தந்தையும் மகளும்/11
11அப்பா! நட்சந்திரங்கள் அசைவதில்லை, கிரகங்கள்தாம் அசைகின்றன என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! கிரகங்கள்தான் அசைகின்றன என்பதில்லை. நட்சத்திரங்களும் அசையவே செய்கின்றன. ஆனால் கிரகங்கள் நட்சத்திரங்களைப் போல் வெகு தூரத்தில் இல்லை. அத்துடன் அவை சூரியனைச் சுற்றி வெகு விரைவாகவும் ஓடுகின்றன. அதனால் தான் அவை அசைவதாக நம்முடைய கண்ணுக்குப் புலனாகின்றது. ஆனால் நட்சத்திரங்களோ வெகு தூரத்திலிருப்பதால் அவை அசைவது நம்முடைய கண்ணுக்குப் புலனாவதில்லை. அதனால் தான் ஆயிரம் ஆண்டுகள் ஆனபிறகுகூட அவை தோன்றிய இடத்திலேயே தோன்றிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இப்போது வான சாஸ்த்ரிகள் அவற்றைப் படம் பிடித்து ஆராய்ந்து அவை செல்லும் திசைகளையும் அவற்றின் வேகங்களையும் கணக்கிடுகிறார்கள்.அதைக் கொண்டு நட்சத்திரங்கள் இவ்வளவு காலத்தில் இவ்வளவு தூரம் இடம் பெயர்ந்திருக்கின்றன என்று கண்டுபிடித்துக் கூறுகிறார்கள்.
அம்மா! நாம் சூரியன் என்று கூறுவதும் நட்சத்திரம் தான் என்பதை அறிவாய். அது ஒரு செக்கண்டு நேரத்தில் இருபது மைல் வேகத்தில் ஓடுவதாகக் கூறுகிறார்கள். நட்சத்திரங்கள் எல்லாம் இவ்வளவு விரைவாக ஓடிக் கொண்டிருந்தால் அவை ஒன்றோடொன்று மோதிவிடுமே என்று கேட்பாய். ஆனால் நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள தூரங்கள் மிக மிக அதிகமாதலால், அவை ஒன்றோடொன்று மோதாமலே விரைவாக ஓட முடியும் என்று வான சாஸ்திரிகள் கருதுகிறார்கள்