனா குருபாத காணிக்கை நாராயண சர்மாவுக்கு வரும். இருபத்தைந்து குழந்தைகளும் ஒரே வகுப்பல்ல. அட்சராப்பியாசம் முதல் கூட்டிப் படிக்கத் தெரிந்த பையன்கள் வரையில் இருந்தார்கள். இவர்களைக் கட்டிமேய்க்கும் கஷ்டம் பள்ளி வாத்திமார்கள் அறிவார்களேயொழிய, பெற்றோர்களுக்கு ஒரு நாளும் தெரியப்போவதில்லை. வீட்டிலே குறும்பு செய்வதால், பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு என்று கம்பீரமாகத் தகப்பன் சொல்லிவிடுவான்; ஆனால் பள்ளி வாத்தியின் கஷ்டத்தை அவன் அறிவானா? “என் பையனுக்குச் சரியாய்ப் படிப்பு வரவில்லை. வாத்தியாரின் கவனிப்புப் போதாது” என்று குறைகூற மட்டும் அவனுக்குத் தெரியும்.

ஆனால், பச்சைக்குழந்தைகளைக் கண்ணாறக்கண்ட பிறகு, நாராயண சர்மா தனது கஷ்டமொன்றையும் நினைத்துக் கொண்டதேயில்லை. சமையல் நேரத்தைக் கூட மறந்துவிடுவான். குழந்தைகளைத் தெய்வங்களாக அவன் கொண்டாடினான். நாராயண சர்மாவின் அதிருஷ்டத்தால், அவன் கமலாபுரத்துக்கு வந்த இரண்டொரு தினங்களுக்குள் அமாவாசையும் வந்தது. அந்த மாதச் சாப்பாட்டு அரிசியும் கூட வந்து சேர்ந்தது. மாதம் முடிந்தபின், சம்பளமும் கைக்கு எட்டிற்று. ரொக்க ரூபாய் ஐந்து ரூபாயைக் கையில் பார்த்தவுடன், அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஐந்து மைல் தூரத்துக்கு அப்பாலுள்ள தபாலாபீசுக்கு ஓடி, நான்கு ரூபாயைத் தனது தகப்பனார் பெயருக்கு மணியார்டர் செய்தான். அன்று முழுவதும் அவன் அடைந்த களிப்பைச் சொல்ல முடியாது.

ஆறு வடியக்கொல்லும், பஞ்சம் தெளியக்கொல்லும் என்று உலகத்தார் சொல்லுவார்கள். அதுபோல, சோமதேவ சாஸ்திரிகள் நாராயணன் அனுப்பிய பணத்தைக் கையிலெடுத்து கனம்பார்த்து களிப்படையுங் காலத்தில், இரண்டு தடவை சொடுக்கி இழுத்து இறந்துபோனார். நாராயண சர்மாவுக்குக் கடிதமூலமாக சேதிகிடைத்தது. விம்மி விம்மி அழுதான். வீரம்மாளிடம் சொன்னான். ஊராரின் உத்தரவைப் பெற்று, தனது தகப்பனாரின் உத்தரக்கிரியைகளின் பொருட்டு புளியந்தோப்புக்குச் சென்றான். ஏழைக் குடும்பத்தின் மூலபுருஷன் இறந்துபோனால், அந்த விபரீத நிகழ்ச்சியின் பலனை யாரால் எழுத்தில் எழுதமுடியும்? வாயால் சொல்ல முடியும்?

சொல்லுவதென்ன? சோமதேவ சாஸ்திரிகளின் உத்தரக் கிரியைகள் நடைபெற்றன. குடும்பத்துக்கு ஐம்பது ரூபாய் கடன் ஏற்பட்டது. கடன் பொறுப்பை நாராயணன் ஏற்றுக்கொண்டு, கமலாபுரத்துக்குத் திரும்பி வ்ந்தான். வந்ததும் வீரம்மாள் அவனை விசாரித்தாள்.

“இரண்டு வித நஷ்டங்கள் எனக்கு உண்டாகி விட்டன. தகப்பனாரைச் சுகத்தில் வைத்துக் களிக்க வேண்டுமென எண்ணின எனக்கு அவர் இறந்தது ஒரு நஷ்டம். எனக்குச் சந்தோஷம் எது? அவருக்குப் பணிவிடை செய்து பாதுகாக்க அவர் இல்லையே! அவர் இறந்ததனால் எனக்குக் கடன் ஏற்பட்டது. மற்றொரு நஷ்டம்” என்றான்.

