தந்தையும் மகளும்/131
131அப்பா! நாம் குளிக்கவும் துணி வெளுக்கவும் சோப் உபயோகிக்கிறோமே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! நாம் குளிப்பது எதற்காக? நம்முடைய உடம்பில் தோலின் அடியில் வேர்வை உறுப்புக்களும் அதன் அருகில் எண்ணெய் உறுப்புக்களும் இருப்பதை நீ அறிவாய். வேர்வை உறுப்புக்களிலிருந்து வேர்வையும் எண்ணெய் உறுப்புக்களிலிருந்து எண்ணெய்யும் எந்நேரமும் வெளியே வந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் தூசியும் அழுக்கும் வேர்வையோடும் எண்ணெய்யோடும் சேர்ந்து உடம்பில் ஒட்டிக் கொள்கின்றன. இவற்றை நீக்கி உடம்பைச் சுத்தமாகச் செய்வதற்காகத்தான் நாம் குளிக்கிறோம்.
ஆனால் வெறும் தண்ணீர் அவற்றை நீக்கிவிட முடியாது. தண்ணீருக்கு எண்ணெய்யை அகற்றும் குணம் கிடையாது என்பதை நீ அறிவாய். அதனால்தான் நாம் குளிக்கும் போது சோப் உபயோகிக்கிறோம்.
சோப்பை நீரில் கரைத்து உடம்பில் தேய்த்தால் அப்பொழுது சோப் எண்ணெய்யுடன் சேர்ந்து ஒருவிதக் குழம்புபோல் ஆகிவிடுகிறது. நாம் உடம்பில் தண்ணீர் ஊற்றும்போது அந்தக் குழம்பு தண்ணீருடன் அகன்று விடுகிறது. அத்துடன் உடம்பிலுள்ள தூசி முதலியவைகளும் சோப் நீருடன் சேர்ந்து நீங்கிவிடுகின்றன.
இதேபோல் தான் நாம் துணிக்குச் சோப் உபயோகிக்கும் போதும் துணியிலுள்ள எண்ணெய்யும அழுக்கும் சோப்புடன் சேர்ந்து அகன்று விடுகின்றன. துணியிலுள்ள சிறு துவாரங்களிலுள்ள எண்ணெய்யும் அழுக்கும் நீங்குவதற்காகத்தான் நாம் துணிகளை சோப் ஐலத்தில் ஊறவைக்கவும் கொதிக்க வைக்கவும் செய்கிறோம்.
சோப் என்பது நம்முடைய நாட்டில் ஆங்கிலேயர் வந்த பின்னரே வழங்கி வருகிறது. அவர்களிடையிலும் அது அதிகமாகச் செய்யப் பெற்றது 1823ம் ஆண்டில் செங்ரெல் என்னும் பிரஞ்சு விஞ்ஞானி சோப் செய்வதன் மர்மத்தை ஆராய்ந்து சொன்ன பிற்பாடுதான்.
ஆயினும் உடம்பிலுள்ள அழுக்கைப் போக்குவதற்காக நம்முடைய நாட்டில் பச்சைப்பயறு மாவை நீண்ட நாளாக உபயோகித்து வந்தார்கள். அது மணமாயிருப்பதற்காக தாமரை பொட்டு, பூலாங்கிழங்கு, வெட்டிவேர் போன்ற சில வாசனைச் சரக்குகளையும் சேர்த்துக் கொள்வார்கள். அதைக் கலவைப் பொடி என்று கூறுவார்கள். இப்பொழுதும் அதை அநேகர் குழந்தைகளுக்கு உபயோகிப்பதுண்டு. சோப்பைவிட அந்தப் பொடியே மிகவும் நல்லதென்று டாக்டர்கள் கூடக் கூறுகிறார்கள்.
சுத்தம் செய்வதற்குச் சோப்பை உபயோகிப்பது போலவே அமெரிக்காவில் சில செடிகளையும் உபயோகிக்கிறார்கள். தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டார் மெல்லிய துணிகளைச் சலவை செய்வதற்கு சோப் பட்டை மரம் என்ற மரத்தின் பட்டையைத் தூள்செய்து உபயோகிக்கிறார்கள். நம்முடைய நாட்டிலும் பட்டுத் துணிகளைத் துவைப்பதற்கு பூவந்தி என்ற ஒருவகை மரத்தின் கொட்டையை உபயோர்கள். அதை நெய்க் கொட்டான் மரம் என்று சொல்லுவார்கள்.