தஞ்சைச் சிறுகதைகள்/வாழமுடியாதவர்கள்



கலைஞர் மு. கருணாநிதி

தமிழ்ச்சூழலில் கலை இலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பு செய்துள்ள கலைஞர் மு. கருணாநிதி திருக்குவளையில் பிறந்தவர்.

உத்தி, உள்ளடக்கம், நடை ஆகிய அம்சங்கள் முழுமையாக அமைந்த பல சிறுகதைகளைப் படைத்த மு. கருணாநிதி, மணிக்கொடிக்கு அடுத்த காலத்தில் இந்தத் துறையை வளர்க்க உதவிய ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர். தேர்ந்த-நுட்பமான அவர் சார்ந்துள்ள அரசியல் கொள்கைகளை விமர்சிப்பதோடு விட்டுவிடாமல், சிலர் அவரின் ஒட்டுமொத்த இலக்கியச் சாதனைகளையும் கொச்சைப்படுத்துவது காழ்ப்புணர்வு என்று மட்டுப்படும். இன்னும் சொல்லப்போனால் அவரின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் கூட அவரின் கலை வெளிப்பாட்டின் இலக்கை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

“திராவிட இயக்கக் கொள்கையிலும், தமிழ்ப்பற்றிலும் அண்ணாதுரையின் அடிச்சுவட்டில் நடக்கும் மு.க. எழுத்துலகில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். நீண்ட நாவல்கள், நாடகங்கள் பல எழுதிய இவர் பல சிறுகதைகளையும் எழுதி அந்தத் துறைக்கு வளம் சேர்த்திருக்கிறார்...” என்று சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.

“மு.க.வின் கதைகளில் பல சிறுகதை வடிவ அமைதி கொண்டுள்ளன என்பது தனிச்சிறப்பு. இவர் எழுதியுள்ள ‘குப்பைத்தொட்டி’ என்ற கதை மிகவும் வலிமையானது. யார் தமிழில் தடம்பதித்த சிறுகதைகள் என்ற ஒரு தொகுப்பு தொகுத்தாலும் இந்தச் சிறுகதை விடுபடவே முடியாது.

இவரின் இலக்கிய பிரவேசக்காலத்திலேயே தரம் தாழ்ந்து போய் வந்த ‘திலோத்தமை’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த தந்தையும், மகளும் சீரழிந்து போன கதையே ‘வாழமுடியாதவர்கள்.’

வாழ முடியாதவர்கள்

டாண் டாண்’ என்று மணிக்கூண்டு கெடிகாரம் பத்து ஒலிகளை முழங்கிற்று. நட்சத்திர டாக்கீசின் கதவுகள் திறக்கப்பட்டன. ‘திலோத்தமா’ படம் முடிந்து விடுதலை பெற்ற சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் வர்ணங்கள் திடீரெனச் சிரித்த பாதரச விளக்குகளால் சோபையிழந்தன. அந்தச் சோபையிலும் சொகுசு மின்னிடுவதாகத் தொடர்ந்து வந்த வாலிபப் பட்டாளம் ‘கம்பரசம்’ பாடிற்று.

“பெண்களுக்குச் சுதந்திரம் அளிப்பதாயிருந்தால் முதலில் இந்த ஆண்களை எல்லாம் அரபிக்கடலில் தூக்கி எறியவேண்டும்” என்றால் ஒருத்தி, சிவப்புச் சேலைக்காரி.

“உலகம் அழிந்துபோக உன்னை யோசனை கேட்டால் அப்போது சொல்லடி இந்த அபிப்பிராயத்தை” எனப் பதில் வீசினால் பச்சைச் சேலைக்காரி.

“திலோத்தமா எப்படிடா?” என்றான் ஒரு இருபத்துநாலு வயது.

“படத்தைக் கேட்கிறாயா?...அல்லது” என்று இழுத்தான் ஒரு மைனர்.

“படம் சுமார். டைரக்ஷன் பரவாயில்லை. கதைதான் பிடித்தமில்லை” என்ற விமர்சனத்தை ஒரு மேதை, பேச்சில் நுழைத்தார்.