“கவலைப்பட்டுச் செய்வதென்ன? கடனைத் தீர்க்கிற வழியைப் பற்றியல்லவா இனிமேல் யோசிக்க வேண்டும்? கடனைத் தீர்த்து நல்ல பெயரோடு வெளியே வரவேண்டும்; அதுதான் கவலை” என்றாள் வீரம்மாள்.

“உன் யோசனையை மெச்சினேன்” என்றான் நாராயண சர்மா.

அந்த மாதம் முதல் தன் தாய்க்கு மூன்று ரூபாயும் கடனுக்கு இரண்டு ரூபாயும் அனுப்பி வந்தான். அமாவாசை அரிசி அவன் சாப்பாட்டுக்குப் பாத காணிக்கை பணம் மணியார்டர் கூலிக்கு. இவ்வாறு இரண்டு ஆண்டுகள் கழிந்தன. ஆனால் கடன் தீர்ந்தபாடில்லை. இன்னும் இருபது ரூபாய்க்கு அதிகம், பாக்கி என்று கடன் கொடுத்தவன் சர்மாவுக்கு எழுதிவிட்டான். இப்பொழுது சர்மாவுக்கு வயது இருபது. வீரம்மாளுக்கு பதினான்கு. ஊரிலே சர்மாவுக்கு நல்ல மதிப்பு. பிள்ளைகளுக்கு அவனிடம் ரொம்பப் பிரியம். இந்தச் சமயத்தில் ஊரார் தபால் அதிகாரிகளுக்கு மனுச்செய்து கொண்டார்கள். கமலாபுரத்தில் ஒரு கிளை தபாலாபீஸ் ஸ்தாபிக்கப்படுதல் வேண்டும் என்பது மனுவின் கோரிக்கை. மனுவை விசாரிக்கத் தபால் இன்ஸ்பெக்டர் வந்தார். ஊரார் அவரை மரியாதை செய்து வரவேற்றார்கள். சர்மாவும் அங்கிருந்தான். தபாலாபீஸ் வைப்பது என முடிவு செய்யப்பட்டு, வேலைக்கு சர்மாவை நியமிப்பது உசிதம் என வேண்டிக் கொள்ளப்பட்டது.

“அவன் யார், எங்கே அவன்” என்றார் இன்ஸ்பெக்டர். சர்மா அவர் முன்னிலையில் வந்து நின்றான்.

“நீ பிராமணனா? உன்னைப் பார்த்தால் பையன் போலிருக்கிறதே? தபாலாபீஸ் பணம் புழங்குகிற இடமாயிற்றே? கையரிக்கக் கூடாதே! பிராமணனா” என்றார் இனஸ்பெக்டர்.

“நல்ல பிள்ளை! வேண்டுமானால், அவருக்காக நான் ஜாமீன் நிற்கிறேன்” என்றார் பள்ளி நிர்வாகிப் பெரியார்.

விஷயம் முடிந்து, தபாலாபீஸ் உத்தியோக மூலமாய்க் கூடுதலாக, இன்னொரு ஐந்து ரூபாய் சர்மாவுக்கு கிடைத்தது. இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்படியாக, அவனுக்குக் காலமும் வேலையும் அமைந்தன. அன்றைய தபாலிலேயே தனது தாய்க்கு இந்த சந்தோஷச் செய்தியையும் எழுதி அனுப்பினான். அன்றைய தினம் வழக்கம் போல் வீரம்மாள் வந்தாள்.

“வீரம்மா! சங்கதி கேட்கவில்லையே! நம்ம ஊருக்குத் தபாலாபீஸ் வரப்போகிறது. நான் அதற்கு அதிகாரி. அதற்காக எனக்கு ஐந்து ரூபாய் சம்பளம். இரண்டு சம்பளமும் சேர்ந்து எனக்குப் பத்து ரூபாய் கிடைக்கும். இனிமேல் நான் பணக்காரனில்லையா” என்றான் சர்மா.

“அப்பா! நல்ல வேளை! இனிமேல் உங்களுக்கு கடன் தொந்திரவு இருக்காது. ரொம்ப சந்தோஷம். சுவாமி!” என்றாள்.

