தந்தையும் மகளும்/112
112அப்பா! மண்ணெண்ணெய் விளக்கு மாதிரி மண்ணெண்ணெய் அடுப்பும் இருக்கிறது, அது எரிவது எப்படி?
அம்மா! இரண்டு விதமான மண்ணெண்ணெய் அடுப்புகள் இருக்கின்றன. ஒன்று மண்ணெண்ணெய் விளக்குப் போலவே வேலை செய்யும். விளக்கில் உள்ளது போலவே அதிலும் திரி உண்டு. திரி மட்டும் பெரியதாக இருக்கும். விளக்கில் எண்ணெய் திரியில் ஏறி ஆவியாக மாறி எரிவது போலவேதான் இந்த அடுப்பிலும் எரியும். இந்த அடுப்பில் உஷ்ணம் அதிகமாயிராது, ஆனால் தண்ணீர் பால் முதலியவைகளைச் சீக்கிரமாகக் கொதிக்க வைக்க மிகுந்த பயனுடையது.
மற்றொரு மண்ணெண்ணெய் அடுப்பில் திரி கிடையாது. அதிலுள்ள சிறிய கிண்ணத்தில் ஸ்பிரிட் சாராயத்தை ஊற்றி தீக்குச்சியைக் கிழித்து வைத்தால் ஸ்பிரிட் எரியும். அது எரிவதால் அதற்கு மேலுள்ள பாகம் சூடாகின்றது. ஸ்பிரிட் எரிந்து தீர்ந்ததும் காற்றுப் புகும் வாயிலை அடைத்துவிட்டு பம்பு அடிக்கவேண்டும். அப்பொழுது அடியிலுள்ள மண்ணெண்ணெய் மேலே ஏறும். மேற்பாகத்திலுள்ள சூட்டால் ஆவியாக மாறும் அது மிகச் சிறிய துவாரத்தின் வழியாக அதிக வேகமாக வெளியே வருவதால் காற்றுடன் நன்றாகக் கலந்து விடுகிறது. அதனால் அந்த ஆவிக்கலவை மிகுந்த சூடுள்ள சுடராக எரிய ஆரம்பிக்கிறது. அதன் காரணமாக மேல் பாகம் முன்னிலும் அதிகமாக உஷ்ணமாகின்றது; எண்ணெய இடைவிடாமல் ஆவியாக வந்து எரிந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு நன்றாகக் காற்றுடன் கலந்து எரிவதால் ஆவிமுழுவதும் எரிந்துவிடுறது. சூடும் அதிகமாயிருக்கிறது. புகையும் உண்டாவதில்லை. அதனால் சமையல் சீக்கிரமாகவும் நடைபெறும், சமையல் பாத்திரங்களில் கரியும் பிடியாது. அடுப்பை அணைக்க வேண்டுமானால் காற்று வாயிலைத் திறந்து விட்டால் போதும் அணைந்து போகும்.