“என்ன சார் உங்களுக்குக் கதை பிடிக்கவில்லை!” சினிமாப்பைத்தியம் ஒன்று இடையே குறுக்கிட்டது.

“பிரம்மாவைப் போட்டு கலாட்டா செய்கிறான் சார்” ஒருவர் இப்படி அனுதாப்பட்டார்.

“புராணக் கதையை அப்படியே எடுத்திருக்கான்.”

“பிரம்மா...மும்மூர்த்திகளில் ஒருவர். அவர் சிஷ்டித்தார். திலோத்தமையை! அவளையே அவன் காதலிப்பதென்றால்... தகப்பன் மகளை...சேச்சே.அபத்தம்!”

“பொறுங்க, வாந்தியெடுத்துவிடாதீர்கள்” கிண்டல்காரன் பேச்சை முடித்தான். இவ்விதமாக திலோத்தமை பட விமர்சனங்களோடு அந்தக் கூட்டம் நகர்ந்தும் - சிதறியும் - வர வரக்குறைந்தும் - தேய்ந்தும் கொண்டிருந்தது. நடக்கும் பொன்வண்டுகள் பறக்கும் பட்டுப் பூச்சிகளாயின. காலேஜ் வேடர்களும் வேறு பக்கம் திரும்பினர்.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓரமாக ஒதுங்கி சின்னச்சாமியும், காந்தாவும் வந்து கொண்டிருந்தார்கள். காந்தாவின் கண்கள் கலங்கரை விளக்கு போலச் சுற்றியபடியிருந்தன.

“உ.ம்...பாத்து நட!” சின்ன சாமி அதட்டினான். சின்னச்சாமி போலீஸ்காரன். வயது நாற்பது இருக்கும். வலுவேறிய உடம்பு வாட்டமற்ற நடை. திருண்டு உருண்ட தோள்கள், நிமிர்ந்த நெஞ்சு, கம்பிரமான தோற்றம் கண்களிலே எப்போதும் சிவப்புநிறம், கறுப்புக் குலையாத மீசைகள்.

காந்தா அவனுடைய வேகமான நடையோடு போட்டி போட முடியாமல் திணறித் திணறிப் பின்தொடர்ந்தாள். நீண்ட சாலையின் ஓரத்தில் நெடுக நிழல் தரும் மரங்கள் நின்றிருந்தன. அங்கே ஒரு பெரிய புளியமரம். மனித நடமாட்டத்தில் அதன் கிளைகளில் இருந்த பறவைகள் அடிக்கடி சிறகையடித்துக் கொண்டன. அந்த மரத்தின் பக்கமாகச் சின்னசாமி சாலையிலிருந்து இறங்கினான். சாலைக்குக் கீழ்ப்புறமாகச் சிறிது தூரம் சென்றால், போலீஸ் லைன். அங்கே 18-வது எண்ணுள்ள வீடுதான் சின்னசாமியுடையது.

“காந்தா! கீழே பார்த்து வா. பூச்சி, பொட்டு இருக்கும்.” இதைச் சொல்லியபடி கொஞ்சம் மெதுவாக நடந்தான். பின்னால் திரும்பிப் பார்த்தபடி, வீட்டையடைந்ததும் சின்னச்சாமி பூட்டைத் திறந்துவிட்டு நெருப்புக் குச்சியைக் கொளுத்தினான். காந்தா விளக்கை ஏற்றிக்கொண்டு அடுக்களைப் பக்கம் சென்றாள். போலீஸ் லைன் வீடுதான் நமக்குத் தெரியுமே; குருவிக்கூடு! அடுக்களை படுக்கையறை எல்லாம் ஒன்றுதான்.

சின்னசாமி செருப்புகளைச் சுழற்றிவிட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்தபடி வாயிலில் உட்கார்ந்தான். பீடியின் சுருள் புகையோடு அவன் சிந்தனையும் ஒரு சுற்றுச் சுற்றியது. அதற்குள்-

“அப்பா சோறுபோட்டுட்டேன்” என்ற காந்தாவின் அழைப்பு கிடைத்தபடியால் பாதி பீடியை அனைத்துத் தீப்பெட்டியில் போட்டுக்கொண்டு உள்ளே சென்றான் சின்னச்சாமி.