“வீரம்மா! நீ புத்திசாலி. பார்த்தாயா, அந்தப் பாழான் கடனை மறந்து விட்டேனே! உண்மை; இனிமேல் கடன் இருக்காது. இனிமேல் உன் பாடங்களை நீயே படித்துக்கொள்ள வேண்டும். தபால் வேலையும் சேர்ந்தால் சமையல் செய்யக்கூட எனக்கு நேரமிராது. ஆகையால் உன் சந்தேகத்தை நீ கேட்டுக் கொள். நீ தனியாக எதையும் கற்றுக் கொள்ளக் கூடிய நிலமைக்கு வந்து விட்டாய்” என்றான் நாராயணன். அவள் ஒன்றும் சொல்லாமலிருந்தாள். “பேசாமலிருக்கிறாயே” என வினவினான்.

“ஒன்றுமில்லை; நான் சொல்வதைக்கேட்பதாயிருந்தால், சொல்லுகிறேன், வீணே வாயிழக்க இஷ்டமில்லை” என்றாள்.

“எனக்கு இது சந்தோஷ சமயம். நீ எதைக் கேட்டாலும் தருகிறேன்" என்றான்.

“உங்களுக்கு இனிமேல், அதிகமாக ஓய்வு நேர மிருக்காது. உங்கள் துணிகளைத் தோய்த்துக் கொண்டு வருகிறேன், புஸ்தகங்களையும் நானே படித்துக் கொள்கிறேன்."

“நான் அயர்ந்து போன சமயம் பார்த்து, என்னை வார்த்தைகளால் கட்டுப்படுத்திவிட்டாய். நான் சொல் தவற முடியாது. உன்னிஷ்டம் போல் செய்” என்றான் சர்மா. வீரம்மாள் மிகுதியும் சந்தோஷமடைந்தாள்.

மேலே கூறப்பட்டது நடந்து ஒரு வாரமிருக்கும், நாராயண சர்மா முகவாட்டத்துடனிருந்தான். அந்தச் சமயம் வீரம்மாள் வந்தாள்.

“சுவாமி! ஏதோ வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! எனக்குச் சொல்லலாகாதா? தாயாருக்கு உடம்பு அசௌகரியமா? அல்லது கடனுக்காக அந்த ஆளிடமிருந்து கடிதம் வந்ததா” எனக்கேட்டாள்.

“உன்னிடத்தில் சொல்லக் கூடாதது என் ஆயுளில் ஒன்றுமே இருக்காது. உன்னைக் காட்டிலும் உலகத்தில் எனக்கு வேறு உதவி கிடையாது” என்று சொல்லும் பொழுதே, “சுவாமி! ஆண்பிள்ளைகள் ஒரு நாளும் மனங்கலங்கக் கூடாது. நீங்கள் கண் கலங்கினால், நாங்கள் போகிற வழி என்ன? எதற்கும் கவலைப்படலாகாது என்று என் தகப்பனார் அடிக்கடி எங்களுக்குச் சொல்லுவார். உங்களுக்கு இப்பொழுது என்ன வந்துவிட்டது. தபாலாபீஸில் ஏதேனும் திருட்டுப் போய் விட்டதா" என்று கேட்டாள்.

“ஒரு கடிதம் என் தாயாரிடமிருந்து வந்திருக்கிறது. அதைப் படித்தேன், வருத்தமுண்டாயிற்று. அதை நீ படித்துப் பார்" என்று கடிதத்தைக் கொடுத்தான். நீட்டின. கடிதத்தை வீரம்மாள் வாங்கிக் கொண்டு, கொஞ்சம் தடவி, ஆள! சரிப்படுத்திக் கொண்டு, பின்வருமாறு படித்தாள்:

சிரஞ்சீவி நாராயணனுக்கு ஆசீர்வாதம். சகல மங்களங்களும் உண்டாவதாக! நீ எழுதிய கடிதத்தை உன் தங்கை ஞானாம்பாள் எனக்குப் படித்துக் காண்பித்தாள். ரொம்ப சந்தோஷமடைந்தேன். எல்லாம் கடவுளின் கிருபை. அவன் தான் நம்ம குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும். ஞானாம்பாளுக்கு இப்பொழுது பதினான்கு வயது (இந்த மாதத்தோடு) பூர்த்தியாகிற சங்கதி உனக்கு ஞாபகமிருக்கும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அவளுக்குள். கலியாணம் பண்ணியாக வேண்டும். இப்பொழுதே, ஊரார் கண்டதெல்லாம் பேசுகிறார்கள். வைதீகாள் விட்டுப் பெண்ணைப் பதினெட்டு வயதானாலும் கலியாணம் செய்து கொடுக்கலாம். அவர்களுக்கு சாஸ்திரமேது? அவர்களுக்கு அவர்கள் தான் சாஸ்திரம் என்று வம்பு பேசுகிறார்கள். உலை வாயை அடைத்துவிட முடியுமா? யோசித்துப் பார். உன் தமையனுக்குக் கலியாணமாகா விட்டாலும், உனக்கு இந்த வருஷம் எப்படியாவது தன் பெண்ணைக் கொடுத்துவிட வேண்டுமென்று உன் சின்ன மாமா கணபதி சாஸ்திரி ஒரு காலில் நிற்கிறான். நீயும் ஒண்டியாய் எத்தனை நாள் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியும்? இரண்டு கலியாணங்களும் இந்த வருஷம் கட்டாயம் நடந்தாக வேண்டும். இரண்டுக்குமாக, ஐந்நூறு ரூபாய் பிடிக்கும். உனக்குத் தெரிந்தவிடத்திலேயே, கமலாபுரத்தில் கடனுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, எனக்கு உடனே பதில் எழுது. கலியாண காரியங்கள் சீக்கிரம் ஆக வேண்டும். எல்லாவற்றிற்கும் உடனே பதில் எழுது. நாங்களெல்லோரும் இங்கே சௌக்கியமாய் இருக்கிறோம்.”

வீரம்மாள் கடிதத்தைப் படித்து முடித்தாள். பேசாமலிருந்தாள். அவள் முகத்தில் ஏதோ வாட்டம் ஏற்பட்டாற்போல நாராயணனுக்குத் தோன்றிற்று.

“என்ன. வீரம்மா பேசாமலிருக்கிறாயே" என்றான் நாராயணன்.

“அம்மா எழுதியிருக்கிறது சரிதானே! உங்கள் தங்கைக்குக் கல்யாணம் ஆக வேண்டும்! பிராமண வீட்டில் அதை அதிக காலம் நிறுத்தி வைக்க முடியாது. எங்கள் வீடா பிராமணர் வீடு? அம்மா சொல்லுகிறது போல, நீங்களும் எவ்வளவு காலம் ஒண்டியாயிருக்கிறது? நீங்கள் கடனைப் பற்றிக் கவலைப்படுகிறாப் போலிருக்கிறது. கடனைப் பற்றி நினைத்தால், கல்யாணம் போகிற வழி எந்த வழி?” என்று கேட்டாள் வீரம்மாள்.

ஆனால் அவளுக்கு வழக்கமாயுள்ள உற்சாகத்துடன் அவள் பேசவில்லையென்று அவளுடைய குரலினின்றும் தெரிந்ததாக நாராயணனுக்குத் தோன்றிற்று. "கடன் கவலை எனக்கு இப்பொழுது போய்விட்டது.. கடன் வாங்கிக் கடனைத் தீர்த்தவன், பின்னும் கடன் வாங்கப் பின்னடைய மாட்டான். எனக்கு இப்பொழுது வந்திருப்பது கல்யாணக் கவலை” என்றான்.

“உங்கள் தங்கைக்குக் கல்யாணம் செய்யாமல் சும்மாயிருக்க முடியுமா? நீங்களும் கலியாணம் செய்து கொள்ள வேண்டிய காலம் தான்” என்றாள் வீரம்மாள்.

“என் தங்கைக்குக், கல்யாணம் செய்துவிட வேண்டும். அதை நான் தடுத்துப் பேசவில்லை. எனக்கு எதற்குக் கல்-” என்று முடிப்பதற்குள் நிறுத்திக் கொண்டான்.

“ஏன் முடிக்கவில்லை? விழுங்கிவிட்டீர்களே” என்றாள் வீரம்மாள்.

“ஒன்றுமில்லை" என்றான் சர்மா.

“எதையோ மறைக்கப் பார்க்கிறீர்கள்? என்னைத் தவிர உலகத்தில் உங்களுக்கு வேறு உதவி கிடையாது என்றீர்களே” என்று வீரம்மாள் கேட்டாள்.

“நான் சொல்லாததற்கு அதுதான் காரணம்” என்றான் நாராயண சர்மா. பிறகு பேச்சும் நின்றுவிட்டது. வீரம்மாளும் வீடு போய்ச் சேர்ந்தாள். அன்றிரவே சர்மாவுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது.

காலையில் வந்தாள் வீரம்மாள். சர்மா காய்ச்சலாகக் கிடப்பதைக் கண்டாள்.

“வீரம்மா! எனக்குக் காய்ச்சல், சுரம் எப்படியிருக்கிறது என்று உடம்பைத் தொட்டுப் பார்” என்றான்.

இதைக் கேட்டவுடன், வீரம்மாளின் உடம்பு தூக்கிப்போட்டது. ஒன்றும் பேசாமல், சர்மாவின் நெற்றியையும், மார்பையும் தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் அதிகமில்லை என்றாள்.

“வாய் கசப்பாயிருக்கிறது” என்றான் சர்மா.

வீரம்மாளுக்குப் புதியதொரு தைரியம் உண்டாயிற்று. “நிறையச் சர்க்கரை போட்டு, கஞ்சி வைக்கிறேன். குடியுங்கள், வாய்க் கசப்பு போய்விடும்” என்றாள்.

சிறிதுநேரம் பொறுத்து, “சரி” என்றான் சர்மா. சர்க்கரை உண்டா என்று கேட்டான். இல்லை எனவே, வீட்டுக்கு ஓடி, நொடிப்பொழுதில் சர்க்கரை கொணர்ந்து, கஞ்சி வைத்துக் கொடுத்தாள். குடித்தான் சர்மா. “மயக்கமாய் வருகிறது, தலையைப் பிடித்துக்கொள்” என்றான், தன் துடையில் அவன் தலையை வைத்து, அதை இரு கைகளாலும் அழுத்தி, ஆனால் வலிக்காமல் பிடித்துக் கொண்டாள் வீரம்மாள்.

“இதமாயிருக்கிறது” என்றான் சர்மா.

“அப்படியே தூங்குங்கள்” என்றாள் வீரம்மாள். தூங்கிப் போனான். சிறிது நேரத்திற்குள்ளாகவே விழித்துக்கொண்டு, “உன்னைத் தொந்தரவு செய்வது பாவம்; தலையணையில் தலைவைத்துப் படுத்துக் கொள்ளுகிறேன்” எனக்கூறி, தலையை அவள் துடையினின்றும் எடுத்துவிட்டான். அன்று பள்ளிக்கூடம் கிடையாது. இரண்டு, மூன்று நாட்களுக்குள் அவன் காய்ச்சல் குணமாய்ப் போயிற்று.

கமலாபுரம் பள்ளி, சர்க்கார் பள்ளியாக மாறி, ஒரு வருஷமாயிற்று. ஆனால் சம்பள உயர்வுமட்டும் சர்மாவுக்கு கிடையாது. திடீரென்று ஒருநாள் அவனுக்கு ஓர் உத்தரவு ஒருவர் மூலமாக வந்தது. உத்தரவு பின் வருமாறு: “கமலாபுரம் ஆரம்பப்பள்ளி உபாத்தியாயர் நாராயண சர்மாவுக்கு: நீர் இருபத்துநான்கு மணிநேரத்துக்குள் உம்முடைய வேலையை நமது ஆபீஸ் உத்தரவை உமக்குக் கொண்டு வந்து கொடுப்பவரிடம் ஒப்புவித்துவிட்டு, தேவூருக்குச் சென்று, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொள்ளவும். ஒப்புக்கொண்ட தேதிமுதல், உமக்குப் பதினைந்து ரூபாய் சம்பளம் போடப்பட்டிருக்கிறது. உமக்கு இஷ்டமிருந்தால், அந்த ஊர்த் தபாலாபீஸ் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளலாம். அதற்குத் தனியாக ஊதியத்தைப்பற்றி அதன் மேலதிகாரிகளுக்கு எழுதிக் கொள்ளவும்...’ கல்வி இலாகா இன்ஸ்பெக்டர்.

உத்தரவு அவனுக்குக் கிடைத்த நேரம் மாலை. மறுநாள் அதிகாலையில் புறப்பட்டாலன்றி, தேவூருக்கு இரண்டு நாட்களுக்குள் போய்ச் சேர முடியாது. சுமார் அறுபது மைல் இருக்கும். வந்தவரிடம் சார்ஜ் ஒப்புவித்தான், ஊர்ப் பெரியவரிடம் சொல்லிக் கொண்டான், மறுநாள் காலையில் அருணோதயத்திற்கு முன், கமலாபுரத்தை விட்டு புறப்பட்டுப் போனான்.

வழக்கம்போல, வீரம்மாள் மறுநாள் காலையில் பள்ளிக்கு வந்தாள். வேற்று ஆள் இருப்பதைப் பார்த்தாள். “வாத்தியார் எங்கே?” என்று கேட்டாள். “நீ யார், வாத்தியார் எங்கே கேட்பதற்கு?” என்றான் அந்த ஆள்.