மார்கழி மாதக் குளிருக்கேற்ற நல்ல பழைய சோறு; விறுவிறுப்பாகச் சுண்டக்குழம்பு சாப்பாடு முடிந்தது.

“நீ சாப்பிடம்மா” என்று சொல்லிவிட்டுச் சின்னச்சாமி மீதி பீடியை வாயில் வைத்தபடி வெளிப்பக்கம் வந்தான். வயிற்றின் ஜிலுஜிலுப்பை பீடிப்புகை சிறிது மாற்றிக் கொண்டிருந்தது.

காந்தாவின் சாப்பாடு முடிந்ததும் பாத்திரங்களைக் கழுவி விட்டுப் படுக்கிற இடத்தைக் கூட்டினாள். இரண்டு கிழிந்த பாய்களை எடுத்து விரித்து, எண்ணெய் வாசனை வீசுவது மட்டுமின்றி, உறை தேவையில்லை என்கிற அளவுக்கு நிறத்தைக் கருப்பாக மாற்றிக்கொண்ட தலையணைகளை எடுத்துப் போட்டாள்.

“அப்பா நான் படுக்கட்டுமா?”

“ஒரு டம்பளர் வெந்நீர் கொடு. இருக்கா?”

“பச்சத் தண்ணிதான் இருக்கு. வெந்நீர் போட விறகு ஏது?” முணுமுணுத்தபடி ஒரு குவளைத் தண்ணீரைக் கொடுத்துவிட்டுப் படுக்கையில் படுத்தாள்.

தெருப்பக்கம் உட்கார்ந்திருந்த சின்னச்சாமியின் உதட்டில் இன்னொரு பீடி அமர்ந்து கொண்டது; பீடியைப் புகைத்தவாறு நிமிர்த்திய தலையைத் தாழ்த்தாமலே உட்கார்ந்திருந்த அவனிடம், வான வெளியில் மேகத்தைத் தொட்டுத் தொட்டு விளையாடிய சந்திரன் பேசுவது போலிருந்ததோ என்னவோ, அவன் வைத்த விழியை எடுக்காமல், அசைவற்றிருந்தான்.

சந்திரன்! சின்னச்சாமியின் மனைவியின் பெயர்கூடச் சந்திராதான். அவள் மண்ணோடு கலந்து பத்து வருடமாகிறது. சின்னச்சாமியின் முப்பதாவது வயதில் சந்திரா பத்து வயது நிரம்பப் பெறாத காந்தாவைத் தாயில்லாப் பிள்ளையாக்கி விட்டுப் போய்விட்டாள். தகப்பனார் உயிரோடிருந்த காலத்தில் சின்னச்சாமிக்குச் சந்திராவை எப்படியோ கல்யாணம் செய்து வைத்துப் பார்த்துக் கண்ணை மூடினார். இடையே சாவு தன் கொடிய கரங்களை நீட்டிச் சந்திராவின் கழுத்தை நெறித்தது மட்டுமின்றிக் காந்தாவைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பை அந்தப் பரிதாபத்துக்குரிய போலீஸ்காரருக்குக் கொடுத்துச் சொன்றது. மறு கல்யாணம் செய்து கொள்ள எத்தனையோ முறை முயன்று பார்த்தான். முன்னுாறு ரூபாய் கூட இல்லாமல் எப்படி கல்யாணம் பண்ணுவது! கஷ்டப்படும் போது- கண்ணீர் விடும்போது-கதியில்லயே எனக் கதறும் போது கைகொடுக்க வராத உறவினர்கள் கல்யாண மென்றால் நாக்கைத் தட்டிக்கொண்டு வருவார்கள். பத்திரிகை தராவிட்டால் பல்லைக் கடிப்பார்கள். இந்த நிலையில் ஏழைக்குக் கல்யாண எழவா?...

அப்போதைய போலீஸ் சம்ளபத்தைத்தான் கேட்க வேண்டியதில்லை. அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டம். இதில் நோய் நொடிகள் ஏற்பட்டால், டாக்டர் தர்மவானாக மாறவேண்டும். காலில் முள் குத்திவிட்டால், முறிந்துவிட்டால், வண்டிக்காரன் பயந்தவனாக இருக்க வேண்டும். என்னதான் மேல் வரும்படி வந்தாலும் காப்பி, தேத்தண்ணீருக்குத்தான் சரியாக இருக்கும். கல்யாணம் செய்துகொள்கிற அளவுக்குச் சாதாரண போலீஸ்காரருக்குக் ‘கிம்பள சான்ஸ்’ கிடைக்குமா?

மனைவி இறந்துபோன துக்கம் மறைந்து, அடுத்த கல்யாணம் கிடையாதா என்ற கேள்வி ஏக்கமாக வளர்ந்து, சின்னச்சாமியின் இருதயத்தைத் துறட்டி போட்டு இழுக்க ஆரம்பித்தது. வைகாசி, ஆவணி, தை-இப்படி மாதக்கணக்குகள் புரண்டு இந்த வருடம் அடுத்த வருடம் என்று ஒத்திபோடப்பட்டு அவனுக்காகப் பார்த்த பெண்கள் எல்லாம் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளையும் பெற்றுவிட்டார்கள். அவன் கதிதான் இப்படி என்றால், பருவமடைந்து ஆறு வருடமாக வீட்டிலிருக்கும் காந்தாவுக்கும் கணவன் வரவில்லை. காந்தா விகாரமில்லை; சுமாரான அழகி, கறுப்புதான். கவின் பெறுமுகமும் எடுப்பான தோற்றமும் வாய்ந்த திராட்சைக் கொடி அவள். பெண் பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை; “சீர்வரிசை என்ன செய்வார்கள்? கல்யாணச் செலவு பெண் வீட்டாருடையதுதானே?” இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமலேயே காந்தா அரும்புப் பருவம் அழியாமலிருந்தாள். சின்னசாமியின் இருதயம் நைந்துவிட்டது. சின்னசாமி வாழ முடியாதவன். காந்தா அவனால் வாழவைக்கப்பட முடியாதவள்.

மன அலைகளால் மயங்கிப் போயிருந்த அந்தத் துயர உருவம் திடீரென விரலில் சுட்ட பீடியின் நெருப்பால் உணர்ச்சி பெற்றுத் திடுக்கிட்டது. நிலாவும் மேகத்தில் மறைந்து கொள்ளவே சின்னசாமி ஒரு பெருமூச்சோடு எழுந்தான். கதவைத் தாழிட்டுவிட்டு, விளக்கைக் கொஞ்சமாய் அடக்கிவிட்டு, அந்தக் கிழிந்த பாயில் படுத்துக் கொண்டான். அவன் கண்களில் சோகம் படர்ந்திருந்தது. காந்தா உடம்பை நெளித்துக் கொண்டு சோம்பல் முறித்ததிலிருந்து அவளுடைய இருதயத்திலும் ஒரு பெரும் போராட்டம் நடந்திருக்கத்தான் வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வாழ்நாளின் வனப்புமிக்க ஒரு பகுதி வீணே கழிவதென்றால்?... கொஞ்சு மொழியும், கோலாகலமும் அனுபவிக்க வேண்டிய பருவத்தில் ஊமையாக முடங்கிக் கிடப்பதென்றால்?... காதல் கீதத்திற்கேற்ற இன்பக் கேளிக்கையாட வேண்டிய இளமைநாட்கள், நொண்டியாகி விடுவதென்றால்?... எந்தப் பெண்ணால் தான் தாங்கிக் கொள்ள இயலும் அந்த வேதனையை!

இந்த இருண்ட உலகில் ஒரு மனித ஐந்துவின் வீடு அங்கே இரண்டு கிழிந்த பாய்கள். பாயைவிட அதிகமாகக் கிழிந்து போன இரண்டு உள்ளங்கள்! தகப்பன்-மகள், தணலில் தவிக்கும் புழு! தாங்கொணா வேதனைப் புயலில் சிக்கிய தளிர்!

காந்தாவின் நீண்ட பெருமூச்சும், அந்த மூச்சைத் தொடர்ந்து முனகிக் கொண்டே கிளம்பிய சின்னச்சாமியின் அசைவும்! அந்தோ... பரிதாபமான நிலைமை!

“அட பாழாய்ப்போன கடவுளே! அவர்கள் என்ன பங்களாவா கேட்கிறார்கள்? பட்டு மெத்தையும், பவளக் கட்டிலும், பன்னீர் குளியலும், பாதாம்பரும்பும், பசும்பாலுமா அவர்கள் கேட்பது? பணக்காரனின் இருதயப் பசிக்கு எத்தனை இளம்பெண்கள் பலியிடப்படுகிறார்கள்! காசை வீசியெறிந்து நினைத்த இடத்தில் இந்திரனாக மாறும் மனித மகாவிஷ்ணுக்களையும்; வயிற்றையும், நெஞ்சையும் உடலுணர்ச்சிகளையும் உலரப்போட்டு வற்றலாக்கிக் கொண்ட வறுமை உருவங்களையும் “ஆண்டவன் படைப்பு” என்று சொல்ல மனித அறிவு அவ்வளவு மழுங்கியாவிட்டது” அந்தச் சிறிய வீடு இதைத்தான் உரத்த குரலில் அதட்டிப் பேசுவது போலிருந்தது.

சின்னசாமியின் மனம் தொடர்ந்து பேசத் துவங்கிற்று:-

‘பணமில்லையென்றால் அவனுக்கு வாழ்வு கிடையாதா? உணர்ச்சி கிடையாதா? கடவுளே! ஏழைகளுக்கு வயிற்றையும், நெஞ்சையும் ஏன் உண்டாக்கினாய்? உனக்குப் படைப்புத் தொழில் தேர்ச்சியிருந்தால் ஏழைகளை வெறும் நடமாடும் பொம்மைகளாக அல்லவா சிருஷ்டித்து முதலாளிகளுக்கு வேலை செய்யும் இயந்திரங்களாக ஆக்கியிருக்க வேண்டும்?

காட்டில் திரியும் மிருகங்களுக்குக் கூடச் சந்தோஷமுண்டே ஜோடிப் புறாக்கள்-ஓடி விளையாடும் மான்கள்-பாடிப்பறக்கும் குயில்கள்-அவைகளை விடவா ஏழைகள் குறைந்து விட்டார்கள்! நான் என்ன பாவம் செய்தேன்? உன் பக்தியில் குறைச்சலா? உனக்குப் பயந்து நடக்கவில்லையா? ஏன் இந்தச் சோதனை?”

அந்த மாஜி மனிதனின் அழுத்தமா கேள்விகளுக்குப் பதில்சொல்ல எந்த ஆண்டவனும் தயாராயில்லை. அவன் சோகக் குமுறலை காந்தாவின் உள்ளமும் ஒப்பாரியாக்கி விம்மிக் கொண்டிருந்தது. அவன் கண்களில் நீர் தேங்கி வழிந்து, கன்னத்தின் சூட்டில் காய்ந்துவிட்டது.

சின்னச்சாமியின் தொண்டையில் ஒன்றுமே அடைக்கவில்லை; ஆனாலும் லேசாக கனைத்துக் கொண்டான்.

“எம்மாடி!” காந்தாவும் தூக்க அசதியில் அலுத்துக் கொண்டது போல இந்த வார்த்தையோடு உடம்பை வளைத்துப் புரண்டுபடுத்தாள்.

ஏதோ ஒரு பயங்கரமான முடிவால், அவன் முகத்தில் அசடு வழிவதை மங்கலான விளக்கின் வெளிச்சம் எடுத்துக்காட்டிற்று. சரியாகப் படுத்துக் கொண்டான். முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். கண்களைக் கொஞ்சமாக முடிக்கொண்டான்.

“சின்னச்சாமி சின்ன புத்திக்காரா!...

என்ன காரியமடா... கசடனே!”

என்று ஒரு பகங்கரமான குரல் அவன் நெஞ்சுக்குள்ளேயே கிளம்பியது.

ஒரு நிமிடம் அமைதி. அய்யோ! அந்த ஒரு நிமிடத்தில் அவன் இரத்த ஓட்டத்தில் எவ்வளவு கொதிப்பு! நரம்புகள் எல்லாம் நடுங்கின. நாவில் நீரில்லை. உதடுகள் வறண்டு விட்டன. கையை மெதுவாக எடுத்தான். உள்ளங்கையில் வியர்வை கொட்டிற்று. வேட்டியில் துடைத்துக் கொண்டு, கையைக் காந்தாவின் மேல் மெதுவாகப் போட்டான். அவள் ஆயாச மூச்சோடு நகர்ந்து படுத்தாள்.

“ஏய் பாதகா! பரம சண்டாளா! மகளடா மகள்! நீ பெற்ற மகள்!,.. மகா பாதகத்தைச் செய்யாதேடா மடையா!... மண்டை வெறி பிடித்தவனே!” .

அவன் தலையில் ஆயிரம் சம்மட்டி அடிகள். ஆங்காரமான குத்துக்கள். கொடூரமான அரிவாள் வெட்டுக்கள். சின்னச்சாமியின் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. ஈரமற்ற நாக்கால் உலர்ந்துபோன உதடுகளை ஒரு முறை நக்கிக்கொண்டு பேசாமல் படுத்திருந்தான். சற்று அமைதி. அந்த அமைதியும் மின்னலாய் மறைந்தது. விஷமேறி நடுங்கும் அவன் ஈர விரல்கள் மீண்டும் காந்தாவின் முகத்தில் விழுந்தது. நத்தைகள் ஊர்வது போல நகர்ந்துகொண்டிருந்தன. அந்த விரல்களைக் காந்தாவின் நடுங்கும் கரம், லேசாகப் பற்றியது... பற்றியது மட்டுமா? மெதுவாக அமுக்கியது.

இடிகள் பல இடிப்பதுபோல மின்னல்களும் பல மின்னுவது போலத்... திடீரெனப் புயல் கிளம்பிப் பூகம்பம் ஏற்பட்டுக் கடல்கள் குமுறியெழுந்தது போலத் தடதடவென ஆட ஆரம்பித்தன. இரண்டு இரத்த பாசமுள்ள உடல்கள். கால் பக்கமிருந்த விளக்கைச் சின்னச்சாமி உதைத்தான். அது கீழே சாய்ந்து அணைந்து போய், எண்ணெய் தரையில் கொட்டியபடி உருண்டது.

கடவுள் அந்தக் கற்பனைப் பெயரால் ஏற்பட்ட தலைவிதி-தலைவிதிக்காளான சமுதாயம்-அந்தச் சமுதாயத்திற்கேற்பட்ட சட்டம்-அந்தச் சட்டத்தை முறை தெரியாமல் உடைத்தெறிந்த இரு சண்டாளர்கள்-வாழ முடியாதவர்கள்!

பொழுது சரியாக விடியவில்லை. மங்கலான வெளிச்சம் வீட்டுக்குள் நுழைந்தது. சின்னச்சாமி விழித்துக்கொண்டு காந்தாவின் முகத்தைப் பார்க்கத் திரும்பினான். அவன் கண்கள் அவனையறியாமல் மூடிக் கொண்டன. காந்தா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். வேகமாக எழுந்து வெளியே வந்த சின்னச்சாமி நிற்கவேயில்லை; பைத்தியக்காரனைப் போல நடந்து கொண்டேயிருந்தான்.

காலையில் ஒன்பது மணியிருக்கும்; காந்தா கன்னத்தில் கை வைத்துக்கொண்டு வாயிற்படியில் சாய்ந்திருந்தாள். ‘திலோத்தமா’ சினிமாப்பட விளம்பர வண்டி தெருவில் போய்க் கொண்டிருந்தது.