“அவரை எனக்குத் தெரியும்” என்றாள் வீரம்மாள்.

“அவரைப் போல என்னையும் தெரிந்து கொள். அவர் ஊரைவிட்டு ஒருவருக்கும் சொல்லிக் கொள்ளாமல் ஓட்டம் எடுத்துவிட்டார்” என்று துடுக்காகச் சொன்னான் புதிய வாத்தி.

“நீங்கள் யார்?” என்று வீரம்மாள் வினவினாள். மங்கைப் பருவம் எய்திவரும் வீரம்மாளின் வயதுக் கிராமத்தை ஏற இறங்கப் பார்த்து, தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “அவர் இடத்துக்கு நான் வந்திருக்கிறேன். நீ எப்பொழுதும் போலவே வந்து கொண்டிருக்கலாம்” என்று வாய் அடங்காமல் உளறினான் அவன்.

“அவரும் வாத்தியார், நீயும் வாத்தியா? சீ! போ, மடையா” என்று சொல்லிவிட்டு விர்ரென்று வீரம்மாள் வீடு போய்ச் சேர்ந்தாள்.

அன்றைய தினமே, புதிய வாத்தி ஊர்வம்பைக் கிளப்பிவிட்டான். “கேட்டீர்களா செய்தியை! அந்த அயோக்கியன் நாராயண சர்மா, இந்த ஊர் வண்ணாரக் குடியை வைப்பாக வைத்துக் கொண்டிருந்திருக்கிறான். அவன் போய்விடவே, அவள் இன்றைய தினம் என்னிடம் வந்து என்னைப் பிடிக்கப் பார்த்தாள். சீ நாயே என்று அவளை அடித்துத் துரத்திவிட்டேன்” என்று அபாண்டமான பொய்யைப் புனைந்து திரித்து விட்டான், "வீரம்மாள் அப்படிப்பட்டவள் இல்லை” என்று ஊரார் சொன்னார்கள். சர்மாவுக்குப் பரிந்து சிலர் பேசினார்கள்.

“என்னய்யா முழுப்புரட்டு! அந்தப் பெண் இன்னும் ஆளாகவில்லையே” என்று யாரேனும் கேட்டால், “காமத்துக்குக் கண் கிடையாது” என்று உளறுவான். வம்பும் ஒருவாறு அடங்கிவிட்டது.

இவ்வாறு ஆறு மாதம் கழிந்திருக்கும். வழக்கமாக வண்ணான் துறைக்குத் துணிகளை வெளுக்க எடுத்துச் செல்லுவாள் வீரம்மாள். அங்கே துணிகளைத் துவைக்கையில், தனது தகப்பனில்லாத காலத்தில், ஒவ்வோர் அடிக்கும், “வாத்தியாரே எங்கு போனீர்கள்? என்னை, மறந்து போனீர்களே” என்று சொல்லித் துவைப்பாள். நாளுக்கு நாள் மெலிந்து போனாள். ஒருவருக்கும் தெரியாமல், ஒருநாள் துறையில், நீரில் விழுந்து இறந்துபோனாள்.

வீரம்மாள் இறந்து சிறிது காலம் இருக்கும். தான் கமலாபுரத்தை விட்டுச்சென்ற ஒரு வருஷ காலமாக, நாராயண சர்மாவுக்கு, லீவு கிடைக்கவில்லை. எத்தனையோ தடவை மேலதிகாரிக்கு எழுதிப் பார்த்தான், பலிக்கவில்லை.

“இந்தச் சமயத்தில் லீவு கொடுக்க முடியாது” என்று ஒவ்வொரு தடவையும் கடுமையாக அதிகாரியின் பதில் உத்தரவு அவனுக்குக் கிடைத்தது. ஏக்கமுற்றான். “வீரம்மாளிடம் சொல்லிக்கொண்டு வரமுடியவில்லையே” என்று பல தடவைகளில் வருத்தமுறுவான். கடைசியாக லிவு கிடைத்தது. கமலாபுரத்துக்கு ஒருநாள் மாலையில் வந்து சேர்ந்தான். வீரம்மாள் தண்ணீரில், விழுந்து இறந்ததைக் கேள்விப்பட்டான். மறுநாள் காலையில், வண்ணான் துறையில் நாராயண சர்மாவின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது.